cuba lidiaலிடியா எஸ்தர் டோஸ்

லிடியா எஸ்தர் டோஸ் 1916ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் நாள் ஹோல்குன்  நகருக்கு அருகிலுள்ள மிர் எனும் வடகிழக்கு நகரில் பிறந்தார். தந்தை கிளாடியோ டோஸ் கோமேஸ் ஸ்பெயினில் உள்ள சாண்டாண்டரை சேர்ந்தவர். அவர்  வெலாஸ்கோவைப் பூர்விகமாகக் கொண்ட தெரசா சான்செஸ் அவிலாவை 1912ஆம் ஆண்டின் இறுதியில் திருமணம் செய்து கொண்டார்.

அவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகளுக்கு பிறகுக் கடைக்குட்டியாக லிடியா பிறந்தார். வணிகத் தொழில் செய்து வந்த அவர் வணிகக் கூட்டாளரால் தாக்கப்பட்டு இறந்து போனார். லிடியாவின் தாயார் மறுமணம் செய்து கொண்டு போர்டோரிகோவின் சான் ஜெர்மானுக்குச் சென்று விட்டதால் மிர்ரில் உள்ள தன் மாமாவின் பராமரிப்பில் லிடியா வளர்ந்தார்.

லிடியாவால்  5ஆம் வகுப்பு வரை  மட்டுமே படிக்க முடிந்தது, ஆனாலும் பள்ளி நிகழ்வுகள் அனைத்திலும் ஆர்வத்துடன் பங்கேற்றார். இசை, நடனம், நடிப்பு ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடுடையவராக இருந்தார். அவர் தையல் வேலைப்பாடுகளைக் கற்றிருந்தார். ஒரு நிபுணரைப் போலக் குதிரை சவாரி செய்தார்.

மிகவும் இளம் வயதிலே திருமணம் செய்து கொண்ட லிடியா  கணவருடன் சான் ஜெர்மான் நகரத்திற்குக் குடிபெயர்ந்தார். பின்னர் கணவரை விவகாரத்து செய்து  ஹவானாவுக்குச் சென்று, வீட்டுப் பணியாளராக வேலை பார்த்தவாறே  தையல் வேலையும் செய்து வந்தார். அவரது மகன் எஸ்ட்ரென் கெரில்லாப் போராளியாகச் செயல்பட்டுக் கொல்லப்பட்டார் எனக் கேள்விப்பட்டு கிழக்கு மாகாணத்திற்கு விரைந்தார். அங்கே அது தவறான செய்தி என்பதை அறிந்து நிம்மதியடைந்தார்.

1952 மார்ச் 10இல் லிடியா பாத்திஸ்டாவின் கொடுங்கோன்மைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றார். தனது மகன் எஃப்ரான் கெரில்லாப் படைப்பிரிவில் சேர்ந்துள்ளான் என்பதை அறிந்ததும், தானும் அதே பாதையைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்தார். அவர் தன் குழந்தைகள் அருகே இருக்க முடிவு செய்தார். யாவ் ஆற்றின் கரையருகே  ஒரு வீட்டில், லிடியா கெரில்லாப் படைகளுக்கு உதவுவதற்கான தன் வேலைகளை தொடங்கினார். சீருடைகள் மற்றும்  கொடிகள் தைத்தார். கிரான்மா படகு தரையிறங்கிய போது, லிடியா பொறுப்பும் முதிர்ச்சியும் மிக்க பெண்மணியாக இருந்தார்., சான் பப்லோ டி யாவோவில் அவர் புரட்சிப் படையில் இணைந்தார்.

லிடியா சியரா மேஸ்ட்ராவின் தூதராகச் செயல்பட்டார். பிடல் காஸ்ட்ரோவும் எர்னஸ்டோ சே குவேராவும் ஒப்படைத்த பல பணிகளைத் துணிச்சலுடன் நிறைவேற்றி அவர்களின் மிகுந்த நம்பிக்கைக்குரியவரானார். லிடியாவும் புரட்சியின் வெற்றியில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார்.

