தன் வரலாற்றைச் சமூக வரலாறாக மாற்றியவர் புலவர் கு.கலியபெருமாள்.  ‘மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்’ (2006) இவரின் தன் வரலாற்றுச் சுருக்கமாக வெளிவந்துள்ளது.

கு.கலியபெருமாள் 04.03.1924ல் அஞ்சலை - குஞ்சான் ஆகியோருக்கு மகனாகப் பிறக்கிறார். தென்னாற்காடு (கடலூர்) மாவட்டம், விருத்தாச்சலம் வட்டம், பெண்ணாடம் அருகிலுள்ள சௌந்தர சோழபுரம் எனும் ஊர் இவருடையது. இவரின் குடும்பம் ஓரளவு வசதி வாய்ப்பும் ஆள்பலமும் மிக்கது.

pulavar kaliyaperumal bookஒன்னரை வயதிலேயே தாயை இழந்து அத்தையின் வளர்ப்பிலும், ஊர் அம்மைகள் உபசரிப்பிலும் வளர்கிறார். சோழபுரத்தில் தொடக்கக் கல்வியும், பெண்ணாடம் நடுநிலைப் பள்ளியில் அடுத்தும் பயில்கிறார். 1942ஆம் ஆண்டு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெறுகிறார்.

பின்னர், மயிலம் சிவஞான பாலையா சுவாமிகள் மடத்தினர் நடத்திய கல்லூரியில் புதுமுக வகுப்பில் சேர்கிறார். வீர சைவ முறைப்படி இம்மடமும் கல்லூரியும் நடந்தன. 1943ல் தேர்வு எழுதிட திருச்சிராப்பள்ளி செல்கிறார். அங்கு தந்தை பெரியார் இயக்கத்தவர் தொடர்பு கிடைக்கிறது. கல்லூரி நடைமுறைகளில் ஆன்மீகம், மாணவ வேறுபாடுகள் ஆகியவை குறித்து இவர் தனி நிலை எடுக்கிறார். இது மயிலம் கல்லூரியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 1945ஆம் ஆண்டு இளம் புலவர் தேர்வில் தேர்ச்சி பெறுகிறார். தொடர்ந்து, அங்கேயே பயிலக் கல்லூரி முதல்வர் வலியுறுத்தியும், மாற்றுச் சான்றிதழ் பெற்றுக்கொண்டு திருவையாறு அரசர் கல்லூரியில் சேர்கிறார். இங்கு பார்ப்பன ஆதிக்கம் நிலவுகிறது. இந்நிலையில், ‘புத்துலகச் சிற்பகம்’ எனும் மாணவர்  அமைப்பு உருவாக்கப்படுகிறது. இதன் தலைவராக கலியபெருமாள் ஆகிறார். இதிலிருந்து இவரின் சமுதாயப் பொதுவாழ்வு தொடங்குகிறது எனலாம். கல்லூரியில் சமூக நீதிக்காகப் பல போராட்டங்களை முன் எடுக்கிறார்கள். 1946இல் திருவையாற்றில் தந்தை பெரியாரை அழைத்துக் கூட்டம் நடத்துகிறார். இதில் நாவலர் நெடுஞ்செழியன், கி.வீரமணி ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

1949ஆம் ஆண்டில் திருவட்டத்துறையைச் சேர்ந்த இராமசாமி அவர்களின் மகள் வாலாம்பாள் அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார். இது விருப்பத் திருமணம். பின்னர் பொன்பரப்பி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்தார். 1951ஆம் ஆண்டு சென்னை சைதாப்பேட்டை  ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து ஆசிரியர் பயிற்சியை முடித்தார். பொன்பரப்பியிலிருந்து புதுக்கோட்டை மாவட்டம் அரிமழம் எனும் ஊருக்குப் பணியிட மாற்றம் தந்தார்கள். எனவே சமுதாய, அரசியல் ஆர்வம் காரணமாக ஆசிரியர் பணியிலிருந்து விலகி, விவசாயத்தில் ஈடுபட்டார் (1952).

திருவையாறு கல்லூரியில் பயின்ற போதே பொதுவுடைமை இயக்கம், விவசாயிகள் போராட்டம், நில உச்சவரம்புப் போராட்டம் ஆகியவை இவருக்கு அறிமுகமாயின. இரணியன், சிவராமன், களப்பால் குப்பு போன்றவர்களின் தியாக வரலாற்றையும் உள்வாங்கி இருந்தார்.

இந்தப் பின்புலத்தில், 1954ஆம் ஆண்டில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் புலவர் கலியபெருமாள் இணைகிறார். பல மக்கள் போராட்டங்களில் பங்கேற்கிறார். 1962ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விருதாச்சலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். 1964ஆம் ஆண்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டது. இத்தருணத்தில், தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தீவிரமானது. இதில் பங்கேற்று புலவர் பதினைந்து நாட்கள் சிறையில் இருக்கிறார்.

1965ஆம் ஆண்டு பெண்ணாடம் சர்க்கரை ஆலை தொழிற்சங்கத் தலைவராகிறார். தொடர்ந்து தொழிலாளர், விவசாயிகள் உரிமைப் போராட்டங்களில் முன்னணி வகிக்கிறார். இச்சமயம் சி.பி.ஐ. (எம்) கட்சித் தொடர்பில் இருக்கிறார். அதுவும் சிறிது காலத்தில் முறிகிறது. கட்சியிலிருந்து நீக்கப்படுகிறார்.

