கவிதா சொர்ணவல்லி எழுதி இரண்டாம் பதிப்பாக 'டிஸ்கவரி புக் பேலஸ்' என்ற பதி்ப்பகத்தால் அண்மையில் சென்னையில் நடந்து முடிந்த புத்தக காட்சியில் வெளியிடப்பட்ட 'பொசல்' என்ற சிறுகதை தொகுப்பைப் பற்றி ஒரு வரியில் கூறுவதானால் சிறப்பாக இருக்கின்றன.

பலர் சிறுகதைகளை எழுதினாலும் அதற்கேயுரிய வடிவத்தில் எழுதுவதில்லை. ஆனால் இச்சிறுகதை தொகுப்பானது சிறுகதை வடிவத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றது.

நான் சேலம் மத்திய சிறைச்சாலையில் இருந்தபோது சிறைச்சாலையின் நூலகத்திலிருந்த அமெரிக்க சிறுகதை எழுத்தாளர் 'ஓ ஹென்றி'யின் பெரிய ஆங்கில சிறுகதை தொகுப்பை ஆங்கிலத்தில் வாசித்தேன்.

அமெரிக்காவில் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தபோதுதான் அவர் பல சிறுகதைகளை எழுதினார். அச்சிறுகதைகளை வாசித்த அமெரிக்க மக்கள் அக்கதைகளின் முடிவானது அவற்றின் ஓட்டத்திற்கு மாறாக எவரும் எதிர்பார்க்காததாக இருந்ததால் அவர்கள் "ஓ!" ஹென்றி! என வியந்து அழைத்தனர். நானும் அக்கதைகளை வாசித்து முடித்தபோது அவ்வாறே உணர்ந்தேன். இதுதான் சிறுகதை வடிவத்தின் வெற்றி.

அதுபோலவே இத்தொகுப்பில் உள்ள கதைகள் ஒவ்வொன்றையும் வாசித்து முடித்தபோது "ஓ" கவிதா!! என்றே தோன்றியது.

இத்தொகுப்பின் பல கதைகளின் முடிவுகள் சிறுகதை வடிவத்திற்கே உரியவாறு வாசகர்கள் எதிர்பாராமல் இருக்கையில் அதை அதிகப்படுத்தும் வகையில் கதை மாந்தர்கள் தாம் எதிர்கொள்ளப்போகும் நிலைமையை யூகிக்க முடியாததால்-அக்கதை மாந்தர்களின் பண்பிலிருந்து(characterisation)-அவர்களிடம் ஊசலாட்டம்(dilemma/vacillation) தோன்றுகிறது. இதனால் வாசகர்களிடமோ unpredictability எழுகிறது.

கதை மாந்தர்களிடம் ஏற்படும் யூகிக்க முடியாமை, ஊசலாட்டம் ஆகியன கதைகளின்('மழையானவன்', 'கதவின் வெளியே மற்றொரு காதல்', 'நான் அவன் அது', 'எங்கிருந்தோ வந்தான்' 'டிரங்குப்பெட்டி புகைப்படப் பெண்' ஆகிய கதைகள்)முடிச்சுக்கு(knot) வலு சேர்க்கிறது.

இச்சிறுகதை தொகுப்பின் இன்னொரு அம்சம் என்னவெனில் நடந்திருக்க கூடியதை அல்லது நடக்கக்கூடியதை அல்லது நடக்க சாத்தியமுள்ளதை புனைவிலக்கிய வடிவத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. சிறுகதைகளில் அண்மைய ஆண்டுகளாக ஆதிக்கத்தைச் செலுத்தும் தன்னுணர்வோ இருத்தலியல் நெருக்கடியோ இருண்மை உணர்வோ இச்சிறுகதைகளில் வெளிப்படாதது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக, நிலவும் பண்பாட்டுச் சூழலின் மதிப்பீடுகளுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாகவே, நிலவும் கிராமச் சமூக மரபுகளுக்கு மாறானதாகவே இக்கதைகளின் முடிவுகள் இருக்கின்றன. நகரங்களில் நிலவும் பண்பாட்டு மதிப்பீடுகளுக்கே அதிர்ச்சியூட்டும் விதமாக கதைக் களங்களும் முடிவுகளும் நிறைந்ததாக இக்கதைகள் இருக்கையில் கிராமப்புற சமூகம் இவற்றை தாங்கிக் கொள்ளவே முடியாது.

'கதவின் வெளியே மற்றொரு காதல்', 'நான் அவன் அது' ஆகிய கதைகள் இதற்கு எடுத்துக்காட்டுகளாக திகழ்கிறது.

மற்றொரு முக்கிய அம்சமானது என்னவெனில் தமிழக படைப்பிலக்கியங்களில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய, நிலவும் கிராமப்புற சமூகத்தின் மீதான nostalgia என்ற தொனியில் இக்கதைகள் இல்லை. மாறாக எதார்த்த நினைவுகளாகவே சரியாக உள்ளது. மேற்காண் nostalgiaவானது பிற்போக்கானது. அத்துடன் Utopiaஆகவும் இருக்கிறது.

முதன்மையாக பெண்களுக்கும் தலித்துகளுக்கும் அனைத்து சாதிகளைச் சேர்ந்த உழைக்கும் வர்க்கத்தினருக்கும் விரோதமாக இருக்கும் கிராமப்புற கட்டப் பஞ்சாயத்து சமூகத்தை உன்னதப்படுத்துபவையாக இச்சிறுகதைகள் இல்லாதது பாராட்டத்தக்கது. நகர்ப்புறங்களில் நிலவும் போலி ஜனநாயகமும் கிராமப் புறங்களில் இல்லாத நிலையில் அத்தகைய கிராமப்புற சமூகத்தை படைப்பிலக்கியங்களில் உன்னதப்படுத்துவதானது முதன்மையாக பெண்களுக்கு பாதகமானது.

