periyar with gt naiduஆண் பெண் மக்களின் கல்யாண வயதைப் பற்றியும், கலவி வயதைப் பற்றியும் சட்டத்தின் மூலம் ஒரு நிபந்தனை ஏற்படுத்த வேண்டி பொது மக்களின் கருத்தை அறிவதற்கு ஒரு கமிட்டி நியமிக்கப்பட்டு அது பல மாகாணங்களில் விசாரணை செய்து விட்டு இப்போது நமது மாகாணத்தில் விசாரணை நடைபெறுகின்றது.

இவ்விசாரணையின் மூலம் முடிவில் ஏற்படப் போகும் நன்மையைவிட விசாரணை நடுவில் வெளிப்படும் பல அதிசயங்கள் மக்களின் பொது அறிவிற்கு மிகவும் பயன்படுமென்று கருதுகின்றோம். விசாரணை துவக்கத்திலிருந்து நாம் மேல் வாரியாகத்தான் கவனிக்க முடிந்தது. அநேக சாக்ஷிகள் வாக்குமூலத்தை நாம் படிக்கவே இல்லை. என்றாலும் சில விஷயங்கள் வெளியானது நமது தகவலுக்கு வந்தது. அவைகளில் மிகவும் கவனிக்கத்தக்கவை என்னவெனில், பெண்கள் பக்குவமடைந்த பிறகு வீட்டில் வைத்திருந்தால் அவர்களது கற்புக்கு இடையூறு ஏற்படும் என்றும், பூப்பு அடைந்தவுடன் பெண்களுக்கு கலவி இச்சை ஏற்பட்டு விடுகின்றது என்றும், அதற்கு உடனே பரிகாரம் செய்யாவிட்டால் மோசம் வந்துவிடும் என்றும் சொல்லியிருக்கின்றார்கள். இவர்கள் யார் என்று பார்த்தால் வருணாசிரம பார்ப்பனர்கள். அதாவது திரு. டி.ஆர். ராமச்சந்திர அய்யரும், திரு. எம்.கே. ஆச்சாரியாரும் மற்றும் இவர்கள் போன்றவர்களுமாவார்கள்.

ஆனால் இவர்களால் சொல்லப்பட்ட இந்த விஷயங்கள் ஒரு சமயம் தப்பாயிருக்கலாம் என்பதாக அவர்களாலேயே ஒப்புக்கொள்ளச் செய்தாலும் கூட மற்றொரு விஷயத்தைப் பொருத்து பெண்களுக்கு கட்டாயம் பூப்புக்கு முன்புதான் விவாகம் செய்தாக வேண்டும் என்று வாதிக்க வேறு காரணங்களையும் கொண்டவர்கள். அதாவது இந்துமத சம்பிரதாயப்படி ஏற்பட்ட வேத சாஸ்திர ஸ்மிருதிகளின் படிதான் நடந்தாக வேண்டுமே ஒழிய வேறு எந்த புது மார்க்கத்துக்கும் அது எவ்வளவு மேன்மை தரத்தக்கதானாலும் அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்கின்ற கொள்கைகளாகும். மற்றும் பெண்கள் விஷயத்தில் ஆண்களைப் பொறுத்த விஷயமாக மாத்திரம் அல்லாமல் பெண்கள் ஆண்களைப் போல் சொத்து உடையவர்களா யிருப்பதும், கல்வி உடையவர்களாயிருப்பதும், வாழ்க்கையில் சுதந்திரம் உடையவர்களாயிருப்பதும் ஆகிய அநேக விஷயங்களிலும் மாறுபட்ட அபிப்ராயமுடையவர்கள் - இம்மாறுபாடான அபிப்பிராயத்தையும் மேல் கண்ட மதம், வேதம், சாஸ்திர ஸ்மிருதி ஆகியவைகளை ஆதாரமாகக் கொண்டே வற்புறுத்துகின்றவர்கள்.

