நல்லிசை நிறுத்த நயம்வரு பனுவல்

தொல்லிசை நிறீஇய உரைசால் பாண்மகன்

எண்ணுமுறை நிறுத்த பண்ணி னுள்ளும்

புதுவது புனைந்த திறத்தினும்                        -அகம்: 352, வரி: 13-16.

           murasu 300 பண்டைய காலத்திய பாண்மகன் நல்லிசைகளை நன்கு வரையறுத்துணர்த்திய இசைநூலின்கண் கூறப்பட்ட முறைகளையெல்லாம் நன்கு உணர்ந்து நிலை நிறுத்திப்பண்கள் செய்ததோடு அவற்றிலுள்ள இராகத்திறங்களைப் புதுவதாகப் புணைந்தான் என்கிறார் அஞ்சியத்தை நாகை என்கிற கி.மு. 3ஆம் நூற்றாண்டுகால அகநானூற்றுப்புலவர். இவர் அதியமானின் உறவினர். அன்றே நல்லிசைகளை நன்கு வரையறுத்துணர்த்திய இசைநூல் இருந்தது என்பதையும், பண்ணும் திறமும் நன்கு அறியப்பெற்று வழக்கிழிருந்தன என்பதையும் அறிய முடிகிறது.

            தமிழ் இசை இலக்கிய வரலாறு, தமிழ் இசை இலக்கண வரலாறு ஆகிய இருபெரும் நூல்களை(இரண்டும் சேர்ந்து சுமார் 1500 பக்கங்கள்) மு. அருணாசலம் அவர்கள் எழுதியுள்ளார்.

            “இசைத்தமிழ்தான் இந்தியாவின் ஆதி இசை; வடமொழியில் இருப்பதெல்லாம் இசைத்தமிழ்தான்; பிற்காலத்தில் தான் வேற்றிசைகள் உருவாகி வளர்ந்தன; பரதாசாரியரின் பரதநாட்டிய சாத்திரம் தமிழ் மரபிற்கே உரிய முத்திரையை அடிப்படையாகக்கொண்டது; பரதர் தமது வடமொழி நூலில் இது தட்சிணாத்தியமாகிய தென்னாட்டு நெறி எனக் கூறியுள்ளதால் அது தமிழர் நெறியே; தமிழ்ப்பரதமே வடமொழியில் பெயர்க்கப்பட்டுள்ளது; மேலும் தமிழ்நாடு கலைகளின் பிறப்பிடம்; கலைகளின் புராதனத் தொன்மையும் அவற்றின் சான்றுகளும், சாத்திர அடிப்படையிலான மூல கலைநெறிகளும் தமிழகத்தில் மட்டும்தான் உண்டு; இந்தியாவின் பிற இடங்களில் அவைகள் இல்லை; கலைகளுக்கு மூலமாய் அமைந்த சாத்திர நெறிகள் அனைத்தும் ஆகமங்களில்தான் உண்டு; ஆகம நெறிகள் தமிழர் நெறிகளே அன்றி வடபுலத்துக்கு உரியன அல்ல: வேதவழிபாடும் வேள்வி வழிபாடும் ஆகுதி வழிபாடே ஒழிய உருவ வழிபாடு அல்ல;

            ஆகமங்களின் அடிப்படையிலான சிற்ப, சாத்திர வழிபாடுகள் தமிழர் நெறி சார்ந்தவை; இந்த ஆகமங்கள் தமிழ்ச் சான்றோர்களால் வடமொழியில் ஆக்கப்பட்டுள்ளன; அவை மூலாகமம்-28, உபாகமம்-127 எனக் கடல்போன்ற பரந்த நூற்பரப்புடையவை; அதுபோன்ற ஒரு சாத்திர அடிப்படையிலமைந்த கலைதான் தமிழிசைக்கலை; தமிழரின் கலையும் பண்பாடும் ஆரியமயமாக்கப்பட்டதோடு, ஆரியத்திற்குரியது எனச்சொல்லும் அறியாமை இருக்கிறது; சாமகானம் மட்டுமே இருந்த வடமொழியில் சாத்திர நெறிப்பட்ட இசை இல்லை என்பதால் வடமொழிவாணர்களின் இசை இலக்கண நூல்களுக்கு எல்லாம் மூலமாக இருந்தது தமிழ்ச் சாகித்தியம்தான்; கருநாடக இசை என்பது இசைத்தமிழ்தான் என அவர் இங்கு குறிப்பிட்ட பலவற்றையும் இந்நூல்களின் மூலம் நிறுவுகிறார்”

            என இந்த இருபெரும் நூல்களையும் தொகுத்து வெளியிட்ட உல. பாலசுப்பிரமணியன் அவர்கள் தனது பதிப்புரையில் குறிப்பிட்ட ஒருபகுதி கருத்தின் சுருக்கத்தை நான் இங்கு தந்துள்ளேன். ஆகமங்கள் வடமொழியில் இருப்பதால் அவைகளை வடநாடு சார்ந்ததாகக் கருத இயலாது. தமிழில் இருந்த ஆகமங்கள்தான் பிற்காலத்தில்(கி.பி. 6ஆம் 7ஆம் நூற்றாண்டுகளில்) வடமொழியில் ஆக்கப்பட்டன. அதில் பல இடைச்செருகல்களும், பிற் சேர்க்கைகளும், திருத்தங்களும் ஏற்படுத்தப்பட்டன. சிற்ப சாத்திர வழிபாடுகள் தென்னிந்தியாவிலும் அதனை ஒட்டியுள்ள மராட்டிய ஒரியப் பகுதியிலும் மட்டுமே உண்டு. வட இந்தியாவில் இந்த சிற்ப, சாத்திர வழிபாடுகள் இல்லை. தமிழகமே இதற்கான மூலம் ஆகும். மேலே கண்ட இரு இசை நூல்களில் தரப்பட்டுள்ள பண்டைய சங்ககால இசைத்தமிழ் பற்றிய செய்திகளை இங்கு நான் கீழே சுருக்கித் தந்துள்ளேன்.

