தமிழ்ச்செவ்வியல் அழகியல், திணைக் கோட்பாட்டுப் பின்புலத்தை அடிப்படையாகக் கொண்டு அமையப்பெற்றது. அகத்திணையாகவும் புறத்திணையாகவும் காதலை, வீரத்தை, இயற்கையை, கொடையை, தறுகண்மையைப் பொருண்மைகளாகக் கொண்டது. அவைதீகத்தையும் இனக்குழுச் சமூகம் கரைந்து அரசுருவாக்க வடிவெடுக்கும் காலகட்டத்தில் புலப்படுத்தப்படும் சமயம் சாரா வாழ்வையும் சங்கச் செவ்வியல் படைப்புகளில் காண இயலும். தொல்காப்பியம் முதற்கொண்டு முத்தொள்ளாயிரம் உட்பட 41 நூல்களை செவ்வியல் தமிழ் என பட்டியலாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால், செவ்வியல் நூல்தொகை ஆக்கங்களின் காலகட்டங்களுக்கு இடையேயான இடைவெளி பாரதூரமாகவும் வரையறுக்கச் சிக்கலாகவும் உணரப்படுகிறது. தர்க்கப்பூர்வமான விவாதங்களுக்கு வெளிச்சமூட்டும் தேவை மேலதிகமாக உணரப்படுவதாகவும் விரிவுபெறுகிறது.

செவ்வியல் நூற்றொகைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள பிற்கால ஆக்கங்களில், அவைதீகமும் சமயச்சார்பற்ற நிலையும் மங்கியும், மொழிதல் சார்ந்தும், இனக்குழுப் பண்புகள் குலைந்து அதீதத் தனிமனித வழிபாட்டு உணர்வு மேலோங்கியும் இப்படிப் பல்வேறு நிலைகளில் ஊடாடியதன் பாற்பட்டு, சங்கத்தமிழ்ச் செவ்வியலின் தனித்துவம் நீர்த்திருப்பதைக் காணமுடியும்.

வையாபுரிப்பிள்ளை பத்துப்பாட்டில் இடம்பெறும் திருமுருகாற்றுப்படை, காலத்தால் பிற்பட்டது என்பதைச் சொன்னபோது, “அவர் வக்கீல் அப்படித்தான் பொய் பேசுவார்” என்று, போகிறபோக்கில் மட்டையடியாக மறுத்த மிக மூத்த தமிழறிஞரை (நாகரிகம் கருதி பெயர் தவிர்க்கப் படுகிறது) என்னவென்பது? விமர்சனத்துக்காக, வையாபுரியாரைத் தமிழ்த்துரோகி என்று இழித்தும் பழித்தும் பேசுவதைச் சிலர் ஏற்றிப் போற்றி வந்ததென்பது, வருந்தத்தக்கது. அண்மையில் மறைந்த அறிவியல் தமிழ் ஆளுமை, பேராசிரியர் இராமசுந்தரம், “நானும் ஒரு தமிழ்த்துரோகிதான்” (தமிழ்த்துரோகி என மட்டம் தட்டப்பட்ட வையாபுரிப் பிள்ளை பற்றி ஆய்வு செய்ததால்) என்று சுய எள்ளல் செய்து கொண்டதைப் பலரும் நினைவு கூர்வர்.

எனவே, காய்தல் உவத்தல் இன்றி தொடர்ந்து கால ஆராய்ச்சியை முன்னெடுக்க வேண்டியதன் தேவை மேலெழுந்திருக்கிறது. விமர்சனத்துக்கும் தர்க்கத்துக்கும் நெகிழ்ந்து கொடுக்காத, கெட்டிதட்டிய இறுகல் நிலையும், அறிவியல் மனப்பான்மையின் கூர்மை இன்மையும் ஒரு சமூகத்தின் பின்னடைவுக்குப் பெருங்காரணம் ஆகிவிடும். கூர்ந்தாய்வுக்கு உட்படுத்தாமல் சிவனே என்று இருந்து விடுதல் முற்போக்குப் பாய்ச்சலை முடக்கிவிடும். சிவபெருமானும் முருகப்பெருமானும் தமிழ்வளர்த்த பௌராணிகச் சமயச்சார்பை விட்டுவிட்டு, அறிவியல் மனப்பான்மையை ஏந்திக்கொள்ளப் பிற்போக்குத் தமிழ் மனம் தயங்கி நிற்கிறது. இறையனார் களவியல், இந்த வரிசையில் வைத்து எண்ணத்தக்கது.

மொழியாடல்களைக் கருத்தில்கொண்டு, காலகட்டங்களை வரையறுக்கும் ஆய்வில் வரலாற்று மொழியியலும் (Historical Linguistics) நல்ல பங்களிப்பைச் செய்ய இயலும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. வரையறைகளைத் துலக்கப்படுத்தி, மறு கட்டமைப்பாக்கம் செய்ய, ஆய்வுலகத்தின் முன், மிகப்பெரிய கடப்பாடு காத்திருக்கிறது. இனிவரும் தலைமுறை, அந்நிலை நோக்கி நகர்வது, காலத்தின் தேவை என்று உணர்வோமாக. இந்தத் தடத்தில் ஆசாரக்கோவை பதினெண் கீழ்க்கணக்கிலும், திருமுருகாற்றுப்படை பதினெண் மேற்கணக்கிலும் சேர்க்கப் பட்டிருப்பது குறித்தும் முத்தொள்ளாயிரம், இறையனார் களவியல் ஆகிய நூல்கள் செவ்வியல் நூற்பட்டியலில் (41) சேர்க்கப்பட்டது குறித்தும் விவாதங்களையும் கேள்விகளையும் முன்வைத்து சில தர்க்க நியாயங்களை இக்கட்டுரை எழுப்புகிறது.

செவ்வியல் நூல் தொகையாக்கமும் ஆசாரக்கோவையும்

கயத்தூர் பெருவாயில் முள்ளியார் எழுதிய ஆசாரக்கோவை என்பதில் ஆசாரம் என்பது பின்பற்றவேண்டிய நெறிமுறைகள் என்றவாறு பொருள் சுட்டி நிற்கிறது. கோவை என்பது தொகுப்பு என்ற பொருளைக் குறித்து நிற்கிறது. ஆக, பின்பற்றவேண்டிய நெறிமுறைகளின் தொகுப்பு நூலாக அடையாளப்படுகிறது.

ஆனால், எத்தகைய அடையாளத்தை அது காட்டுகிறது? இன்ன காரியங்களைச் செய்ய வேண்டும். இன்ன காரியங்களைச் செய்யக்கூடாது என்று கட்டளையிடும் நூல்களுக்கு வட மொழியில் ஸ்மிருதிகள் என்று பெயர் கூறுவர். இத்தகைய வடமொழி நூல்களில் வருண அடிப்படை நீதி, அதாவது சாதிக்கொரு நீதி வலியுறுத்தப்படும். தமிழில் இத்தகைய மரபு கிடையாது என்பார், சாமி. சிதம்பரனார். ஆசாரம் என்பதே, தமிழ்ச்சொல் அல்ல எனும் அபச்சாரம் புரியாத வடவாரியத்துக்கு முதுகுசொரியும் தமிழ் அக்ராசனர்களை என்னென்பது?

தவிர, சில தூய்மைவாதிகள் கொரானா தீ நச்சுக்காலத்தில் இதுதான் சாக்கு என்று தனிநபர் தூய்மை பேணுவதைச் சங்க இலக்கியமே வலியுறுத்துகிறது என மறுபடியும் விதந்தோதத் தொடங்கினர் . தனிநபர் தூய்மைக்கு நாமும் எதிரான கருத்துடையோரல்லர். ஆனால் படி நிலையில் இன்னாரைத் தீண்டலாம் இன்னாரைத் தீண்டலாகாது எனும் படி நிலையாக்க மரபு கேள்விக்கும் கண்டனத்துக்கும் உரியது.

