“பெண்ணாய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திருக்க வேண்டும்” என்றார் தேசிக விநாயகம் பிள்ளை. அதுமட்டுமல்ல இன்றளவும் இந்தியாவில் காளியாகவும், மாரியம்மாளாகவும், பராசக்தியாகவும், இவை போன்ற சக்திவாய்ந்த தெய்வங்களாக பெண் தெய்வங்களே உள்ளனர். அத்தகு பெருமை பெற்ற இந்தியா பெண்களுக்குப் பாதுகாப்பான நாடுதானா என்பதைக் கேள்வி கேளுங்கள்.
இந்தியா பெண்களுக்குப் பாதுகாப்பான நாடுதானா?
பெண்கள் எந்த இடத்தில் மரியாதையுடன் நடத்தப்படுகின்றனரோ அந்த இடத்தில் தேவதைகள் குடியிருக்கின்றனர் என்கின்றது மகாபாரதம்.
ஆனால் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நாடுகளின் பட்டியலில் நமது பழம்பெரும் தேசம் முதல் இடம் வகிப்பதாக சர்வதேச செய்திகள் நம் காதுகளைத் துளைக்கின்றது. இவையெல்லாம் உண்மைதானா, உண்மையிலேயே இந்தியாவில் என்ன நடக்கின்றது என்பதை சிந்திக்க வேண்டிய அவசியம் உள்ளது. கடந்த இரண்டு மாத காலமாக குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான வன்முறைகள் குறித்து வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்தான் என்ன?
தாமஸ் ராய்டர்ஸ் பவுண்டேசன் என்கின்ற ஊடக ஆய்வு நிறுவனம் உலகின் பல்வேறு நாடுகளில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத மோசமான நாடு எது? என்ற தனது ஆய்வு முடிவை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத மோசமான நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது என்று இந்த ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது. இதற்காக சுமார் 500க்கும் மேற்பட்ட நிபுணர்கள் பல்வேறு நாடுகளின் பல்வேறு சூழல்களையும் அறிக்கைகளையும் ஆய்வு செய்து இந்த முடிவை அறிவித்துள்ளனர். கடந்த 2011ஆம் ஆண்டில் கடைசியில் இருந்து நான்காவது இடத்தில் இருந்த இந்தியா தற்பொழுது மிகவும் மோசமான நாடுகள் பட்டியலில் முதல் இடத்தில் வந்துள்ளது.
சமீபகாலமாக நடைபெற்று வரும் பெண்கள் மீதான மிக மோசமான பாலியல் பலாத்கார சம்பவங்கள், பாலியல் பலாத்காரப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் நீதி பெறுவதற்கான சூழல் இல்லாதது, பெண்கள் கடத்தப்படுவது, பெண்களை மதிக்காமல் அவமரியாதை செய்வது, திருமணம் போன்ற கலாச்சார சடங்குகள் என்ற பெயரில் பெண்களின் தன்மானம் பாதிக்கும்படி செய்வது, கருக்கொலை, சிசுக்கொலை ஆகிய தினசரி சம்பவங்கள் நமக்கு இந்த ஆய்வை நிரூபிக்கின்றன. ஒரு மணி நேரத்திற்கு நான்கு பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக அரசு புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது. அதாவது 2007 முதல் 2016 வரையிலான காலங்களில் இந்த வன்முறைகள் 83% அதிகரித்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பெண்கள் மீதான வன்முறை மற்றும் பாலியல் பலாத்கார வன்முறைகளில் இந்தியாவானது தற்பொழுது ஆப்கானிஸ்தான், சிரியா மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளை முந்தி விட்டது என்று புள்ளி விவரங்கள் தெரிவிப்பது வெட்கக் கேடானது.
இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் சுமார் சரிபாதியாக உள்ள பெண்கள் இந்தியாவில் பாதுகாப்பாக வாழ முடியாது என்றால் என்ன செய்வது? நாங்கள் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒரு முக்கியமான நாடு என்று எந்த நம்பிக்கையில் கூறுவது? இப்படி பெண்கள் பாதுகாப்பாக வாழமுடியாத நிலைமைக்குக் காரணமான ஆட்சியாளர்களை என்ன பதில் சொல்லப் போகின்றார்கள்? எந்த நம்பிக்கையில் நாம் 71 சுதந்திர தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம்?
இந்தியா குழந்தைகளுக்குப் பாதுகாப்பான நாடுதானா?
“ஓடி விளையாடு பாப்பா ! நீ
ஓய்ந்திருக்கலாகாது பாப்பா !
