cororna migrant workers 340கஃபிலா என்ற சொல் எதனைக் குறிக்கிறது என்ற கேள்வியோடு தொடங்கினால் விடையே தெரியாத வாழ்க்கையோடு நடைபோட்டுக் கொண்டிருக்கும் பல நாடுகளின் மக்களைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டி வரும். கூட்டம் கூட்டமாக நடந்து, இடம் பெயர்ந்து அதாவது புலம் பெயர்ந்து போகும் மக்களின் திரளை கபிலா என குறிப்பிட்டனர் ஒரு நாட்டின் அறிவுஜீவிகள்.

புயல்களுக்கு பெயர் வைப்பதைப் போலவே, நிலையான வாழ்வாதாரம், வேலைவாய்ப்பற்ற மக்கள் திரளுக்கு கஃபிலா என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. நாடுகளின் பிரிவினையின் போதும், உள்நாட்டுச் சண்டையின் போதும் கொரோனா பெருந்தொற்றுக் காலத்திலும் பல்வேறு தரப்பு உழைக்கும் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து கால்நடையாய் நடந்து பல்வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர்.

பயணத்தின் நடுவே ஓய்விற்காகத் தண்டவாளத்தில் தலைவைத்தவர்கள், எதிர்பாராமல் வந்த இரயிலில் அடிபட்டு இல்லாமல் போன காலமாக கொரோனா முதல் அலை என்ற கொடூரமான காலம் அமைந்தது.

ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த மக்கள் திரளான ‘கஃபிலா” -க்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இந்திய கஃபிலாக்களை இரண்டு கட்டங்களில் காணமுடியும்.

ஒன்று இந்திய - பாகிஸ்தான் பிரிவினைக்காலம், இரண்டு கொரோனா பெருந்தொற்றுக்காலம்.

இலங்கையில் உள்நாட்டுப் போரினால் இடம்பெயர்ந்த ‘கஃபிலா” - க்களின் துயரம் சொல்லில் அடங்காதது. மியான்மர் நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட ரோஹிங்கியா இன மக்களும் கூட ‘கஃபிலா” -க்களின் வகையறாதான். பாலஸ்தீனத்தின் காசா பகுதியிலிருந்து அதன் சொந்த மக்களை விரட்ட குண்டுமழை பொழிகிறது அமெரிக்க ஏஜெண்டான இஸ்ரேல் நாட்டு அரசாங்கம்.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி வகித்த காலத்தில், தென் அமெரிக்க நாடுகளிலிருந்து ‘கஃபிலா” -க்கள் போன்ற அகதிகள் அமெரிக்காவிற்குள் குடிபுகுவதை தடுக்க சுவர் கட்டுவேன் என விடாப்பிடியாக நின்றார். அப்படிப்பட்ட பிடிவாதக்கார அதிபர் இந்தியாவின் குஜராத் மாநிலத்தை பார்வையிட வந்த நிகழ்வான ‘நமஸ்தே டிரம்ப்” என்ற நிகழ்வின் போது, டிரம்ப் சென்ற இடங்களின் ஓரத்தில் இருந்த குடிசைகளை சுவர் கட்டி மறைத்த அரசாங்கம் நமது மத்திய அரசாங்கமும், குஜராத் மாநில அரசாங்கமும்.

தேர்தல் நாட்களில் ‘கஃபிலா” -க்கள் போன்று கூட்டம் கூட்டமாய் நடந்து வந்து வாக்கு கேட்ட அரசியல் கட்சியினர் தேர்தல் முடிந்த பின்னர் இந்திய மக்களை ; ‘கஃபிலா” -க்கள் போன்று கூட்டம் கூட்டமாய் நடுத்தெருவில் நடக்க வைப்பதுதான் மத்தியில் அடாவடி ஆட்டம் போடுபவர்களின் 7 வருட ஆட்சியின் சாதனையோ என்று எண்ணுமளவுக்கு இந்திய மக்களை சோதனையில் வாட்டி வருகின்றனர்.             

காந்தி மகான் நடத்திய தண்டி யாத்திரையில் இந்திய மக்கள் தம் நாட்டின் சுதந்திரத்திற்காய் கூட்டம் கூட்டமாய் நடந்து சென்றனர். சுதந்திர இந்தியா தலைநிமிர்ந்தது. இன்று மத்திய ஆட்சியாளர்களின் செயல்பாடுகளால் இந்தியாவெங்கும் இந்திய மக்கள் கூட்டம் கூட்டமாக இடம்பெயர்ந்த செல்கின்றனர். கடல்கடந்து கூட வாழ முடியாது என்பதை லட்சத்தீவுகளில் இந்திய அரசாங்கத்தின் ஆட்சி என்னும் லட்சணம் காட்டிக் கொடுக்கிறது.

நாமெல்லாம் ஒருநாள் எங்கே செல்ல  என்று புரியாமல், குடும்பத்துடன் எஞ்சியிருக்கும் வாழ்வை காப்பாற்றிக் கொள்ள குடும்பத்துடன் நடந்துச் செல்ல நேரிட்டால் என்னவாகும் என்ற கேள்வியோடு ‘கஃபிலாக்களை” பற்றி கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம்.

- சுடலைமாடன்

Pin It