1968ஆம் ஆண்டு நக்சல் பாரி இயக்கத்தில் புலவர் கலியபெருமாள் இணைகிறார். 1969இல் முதல் மாநில மாநாடு நடக்கிறது. நக்சல் பாரி இயக்கத் தலைவர் சாருமஜும்தார் வருகையும், வழிகாட்டலும் நடக்கின்றன. பல்வேறு தீவிர நடவடிக்கைகள் திட்டமிடப்படுகின்றன. நிலவுடைமைக்கு எதிரான உழைக்கும் மக்களின் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

1970ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் நாள் புலவரின் தென்னந்தோப்பில் வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த சர்ச்சில், கணேசன், காணியப்பன் ஆகிய மூவரும் வெடி விபத்தில் மரணிக்கிறார்கள். அப்போது புலவரும் காயம் பட்டார். சம்பவம் வெளியில் தெரிந்து பரபரப்பானது. காவல்துறை வேட்டை நடந்தது. தொடர்ந்து புலவர் தலைமறைவானார். குடும்பம் அலைக்கழிப்புக்கு உள்ளானது. தலைமறைவில் இயக்கப் பணி தொடர்ந்தது. தோழர் தமிழரசன் அறிமுகமாகிறார். அழித்தொழிப்புகள் பல நடைபெறுகின்றன.

1971 ஏப்ரல் 30ல் புலவர் கலியபெருமாள் கைது செய்யப்படுகிறார். சிறையிலும், நீதிமன்றத்திலும் போராட்டங்கள் தொடர்கின்றன. குடும்பமே சிறைப்படுத்தப் படுகின்றது்.

 1972ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் நாள் புலவர் கலியபெருமாள், அவரது மூத்த மகன் வள்ளுவன் ஆகிய இருவருக்கும் மரண தண்டனை எனத் தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் புலவரின் மைத்துனி (மனைவியின் அக்கா) அனந்தநாயகி, புலவரின் இளைய மகன் நம்பியார், தம்பி மாசிலாமணி, ராஜமாணிக்கம், ஆறுமுகம் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

சிறைக்குள் மனித உரிமை சார்ந்து பல போராட்டங்கள் புலவரால் முன்னெடுக்கப்படுகின்றன. இவரின் மூத்த மகள் தமிழரசி - அமிர்தலிங்கம் திருமணமும் சிறையில் வைத்தே நடக்கிறது. மரண தண்டனை ரத்து செய்ய இயக்கம் நடத்தப்படுகிறது. பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டோர் சிறைக்கு வருவது, அவசர நிலைக்கால நிலைமைகள், தமிழரசன் வருகை, தப்பிக்க முயற்சி, சிறைக்குள் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உட்பட பலருடன் சந்திப்பு, பரோலில் விடுதலை ஆவது, பிள்ளைகளின் திருமணம், அரசியல் மாறுபாடு - தேசிய விடுதலை, மா. இலெ. கட்சியிலிருந்து நீக்கம், பிற இயக்கங்கள், 1987 - 89 கொடைக்கானல் தொலைக்காட்சி நிலையத் தகர்ப்பு, மீண்டும் தலைமறைவு, தமிழர் தேசிய இயக்கம் என இவரின் வாழ்வு நிகழ்நிரல் ஓட்டமாக இதில் உள்ளது. 16.05.2007இல் புலவர் கு. கலியபெருமாள் இயற்கையில் கலந்தார்.

‘விடுதலை’ என்பதன் குறியீடாக வாழ்ந்தவர் புலவர்.எண்பத்து மூன்று ஆண்டுகள் வாழ்ந்தவர். சுமார் அறுபதாண்டுகள் மக்களுக்காக உழைத்தவர். சாதி, வர்க்கம், சுரண்டல் கொடுமைகளுக்கு எதிரான ‘போராட்டம்’ என்பதை வாழ்முறையாக வரித்துக் கொண்டவர். தான் மட்டுமல்ல; தன் குடும்பத்தினர், உறவினர்கள் என எல்லோரையும் சிறைக் கொடுமைகளுக்கு ஒப்புக் கொடுத்தவர். செயலும், சிந்தனையும் இணைந்து நின்றவர். மக்கள் இயக்கங்களை அமைப்பதில் வெற்றி பெற்றவர். இந்தச் சிறு நூலில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவில்லை. அன்றையச் சமூகச் சூழலில் தான் மேற்கொண்ட அரசியல் போராட்டத்தின் சில சுவடுகளை இதில் பதிவு செய்துள்ளார்.