எனவே இந்த நிலைமையில் நமது கடமை என்ன என்று பார்ப்போமானால் இப்படிப்பட்ட விஷயத்தில் அதாவது மதம், சாஸ்திரம், ஸ்மிருதி என்னும் விஷயத்தில் உண்மையான விஸ்வாசம் கொண்டு அவைகளை பக்திபூர்வமாய் அனுசரித்து வருகின்றவர்கள் விஷயத்தில் நாம் நிர்ப்பந்தப் படுவதைப் பற்றி சற்று நிதானிக்க வேண்டியது தான். அதுவும் அந்த விஷயத்தின் தன்மையைப் பொறுத்ததேயாகும். ஆனால் இந்த கனவான்கள் திருவாளர்கள் டி.ஆர்.ராமச்சந்திர அய்யர், எம்.கே. ஆச்சாரியார் போன்றவர்கள் எவ்வளவு தூரம் மதம், வேதம், சாஸ்திரம் ஸ்மிருதி ஆகியவைகளில் விசுவாசம் உடையவர்கள், பக்தி உடையவர்கள் என்பதை வாசகர்கள்தான் உணர வேண்டும்.

திரு.டி.ஆர்.ராமச்சந்திரய்யர் ஒரு வக்கீல். வக்கீலுக்கு எவ்வளவு தூரம் வேதம், மதம், சாஸ்திரம் ஸ்மிருதிகட்கு கட்டுப்பட்டு யோக்கியமாய் நடந்து கொள்ள சௌகரியம் உண்டு என்பதைப் பற்றி நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை. அன்றியும் அவர் தன்னை ஒரு வருணாசிரம பார்ப்பனர் என்று சொல்லிக் கொள்ளுபவர். பிராமணன் என்பவனுக்கு அவர் குறிப்பிடும் வேத சாஸ்திர ஸ்மிருதிகள் எவ்வளவு நிபந்தனைகள் விதித்திருக்கின்றனவோ அவைகளை திரு ராமச்சந்திர அய்யர் எவ்வளவு தூரம் அனுசரிக்கின்றார் என்பதையும் வாசகர்களுக்கே விட்டு விடுகின்றோம்.

அதுபோலவே திரு. எம்.கே. ஆச்சாரியாருடைய பார்ப்பனத் தன்மையையும் நாணயத்தையும் யோக்கியப் பொறுப்பையும் நாம் வாசகர்களுக்குத் தெரிவிக்க வேண்டியதில்லை. சுருக்கமாய்ச் சொன்னால் திரு. ஆச்சாரியார் யோக்கியமாகவோ, நாணயமாகவோ நடந்து கொண்ட சமயத்தைப் பார்க்கும் பாக்கியமே நமக்கு வாய்க்கவில்லை. எனவே வேத சாஸ்திர ஸ்மிருதிகளில் தாங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி கவலை ஒரு சிறிதும் இல்லாமல் மற்றவர் தங்களிடத்தில் நடந்து கொள்ள வேண்டிய நிபந்தனையை மாத்திரம் வலியுறுத்தலுக்கு மதிப்பு கொடுக்க வேண்டுமா? அல்லது அவர்களின் யோக்கியப் பொறுப்பில் மற்றவர்கள் நம்பிக்கை வைக்க வேண்டுமா? என்று கேட்கின்றோம். நமது நாட்டில் வேதப் பிராமணர்கள், தெய்வ பிராமணர்கள் என்கின்ற பாத்தியதை கொண்டாடும் பார்ப்பனர்களிடத்தில் இல்லாத எந்த அக்கிரமமாவது வேறு ஒருவரிடம் தனியாகக் காணக் கூடியது ஏதாவது இருக்கிறதா என்று கேட்கின்றோம்.

ஆதலால் எந்தப் பார்ப்பனர்களானாலும் சரி, வேதம், மதம், சாஸ்திரம், ஸ்மிருதி என்பதாக சொல்லிக் கொண்டு நம்மிடம் வந்தோ அல்லது அதைக் கொண்டு வந்து நம் நாட்டின் முன்னேற்றத்திற்குத் தடையாகப் போட்டு விட்டோ நிற்பார்களானால், அவர்களை லக்ஷியம் செய்யாமல் உதறித் தள்ளிவிட்டு லக்ஷியம் நாம் செய்ய வேண்டியவைகளை செய்து கொண்டு போக வேண்டியது என்பது தான் நமது யோசனையாகும்.