தொல்காப்பியம்:

            தொல்காப்பியம் இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழில் இயலை மட்டுமே பேசுகிறது. ஆதலால் இசை குறித்து தொல்காப்பியத்தில் அதிகம் சொல்லப்படவில்லை. எழுத்துக்களின் ஓசையளவைக்கூறும்பொழுது உயிரெழுத்துக்களும், மெய்யெழுத்துக்களும் இசையோடு பொருந்திவரும் பொழுது அவ்வெழுத்துக்கள் தமக்கியல்பாக உரிய ஓசையினும்மிகுந்து ஒலிக்கும் என்கிறார் தொல்காப்பியர்-(1). ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, பரிபாடல் ஆகிய நால்வகை பாக்களுள் கலிப்பாவும், பரிபாடலும் இசைத்தமிழுக்குச் சிறப்பாய் உரியன. இசைத்தமிழானது இசைத்தமிழுக்கே உரியதாக வரும்பொழுது செந்துறை மார்க்கம் எனப்படும். இசைத்தமிழுக்கும் நாடகத்தமிழுக்கும் உரியதாக வரும்பொழுது வெண்துறை மார்க்கம் எனப்படும். தொல்காப்பியர் இலக்கணம் கூறும் பலவகை கலிப்பாக்களுக்குள் ஒத்தாழிசைக்கலிப்பா ஒன்று.

            தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் முதலிய அதன் உறுப்புகளுக்கு அவர்தரும் விளக்கம் பிற்காலத்தைய இசைப்பாட்டின் அமைப்போடு ஒற்றுமை கொண்டுள்ளது. தொல்காப்பியர் செய்யுளுக்குரிய எட்டு வனப்புகள் குறித்துக் குறிப்பிட்டுள்ளார். அவைகளின் பொருளும் கருத்தும் இன்று மறைந்து விட்டன. எனினும் பிற்காலத்து உரையாசிரியர் தரும் விளக்கங்களிலிருந்து புலன் என்ற வனப்பு நாடகத்தமிழாகிய வெண்துறை மார்க்கத்தையும், இயைபு என்ற வனப்பு இசைத்தமிழாகிய செந்துறை மார்க்கத்தையும் சுட்டும் எனலாம். தொல்காப்பியர் குறிப்பிடும் ‘பண்ணத்தி’ என்பது இசைப்பாட்டு ஆகும் அதன் இலக்கியங்கள் தான் சிற்றிசை, பேரிசை என்பனவாகும். தேவபாணி என்பது பண்டைக்காலத்தில் தெய்வத்தைப் போற்றும் இசைப்பாட்டு ஆகும். பாட்டுமடை, வஞ்சிப்பாட்டு, மோதிரப்பாட்டு, கடகண்டு முதலியனவும் இசைப் பாட்டுக்கள்தான். ஆனால் அவை இன்று இல்லை. செய்யுள்களில், வண்ணம் என்கிற இசைக்குரிய ஒரு தன்மையை தொல்காப்பியர் 20 வகையாகப் பாகுபாடு செய்துள்ளார்.

            அவை பதிற்றுப்பத்தில் மட்டுமே உள்ளது. அதன் கருத்தும், பொருளும் இன்று மறைந்துவிட்டன. அவ்வண்ணம், பிற்காலத்திய சந்தப்பாடல் என்பதைக் குறிக்கவில்லை. வனப்பு, வண்ணம், பண்ணத்தி போன்றவற்றின் இசை சார்ந்த விளக்கங்கள் இன்று மறைந்துவிட்டன. அனைத்துப் பண்டைய இசைப் பாட்டுக்களும் சிற்றிசை, பேரிசை போன்ற அனைத்து இசை நூல்களும் மறைந்துவிட்டன. இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழில் ‘இயல்’ பிரிவில் சில பகுதிகளே கிடைத்துள்ளன. பிற இல்லாது மறைந்துபோயின. இவை மறைந்து போனதற்கு கி.பி. 3ஆம் நூற்றாண்டு முதல் தமிழகத்தில் நிலவிய 300 ஆண்டுகால களப்பிரர் ஆட்சியே காரணம் என மு. அருணாசலம் அவர்கள் கருதுகிறார். களப்பிரர் ஆட்சிக்காலத்தில் செல்வாக்கு பெற்ற சமண, பௌத்த மதங்களும், கி.பி. 3ஆம் நூற்றாண்டு முதல் இந்தியா முழுவதும் உருவான வைதீகச் சார்பான சமற்கிருதமயமாக்கலும் மிக முக்கியக் காரணம் என்பதை இங்கு சேர்த்துக்கொள்ளலாம்.