சின்னஞ் சிறுகுருவி போலே – நீ
திரிந்து பறந்துவா பாப்பா!
வண்ணப் பறவைகளைக் கண்டு-நீ
மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா!” என்றார் பாரதியார்.
பாரதியின் பாடல்படி குழந்தைகள் மகிழ்ச்சியாக விளையாட முடிகின்றதா?
குழந்தைத் திருமணங்கள் நடைபெறும் நாடுகளின் பட்டியல் பற்றிய ஆய்விலும் இந்தியாவே முதலிடம் வகிக்கிறது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஜூலை மாதம் வெளிவந்த மற்றொரு அதிர்ச்சித் தகவல் யாதெனில், 18 வயதிற்குள்ளான இரண்டு கோடி சிறுவர்கள் இந்தியாவில் தற்பொழுது குழந்தைத் தொழிலாளர்களாக உள்ளனர். அதுமட்டுமல்லாமல் 15 வயது முதல் 18 வயது வரையிலான 92 லட்சம் குழந்தைகளுக்கு திருமணமாகியுள்ளது என்றும் இவர்களில் 24 லட்சம் பெண் குழந்தைகள் தாய்மை அடைந்துள்ளனர் என்றும் “க்ரை” என்ற நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக குழந்தைகளின் பாதுகாப்பில் முன்னேற்றம் உள்ளதா?
இந்தியாவில் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் ஒவ்வொரு கோசங்களை வைத்திருக்கும் நமது பிரதமர் சுத்தம் என்பதற்கு ஸ்வச் பாரத் என்ற கோசம் போல பல்வேறு கோசங்களை வெறும் வாய் வார்த்தைகளில் மட்டுமே வைத்துள்ளார். அந்த கோசங்களில் ஒன்று தான் பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக “பேட்டி பச்சோ – பேட்டி பத்தோ” என்கின்ற கோசத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னேரே முழங்கியுள்ளார். மேடைகளில் அந்தக் கோசங்களை முழங்கி விட்டு இணையதளங்களில் பதிவிடுவதால் எந்தப் பலனும் நடக்கவில்லையே. அந்த முழக்கத்திற்குப் பிறகு தான் வன்முறைகள் அதிகமாகி வருகின்றது.
அரசு புள்ளிவிவரங்களின்படி குழந்தைகளின் பாதுகாப்பிற்காக நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 450 குழந்தைகளுக்கான உதவும் கரங்கள் (Child Help Line) என்ற கட்டணமில்லா தொலைபேசிக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 3.4 கோடி புகார் அழைப்புகள் வந்துள்ளன. மொத்த அழைப்புகளின் எண்ணிக்கைக்கேற்றவாறு வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை, சுமார் ஐம்பது சதவீத வழக்குகளே பதிவு செய்யப்படுகின்றன. அதற்கு அரசு நிறுவனங்கள் பல்வேறு சாக்குப் போக்குகளைக் கூறிவருகின்றது.
சமீபத்தில் வெளிவந்த டெய்லி மெயில் என்கின்ற இணையதளப் பத்திரிக்கையின் தகவல் படியும், தேசிய குற்றப் பதிவு ஆவணங்களின் அறிக்கைகளின்படியும் கடந்த 2 ஆண்டுகளில் (2016 - 2017) மட்டும் குழந்தைகள் மீதான வன்முறைகள் பன்மடங்கு அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது ஒவ்வொரு நாளும் 290 குழந்தைகள் வீதம் பல்வேறு வன்முறைகள் மற்றும் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக பாலியல் வன்முறைகள், பாலியல் தொந்தரவுகள், குழந்தைக் கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல், தற்கொலைகள், குழந்தைத் தொழிலாளர்கள், குழந்தைத் திருமணங்கள் போன்ற பல்வேறு வன்முறைகளுக்கு இலக்காகின்றனர்.
