தமிழில் கவிதைகளுக்குப் பஞ்சமே இல்லை. கடந்த இருபத்தைந்து நூற்றாண்டுகளுக்கு முந்தைய கவிதை தொடங்கி நேற்றைய… இன்றைய… கவிதைகள் வரை பல்லாயிரம் தமிழ்க் கவிதைகளைப் பார்த்து.. படித்து.. பழகி விட்டோம். இன்னும் பிடிபடாத ஒரு விஷயம். கவிதை செய்யும் கலை. கவிஞர்களுக்கு உள்ளேயிருந்து கவிதை பிறக்கிறது. மற்றவர்களுக்கு? எழுத்தும் சொல்லும் அடம் பிடிக்கின்றன. பிறவிக் கவிஞர்கள் என்று கேள்விப்பட்டிருப்போம். அதென்ன பிறவிக் கவிஞன்? கருவிலே திருவுடையான். அப்படியெல்லாம் யாரும் பிறப்பதில்லை. கவிஞர்கள் கவிஞர்களாகப் பிறப்பதில்லை. அவர்கள் கவிஞர்களாகிறார்கள் அல்லது ஆக்கப்படுகிறார்கள். நல்ல கவிதை எழுதுவது என்பது ஒருவகை நுட்பச் செய்நேர்த்தி. “சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்” என்று ஒளவையார் சொன்னதைப் போல், கவிதை பழகுவதால் வருவது. பழகுவது என்றால் எழுதிப் பழகுவது மாத்திரமில்லை. மனத்தால் பழகுவது.. பழக்குவது. அதனால்தான், “உள்ளத்து உள்ளது கவிதை” என்று கவிமணி சொன்னார். கவிதை எழுதப் படிப்பறிவு கட்டாயத் தேவையில்லை. இதற்கு நாட்டுப்புறக் கவிதைகளே சாட்சி.

இயற்கையின் படைப்பில் மனிதன் ஒரு விந்தை யென்றால் மனிதனின் படைப்பில் கவிதை ஒரு விந்தை. கவிதைகளுக்குத்தான் எத்தனை சுதந்திரம்! ஒருமுறை கவிதையைக் கேட்டோ வாசித்தோ நமக்குள் அனுமதித்து விட்டால் அந்தத் கவிதைகள் நம் மனத்துள் புகுந்து செய்யும் சித்துவேலைகள்தாம் என்னென்ன! சித்தர்கள் செய்யும் எண்வகைச் சித்துகளைப்போல் எண்ணிலாச் சித்துகளை தமக்குள் செய்யும் அந்தக் கவிதைகள். உருவைச் சுருக்குவது, பேருரு எடுப்பது, தமக்குள் ஒன்றுமில்லாதது போல் மயக்குவது, தமக்குள்ளே எல்லாம் இருப்பதாகக் காட்டுவது, சுவைஞனிடத்தில் ஆக்கலும் காத்தலும் அழித்தலும் செய்வது என அப்பப்பா! நல்ல கவிதைகள் செய்யும் மாயங்கள் சொல்லிமாளா! நல்லவேளையாக இன்றைக்குக் கவிதை எழுதும் நூற்றுக்கணக்கான கவிஞர்களின் ஆயிரக்கணக்கான கவிதைகளில் நல்ல கவிதைகள் கொஞ்சம் அரிதாயிருப்பதால் நாம் தப்பித்தோம்.

எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் எல்லோருமே கவிஞர்கள்தாம். பலர் இன்னும் எழுதவில்லை என்பதால் அவர்கள் கவிஞர்கள் இல்லை என்று சொல்லமுடியாது. இன்னும் எரியவில்லை என்பதால் விறகுக்குள் நெருப்பில்லை என்று சொல்லமுடியுமா?. எழுதும் கவிதைக்கு உயிர் வேண்டுமே! உயிருள்ள கவிதைகள்தாமே வாழும்! உயிருள்ள கவிதையை யார் எழுதமுடியும்? எப்படி எழுத முடியும்? நன்னூல் ஆசிரியன் பவணந்தி விடை சொல்கிறான்,

பல்வகைத் தாதுவின் உயிர்க்குஉடல் போல்பல

சொல்லால் பொருட்கு இடனாக உணர்வினின்

வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள்.