பத்துப் பாட்டுக்கள்:

            திருமுருகாற்றுப்படையில் ‘முருகியம்’ என்கிற சிறப்பு இசைக்கருவி பேசப்படுகிறது. பத்துப்பாட்டினுள் திருமுருகாற்றுப்படை தவிர்த்த ஏனைய நான்கு ஆற்றுப்படைகளும் யாழைத்திருத்தமாகப் பேசுகின்றன. இந்த நான்கினுள் பொருநராற்றுப்படை மிகவும் திருத்தமாக யாழ் உறுப்புகளை உவமைகூறி விளக்குகிறது. பாலையாழ் கொண்டு தேவபாணிகளைப் பாடுவது பொருநராற்றுப்படையில் சொல்லப்படுகிறது. பொருநர் என்போர் யாழுடன், ‘தடாரி’ என்கிற பறையைக் கொண்டுள்ளனர். ஏர்க்களம் பாடுவோர், போர்க்களம் பாடுவோர் என்கிற இருவகைப்பொருநர்கள் இருந்தனர். கொம்பு ஊதி இசை எழுப்புவோர் ‘கோடியர்’ எனப்படுகின்றனர். பலவகையான கொம்புக்கருவிகள் இருந்ததால் அவர்கள் பல்லியக் கோடியர் எனப்பட்டனர். ‘வயிர்’ என்கிற ஊதுகருவியை இசைக்கிற கூத்தர் வயிரியர் எனப்பட்டனர். சிறுபாணாற்றுப்படையில் தும்பி ‘காமரம்’ பாடுகிறது(76,77). ‘காமரம்’ என்பது ‘சீகாமரம்’ என்கிற பண் ஆகும். இந்தச் சீகாமரம் என்பது தேவாரங்களில் பயிலும் பண் ஆகும்.

            பெரும்பாணாற்றுப்படையில் உருத்திரங்கண்ணனாரும், பொருநராற்றுப் படையில் முடத்தாமக்கண்ணியாரும் முழுமையாக யாழாகிய இசைக் கருவியை அதன் உறுப்புகளுக்குப் பல உவமைகளைக்கூறி நன்கு விளக்கியிருப்பது அக்காலத்து இயற்புலவர்கள் கூட இசைத்திறன் அல்லது இசை அறிவு மிகுதியாகப் பெற்றிருந்தார்கள் என்பதையும் பொதுவாகச் சமூகத்தில் இசை அறிவு மிகுந்திருந்தது என்பதையும் அறிய முடிகிறது. இதில் முடத்தாமக்கண்ணியார் பெண்பாற் புலவர் ஆவார். இவர்களின் காலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டு ஆகும். வேய்ங்குழலில் பாலைப்பண்ணும், வில்யாழில் குறிஞ்சிப்பண்ணும் வாசிக்கப்படுவதை பெரும்பாணாற்றுப்படை பேசுகிறது. மதுரைக்காஞ்சியில் யாமம் தோறும் இசைகள் வேறுபடுகின்றன என்பதும், அதற்கேற்ப முழவுகள் தாழ்ந்து ஒலிக்கின்றன என்பதும் பேசப்படுகிறது(559-560). பட்டினப்பாலையில் குழல் அகவுகின்றது, யாழ் முரலுகின்றது, முழவு அதிர்கின்றது, முரசு இயம்புகின்றது(155 - 158).

            மலைபடுகடாமில், கூத்தர் பலவகை வாத்தியங்களை ‘கலப்பை’ என்கிற பையில் எடுத்துச் செல்கின்றனர். மத்தளங்கள், கஞ்சத்தாளம், ஊதுகருவி, நெடுவங்கியம் எனும் தூம்பு, குறிய தூம்பு, குழல், எல்லரி என்கிற தாளக்கருவி(சல்லிகை), பதலை, பேரியாழ் போன்ற கருவிகள் அதில் உள்ளன. பேரியாழின் திவவு, நரம்பு, பச்சை, உந்தி, மருப்பு முதலியன மலைபடுகடாமில் விளக்கப்படுகின்றன(21-37). இந்தப்பத்துப் பாட்டுகளில் காணும் விளக்கத்தையும் சிலப்பதிகாரத்தையும் வைத்துத்தான் விபுலானந்த அடிகள் ‘யாழ்நூல்’ என்ற பெருநூலைச் செய்தார். அக்காலத்தில் இயற்புலவர்களும் இசையை நன்கு அறிந்திருந்தார்கள் என்பதைப் பத்துப் பாட்டுகள் உறுதிப்படுத்துகின்றன.

