gandhijiஇப்படியாகவும் சில இயைபுகள்
எம் மண்ணிற்கும் உமக்கும் இடையே
இழையோடித்தான் கிடக்கின்றன.

எம் உழவனிடம் பயின்றது தானாமே
உம் எளிமைத் திருக்கோலம்?

எம் மகாகவியைப் பத்திரமாகப்
பாதுகாக்க வேண்டினீர்களாமே?

எம் ‘தமிழ்த்தென்றலே’
‘மார்க்சிய உடலில் காந்திய உயிர்’
என்பாராமே?

எந்தை பெரியாரே
‘காந்தி தேசம்’ என்றாராமே?

எம் தமிழிலேயே ஒப்பமிட்டு
எழுதித் தந்தீர்களாமே?
‘நீர்மேல் எழுத்தாகும் யாக்கை’யென...

அண்ணல் மகாத்மா!

எவரேனும் நீராட மடிதந்தே
ஓடிக்கொண்டிருக்கும் நதியெலாம்

சாத்தான் மக்கள் தீர்த்தமாடிட
உம் ‘ஹரிஜன’ங்களுக்கு மட்டும்
தடைவிதிக்கும் படித்துறைகளாய்த்
தேங்கியே கிடக்கும் குளமெலாம்.

இக்குக்கிராம மீதில்தான்
இன்னம்ம்ம்மும் வாழுது இந்திய ஆன்மா!

‘இந்து’மாக்கடலைத் தேசப்பிதாவே
கடைந்தபோதில் வாய்த்த
அமுதமே காந்தியம்
ஆமெனில்
பெயக்கண்டும் உண்டமைந்த
ஆலகாலமே இந்துத்துவம்!

அந்தமாக மட்டுமில்லை ஐயனே!
ஆதியிலேயே உம்முடன்
உடல் சுற்றியே பிறந்ததந்த நஞ்சுக்கொடி!

அண்ணலே உம் ஆவி பறித்த
அம்பு மட்டுமே நாதுராம்!
ஹேராம்! யா அல்லாஹ்!

- பொதிகைச்சித்தர்(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It