இந்தியாவில் குழந்தைகள் மீதான வன்முறை குறித்த வழக்குகள் ஓர் ஆண்டுக்கு சராசரியாக 13000 வழக்குகள் என்பது கடந்த 2013 ஆம் ஆண்டுவரையிலான புள்ளிவிவரமாக இருந்தது. ஆனால் 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகவும் மோசமான சூழலை அடைந்துள்ளது. கடந்த 2014 முதல் 2016 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் மட்டும் 1,10,313 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது கடந்த மூன்று ஆண்டுகளாக ஆண்டுக்கு சராசரியாக இருந்த 13000 வழக்குகள் என்பது தற்பொழுது ஆண்டுக்கு 36700 வழக்குகளாக இரண்டு மடங்குக்கு மேலாக உயர்ந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்ல பாலியல் பலாத்காரம் உட்பட பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்காக மட்டும் கடந்த 2016 ஆம் ஆண்டில் மட்டும் 3,38,954 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
குழந்தைகளை கொத்துக் கொத்தாக பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கும் அரசு நிறுவனங்கள்
குழந்தைகள் தினமும் பல்வேறு வன்முறைகளுக்கு உள்ளாகின்றனர் என்ற புள்ளி விவரங்கள் இந்த 2018 ஆண்டும் அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்கின்றது. அதாவது அங்கொன்றும் இங்கொன்றுமான வன்முறைகளைப் பற்றிக் கேள்விப்பட்டோம். ஆனால் தற்பொழுது பீகார், உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், மகாராஸ்டிரா போன்ற மாநிலங்களில் குழந்தைகள் மீதான வன்முறைகள் கொத்துக் கொத்தாக நடைபெறுவதை இந்த ஆண்டின் மைய காலகட்டத்திலேயே பார்க்க முடிக்கின்றது. இதனால் 2018 ஆம் ஆண்டில் மிக மோசமான சூழல்தான் நிலவுகிறது என்பதை மிகவும் கவலையோடு சிந்திக்க வேண்டியுள்ளது.
டாடா இன்ஸ்டிட்யூட் ஆப் சோசியல் சயின்ஸ் நிறுவனத்தின் சார்பில் பீகார் மாநிலத்தில் அரசின் நிதியுதவியுடன் நடைபெறும் பல்வேறு குழந்தைகள் காப்பகங்களின் மிக மோசமான வசதிகள், நிலைமைகள், குழந்தைகள் காப்பகங்களில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் வசதிகள் குறித்து சமூகத்தணிக்கை நடத்தி அந்த அறிக்கையை குறிப்பிட்ட அரசுத் துறைகளுக்கும், சமூக நலத்துறைக்கும் கடந்த ஏப்ரல் மாதம் அளித்துள்ளனர்.
அந்த அறிக்கையின்படி உடனடி கவனம் செலுத்த வேண்டிய மிக மோசமான வன்முறையாக பீகார் மாநிலத்தில், முசாபர்பூர் நகரில் அரசு நிதியுதவியுடன் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தும் குழந்தைகள் காப்பக சம்பவம் உள்ளது. இங்கு காது கேட்காத, வாய் பேச முடியாத 40 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களை விசாரணை செய்த பொழுதுதான் அதிர்ச்சியான தகவல் கிடைத்தது. அதன்படி சுமார் 36 குழந்தைகளுக்கு தினமும் இரவு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என்று ஆய்வறிக்கையும், மருத்துவ அறிக்கைகளும் தெரிவிக்கின்றன. மேலும் ஒரு குழந்தை இறந்து காப்பக வளாகத்திலேயே புதைக்கபட்டுள்ளார் என்ற தகவலும் கிடைத்துள்ளது. இது குறித்த அறிக்கையை ஆய்வாளர்கள் மாநில அரசுக்கு அளித்துள்ளனர். இந்த அறிக்கை குறித்து கடந்த ஜூன் மாதம் வரை அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்தப் புகார் குறித்து பீகாரில் கடந்த ஜூலை மாதம் அரசியல் கட்சிகளின் பந்த் அறிவிப்பு வெளியான பிறகு தான் மாநில அரசு நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில் உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் தலையீடு செய்துள்ளதுடன் சி.பி.ஐ விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது. குழந்தைகள் பாதுகாப்புக்கான சமூக நலத்துறை அமைச்சர் மஞ்சு வர்மா அவர்களின் கணவர் சந்தேஷ் வர்மா என்பவர் மீது சந்தேகம் உள்ளதால் குறிப்பிட்ட அமைச்சரை சி.பி.ஐ நெருக்கியதற்கு பின் தற்போது பொறுப்பான சமூக நலத்துறை அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார். இந்த வழக்கில் இதை விட மிகவும் வெட்கப்பட வேண்டிய தகவல் என்னவென்றால் குழந்தைகள் பாதுகாப்புக்கான உதவி இயக்குனர் அளவிலான முக்கிய அதிகாரிகள் ஆறு பேரும் தகுந்த ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு சம்மந்தமாக காணாமல் போனதாக தேடப்பட்ட குழந்தைகள் உத்திரப் பிரதேச மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ளனர்.
