warதென் ஆழி பொங்கும் வரை எங்கள்
நெடியோன் ஆண்ட கண்டம் அது
ஆழிப் பேரலையால் அண்டம் குலுங்க
அடியோடு போனதெங்கள் குமரிக்கண்டம்
ஆழி தின்றது போக நின்றது எங்கள்
ஏழ்பனை நாடு; இன்றைய ஈழம்
அன்றே போயிருக்கலாம் அன்றுமுதல்
இன்றுவரை அழுகையே எங்கள் மிச்சம்
நிலந்தருதிருவிற் பாண்டியன் முதல்
குலோத்துங்கன் எல்லாளன் ஈறாக
பராந்தகன் அருள்மொழி பண்டாரகன் என்றென்
பாட்டன் முப்பாட்டன் ஆண்ட தேசம் அது!
குண்டு போட்டுக் கொலை செய்யவோ எங்கள்
பாரதம் புத்தம் போதித்தது? அய்யகோ!!

சரிசெய்திருப்பார் தாழ்ந்த தமிழ் ஈழம் தலைநிமிர
தென்னாடாண்ட இராஜராஜன் இருந்திருந்தால்
சந்தித்திருப்பான் தீண்டிய பகையை களமுனையில்
தீர்த்திருப்பான் அவர் கணக்கை வாள்முனையில்
புத்தன் காந்தி இன்றிருந்தால் புரிந்திருப்பார்
போதனை உண்மைகள் இவர் கேளார் பொய்யரென்று!
புதிய போரிடும் உத்திகள் தான் கொண்டு பொசுக்குக இந்த
ஈனமில்லா மடையர்களை! என்றிருப்பார்
தமிழரை நசுக்கும் நயவஞ்சக நரிகளின்
தோலுரித்திருப்பார்; எம்மக்கள் துயர் துடைத்திருப்பார்
தீர்க்கதரிசிகள் யாரும் இன்றில்லை
தவிக்கும் எம்மக்கள் சோகம் தீர்க்க முடியவில்லை

செல்லாக் காசாய் நினைப்போர்க்குச் சின்னத்தம்பி!
நம் சீற்றத்தை நிரூபிப்போம்; களமாடு சின்னத்தம்பி!
அடிமை கொள்ள எண்ணிவரும் வெம்பகையை நல்லதங்கா!
அடியோடு வேரறுப்போம் செந்தனலே! நல்லதங்கா!

வஞ்சினம் கொண்டோம்நாம் வருஞ்சமரை வெற்றிகொள்வோம்
விளையட்டும் தமிழீழம்! பரவட்டும் உலகமைதி!!

வெட்ட வெட்ட தளையும் எங்கள் வேங்கைமரம்
வீறுகொண்டு மலரும் எங்கள் தமிழீழம்
தடுக்க நினைக்காதீர் தருப்பைகளே!
ஓடிப்போ! உன்னுயிரும் முக்கியம்தான் எங்களுக்கு

-சிவராசு இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

Pin It