எட்டுத்தொகை நூல்கள்:

அகநானூறு:

            அகநானூறில் யாழ், தண்ணுமை, துடி, தூம்பு, முரசு, முழவம், சில்லரி, தெண்கிணை, குழல் ஆகிய கருவிகள் பேசப்படுகின்றன. நகரங்களுள் முழவு எந்நேரமும் வெவ்வேறு இடங்களில் ஒலித்துக்கொண்டிருப்பதால் அது துஞ்சா முழவு எனவும், முழவு முகம் புலராது எனவும் பேசப்படுகிறது. கபிலர் தனது அகம் 82ஆம் பாடலில், மூங்கில் துளையில் காற்றுப்புகுந்து ஒலிப்பது ‘குழல்’ இசையை ஒத்துள்ளது எனவும், அருவிவீழ் ஓசை முழவோசையை ஒத்துள்ளது எனவும், தாழ ஒலிக்கும் கலைமானின் கடுங்குரல் பெருவங்கியத்தின் ஒலியையும், வண்டின் ஓசை யாழோசையையும் ஒத்துள்ளன எனவும் கூறுகிறார்(வரி:1-7). கிணை என்ற பறையின் பேதம் பலமுறை சொல்லப்படுகிறது. ஆயரும், கள்வரும் தண்ணுமையை அறைகிறார்கள். பாணி, தூக்கு, சீர் என்ற மூன்றில் சீர் என்பது தாளம் என்பது சொல்லப்படுகிறது. சிறு, பெரு வங்கியம் பேசப்படுகிறது. ‘சில்லரி’ தாளம் அமைத்துக் கறங்குவது தேரை ஒலியைப்போல் உள்ளது(301:16-20). வெற்றி முரசு சிறப்பாகச் சொல்லப்படுகிறது. மருங்கூர்ப்பட்டினத்தில் எழும் முரசு ஒலி தமிழகம் முழுவதும் கேட்கும் என்கிறார் நக்கீரர்(227:14). இந்நூலில் இளி, விளரி, பாலை, செவ்வழி, குறிஞ்சி ஆகியவற்றின் இசைக்கருத்துகள் பேசப்படுகின்றன.

            ‘இளி’ என்பது குரல் துத்தம் முதலான ஏழு இசைகளில்(சுரங்களில்) ஒன்று. சேவலானது தன் பெடையை அழைக்கும் ஒலி, ‘இளி’ எனும் இசையொலி போல் இருக்கும்(33:5-7). இளியின் இசை மயிலின் குரலை, தவளையின் கத்தலை ஒத்திருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. ‘விளரி’ என்பது ஒரு சுரமும்(ரிசபம்), ஒரு பண்ணும் ஆகும். வண்டினது ஒலியானது விளரி நரம்பில் எழும் ஒலி போல இம்மென ஒலிக்கும் எனப் படுகிறது(317:12-13). ‘பாலை’ என்பது பெரும்பண்களில் முதற்பண் ஆகும். யாழ்கொண்டு இசைக்கும் பாலைப்பண்ணின் இசை, வண்டுகள் முரலுவதை ஒத்திருக்கும்(355:4-5). ‘செவ்வழிப்பண்’ பிரிந்திருக்கும் தலைவிக்கு எப்போதும் துன்பம் தரக்கூடியதாகும். ஒக்கூர் மாசாத்தனார் என்ற புலவர், தலைவன் தன்துன்பத்தைத் தன்மெய்யில் தேக்கி செவ்வழிப்பண்ணை இசைத்துக் கடவுளை வாழ்த்தினான் என்கிறார்(14:15-16).

            குறிஞ்சிப்பண் குறித்து அகநானூறு கூறும் ஒரு செய்தி மிகப் புகழ்பெற்றதாகும். தினைப்புனப் பரணிலே கானவன் மனைவி குறிஞ்சிப்பண் பாடினாள். அதைகேட்ட யானை தான் எடுத்தத் தினைக்கதிரினை மென்று விழுங்காது, நிலை பெயராது துயில்வரப்பெற்று அவ்விடத்திலேயே உறங்கியதாம்(102:5-9). குறிஞ்சிப் பண்ணின் கவர்ச்சி அத்தகையது என்கிறார் புலவர். பண்டைய காலத்திய பாண்மகன் நல்லிசைகளை நன்கு வரையறுத்துணர்த்திய இசைநூலின்கண் கூறப்பட்ட முறைகளையெல்லாம் நன்கு உணர்ந்து நிலை நிறுத்திப் பண்கள் செய்ததோடு அவற்றிலுள்ள இராகத்திறங்களைப் புதுவதாகப் புணைந்தான் என அஞ்சியத்தை நாகை என்கிற கி.மு. 3ஆம் நூற்றாண்டுகால அகநானூற்றுப்புலவர் கூறியது முன்பே சொல்லப்பட்டது(352:13-16).

ஐங்குறுநூறு:

            பஞ்சுரம் என்பது ஒரு பாலைப்பண். வேங்கை மரம் குறிஞ்சிக்குரியது. ஆனால் குறிஞ்சிக்குரிய வேங்கை மலர் கொய்வோர் பாலைப்பண் ஆகிய பஞ்சுரம் பண் பாடுகிறார்கள். ஆதலால் பஞ்சுரம் பண் மிகவும் பழமையானது. முல்லைப்பண் என்பது சாதாரிப்பண் ஆகும். முல்லை நிலத்துக்குரிய பண் செவ்வழிப்பண் ஆகும். சீறியாழ் என்பது சிறு யாழ் ஆகும். இதுவே செங்கோட்டு யாழும் ஆகும். ‘தட்டை’ என்பது மெல்லோசையுடைய ஒருவகைக்கரடிப்பறை ஆகும். தட்டையும், தண்ணுமையும் இசைக்க அதன்பின் வாச்சியக்காரர் தும்பிகள் ஒலிப்பது போன்ற ஆம்பற்குழல் இசைக்கிறார்(215). சிலப்பதிகாரமும் ஆம்பற்குழல் குறித்துப் பேசுகிறது. ஆகவே ஆம்பற்குழல் இருந்தது உறுதிப்படுகிறது. தொண்டித்துறைமுகத்தில் கடல் திரையின் ஓசையோடு முழவின் ஓசையும் கலந்து ஒலிக்கிறது(171).

