சென்னையில் கூடிய பெண்கள் சங்கத்தில், பெண்கள் நலனுக்கென்று, சில பெண்கள் கூடி, சில தீர்மானங்கள் செய்திருக்கிறார்கள் என்பதாகத் தெரிய வருகிறது. அவற்றின் ஒரு தீர்மானமானது இந்திய ஸ்திரீ ரத்தினங்கள் நளபாக அடுப்பும், சப்ர மஞ்சக் கட்டிலும், பிரசவ ஆஸ்பத்திரியும் தவிர வேறு இடத்திற்குத் தகுதியானவர்கள் அல்ல என்கின்ற மனப்பான்மையைக் காட்டுவதாய் இருக்கின்றது.

அதாவது, “சிறுவர் பாடசாலைகளில் சிறுமிகளுக்கு அவசியமாக வேண்டப்படும் சங்கீதம், கோலாட்டம், பின்னல், குடித்தன சாஸ்திரம் இவைகளைப் போதிக்க வேண்டியதிருப்பதால் சிறுவர் பாடசாலைகளையும், சிறுமிகள் பாடசாலைகளையும் ஒன்றாகச் சேர்க்கக் கூடாது” என்று தீர்மானித்திருக்கிறார்கள்.

இந்தியப் பெண்கள் தாம் ஐரோப்பிய நாடுகளிலுள்ள மிருகங்களை விட கேவலமான நிலையில் இருப்பதைப் பற்றி சிறிதாவது கவலையோ, வெட்கமோ அடைந்ததாகத் தெரியவில்லை. “கல்வியறிவுள்ள மேதாவிப்” பெண்களான ஸ்திரீ ரத்தினங்களைப் பற்றியே நாம் பேசுகின்றோம்.

இவர்கள் நிலையே இப்படியானால், பிள்ளை பெரும் யந்திரங்களான மற்ற ‘வநிதாரத்தனங்களை’ப் பற்றிப் பேசவும் வேண்டுமா? மேல் நாட்டுப் பெண்களின் இன்றைய யோக்கியதையை எடுத்துக் கொண்டால் அவர்கள் எந்நாட்டு ஆண் பிள்ளைகளுடனும், எத்துறையிலும் போட்டி போடத் தகுந்த கல்வியும், தொழில் திறமையும் கொண்ட சக்தியையும் உடையவர்களாய் இருக்கிறார்களே ஒழிய இந்திய “ஸ்திரி ரத்தினங்கள்” கோருகிற மாதிரி சங்கீதம், கோலாட்டம், பின்னல், குடும்ப சாஸ்திரங்கள் ஆகியவைகளைக் கற்று சீதையைப் போலவும், சந்திரமதியைப் போலவும், திருவள்ளுவர் பெண் ஜாதியான வாசுகியைப் போலவும், நளாயினியைப் போலவும் இருக்கத் தகுதியற்றவர்களாகவே இருப்பார்கள் - இருக்கிறார்கள்.

periyar voc 600உதாரணமாக இதன்கீழ் உலகப் பிரசித்தி பெற்று வாழ்கின்ற ஒரு 6, 7 பெண்களைப் பற்றி மாத்திரம் குறிப்பிடுகின்றோம்.

1. எலிநார் மிச்சேல் (Eleanor mitchell) என்கிற ஐரோப்பிய மாது ஒரு நிமிடத்துக்கு 1000 எழுத்துகள் டைப்பு அடிக்கக்கூடிய சக்தியோடு கடந்த ஐந்து வருஷ காலமாக உலகிற் சிறந்த டைப்பிஸ்டாக முதற் பரிசு பெற்று வருகிறார்.

2. மிஸ். ஆமிஜான்சன் (Amy Johnson) என்கின்ற ஐரோப்பிய மாது, இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்கும் ஆகாய விமானத்தில் அதி வேகமாய்ச் செல்லக்கூடிய கீர்த்தி பெற்றிருக்கிறார்.

