1.தொடக்கக்கல்வி முதல் உயர்கல்வி வரை அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும், வகுப்பறைகளில் மாணவர்கள் ஆண் - பெண் என தனித்தனியாக அமரவைக்கப்படும் முறையைத் தடை செய். அகர வரிசைப்படி  (alphabetical order) ஆண் - பெண் மாணவர்கள் கலந்து அமரும் முறையை நடைமுறைப்படுத்து! பள்ளிக்கல்வி யிலிருந்தே பாலியலையும் ஒரு பாடமாகக் கற்பி!

2.புதுடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் நடைமுறையில் உள்ள ‘இருபால் பொதுவிடுதி’ முறையை  (Co - Hostels or Unisex Hostels) பள்ளி - கல்லூரிகள் அனைத்திலும் நடைமுறைப்படுத்து!

3. பெண்களை வெறும் அலங்காரப் பொம்மைகளாக மட்டுமே உருவாக்கும் வகையில், குழந்தைப் பருவத்திலேயே நடத்தப்படும் காது குத்து விழாக்களைத் தடைசெய்!

பெண் குழந்தைகள் பிறந்த ஒரு சில ஆண்டுகளிலேயே அவர்களுக்குக் காது குத்தப்பட்டு, நகைகள், பட்டு ஆடைகள் அணிவிக்கப்படுகிறது. அதுவும் அக்குழந்தையின் தந்தையுடடைய குலதெய்வத்தின் கோவிலில், குழந்தையின் ‘தாய்மாமன்’ மடியில் அமர வைக்கப்பட்டு அந்தச் சடங்குகள் நடத்தப்படுகின்றன. இவை மாற்றக்கூடாத மத, இனப்பண்பாடாகவும் உள்ளன. பெண்கள் நகை மாட்டும் Þடாண்டுகளாக, அலங்காரப் பொம்மைகளாகச் சித்தரிக்கப்படும் நிலைக்கு அடிப்படையாகவும், ஜாதி உறவுகளைப் புனிதப் படுத்தும் தன்மையிலும், ஜாதி வெறியைக்கு ஊக்கம் தரும் தன்மையிலும் இருக்கும் இந்தக் ‘காது குத்து விழா’க்களைப் புறக்கணிப்போம்!

4. பெண்களை இழிவு படுத்தும் பூப்புனித நீராட்டு விழாக்களைத் தடைசெய்!

வியர்வை, சிறுநீர், மலம் போல பெண்ணின் உடலில் இருந்து கழிவுகள் வெளியேறும் இயல்பான ஒரு உடல் இயக்கத்தை ‘பூப்புனித நீராட்டு விழா’ என ஒரு விழாவாக நடத்துவது, பெண்களைக் கொச்சைப் படுத்துவதாகும். பெண் குழந்தைகளின் மனதில் ஒரு மணப்பெண்ணுக்குரிய மனநிலையை உருவாக்கி, அக்குழந்தையின் வளர்ச்சியையும், எதிர்காலத்தையும் முடக்குவதோடு - பெண் குழந்தைகள் திருமணத்திற்கு தயார் என்பதை அறிவிக்கும் நிகழ்வாகவே இவ்விழாக்கள் உள்ளன. ‘தாய்மாமன்சீர்’ என்ற பெயரில் பெண்களின் விருப்பங்களுக்கு எதிராக, ஜாதிக்குள்ளேயே திருமணம் செய்யவேண்டும் என்ற ஜாதி ஆதிக்கச் சிந்தனைகளையும் திணிக்கின்றன இவ்விழாக்கள்.  ஆணாதிக்கத்தையும், ஜாதி ஆதிக்கத்தையும் மேலும் மேலும் உறுதிப்படுத்தும் ‘பூப்புனித நீராட்டு விழா’ க்களைத் தடைசெய்.