ஊர்ப்பாலில் வளர்ந்தேன்

புலவர் கலியபெருமாள் கைக்குழந்தையாக இருக்கும் போதே தாயை இழந்தார். ஊரில் உள்ளவர்கள் தாய்ப்பால் ஊட்டி அவரை வளர்த்தார்கள். இந்த நன்றி உணர்ச்சிதான் தன்னை மக்களுக்காக அர்ப்பணிக்க உந்தித் தள்ளியது என்கிறார். “தாயை இழந்த நான் அத்தை பெரியம்மையின் அரவணைப்பில் வளர்ந்தேன். அப்பொழுது தாய்ப்பாலின்றி இருந்த எனக்கு ஊரில் பாலூட்டும் தாய்மார்கள் எல்லாம் தம் பிள்ளையைப்போல் எண்ணி பாலூட்டினார்களாம்!    பெற்ற அன்னை என்னை விட்டுச் சென்றபோது ஊரிலுள்ள அன்னையரெல்லாம் என்னை அள்ளி அணைத்துக் கொண்டார்கள். எனக்கு எத்தனை தாய்கள்! எத்தனை உறவினர்கள்! ஊரே எனக்குச் சொந்தம். உலகமே எனக்கு உறவு. மனிதகுலம் முழுவதுமே என் ரத்தம்தான். 'இந்த மக்களுக்கு நீ என்ன செய்யப் போகிறாய்?' காலத்தின் குரலாய் எப்போதும் என் நெஞ்சில் எதிரொலிக்கும் கேள்வி இது. இதுதான் என்னை வழிநடத்துகிறதோ? மக்களிடம் செல்; மக்களிடமிருந்து கற்றுக்கொள்; 'அவர்களின் விடுதலைக்காக உயிரையும் கொடு!' என்று என் மனத்தின் குரல் என்னுள் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருப்பதற்கு முகம் தெரியாத எத்தனையோ தாய்மார்கள் ஊட்டிய பாலும் பாசமும்தான் காரணமா?” (ப. 44) 

திருநீறும் நாமமும்

மயிலத்தில் பயிலும் போது அங்கிருந்த மட நடைமுறைகள் புலவரைச் சினம் கொள்ள வைத்தன. அவர்களின் வழக்கத்தில் குறுக்கீடு செய்த ஒரு நிகழ்வைச் சுவையுடன் பதிவு செய்கிறார்: “1944 ஆம் ஆண்டு நான் இளம் புலவர் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது வகுப்பிற்கு வரும் மாணவர் வீரசைவ மதக்குறியான திருநீறு பூசிக்கொண்டுதான் வரவேண்டும் என்று கடுமையாக எச்சரிக்கை செய்தார்கள். இந்தப் பிரச்சனையை எப்படி எதிர்கொள்வது என்பதைப்  பற்றி எனது நண்பர்களுடன் ஓரிடத்தில் ஆலோசனை நடத்தினோம். அப்பொழுது நான் 'அவர்கள் மதக்குறியுடன்தானே வரச்சொல்கிறார்கள். நாமும் மதக்குறியிட்டே செல்லலாம். ஆனால், திருநீறுக்குப் பதில் நாமம் போட்டுக்கொண்டு செல்லலாம் என்ற கருத்தை முன்வைத்தேன். என்னுடைய கருத்தை நண்பர்களும் ஏற்றுக்கொண்டார்கள். அடுத்தநாள் ஒரு பகுதி மாணவர்கள் நெற்றியில் நாமம் போட்டுக்கொண்டு வகுப்பிற்குச் சென்றோம். அதனைக் கண்ட கல்லூரி முதல்வர் கடுங்கோபம் கொண்டார். "என்னை நீங்கள் மிகவும் அவமதித்து விட்டீர்கள், இனிமேல் நீங்கள் வகுப்பிற்கு வரும்பொழுது திருநீறு பூசாவிட்டாலும் பரவாயில்லை, நாமம் மட்டும் போட்டுக்கொண்டு வரவேண்டாம் என எங்களைப் பணிவோடு கேட்டுக்கொண்டார்.” (ப. 46) 

இரட்டைக் குவளைமுறை எதிர்ப்புப் போராட்டம்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்த பின்னர், இவர் நடத்திய போராட்டங்களில் முதன்மையானது சாதி இழிவு, தீண்டாமைக்கு எதிரானதாக அமைந்தது. வர்க்கத்துடன், சாதியையும் இணைத்து எதிர்ப்பதை இவரின் தொடக்கக் காலமே சுட்டி நிற்கிறது. “பெண்ணாடம் பகுதியில் தேனீர்க் கடைகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனிக்குவளையும், மற்ற சாதியினருக்குத் தனிக்குவளையும் வைத்திருந்தார்கள். தேனீர்க் கடைகளில் நிலவிய இந்த இரட்டைக் குவளை முறையை நான் கடுமையாக எதிர்த்தேன். அதேபோல் முடிதிருத்தும் நிலையங்களிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முடிதிருத்தும் உரிமை மறுக்கப்பட்டது. இந்த நிலைமைகளைப் போக்கி தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் தேனீர்க் கடை, முடிதிருத்தும் நிலையங்களில் சம உரிமை கிடைக்க நான் தலைமையேற்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தினேன். பிறகு தேனீர்க் கடைகளில் இரட்டைக் ்குவளை முறையும் ஒழிக்கப்பட்டது. முடி திருத்தும் நிலையங்களிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சமஉரிமை கிடைத்தது. தாழ்த்தப்பட்ட மக்களிடையே பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.” (ப.50)