பெண்களுக்கு சொத்தும் உரிமையும் பருவம் வந்தபிறகு தன்னிஷ்டப்படி காரியங்களை தெரிந்தெடுத்துக் கொள்ளும் உரிமையும் வேண்டுமா வேண்டாமா என்பதைப் பற்றி பெண்களைக் கேட்டால் நியாயம் தெரிய முடியுமா அல்லது அவர்களை அடிமையாக்கி வைத்திருப்பவர்களிடமும் அவர்களை தங்கள் சுயநலத்திற்காக உபயோகப்படுத்திக் கொண்டிருக்கின்றவர்களிடமும் கேட்டால் நியாயம் தெரிய முடியுமா என்பதை யோசித்துப் பாருங்கள். எனவே அவர்களின் சொத்துரிமையைப் பற்றியும் கணவனை தெரிந்தெடுப்பதைப் பற்றியும் இப்பொழுது இந்த வியாசத்தில் விவரிக்க வேண்டிய அவசியமில்லை என்று கருதி இதை விட்டு விட்டு மற்ற விஷயங்களை ஆராய்வோம்.

“ஒரு பெண்பூப்பு நிகழ்ந்த உடன் புருஷ இச்சை அடைகிறாள்” என்றும், “பூப்பு நிகழ்ந்த பிறகு புருஷனில்லாவிட்டால் கற்பு இழக்கின்றாள்” என்றும் சொல்லுவதானால் பூப்பு நிகழ்ந்து 2, 3, 4, 5 வருஷமாக கல்யாணம் இல்லாமல் இருக்கும் பெண்கள் எல்லாம் கற்பு இழந்திருப்பவர்கள் என்று தானே கொள்ள வேண்டும்.

அப்படியானால் கல்யாணம் ஆகி பூப்பு நிகழும் முன்போ பூப்பு நிகழ்ந்து புருஷனுடன் கொஞ்ச காலமோ அதிக காலமோ வாழ்ந்த பிறகோ புருஷனை இழந்த பெண்கள் விஷயத்தில் என்ன நினைப்பது என்பதற்கு இவர்கள் என்ன சமாதானம் சொல்லுவார்கள் என்றுதான் கேட்கின்றோம். ஒரு சமயம் மேல் குறிப்பிட்ட விதவைகள் என்பவர்களை இவர்கள் கற்பு இழக்க முடியாமல் பந்தோபஸ்தாக வைத்திருப்பதாக சொல்லுவார்களானால் அந்தப்படியே இந்த இளங் குழந்தைகளையும் பந்தோபஸ்தாக வைத்திருப்பதில் என்ன கஷ்டம்? விதவைகளை பந்தோபஸ்தாக வைப்பதை விட குழந்தைகளை பந்தோபஸ்தாக வைப்பது வெகு சுலபம் என்றே சொல்லுவோம். ஏனெனில் ‘கற்பைக் கெடுத்துக் கொள்ள’ விதவைகளுக்கு இருக்கும் சவுகரியம் குழந்தைகளுக்கு இல்லை. அன்றியும் அவர்களை பந்தோபஸ்தாக வைத்திருக்க வேண்டிய அத்தனை காலம் அதாவது அவர்கள் சாகும்வரை வைத்திருப்பதை விட குழந்தைகளை 2, 3 வருஷம் மாத்திரம் வைத்திருந்தால் போதுமல்லவா? அப்படிக்கில்லாமல் ஒரு சமயம் விதவைகள் விஷயத்தில் எப்படியோ போனால் போகட்டும் என்று விட்டு விட்டு இருக்கின்றோம் என்பார்களானால், இவர்களுக்கு இந்த குழந்தைகள் விஷயத்தில் அந்த நியாயம் ஏன் பாதிக்குமோ தெரியவில்லை.