3. ஜார்ஜ் என்னும் செல்வப் பேர் வாய்ந்த ஜாயி கூப்பர் (Joyee cooper) என்கிற ஒரு ஐரோப்பிய ஆங்கில மாது தண்ணீரில் நீந்துவதில் ஆண்களைவிட கீர்த்தி பெற்றிருக்கிறார். அத்துடன் தன்னைப் போலவே நீந்துவதில் பேர் பெற்ற, பீரியன் இசன் (Brian Hession) என்கின்ற ஒரு ஆண் மகனையே மணக்கப் போவதாக உறுதி கொண்டிருக்கிறார்.

4. மிஸஸ் கார்நல் (Cornell) என்கிற மற்றொரு மாது. பெண்கள் சரீர அப்பியாச சங்கத்திற்கு காரியதரிசியாயிருந்து கொண்டு சர்வ தேச சரீர அப்பியாச சங்க பந்தயங்களில் அதிகம் தூரம் தாண்டும் பந்தயத்தில் முதலாவதாக தாண்டி, முதல் பரிசு பெற்று அட்லாண்டா (Atlanta) “என்கின்ற தெய்வம்” போல் பிரக்கியாதி பெற்றிருக்கிறார்.

5. சோனியா ஹென்ஜ் (Sonia Henje) என்கின்ற மற்றொரு மாது, உரை பனியின் மீது சரிந்து நடக்கும் ஒருவித பந்தயத்தில் உலகப் போட்டியில் வெற்றி பெற்ற  உலக சாமர்த்தியசாலி என்ற பட்டம் பெற்றிருக்கிறார்.

6. மிஸஸ் ஸட்டூவர்ட் (Stewart) என்கின்ற மாது மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் விடுவதில் உலகத்தில் அதிக வேகமாய் விட்டவர்களின் அளவையெல்லாம் மீறி 1930ல் ஒரு மணிக்கு 130 மைல் வேகத்தில் விட்டு வெற்றி பெற்றிருக்கிறார்.

7. பெட்டி கார்ஸ்டேர்ஸ் (Betty Carstairs) என்கிற மாது 400-டன் எடையுள்ள மோட்டார் படகை தண்ணீரில் செலுத்தி பெரும் பெரும் பந்தயங்களில் வெற்றி பெற்று “மோட்டார் படகு ராணி” எனப் பெயர் பெற்றிருக்கிறார்.

இப்படி இன்னமும் அநேக பெண்களை பிரத்தியட்ச காட்சியாக இன்றும் ஐரோப்பாவில் காணலாம்.

துருக்கியில் (கோஷா) படுதாவில் இருக்கவேண்டிய ஒரு மாது போலீஸ்இலாக்கா இன்ஸ்பெக்டர் ஜனரலாயும், மற்றொரு மாது அன்னிய நாடுகளுக்குச் சென்று பேசும் பிரதிநிதியாகவும் இருக்கிறார்.

மற்றும் ரஷியா முதலிய தேசங்களில் ரயில்வே இன்சின் ஓட்டுதல், பெரிய யந்திரசாலைக்குத் தலைமை வகித்தல் மற்றும் வைத்திய இலாக்கா தலைமை அதிகாரியாயிருத்தல் முதலிய அநேக காரியங்கள் திரமையாய் நடத்துகிறார்கள். இந்திய “ஸ்திரீ ரத்தினங்கள்” -– கடைந்தெடுத்த அடிமை ரத்தினங்களாயிருப்பதற்கு ஏற்ற சங்கீதம், கும்மி, கோலாட்டம், பின்னல், குடும்ப சாஸ்திரம் ஆகியவை படிக்க ஏற்பாடு செய்யப்படுகிறார்கள். ஆதலால் தான் அவர்கள் ஆண் பிள்ளைகள் கூடயிருந்து படிக்கக் கூடாது என்றும் தீர்மானம் செய்திருக்கிறார்கள் போலும்! இதைப் பார்த்த யார் தான் வெட்கப்படாமல் இருப்பார்கள்.