5.பெண்கள் திருமணத்திற்கு முன் தந்தையின் குலதெய்வத்தையும், திருமணத்திற்குப் பிறகு கணவனின் குலதெய்வத்தையும் வணங்க வேண்டும் என்ற நிலையில் உள்ள, மிகப்பெரும் பாலினப்பாகுபாடான ‘குலதெய்வ வழிபாடு’களைத் தடைசெய்!

6. திருமணங்களில் பெண்களின் சம்மதத்தையும், பெண்கள் சுயமாக சம்பாதிக்க வேண்டும் என்பதையும் கட்டாயமாக்கு!

பெண்களின் திருமணத்திற்கு 18 வயது முடிவடைய வேண்டும் என்பது அடிப்படைத் தகுதியாக உள்ளது போல, சொந்தக் காலில் நிற்கும் நிலையில் - சொந்தமாக சம்பாதிக்கும் நிலையில் இருப்பதும் அடிப்படைத் தகுதி என சட்டமியற்ற வேண்டும். அதற்னெ அனைத்து அதிகாரமும் கொண்ட மகளிர் ஆணையங்கள் உருவாக்கப்பட்டு, அந்த ஆணையங்கள், பெண்ணின் சம்மதத்தையும், சம்பாத்தியத்தையும் உறுதிப்படுத்திய பின்னரே திருமணங்கள் உறுதி செய்யப்படவேண்டும் என்று சட்டம் இயற்றவேண்டும். சட்டங்கள் வருவதற்கு முன் பெண்கள் இதில் உறுதியாக இருக்க வேண்டும்.

7. உடல் அழகே முக்கியம் என்ற எண்ணத்தை உருவாக்கும் அனைத்து விளம்பரங்களையும் தடைசெய்! பெண்களின் அலங்காரத்தைத் தவிர வேறு எதற்கும் பயன்படாத மலர் விவசாயம், மலர் வணிகம் ஆகியவற்றைத் தடைசெய்.

‘உடல் அழகுதான் மிகமுக்கியம்’ என்ற மனநிலை நோக்கிப் பெண்களை நகர்த்தும் நகை விளம்பரங்கள், அழகுப்பொருள் விளம்பரங்கள், பட்டுச்சேலை விளம்பரங்கள் போன்ற அனைத்தையும் தடைசெய்வதோடு, அவற்றின் உற்பத்தி, வணிகம் அனைத்தையும் தடைசெய்ய வேண்டும். முதற்கட்டமாக பெண்கள் அவற்றைப் புறக்கணிக்க வேண்டும். அழகு என்ற அடிப்படையில்கூட உலகில் முன்னேறிய நாடுகளில் உள்ள பெண்கள் எவரும் தலையில் பூ வைத்துக் கொள்வதில்லை. கிடாவெட்டுக்கு நேர்ந்து விடப்படும் செம்மறி ஆடுகளைப் போல, தேவையின்றி பூ வைத்துக்கொள்ளும் பழக்கத்தைப் பெண்கள் கைவிட வேண்டும்.

8. பெண்களுக்கு என தனியாக இருசக்கர வாகனங்கள் வடிவமைப்பதையும், தயாரிப்பதையும், அதன் வணிகத்தையும் தடைசெய்!

இருசக்கர வாகனங்களில் ஆண்களுக்கு ஒரு மாடலும், பெண்களுக்கு ஒரு மாடலும் வடிமைப்பது தேவையற்ற பாலினப்பாகுபாட்டை வளர்க்கிறது. பெண்களின் சேலை, தாவணி போன்ற ஆடைகள் ஆண்களுக்கான வாகனங்களை ஓட்டத் தடையாக இருந்தன. ஆனால், தற்போது, சேலை, தாவணிகள் குறைந்து சுடிதார், லெகிங்Þ, ஜீன்Þ வகை ஆடைகள் வந்துவிட்ட நிலையிலும், பெண்களுக்குத் தனியாக , வாகனங்களை வடிவமைத்து விற்பனை செய்வது மிகப்பெரும் பாலினப்பாகுபாடு ஆகும். எனவே, பெண்களுக்கென தனியாக, வாகனத் தயாரிப்பு, விற்பனை, அவை குறித்த விளம்பரங்கள் அனைத்தையும் தடைசெய்ய வேண்டும்.  பெண்கள் இருசக்கர வாகனம் பழகுவதாக இருந்தால், சைக்கிள், பைக் போன்ற எந்தவகை வாகனமாக இருந்தாலும் ஆண்களுக்காக வடிவமைக்கப்பட்ட வாகனங்களிலேயே பழக வேண்டும். அவற்றையே பயன்படுத்த வேண்டும்.