குழந்தைகள் மீதான இந்த வன்முறை குறித்து உச்ச நீதிமன்றம் பத்திரிக்கைகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. பத்திரிக்கைகள் குழந்தைகளின் கண்ணியம் காக்க வேண்டும் என்றும், எந்தக் காரணம் கொண்டும் குழந்தைகளின் முழு படமோ அல்லது மார்பிங் செய்யப்பட்ட படமோ அல்லது எந்த வித விவரமோ வெளியிடக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. பீகார் வன்முறை வழக்கு குறித்து விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளான மதன் பீ.லோகூர், தீபக் குப்தா மற்றும் கே.என்.ஜோசப் ஆகியோரிடம், தேசியக் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் உத்திரப்பிரதேசம், பீகார், அருணாசலப் பிரதேசம் போன்ற சில மாநிலங்கள் பல்வேறு விவரங்களை அளிப்பதில் ஒத்துழைக்கவில்லை என்று ஆணையத்தின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நீதிபதிகள் நமது நாட்டில் நிலவும் குழந்தைகள் மீதான வன்முறைகள் குறித்து மிகவும் வேதனை அடைவதாகவும், உடனே நாடு முழுவதும் உள்ள காப்பகங்களின் நிலைமை குறித்து ஆய்வறிக்கை ஒன்றை மத்திய அரசு சமர்ப்பிக்க வேண்டும் என்றும், இது போன்ற வன்முறைகள் எப்போது நிறுத்தப்படும் என்று மத்திய அரசு உறுதி அளிக்க வேண்டும் என்றும் ஆகஸ்ட் 08 ஆம் தேதி வெளிவந்த பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன. அதே தினத்தில் மக்களவை உறுப்பினர்கள் பீகார் மற்றும் உத்திரப்பிரதேச பிரச்சினைகளைக் காட்டி அவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பிரச்சினையில் சரியாக விசாரண நடத்தி வந்த சி.பி.ஐ விசாரணை அதிகாரியை மத்திய அரசு மாற்றம் செய்து, புதிய அதிகாரியை நியமனம் செய்துள்ளதை பிகாரின் அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டிக்கின்றன.
கடந்த ஆகஸ்ட் முதல் வாரத்தில் உத்திரப் பிரதேசத்தில், தியோரியாவில் அரசு நிதியுடன் நடத்தப்படும் காப்பகத்தில் இருந்து தப்பித்து வந்த பீகாரைச் சேர்ந்த ஒரு சிறுமி மகளிர் காவல் நிலையத்திற்குள் ஓடிச் சென்று புகார் தெரிவித்துள்ளார். அந்தக் குழந்தை தமது வாக்குமூலத்தில் தினமும் மாலை நேரங்களில் புதுப் புது கார்களில் வந்து சிறுமிகளை அழைத்துச் சென்று மறு நாள் காலை தான் ஒப்படைக்கின்றனர் என்றும், வெளியில் சென்று வரும் குழந்தைகளுக்கு பல்வேறு விதமான பாலியல் வன்முறைகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். அந்தக் காப்பகத்தை போலீசார் விசாரித்ததில் ஓராண்டுக்கு முன்னதாகவே அரசிடம் பதிவு புதுப்பிக்கப் படவில்லை என்பதும், பதிவு புதிப்பிக்காமலேயே அரசு நிதி வழங்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. அந்தக் காப்பகத்தின் பதிவேட்டில் இருந்த 42 குழந்தைகளின் எண்ணிக்கையில் 24 பேர் மட்டுமே காப்பகத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்றும், மீதி 18 குழந்தைகள் காப்பகத்தில் இருந்து தப்பிச் சென்று விட்டதால் காணவில்லை என்றும் காப்பக நிர்வாகம் கூறியுள்ளது. மீட்கப்பட்ட குழந்தைகளில் இரண்டு பேர் இறந்து போயுள்ளனர். இது குறித்து உ.பி. காவல்துறை 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றது.
இந்தியாவில் பாலியல் வன்முறைக்கு ஆண் குழந்தைகளும் பலியாக்கப்படுகின்றனர். மகாராஸ்டிரா மாநிலம் பூனேயில் கத்ரஜில் என்கின்ற மதரசா பள்ளியில் 38 ஆண் குழந்தைகள் தங்கிப் படித்துள்ளனர். அந்த மாணவர்களை அங்குள்ள ரஹீம் என்கின்ற மவுலானா பாலியல் தொந்தரவு செய்ததாக மாணவர்களிடம் இருந்து புகார் வந்துள்ளது. போலீசார் பாதிக்கப்பட்ட மாணவர்களை விசாரித்து பாதுகாப்பாக மீட்டதாகவும், மவுலான ரஹீம் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கடந்த ஜூலை மாதம் வெளி வந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
நிர்பயா போன்ற கொடூரங்கள் தொடர்கின்றனவா?