குறுந்தொகை:

            இதன் 401 பாடல்களை 205 புலவர்கள் பாடியுள்ளனர். குறுமகள் வள்ளைப்பாட்டுப் பாடுகிறாள். பதலை, முழவு, யாழ், தண்ணுமை, பல்லியங்கள் சொல்லப்படுகின்றன. ‘பதலைப்பாணி’என்கிற இடத்துத்தாளம் குறிப்பிடப்படுகிறது. பணிலமும்(சங்கு), பறையும் குறிப்பிடப்படுகின்றன(15:1). தட்டைப்பறை சொல்லப்படுகிறது. ஆறலைப்போர் வணிகச்சாத்தை தண்ணுமை முழங்கி தாக்குகிறார்கள்(390:5). விளரிப்பண் நெய்தலுக்குரிய இரங்கற்பண். தலைவன் வரும் தேரிற் கட்டிய சிறுமணிகள் விளரிப்பண்ணாக ஒலிக்கின்றன(336:3). பாணர் இசைக்கும் படுமலைப்பாலை உச்ச ஒலியை உண்டாக்குகிறது(323:2). படுமலைப்பாலை என்பது பாலைப்பண்ணின் 12 திறங்களில் ஒன்று.

நற்றிணை:

            இதன் 400பாடல்களை 192 புலவர்கள் பாடியுள்ளனர். யாழ், முழவு, தண்ணுமை முதலியன பலமுறை சொல்லப் படுகின்றன. சிறியயாழில் பாடுவது குருகுகளின் குரல்போல் ஒலிக்கிறது(189). ஆம்பலங்குழலும்(113), கொன்றையங்குழலும்(364) சொல்லப்படுகின்றன.

செவ்வரிப்பறை(58), தொண்டகச்சிறுபறை(104) சொல்லப்படுகின்றன. முரசும் முழவும் பலமுறை சொல்லப்படுகின்றன. தண்ணுமையின் உள்ளே ஒன்றுமில்லை, மேலே போர்வை போர்த்தியிருக்கிறது என்பது சொல்லப் படுகிறது. மெல்லிசை விளரிசை எனப்படுகின்றது(172). படுமலைப்பாலை குறிப்பிடப்படுகின்றது(139). ‘கழைபாடு இரங்க பல்லியம் கறங்க’ என குழல் ஒலிப்பப் பல வாத்தியங்களும் முழங்கின என்கிறார் ஒரு புலவர்(95).

பதிற்றுப்பத்து:

            100 பாடல்கள் 10 பேர் பாடியுள்ளனர். தற்பொழுது 80 பாடல்களே உள்ளன. இப்பாடல்களில் ஒவ்வொன்றுக்கும் அது இன்ன பாட்டு, இன்ன வண்ணம், இன்ன தூக்கு, பாட்டின் பெயர் என்பன சொல்லப்பட்டுள்ளன. சொல்லப்பட்ட வண்ணங்கள் ஒழுகு வண்ணமும், ஒழுகுவண்ணமும்-சொற்சீர் வண்ணமும் ஆகும். சொல்லப்பட்ட தூக்கு, செந்தூக்கு, செந்தூக்கும்-வஞ்சித்தூக்கும் ஆகும். வண்ணம் என்பது பாடலின் சீர்களில் வரும் சந்த வேறுபாடு ஆகும். திருப்புகழ் போன்ற பிற்கால சந்தப்பாக்களில் வரும் வண்ணம்தான் இன்று அறியப்பட்டுள்ளது. பண்டைய ஆசிரியப்பாவுக்குப் பொருந்துகிற வண்ணங்கள் இன்று அறியப்படவில்லை. தூக்கு என்பது பாடலுக்குரிய ஏழு உறுப்புகளில் ஒன்றாகும். தூக்கு என்பது தாளங்களின் வழிவரும் செந்தூக்கு, மதலைத்தூக்கு, துணிபுத்தூக்கு, கோயில்தூக்கு, நிவப்புத்தூக்கு, கழால்தூக்கு, நெடுந்தூக்கு என சிலப்பதிகார உரை ஏழு தூக்குகளைக் குறிப்பிடும். இவை முறையே ஒருசீர், இருசீர், முச்சீர், நாற்சீர், ஐஞ்சீர், அறுசீர், எழுசீர் என்றும் சொல்லப்படும். இவைகளுக்கு மேற்கோளும் தரப்பட்டுள்ளன. எனினும் வண்ணம் போன்றே தூக்கின் இலக்கணமும், பொருளும், ஆட்சியும் மறைந்துவிட்டன. சங்ககாலத்திற்குப்பின் இந்த வண்ணம், தூக்கு ஆகிய இசைக்கருத்துக்கள் மறைந்துவிட்டன. வண்ணம், தூக்கு என்கிற இரு குறிப்புகளால் தனியான ஒரு சிறப்பு இசைமுறை பண்டைய காலத்தில் இருந்துள்ளது. பின் அந்தச் சிறப்பு இசைமுறை வழக்கிழந்து போயுள்ளது என்பது தெளிவாகிறது.