ரஷிய தேசத்தின் ஜனத்தொகை 17 கோடி என்றால், 17 கோடி மக்களும் ஆண் பெண் அடங்க மனிதத் தன்மை பெற்ற மனிதர்களாகவே இருக்கிறார் கள். இவர்கள் யாவரும் அத்தேச எல்லாக் காரியங்களையும் கவனிக்க அரு கதையுள்ளவர்களாகவும், ஆட்சிபுரியச் சக்தியுடையவர்களாகவும் இருப்ப தோடு, இவ்வளவு பேர்களின் “குடும்ப காரியங்களை” கவனிக்க ஆண்களும் பெண்களுமாய்ச் சேர்ந்து 100க்கு ஒருவரோ, இருவரோ மாத்திரம் பெண்ணோ, அல்லது ஆணோ குடும்ப சாஸ்திரம் படித்திருந்தால் போதும் என்கின்ற நிலையில் இருக்கிறார்கள். மற்றவர்கள் சுதந்திர சாஸ்திரத்தில் தீரர்களாயிருக்கிறார்கள்.

இந்தியாவில் 34 கோடி மக்கள் இருந்தாலும் இவர்களில் பகுதியாகிய 17 கோடி பேர்களான ஸ்திரீ ரத்தினங்கள் ஆடல், பாடல், குடும்ப சாஸ்திரம், கோலாட்டம், பின்னல் கும்மி கற்றவர்கள் என்று கழித்துவிட்டால் மீதி எவ்வளவு என்று பாருங்கள்.

அன்றியும், இந்த ஆடல், பாடல், கும்மி, கோலாட்டம், குடும்ப சாஸ்திரம் ஆகியவற்றில் வாழும் ஸ்திரீ ரத்தினங்கள் வயிற்றில் பிறக்க நேர்ந்த பிண்டங்களாகிய ஆண்களுக்குத்தான் எவ்வளவு யோக்கியதை இருக்க முடியும் என்று யோசித்துப் பாருங்கள்.

மேற்கண்ட ஸ்திரீ ரத்தினங்களின் ஆடல், பாடல்களுக்குத் தாளம் போடவும், கோலாட்டத்திற்குக் கோல் சீவிக்கொடுக்கவும், குடும்ப சாஸ்திரத்து வித்தாயிருக்கவும் தவிர வேறு என்ன வேலைக்கு லாயக்குடையவர்கள் ஆவார்கள் என்பது நமக்கே விளங்கவில்லை. பெண்கள் முன்னேற்றத்திலும் கூட பார்ப்பனீயப் பேய்த் தன்மை புகுந்து நாட்டைப் பாழாக்குகின்றதென்றால் பிறகு இவர்களுக்கு வேறு என்னதான் கதி என்பது நமக்கு விளங்கவில்லை. ஏனெனில் பச்சைப் பார்ப்பனீயத்தில் தான் பெண்களுக்கு இந்த யோக்கியதைகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

நிற்க, கற்ப ஆட்சி கூடாதென்றும், கல்யாண ரத்து கூடாதென்றும் தீர்மானங்கள் செய்ததும்கூட இந்த ஸ்திரீ ரத்தினங்கள் தான் என்றால் இவர் களே கூடிய கூட்டங்களில், கும்மி, கோலாட்டம், ஆடல், பாடல், பின்னல் குடும்ப சாஸ்திரங்களுக்குத் தான் பெண்கள் லாயக்கு என்று தீர்மானிப்பதில் அதிசயம் ஏதும் இருப்பதாக நமக்குக் காண முடியவில்லை.