கோணலாகிய முதல் நடவடிக்கை

நக்சல் பாரி இயக்கத்தில் இருந்த போது தனிநபர் அழித்தொழிப்பு, சொத்துக்களைச் சூறையாடுதல், விளைபொருளை மக்களுக்குப் பங்கிட்டுத் தருதல் போன்ற நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டன. இவற்றில் ஓரிரு நிகழ்வுகளை புலவர் ஆங்காங்கே சுட்டிச் செல்கிறார் : “1969-ஆம் ஆண்டில் தமிழகத்தில் நக்சல்பாரி இயக்கத்தின் முதல் பறிமுதல் நடவடிக்கையை திருச்சி மாவட்டம் முத்துகுளத்திலிருந்த கோபால கிருஷ்ண ரெட்டியின் வீட்டில் செய்வது என்று நானும் தோழர் கோதண்டராமனும் முடிவு செய்தோம். அந்தப் பறிமுதல் நடவடிக்கைக்காக ஒரு நாள் இரவு நான், கோதண்டராமன் மற்றும் 15 தோழர்களுடன் சென்றோம். கோபாலகிருஷ்ணரெட்டி கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்தான். அந்தக் கைத்துப்பாக்கியையும் பறிமுதல் செய்ய வேண்டும் என்று நாங்கள் திட்டமிட்டுச் சென்றோம். நாங்கள் கோபாலகிருஷ்ணரெட்டியின் வீட்டின் பின்புற சுவர்ஏறி குதித்துச் சென்று, அங்கு காவலுக்கு இருந்தவர் தப்பிச் சென்று வெளியில் சொல்லாமல் இருக்க முதலில் அவரைக் கட்டிவைத்துவிட வேண்டும் என்று திட்டமிட்டிருந்தோம். ஆனால், காவலுக்கு இருந்தவர் தப்பிச் சென்று ஊருக்குள் சத்தமிட்டு ஊரையே கூட்டி விட்டார். கிராமத்திலிருந்து மக்கள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து எங்களைத் துரத்திக்கொண்டு வருகிறார்கள். கோபாலகிருஷ்ணரெட்டியின் வீட்டில் பறிமுதல் செய்யச் சென்றது நாங்கள்தான் என்பது மக்களுக்குத் தெரியாது. திருடர்கள் யாரோ வந்துவிட்டார்கள் என்று நினைத்துக்கொண்டுதான் மக்கள் திரண்டுவந்து விட்டார்கள். நாங்கள் அங்கிருந்து தப்பித்து ஓடிவருகின்றோம்.” (ப.58 – 59) 

வெடிகுண்டுத் தயாரிப்பும் விபரீதமும்

புலவர் சிறைப்படுத்துவதற்கும், இவர்களின் செயல்பாடுகள் வெளியில் தெரிவதற்கும் காரணமாக அமைந்தது  ‘வெடிகுண்டு தயாரிப்பு’ சம்பவம். இதில் ஈடுபட்ட சர்ச்சில், கணேசன், காணியப்பன் ஆகிய மூவரும் படித்தவர்கள். தொழில்நுட்பம் தெரிந்தவர்கள். சமூக விடுதலைக்காகத் தங்களை அர்ப்பணித்தவர்கள். அவர்களின் கொடூரமான மரணம், இதில் இறுதியாக சர்ச்சிலின் வாக்குமூல வரிகள் ஆகியவற்றை புலவர் இப்படிப் பதிவு செய்கிறார்: “1970-ஆம் ஆண்டு பிப்ரவரி 22-ஆம் நாள் எங்கள் தென்னத் தோப்பில் தோழர்கள் சர்ச்சில், கணேசன், காணியப்பன் ஆகிய மூவரும் வெடிகுண்டு தயார் செய்யும் பணியில் ஈடுபட்டார்கள். அப்பொழுது அங்கு வேறு யாரும் வந்துவிடக்கூடாது என்பதற்காக நான் சற்று தூரம் தள்ளி அமர்ந்து கொண்டிருந்தேன். தோழர்கள் வெடிகுண்டு தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். ஆம், அப்பொழுதுதான் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தக் கொடுமை நடந்து விட்டது. வெடிகுண்டு தயாரிக்கும் தொழில்நுட்பக் கேட்டால் அந்த வெடிவிபத்து நடந்தே முடிந்துவிட்டது. என்னுடைய முகத்திலும், கால்களிலும் மருந்துத் துகள்கள் தைத்துத் தூக்கி வீசப்பட்டதில் என்னுடைய பல் சிதறிக் குருதி வெள்ளத்தில் நினைவிழந்து கிடந்தேன்.