            வண்ணம் என்பது இசைப்பாடலுக்குரிய அமைதி என வன்பரணரின் புறநானூற்றுப்பாடல் தெரிவிக்கிறது.

            பாடுவல் விறலி ஓர் வண்ணம், நீரும்

            மண்முழா அமைமின் பண்யாழ் நிறுமின் (152:13-14).

            வண்ணம் பாடுதல் இருந்துள்ளது என்கிற உண்மையை இப்பாடல் உறுதிப்படுத்துகிறது. பண்டைய வண்ணம் மறைந்து போனாலும், அருணகிரிநாதர் தொடங்கி வண்ணப்பாட்டு அல்லது சந்தப்பாட்டு என்கிற கருத்து இலக்கிய மரபில் ஒரு நிலையான இடம் பெற்றுவிட்டது. பதிற்றுப் பத்தில் ஐந்தாம்பத்தைப்பாடிய இசைவாணர், வரலாற்றுப்பெரும்புலவர் பரணர் மிக அதிகளவான இசைச் செய்திகளைக் குறிப்பிட்டுள்ளார்.

            முறுக்கிய நரம்பின் மத்தளத்தின் தாளத்தோடு கூடிய இனிதாகிய கட்டு முதிர்ந்த வளைவுபெற்ற நல்யாழை இளைய மகளிர் தாங்குகிறார்கள் எனவும், பண்ணோடு பொருந்துமாறமைந்த முழாவும், பதலையும், பிற இசைக்கருவிகளும், மூங்கிற்கணுவை இடைவிட்டறுத்துச் செய்யப்படும் பெருவங்கியம் எனப்படும் வாச்சியித்தோடு(நாகசுரம்) ஒருங்கே சேர்த்து ஒரு புறத்தே கட்டின காவடியின் மறுபக்கத்தே பாடற்துறைக்கு வேண்டிய கருவிகளையெல்லாம் சேர்ந்த மூடையைச் சுமந்தவாறு செல்கின்றனர் இசைத்துறையில் வல்ல இளையவர்கள்(41:1-6) எனவும், நரம்புக்கட்டுப் பொருந்திய பேரியாழில் பாலைப்பண்ணை அமைத்து, பகைவர்க்குப் பணியாத இயல்பையுடைய உழிஞைத் திணையை இவர்கள் புகழ்ந்து பாடுகிறார்கள் (46:5-6) எனவும் பாடுகிறார் பரணர். பேரியாழில் பாலைப்பண்ணை இசைப்பதைப் பல புலவர்கள் கூறுகிறார்கள். சங்கநூல் தொகுதிகளில் இதுவே காலத்தால் பழமையான தொகுப்பு ஆகும். இந்தப்பாடல்களுக்குச் சொல்லப்பட்டுள்ள தூக்கு, வண்ணம் முதலியன யாப்பைக்குறித்தன ஆகும். பண்ணைக் குறித்தன அல்ல!

            இதன் பாடல்களுக்கு வைக்கப்பட்டுள்ள கூந்தல் விறலியர், நன்னுதல் விறலியர், சில்வளைவிறலி, பறைக்குரல் அருவி முதலியன இசைத்தொடர்பு உடையன ஆகும். பதலை, முழவு, யாழ், தண்ணுமை, தெண்கினை, பெருவங்கியம், பேரியாழ் முதலிய இசைக்கருவிகள் சொல்லப்படுகின்றன. பாணர்கள், பேரியாழில் பாலைப்பண்ணை அமைத்து ‘தழிஞ்சி’ என்ற புறத்துறைப்பாடலைப் பாடுகிறார்கள்(57). கின்னரப்பறவைகள் தங்கள் சிறகுகளை அசைக்கும்போது இசை பிறக்கிறது. அந்த இசையை வென்றுள்ளது இவர்களுடைய யாழ்நரம்பின் இசை(43).

புறநானூறு:

            இதன் 400 பாடல்களை 156 புலவர்கள் பாடியுள்ளனர். முரசும் போர்ப்பறையும் மிகுதியாகச் சொல்லப்படுகின்றன. இடியென முழங்கும் முரசு என முரசின் ஓசை வர்ணிக்கப்படுகிறது. முரசை அடிக்கிற கடிப்பு ‘குணில்’ எனப்படும். முரசு தோலால் செய்யப்பட்ட ஒரு இசைக்கருவி ஆகும். அரசர் இறந்த காலத்து முரசு ஒலிக்காது. ஒலித்தால் அது மந்த ஓசையாக இரங்கற்பண் ஓசையாக இருக்கும். போர்ப்பறை ‘கிணை’ எனப்பட்டது. கிணை ஒரு கட்பறை ஆகும். கிணை இசைப்பவன் கிணை மகன், அதனை இசைக்கும் விறலி கிணை மகள்(111) எனப்படுவர். கிணை ஆர்த்தெழும் ஓசை உடையதால் அரிக்கூடு மாக்கிணை(378) எனவும், ஒருகட்பறை எனவும் சொல்லப்படும். இது ஒரு கண்ணில் மட்டும் அடிக்கப்படுவதால் ஒருகண் மாக்கிணை எனப்படும்(392). தடாரி என்ற இசைக்கருவி பலமுறை சொல்லப்படுகிறது. இதுவும் ஒரு பறை ஆகும்.

