உலகில் பிறநாடுகளை விட இந்தியாவில் பெண்ணடிமைத்தனம் அதிக அளவில் உள்ளதற்கு இந்து மதத்தால் உருவாக்கி, நிலை நிறுத்தப்பட்டுள்ள ஆண்மை - பெண்மை தத்துவமே காரணம். பெண்மை என்ற தத்துவத்தை அழிப்பதே பெண் விடுதலையின் முதல் படியாகும்.

பெண்மை அழிய வேண்டுமானால் ஆண்மை என்ற தத்துவம் முதலில் அழிக்கப்பட வேண்டும். அவ்வாறு ஆண்மை அழிந்து பெண்மை ஒழிந்தால் தோழமை வளர்ந்து சமத்துவம் உருவாகும். இதுவே ஆண்கள் விடுதலைக்கு வழியாகும்.

பிள்ளைப்பேறு:

பெண்கள் தங்கள் விடுதலைக்குத் தாங்கள் தகுதியற்றவர்கள் என்று நம்புவதால்தான், தானும் அடிமையாகி, ஆண்களையும் சுதந்தரமற்ற அடிமைகளாக்குகின்றனர்.

இந்நிலைக்கு., பெண் ஆணின் துணையில்லாமல் தனது பிள்ளைகளை வளர்க்க முடியாது என்று நம்புவதாலும், தனது இறுதிக் காலத்தில் பிள்ளைகளின் ஆதரவில் வாழலாம் என்றும், தாய்மைதான் பெண்ணிற்குச் சிறப்பு என்ற சமூகக் கண்ணோட்டத்தின் படியும் - அதுவும் ஆண்பிள்ளை பெற்றால் மாமியாரிடம் தான் அடிமையாய் இருந்ததுப்போல, பிற்காலத்தில் தனது மருமகளிடம் தான் ஆதிக்கம் செலுத்தலாம் என்ற இந்துப்பண்பாட்டின் கருத்தியல் படியும் திருமணம் ஆனவுடன் முதல் வேலையாகப் பிள்ளைகளைப் பெற்றெடுக்கிறாள்.

பிள்ளைகளை வளர்க்கப் பல தியாகங்களைச் செய்ய வேண்டியுள்ளது. அதாவது தனது இலட்சியம், முன்னேற்றம் அனைத்தும் தடைப்படுகிறது. இது ஆண்களைப் பெரிதும் பாதிக்கிறது அதாவது குழந்தை பெற்ற ஆணிற்கு, தான் இந்தச்சமூகம் சொன்ன கடமையை நிறைவேற்றிய கம்பீரத்தில் இருந்து துவங்குகிறது அவனது அடிமை வாழ்க்கை. எவ்வாறு எனில் தன் வாரிசுகளை வளர்க்கச் சுயநலம் மேலோங்கி, நேர்மையற்ற முறையிலும் கூடப் பொருள் தேட வேண்டியுள்ளது. இங்கு ஆண் - பெண் இருவரது சுதந்திரமும் பறிபோகிறது. எனவே குழந்தை தவிர்ப்பின் மூலம் பெண் மட்டுமல்ல ஆணிற்கும் அது பெரும் விடுதலையாகிறது.

உடை

ஆண்களைப் போலவே பெண்கள் உடையணிவதால் நேரம் பணம் மிச்சப்படுகிறது. பெண்கள் தங்கள் பணிகளைத் தடையின்றிச் செய்ய முடியும். இதில் ஆண்களுக்குத்தான் விடுதலை கிடைக்கிறது. மேலும் விபரங்களுக்கு புடவை மேட்சிங் பிளவுஸ் எடுக்க மனைவியுடன் கூட சென்ற கணவர்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.

வாகனம்

பெண்கள் தாங்களாகவே வாகனம் ஓட்டினால், தமது வேலைகளை யாருடைய தயவுமில்லாமல் தானே விரைவாகச் செய்து முடிக்க முடியும். இதனால் ஆணிற்கு என்ன விடுதலை? இந்தக் கேள்வியை மனைவிக்கு டிரைவர் வேலை பார்க்கும் கணவர்களைக் கேட்டு தெரிந்துக்கொள்ளலாம்.

நகை- அணிகலன்

நகை மாட்டும் ஸ்டாண்டுகளாகவும், அழகுப் பதுமைகளாகவும் பெண்கள் தங்களைக் காட்டிக் கொள்ள விரும்புவதால் பெண், ஆணுக்காகப் படைக்கப்பட்டவள் என்ற கருத்தை ஏற்பவளாகிறாள். இதனால் தனது சுயமரியாதையை இழப்பதோடு ஆணின் சொல்லமுடியாத துன்பத்திற்குக் காரண மாகிறாள். அது எப்படி என்று ஒரு நிகழ்ச்சிக்குச் செல்ல தாயராகி மனைவியின் அலங்காரத்திற்காகக் காத்திருந்து, அழைத்துச்சென்று கூடவே திரும்பி வரும் வரையில் யாரும் தன் மனைவியை சைட் அடித்து விடக் கூடாது என்று ‘பாடிகாட்’ வேலை பார்த்து, தனது நிம்மதியை இழந்த கணவர்களிடம் கேளுங்கள். கோபமே படாமல் கூறுவார்கள்.

Pin It