கவிதையில் உள்ள சொற்கள் உடல் என்றால், கவிதையின் பொருள்தான் உயிர். வெறும் சொற்கள் கவிதையாகாது! அது வெற்று உடம்பு.. கருத்து மட்டுமே கவிதையாகுமா? அதுவும் ஆகாது. உணர்வினின் வல்லோர் சொல்லும் கருத்தே கவிதையாகும். அதையே அணிகளால் அழகூட்டினால் கவிதை சிறக்கும் இதுவே நன்னூலார் கருத்து. நன்னூல் ஆசான் பவணந்தி சொல்லும் இலக்கணம் எல்லாக் கவிதைகளுக்கும் பொதுவானது. கவிதைக்கு இலக்கணம் எதுவோ, அதுவே கவிஞர்களுக்கும் இலக்கணம். கவிஞர்கள் நல்ல மொழியறிவும் உலகியல் பார்வையும் நுட்பமான உணர்வு வெளிப்பாட்டுத்திறனும் அழகுணர்ச்சியும் கொண்டவர்களாய் இருத்தல் வேண்டும். இங்கே, உலகியல் அறிவு என்பது தமக்கான அரசியல் அல்லது கொள்கை. அதுதான் கவிஞனின் இயக்கம், கவிதையின் உயிர். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே இத்துணை தெளிவான கவிதைக் கோட்பாடுடைய தமிழர்களின் கவிதைப் பயணம் எத்துணை நெடியதாயிருக்கும் என்பது சொல்லாமலே விளங்கும்.

தமிழின் கவிதைப் பயணம் என்பது கவிஞர்களின் தொடர்ச்சியான பயணங்களால் ஆனது. ஒவ்வாரு கவிஞனுக்கும் தனித்தனியான கவிதைப் பயணங்கள் உண்டு. தனித்தனிக் கவிஞர்களின் தொடர்ச்சியில்தான் தமிழ்க் கவிதையின் நெடும்பயணம் சாத்தியமாயிற்று. சங்கப் புலவர்கள் தொடங்கி இளங்கோ, கம்பன் வள்ளலார், பாரதி, பாவேந்தன் என நீளும் தமிழ்க் கவிஞர்களின் தொடர் பயணத்தின் ஒரு புள்ளிதான் இந்நூலாசிரியர் பிச்சினிக்காடு இளங்கோவின் கவிதைப் பயணம்.

'என்னோடு வந்த கவிதைகள்' என்ற தலைப்பில் கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ தம் கவிதைகளோடு தாம் பயணப்பட்ட பயண அனுபங்களை நிரல்பட ஆற்றொழுக்காக விவரிக்காமல் முன்பின்னாக, வளைவுகளாகவும் நேர்க்கோடு களாகவும் வட்டங்களாகவும் விவரித்துச் செல்கிறார். வடிவற்ற வடிவில் சொல்லப்படும் இத்தகு விதப்புமுறை வாழ்க்கை அனுபவங்களின் வடிவற்ற வகைமாதிரியில் அமைந்துள்ளமை இந்நூலின் தனிச்சிறப்பு.

'என்னோடு வந்த கவிதைகள்' என்ற இப்படைப்பு, கவிதை நூலா? கவிதைகளைக் குறித்த கட்டுரை நூலா? இலக்கிய விமர்சனமா? பயணக் கட்டுரையா? வாழ்க்கை வரலாற்று நூலா? என்று வாசிப்பவர்களை ஒருகணம் திகைக்க வைக்கும். முன்மாதிரிகள் அற்ற ஒரு புதுமைப் படைப்பாக இந்நூலைக் கவிஞர் உருவாக்கியுள்ளார் என்பதே உண்மை.

