இப்புத்தகம் பேராசிரியர் தோழர் நா.தர்மராஜன் எம்.ஏ அவர்களால் எழுதப்பட்டது. 1982 ஆம் ஆண்டில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் முன்னேற்றப் பதிப்பகத்தின் தமிழ்ப்பிரிவில் மொழி பெயர்ப்பாளராகப் பணிபுரிந்தவர். அலைகள் வெளியீட்டகம் பதிப்பித்துள்ள புத்தகம் இது.
நாட்டை ஆளுவோர் மீது அதிருப்தி மிகுதியாகும்போது பொதுமக்களில் ஒருபிரிவினர் ஆட்சியை இராணுவத்தின் கையில் ஒப்படைக்க வேண்டும் என சொல்வதை பலரும் கேட்டிருக்கலாம். இது எந்த வகையான மனநிலை என்றால், ‘இராணுவம் என்பது ஆயுத பலத்தால் தீயோரை ஒழித்து, நல்லோரைக் காக்கும்” என்ற மக்கள் மனங்களில் பதிந்துவிட்ட பாமர எண்ணங்களே இதற்கு காரணம்.
வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்றால் அந்த வல்லான் எப்படிப்பட்டவன் என்பதற்கும் பதில் வேண்டும்.
மக்கள் இராணுவம் என்ற சொல் சென்ற நூற்றாண்டில் உருவான சமதர்ம சமுதாய நாடுகளில்தான் உருவாக்கப்பட்டது.
இராணுவத்தைப் பற்றிய சில மாயையான கருத்துகளுக்கு இப்புத்தகம் விடையாக அமையும்.
மக்கள் நல இயக்கங்களை ஒடுக்குவதில் இந்தோனேஷியா, சிலி, ஸ்பெயின்,போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளின் இராணுவங்கள் செயல்பட்ட விதம் இப்புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆசியா, ஆப்பிரிக்கா, தென்அமெரிக்க கண்டங்களில் இராணுவப் புரட்சிகள் மூலம் இராணுவத் தலைமை ஜெனரல்கள் ஆட்சியைக் கைப்பற்றுவது கடந்த காலகட்டங்களில் நடைபெற்று வந்துள்ளது.
எல்லா இராணுவப் புரட்சிகளும் ஒரே விதமானவை அல்ல. அவற்றின் நோக்கங்களும் ஒரே மாதிரியாக இருக்கவில்லை. சில இராணுவப் புரட்சிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை அகற்றின. சில இராணுவ சர்வாதிகாரியை அகற்றிவிட்டு இன்னொருவரிடம் ஆட்சியைக் கொடுத்தன. சில இராணுவப்புரட்சிகள் நாட்டு மக்களின் முன்னைக் காட்டிலும் மோசமான சூழ்நிலையில் தள்ளின.
அரசியல் அதிகாரம் என்னும் மொத்த அமைப்பில் இராணுவத்தின் பங்கு என்ன என்பதைப் புரிந்து கொள்வதற்கு முதலில் அரசியல் அதிகாரம் என்றால் என்ன என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இராணுவம் என்பது அரசின் ஒடுக்குமுறைக் கருவியா அல்லது நாட்டு மக்களின் சிந்தனையோட்டம், நாட்டின் நலனுக்கான மக்கள் கூட்டமைப்பின் செயல்பாடுகள் இராணுவத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பது போன்ற கேள்விகளும் எழுகின்றன.
இராணுவத்தில் உள்ள போர்வீரர்கள் பெரும்பாலும் சாதாரணமான ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பத்திரிக்கைகளைப் படிக்கிறார்கள். அரசியல் பிரச்சனைகளை விவாதிக்கிறார்கள். விடுமுறையில் ஊருக்குத் திரும்பும்போது, ஆளும் அரசாங்கங்களின் மக்களை வதைக்கும் நடவடிக்கைகள், வரிவிதிப்பு மற்றும் சட்டதிட்டங்களால் தன் ஊர் மக்கள் படும் துன்பங்களை நேரடியாகப் பார்க்கிறார்கள். எனவே அவர்களிடம் மாற்றம் வேண்டும் என்ற உணர்ச்சி படிப்படியாக ஏற்படுகிறது.