9. ‘திருமணம் தேவையில்லை’ என்றும், ‘குடும்ப அமைப்பே வேண்டாம்’ என்றும்  முடிவெடுத்துத் தனித்து வாழத் துணிந்த பெண்களுக்கு, அரசு மாவட்டந்தோறும் தங்கும் விடுதிகளை உருவாக்கு!  திருமணங்கள் உறுதிசெய்யப்படும் போதே, அந்த மணமக்களுக்குத் ‘தனிக்குடித்தனம்’ என்பதைக் கட்டாயமாக்கு! ஒன்றாக இருக்க வேண்டிய சூழல் இருந்தாலும், அந்தத் தம்பதிகள் இடையில் எக்காரணம் கொண்டும், எந்தச் சூழலிலும் இரு தரப்புப் பெற்றோர்களும் தலையிடுவது சட்டப்படிக் குற்றமாக அறிவிக்கப்பட வேண்டும்.

குடும்ப அமைப்பு என்பது பெண்களுக்குப் பெரும் சிறையே ஆகும். அதிலும் கூட்டுக்குடும்பங்கள் மிகக் கொடுமையான சிறைகளாக உள்ளன. எனவே, திருமணத்தைத் திட்டமிடும்போதே அவர்களுக்குத் தனிக்குடித்தனம் என்பதைக் கட்டாயமாக்க வேண்டும். சிறு குழந்தைகளைப் பராமரிக்க க்ரஷ்கள் உருவாவதைப் போல, பெற்றோர்களைப் பராமரிக்க அரசே, ஆங்காங்கே முதியோர் இல்லங்களை உருவாக்க வேண்டும். ஏற்கனவே இயங்கும் முதியோர் இல்லங்களைத் தரம் உயர்த்த வேண்டும். தேவையைப் பொறுத்து, பெற்றோர்களே முன்வந்து முதியோர் இல்லங்களை நாட வேண்டும்.

கிராமங்களில் நிலங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, ஒருங்கிணைந்த கூட்டுப்பண்ணைகளாக விவசாயமும், அதன் துணைத் தொழில்களும் நடந்தால், மிக எளிய மக்களும் சுதந்திரமாக, தனிக்குடும்பங் களாக வாழ இயலும். அனைத்துக் கூட்டுப்பண்ணைகளும் முதியோர் இல்லங்களோடு இயங்கினால், வயதான காலத்தில் பெற்றோர் பராமரிப்பும் சாத்தியம்.

10. பெண் விடுதலை நோக்கிலும், மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் ஆண் - பெண் இருபாலரும் திருமணத்திற்கு முன்பே கருத்தடைச் சிகிச்சைகளைச் செய்ய வேண்டும்!