பிச்சினிக்காடு இளங்கோ…

கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ, தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், அத்திவெட்டி கிராமத்தைச் சேர்ந்த பிச்சினிக்காட்டில் 1952-இல் மா.ஆறுமுகம் இலக்குமி அம்மாள் இணையருக்கு முதல் மகனாகப் பிறந்தார். கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் பட்டம் பயின்ற இவர் பள்ளியில் படிக்கும் இளம் வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றல் உடையவராயிருந்தார். தமிழக அரசு வேளாண்மைத் துறையிலும், திருச்சி அனைத்திந்திய வானொலியிலும், சிங்கப்பூர் ஒலிபரப்புக் கழகத்திலும், சிங்கப்பூரில் எண்டியுசி 100.3 பண்பலை வானொலியிலும் பணியாற்றியுள்ளார். குறிப்பாக, சிங்கப்பூர் தமிழர் பேரவை நடத்திய திங்களிதழான சிங்கைச் சுடரில் ஒற்றை ஆசிரியராகப் பொறுப்பேற்று, “தமிழ்தான் தமிழரின் முகவரி” என்ற முழக்க வரியை உருவாக்கிப் பணியாற்றினார்.

பத்துக்கும் மேற்பட்ட கவிதை நூல்கள் கவிதை மற்றும் நாடக நூல்கள், புதினம், கட்டுரை நூல்கள் என இருபதிற்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துத் தமிழுக்கு அணி சேர்த்துள்ள இந்நூலாசிரியர் பிச்சினிக்காடு இளங்கோ அவர்கள் பல விருதுகளுக்குச் சொந்தக்காரர். தமிழகத்திலும் சிங்கையிலும் இவர் ஆற்றியுள்ள இலக்கியப் பணிகள், குறிப்பாகக் கவிதைப் பணிகள் காலத்தை வென்று நிற்கும் தகுதிபெற்றவை. சிங்கப்பூரில் கவிமாலை என்ற கவிதை இலக்கிய அமைப்பைத் தொடங்கிப் பல புதிய இளந்தலைமுறைக் கவிஞர்களை உருவாக்கிய பெருமை இவருக்குண்டு.

திருச்சி வானொலியிலும் சிங்கை பண்பலை வானொலியிலும் இவர் முத்திரை பதித்த நிகழ்ச்சிகள் எண்ணற்றவை. குறிப்பாகத் திருச்சி வானொலியில், வானம்பாடி கிராமிய இசைப்பாடல்களை வாரந்தோறும் எழுதி ஒலிபரப்பினார். ‘கொட்டும் முரசு’ நிகழ்ச்சியையும் எழுதிப் படைத்தார். கிராமம் போவோமே, ஊர்க்கூட்டம், ஊர்மணம், நாடகம் முதலான வானொலி நிகழ்ச்சிகள் இவர் படைப்பில் ஒலிபரப்பாகி வெற்றி முரசு கொட்டின. ‘காடு’ பற்றி கன்னடத்தில் எழுதி ஒலிபரப்பான பாடல்களை இவர் தமிழில் மொழிபெயர்த்தார். அந்த பாடல்கள் தமிழகத்தின் அனைத்து வானொலி நிலையங்களிலும் ஒரே நேரத்தில் ஒலிபரப்பப் பட்டன. சிங்கப்பூர் வானொலியில் ‘ஒண்ணே ஒண்ணு’, கிராமத்துக் குயில்கள், பொங்கல், தீபாவளி இசைச்சித்திரம், இலக்கிய இன்பம், குறளின்பம், வீட்டுக்குவீடு, நான் ரசித்த பாடல், கவிதைத்தேன் முதலான புகழ்பெற்ற நிகழ்ச்சிகள் இவர் கைவண்ணத்தில் உருவானவை. சிறப்பாக இவர் படைத்தளித்த “எளிமை இது இனிமை” தமிழ் பற்றிய உரையாடல் நிகழ்ச்சி 101 வாரமும் “பாடல் தரும் பாடம்” என்ற திரைப்பாடல் பற்றிய உரையாடல் நிகழ்ச்சி 42 வாரமும் “வாழ நினைத்தால் வாழலாம்” தன்முன்னேற்ற நிகழ்ச்சி 51 வாரமும் ஒலிபரப்பாகிச் சாதனை படைத்தன.