இந்தியாவில் நிர்பயா போன்ற கொடூரங்கள் மேலும் நடக்காமல் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அரசின் கடமை ஆகும். ஆனால் அதை விட மோசமாக வன்முறைகளும், கொடூரங்களும் இன்னும் தொடர்கின்றன. இதற்கு கடந்த இரண்டு மாதங்களில் நடந்த ஓரிரு வன்முறைகளை எடுத்துக்காட்டாகக் கூறலாம். உதாரணமாக கடந்த ஜூலை மாதம் ஹரியானாவில், பஞ்ச்குலா மாவட்டத்தில் சட்டிஸ்கரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு வேலைவாங்கித் தருவதாக கூறி, ஒரே ஊரைச் சேர்ந்த இளைஞர் வெளியூர் அழைத்துச் சென்றுள்ளார். ஏமாற்றி அழைத்து வரப்பட்ட இளம்பெண்ணைத் தொடர்ந்து நான்கு நாட்களாக விடுதியில் அடைத்து வைத்து 40 ஆண்கள் பாலியல் சித்திரவதை செய்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் துறையில் புகார் கொடுத்தும், உள்ளூர் போலீசார் முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கவில்லை. அதன் பிறகு காவல்துறைக் கண்காணிப்பாளர் கவனத்திற்கு கொண்டு சென்ற பிறகு, முறையாக விசாரிக்காத உள்ளூர் போலீசார் 3 பேர், விடுதி உரிமையாளர், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் சென்னை அயனாவரத்தில் நடுத்தர மக்கள் வசிக்கும் மிகவும் பிரபலமான அடுக்குமாடிக் குடியிருப்பில் நடைபெற்ற வன்முறையைக் கூறலாம். சென்னை போன்ற மாநகரங்களில் சகல நவீன வசதிகளுடன் நடுத்தர மற்றும் உயர்தட்டு மக்கள் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர். இந்தச் சூழலில் அயனாவரம் அடுக்கு மாடிக் குடியிருப்பில் செவித்திறன் குறைபாடுமிக்க 7 ஆம் வகுப்பு படிக்கும் 11 வயதுப் பெண் குழந்தை மீதான பாலியல் வன்முறை நெஞ்சைப் பதைபதைக்க வைக்கின்றது. அடுக்குமாடிக் குடியிருப்பின் காவலாளி, 6 முதியவர்கள் உட்பட 18 பேர் தொடர்ந்து 7 மாதமாக அந்த 11 வயது வாய் பேசாத குழந்தையை மிரட்டி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துவந்துள்ள கொடூரம் நடந்தேறியுள்ளது. இந்த வன்முறையில் 23 வயது முதல் 66 வயது வரையிலான முதியவர்கள் வரை சேர்ந்து செய்துள்ளனர். ஒரு மாநிலத்தின் தலைநகரிலுள்ள ஒரு வாய் பேச முடியாத பெண் குழந்தைக்கு இந்த நிலைமை என்றால் பட்டி தொட்டிகளில் வசிக்கும் ஏழை, எளிய அப்பாவிப் பெண்குழந்தைகளின் பாதுகாப்பு பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
கடந்த மூன்று மாதத்திற்கு முன்னர் தான் ராஜஸ்தான் சட்டமன்றத்தில் சிறு குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டன அளிக்கும் சட்டம் இயற்றப்பட்டது. அதன் பிறகு நடைபெற்ற ஒரு வன்முறையை நினைவுபடுத்துகின்றேன். கடந்த மே மாதம் ராஜஸ்தான் மாநிலம், லட்சுமண்பூர் பகுதியில் வசிக்கும் தம்பதியினர் தங்களுடைய 7 வயதுப் பெண் குழந்தையை நெருங்கிய உறவினர் பாதுகாப்பில் விடுத்துச் சென்றனர். சிறிது நேரம் கழித்து குழந்தையை எடுக்க உறவினர் வீட்டுக்கு வந்தபோது குழந்தையைக் காணவில்லை. அருகில் இருந்த 19 வயது இளைஞர் தூக்கிச் சென்றது அறிந்து தேடிய பொழுது பலத்த காயங்களுடன் குழந்தை அருகில் உள்ள மைதானத்தில் கிடந்தது. குழந்தையை மருத்துவப் பரிசோதனை செய்தபொழுது, அந்த 7 மாதக் குழந்தை பாலியல் வன்முறைக்கு பலியாக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் தெரிந்தது. இது குறித்து விசாரித்த காவல்துறை 19 வயது இளைஞரை மருத்துவப் பரிசோதனை செய்து கைது செய்தது. குழந்தைக்கு மருத்துவ சிகிச்சை அளித்து 20 நாள் சிகிச்சைக்குப் பின் காப்பாற்றப்பட்டது.