நன்றியறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு

இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு

ஒப்புர வாற்ற வறிதல் அறிவுடைமை

நல்லினத்தாரோடு நட்டல் இவையெட்டும்

சொல்லிய ஆசார வித்து.

என்று எட்டு விதமான ஆசாரங்களை முதன்மைப் படுத்துகிறது ஆசாரக்கோவை. மிக நயம்பட ஒழுகலாறுகளைப் பாடலில் பந்தி வைத்திருப்பதைப் போலத் தென்பட்டாலும், உட்கிடக்கையாக, வடஆரியச் சார்பைக் கொண்டிருப்பதோடு, தீவிர மடி ஆச்சாரங்களைத் தமிழ் மரபிற்குப் பொருந்தாத மூடப்பழமைகளை, நடைமுறைக்கும், காலத்திற்கும் ஒவ்வாத, பல அழுகுணி வேதாந்தங்களை அடுக்கிக்கொண்டே போகிறது, ஆசாரக்கோவை.

தமிழ் மரபிற்குப் பொருத்தமற்ற இந்நூல், பதினெண் கீழ்க்கணக்கு நூற் பட்டியலிலிருந்து கழித்துக் கட்டப்படாமல், தமிழ்ப் பண்டிதமணிகள், மகாவித்துவான்கள், மகா மகோபாத்தியாயர்கள், சொல்லின் செல்வர்கள், நாவலர்கள், சிலம்பின் செல்வர்கள், உரைவேந்தர்கள், தனித்தமிழ் வித்தகர்கள் உள்ளிட்ட பெருமக்கள் பார்வையில் படாமல், இவ்வளவு காலமும் எப்படித் தப்பிப் பிழைத்தது? இது குறித்து எவ்வித அக்கறையும் கொள்ளாது, தமிழ் நூற்றொகையாகிய பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் தமிழ்ப் பொருண்மையியல், மற்றும் தமிழ் அழகியல் தன்மைகளோடு மிகப்பெரிதும் முரணும் ஆசாரக்கோவை இடம்பெற்றதைக் கண்டும் காணாது வாளாவிருந்திருப்பது வியப்பூட்டுகிறது. நமக்குத் தேவை பதினெட்டு போன்ற எண்ணிக்கை அல்ல. பதினெட்டு என்ற கணக்கில் ஒன்று குறைந்து பதினேழாக இருந்தால் குடிமுழுகிவிடப் போகிறதா என்ன?

எச்சிலார் தீண்டார் பசுப்பார்ப்பார் தீத்தேவர்

உச்சந் தலையோ டிவையென்ப யாவரும்

திட்பத்தால் தீண்டாப் பொருள்

என்கிற பாடலின் வழி, வருணப்பகுப்பு படம் பிடிக்கப்படுகிறது. இது தொல் தமிழ்ச் சமூகத்தில் நடைமுறையில் இல்லாத ஒன்று. யாரைத் தீண்டலாம்? யாரைத் தீண்டக் கூடாது? என்று இழிவான இலக்கணம் வகுக்கும் போக்குகளால் யாது பயன்? பிறமொழிகளுக்கு மொழிபெயர்ப்பில் சென்றால், காறித்துப்ப மாட்டார்களா? இவர்கள் கொட்டி முழக்கும் தமிழ் மரபில் நீதி இலக்கியமாயினும், அதற்கென்று ஒரு அழகியல் இருக்கத்தான் செய்கிறது என்பதையாவது, இவர்கள் கணக்கில் கொண்டதாகத் தெரியவில்லை. உருவகமாக, உவமையாக, உள்ளுறையாக, இறைச்சியாக, தொன்மமாக நீதி எடுத்துரைப்பியலை நிகழ்த்துகின்றன, சங்க இலக்கியமும் நீதி இலக்கியமும். ஆனால் மருந்துக்குக்கூட புனைவிய அழகோ, எடுத்துரைப்பு வினைமையோ (Narrative Aesthetics) நூலின் எங்கேனும் ஒரு சந்து பொந்தில் கூடக் காணமுடியாத ஆசாரக் கோவை, தமிழ்மரபிற்கு மொத்த அபச்சாரமாக விளங்குகிறது.

 ‘படிறும் பயனிலவும் பட்டியுரையும் / வசையும் புறனும் உரையாரே/அசையாத உள்ளத் தவர் என்றும், உண்டது கேளார் குரவரை மிக்காரை / கண்டால் மனந்திரியார் புல்லரையும் உண்டது கேளார் விடல்‘ என்றும் எவ்வித இலக்கிய அணி நலமும் வாய்க்கப்பெறாத வெற்று அறிவுரைச் செய்தியாகவுள்ள இப்பனுவல் தமிழ்ச்செவ்வியல் நூற்றொகையில் புகுந்தது எவ்விதம்?

காணிக்கை தருதல், (தட்சணை) எச்சிலுடன் காண, தீண்டக்கூடாதவை நான்கு வகை எச்சில்கள், வேதம் ஓத ஆகாத நாட்கள், மன்னனிடம் நடந்துகொள்ளும் முறை, அந்தணர் வாய்ச் சொல் கேட்டல் என்று நீளும் புத்திமதிகளின் அழகியலற்ற வரட்டுப் பிரச்சாரத்தைத் தான் தமிழ் மரபிற்குப் புறம்பாகக் கருதவேண்டியிருக்கிறது. வெளிக்குப் போவதற்கும் கால் கழுவுவதற்கும் சொல்லிக்கொடுக்க வேண்டிய அளவுக்குத் தரம்தாழ்ந்த நிலையிலா தமிழினம் இருந்திருக்கிறது?

தலைப்பிலேயே வடமொழியைக் கொண்டுள்ள இந்நூலுள் தக்கிணை, உவாத்தியாயர் போன்ற வடசொற்கள் காணப்படுவதையும் வடவாரியப் பண்பாடு பேணப்படுவதையும் நூல் நெடுகக் காண முடிகிறது. ஆரிடம் என வருவதையிட்டு சிறப்புப் பாயிரத்திற்கு உரை எழுதிய திருமணம் செல்வக்கேசவராயர் இந்நூல், சுக்ரஸ்மிருதி எனும் வடநூலிலிருந்து பெறப்பட்டதாக வடநூலார் சொல்வதாகத் தெரிவித்திருப்பதையும் இங்கு கணக்கில் கொள்ளவேண்டும். முப் புறங்களையும் அழித்த சிவபெருமானின் திருவடிகளை வணங்கி, ஆரியரிடம் தான் அறிந்த ஆசாரங்களை யாவரும் அறிய ஆசாரக்கோவை என்ற இந்நூலை திருவாயில் எனப் போற்றப்படும் கயத்தூர் அருகில் பெருவாயின் என்ற ஊரில் வாழும் முள்ளியார் தொகுத்துக் கொடுத்தான் என விரித்துக்கூறுகிறார்.

இன்றைய water theme park  ஏதோ நவீனமென்று நினைக்கின்றோம். ஆனால் சங்க மரபிலேயே நீர் விளையாட்டு, புனலாடுதல் நமக்கு உண்டு. அந்த மரபுக்கு முரணாக நீரைக் குடைந்து விளையாடக் கூடாது (ஆசாரக்கோவை பாடல் : 14) என்பதெல்லாம், தமிழ் மரபுக்கு எதிரானவை என்று பார்க்கவேண்டும்.

