1962 நவம்பர் 21 அன்று இமயமலைப் பகுதிகளில் இருபெரும் ஆசிய நாடுகளான இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நடைபெற்ற மோதல் சீனாவின் போர்நிறுத்த அறிவிப்பைத் தொடர்ந்து முடிவுக்கு வந்தது.

இந்த போர் தொடங்குவதற்கு முக்கிய காரணம் மெக்மோகன் எல்லைக் கோடு. கேப்டன் ஹென்றி மெக்மோகன் என்ற பிரிட்டிஷ் அதிகாரி இந்த எல்லைக் கோட்டை தோரயமாக வரைந்து அதனை பிரிட்டிஷ் கால இந்தியாவின் எல்லையாக நிர்ணயித்தார்.

பிரிட்டிஷ் அரசாங்கம் 1873 –ல் பிரம்மபுத்ரா பள்ளத்தாக்கில், ஓர் எல்லைக் கோட்டை உருவாக்கியது. அதன் அடிப்படையில் இந்திய அரசின் நடவடிக்கைகளும் சீன அரசின் எதிர்ப்பும் 1962 –ல் நடைபெற்ற போருக்கு காரணமாக அமைந்தன.

இந்தியா மட்டுமின்றி உலகநாடுகள் கூட சீனா மெக்மோகன் எல்லைக் கோட்டுக்குப் பின்னால் தனது இராணுவத்தை திரும்ப அழைத்துக் கொள்ளும் என நம்பவில்லை. ஆனால் 1962 நவம்பர் 30 ஆம் தேதி பெய்ஜிங் -ல் உள்ள சீனப் பாதுகாப்பு அமைச்சகம் தனது துருப்புகளைப் படிப்படியாகத் திரும்ப அழைத்துக் கொள்ளும் என்று அறிவித்தது.

டிசம்பர் 5 ஆம் தேதி பொம்டிலா பகுதியில் கைதான சில இந்திய வீரர்களை சீனா ஒப்படைத்தது. கைதிகளைப் பரிமாறிக் கொள்வது வழக்கமான விஷயம்தான் என்றாலும், போரிட்ட நாட்டிடம் அந்நாட்டு இராணுவம் போர்முனையில் விட்டுச் சென்ற ஆயுதங்கள் திருப்பித்தரப்பட்டது அதுவே முதல்முறை. போர்முனையிலும் முகாம்களிலும் இந்திய இராணுவம் விட்டுச் சென்ற ஆயுதங்கள் அனைத்தையும் நல்ல நிலையில் சேகரித்து, சுத்தப்படுத்தி, இந்திய இராணுவத்திடம் ஒப்படைக்க சீனா முடிவெடுத்தது ஆச்சரியத்தை உண்டாக்கியது. முதல் தவணையாக இந்திய இராணுவம் விட்டுச் சென்ற அமெரிக்கன் ஆட்டோமெட்டிக் ரைபிள்கள் மற்றும் ரஷ்ய ஹெலிகாப்டர் ஆகியவற்றை எடுத்துச் செல்லுமாறு புதுடெல்லிக்கு செய்தி அனுப்பியது பெய்ஜிங். இதனைத் தொடர்ந்து சீன அதிகாரிகள் ஒவ்வொன்றாக ஒப்படைக்க அவற்றை இந்திய அதிகாரிகள் சரிபார்த்து கையெழுத்திட்டு பெற்றுக் கொண்டனர். இந்த அதிசயமான செயலை சீனா செய்தது என்றாலும், அதனை விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லை.

தீர்வை ஒட்டிய பேச்சுவார்த்தைகளை இந்தியா தொடங்க வேண்டும் என சீனா தெரிவித்தது. சீனா தனது படைகளைத் திரும்ப அழைத்துக் கொண்டாலும், இந்திய படைகள் உடனடியாக வடகிழக்கு எல்லைக்கு திரும்பவில்லை. மெக்மோகன் எல்லைக்கோடு வரையிலான ரோந்து பணிகளின் பொறுப்பு அஸ்ஸாம் ரைபில்ஸ் படையிடம் ஒப்படைக்கப்பட்டது.

போர் ஏற்படுத்திய காயமும், பாதிப்பும் காலப்போக்கில் குறையத்தொடங்கின. நேற்றைய உண்மை இன்றைக்கு பொய்யாகிப் போனது. நண்பர்கள் விரோதிகளாகவும், விரோதிகள் நண்பர்களாகவும் மாறினார்கள்.

சீனாவால் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட காலத்தில் கம்யூனிஸ்ட்கள் தவிர்த்து மற்ற எதிர்க்கட்சிகள் கூட்டாக கீழ்க்கண்டவாறு அறிக்கை விடுத்தனர்.

சீனாவின் தன்னிச்சையான போர் நிறுத்தம் அறிவிப்பு அவர்களுடைய ஏமாற்றும் தந்திரத்தின் மற்றொரு அடையாளமாகும். நம்மிடையே குழப்பத்தையும், சஞ்சலத்தையும் ஏற்படுத்தி இடைப்பட்ட காலத்தில் படைபலத்தைப் பெருக்கி மற்றொரு தாக்குதலுக்குத் தயாராகும் சூழ்ச்சி. இதன்மூலம் உலக அரங்கில் நமது நட்பு நாடுகளின் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்துவதுடன் அவர்களிடமிருந்து நாம் ராணுவ உதவிகளைப் பெறுவதை தடுப்பதற்கான தந்திரம் ஆகும். எனவே சீனாவின் போர்நிறுத்த அறிவிப்பைக் கண்டு பிரதமர் ஏமாறக்கூடாது. ‘சீனாவுடன் பேச்சுவார்த்தை கிடையாது” என்பதற்கு இந்திய அரசுக்கு முழு ஆதரவினை அளிப்பதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.

ஆனால் எதிர்க்கட்சிகள் தெரிவித்தது போல் சீனா அத்துமீறல் எதையும் செய்யவில்லை என்பதை வரலாறு நமக்கு தெரிவிக்கிறது.

தீர்வை ஒட்டிய எல்லை தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு இந்தியா முன்வர வேண்டும் என்ற சீனாவின் நீண்டகால கோரிக்கை இன்றும் நிலுவையில் உள்ளது.

இன்றைய உலக நாடுகளில் போர்கள் என்பது ஆளும் ஆட்சியாளர்களால் இராணுவத்தின் மீது திணிக்கப்படும் ஒன்றாகவே உள்ளது.

பிரிட்டிஷார் காலத்தில் குத்துமதிப்பாக வரையறை செய்யப்பட்ட ஒரு எல்லைக்கோட்டை பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை பெற்ற இந்திய தேசம் அப்படியே பின்பற்றலாமா?

உண்மையில் சீனா தான் போருக்கு காரணமா?

1961- 1966 ஆம் வருடத்திய மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டம் ஏன் கைவிடப்பட்டது?

என்பன போன்ற கேள்விகளுக்கு விடை தருகிறது ஒரு புத்தகம். ‘தி டைம்ஸ்” இதழின் புதுதில்லி நிருபராகப் பணியாற்றிய நெவில் மாக்ஸ்வெல் எழுதிய ‘இந்திய சீனப் போர்” புத்தகத்தை வாசியுங்கள். ஜனனி ரமேஷ் தமிழில் அதனை மொழிபெயர்த்துள்ளார். மொழி பெயர்ப்பு செய்யப்பட்ட புத்தகம் என்று சொல்ல முடியாத அளவுக்கு சூப்பராக உள்ளது. படித்துப் பாருங்கள். கிழக்கு பதிப்பகம் வெளியீடு.

- சுடலைமாடன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.