இந்தியாவில் மாயமாகும் குழந்தைகள்
அரசின் தகவல் படி கடந்த 2017 ஆம் ஆண்டிற்கு முன்பு வரை 630 லட்சம் குழந்தைகள் இந்தியாவில் காணாமல் போயுள்ளனர். இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு சுமார் 1.12 லட்சம் குழந்தைகள் தம் வீடுகளை விட்டு வெளியேறி மாயமாகி வருகின்றனர் என்று “ரயில்வே சில்ரன்” என்கின்ற ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது. இந்தியாவின் குற்றப்பதிவு ஆவணங்களின் படி ஒரு நாளைக்கு 174 குழந்தைகள் காணாமல் போகின்றனர். இவர்களில் 50% குழந்தைகள் மட்டுமே கண்டுபிடித்து ஒப்படைக்கப்படுவதாகவும், மீதமுள்ள 50% குழந்தைகள் தப்பியோடி விட்டனர் என்றும் மீண்டும் கண்டிப்பாக வந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையிலும் கூறி கோப்புகள் முடிக்கப்படுவதாகவும் பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன.
குழந்தைகளுக்குப் பள்ளிகளில், வீடுகளில் அச்சுறுத்தல்கள், குறிப்பாக குடிபோதை. அடிமையான பெற்றோரின் அச்சுறுத்தல்கள், பதின்பருவச் சிக்கல்கள் மற்றும் ஏழ்மை போன்ற காரணங்களால் தான் குழந்தைகள் மாயமாகின்றனர். மேற்கண்ட வன்முறைகளாலேயே ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் குழந்தைகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். பெரும்பான்மையான குழந்தைகள் குடும்பத்தை விட்டு வெளியேறி தப்பித்து விடுகின்றனர் அல்லது கடத்தப் படுகின்றனர். குறிப்பாக ஓர் ஆண்டுக்கு சுமார் ஐந்தாயிரம் குழந்தைகள் வரை தமிழக ரயில்வே நிலையங்களில் மட்டுமே மீட்கப்படுகின்றனர். குழந்தைகள் மாயமாதல் அல்லது குழந்தைகள் தற்கொலைகள் அனைத்தும் வழக்குப்பதிவு செய்து முழுமையாக விசாரிக்கப்படுவதில்லை. குழந்தைகளின் தற்கொலை வழக்குகள் அனைத்தும் தீராத வயிற்று வலி காரணமாக தற்கொலை செய்து கொள்வதாகவே வழக்குகள் முடிக்கப்படுகின்றன. மேலும் மாயமாகும் குழந்தைகள் பற்றிய சம்பவங்களில் அதிகபட்சமாக சுமார் 50% புகார்கள் மட்டுமே காவல்நிலையத்தில் புகார்களாகப் பதிவு செய்யப்படுகின்றன என்பது ஊரறிந்த உண்மை ஆகும்.
குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பும் உயர்நீதிமன்றங்களின் கண்டனங்கள்
குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருவதாகவும், இதனை உடனே தடுத்து நிறுத்தி சீர்படுத்த வேண்டியது அவசியம் என்றும் கூறி பல்வேறு தொண்டு நிறுவனங்கள் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுக்கப்பட்டது. இது குறித்து விசாரணை செய்த டெல்லி உயர்நீதி மன்றம் இந்த செயல் மிகவும் கவலை அளிப்பதாகவும், அரசு உடனே தலையிட வேண்டியது அவசியம் என்றும், இதற்காக அரசுக்கு பரிந்துரைகள் செய்வதற்காக பல்வேறு நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைக்கவிருப்பதாகவும் ஜூலை மாத இறுதியில் அறிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் எக்ஸ்னோரா அமைப்பைச் சேர்ந்த நிர்மல் என்பவர் இரவு நேரங்களில் சாலை ஓரங்களில் பெற்றோருடன் சேர்ந்து உறங்கும் குழந்தைகள் காணாமல் போகும் அவல நிலை குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். கடந்த ஆகஸ்ட் முதல் வாரத்தில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், எம்.சேஷாயி ஆகியோர் அடங்கிய டிவிசன் பென்ச் இந்தப் புகார் குறித்து தங்களது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 43 குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவுகள் இருந்தாலும் போலீசார் நீதிமன்றத்தில் அளித்துள்ள அறிக்கை மற்றும் புலனாய்வு அறிக்கைளில் திருப்தியில்லை என்றும் இதுவரை எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன? குற்றவாளிகளைப் பற்றிய முழு விவரங்கள் என்ன? போன்ற அடிப்படை விவரங்கள் கூட முழுமையாக இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த அறிக்கைகள் குறித்து டி.ஜி.பி மற்றும் உள்துறைச் செயலர் ஆகியோர் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும் என்றும் அறிவுரை வழங்கியுள்ளனர்.