லிடியாவை ஃபிடலும் சே குவேராவும் முக்கியமான ஆவணங்களுடன் சாண்டியாகோ மற்றும் ஹவானாவுக்கு அனுப்பினர். திரும்பும் பயணத்தில், அவர் போராளிப் படைகளுக்கான மருந்துகள், ஆயுதங்கள் மற்றும் பிற பொருட்களை எடுத்து வருவார். அவ்வாறு பயணம் மேற்கொள்ளும் போது அதிகாரிகளுக்குத் தன் மீது சந்தேகம் வராதவாறு நேர்த்தியாக உடை அணிந்து  தலைமுடியின் நிறத்தை மாற்றி, கண்ணாடி அணிந்தவாறு செல்வார். "ஒரு கியூபப் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையில் பாத்திஸ்டா படையினர் லிடியாவுடன் உரையாடலில் ஈடுபட்டால், எதுவும் நடக்காதது போலவும், உலக விசயங்களில் அக்கறை இல்லாதவர் போலவும் சிரித்தவாறே மணிக்கணக்கில் பேசவும் லிடியாவால் முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சே குவேராவின் கூற்றுப்படி, லிடியா புரட்சி படையில் சேர்ந்த அக்கணமுதலே  உற்சாகமாகவும் குறிப்பிடத்தக்க அர்ப்பணிப்புடனும் பணிசெய்தார், அவரது துணிச்சல் வரம்பற்றது. லிடியா சமவெளிகளுக்கும் மலைகளுக்கும் இடையில் மிகவும் ஆபத்தான பணிகளை நிறைவேற்றினார். முக்கியச் செய்திகளை மலைகளுக்குக் கொண்டு வந்தார், கெரில்லா செய்தித்தாள் எல் கியூபானோ லிப்ரே, மருந்துகள் என்று உத்தரவிடப்பட்ட அனைத்தையும் எடுத்துச் சென்றார்.

சே குவேரா மற்றும் அவரது படையானது  வேகாஸ் டி ஜிபாகோவாவுக்குச் சென்ற போது,  40 கெரில்லாக்களைக் கொண்ட அவரது துணை முகாமின் தலைவராக லிடியா நியமிக்கப்பட்டார், அவரது உறுதிமிக்க அமைதியான அணுகுமுறை, பெண்களின் ஆணையின் கீழ் செயல்பட பழகாத ஆண்களிடையே மனக்கசப்பை ஏற்படுத்தியது. அவரது செயலபாடுகள் சிலரிடம் பாராட்டுதலையும், சிலரிடம் வெறுப்பையும் பெற்றிருந்தது என்று சே குறிப்பிட்டுள்ளார். லிடியா சே குவேராவின் மரியாதைக்குரிய புரட்சிகர ஆளுமைகளில் ஒருவராக  இருந்தார்.

லிடியா தனது சக போராளியும், சிறந்த நண்பருமான  குளோடோமிரா அகோஸ்டா ஃபெரலுடன் ஒரு பணி நிமித்தமாக சியராவிலிருந்து ஹவானா சென்றார். ஏறக்குறைய இரண்டு வாரத்திற்குள் முடிக்க வேண்டிய முக்கியப் பணிகளுக்காக ஹவானா வந்து சேர்ந்த அந்த இரண்டு தூதர்களும் பாதுகாப்புக் காரணங்களுக்காக ஒரே இடத்தில் தங்கவில்லை.

செப்டம்பர் 9 அன்று ஒரு தலைமறைவுப் போராளியின் வீட்டில் தங்கியிருந்த போது நள்ளிரவில் காவலாளிகள் போராளிகள் மீது திடீர்த் தாக்குதல் மேற்கொண்டனர். ஆல்பர்டோ அல்வாரெஸ் (21 வயது), லியோனார்டோ வால்டஸ் (23 வயது), ஒனெலியோ டாம்பியேல் (22 வயது), மற்றும் ரெனால்டோ குரூஸ் உட்பட 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். லிடியாவும் குளோடோமிராவும் வெளியே தள்ளப்பட்டுப் பின்னர் 11ஆவது காவல் நிலையத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டனர். லிடியாவுக்கு அப்போது  42 வயது, குளோடோமிராவுக்கு 22 வயது. அவர்கள் சிறைப்படுத்தப்பட்டுக் கொடிய முறையில் சித்திரவதை செய்யப்பட்டனர். செப்டம்பர் 17, 1958 அன்று, பாத்திஸ்டாவின் காவல் படையினர் லிடியாவையும்  குளோடோமிராவையும் கொலை செய்து  அவர்களின்  உடல்களைக் கடலில் வீசியெறிந்தனர்.

லிடியா கியூப மக்களின் நினைவில் துணிவுமிக்க கியூபாவின் வீர மகளாகத் திகழ்கிறார். அவரது வீடு இப்போது  அருங்காட்சியகமாக உள்ளது.