வானொலி நாடகங்கள், இசைச் சித்திரங்கள், உரைச் சித்திரங்கள் என்று இவரின் வானொலிப் படைப்புகள் பல சாதனைகளைப் படைத்துள்ளன என்றாலும் இவரின் கவிதைப் பணியும் பயணமும் செய்துள்ள சாதனைகள் அவற்றை விஞ்சியவை. தாம் கவிதை முழக்கும் மேடைகள் தோறும் கேட்டார் நெஞ்சைப் பிணிக்கும் வகையில் தம் கவிதையால் சுவைஞர்களை வசீகரிக்கும் சொல்லாற்றலும் கருத்தாற்றலும் ஒருங்கே வாய்க்கப் பெற்றவர் பிச்சினிக்காடு இளங்கோ என்பது மிகையன்று.

நான் வைத்துக் கொண்ட புனை பெயர்கள் என்று இந்நூலில் அவரே ஒரு பட்டியலைத் தருகின்றார். சோழநாடன், கோடியூர் கண்ணதாசன், சுதா இளங்கோ, கலை இளங்கோ, மாயி, பகல்தாசன், தேனீ, ராதா என்பன அவை. இப்புனை பெயர்களில் பகல்தாசன் என்ற பெயர் குறிப்பிடத்தக்கது. அதற்கும் விளக்கம் கவிஞரே தருகிறார் வேறு ஒரு கட்டுரையில். “பகல்தாசன் என்றால் அதன் உண்மையான விளக்கம் ப.. பட்டுக்கோட்டை, கல்.. கல்யாணசுந்தரம். பட்டுக் கோட்டை கல்யாணசுந்தர தாசன்” தமிழ்க் கவிஞர்களில் பாரதிக்கு தாசன் பாரதிதாசன், பாரதிதாசனுக்கு தாசன் சுரதா (சுப்பு ரத்தின தாசன்), பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரத்தின் தாசன் பகல்தாசன் அவர்தாம் இந்நூலாசிரியர் பிச்சினிக்காடு இளங்கோ.

'என்னோடு வந்த கவிதைகள்' என்ற இக்கட்டுரைத் தொகுப்பில் முப்பது அத்தியாயங்கள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அத்தியாயமும் கவிதை குறித்ததோர் விளக்கத்துடன் தொடங்குகின்றது, முடிகின்றது. கவிதை குறித்த விளக்கத்தை உலகின் தலைசிறந்த கவிஞர்கள், சிந்தனையாளர்கள், புகழ்பெற்ற திறனாய்வாளர்களின் மேற்கோளோடு தொடங்குவது நூலுக்கு அணி சேர்ப்பதோடு ஆழத்தையும் கூட்டுகின்றது. இதோ ஒரு சான்று,

கவிதை,

கவிதை என்றால் என்ன?

ஒன்றுக்கும் மேற்பட்ட அபத்தமான

பதில்கள் அளிக்கப்பட்டு விட்டன.