சென்ற வாரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற மற்றொரு வழக்கில், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து விசாரணை நடத்திய நீதிபதி கிருபாகரன் அவர்கள் தமிழக அரசு குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்காக ஏன் தனி அமைச்சகம் ஏற்படுத்தக் கூடாது என்று மத்திய, மாநில அரசுகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அரசின் துரித நடவடிக்கைகள்?
சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டால் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை வழங்குவதற்கான சட்டத்திருத்தத்தை கடந்த ஜூலை மாதத்தில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்து குடியரசுத் தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தான் ஒவ்வொரு மத்திய அமைச்சரும் பத்திரிக்கைகளிடம் தெரிவித்து வருகின்றனர். ஆனால் நீதிபதி வர்மா கமிசனின் அறிக்கை மற்றும் சட்ட நிபுணர்களின் அறிக்கைகளை கண்டுகொள்வதே இல்லை.
குழந்தைகளுக்கான பாதுகாப்பு ஆணையங்களில் உறுப்பினர்களாக அரசியல் மற்றும் அதிகாரிகள் அல்லாத நிபுணர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்பது ஆணையங்களை அமைக்கும் பொழுது கடைபிடிக்க வேண்டிய சர்வதேச நியதி ஆகும். ஆனால் உலகிலேயே அதிக ஆணையங்களை நிறுவியுள்ள இந்தியாவில் ஆணையங்களின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க எந்த நியதியும் கடைபிடிக்கப்படுவதே இல்லை. இந்தப் பதவிகளில் முழுக்க முழுக்க ஆளும் கட்சிப் பிரமுகர்களும், ஆளும் கட்சிக்கு ஆதரவான ஓய்வு பெற்ற அதிகாரிகளே நியமனம் செய்யப்படுகின்றனர். கடந்த மாதம் தேசியக் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினராக பா.ஜ.க.வின் இளைஞர் அணித் துணைத் தலைவர் (தமிழ்நாடு, புதுக்கோட்டையைச் சேர்ந்த) ஆர்.ஜி.ஆனந்த் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது தற்போதைய செய்தியாகும்.
ஆகஸ்ட் முதல் வாரத்தில் தில்லியில் நடைபெற்ற குழந்தைகள் நலத்துறை அமைச்சர்களின் கூட்டத்தில் ஆகஸ்ட் மாதத்திற்குள் மாவட்டக் குழந்தைகள் நலக் குழுக்களை அமைக்க வேண்டும் மாநில அரசுகளுக்கு கெடு விதித்திருப்பதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார். இந்தப் பதவிகளிலும் அவசர கோலத்தில் ஆளும் அரசியல் கட்சியினரும் மற்றும் ஆளும் கட்சிக்கு ஆதரவான அதிகாரிகளின் கைக்கூலிகளுமே அமர்த்தப்படுவார்கள். சமூக சிந்தனை கொண்ட நிபுணர்கள் புறக்கணிக்கப்படுவார்கள்.
பீகார், உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற வன்முறைகள் குறித்து கவலை வெளியிட்டுள்ள மத்திய அமைச்சர் மேனகா காந்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் தத்தமது தொகுதியில் உள்ள குழந்தைகள் காப்பகங்களை ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப கடிதம் எழுதியதாகவும், இதுவரை ஒரு உறுப்பினர் கூட எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்பது கவலை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பீகார், உ.பி வன்முறைகள் குறித்து உச்ச நீதிமன்றத்தின் நெருக்கடிக்குப் பின்னர் மத்திய அமைச்சர் திருமதி மேனகா காந்தி அவர்கள் நாடு முழுவதும் அரசு நிதியுடன் இயங்கும் 9400 குழந்தைகள் காப்பகங்களில் உள்ள குழந்தைகளின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து 60 நாட்களுக்குள், அதாவது செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் அனைத்து மாநில அரசுகளும் தேசியக் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை வழக்குகள் அதிகமாக பதிவு செய்யப்படும் இந்தியாவில் போதிய தடயவியல் ஆய்வுக்கூடங்கள் இல்லை. இதனால் நிர்பயா நிதியில் மத்திய அரசு சார்பில் புதிதாக ஐந்து தடயவியல் ஆய்வுக் கூடங்கள் அமைக்கப்படவுள்ளது. குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள முக்கியமான காவல் நிலையங்களுக்கு வழங்குவதற்காக தலா ஐந்து பெட்டிகள் வீதம் ஐந்தாயிரம் தடயவியல் பெட்டிகள் மத்திய அரசால் கொள்முதல் செய்யப்படவுள்ளது. ஒவ்வொரு பெட்டியிலும், வியர்வைத் துளிகள், ரத்தத் துளிகள், விந்தணு சேமிப்பு ஆகியவற்றிற்கான சோதனைக்குழாய்கள் பெட்டியை சீல் வைக்கும் பொருள்கள் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசு கடந்த ஜூலை 23 ஆம் தேதி தெரிவித்துள்ளது.
மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் திருமதி மேனகா காந்தி அவர்கள் ஓரிரு நாட்களுக்கு முன்னர் வெளியிட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில் மத்திய அரசின் நிர்பயா நிதித் திட்டத்தின் படி மாநில அரசுகள் குழந்தைகள் காப்பகத்திற்காக தொண்டு நிறுவனங்களுக்கு நிதியை அளிக்காமல் மாவட்டத்திற்கு ஒரு காப்பகத்தை மாநில அரசே நிர்வகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள சுமார் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளின் ஆதார் எண்களை “டிராக் சைல்டு” என்ற இணையத்தில் இணைப்பதன் மூலம் குழந்தைகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது நகைப்பிற்குரியதாக உள்ளது.
குழந்தைகள் மற்றும் பெண்களைப் பாதுகாப்பது நமது கடமை
ஒவ்வொரு மாவட்டத்திலும் குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக குழந்தைகள் பாதுகாப்புக் குழு, குழந்தைகள் நலக்குழு, குழந்தைகளுக்கான உதவும் கரங்கள், குழந்தைகளுக்கான சிறப்புக் காவலர்கள், இளஞ்சிறார் பாதுகாப்புக் குழு என சுமார் இருபதுக்கும் மேற்பட்ட அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ள பல்வேறு நபர்கள் இருந்தாலும் இவர்கள் எவரையும் அரசு எந்திரங்கள் செயல்பட விடாமல் தடுப்பதாக இந்தக் குழு உறுப்பினர்களே கருத்துகளை தெரிவிக்கின்றனர். இவர்களை நியமனம் செய்வதிலும், இவர்களை தன்னிச்சையாக செயல்பட விடுவதிலும் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் மிகவும் சுயநலத்துடன் செயல்படுகின்றனர். இதே போலவே மத்திய, மாநில அரசுகளின் ஆளும் நபர்களும், அதிகாரிகளும் மிகவும் சுயநலத்துடனும், கண்டுகொள்ளாப் போக்குடனும் செயல்பட்டு வருகின்றனர்.
இந்திய அரசு தமது நாட்டில் உள்ள குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக ஐக்கிய நாடுகளின் பிரகடனங்களில் கையெழுத்திட்டுள்ளது. இந்தியப் பாராளுமன்றத்தில் சுமார் ஐந்திற்கும் மேற்பட்ட கடுமையான சட்டங்களும் நிறைவேற்றப்பட்டு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனாலும் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் அலட்சியத்தாலும், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பாக வாழத் தகுதியில்லாத நாடாக இந்தியா உள்ளது என்கின்ற தகவல்களைக் கேட்கும் பொழுது “தண்ணீர் விட்டா வளர்ந்தோம் சர்வேசா? இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம்” என்கின்ற தியாக வரிகள் நம்மை வாட்டுகின்றது. மேற்கண்ட அநீதிகளை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டியது நமது அரசியல் சாசனத்தின் (பிரிவு 51.A) அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகும். எனவே பாதுகாப்பான இந்தியாவாக, அமைதிப் பூங்காவான இந்தியாவாக உருவாக்க வேண்டியது நமது முதல் கடமை ஆகும்.
இந்தியாவின் குழந்தைகளும், பெண்களும் மதித்துப் போற்றப்பட வேண்டியவர்கள், பாதுகாக்கப்பட வேண்டியவர்கள், பாதுகாப்பாக வாழ வேண்டியவர்கள். இந்த குரல்களுக்கு நீங்களும் ஆதரவுக் குரலும், ஆதரவுக் கரமும் கொடுங்கள்.
- இரா.சொக்கு, மாநில ஒருங்கிணைப்பாளர், மனித உரிமைக் கல்வி நிறுவனம், மதுரை