tamilnathy novelஇந்திய ராணுவம் அமைதிப்படை என்ற பெயரில் இலங்கையில் சென்று ஈழ மக்களுக்கு நடத்திய கொடுமைகளை ஆவணமாகப் பதிவு செய்கிறது "பார்த்தீனியம்" என்னும் இந்த நாவல். அமைதியை ஏற்படுத்துகிறோம் என்ற பெயரில் அங்கு சென்ற இந்திய ராணுவம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டு இலங்கை ராணுவத்துடன் சேர்ந்து விடுதலைப் புலிகளை தேடித் தேடி வேட்டை ஆடுகிறார்கள். குற்றவாளிக்கு தண்டனை வழங்குவதற்குப் பதிலாக நியாயத்தின் பக்கம் நின்று கேள்வி கேட்டவனுக்கு தண்டனை வழங்குவதன் முறையைக் கையாள்கிறார்கள். தமிழர்களின் வீடுகளில் புகுந்து பெண்களை வன்புணர்வு செய்கிறார்கள். இந்திய ராணுவம் செய்தது துரோகம், வஞ்சகம், போலித்தனம், ஏமாற்றுவேலை, கடைந்தெடுத்த பித்தலாட்டம்.

வானதி-வசந்தன் இருவரும் பள்ளிப் பருவத்தில் இருந்து காதலர்கள். சிங்களர்களின் இன-அழிப்பு முயற்சியால் கோபமுற்ற வசந்தன் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்கிறான். “1983ஆம் ஆண்டு கலவரத்தில் சிங்களவர்களின் வாளுக்கும் நெருப்புக்கும் பயந்து ஓடினோம். 1986ஆம் ஆண்டுஆபரேஷன் லிபரேசன் நடவடிக்கையில் இலங்கை ராணுவத்தின் குண்டுவீச்சுக்குப் பயந்து ஓடினோம். 1987ஆம் ஆண்டு இந்திய அமைதிப் படையினர் துரத்த அகதியளாகி ஊரைவிட்டே ஓடுகிறோம்" என்று ஆதங்கப்படுகிறாள் வானதி. இவர்களின் காதலும் - எண்பதுகளில் இலங்கையில் நடந்த நிகழ்வுகளும்தான் இந்த நாவல்.

இந்தியா எவ்வளவு பெரிய ஜனநாயக நாடு! தாங்கள் செய்கிற அக்கிரமங்கள் வெளியில் வரக்கூடாது என்பதற்காக முதலில் செய்தி ஊடகங்களின் வாயை மூடுகிறார்கள். யாழ்ப்பாண நூலகத்தை தீயிட்டு கொளுத்திய சிங்கள இனவாதிகளுக்கு, யூதர்களால் எழுதப்பட்ட நூலை எரித்து "யூத அறிவு ஜீவித்தனத்தின் மரண"த்தை கொண்டாடிய ஹிட்லரின் விசுவாசிகளுக்கும், அச்சு இயந்திரங்களைத் தகர்த்து, ஊடகவியலாளர்களைக் கைது செய்து மக்களை செய்திக் குருடர்களாக்கிய இந்தியப் படைக்கும் இடையில் எந்த வித்தியாசத்தையும் கண்டோரில்லை.

இயக்கங்களுக்கு இடையே இருந்த முரண்பாடுகள், நிர்க்கதியான குழந்தைகள், பெண் போராளிகளின் நிலைமை, சொந்த நாட்டிலே அகதிகளான மக்கள் என ஈழ மக்களின் போராட்ட வாழ்வை மிக அழுத்தமாகவும் துல்லியமாகவும் நேர்மையாகவும் பதிவுசெய்த ஆசிரியர் தமிழ்நதி பாராட்டப்பட வேண்டியவர்.

தலைப்பு: பார்த்தீனியம்
ஆசிரியர்: தமிழ்நதி
பதிப்பகம்: நற்றிணை
பக்கங்கள்: 512
விலை: ரூ. 450

- தங்க‌.சத்தியமூர்த்தி

Pin It