கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

"வரலாற்றின் பாதையில் மகத்தான தோற்றமான திராவிட இயக்கத்தின் மீது சேற்றை வாரி இறைக்கும் துரோக வேலைகளில் சிலர் இறங்கி இருக்கிறார்கள். இத்தகையவர்களை நமது இன எதிரிகள் தங்கள் வசம் உள்ள ஊடகங்களின் தோள் மீது ஏற்றிக் காட்டுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில் ‘திராவிட இயக்கம் வளர்த்த தமிழ்’ எனும் அரிய கருவூலத்தைக் கொண்டு வந்துள்ளது பெரிதும் வரவேற்கத்தக்கதும் - பாராட்டத்தக்கதும்ஆகும்".

dravida iyakkam valarththa tamil bookநூலின் அணிந்துரையில் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் வரிகள் இவை.

தமிழ் வேறு, திராவிடம் வேறு என்றும், திராவிடம் தமிழுக்கு எதிரானது என்றும், காவிகளாலும், போலித் தமிழ்த் தேசியவாதிகளாலும் பல்வேறு வகையான புரட்டு வாதங்கள் முன்வைக்கப்பட்டு வரும் இன்றைய சூழலில், அத்தகைய வாதங்களுக்கெல்லாம் விடையளிக்கும் வகையில் இந்நூல் வெளிவந்துள்ளது.

தமிழ் மொழியின் வளர்ச்சியில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு குறித்து, ‘திராவிடம் வளர்த்த தமிழ்’ (பேராசிரியர் சுப. வீரபாண்டியன்) என்ற தலைப்பில் ஏற்கனவே நூல் வெளிவந்துள்ள நிலையில், இந்நூல் அவ்வரிசையில் மேலும் ஒரு நல்வரவு.

கவிதைத் தமிழ், மேடைத் தமிழ், உரைநடைத் தமிழ், இதழியல் தமிழ், புதினத் தமிழ், சிறுகதைத் தமிழ், நாடகத் தமிழ், திரைத் தமிழ், அறிவியல் தமிழ், ஆட்சித் தமிழ் என்னும் பத்து தலைப்புகளின்கீழ் திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் குறித்த செய்திகள் விரித்துரைக்கப்பட்டுள்ளன.

நூலின் தொடக்கத்தில் அமைந்த இரு கட்டுரைகள் திராவிடக் கருத்தியலின் அடிப்படை குறித்தும், தற்போதைய சூழலில் தலைதூக்கி வரும் சமஸ்கிருத ஆதிக்கப் போக்கு குறித்தும் தெளிவான பார்வையை முன்வைக்கின்றன.

தொடந்து வரும் தலைப்புகள், துறைவாரியாகத் தமிழ் வளர்ச்சியில் பங்காற்றியவர்கள் குறித்து விளக்குகின்றன.

ஒவ்வொரு துறையிலும் பலரால் அறியப்பட்ட ஆளுமைகளைப் பற்றி மட்டுமேயல்லாது, அதிக அறிமுகம் இல்லாதவர்களின் பங்களிப்பினைப் பற்றியும் பேசியிருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு.

திராவிட முன்னேற்றக் கழக அரசு அமைந்தவுடன் தமிழ் வளர்ச்சிக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், வெளியிடப்பட்ட அரசாணைகள் அனைத்தும் “ஆட்சித் தமிழ்” என்னும் தலைப்பின்கீழ் சான்றுகளோடு தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

அது போல அறிவியல் துறையில் தமிழ் வளர்ச்சி குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள செய்திகள் பலரும் அறியாதவை.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், திராவிட இயக்க வரலாற்று நூல்களின் வரிசையில் இந்நூல் இன்னுமொரு மைல் கல்.