அன்றியும், ஆண் பிள்ளைகளுடன் பெண் பிள்ளைகள் சேர்ந்து படிக்கக்கூடாது என்பதின் கருத்தும் நமக்கு விளங்கவில்லை. ஒரு சமயம் ஆண்களுடன் பெண்கள் சேர்ந்து படிப்பதால்-பழகுவதால், பெண்கள் மீது ஆண்களுக்கு உள்ள குருட்டு மோகம் குறைந்து விடுமோ என்னமோ என் கின்ற பயம் காரணமாய் இருந்தாலும் இருக்கலாம் என்றுதான் எண்ண வேண்டியிருக்கின்றது.

ஆண்களுடன் பெண்கள் நெருங்கிப் பழகவும், சேர்ந்து படிக்கவும் இடம் கொடுத்து விட்டால் கண்டிப்பாய் இன்றைய தினம் பெண்களுக்கு உள்ளது போன்ற அடிமை நிலையான குடும்ப சாஸ்திரம் என்னும் அடுப்பூதும் நிலையும், குழந்தை விவசாயம் செய்யும் பண்ணை நிலையும், கும்மி, கோலாட்டம், ஆடல், பாடல்களால் அல்லாமல் ஜீவிக்க முடியாத நிலையும், அதாவது பெண்களுக்கு மேற்கண்டவைகளே முக்கியமானது என்கின்றதான நிலைகள் பறந்தே போய் விடும். ஒரு சமயம் மேல்கண்டவைகள் எல்லாம் கலை ஞானமென்றும் அவைகள் இல்லாவிட்டால் மிருகங்களுக்குச் சமான மென்றும், சில சனாதன மேதாவிகள் சொல்லக் கூடும். அப்படியானால் அந்த அருங்குணங்கள் இல்லாத ஆண்கள் கலை ஞானமற்ற, – மிருகங்களுக்கு சமானமானவர்களா என்று அவர்களைப் பணிவுடன் கேட்கின்றோம்.

அப்படிக்கில்லாமல் ஒரு சமயம் ஆண்களுக்கேற்ற கலை வேறு, பெண்களுக்கேற்ற கலை வேறு என்று சொல்லுவார்களானால் அந்தப் புத்தியைத்தான் என்ன செய்தாவது ஒழிக்க வேண்டும் என்று நாம் சொல்லுகின்றோம். அந்தப் புத்தியின் உணர்ச்சி தான் பெண்களை கும்மி, கோலாட்டம், ஆடல், பாடல், குடும்ப சாஸ்திரம் ஆகியவை வேண்டும் என்று சொல்லுகின்றது என்று சொல்லுகின்றோம்.

தவிர இந்தத் தீர்மானங்களை நிறைவேற்றிய ஸ்திரீ ரத்தினங்களில் நமக்குத் தெரிந்த, அறிமுகமுள்ள தோழர் பெண்களும் சிலர் இருந்திருக்கிறார்கள். அவர்களை ஒன்று கேட்கின்றோம். அதாவது அவர்களுடைய இன்றைய வாழ்க்கையில் கோலாட்டமும். சங்கீதமும், பின்னலும், குடும்ப சாஸ்திரமென்பதும் எவ்வளவு தூரம் பயன்படுகின்றது? அதனால் அவர்களது முன்னேற்றம் எவ்வளவு ஏற்பட்டிருக்கின்றது? என்று அறிய விரும்புகின்றோம்.

எனவே இந்த ஸ்திரீ ரத்தினங்கள் இந்தியப் பெண்களுக்கு அடிமைப்பட்ட மிருகத்திலும் கேவலமாய் சமயல் காரியாகவும், ஆயம்மாளாகவுமே இருந்து வரும் பெண்கள் ரத்தினங்களுக்கு அவர்களை மனித ரத்தினங்களாக்க எப்படி பிரதிநிதிகளாயிருக்க தகுந்தவர்கள் என்பதுதான் நமக்கு புரியாத விஷயமாயிருக்கின்றது.

(குடி அரசு - தலையங்கம் - 29.01.1933)

Pin It