 அப்பொழுது எங்களுக்கு உணவு எடுத்துவர எனது மூத்த மகன் வள்ளுவன் வீட்டிற்குச் சென்றிருந்தார். குண்டு வெடித்ததும் 2 கி.மீ. சுற்றளவிற்கு நிலத்தில் கடுமையான அதிர்வு ஏற்பட்டிருக்கின்றது. வெடிச்சத்தம் கேட்டவுடன் உணவு எடுத்துவர சென்றிருந்த வள்ளுவன் ஏதோ விபரீதம் நடந்து விட்டிருக்கிறது என்று நினைத்து அவசரமாகத் தோட்டத்திற்குத் திரும்பி வந்து என்னைத் தூக்கி நிறுத்துகிறார். நான் நினைவு திரும்பிப் பார்க்கும்போது எல்லாமே நடந்து முடிந்து விட்டிருந்தது. மூவரும் தூக்கி வீசப்பட்டு, ஆளுக்கொரு திசையில் குருதி வெள்ளத்தில் கிடந்தார்கள். தோழர்கள் கணேசனும், காணியப்பனும் மரணித்து தியாகிகளாகி இருந்தார்கள். தோழர் சர்ச்சில் மட்டும் கால், கை எல்லாம் துண்டிக்கப்பட்டு முடமாக ரத்த வெள்ளத்தில் குற்றுயிரும், கொலை உயிருமாய்த் துடித்துக் கொண்டிருந்தார். அந்த நிலையிலும் தோழர் சர்ச்சில் என்னைத் தாங்கிக்கொண்டிருந்த வள்ளுவனிடம் என்ன நடந்தது என்று கேட்கிறார். தோழர் கணேசனும், காணியப்பனும் மரணம் அடைந்துவிட்டார்கள். நீங்களும் புலவரும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்று வள்ளுவன் சொல்லியுள்ளார். அதன் பின் தண்ணீர் வேண்டும் என்று தோழர் சர்ச்சில் கேட்க, வள்ளுவன் கொடுத்த தண்ணீரைக் குடித்தவுடன்  ‘இனி நம் இயக்கத் தோழர்கள் இதுபோன்ற விஷப்பயிற்சியில் ஈடுபட வேண்டாம். தலைவர் இயக்கத்தை வழிநடத்துவார். ஆயுதப் போராட்டம் வெல்க! நக்சல்பாரி பேராட்டம் வாழ்க! புரட்சி ஓங்குக! தோழர் ‘மாவோ’ வாழ்க! தோழர் சாருமசூம்தார் வாழ்க!’ என்று முழக்கமிட்ட சில வினாடிகளில் தோழர் சர்ச்சில் மரணித்துவிட்டார்.” (ப. 63 – 64)

பின்னொரு சந்தர்ப்பத்திலும் மக்கள்திரள் இயக்கத்துக்கும், தனிநபர் அழித்தொழிப்பு இயக்கத்துக்குமான மாறுபாட்டினைப் புலவர் சுட்டுவார். நக்சல் பாரி, தீவிர இயக்கம் மக்களைத் தயாரிக்காமல், ஆயுதப் பயிற்சி தராமல் களத்தில் இறக்கியது மற்றும் வெகுமக்கள் அமைப்புகள் - தானே கட்டியமைத்த தொழிலாளர், விவசாயிகள் அமைப்புகளைப் பற்றி அக்கறையின்றி ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டது பற்றியுமான சுயவிமர்சனத்தையும் புலவர் கூறிச் செல்கிறார்.

அலைக்கழிக்கப்பட்ட குடும்பம்

புலவரின் அரசியல் சமுதாய விடுதலைச் சமரில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் அவரது குடும்பத்தினர்தான். அதுவும் பெண்கள் கூட அதிகத் தொல்லைக்குள்ளாக்கப்பட்டனர். அநேகமாக, தமிழக அரசியல் வரலாற்றில் கணவன் – மனைவி – மகன்கள் – மகள்கள் - உறவினர்கள் எனப் பலரும் சிறைப்படுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட்ட ஒரே நபராக புலவர் கலியபெருமாள் திகழ்கிறார். அவர் குடும்பத் துயரின் சிறு துளிகள்…

“ஆடுதுறை ராஜமாணிக்கம் அவர்களின் பாதுகாப்பில் இருந்த என் துணைவியார் வாலாம்பாள் அவர்களை 1970ஆம் ஆண்டு டிசம்பர் மாத அளவில் காவல்துறையினர் கைது செய்துவிட்டார்கள். அவரைக் கும்பகோணம் கிளைச் சிறையில் 12 நாட்களும், விருத்தாசலம் கிளைச் சிறைச்சாலையில் ஒரு மாதமும் நீதிமன்றஅடைப்புக் காவலில் வைத்திருந்தனர். கடலூர் காவல்நிலையத்தில் தினமும் காலை மாலை 1½ ஆண்டுகள் நிபந்தனைக் கையெழுத்திட்டு வந்தார். அப்பொழுது என் இளைய மகன் நம்பியார் அதிராம்பட்டினம் கல்லூரியிலும், என் மகள்கள் தமிழரசி, கண்ணகி, அஞ்சுகம் ஆகியோர் அரியலூர் நிர்மலா உயர்நிலைப் பள்ளியிலும் படித்துக்கொண்டிருந்தார்கள்.