            பாணரின் கையில் உள்ள யாழை புறநானூறு விளக்கமாகப் பல இடங்களில் குறிப்பிடுகிறது. சீறியாழ், கருங்கோட்டுச்சீறியாழ், வாங்கு மறுப்புயாழ் எனப் பலவிதமாகக் கூறுகிறது. அதன் நரம்பும் சுகிர்புரி நரம்பு, பொன்வார்த்தன்ன புரியடங்கு நரம்பு(135, 308), பண்ணமை நரம்பு(164) எனப் பலமுறை சொல்லப்படுகிறது. முழவு, யாழ், பெருவங்கியம்(கண்விடு தூம்பின் களிற்றுஉயிர்), பதலை, ஆகுளி(விரலால் அடித்திசைக்கும் தோற்கருவி), எல்லரி(சல்லிகை) ஆகியவற்றை வன்பரணரின் வல்வில் ஓரி குறித்தப் பாட்டு குறிப்பிடுகிறது.

            மண்முழா அமைமின்; பண்யாழ் நிறுமின்

            கண்விடு தூம்பின் களிற்றுஉயிர் தொடுமின்

            எல்லரி தொடுமின்; ஆகுளி தொடுமின்;

            பதலை ஒருகண் பையென இயக்குமின்; (152: 16-17)

            முதல் தானமாகிய குரலிலே வந்து பொருந்தும் அளவையுடைய பாட்டைவல்ல பாணன்(11:15) எனவும், உழைக்குரற்கூகை(261:12) எனவும், இரங்கற்பண்ணாகிய விளரியைச் சென்று உறுகின்ற இனிய நரம்புத் தொடை(260) எனவும், புண்பட்டு வீழ்ந்த தலைவனைச் சூழ்ந்து வரும் நரிக்குழாத்தை, தாம் விளரி என்னும் இரங்கற்பண்னைப் பருந்தின் சுழற்சிபோல வட்டமிட்டுப்பாடுவதால் ஓட்டிவிடுவேன் எனவும்(291, நெடுங் கழுத்துப்பரணர்) இயல் நூலான புறநானூறு பாடுவதன் மூலம் ஏழு சுரங்களில் குரல், உழை, விளரி ஆகிய மூன்றைச் சுட்டுகிறது. ஆதலால் ஏழிசை வழக்காறு அன்று பரவலாக இருந்தது என முடிவு செய்யலாம்.

            அரிசில்கிழார் ஒரு வீரன் புண்பட்டு வீழ்ந்த போது அவனுக்கு ஏற்பட்ட புண்ணை காஞ்சிப்பண் பாடி நறைபுகை வைத்துக்காப்போம் என்கிறார்(281). இதுபோலச் சில வேறு பண்களையும் புலவர் சுட்டிப்பாடுகிறார்கள். முடமோசியார் படுமலைப்பாலை என்கிற பெரும் பண்ணாகிய பாலையில் தோன்றிய திறம் பற்றிக் குறிப்பிடுகிறார்(135). நெய்தற்பண் இரங்கற்பண் என்றே பல இடங்களில் சொல்லப்படுகிறது. ‘ஓரில் நெய்தல் கறங்க’ என்றவிடத்து நெய்தற்பறை சாக்காட்டுப்பறை எனப்படுகிறது(194). பெருநள்ளியைப்பாடிய வன்பரணர், “உனது காக்கின்ற தன்மையால் எம்மவர் இசைமரபை மறந்தனர். காலையில் மருதப்பண் பாடி மாலையில் செவ்வழிப் பண் பாடுவது மரபு. ஆனால் எம்மவர் தங்களை மறந்த நிலையில் காலையில் செவ்வழிப்பண்ணும், மாலையில் மருதப்பண்ணும் பாடுகின்றனர் என்கிறார்”(149). இவைகளின் மூலம் புறநானூறு பாலை, மருதம் நெய்தல் ஆகிய திணைப்பண்களைத் திட்டமாகக் குறிப்பிடுகிறது எனலாம்.

            ‘மூவேழ் துறையும் முறையுளிக் கழிப்பி’(152) என்பதற்கு உரைகாரர், “மூவேழ் துறையுமென்றது வலிவு, மெலிவு, சமம் என்னும் மூன்று தானத்திலும் ஒவ்வொன்றில் ஏழு தானம் முடித்துப்பாடும் பாடற்றுறையை: அன்றி இருபத்தொரு நரம்பாற்றொடுக்கப்படும் பேரியாழெனினும் அமையும்” என்கிறார். நெடும்பல்லியத்தனார் என்கிற புலவர் கி.மு. 4ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவர் பெயருக்கு நீண்ட பல வாத்தியங்களை வாசிப்பவர் என்பது பொருள் ஆகும். பெயருக்கேற்றவாறு தனது பாடல் ஒன்றில் ‘நல்யாழ் ஆகுளி பதலையோடு’ எனச்சில இசைக்கருவிகளைப் பாடியுள்ளார்(64). நெடும்பல்லியத்தை என்கிற ஒரு பெண்பாற் புலவர் குறுந்தொகையில் இரு பாடல்கள் பாடியுள்ளார். இவர் அவரது மனைவியாக இருக்கலாம். இவைகளின் மூலம் புறநானூற்றில் ஏழிசை மரபு, பெரும்பண் மரபு முதலியன குறிக்கப்படுகின்றன எனலாம்.