விதவைகள் என்பவர்களும் குழந்தைகள், சகோதரிகள் என்கின்ற முறையுள்ளவர்கள் தானே? இவைகளை எல்லாம் எடுத்துச் சொல்லுவது மிகுதியும் ஆபாசமான விஷயங்கள் என்றாலும், நம் நாட்டில் பார்ப்பனர்கள் என்பவர்கள் எவ்வளவு தூரம் மனிதத் தன்மைக்கும், முற்போக்குக்கும் இடையூறான கொள்கைகள் கொண்டவர்களாய் இருக்கின்றார்கள் என்பதை தெரிவிக்க வேண்டியே இவற்றை குறிப்பிட்டுத் தீர வேண்டியிருக்கிறது. இவர்கள் தங்கள் நடவடிக்கைகளைப் பற்றி கவனம் செலுத்தாமல் பெண்கள் விஷயத்தில் மாத்திரம் இப்படி அநியாயமான நிர்ப்பந்தங்கள் சுமத்தப்படுவதைப் பார்க்கும் போதும், பெண்களை அடிமைப்படுத்திக் கொடுமைப் படுத்த மாத்திரம் வேதமும் சாஸ்திரமும் கையாளப்படுவதை பார்க்கும் போதும் இதற்கு சமாதானமாக நியாயங்கள் சொல்லிக் கொண்டிருப்பது வீண் கால தாமதமும் உபயோகமற்ற வேலையும் ஆகும் என்பதுதான் நமது முடிவான அபிப்பிராயம். ஏனெனில் எந்தக் காரணத்தைக் கொண்டும் இக்கூட்டத்தாரைத் திருத்த முடியவே முடியாது. ஏன் என்றால் எல்லாம் தெரிந்தே வேண்டுமென்றே செய்பவர்கள். மற்றபடி ஏதாவது செய்ய வேண்டுமானால் எதேச்சாதிகாரத்துடன் சட்டம் செய்யும் சக்தி உள்ள ஒரு அரசாங்கத்தைத் தோற்றுவிக்க வேண்டும். அப்படி செய்ய முடியாவிட்டால் எல்லாவிதக் கட்டுப்பாட்டையும் அடியோடு உடைத்தெறிய ஏற்பாடு செய்ய வேண்டும் அப்படிக்கில்லாமல் செய்யும் முயற்சிகள் எல்லாம் வீண் “கொக்கு பிடிக்கும்” முயற்சியேயாகும்.

கொஞ்ச நாளைக்கு முன்பு பெண்கள் விடுதலையைக் குறிக்கொண்டு சித்திரபுத்திரனால் “கற்பு” என்னும் ஒரு வியாசமும், “பெண் விடுதலை வேண்டுமானால் ஆண்மை அழிய வேண்டும்” என்று ஒரு வியாசமும் எழுதப்பட்டதை வாசகர்கள் படித்திருக்கலாம். அதைப் பற்றி பல நண்பர்கள் தங்கள் கசப்பையும் தெரிவித்தார்கள். ஆனால் அதில் கண்ட ஒரு அபிப்பிராயத்தையே இப்போது சர். பி. சிவசாமி அய்யர் என்கின்ற ஒரு பார்ப்பனர் ஒருவாறு தெரிவிக்கின்றார். அதாவது “பெண்கள் பிள்ளை பெறுவதை மட்டுப்படுத்த வேண்டும்” - என்பதைப்பற்றி இவர் சமீபத்தில் பெங்களூரில் சர். விஸ்வேஸ்வரய்யாவின் தலைமையில் பல பெரியோர்கள் முன்னிலையில் செய்த ஒரு உபன்யாசத்தில் பேசியிருக்கின்றார். ஆனால் பெண்கள் பிள்ளை பெறுவதை கட்டுப்படுத்துவதற்கு அவர் சொல்லியிருக்கும் சாதனம் என்னவென்றால் கலவியில் பெண்களை ஒருவித கருவியை உபயோகப்படுத்திக் கொள்ளும்படி யோசனை சொல்லியிருக்கின்றார். நாம் சொல்லும் விஷயங்கள் சிற்சில சமயங்களில் சிலருக்கு அதிசயமாகவோ அல்லது வேறு பொறுப்பற்றதாகவோ காணப்படுவதை நாம் ஒருவாறு உணருகின்றோம் . ஆனாலும் அப்பேர்ப்பட்டவர்கள் கண்களுக்கு நாம் ஒருவர் மாத்திரம் தனியாய் தோன்றிக் கொண்டிருக்கும்படி இல்லாமல் அவர்களாலேயே மதிக்கத்தக்க வேறு சிலரும் நம்மோடு சேர்ந்து தோன்றி விடுகின்றார்கள் என்பது நமக்கு சில சமயங்களில் ஆறுதலை உண்டாக்கிவிடுகின்றது.

(குடி அரசு - தலையங்கம் - 25.11.1928)

Pin It