என்னுடைய துணைவியாரின் சகோதரி அனந்தநாயகியின் கணவர் கொ.இரா. விசுவநாதன் அவர்கள் சட்ட மன்ற உறுப்பினராக இருந்தபொழுது அரியலூர் அருகிலுள்ள லிங்கத்தடி மேட்டில் வள்ளலார் கல்வி நிறுவனத்தைத் தொடங்கி நடத்திவந்தார்கள். அவருடைய மறைவிற்குப் பிறகு அனந்தநாயகி அம்மையார் பொறுப்பில் அந்தக் கல்வி நிறுவனம் நடந்துவந்தது. அந்தப் பள்ளியில் எனது மகள்கள் மூன்று பேரையும் சேர்த்துப் படிக்க வைத்துக்கொண்டிருந்தார். அப்பொழுது மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) அனந்தநாயகி அம்மையாரின் வீட்டிற்குச் சென்று புலவர் கலியபெருமாளின் மகள்களை நீங்கள் பாதுகாப்பு கொடுத்துப் படிக்க வைக்கக்கூடாது என்று மிரட்டியுள்ளார். ஆண் பிள்ளைகள் என்றால் கூட எப்படியாவது அவர்களைப் பாதுகாத்துக் கொள்வார்கள். இவர்களோ வயதுக்கு வந்த பெண்பிள்ளைகளாக இருக்கின்றார்கள்; இவர்களை அரசுப் பாதுகாப்பில் படிக்க வைத்தால் எனக்கு ஆட்சேபணை இல்லை என்று அனந்தநாயகி சொல்லியுள்ளார். கொலைகாரனின் பிள்ளைகளுக்கு எங்களால் பாதுகாப்பு கொடுக்க முடியாது. உங்கள் பாதுகாப்பில் நீங்கள் வைத்திருந்தால், கடுமையான தண்டனையை அனுபவிக்க வேண்டி வரும் என்று காவல்துறை அதிகாரி எச்சரித்திருக்கிறார்.”
(ப.66 – 67)

சிறைச்சாலையில் தப்பித்தல் முயற்சி

புலவரின் வாழ்வில் பல தீவிரமான, நுட்பமான வேலைகள் உண்டு. ஓரிரு சம்பவங்களை இந்நூலில் பதிவு செய்கிறார். “ஒருமுறை சிறைச்சாலையிலிருந்து தப்பிக்கும் நோக்குடன் வெடிகுண்டுகள் தயார் செய்யத் தீப்பெட்டிகள் வாங்கும் முயற்சியைத் தொடங்கினோம். காவலர் ஒருவரின் உதவியால் தீப்பெட்டிகளை வாங்கினோம். தீக்குச்சியிலிருந்த மருந்தை எடுத்துக்கொண்டு குச்சியை எறிந்துவிட்டோம். சிறைக் கதவுகளில் இருந்த இரும்புக் கம்பிகளை ஒருபுறமாகப் பாதிக்கு மேல் அறுத்து வைத்திருந்தோம். அருகில் இருந்த வேப்ப மரத்தில் இரண்டு நீளமான கம்புகளை ஒன்றாகக் கயிற்றால் கட்டி அதை வராண்டாவிற்கு முன்னால் இருந்த திடலில் புதைத்து வைத்துவிட்டோம். தீக்குச்சி மருந்தைக் கொண்டு சில வெடிகுண்டுகளைத் தயார் செய்தோம். அதை மண்பானையில் போட்டு எதிரில் இருந்த திடலில் புதைத்து வைத்துவிட்டோம்.

சிறையிலிருந்து தப்பிச் செல்ல கயிறு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டோம். அப்பொழுது தோழர்கள் கனமான கயிறு தயார் செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். ஆனால், நான் மெல்லிய கயிறு கொண்டுதான் தப்பிச் செல்ல வேண்டும் என்று சொன்னேன். அப்பொழுது எங்களோடு திருச்சி மத்திய சிறையிலிருந்த சீவலப்பேரி பாண்டி (பாண்டித்தேவர்) தப்பிச் செல்லும் போது மெல்லிய கயிறு கொண்டுதான் தப்பிச் சென்றார் என்பதைத் தோழர்களுக்குச் சொன்னேன். அதனால் கனமான கயிற்றைப் பயன்படுத்தினால் தப்பிக்கும் முயற்சியில் தோல்வி ஏற்படும் வாய்ப்புள்ளது என்று நான் சொன்னேன். தோழர்கள் எல்லோரும் ஒரே நிலையில் இருந்தார்கள். அதனால் நானும் உங்களோடு வரத் தயார் என்று சொல்லிவிட்டேன். பிறகு போர்வையின் (பெட்ஷீட்) நூலைக் கொண்டு கயிறு தயார் செய்து கொண்டோம்.” (ப.103)

தோழர் கல்யாணசுந்தரமும் பாவலரேறு பெருஞ்சித்திரனாரும்

புலவர் மீதும், அவர் வட்டார மக்கள் மீதும் கட்டவிழ்க்கப்பட்ட காவல்துறை அத்துமீறல் அடக்குமுறைக்கு எதிராக கம்யூனிஸ்ட் தலைவர் எம்.கல்யாணசுந்தரம் போராடியதைப் புலவர் கனிவுடன் நினைவுகூர்கிறார்.

சிறையில் இருந்தபோது (1981) ஈழத் தமிழர்களைச் சந்திக்க வந்த பாவலரேறு பெருஞ்சித்திரனாரைச் சந்தித்ததையும் பின்னர் வாழும் காலம் வரை உணர்வோடு கலந்து நின்றதையும் பதிவு செய்கிறார்.

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுடன் சந்திப்பு

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனைச் சிறையில் சந்தித்த அனுபவத்தை இப்படிப் பதிவு செய்து உள்ளார்:

 “சென்னை பாண்டி பஜாரில் பிரபாகரன் அணிக்கும் முகுந்தன் அணிக்கும் மோதல் ஏற்பட்டு பிரபாகரனைக் காவல்துறையினர் கைது செய்து சென்னை மத்திய சிறையில் அடைத்தார்கள். பிரபாகரனை எங்கள் அறைக்கு அருகிலேயே அடைத்தார்கள். இராகவன் என்பவரும் பிரபாகரனுடன் கைதாகி சிறைக்கு வந்தார். ராகவன் என்னிடம் பேசும்போது ‘எங்கள் விடுதலைப் போராட்டத்தை நீங்கள் ஆதரிக்கின்றீர்களா?’ என்று கேட்டார். 'ஆம், உங்கள் விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கின்றேன்' என்று சொன்னேன்.