ஐம்பூதம், பார்ப்பார், பசு, திங்கள், ஞாயிறு,/ தம்பூதம் எண்ணாது இகழ்வானேல், தம்மெய்க்கண் / ஐம்பூதம் அன்றேகெடும். (ஆசாரக்கோவை பாடல்:15) நிலம் முதலிய ஐம்பூதங்களையும், பார்ப்பாரையும், பசுவையும், சந்திரனையும், சூரியனையும் போற்றாதவர், உடம்பில் உள்ள ஐம்பூதத்தையுடைய தெய்வங்கள் அகன்று போய்விடும். இருதேவர், பார்ப்பார், இடைபோகார்; (ஆசாரக்கோவை பாடல்:31) இரண்டு தெய்வங்களுக்கு இடையிலும், பார்ப்பார் பலர் நடுவும் போகக்கூடாது. போன்ற பாடல்களில் பார்ப்பனர்களை உயர்த்திப்பிடிக்கும் இடங்களிலிருந்து வந்தவழி கண்டுகொள்க.

பார்ப்பார் இலங்கு நூல் ஓதாத நாள். (47 ) பார்ப்பார், பிறப்பினுள் போற்றி எனப்படுவார் . (64 ) இல்லம் சிறியாரைக் கொண்டு புகாஅர்; (68) கசிவு இன்று, காக்கை வெள்ளென்னும் எனின். (69) என்றவாறு பார்ப்பார் ஓதத் தகுதியற்ற நாள்கள்; பிறப்பினுள் போற்றத்தக்கவர் பார்ப்பார்; கீழோரை வீட்டுக்குள் அழைத்துச் செல்லக்கூடாது; அரசன் செய்பவற்றை வெறுக்கக்கூடாது. அவனோடு சண்டையிடக்கூடாது. அரசன் தனிமையாய் இருக்குமிடத்தில் தனது குறையைச் சொல்லக்கூடாது. நாம் அறிவோம் என்று தானே முன்வந்து கூறக்கூடாது. காக்கை வெள்ளை என்றாலும் அன்பின்றி வெகுளுமாறு மறுத்து உரைக்கக் கூடாது. (இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் எனும் திருக்குறள் மரபுக்கு எதிரான கருத்தியல் இது என்பது காண்க) என வழிமொழியும் இவற்றையெல்லாம் கண்ணுறும்போது, அரசனுக்கும் பார்ப்பனருக்கும் சமரசமாகி அடங்கி நடக்கச் சொல்லும் மிகவும் பிற்போக்குக் கருத்தியல் மலிந்த நூலாக வரையறைக்கு உள்ளாகிறது.

எனவே, அறிவியலடிப்படையில் தமிழாய்வுகள் வளர்த்தெடுக்கப்பட வேண்டுமே அல்லாது, வீண் கதையாடல்கள் வளர்ச்சிக்கு ஒருபோதும் வழிவகுக்காது என்பதையும் நூல்தொகை எண்ணிக்கையை நம்பக அடிப்படையிலும்; சேர்க்கை நீக்கம் தவிர்த்தும்; ஆய்வுக்கு உட்படுத்தியும் மறுவரையரை செய்யவேண்டிய தேவையையும் உணரவேண்டும்.

அந்தவகையில் பார்த்தால், ஆசாரக்கோவை தமிழ்ச்செவ்வியல் மரபுக்கு முரணானதும் பொருத்தப்பாடற்றதும் எனும் புரிதல்நோக்கிப் பயணிக்க வேண்டியதிருக்கிறது. பதினேழ்கீழ்க் கணக்கு எனப் பெயர் மாறுமே எனும் கவலை தேவையற்றது. ஏனெனில் எண்ணிக்கையில் இல்லை சிறப்பு.

செவ்வியல் பட்டியலாக்கமும் முத்தொள்ளாயிரமும்

செவ்வியல் நூல்பட்டியலில் முத்தொள்ளாயிரம் சேர்க்கப்பட்டது குறித்து அடுத்து ஆய்வு செய்யலாம்.

முத்தொள்ளாயிரம் பாடல்கள் மொத்தம் 2700 என்று பொதுவாகவும், அவற்றுள் இப்போது கிடைத்துள்ளவை 99 என்று சிலரும், 108 என்று சிலரும், 130 என்று சிலரும், எண்ணிக்கை தருவதில் வேறுபாடுகள் உள்ளன. முத்தொள்ளாயிரச் செய்யுள்களில் 25 ல் 1 பங்கு மட்டுமே கிடைத்துள்ளன என்று கூறப்படுவது இங்கு நோக்கக்தக்கது.

ஊரோடு தோற்றம் உரித்தெனமொழிப

ஆனை ஆயிரம் அமரிடைவென்ற

மாணவனுக்கு வகுப்பது பரணி

போன்ற நூற்பாக்கள் வரையறுக்கும் உலா, பரணி மற்றும் தூது போன்ற, சிற்றிலக்கியங்களின் விளைச்சலுக்கும் முத்தொள்ளாயிரம் வித்தாக இருந்துள்ளதைப் பார்க்கிறோம்.

சில பாடல்கள் கலிங்கத்துப்பரணியின் கடைத் திறப்பையும் இன்னபிற பகுதிகளையும் நினைவுறுத்துவதுபோல,பின்னாளில் அவை உருவாக முன்னோடியாகவும், சில பாடல்கள் உலா இலக்கிய முன்னோடியாகவும், சில பாடல்கள் தூது இலக்கிய முன்னோடியாகவும் கொள்ளமுடியும்.

‘முட்டுவேன் கொல் தாக்குவேன் கொல்’ எனும் ஔவையின் பாடல் ‘ஆடுகோ ஆடுகோ ஐதாக் கலந்து கொண்டு ஏடுகோடாக எழுதுகோ’ என முத்தொள்ளாயிரத்திலும், ‘முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்’ எனும் சங்கப்பாட்டின் உட்கிடக்கை, குங்கும ஈர்ஞ்சாந்தின் சேறு இருக்கி’ என முத்தொள்ளாயிரத்திலும் ஒத்திருக்கிறது எனலாம்.

சங்கச்செவ்வியல் அழகியலும் மரபுமீறலும்

தன்னுறு வேட்கை கிழவன் முற்கிளத்தல் / எண்ணுங் காலைக் கிழத்திக்கு இல்லை (தொல்.பொரு.116) என தொல்காப்பியப் பொருளதிகார நூற்பாவின்படி, தன் காதலுணர்வை, பெண் நேரடியாக வெளிப்படுத்த உரிமையில்லை. ஒரு வேளை அப்படி வெளிப்படுத்த நேர்ந்தாலும், பிறநீர் மாக்களின் அறிய ஆயிடைப் / பெய்நீர் போலும் உணர்விற் றென்ப (தொல்.பொரு.116) என்கிற அடிப்படையில், மண்கலத்தில் உள்ள நீர், மெல்லக்கசிந்து வெளியில் தெரியாமல் பரவுவதைப்போல, வெளிப்பட வேண்டும் பெண்ணின் காதல் என்கிறது, தொல்காப்பியம். இது அக்கால வழக்கமெனினும் இக்கால மானுட வளர்ச்சிப்போக்கில், பெண்ணியக் கோட்பாடுகள் வளர்ந்து, பார்வைகள் சீர்மைபெற்றுள்ள சமகாலத்தில், மிக முரணானதும் பிற்போக்கானதுமாகத் தோன்றும். ஆனாலும் இது அக்காலகட்டத்தையொட்டிப் பார்க்கப்பட வேண்டிய மரபு.