பெண்களின் முழுமையான விடுதலைக்கு மிகப்பெரும் தடையாக இருப்பது குழந்தைபெறும் முறையும், குழந்தை வளர்க்கும் முறையும் ஆகும். பெண்ணின் விடுதலை, ஆணின் விடுதலை இரண்டுக்கும் எதிரானது குழந்தை பெறும் முறை. ஒவ்வொருவரும் சொத்து சேர்ப்பதற்கும், அதற்காக அனைத்துத் தவறான வழிகளையும் நாடுவதற்கும் அடிப்படையானது இந்த வாரிசு உருவாக்கும் முறை. நாட்டின் முன்னேற்றம், வளர்ச்சி அனைத்திற்கும்  தடையாக இருப்பது மக்கள்தொகைப் பெருக்கம். தனிப்பட்ட முறையில் மகளிருக்கும், ஆண்களுக்கும், ஒட்டுமொத்தமாக சமுதாய வளர்ச்சிக்கும் தடையாக உள்ள மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த, பெண்கள் பிள்ளை பெறுவதை நிறுத்த வேண்டும்.

தலைமுடியை க்ராப் செய்துகொள்ளும் பெண்களுக்கு தோழர் பெரியார் பரிசுகளை வழங்கினார். அதுபோல, திருமணத்திற்கு முன்பே கருத்தடை சிகிச்சை செய்துகொள்பவர்களுக்கும் - பிள்ளை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கும் ஆண், பெண் இருபாலருக்கும், நாட்டின் எதிர்கால நலன்கருதி அரசாங்கம், கல்வி- வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்க வேண்டும்.

11. இல்லப்பராமரிப்பிலும், சமையல் உள்ளிட்ட அனைத்து வீட்டு வேலைகளிலும், குழந்தை வளர்ப்பிலும் சமஉழைப்புக் கொடுக்காத ஆண்களுக்குக் கடும் தண்டனைகள் வழங்க வேண்டும். ‘பாலினத் தீண்டாமை வன்கொடுமைத் தடுப்புச்சட்டம்’ என்ற பெயரில் புதிய பாலின சமத்துவ நோக்கிலான சட்டங்களை உருவாக்கவேண்டும்.

இல்லப் பராமரிப்பில் உள்ள அனைத்துப் பணிகளிலும் ஆண்களும் இணைந்து பணியாற்ற வேண்டும். சமையல், வீடு சுத்திகரிப்பு, குழந்தை வளர்ப்பு என அனைத்திலும் ஆண்களும் இணைந்து பங்கேற்க வேண்டும். ‘ஹவுÞ ஒய்ஃப்’ என்ற இனமே நாட்டில் இருக்கக்கூடாது. திருமணமாகும் பெண்கள் சொந்தக் காலில் நிற்பதை உறுதிசெய்த பிறகே திருமணம் என்பது சட்டமாக வந்தால், ‘ஹவுÞ ஒய்ஃப்கள்’ உருவாக மாட்டார்கள்.

மேற்கண்ட அனைத்துப் பாலினப் பாகுபாடுகளுக்கும் எதிராக - பாலின வன்கொடுமைத் தடுப்புச்சட்டங்களை உருவாக்கக் கோரி, ஒரு அடையாளமாக, முதற்கட்டமாக, 2017 டிசம்பர் 24 ஆம் நாள் தமிழ்நாடு முழுவதும் ஒரு நாள் “சமையல் மறுப்புப் போராட்டம்”  Boycott Cooking - Boycott Kitchen நடத்துவோம்.

யாரும் தெருவுக்கு வரவேண்டாம். வெளியில் யாருடனும் போராட வேண்டாம். காவல்துறையோடும் நீதிமன்றங்களோடும் போராட வேண்டாம். சிறைசெல்ல வேண்டாம். இதுவரை வீட்டில் பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அனைத்து அடிமைப் பணிகளையும் புறக்கணித்தால் மட்டும் போதும்.

ஜாதித் தீண்டாமை வன்கொடுமைகளுக்கு எதிராக இரட்டைக்குவளை உடைப்புப் போராட்டங்கள் நடந்தன. அதுபோல, இரண்டாம் கட்டமாக, பாலினத் தீண்டாமை வன்கொடுமைகளுக்கு எதிராக, ‘சமையலறை உடைப்புப் போராட்டம்’ நடத்துவோம்.  

Pin It