பெரு, உருகுவே, பொலிவியா ஆகிய நாடுகளில் புரட்சிக்காரர்கள் தலைமை தாங்கிய கொரில்லா படைகளுக்கு எதிராக இராணுவம் பயன்படுத்தப்பட்டது. பெருவில் இராணுவ அதிகாரிகளுக்கு நாட்டின் அரசியல் பொருளாதார நிலைகளை விளக்குவதற்கு அரசாங்கம் வகுப்புகளை நடத்தியது. ஆட்சியாளர்களை ஆதரிப்பதற்கு வகுப்புகள் பயன்படும் என்று அரசாங்கம் நினைத்தது. ஆனால் விளைவு ஆளும் அரசின் எண்ணத்திற்கு எதிர்மாறாக இருந்தது.
இராணுவ அதிகாரிகள் மற்றும் போர்வீரர்கள் வெறும் இயந்திரங்கள் அல்ல. பொதுமக்களை பாதித்த பிரச்சனைகளைப் பற்றி அவர்களும் சிந்தனை செய்கிறார்கள். யாருக்கான நாம் இருக்கிறோம். எதற்காக இந்த எல்லையில் நிற்கிறோம் என்ற கேள்விகள்அவர்கள் நெஞ்சிலும் எழும். ஆகவே இராணுவம் மக்களுக்கு எதிரி கிடையாது.
இராணுவம் என்பது சமூகத்திலிருந்து தனியாகவுள்ள அமைப்பு கிடையாது. பொதுமக்களுடைய அரசியல் சிந்தனைகள் இராணுவத்தின் மீது கட்டாயம் தாக்கம் செலுத்தும்.
கடந்த சில ஆண்டுகளில் நமது அண்டை நாடுகளான இலங்கை, பங்களாதேஷ் மற்றும் நேபாளத்தில் ஆளும் அரசாங்கங்கள் பொதுமக்களின் எழுச்சியால் விரட்டப்பட்டுள்ளது. இராணுவப் புரட்சியால் அல்ல. ஆனால் அந்நாடுகளில் பொதுமக்களின் புரட்சியைத் தடுக்க இராணுவம் அடக்குமுறைகளில் ஈடுபடவில்லை என்பதும் உண்மை.
1999 அக்டோபரில் துவங்கி பாகிஸ்தான் இராணுவ ஜெனரல் பர்வேஷ் முசரப் தலைமையில் இராணுவ ஆட்சி நடைபெற்றது என்பதும் வரலாறு.
தற்போது காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் பல்லாயிரக்கணக்கான மக்களை அமெரிக்க ஆயுதங்களைக் கொண்டு கொன்று குவித்து வருவதை உலகமே வேடிக்கை பார்க்கும் 21 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நாம்.
ஆனால் அதில் ஒரு வேறுபாடாக அமெரிக்காவின் உள்ளிருந்தே சில எதிர்க்குரல்களும் ஒலிக்கத்தான் செய்கின்றன. ஓய்வுபெற்ற கிரீன் பெரெட்(சிறப்புப்படை) வீரரும், தகவல் வெளியீட்டாளருமான ஆண்டனி அய்லர் மற்றும் ஜோசபின் கில்போ ஆகியோர் அந்நாட்டின் வெளியுறத்துறை தொடர்பாக நடைபெற்ற செனட் உறுப்பினர்கள் கூட்டத்தில் ‘அமெரிக்காவின் செனட் உறுப்பினர்கள் இஸ்ரேல் நடத்திவரும் இனப்படுகொலைக்கு ஆதரவாக உள்ளனர்” என்று முழக்கமிட்டுள்ளனர்.
ஆக இராணுவமும், இராணுவ வீரர்களும் இயந்திரங்கள் அல்ல. அவர்களுக்கும் மக்களின் நிலைகுறித்த எண்ணங்கள் உள்ளது. நாட்டு மக்களின் அரசியல் சிந்தனைகளே இராணுவத்தை வழிநடத்தும் அளவுக்கு எதிர்காலம் அமைய வேண்டும்.
- சுடலைமாடன்