‘உங்கள் கட்சி ஆதரிக்கின்றதா?' என்று இராகவன் கேட்டார். ‘எங்கள் கட்சி ஆதரிக்கவில்லை’ என்று சொன்னேன். 'வங்கதேச விடுதலையை ஆதரித்த சீனா, எங்கள் விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்குமா?' என்று கேள்வி எழுப்பினார். ‘அதைப் பற்றியெல்லாம் நீங்கள் யோசிக்காதீர்கள். சீனாவிற்கும், இலங்கைக்கும் நல்ல உறவு இருக்கின்றது. மாவோ எழுதிய இராணுவப் படைப்பு என்ற நூலிலிருந்து படிப்பினைகளைப் பெற்று உங்கள் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லுங்கள்’ என்று வழி காட்டினேன். நானும் பிரபாகரனும் 8 மாதங்கள் ஒரே சிறையில் இருந்தோம். அவர் பகுதியிலிருந்து பிரபாகரன் பெரும்பாலும் என்னுடன் பேசுவார். அதன் பின் விடுதலையாகிச் சிறையிலிருந்து சென்று விட்டார்கள். என்னை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லும் போது பிரபாகரன் என்னை இரண்டு முறை வெளியில் சந்தித்து நலம் விசாரித்தார்.” (ப.113)

சாதி சமத்துவத்துக்கான முயற்சி

இவரின் விடுதலைக்குப் பின் சொந்த வட்டாரத்தில் வாழ்ந்தார். பழ. நெடுமாறன் அவர்களின் தமிழர் தேசிய இயக்கத்தில் இருந்தார். அத்தருணத்தில் வட தமிழ்நாட்டில் வன்னியர் சங்கம் - பாட்டாளி மக்கள் கட்சியாக உருவெடுத்தது. வன்னியர்களுக்கும் ஆதி திராவிடர்களுக்கும் சிக்கல் நீடித்தது. புலவர் கலியபெருமாள் இப்பகுதியில் அமைதி நிலவ, சமூக ஒற்றுமை ஏற்பட முயற்சிகள் மேற்கொண்டார். இதனை அவர், வன்னியர் சங்கத்தை ஆரம்பித்து வடமாவட்டங்களில் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், வளர்ச்சிக்காகவும் மருத்துவர் இராமதாஸ் போராடினாலும், தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காகவும் குரல் கொடுத்தார். தான் சார்ந்த இனமக்களின் உரிமைக்காக அரசாங்கத்தோடு மட்டுமே மோதினார். பெரும்பான்மை மக்கள்தொகை கொண்ட பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகம் இணக்கமாகச் செயல்படுவதன் மூலம் அரசியல் அதிகாரத்தைப் பெற முடியும் என்பதை இராமதாஸ் உணர்ந்து வெளிப்படுத்தி வந்தார்.

வர்க்கப் புரட்சிதான் இறுதித் தீர்வு என்ற எண்ணத்தில் நாம் செயல்பட்டாலும், அவ்வப்போது நடக்கும் நடப்பு அரசியலையும் கவனித்து, ஜனநாயக மனித உரிமைப் பணிகளிலும் என்னை ஈடுபடுத்திக்கொள்வேன். தாழ்த்தப்பட்ட மக்களிடையே அப்போது பிரபலமாகச் செயல்பட்டு வந்தவர்களில், காட்டுமன்னார்குடியைச் சேர்ந்த இளையபெருமாளும் ஒருவர். இவர் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்து பக்குவப்பட்டவர். இவரிடம் வறுமையில் உழன்று, கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பின்தங்கியுள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் ஒற்றுமை குறித்துப் பேசினேன். ஆங்காங்கே, அவ்வப்பொழுது இவ்விரு இன மக்களிடையே நடக்கும் பூசலை, மோதலைத் தணிப்பதற்கு ஏதாகிலும் செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொண்டேன். இது குறித்து நல்ல பண்பாளரும், உண்மையான ஜனநாயக வாதியும், மனித உரிமை ஆர்வலரும் ஆன பழ.நெடுமாறனிடமும் பேசினேன். மருத்துவர் இராமதாசிடமும் பேசினேன். இதன் தொடர்ச்சியாக, சிதம்பரத்தில் ஒரு இடத்தில் இராமதாஸ் அவர்களும் இளையபெருமாள் அவர்களும் சந்தித்துப் பேசினார்கள். பழ.நெடுமாறன் அவர்களும் உடனிருந்து, இதில் பெரும்பங்கு ஆற்றினார். விடிய விடிய பேசி ஒருவித இணக்கமான உடன்பாடும் ஏற்பட்டது. ஆனாலும், சில தினங்களில் தன்னுடன் இணைந்து செயல்பட்ட சில தலைவர்கள் தன்னோடு இதில் உடன்பட்டுப் போகவில்லை என்று திரு. இளையபெருமாள் பின்வாங்கி விட்டார். இது வெளியில் தெரியாத ஒரு சரித்திரம்.” (ப. 134)