தமிழ்க் காந்தருவத் திருமணம், வடமரபு காந்தருவத்திலிருந்தும் மிக மாறுபட்டது என்கிறார் ந.சுப்புரெட்டியார். எண்வகைத் திருமணங்களில் சாலச்சிறந்தது; புலால்நாறும் நெய்தல் தலைவியை வேளாண் உற்பத்திகொண்ட மருதத்தலைவன் இயல்பாக ஏற்றுக்கொள்ளும் அப்பழுக்கற்றது; திணைகளுக் கிடையிலான கொள்வினை கொடுப்பினைகளில் ஏற்றத்தாழ்வு அற்றது; மணக் கொடை, மாமுது பார்ப்பான் மறைவழி காட்டல் எதுவுமற்ற மிகமிக முற்போக்குப் பாத்திரம் கொண்டது; அறத்தொடு நின்று காதலாகிக் கசிந்துருகுவது, தமிழ்க்காந்தருவம் எனலாம். அப்படிப்பட்ட காலத்தில் பெண்ணானவள், காதல்சார் மெய்ப்பாட்டை கரவுமெய்ப்பாடாகக் காட்ட வலியுறுத்துவது தான் முரணானது.

இந்தவகையில், பிற செவ்வியல் இலக்கியங்களின் இயங்குதளம் பெண், காதலை வெளிப்படையாகப் புலப்படுத்தமுடியாத நிலை இருக்கையில், முத்தொள்ளாயிரம் அப்படிப் புலப்படுத்தி இருப்பதைக் கவனம் கொண்டால், ஒருபுறம் இக்காலச் சனநாயக அடிப்படையில் ஏற்புடையதே. எனினும், இன்னொருபுறம் அக்கால மரபுப்படி, கரவுமெய்ப்பாடு தவிர்க்கப் பட்டிருப்பதால் முத்தொள்ளாயிரம் பிற்காலத்தைச் சேர்ந்தது எனும் முடிவுக்கும் வர வேண்டியுள்ளது.

ஆனால், இத்தகைய இலக்கணங்களைக் கட்டறுத்து முன்னமே செவ்வியல் கால வெள்ளிவீதியார், ஔவையார் பாடல்கள் விதிவிலக்காக வெளிப்படுத்தப் பட்டிருக்கின்றன.

கையில் ஊமன் கண்ணில் காக்கும் /

வெண்ணெய் உணங்கல்போல பரந்தன்று

இந்நோய் நோன்றுகொளற்குஅரிதே   (குறு 58)

கன்றும் உண்ணாது கலத்தினும் படாது /

நல்ஆன் தீம்பால் நிலத்து உக்கா அங்கு

எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது /

திதலை அல்குல் என் மாமைக் கவினே             (குறு 9)

யாமம் உய்யாமை நின்றது /

காமம் பெரிதே கலைஞரோ இலரே !   (நற் 335)

அரிதோ தானே நாணே நம்மொடு /

காமம் நெரிதரக் கைந் நில்லாதே          (குறு 149)

இவ்வாறாக வெள்ளிவீதியார் இயற்றிய, சில பாடல்கள் ‘தன்னுறு வேட்கை கிழவன்முன் கிளத்தல் எண்ணுங்காலைக் கிழத்திக்கில்லை’ என்கிற இலக்கணத்தை மீறியவை. காமம் குறித்த நாணம் கடத்தலை, விழைவை, புலம்பலை வெளிப்படுத்துபவை. போலவே, ஔவையும் இப்படி இலக்கண மரபுகளை மீறுகிற இடங்களைக் காணலாம்.

முட்டுவேன்கொல் தாக்குவேன்கொல் /

ஒரேன்யானும் ஓர் பெற்றிமேலிட்டு

ஆ ஒல்லெனக் கூவுவேன் கொல் /

அலமரல் அசைவளி அலைப்ப என்

உயவு நோய் அறியாது துஞ்சும்ஊர்க்கே          (குறு 28)

முலையிடைத் தோன்றிய நோய் வளர் இளமுலை /

அசைவுரை நெஞ்சத்து உயவுத்திறல் நீடி        (அகம் 273)

வான்தோய் வற்றே காமம் /

சான்றோர் அல்லர் யாம்மரீஇ யோதே               (குறு 99)

போன்ற பாடல்களில் உணர முடியும். அதேவேளை சங்கச்செவ்வியல் இலக்கியப் பெரும்பரப்பில் இவை விதிவிலக்கும் சிறுபான்மையும் எனக் கணிக்கவும் வேண்டியிருக்கிறது.

முத்தொள்ளாயிரமும் சங்கச்செவ்வியல் அழகியல் மரபுமீறலும்

வேம்புதலை யாத்த நோன்காழ் எஃகம் என்றவாறு, வேம்பு வந்ததாலேயே, சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறார் எனும் பண்டை அகமரபுப்படி, இப்பாடலை புறத்தில்தான் வகைப்படுத்த வேண்டும் எனும் முடிபு போல், முத்தொள்ளாயிரச் செய்யுள்கள் அகமரபை மீறியே துலங்குகின்றன.

கிள்ளி, கூடல்கோமான், மாறன், கோதை, கோலியர் கோன் சேரன், தென்னவன், மதுரையார் கோமான், வளவன், வழுதி, மாந்தையார் மாக்கடுங்கோ, தென் கொற்கைக் கோமான், பெருந்தண் உறையார்கோ, அலங்குதார்ச் செம்பியன், நெடுவேள் நலங்கிள்ளி எனச்சுட்டியோ, ஒருவர் பெயர் விளித்தோ பாடப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

செவ்வியல் தமிழ் மரபுமீறலாக, மகளிர்காதல் என்பதும், பெண்குரல் வழி வெளிப்படுத்தப் படுவது என்பதும், முத்தொள்ளாயிர உள்ளடக்கத்தில் மாறுபட்டுக் காணப்படும் ஒரு போக்காகும். இது கருதியும், முத்தொள்ளாயிரம் செவ்வியல் கால நூலா? பிந்தைய கால நூலா? என்ற கேள்வி எழுகிறது.

கொம்பன்னார் காமம், கலவி களி மயங்கிக் காணேன், தண்டப்படுப தடமென் தோள், தொழுதேனைத் தோள்நலமும் கொண்டான், கோட்டு மண் கொள்ள முலை, என்றெல்லாம் வருகிற கூற்றுகளை வைத்து, இப்பாடல்களும் இன்னும் சிலவும் பெண்பாற் புலவரால் இயற்றப் பட்டிருத்தல் வேண்டுமென்பது பொதுவான ஒரு ஆய்வுக் கண்ணோட்டமாக, அமைகிறது. இதனை யாத்த புலவர் பெயர் விவரம் கிடைக்காததால், ஒருவேளை ‘ஆண் எழுத்துப் பெண் குரலாக சில அமைந்திருக்குமோ என எண்ணினாலும், பெரும்பாலும் பெண் எழுத்துப் பெண் குரலாகவே அமைந்தன போலவே, இப்பாடல்கள் தோற்றம் அளிக்கின்றன. முத்தொள்ளாயிரத்தின் காலத்துக்கு முந்தைய, சங்கக்கவிதைகளில் ஆங்காங்கே சிறுபான்மையாகக் காணப்படும் காமம் சார்ந்த பெண்ணின் வெளிப்படையான குரல்கள், முத்தொள்ளாயிரத்தில் தீவிரங்கொள்வதைக் காண்கிறோம்.

புறப்புறம் என்றோ கைக்கிளைப் பாடாண்திணை என்றோ சொல்லப்பட்டாலும் செவ்வியல் காலத்துக்கு பிற்காலத்தெழுந்தது முத்தொள்ளாயிரம் என்பதைச் சிந்திக்கையில் சில கருதுகோள்கள் முன்வருகின்றன.

“தொல்காப்பிய உரையாசிரியர் பேராசிரியர், பதினெண் கீழ்க்கணக்கு நூலாசிரியர்களோடு முத்தொள்ளாயிர ஆசிரியரையும் சேர்த்துப் பிற சான்றோர் எனக் குறிப்பிட்டார். எனவே இவர் சங்கப்புலவர் அல்லர் என்பது வெளிப்படையாகும். ஆராய்ச்சி அறிஞர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார், இந்நூலின் உள்ள சில அகச்சான்றுகளை எடுத்துக்காட்டி, இந்நூலாசிரியரை கி.பி. 5-ஆம் நூற்றாண்டை ஒட்டிய காலத்தவர் என்கின்றார். முத்தொள்ளாயிரம், கைக்கிளைமாலை (சிற்றிலக்கிய) வகை தனி இலக்கிய வகைமையாக ஏன் இருக்கக்கூடாது?

