கல்வி நிறுவனங்கள் மற்றும் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு மாதவிலக்கு நாட்களில் விடுப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல நாடுகளில் பல காலகட்டங்களில் எழுப்பப்பட்டுள்ளது. அண்மையில் இந்திய உச்சநீதிமன்றத்தில் இதுகுறித்த ஒரு வழக்கை, சைலேந்திர மணி திரிபாதி என்பவர் தொடுத்துள்ளார். பெண்களுக்கு மாதவிலக்கு நாட்களில் அவர்களின் உடல் நலனைப் பாதுகாக்கும் பொருட்டு அவர்களுக்குத் தேவையான ஓய்வை அளிக்க வேண்டும் என்ற நோக்கிலும் இதுதொடர்பாக பெண்ணிய அமைப்புகள் நீண்டகாலமாகத் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார்கள். இவ்வழக்கு தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு பிப்ரவரி 24, 2023 அன்று விசார ணைக்கு வந்தது. மாதவிலக்கு நாட்களில் விடுப்பு அளிக்க உத்தரவிட்டால், பெண்களை வேலைக்கு எடுப்பதில் நிறுவனங்கள் தயக்கம் காட்டலாம் என சட்டக் கல்லூரி மாணவர் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளதைச் சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி சந்திர சூட், இவ்விவகாரம் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.

மனுதாரரின் வழக்கறிஞர், மாதவிலக்குச் சுழற்சி என்பது ஓர் உயிரியல் செயல்பாடு. அதற்காக, அதைக் காரணம் காட்டி பெண்களிடம் பாகுபாடு காட்டக்கூடாது என்று வாதிட்டார். இதற்குப் பதில் அளித்த நீதிபதி, நீங்கள் கூறுவதை மறுக்கவில்லை. ஆனால், இந்தச் சிக்கல் பல்வேறு பரிணாமங்களைக் கொண்டிருப்பதால், திட்டத்தைக் கொள்கை வகுப்பாளர்களிடம் விட்டு விடுவோம். முதலில் அவர்கள் இதற்கான கொள்கை களை வகுக்கட்டும். அதன்பிறகு, நாம் இதுபற்றி பரிசீலிப்போம் என தெரிவித்தார். இதுகுறித்து ஒன்றிய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறை முடிவெடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம்.lady in periodsமாதவிடாய் நல சட்ட முன்வடிவு

காங்கிரசு கட்சியின் அருணாசலப்பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர் திரு.நினங் எரிங் என்பவர் 2017இல் மாதவிடாய் விடுப்பு தொடர்பான ஒரு சட்ட முன்வடிவு கொண்டு வந்தார். அதில் நிறுவனங்கள் தங்கள் பெண் ஊழியர்களுக்கு மாதத்தில் இரண்டு நாட்கள் மாத விடாய் விடுப்பு அளிக்க வேண்டும் என்று கூறப்பட் டுள்ளது. ஆனால் அது சட்டமாகவில்லை. மீண்டும் 2022ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கை கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே இந்த சட்ட முன்வடிவு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், அலுவல் ஆய்வுக் குழு அசுத்தமான தலைப்பு (Unclean Topic) என்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளாமல் ஒதுக்கி விட்டது. வலதுசாரி ஆண் மைய கருத்தியலாளர்கள் நிரம்பி வழியும் இந்திய நாடாளுமன்றத்தின் இப்போக்கு வியப்பானதல்ல.

இந்திய ஒன்றியத்தில் இரண்டு மாநிலங்களில் கேரளா மற்றும் பீகார் மாநிலங்களில் மட்டுமே மாத விலக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. மாநில அரசு, ஒன்றிய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், 99.9 விழுக்காடுக்கு மேலான தனியார் நிறுவனங்கள் இந்நாள் வரை தங்கள் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு அளிக்கவில்லை.

உலக அளவில் இங்கிலாந்து, வேல்சு, ஸ்பெயின், செர்மனி, சப்பான், தைவான், தென்கொரியா, இந்தோ னேசியா, சாம்பியா ஆகிய நாடுகளில் மாதவிடாய் விடுப்பு வழங்கப்படுகிறது.