எனக்குத் தெரியாது

எனினும் உயிரின் கீற்றினைப் போல்

நான் இறுகப் பற்றியுள்ளேன் அதனை

- விஸ்லாவா சிம்போர்ஸ்க்கா

(96இல் நோபல் பரிசு பெற்ற போலந்துக் கவி)

கவிதைக்கு விளக்கம் சொல்லிக் கொண்டே போகலாம். அது ஒரு தீராநதி. அதனால்தான் நான் வயது பாராமல் நீந்திக் கொண்டிருக் கிறேன். அனுபவங்களையும் உணர்வுகளையும் சொல்வதே கவிதை. என் அனுபவங்களைச் சொல்லவே நான் கவிதை எழுதும்படி யாயிற்று. என் உணர்வுகள் என்னைக் கவிஞனாக்கின என்பது கவிஞர் விக்ரமாதித்யன் அவர்களின் வெளிப்பாடு. இது எல்லோர்க்கும் பொருந்துகிறதோ என்னவோ எனக்குப் பொருந்துகிறது. அப்படி அனுபவங்கள் வழங்கிய கவிதையைத்தான் நானும் தொகுத்திருக்கிறேன், என் பத்துத் தொகுப்புகளும், இனிவரும் தொகுப்புகளும் அப்படித்தான் அமையும்.

மேற்சுட்டிய பகுதி பதின்மூன்றாம் அத்தியாயத்தின் தொடக்கப் பகுதி. இவ்வாறே ஒவ்வொரு கட்டுரையும் தொடக்கத்திலும் முடிவிலும் கவிதை அல்லது வாழ்க்கை குறித்த தத்துவத் தேடலோடு அமைக்கப் பட்டுள்ளது.

      ஒருவகையில் இந்த நூல் கவிஞரின் வாழ்க்கை வரலாறு போன்றதே. வாழ்க்கை வரலாறென்றால், பிறந்தேன், வளர்ந்தேன், வாழ்ந்தேன் என்று எழுதாமல் வாழ்க்கையைத் தமது கவிதைப் படைப்பின் புள்ளியிலிருந்து தொடங்கி கவிதையுடனான பயணத்தை விவரிக்கும் போக்கில் தமது கவிதைகளின் சிதறல்களோடு இடையிடையே மற்ற கவிஞர்களின் மிகச் சிறந்த கவிதைச் சான்றுகளின் துணையோடு நடத்திச் செல்கிறார் நூலாசிரியர். நூலின் ஒவ்வாரு அத்தியாயமும் காலவரிசையில் அமைக்கப்படவில்லை. மாறாக வாழ்க்கையின் குறுக்கும் நெடுக்குமான அனுபவப் பகிர்வுகளோடு பதிவுகள் இடம்பெற்றுள்ளன.. குறுக்கும் நெடுக்குமான பயணத்தில் வெட்டுப்படும் புள்ளிகளில் சில சம்பவங்களும் தகவல்களும் மீண்டும் மீண்டும் இடம்பெறுவது தவிர்க்க முடியாததாகின்றது.

      படைப்பாளிக்கும் படைப்புக்குமான உறவு குறித்துக் கிழக்கிலும் மேற்கிலும் எத்தனையோ திறனாய்வாளர்கள் எழுதிவிட்டார்கள். ஆனால் பிச்சினிக்காட்டாரின் என்னோடு வந்த கவிதைகள் என்ற இந்நூல் படைப்பு – படைப்பாளி என்று பேதப்படுத்திப் பார்க்காமல் படைப்பாளியே எப்படிப் படைப்பாக மாறுகிறான் என்பதனை ஓர் அத்வைதமாய் விரித்துரைக்கின்றது. படைப்பாளி படைப்பாக மாறும்போது பிரபஞ்சத்தின் நிலையென்ன என்ற கேள்விக்கும் நுட்பமான விடை நூலில் கிடைக்கின்றது. பின்வரும் ஒன்பதாம் அத்தியாயப் பகுதியைப் பார்ப்போம்.