குளோடோமிரா அகோஸ்டா ஃபெரலெஸ்

குளோடோமிரா அகோஸ்டா ஃபெரலெஸ்  1936ஆம் ஆண்டில் பிப்ரவரி 1ஆம் நாள் மன்சானிலோவில் உள்ள கயல் எனும் கிராமத்தில் பிறந்தார். ஒன்பது வயதில் வீட்டு வேலை செய்வதற்காக வீட்டை விட்டு வெளியேறி நகரத்திற்குச் சென்ற குளோடோமிரா ஜூன் 1957இல் அவரது வீட்டிற்கு அருகே இராணுவத் தாக்குதல் ஏற்பட்ட போது, கிராமத்திற்குத் திரும்பி, போராளிகளுடன் இணைந்து செயல்படத் தொடங்கினார், அப்போது அவருக்கு இருபது வயது. போராளிப் படையில் முதலில் அவர் துணி துவைப்பது, தண்ணீர் கொண்டுசெல்வது  ஆகிய வேலைகளையே  செய்தார். அவரது நுண்ணறிவும், அர்ப்பணிப்பும் தலைவர்களின் கவனத்தை ஈர்த்தது, ஃபிடல் காஸ்ட்ரோவின் முதல் முன்னணிப் படையின்  தூதராக அவர் நியமிக்கப்பட்டார்.

கியூப கிராமப்புறங்களின் தீவிர வறுமையில் பிறந்த பலரைப் போல அவரும் கல்வியறிவு பெறாத போதும், இயல்பிலேயே நுண்ணறிவு மிக்கவராகவும், சிக்கலான பணிகளைத் திறம்பட செய்து முடிப்பவராகவும் இருந்தார். மிகவும் விழிப்புடனும், சுறுசுறுப்பாகவும் செயல்படுமிறவராகவும் துணிவுமிக்கவராகவும் இருந்தார்.  கிளர்ச்சிப் போராட்டத்தின் போது சியரா மேஸ்ட்ராவுக்கும், சமவெளிகளில் செயல்படும் மற்றக் கிளர்ச்சிப் படைகளுக்கும் இணைப்பு ஏற்படுத்துவதில் முக்கியப் பங்காற்றினார்.

அவரது சிறந்த நண்பரும் போராட்டத்தில் தோழருமான லிடியா டோஸைப் போலவே, ஃபிடல் காஸ்ட்ரோ, எர்னஸ்டோ சே குவேரா ஆகியோரின் முழு நம்பிக்கையையும் பெற்றிருந்தார். ஃபிடல் காஸ்ட்ரோ அவரிடம் ஒப்படைத்த நுட்பமான பணிகளை அவரால் திறம்படச் செய்ய முடிந்தது. ஜூலை 26 இயக்கத் தலைமையின் முழு நம்பிக்கையையும் அவர் பெற்றிருந்ததால், அடிக்கடி கிராமப்புறங்களுக்கும்  நகரங்களுக்கும் சென்று பிற பகுதிகளில் செயல்படும் புரட்சியாளர்களுக்கு அறிவுறுத்தல்களை அனுப்பும் பணியை மேற்கொண்டார்.

வெளுத்துப் போன நிறத்துடன் மெலிந்தவராகவும் கூச்சமிக்கவராகவும் காணப்பட்ட போதும் தேவைப்படும் போது அசாத்தியத் துணிவுடன், மன உறுதியுடன் செயல்பட அவரால் முடிந்தது. இரண்டு சந்தர்ப்பங்களில், பாத்திஸ்டா படையினரால் சிறைப்படுத்தப்பட்டார், ஆனால் எதுவும் அவரது துணிச்சல்மிக்க பணியைத் தடுக்கவில்லை.

எஸ்காம்ப்ரேயில் என்ன நடக்கிறது, மக்கள் அங்கு எப்படி உள்ளனர் என அந்தப் பகுதியின் நிகழ்வுகளை அறிந்து கொள்வதில் ஃபிடல் ஆர்வமாக இருந்தார்; அதைத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாக இருந்தது. அதற்கும் குளோடோமிராவையே  அங்கு அனுப்பினார், அவர் அங்கு சென்று தேவையான தகவல்களுடன் திரும்பினார்.

1958 பிப்ரவரியில், எஸ்காம்ப்ரேயில் இடம்பெற்ற கெரில்லா தலைமையகத்தை குளோடோமிரா தொடர்பு கொள்ளுமாறு ஃபிடல் கேட்டுக் கொண்டார். பின், ஹவனாவில் இருந்த ஃபாஸ்டினோ பெரெஸுக்கு ஏப்ரல் 9 வேலைநிறுத்தம் தொடர்பான சில ஆவணங்களை வழங்க ஃபிடல், குளோடோமிராவை நியமித்தார். குளோடோமிரா பகைவர்களிடம் சிக்காமல் வெற்றிகரமாக அதைச் செய்து முடித்தார்.