இரங்க வருவது மயங்கிய வொருதலை / யியைந்த நெறியது கைக்கிளைமாலை என்று இலக்கணம் கூறுமிடம் இங்கு கவனிப்புக்குரியது. ஆண்பாற் கைக்கிளை, பெண் பாற் கைக்கிளை - இப்படிப் பிற்கால வடிவக்கூறுகள் விவாதப்புள்ளியில் தட்டுப்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. சிற்றிலக்கியத் தாக்கம் மிகுந்த காலத்தெழுந்த இலக்கிய ஆக்கமாக இருக்கலாம். சிற்றிலக்கியக்கூறுகள் மிக்குக் காணப்படுவது பிற்காலத்தைச் சேர்ந்தது எனச்சுட்ட வாய்ப்பு அளிப்பதாயிருக்கிறது.

“வச்சத்தொள்ளாயிரமும் ஒட்டக்கூத்தர் எழுதிய அரும்பைத் தொள்ளாயிரமும் இம் முத்தொள்ளாயிர நெறியே தழுவியுரைக்கப் பட்டனவாமென ஊகிக்கப்படுகின்றன” என்று ரா.ராகவையங்கார் கருத்தையொட்டி யோசிக்கையில், வச்சத் தொள்ளாயிரம் அரும்பைத் தொள்ளாயிரம் ஆகியனவற்றோடு முத்தொள்ளாயிரமும் செவ்வியல் காலத்துக்கு மிகப் பிற்பட்ட காலப்படைப்பு என சிந்திக்கலாம். இ.காளீஸ்வரி ‘பெயர்சுட்டா மரபுவீழ்ந்தது’ எனக் குறிப்பிடுவதிலிருந்து, மரபுநிலை வழுவிய பிந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தது எனக்கருதிப் பார்க்கலாம். பெயர்சுட்டா மரபு மாறினாலும், முற்றிலும் பாடாண் புறப் புறத்திணை வகை என்று ரா.ராகவையங்கார் வரையறுத்தாலும், நேரடிப்பெயர்கள் தவிர்க்கப்பட்டு குலப்பெயர்களே சுட்டப் பட்டிருப்பதால் காலகட்டத்தைத் துல்லியமாகக் கணிப்பதில் இடர்ப்பட வேண்டியிருக்கிறது. தவிரவும் இப்படி, தலைவன் வருகையில் அவனைக் கண்ணாரக் கண்டு காதல் மயக்குறுவது, உலா எனும் சிற்றிலக்கிய அடிப்படை என்பதால், சிற்றிலக்கியக்காலப் படைப்பாக்கம் என்று ஒரு கருதுகோளும் இங்கு கூர்மைப்படுகிறது.

“இந்நூலின் ஆசிரியரைக் குறித்து இரண்டொரு குறிப்புகளே கிடைக்கின்றன. மன்னிய நான்மீன் என்னும் கடவுள் வாழ்த்தினாலும் புகழ் என்ற அதிகாரத்துள் வரும் மடங்கா மயிலூர்தி, செங்கணெடியான் மேல் என்று தொடங்கும் செய்யுட்களாலும் இவர் சைவசமயத்தினாரதல் வேண்டும்.”என பதிப்புகள் தெரிவிக்கும்படி, சைவ சமயச்சார்பு கருதிப் பார்க்கிறபோது, பிற்கால ஆக்கம் என கருத்துருவாகலாம். பேராசிரியர் இவரைப் பிற சான்றோருள் வைத்து எண்ணுகின்றமையால் சங்கத்துச் சான்றோர்கட்குப் பிற்பட்ட காலத்தில் வாழ்ந்தவர் என்பதும் புலனாம்” என வையாபுரிப்பிள்ளை குறிப்பிடுவது இங்கு கவனிக்கத்தக்கது”.

தொகைநூல்களின் வரலாற்றையும், பிறமொழித் தொகைநூல்களின் போக்குகளையும் சுட்டி, புறத்திரட்டு நூலுக்கு வையாபுரிப்பிள்ளை எழுதியுள்ள ஆழமும் விரிவும் கொண்ட பதிப்புரை செவ்வியல் காலத் தொகைநூல்களுக்கும் பிற்காலத் தொகைநூல்களுக்கும் அடிப்படை வேறுபாட்டைச் சுட்டுமிடம் கவனிப்புக்குரியது.

இவ்வாறாகச் செவ்வியல் காலத்துக்குப் பின்வந்தது, முத்தொள்ளாயிரம் என்பதற்கான சான்றுகளைச் சுருக்கித் தொகுத்துக் கொள்ளலாம் :

1.            மிக வெளிப்படையாகவும் துலக்கமாகவும் பெண் காமத்தைப் புலப்படுத்தத் தயங்காமை

2. செவ்வியல் கால சிறுபான்மைக் கைக்கிளை முத்தொள்ளாயிரத்துள் பெரும்பான்மையாக அமைவது...

3.            பின்னர் வந்த சிற்றிலக்கியங்களுக்குக் கால்கோளிடுவது... (பிற்காலச் சிற்றிலக்கியங்களுக்கும் முத்தொள்ளாயிரத்துக்குமான கால தூரம் மிகக் குறைவாயிருக்கலாம் எனும் கருதுகோள் - ஆக, காலத்தால் மிகப்பிற்பட்டது )

4.வெறுமனே மன்னர் மயப்பட்ட மாண்புகளும் மன்னர் மீதான காதலும் (கைக்கிளைக் காதலும்) என, சங்கச் செவ்வியல் மரபு சுருங்கிய நிலையில் இயக்கங் கொள்வது...

5.            ஆறில் ஒன்றன்றோ புரவலர் கொள்ளும் பொருள் எனும் பாடலில் (ஆறில் ஒரு பங்கு வரி என டி.கே.சி குறிக்கும் உரை) வரி சங்கச்செவ்வியல் காலத்தைச்சுட்டாது, பிற்காலத்தையே சுட்டுமாப் போல அமைவது. விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு வரியாக வாங்கப்பட்டது என்ற கருத்து பரவலாகக் கூறப்படுகிறது. ஆனால் சங்க இலக்கியங்களில் இதற்குச் சான்று எதுவுமில்லை. (ஆ.சிவசுப்பிரமணியன், கீற்று.காம், 11 ஆகஸ்ட் 2011)

6.            பாதீடும் உண்டாட்டுமே நமது செவ்வியல்மரபு. ஆனால் அந்தணர் ஆவோடு பொன் பெற்றார் என்ற பாடற்குறிப்பு மூலம் இது, பிற்காலத்திய வழ்வியல் செயன்மையைக் குறித்துக் காட்டி நிற்கிறது.

இப்படிப் பல்லாற்றானும், முத்தொள்ளாயிரம் காலத்தால் பிந்தைய பல பா வடிவங்களுக்கும், பாடுபொருள்களுக்கும் முன்னத்து ஏராய் விளங்கினாலும், அதன் அழகியல், சங்கச்செவ்வியல் காலத்தின் பொருண்மைகள் சுருங்கி, பிந்தைய காலத்தின் பிரதியாக அமைந்தவாறு, முத்தொள்ளாயிரத்தைச் செவ்வியல் நூற்றொகையில் அடக்கமுடியுமா எனும் செம்மாந்த கேள்வி காத்திரமாக எழுகிறது.