      கவிதையை நான் ஏன் எழுத வேண்டும்? கவிதை ஏன் என்னை எழுத வைத்தது? கவிதைக்கும் எனக்குமான உறவு எப்படி வந்தது என்பதை அசைபோடுகிற போதுதான் சில அரிய தருணங்களை நினைவுக்குக் கொண்டு வருகிறோம். இல்லையெனில் அவை தோன்’றா நட்சத்திரங்களாக விழிக்கா விதைகளாக ஆகியிருக்கும். ஒவ்வொரு கவிஞனும் இயற்கையைப் பார்த்திருக் கிறான். இயற்கையும் கவிஞனைப் பார்த்திருக்கிறது, கவிஞனைப் பாதித்திருக்கிறது. அந்த விளைவின் விளைச்சல்தான் கவிதை. இந்த உணர்வு, தேடல், புரிதல், அறிதலாக விளைகிறபோது எத்தனையோ மாற்றங்களைக் கண்டிருக்கிறது, எத்தனையோ வடிவங்களைக் கொண்டிருக்கிறது. அதற்கும் எத்தனையோ பெயர்களைச் சூட்டி அழைத்துக் கொண்டிருக்கிறோம். கவிதை வளர்ந்துகொண்டே வருகிறது. கவிஞன் வளர்வதால்தான் கவிதையும் வளர்கிறது.

நூலின் இந்த வரிகளைப் படிக்கின்ற போது கவிதை – கவிஞன் இரண்டில் எது பிரம்மம் - மூலம் என்பதே தெரியாத நிலையில் இரண்டும் அத்துவிதமாய்க் கலந்திருப்பதை நூலாசிரியர் விளக்கும் நுட்பம் அலாதியானது.

      நூலாசிரியருக்கு எல்லாமே கவிதைதான். பேச்சு, மூச்சு, சிந்தனை எல்லாமும். தாம் நேசிக்கும் அத்தனையும் அவருக்குக் கவிதையாய்த்தான் தெரிகின்றன. தமது இரண்டாவது தாய்நாடு என்ற வாஞ்சையோடு அவர் நேசிக்கும் சிங்கப்பூரை “மாதந்தோறும் கவிமாலை, ஆண்டுதோறும் கவிதைப் பெருவிழா, கவிதை நூலுக்குப் பரிசு, பெருவிரைவு வண்டியில் கவிதை, மாணவர்களுக்குக் கவிதைப் பட்டறை, கவிதைப் போட்டி இப்படிக் கவி வளர்க்கும் நாட்டைக் கவிதையூர் என்பதுதான் சரி” என்று கவிதையூராகப் பார்க்கும் நூலாசிரியரின் பெருவிருப்பு நம்மை வியப்பிலாழ்த்துகிறது.

      எளிமையான இனிய தமிழில் தங்கு தடையற்ற மொழியாளுமையோடு இந்நூலைப் படைத்துள்ள கவிஞரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஒரு புதினத்தை வாசிக்கும் அனுபவத்திற்கு இணையான அனுபவத்தை நூலின் வாசிப்பு நமக்குத் தருகின்றது. ஒரே மூச்சில் படித்து முடித்துவிடக் கூடிய வகையில் சுவை குன்றாமல் தம் பழைய நினைவுகளை அசைபோட்டு ஆளுமைகளை அறிமுகப்படுத்தும் போதும் இலக்கிய மேற்கோள்களை இடையிடையே பெய்து கவிதை இரசனையை மிகுவிக்கும் போதும் உலகச் சிந்தனையார்களின் மேற்கோள்களைக் கையாண்டு நம்மை நெறிப்படுத்தும் போதும் மொழிநடையின் எளிமையும் இனிமையும் குறையாமல் எழுதிச் செல்லும் கவிஞரின் நடைநலம் பாராட்டிற்குரியது.

நூலாசிரியரின் நடைநலத்திற்குப் பின்வரும் நூலின் பகுதியைச் சான்று காட்ட விழைகிறேன்.