இந்தியாவில் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு அளித்த முதல் மாநில அரசு என்ற பெருமை பீகார் மாநிலத்திற்குச் சேரும். பல்வேறு மனித வள, சமூகக் குறியீடுகளில் பின்தங்கி இருக்கும் பீகார் மாநிலம், இந்த விடயத்தில் நாட்டுக்கே முன்மாதிரியாக உள்ளது. 1991-இல் பீகார் மாநில அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி போராட்டம் நடத்திய போது, பல கோரிக் கைகளில் மாதவிடாய் விடுப்புக் கோரிக்கையும் ஒன்றாக இருந்தது. சிறு தீப்பொறியாக எழுந்த இக்கோரிக்கை, ஆசிரியர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், கடைநிலை ஊழியர்கள் என்று அனைத்துப் பெண் ஊழியர்களின் கோரிக்கையாக பெரு நெருப்பாகப் பற்றிக் கொண்டது. பிறகு பேச்சுவார்த்தையின் போது அன்றைய பீகார் முதல்வர் மாண்புமிகு லாலு பிரசாத், மூன்று நாட்கள் விடுப்பு எல்லாம் தர முடியாது; அதிகபட்சம் இரண்டு நாட்கள் விடுப்பு தர அரசு முடிவு செய்துள்ளது என்று அறிவித்தார். சமூக நீதிக் காவலர் லாலு பிரசாத் அவர் களுடைய முக்கிய சாதனைகளில் இது ஒன்றாகும். பீகார் அரசு ஊழியர்களின் வரலாற்று வெற்றி ஆகும். இதுகுறித்து இந்திய பொது சமூகம் இந்நாள் வரை அறியாமலே இருக்கிறது. பீகாருக்கு அடுத்து கேரளா மாதவிடாய் விடுப்பு வழங்கி வருகிறது. இந்தியாவில் கார்ப்பரேட் பெரு நிறுவனங்கள் இதுகுறித்து சிந்தித்த தாகத் தெரியவில்லை.

ஆனால் 9 தனியார் நிறுவனங்கள் தங்கள் பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கியுள்ளன. அவை சொமோட்டோ, சுவிக்கி, மாத்ருபூமி, மாக்ஸ்டெர், கோசூப், ஃப்ளைமைபிஸ், இண்டஸ்ட்ரி ஏஆர்சி, பைஜூஸ் உள்ளிட்ட 9 நிறுவனங்கள் ஆகும். இந்த நிறுவனங்கள் மாதம் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்குகின்றன. மேலும் வீட்டில் இருந்தபடியே வசதிப்பட்ட நேரத்தில் வேலை செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளனர். மேலும் இரண்டு அரை நாள் விடுப்பாகவும் துய்த்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்கள். இது ஒரு சிறிய முதல் அடிதான் என்றாலும் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கதே.

மாதவிடாய்

முதல் மாதவிடாய் என்பது பெண்கள் பருவம் எய்துவதை (menarche) குறிக்கும். பொதுவாக எட்டு வயது முதல் 18 வயதுக்குள் பெண்கள் பூப்பெய்து கிறார்கள். தமிழ் சமூகத்தில் இதனை பெண் பெரியவள் ஆகிவிட்டாள், வயதுக்கு வந்து விட்டாள் என்று பேச்சு வழக்கில் கூறுகிறார்கள். அன்று முதல் ஒவ்வொரு மாதமும் உதிரப்போக்கு இயற்கை சுழற்சியாக திங்கள் தோறும் 3-5 நாட்கள் நடைபெறுகிறது. சுமார் 45 வயதை ஒட்டி மாதவிடாய் நின்று விடுகிறது. இது மெனோபாஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. இவ்வுயிரியல் செயல்முறை கருவகம், கருப்பை, இயக்குநீர்கள் செயல்பாடுகளின் மூலம் நடக்கின்றது. “உயிரினப் பெருக்கத்திற்கு இயற்கை பெண்களுக்கு ஏற்படுத்தி உள்ள இந்த ஏற்பாடு பெருமளவு பெண்களுக்கு மிகப்பெரிய துன்பங்களை மாதந்தோறும் ஏற்படுத்துகிறது. நாடு, இனம், நிறம் வயது, காலம் வேறுபாடுகள் இன்றி அனைத்துப் பெண்களும் காலம் காலமாக அவதிப்பட்டு வருகின்றனர். இந்தச் சுழற்சி யின்போது பெண்களுக்கு உடல் மற்றும் மனதளவில் பல்வேறு மாற்றங்கள் விரைவாக ஏற்படுகிறது.