புலவர் கலியபெருமாளின் விடுதலைக்காக, மரண தண்டனை ஒழிப்புக்காக இந்திய அளவில் பல முற்போக்கு மனித உரிமையாளர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் உதவினர். இதில் மார்க்சிய அறிஞர் எஸ். வி. ராஜதுரை, வழக்கறிஞர் ஏ. எம். இப்ராஹிம், பேராசிரியர் ரஜ்னி கோத்தாரி, மனித உரிமைப் போராளி கே.ஜி. கண்ணபிரான், பத்திரிகையாளர் கண்ஷியாம்பர்தேசி, நீதிபதிகள் பி.என்.பகவதி, வி.ஆர்.கிருஷ்ண அய்யர் போன்றவர்கள் முக்கியமானவர்கள்.

புலவர் கலியபெருமாள் மற்றும் தோழர்கள் விடுதலை குறித்த நீதிமன்ற நடவடிக்கையை,  “இந்த வழக்கில் நீதிபதிகள் திரு.ஆர்.என். பகவதி, திரு. வி.ஆர்.  கிருஷ்ணைய்யர் ஆகியோர் வழக்கின் நியாயத் தன்மையை ஏற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட கைதிகளை மனிதாபிமானத்துடன் விடுதலை செய்ய வேண்டும் என்று பலமுறை தமிழக அரசுக்கு ஆணையிடுகின்றார்கள். ஆனாலும், உச்ச நீதிமன்றத்தின் ஆணைகளைத் தமிழக அரசு செயல்படுத்தாத சூழ்நிலையில், உச்ச நீதிமன்றம் கடுமையான எச்சரிக்கையைத் தமிழக அரசுக்குக் கொடுக்கிறது. அந்த வழக்கில் ஒரு தீர்ப்பில் நீதிபதிகள் ‘சட்டத்தை மதிக்க வேண்டிய ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் சட்டத்தை மதிக்காத போது, இந்தச் சட்டத்தை மதிக்க மாட்டோம். இந்தச் சட்டத்தின் மூலம் நீதி கிடைக்காது. இந்தச் சமூகத்தை மாற்றி அமைப்பதே எங்களது நோக்கம். ஒரே குறிக்கோள் அதற்காகவே ஆயுதப் போராட்டத்தை நாங்கள் கையில் எடுத்திருக்கின்றோம்’ என்று கூறும் இந்தப் புரட்சியாளர்கள் சட்டத்தை மதிக்காதது பெரிய தவறாக எங்களுக்குத் தெரியவில்லை. எனவே, தமிழக அரசு இந்த ஆயுள் கைதிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும். அப்படிச் செய்ய மாநில அரசு தவறும் பட்சத்தில், உச்ச நீதிமன்றத்தின் ஆணைகள் தமிழக சிறைச் சுவர்களைத் துளைத்துக் கொண்டு சம்பந்தப்பட்ட கைதிகளுக்கு நீதி வழங்கத் தயங்காது என்று கூறியுள்ளார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார் (ப.112).

மக்களிடம் உருவாகி, மக்களுக்காக உழைத்து, மக்களால் அடையாளப்படுத்தப்பட்டத்தன் வாழ்வின் சாரத்தைப் புலவர் பெருமிதத்துடன் இப்படி முடிக்கிறார்: “என்னைப் பொறுத்தமட்டில் எனது வாழ்வில் எத்தனையோ அடக்குமுறைகளையும், சித்திரவதைகளையும் எதிர்கொண்டுள்ளேன். தூக்குமரத்தின் நிழலில் இருந்து ஒருவாறு தப்பித்துள்ளேன். எனது அரசியல் பணிகளுக்காக எனது குடும்பமே தாங்கமுடியாத கொடுமைகளை எல்லாம் சந்தித்துள்ளது. ஒரு புரட்சியாளன் என்ற முறையில் இவற்றை நான் சாதாரணமாகவே கருதுகிறேன். மரணம் என்பது சாதாரணமானதுதான். அந்த மரணம் இறுதியாக என்னை அணைக்கும் நாள்வரை தமிழ் இனத்தின் விடுதலைக்காக, தமிழ் மொழியின் ஏற்றத்திற்காக, மக்களின் சனநாயக உரிமைகளுக்காக, மனித உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடுவதையே எனது இலட்சியமாக நான் பிரகடனப்படுத்துகிறேன்”. (ப.145)

புலவர் சாதி ஆதிக்க மனப்பான்மையில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு சாதி, வர்க்கம் ஆகிய இரண்டாலும் ஒடுக்கப்பட்ட மக்களுடன் நின்றவர். நம் காலத்தில் வாழ்ந்த ஓர் விடுதலை நாயகர் புலவர் கு. கலியபெருமாள் என்பதற்கு இந்நூல் சான்று. புலவர் அதிகம் எழுதியது கிடையாது. ஆனால் மக்கள் மனங்களில் ‘புலவர்’ எழுதப்பட்டுள்ளார் என்பதை அவரின் நூற்றாண்டு நாளில் நினைவுகூர்வோம்.

மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன் / புலவர் கு. கலியபெருமாள்/ தமிழ் நிலம் / 2006.

- இரா.காமராசு, பேராசிரியர் – தலைவர், நாட்டுப்புறவியல் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.