பம்பரம் குத்தி விளையாடும்போது கவிதை எழுதவில்லை. அது கவிதை எழுதும் வயதில்லை. அது பம்பரப் பொழுது. காலம் என்கையில் பம்பரமாய் இருந்தது, விளையாடினேன். இப்பொழுது காலத்தின் கையில் நான் பம்பரம். அது விளையாடுகிறது என்னை. எவ்வளவு வயதானாலும் அந்தப் பம்பரப்பொழுது இளமையை மறக்க முடியவில்லையே

மேற்காட்டிய பகுதியில் கவிஞர் இளமை, முதுமை இரண்டையும் பம்பரத்தின் துணையோடு வேறுபடுத்திக் காட்டுகின்றார். இளமையில் காலம் என்கையில் பம்பரமாய் இருந்தது, இப்பொழுது முதுமையில் காலத்தின் கையில் நான் பம்பரமாய்ச் சுழல்கிறேன் என விவரிக்கும் பகுதி நூலாசிரியரின் மொழி ஆளுமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

இந்த அணிந்துரையின் பக்கங்களைக் கவிஞரின் கவிதை மேற்கோள்களால் நிரப்பிவிட நான் விரும்பவில்லை. அந்தக் கவிதைகள் நூலின் உள்ளே உங்களுக்காக் காத்திருக்கின்றன. காத்திருக்கும் கவிதைகளில் என்னைக் கவர்ந்த கவிதைகள் சிலவற்றின் தலைப்பை மட்டும் இங்கே பட்டியலிடுகிறேன்.

  1. பம்பரம்
  2. காலம்
  3. சிராங்கூன் சாலை
  4. அப்துல் கலாம்
  5. பூமகன்
  6. மழை நீர்

விண்மீன் கூட்டத்தில் பிடித்த விண்மீன்களைத் தேடியெடுத்து மடிகட்ட முனையும் சிறுமியின் நிலையில்தான் இந்த கவிதைத் தலைப்புகளைப் பட்டியலிட்டுள்ளேன்.

நான் இன்று கவிஞனென்ற விளக்கு. என்னை யாரெல்லாம் கவிஞன் ஆக்கினார்களோ அவர்களெல்லாம் தீக்குச்சிகள் என்று சொல்லிப் பல தீக்குச்சிகளை நூலின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் அறிமுகப்படுத்தி வரும் நூலாசிரியர் குறிப்பாக, பேரறிஞர் அண்ணாவின் மரணத்தின்போது தாம் எழுதியதைக் கவிதை என்று வகுப்பாசிரியர் முனியமுத்து அங்கீகரித்ததே என்கவிதைப் பயணத்தின் முதல்படி என்கிறார். அதேபோல் கண்ணதாசனின் தைப்பாவை நூலை அறிமுகம் செய்த ‘தானா’ என்றழைக்கப்படும் செ.தங்கவேலின் வழிகாட்டல் என் கவிதைப் பயணத்தின் இரண்டாம் படி என்று படிப்படியாய் தம் கவிதைப் பயணத்திற்குத் துணைநின்ற ஆளுமைகளைத் தருணங்களைப் பட்டியலிட்டு என்னோடு வந்த கவிதைகள் என்ற கவிதைப் பயணத்தை விவரிக்கின்றார் கவிஞர். ஒரு வெற்றி பெற்ற கவிஞரின் அடியொற்றி அவரோடு பயணப்படும் நமக்குக் கவிதை வெகுதொலைவில் இல்லை என்ற நம்பிக்கையை விதைப்பதே இந்த நூலின் மிகப்பெரிய வெற்றி என்று நான் கருதுகிறேன்.

நன்றி!

(சிங்கப்பூர் கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ அவர்களின் 'என்னோடு வந்த கவிதைகள்' நூலுக்கான அணிந்துரை)

- முனைவர் நா.இளங்கோ, தமிழ்த்துறைத் தலைவர், தாகூர் அரசு கலை அறிவியல் கல்லூரி, புதுச்சேரி- 605008

Pin It