செவ்வியல் நூல் தொகையில் திருமுருகாற்றுப்படை சேர்க்கப்பட்டதும் செவ்வியல் நூல் பட்டியலில் இறையனார் களவியல் உரை சேர்க்கப்பட்டதும்

தமிழின் தனித்துவமே சமயச்சார்பற்ற அடையாளம் மட்டுமல்லாது, செம்மொழித் தகுதிப்பாட்டுக்குரிய பண்புக்கூறான காலப் பழமையும் தொன்மை நீட்சியும் சமகாலம் வரையான சீரிளமைத் திறமும் என்று அறிவுலகம் அறியும். செம்மொழித் தமிழ்நூல்கள் பட்டியல் படுத்தும் போது இந்தக் காலப்பழமையைப் போகிறபோக்கில் தட்டி விட்டுப் போவது அறிவு நாணயமற்ற செயல் அல்லவா?

தொன்மையை ஒரு அளவுகோலாகக் கொள்கிறபோது, சங்கஇலக்கியங்களும் தொல்காப்பியமும் இரட்டைக் காப்பியங்களும் என மட்டும் வைத்துக்கொண்டிருந்தால் ஓரளவு சரியான வரையறையாக இருந்திருக்க முடியும். அதிலுமே திருமுருகாற்றுப்படை, ஆசாரக்கோவை இரண்டையும் சங்க இலக்கிய அழகியல் அரசியலோடு முரணுகிற அடிப்படையில் அவைகுறித்த கூர்ந்தாய்வு செய்து வரையறையை மேலும் செழுமைப் படுத்தமுடியும் என்றுதான் தோன்றுகிறது. செயற்கையாக ஒரு அளவுகோல் நீட்டி, முத்தொள்ளாயிரத்தையும் இறையனார் களவியலையும் சேர்ப்பதென்பது காலப்பழமையை முன்னுக்கு நகர்த்திவிடுவதாகும். பிற்காலத்தைய சைவ எழுச்சியைப் புராணீகமாகப் பறைசாற்றி, சங்ககாலத்துக்குள் உட்செரித்துக்கொள்ளும் முயற்சியின் விளைவைக் காத்திரமாக யோசிக்க வேண்டியிருக்கிறது.

காலக் கணிப்பில் திரிபுவாதமும் தொன்மை எனும் தனித்துவ நீர்த்தலும்

காலப்பழமைக் கணிப்பில் இப்படி தாராளம் காட்டுவதால், பவானந்தர் மதிப்பீட்டில் ஏழாம் -எட்டாம் நூற்றாண்டு என்றோ வையாபுரியார் கணிப்பில் 12 ஆம் நூற்றாண்டு என்றோ அமைந்த இறையனார் களவியல் வரை எடுத்துக் கொள்வதால், இதர இந்திய மொழிகள் தமிழுக்கு 12-ஆம் நூற்றாண்டுவரை கணக்கில் கொண்டுவிட்டார்கள், எனவே எமது மொழிகளுக்கும் செம்மொழித் தகுதி வேண்டுமெனக் கோரி வாக்கு வங்கி அரசியலின் அறுவடையைப் பெற்றுக் களித்தனர். இதனால் வலிந்து, தமிழுக்குத் தம் சமய அடையாளத்தை ஏற்றும் முயற்சி ஒருபுறமும் தொன்மை எனும் தனித்துவம் குலைந்து சிறுத்துப்போகச் செய்யும் போக்கு இன்னொருபுறமும் நிகழ்தகவாயிற்று. இதுவும் நிற்க.

ஏலவே, வையாபுரியார், கால ஆராய்ச்சி செய்து சங்கச்செவ்வியல் பத்துப்பாட்டில் திரு முருகாற்றுப்படை காலத்தால் பிந்தையது என்றுரைத்ததையோ, நக்கீரர் நால்வர் என்று எழுதியதையோ சீந்தக்கூடவில்லை என்பதோடு, ஆய்வுக்குக் கணக்கில் கொள்ளாது வாளாவிருந்தனர் என்பதுகூட, இருக்கட்டும். ஒருபடி மேலேபோய், தமிழ்த் துரோகி என்று பட்டம் சூட்டினர்.

ஒருவேளை வையாபுரிப்பிள்ளையின் வரலாற்று மொழியியல் (Historical Linguistics) புலமை, கால ஆராய்ச்சிக்குப் பல்லாற்றானும் உதவியிருக்கக்கூடும். அரிதின் முயன்று, தரவும் ஆய்வுக் கருதுகோளும் காட்டி, “பத்துப்பாட்டுகளும் கீழ்க்காட்டியபடி, காலம் பற்றி மூன்று தொகுதிகளாக அமைகின்றன, என்கிறார்.

1.பொருநராற்றுப்படை, 2.பெரும் பாணாற்றுப்படை, 3.பட்டினப்பாலை, 4.குறிஞ்சிப்பாட்டு, 5.மலைபடுகடாம், 6.மதுரைக்காஞ்சி, 7.நெடுநல்வாடை, 8.முருகாற்றுப்படை

9. முல்லைப்பாட்டு, 10 சிறுபாணாற்றுப்படை” (இலக்கிய தீபம்...)

சைவம் முந்திக்கொண்டுவிட்டதாகக் காட்டவே, ‘முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை’ எனும் தொகைப்பாடல் (முருகு முதலில் அமையுமாறு) யாக்கப்பட்டதா? எனும் கேள்வியும் இங்கு எழுவது மிக நியாயமானது.

கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்

ஆற்றிடைக் காட்சி யுறழத் தோன்றிப்

பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச்

சென்று பயனெதிரச் சொன்ன பக்கமும்

எனும் புறத்திணையியற் சூத்திரத்தைச் சான்று காட்டினால், முருகனிடம் பக்திக்காக ஆற்றுப் படுத்துவது என்பது ஆற்றுப்படை இலக்கணப்படி பொருந்தாது. ஆனால் தொகுப்பித்தோர் / தொகுத்தோர் அரசியலின்படி, சைவம் சங்ககாலத் தொகுப்பிலேயே இருக்கிறது எனும் பெருமிதத்துக்காகவோ, பத்துப்பாட்டில் திருமுருகாற்றுப்படை அதுவும் முதலிலேயே இடம் பெற்று விட்டதோ எனும் ஐயத்திற்கு இடமுள்ளது.

“தொல்காப்பியர் வகுத்த ஆற்றுப்படை இலக்கணத்தில் முருகாற்றுப்படை அடங்காது எனவும் விவாதம் நிகழ்ந்திருத்தல் வேண்டும். நச்சினார்க்கினியர் தமது வழக்கப்படி சொற்களை அலைத்துப் பொருள்கொண்டு இந்நூலும் அடங்குமெனச் சாதித்துள்ளார். ‘கூத்தரும் பாணரும்... சொன்ன பக்கமும்’ எனவும்,‘ஆற்றிடைக் காட்சியுறழத் தோன்றிப் பெற்ற பெருவளம்... சொன்ன பக்கமும் எனவும், இரண்டாகப் பிரித்துக் கூட்டிப் பின்னதற்கு இல்லறத்தைவிட்டுத் துறவறமாகிய நெறியிடத்து நிற்றல் நன்றென்றும், கண்டகாட்சி தீதென்றும் மாறுபடத் தோன்றுகையினாலே தான் இறைவனிடத்துப் பெற்ற கந்தழியாகிய செல்வத்தை யாண்டுந் திரிந்தும் பெறாதார்க்கு இன்னவிடத்தில் சென்றாற் பெறலாமென்று அறிவுறுத்தி, அவரும் ஆண்டுச்சென்று அக் கந்தழியினைப் பெறும்படி, சொன்னபக்கமும் என்று பொருளுரைத்தார். இது பொருளன்று என்பதனைச் சான்றுகாட்டி நிறுவவேண்டா. கூத்தர் முதலாயினோர் நெறியிடையே காட்சி மாறுபாடு தோன்றிஞ் சொன்ன பக்கமும் எனச்சேர்த்தே கொள்ளுதல்வேண்டும். இளம்பூரணர் இவ்வாறே கொண்டார். காட்சி மாறுபடுதலாவது பெருவளம் பெற்று வரும் தமது காட்சியும் வறுமைப்பிணியால் வருந்தித் தள்ளாடிவரும் ஆற்றுப்படுக்கவார் காட்சியும் தம்முன் மாறுபடுதல். இதுவே செம்பொருள். எனவே முருகாற்றுப்படையைத் தொல்காப்பியச் சூத்திரம் கருதிற்றன்றெனலே தகுதி. இதனால் தொல்காப்பியருக்கு யாதோரிழிக்குமின்று என்கிறார், வையாபுரியார்.