கலித்தொகை:

            கலித்தொகையும் பரிபாடலும் சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்தனவாகும். அதாவது இவைகளின் காலம் கி.மு. 50-கி.பி 250 ஆகும். மேலே கண்ட ஆறு நூல்களும் கி.மு. 50க்கு முன் வரையான சங்கச் செவ்வியல் காலத்தைச் சேர்ந்தனவாகும். இக்காலகட்டத்தைச் சேர்ந்த இசைப்பாடல்கள் கிடைக்கவில்லை. அழிந்து போயின. இசைக்குரிய கலித்தொகையில் 150 பாடல்கள் உள்ளன. முதல் பாடலின் இடையில் வரும் தாழிசை தாழம்பட்ட ஓசை உடையது. முதல் பாடலில் கொடுகொட்டி, பாண்டரங்கம், காபாலம் ஆகிய மூன்று கூத்துக்கள் சொல்லப்படுகின்றன. தாளத்தின் முதல், இடை, இறுதிக்கூறுகளான பாணி, தூக்கு, சீர் ஆகியன இப்பாடலில் சொல்லப்படுகின்றன(1:5-17). அசுணமாவைப் பிடிக்கும் வேடர்கள் முதலில் நல்ல இசையை யாழில் எழுப்பி அவ்விசையில் அசுணம் மயங்கி இருக்கும்பொழுது திடீரென பறையை ஒலித்து அவ்வோசைக்கு ஆற்றாது அதனை உயிர்விடச்செய்து அதனைப்பிடிப்பார்கள்(143:10-12) என்கிற செய்தி சொல்லப்பட்டுள்ளது. இச்செய்தி வேறு நூல்களிலும் உள்ளது.

            பாணர்கள் தலைவி இன்புறும்படி அவள் இல்லத்தில் சென்று யாழ் வாசிக்கமாட்டார்கள். அவர்கள் தலைவனும் பரத்தையும் மகிழும்படி பரத்தையின் இல்லத்திற்குச் சென்று யாழ் வாசிப்பார்கள்(71, 72). தலைவன் எந்தப் பரத்தையின் இல்லத்திற்குச் சென்றுள்ளான் என்பதைத் தலைவி வினவி அறியும்பொருட்டு தலைவியின் இல்லத்திற்கு பாணன் வருவான்(77:18-19). கலித்தொகையின் பாலைப்பாடல்களில் இசைக்குறிப்புகள் அதிகமாகவும், குறிஞ்சியில் எதுவும் இல்லாமலும், பிற மூன்றிலும் மிகக்குறைவாகவும் உள்ளது. சில பாடல்களில் ஏழிசையும் தொகுப்பாகச் சொல்லப்படுகிறது(8, 9). முரசு, தண்ணுமை, குழல், யாழ், கோடு என்ற ஊதுகருவி முதலியன பல இடங்களில் சொல்லப்படுகிறது. யாழுக்குள் ஏழிசை பிறந்தாலும் அவை முரல்பவர்க்குப் பயன்தருமே தவிர யாழுக்குப் பயனில்லை என்பதுபோல் பெண் பிறந்த வீட்டுக்கு இல்லாமல் அவளது கணவனுக்குத்தான் உரியவளாவாள் என்கிற அன்றைய உலகநீதி சொல்லப்படுகிறது. பாகற்கும், அங்குசத்துக்கும் அடங்காத யானை யாழோசைக்கு அடங்கும் என்கிற இலக்கியமரபு பாலைக்கலியில் சொல்லப்படுகிறது(2:26-27).

            செவ்வழிப்பண் இரங்கற்பண் என்பதால் அது மாலை நேரத்திற்குரியது என்பது சொல்லப்படுகிறது(118, 143). யாழ் பாணர்களுக்குத் தெய்வம்போல் என்பதால் பாணன் யாழ் வைத்துச் சூழ் உரைக்கிறான்(71). பாணன் தலைவனுடைய கூடா ஒழுக்கத்திற்குத் துணை போகிறான். தலைவன் பரத்தையினிடத்தே ஒழுகுவதற்கு வேண்டுவனவற்றைச் செய்வதாக தலைவி பாணனைக் குறை கூறுகிறாள்(72). பாணன் தலைவன் சார்பில் பரத்தையிடம் தூது செல்லும் வாயிலாக இருக்கிறான் எனவும், அவன் பாடுகிற பாட்டையும் திருந்தக் கற்றவன் அல்லன் எனவும் தலைவி அவனைப் பழிக்கிறாள்(70). ஆயினும் பாணன் தலைவிக்கு இரங்கி பாசறையுள் தங்கியுள்ள தலைவனிடம் சென்று தலைவி நிலையை உரைக்கிறான். இவை போன்று பாணனின் வேறுபட்ட பலவகை இயல்புகள் சொல்லப்படுகின்றன.

பார்வை:

1.தொல்காப்பியம், எழுத்ததிகாரம், நூன்மரபு-33.

- கணியன்பாலன், ஈரோடு.

Pin It