மரியனா கிரஜெல்ஸ் என்ற பெண்களுக்கான ஆயுதப் படையை உருவாக்குவது குறித்துப் பேசப்பட்ட போது குளோடோமிரா அளவற்ற மகிழ்ச்சியடைந்தார். பிறகு தளபதி  வேலை நிமித்தமாக அவரை ஹவானாவுக்குச் செல்லுமாறு  பணித்த போது அம்மகிழ்ச்சி நீடிக்க வில்லை. அதை கவனித்த சிலர் அவர் பெண்கள் படைப்பிரிவைச் சேர்ந்தவர் தான் என்றும் ஹவானாவிலிருந்து திரும்பிய பின், அதில் இணையலாம் என்றும் உறுதியளித்தனர். ஆனால் ஃபாத்திஸ்டா படையினர் அவரது மகிழ்ச்சியை நிரந்தரமாக பறித்துக் கொண்டனர்.

"குளோடோமிரா புறப்படுவதற்கு முந்தைய நாள் இரவு, நார்மா ஃபெரர் அவரைப் பார்க்கச் சென்ற போது அவர் மிகவும் அழுதுள்ளார், ஏனெனில் அவர் சியராவிலேயே தங்கவே விரும்பினார். இருப்பினும், போராளிக்குரிய உறுதியுடன் அவர் மறுநாள், மிக சீக்கிரமே அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

மரியானா கிரஜல்ஸ் உறுப்பினர்களில் ஒருவரான லிலியா ரியோ ரோட்ரிக்ஸ், ஒரு சந்தர்ப்பத்தில் கூறிய போது குளோடோமிரா அகோஸ்டா ஃபெரலெஸ் என்ற பெண்ணும் மரியானா கிரஜல்ஸில் இருந்தார். அவர்  பணி நிமித்தமாக  ஹவானாவுக்கு அனுப்பப்பட்ட போது அவரும் லிடியா டோஸ் சஞ்செஸ் என்பவரும் பிடிபட்டு சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

 “வீரப்பெண். குளோடோமிரா ஒரு பணிவுமிக்க இளம் பெண், அளவுகடந்த புத்திசாலித்தனத்துடனும் துணிவுடனும் செயல்பட்டவர், அவரும் லிடியாவும் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர், ஆனால் கடைசி வரை எதிரியிடம் எந்த ரகசியத்தையும் வெளிப்படுத்தாமல், எதிரியிடம் ஒரு வார்த்தை கூட பேசாது உறுதியுடனும் இருந்தனர்.” என்று  குளோடோமிராவையும் லிடியாவையும் பற்றி ஃபிடல் குறிப்பிட்டுள்ளார்.

தளபதி சே குவேரா அவர்களை அவர்களை பற்றி  பின்வருமாரு நினைவு கூர்ந்தார்:

அவர்களின் உடல்கள் மறைந்துவிட்டன, லிடியாவும் குளோடோமிராவும் தங்களது  சுதந்திரத்திற்கான பெரும் போரின் கடைசி நாட்களில் ஒன்றாக போராடினார்கள். .

கிளர்ச்சி இராணுவத்திற்குள், அந்த வேதனையான நாட்களில் போராடி தியாகம் செய்தவர்களிடையே, அபாயகரமான அன்றாட பணிகளை செய்து தீவு முழுவதும் தகவல் தொடர்பை சாத்தியமாக்கிய அந்த பெண்களின் நினைவுகள் என்றென்றும் நம்முடன் வாழ்கின்றன.”

குளோடோமிராவின் அர்ப்பணிப்பையும், புரட்சிகர நடவடிக்கைகளை புரட்சிகர நடவடிக்கைகளையும் நினைவுகூரும் வகையில், கியூப பெண்கள் கூட்டமைப்பின் பல கட்டமைப்புகளுக்கும் இந்த வீரமிக்கப் பெண்ணின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

20 வயது வித்தியாசம் கொண்ட இரு வேறு ஆளுமைகளான லிடியாவும், குளோடோமிராவும் கொண்ட கொள்கையில் உறுதியாலும், அர்ப்பணிப்பாலும் ஒன்றுபட்ட தோழர்கள். இறப்பின் போதும் ஒன்றிணைந்த அத்தோழர்கள் கியூபப் புரட்சி வரலாற்றின் நினைவுச் சின்னமாக இறவாப் புகழ்பெற்றுள்ளனர். 

(தொடரும்)

- சமந்தா 

Pin It