கூடவே, ஔவையார் பெயரில் பலர் இருந்ததுபோல் நக்கீரர் பெயரில் நால்வர் இருந்திருக்கிறார்கள். பிற்கால நக்கீரர் ஒருவரைச் சங்ககால நக்கீரராகக் கொண்டு கூட்டியதில் ஏற்பட்ட பிறழ உணர்தலை அவர் சுட்டியுரைக்கிறார். தவிரவும் பத்துப்பாட்டிலிலுள்ள திரு முருகாற்றுப்படை பதினோராம் திருமுறையிலும் எப்படி இடம்பெறும் என்பதுவும் கேள்வி. திருமுறைகள் செவ்வியல் காலத்தால் மிகப் பிந்தையவையல்லவா? அப்படியெனில் பிந்தையகால திருமுறை நூல் ஒன்று, எப்படிச் செவ்வியல் நூற்பட்டியலில் இடம்பெற முடியும்?

தொன்மம் உட்பாய்ந்து மேற்படிந்த வரலாறு (Historical Over lapping & Over rmaping)

திருமுருகாற்றுப்படை தோன்றியதனைக் குறித்து வழங்கப்படும் தொன்மக் கதையாடலை எடுத்துக்காட்டுகிறார் வையாபுரியார். “திருப்பரங்குன்றத்தில் சரவணப் பொய்கையின் கரையில் ஓர் அரசமரம் நின்றது. அதிலுள்ள இலை நீரில் வீழ்ந்தால், மீனாகவும், நிலத்தில் வீழ்ந்தால் பரவையாகவும் மாறும். ஒருகால் ஓர் இலை பாதி கரையிலும் பாதி நீரிலுமாக விழுந்தது. கரையில் விழுந்த பகுதி பறவையாகவும் நீரில் விழுந்தது மீனாகவும் அமைந்த விசித்திரப் பிராணியாக அந்த இலை மாறிற்று. பறவைப் பகுதி ஆகாயத்தில் பறக்கவும், மீன்பகுதி நீருள் மூழ்கவும் முயன்றன. அப்போது அங்கு கரையில் பூசை செய்துகொண்டிருந்த நக்கீரர், ஏகாக்கிர சிந்தனையில் வழுவி இந்த அதிசயத்தைக் கண்ணுற்று இரண்டனையும் விடுவிக்க வந்தனர். சிவபூசையில் வழுவிய காரணத்தால் ஒரு பிரம்ம ராட்சசு நக்கீரரைப் பிடித்துக்கொண்டுபோய் ஒரு குகையில் அடைத்து விட்டது. அக்குகையில் இவரையும் சேர்த்து ஆயிரம் பேராகவே அவ்வளவு பேரையும் உண்டுவிட எண்ணி அப் பிரம ராட்சசு நீராடி வருவதற்குப் போயிற்று. அப்போது, நக்கீரர் முருகாற்றுப் படையைப்பாட, முருகப்பிரான் அவரைக் குகையினின்றும் விடுவித்தனர். இந்நூலை ஓதுவாருக்கு வேண்டும் வரம் கொடுப்பேம் என்றும் முருகப் பெருமான் அருள் செய்தனர்.”

பிற்காலத்து நக்கீரர் எழுதியதை சங்ககால நக்கீரர் எழுதியதாகத் தொகுத்தோர் / தொகுப்பித்தோர் பிறழ உணர்ந்திருக்கவோ அடையாள மாற்றீடு கருதியோ முரு,கு இடம் பெற்றிருக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது. பெயர்க்குழப்பமும் காலக்குழப்பமும் திரிபு உணர்த்தல்களில் முடிந்திருக்கலாம். நக்கீரர் நால்வர் என்பதற்கும் திருமுருகாற்றுப் படை எழுதிய நக்கீரரும் களவியல் உரைகாரர் நக்கீரரும் வேறானோர் என்பதற்கும் வையாபுரியார் கொடுக்கின்ற ஆய்வுமுடிபு (இலக்கிய தீபம்,....,பக் 41) இது.

tamil literature periodஇப்பார்வை மிக முக்கியமானதும் சிந்திக்கத்தக்கதும் கனக்கில் கொள்ளவேண்டியதும் ஆகும்.

இந்த அடையாள மாற்று அரசியற் செயற்பாட்டினது ஒரு கூறாகவே, இறையனார் களவியல் யாக்கப்பட்டது என்பது, பலரும் ஒப்புக்கொள்வதுதான். அகப்பொருள் இலக்கணம் கூறும் இறையனார் அகப்பொருள் நூலை, மதுரை ஆலவாய்க் கடவுள் இறையனார் இயற்றினார் என்று அதன் நக்கீரர் உரை கூறுகிறது. இறையனார் என்னும் பெயர் கொண்ட ஒருவர் இயற்றி இருக்கவேண்டும், அல்லது இந்த நூலை இயற்றியவர் யார் என்று தெரியாத நிலையில் இறையனார் இயற்றினார் எனக் குறிப்பிட்டிருக்க வேண்டும். இந்த நூல் கி.பி. ஏழாம் நூற்றாண்டு வாக்கில் தோன்றியிருக்கலாம். இந்த நூலுக்கு உரைஎழுதிய நக்கீரர் தமது உரைக்கு மேற்கோளாக பாண்டிக் கோவை நூலிலுள்ள பாடல்களைத் தந்துள்ளார். பாண்டிக்கோவை கி.பி. எட்டாம் நூற்றாண்டு நூல். கட்டளைக் கலித்துறை இலக்கணம் கொண்ட பாடல்கள் முதலில் தோன்றிய காலம் என்பார், பவானந்தர் (கழகப்பதிப்பு) தமது இறையனார் களவியல் நூல்முகப்பில். இப்படியிருக்க, வையாபுரியார் இது 12-ஆம் நூற்றாண்டினதாக இருக்க வேண்டுமென்பார். இறையனார் களவியலை செவ்வியல் நூல்கள் பட்டியலில் எப்படி வரவு வைத்தார்கள் என்பதுதான் மிகப்பெரும் கேள்வி.

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தின் 7-ஆம் பக்கம் அறுதியிட்டுரைப்பதுபோல, தவறான சித்திரத்தை கற்போர் மனதில் விதைக்கிறது. மிகப் பிற்காலம் அதாவது 12-ஆம் நூற்றாண்டு இறையனார் அகப்பொருள் நூலை, “சங்ககாலத்தில் எழுந்த இறையனார் அகப்பொருளுக்கு சங்கப்புலவர் நக்கீரரே முதன்முதலாக உரை கூறினாரென்றும் அவ்வுரை பல ஆண்டுகளாக கர்ண பரம்பரையாக வந்த பின்னரே ஏட்டு வடிவத்தில் அமைந்தது என்றும் தெரிகின்றது.” இதன் மூலம் இறையனார் சங்க நூல் எனவும் உரை எழுதிய நக்கீரர் சங்ககால நக்கீரர் எனவும் ஒருசேர முன்வைப்பதை கவனிக்கவேண்டும்.