மாதவிடாய் கால அறிகுறிகள்

“மாதவிடாய் தொடங்கும் முன்பே பலருக்கு உடல், உள்ள மாறுதல்கள் ஒவ்வொரு மாதமும் தொடங்கி விடுகிறது. இதனை மருத்துவத் துறையில் pre menstrual
symptoms என்று கூறுகிறார்கள்.

அடி வயிற்றில் வலி ஏற்படுதல் மிகவும் முக்கிய மான ஒரு அறிகுறி ஆகும். மார்பகங்களில் இறுக்கம், வலி உணர்தல், இடுப்பு வலி, மூட்டு வலி, தசை வலி, உடல் வலி, சோர்வு, வயிறு உப்புசம், செரிமான கோளாறுகள், அதிகப் பசி, பசியின்மை, தலைவலி, மனச்சோர்வு, எரிச்சல், கோபம், கவனச் சிதறல் என்று ஒன்று அல்லது பல அறிகுறிகள் கூடுதலாகவோ, குறைவாகவோ ஏற்படும். சிலருக்கு தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் ஒரு சிலருக்கு ஒரு சில மாதங்களில் மட்டும் இவை ஏற்படும். திருமணம் ஆனவர் ஆகாதவர், குழந்தை பெற்றவர் பெறாதவர்கள், யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் இந்தத் துன்பங்கள் ஏற்படலாம். சுமார் 28 முதல் 78 விழுக்காடு பெண்கள் இந்த துன்பங்களை அனுபவிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி வெளியிட்ட ஆய்வுக் கட்டுரை ஒன்றில் மாதவிடாய் காலத்தில் வரும் வலியானது இலேசானது முதல் ஒரு மனிதனுக்கு மாரடைப்பால் ஏற்படும் நெஞ்சு வலியைப் போன்று தீவிரமான அளவு வரை இருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தீவிர வலியானது பாதிக்கப்பட்ட பெண்களைத் தற்கொலை முயற்சிக்குக்கூட கொண்டு சென்றுள்ளது.

மேலும் ஒரு சில பெண்களுக்கு ஏற்படும் அதிக அளவிலான குருதிப் போக்கு பெண்களுக்கு அனீமியா எனப்படும் இரத்தசோகை நோயை ஏற்படுத்துகிறது. ஆண்களை விட பெண்கள் இரத்த சோகை நோய்க்கு ஆளாவதற்குக் காரணம் அடிக்கடி பிள்ளைப் பேறு, அதிக அளவு மாதவிடாய் இரத்தப்போக்கு, சரிவிகித உணவு கிடைக்காமை ஆகியவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.

மாதவிலக்கு பற்றிய சமூகத்தின் பார்வை மிகவும் பிற்போக்கானதாகவே இன்று வரையில் உள்ளது. இன்றளவும் தீட்டு என்று சொல்லும் வழக்கம் உள்ளது. அதையொட்டி பெண்களை வீட்டில், சமூகத்தில், மதம், கோயில், (ஐயப்பன் கோவில் நுழைவு) திருவிழா பண்டிகை தொடர்பான நிகழ்வுகளில் ஒதுக்கி வைக்கும் போக்கு தீவிரமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஒதுக்கி வைப்பது சரிதான் என்றும், தாமாகவே முன்வந்து ஒதுங்கிக் கொள்ளும் அடிமைச் சிந்தனையும் பெண்களின் மூளையில் ஏற்றப்பட்டுள்ளது.

“அந்த நாட்களைப்” பற்றி வெளிப்படையாகப் பேசுவதற்குக் கூட பெண்களிடம் தயக்கம் நிலவுகிறது. மருத்துவமனையில் ஒரு மருத்துவரிடம் கூட சொல் வதற்கு, தனக்குத் தேவையான மருத்துவ உதவிகளைப் பெறுவதற்குக்கூட கூச்சப்படுகிற மனப்போக்கு நிறைய பெண்களிடம் வயது வேறுபாடு இன்றி நிலவுகிறது. சமூக வெளியிலும் கல்விப் புலத்தில் பள்ளி கல்லூரி களில் ஊடகங்களில் இது குறித்தான அச்சமற்ற, கூச்சமற்ற உரையாடல்களைப் பெண்கள், ஆண்கள் இடையே நடத்த வேண்டும்.