தொன்மம் உட்பாய்ந்து மேற்படிந்த வரலாறு (Historical Over lapping & over mapping)

ஞ்அரசனும் புடைபடக் கவன்று “ என்னை? எழுத்துஞ் சொல்லும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட்டன்றே! பொருளதிகாரம் பெறேமெனில் இவை பெற்றும் பெற்றிலேம் “எனச்சொல்லா நிற்ப மதுரை ஆலவாயில் அழனிறக்கடவுள் சிந்திப்பான்: “ என்னை பாவம் ! அரசற்குக் கவற்சி பெரிதாயிற்று. அதுதான் ஞானத்திடையதாகலான், யாம் அதனைத் தீர்க்கற் பாலம்”. என்று இவ்வறுபது சூத்திரத்தையுஞ் செய்து மூன்று செப்பிதகழத்தெழுதிப் பீடத்தின் கீழிட்டான்ஞ் அரசன் புகுதருகவென்று பார்ப்பானைக் கூவச் சென்றுபுக்குக் காட்டக் கொண்டு நோக்கி, இது பொருளதிகாரம்! நம்பெருமான் நமது இடுக்கண் கண்டு அருளிச்செய்த பொருளதிகாரம்! இதனைக்கொண்டுபோய்ப் பொருள்காண்மின்” என களவியல் உரை தோற்றச் சரடு தொடர்கிறது .

அவர்கள் அதனைக் கொண்டுபோய் உரை எழுத அக்காலத்தே கோனார் தமிழ் உரை, தென்றல் தமிழ் உரை, சாமி கைடு, சி.என்.சி.கைடு, வெற்றி நோட்ஸ் இன்னபிற உரை போடும் கம்பெனி (பாண்டிச்சேரி மொழி அறிஞர்கள் கும்பினி என்று வாசிக்கவும்) வகையறாக்கள் இன்மையான் அவரவரும் என்னுரை சிறந்தது. இல்லை என்னுரைதான் சிறந்தது என்று "முடிபொருங்கு ஒத்துப்போகாமையான் மீண்டும் பஞ்சாயத்து கடவுளுக்கே” ஆலவாயி றவிர்சடைக் கடவுள் எடுத்துச்செல்லப்பட்டதாகவும் சரடுநீள, கடவுளும், “இவ்வூர் உப்பூரிக்குடிகிழார் மகனாவான் உருத்திர சன்மன் என்பான் பைங்கண்ணன், புன்மயிரன் ஐயாட்டைப் பிராயத்தான் ஒரு மூங்கைப் பிராயத்தான் உளன்; அவனை அன்னனென்றிகழாது கொண்டுபோந்து ஆசன மேலிரீஇக் கீழிருந்து சூத்திரப் பொருளுரைத்தாற் கண்ணீர் வார்த்து மெய்ம்மயிர் சிலிர்க்கும் மெய்யாயின உரை கேட்ட விடத்து; மெய்யல்லா உரை கேட்டவிடத்து வாளாவிருக்கும் அவன் குமாரதெய்வம் அங்கோர் சாபத்தினார் றோன்றினான்” என்றுரைக்க அப்படியே ஏற்பிசைவு பெற்றதாக நீள்கிறது புராணீகம். இப்புராணப் பின்புலத்தைச் சிறிதும் அறிவியல் மனப்பான்மை இன்றி இப்படித்தான் எங்கள் மொழி உருவாகி வளர்ந்தது வளர்ந்தபிறகு உரைகள் போட்டோம் என்றெல்லாம் சொன்னால் உலக மொழி அறிஞர்கள் மத்தியில் நமக்கு என்ன மதிப்பு மரியாதைகள் கிடைக்கும்?

கிஞ்சிற்றும் தர்க்க நியாயங்களில்லாத இந்தப் புராணீகப் பின்புலத்தை மட்டும் கணக்கில் கொண்டு செவ்வியல் பட்டியலில் சேர்த்துவிட்டால் அது எப்படிச் சரியாக இருக்கும்? உண்மையான நம்பகமான நமது தொன்மை வரலாற்றாய்வு ஏன் உணர்ச்சித்தளத்தில் இருட்டடிப்பும் வெளிச்சத்தை மறைக்கும் வேலைகளும் கொண்டதாக மாறவேண்டும்?

எனவே பதினெண் மேல்கணக்கு என்பது பதினேழ் மேல்கணக்கு என்றானாலும் பதினெண் கீழ்க்கணக்கு என்பது பதினேழ் கீழ்க்கணக்கு என்றானாலும் எண்ணிக்கை குறித்து ஒன்றும் பெரிதும் அலட்டிக் கொள்ளாமல் காலக்கணிப்பு, புராணிக நீக்கம் இவற்றை ஒழுங்குசெய்து, செவ்வியல் நூற்றொகையை கூர்ந்தாய்ந்து திருமுருகாற்றுப்படை, ஆசாரக்கோவை நீங்கலாகவும் 41 செம்மொழி நூற்பட்டியலை மேற்சுட்டிய இவற்றோடு கூட்டி இறையனார் களவியல், முத்தொள்ளாயிரம் நீங்கலாகவும் 37 செம்மொழி என்றவாறு காலப்பழமை, சமயச் சார்பின்மை, எனும் சங்கச் செவ்வியலின் இயற்பண்பு அடிப்படையில் மறுவரையறை செய்வதுவே ஆய்வு அறமாக இருக்க முடியும் என்று தோன்றுகிறது.

உசாத்துணை:

1.            ஆசாரக்கோவை, செல்வக்கேசவராயர், சென்னை, 1916

2.            ஆசாரக்கோவை, சாமிசிதம்பரனார், வலைத்தமிழ்.காம்

3.            ராகவையங்கார். ரா,முத்தொள்ளாயிரம், செந்தமிழ்ப்பிரசுரம், மதுரைத் தமிழ்ச்சங்கமுத்திரா சாலை, 1935.

4.            டி.கே.சிதம்பரநாதர், முத்தொள்ளாயிரம், பாரி நிலையம், சென்னை, 1943

5.            சபாஜெயராசா,அழகியல், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், இலங்கை,1989

6.            ஆவ்னர்சிஸ், (மொ.பெ : பொன்னீலன்) மார்க்சிய அழகியலின் அடிப்படைகள், NCBH,

7.            சபா ஜெயராசா, மார்க்சிய உளவியலும் அழகியலும், இலங்கை முற்போக்குக் கலை இலக்கிய மன்றம் வெளியீடு, இலங்கை , 21-03-2010

8.            தெட்சணாமூர்த்தி.அ, இலக்கியவரலாறு, தமிழ் இணையக் கல்விக் கழகம், சென்னை.

9.            மாணிக்கவாசகன்,முத்தொள்ளாயிர விளக்கவுரை, உமா பதிப்பகம், சென்னை, 2016,

10.         இளங்கோ. நா, முத்தொள்ளாயிரம் சில குறிப்புகள், வலைப்பூ பதிவு

11.         முனைவர் கே.எஸ்.கோபிநாத் உரையாடல், நாள்: 08-03-2021

12.         காளீஸ்வரி. இ, ‘செந்தமிழ்’ இதழ், மதுரை, அக்டோபர், 2014

13.         வையாபுரிப்பிள்ளை,புறத்திரட்டு,சென்னைப் பல்கலைக்கழகம், முதல் பதிப்பு 1938

14.         மணிவேல்.மு,கைக்கிளைக்காதல், மதுரை காமராசர் பல்கலைக்கழக வெளியீடு,1992

15.         ஆ.சிவசுப்பிரமணியன், கீற்று.காம்,11 ஆகஸ்ட் 2011

- பேரா. தெ.வெற்றிச்செல்வன், அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

Pin It