சில மாதங்களுக்கு முன்பு பீகாரில் யுனிசெஃப் நிறுவனம் நடத்திய கருத்தரங்கு ஒன்றில் ஒரு பள்ளி மாணவி அர்ஜோத் கவுர் பம்ரா என்ற அரசு உயர் அதிகாரியிடம், அரசு இலவச சானிடரி நாப்கின்களை தரவேண்டும் அல்லது குறைந்த செலவில் பத்து இருபது ரூபாய்க்கு வழங்க வேண்டும் என்று கேட்டார். அதற்கு அந்த அதிகாரி, அரசாங்கம் இலவசமாக எல்லாவற்றையும் தர வேண்டும் என்று ஏன் எதிர் பார்க்கிறீர்கள் என்று கேட்டபோது நாம் அனைவரும் அவருடைய பார்வை குறித்து அதிர்ச்சி அடைந்தோம். இப்படித் தான் இந்திய உயர் அதிகார வர்க்கத்தில் ஒரு சில பிரிவினரின் பார்வை உள்ளது.

அதேவேளையில் தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் மாணவியர்க்கு இலவச சானிடரி நாப்கின்களை வழங்கும் திட்டம் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் அனைத்து கிராமங்களில் உள்ள வளர் இளம் பெண்கள், பிரசவித்த தாய்மார்கள் மற்றும் சிறைச்சாலைகளில் உள்ள பெண் கைதிகள் ஆகியோர் நலனுக்காக இலவசமாக மாதவிடாய் பஞ்சுகள் (Sanitary Napkins) வழங்கிட 2011 நவம்பர் மாதத்தில் அன்றைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்தார். அத்திட்டம் இன்று வரையில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 10 வயது முதல் 19 வயது வரையிலான வளர் இளம் பெண்கள் குறித்த பதிவேடு பராமரிக்கப்படுகிறது. அதில் அவர்களின் எடை, உயரம், இரும்புச்சத்து அளவு பார்க்கப்படுகிறது. வளரிளம் பெண்களுக்கு வாரந்தோறும் ஒரு இரும்புச் சத்து போலிக் அமில மாத்திரை வழங்கப்பட்டு வருகிறது. தன் சுத்தம் பேணுதல், சுகாதார விழிப்புணர்வு வழங்கப்படுகிறது. இதன்மூலம் கருப்பைப் பாதை தொற்று ஏற்படாமல் தவிர்க்கப்படுகிறது.

இந்திய அளவில், மகப்பேறு விடுப்பு அதிக அளவு வழங்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. மகப்பேறு விடுப்பு ஓராண்டு வழங்கப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் மாதவிடாய் விடுப்பு வழங்க வேண்டும் என்ற குரல்கள் ஏதும் பெரிதாக எழவில்லை. பீகார், கேரளாவைப் பின்பற்றி தமிழ்நாடு அரசே முன்வந்து மாதவிடாய் விடுப்பு வழங்க வேண்டும். பணி இடங்களில் பெண்களுக்கென தனியாகக் கழிவறையுடன் கூடிய ஓய்வறை ஏற்படுத்தித் தர வேண்டும். மாதவிடாய் காலங்களில் விடுப்பு எடுக்க/அளிக்க இயலாத சூழலில் சில மணி நேரங்கள் ஓய்வு எடுக்க அலுவலகங்களில் அனுமதி தேவை.

பெண்களுக்கான மாதவிடாய் விடுப்பு விடுமுறை அவர்கள் மீதான அனுதாபத்தால் தந்ததாக இல்லாமல் அது அவர்களின் உரிமை; நாம் அவர்களைப் புரிந்து கொண்டோம், மதிக்கிறோம் என்பதால் தரப்பட வேண்டும்.

ஒவ்வொரு பெண் பணியாளரும் மாதவிடாய் விடு முறையைப் பெறுவதற்கான உரிமையை தனியார் நிறுவனங்கள், பொது நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும். ஒருவரின் ஆரோக்கியத்தைக் கெடுப்பதன் மூலம் எந்த வேலையும் நிறைவேறாது! எல்லாவற்றிற் கும் மேலாக, அனைத்து வகையான பணிகளைச் செய்யும் தொழிலாளர்களாக ஆவதற்கு முன் நாம் அனைவரும் மனிதர்கள். இதுபோன்ற சின்ன சின்ன அக்கறைகளைக் காட்டி பெண்களுக்கு சமூகம் உதவ வேண்டும். இது அசாதாரணமான மாற்றங்களைக் கொண்டு வரும்.

- -மரு. சா.மா.அன்புமணி

Pin It