இந்நூலாசிரியர் வளர்ந்த கிராமச் சமூக (நூலாசிரியர் தனது 'என்னுரையில்' குறிப்பிடுகிறார்)பண்பாட்டுச் சூழலுக்கு மாறாகவே இக்கதைகளின் முடிவுகள் இவ்வாறு அமைவதற்கு காரணம் என்னவெனில் தான் வளர்ந்துவந்த அல்லது வளர்ந்து வரும் புதிய சமூகத்தின் அல்லது பிற்காலத்தில் அவர் வாழப் போகும்/வாழ விரும்பிய சமூக கண்ணோட்டத்தி்ன் மதிப்பீடுகள் இவற்றில் வெளிப்படுகின்றன.

அவ்வகையில் இந்நூலாசிரியர் தான் வளர்ந்த கிராமச் சமூகத்தின் பெண் விரோத பண்பாட்டு மதிப்பீடுகளுக்கு துரோகம் செய்து புதிய சமூகத்தை வரவேற்று அதன் பிரதிநிதியாக இக்கதைகளின் களங்களிலும் முடிவுகளிலும் வெளிப்படுகிறார்.

மற்றபடி அரசியல் கருத்துகளில் முற்போக்காக இருக்கும் தமிழ்ப் படைப்பாளிகள் பலரும் தமது படைப்பு என வரும்பட்சத்தில் கிராமப்புறத்தை உன்னதப்படுத்தவே செய்கிறார்கள். அவர்கள் சென்னை போன்ற பெருநகரங்களில் பல ஆண்டுகள் வசித்தாலும். ஆனால் இந்நூலாசிரியர் அவ்வாறல்ல. அத்துடன் சென்னை போன்ற பெருநகரங்களை கதைக்களங்களாக வைக்கவும் செய்கிறார்.

'எங்கிருந்தோ வந்தான்', 'டிசம்பர் பூ' ஆகிய கதைகள் அதற்கான எடுத்துக்காட்டுகள்.

தமிழகத்தில் கடந்த இருபதாண்டுகளுக்கு முன் தென் மாவட்டங்களிீல் நடந்த சாதிய கலவரங்கள்(இந்நிகழ்வுகளை 'தலித் மக்களின் எழுச்சி' என்ற பரிமாணமாகவும் கொள்ளலாம்) என்ற பின்னணியில் இச்சிறுகதை தொகுப்பின் கடைசி கதை அமைந்துள்ளது. இக்கலவரங்கள் நிகழ்ந்து இருபதாண்டுகளுக்கு மேல் ஆனாலும் தமிழ்ப் படைப்புகளில் பதிவு பெரிதாக இல்லை அல்லது அறவே இல்லை எனலாம்.

சொல்லப் போனால் இந்நிகழ்வுகளுக்குப் பின்தான் தமிழகத்தில் மாவட்டங்கள், அரசுப் போக்குவரத்து கழகங்கள் ஆகியவற்றின் பெயர்களே மாற்றப்பட்டன; அவற்றிற்கு இனிமேல் எத்தகைய பெயர் வைக்கப்படும் என்பதற்கான அளவுகோலும் முடிவானது. இந்த அளவுகோல்தான் இன்றும் நடைமுறையில் இருக்கிறது. மாதக்கணக்கில் நடந்த இந்நிகழ்வுகள் பற்றி தமிழ்ப் படைப்புகள் பேசவே இல்லை. இந்நிகழ்வுகள் நடந்த மாவட்டங்களிலிருந்து பல படைப்பாளிகள் இதற்கு பின்பும் தோன்றியிருந்தாலும் இதுதான் நிலைமை. ஆனால் இந்நூலை திறனாய்பவர் அறிந்தவரையில் இந்நூலாசிரியர் ஒருவரே தனது இறுதி கதையை அப்பின்னணியில் எழுதியுள்ளார். இது குறிப்பிடத்தக்கது.

கடந்த இருபதாண்டுகளாக அது போன்ற பெரிய நிகழ்வுகள் நடக்காவிட்டாலும் சாதிய பதட்டமானது தொடர்ந்து இருந்தே வருகிறது. மாணவர்கள் கல்வி நிறுவனங்களில் குறிப்பிட்ட சாதியினர் என்பதை குறிப்பதற்கு குறிப்பிட்ட நிறங்களில் கயிற்றை அணிந்து வரும் போக்கானது இதன் பின்னர்தான் தோன்றியது.

"......மஞ்சளும் ஊதாவுமாக கயிறுகட்டிய பள்ளி மாணவர்களை வளர்த்தெடுக்கும் ஊர் அது...." என்ற வரிகளில் அது நன்றாக வெளிப்படுகிறது. இது இன்றைக்கும் கல்லூரி மாணவர்கள் இடையேயும் நிலவுகிறது. அவ்வாறு கயிற்றை கட்ட விரும்பாதோரும் அவ்வளவு எளிதாக வாழ முடியாது என்பதால் கணிசமான மாணவர்கள் தமது கையில் கயிற்றை கட்டியே கல்வி நிறுவனங்களுக்கு சென்றாக வேண்டிய நிர்ப்பந்தம்.

இப்போக்கு வலுவாக இருப்பதால் அண்மையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் இதற்கு எதிராக ஏதோ சொன்னாலும் ஏற்கனவே இருந்து வருவது நீடிக்கவே செய்கிறது.

நூலாசிரியர் சின்னச் சின்ன விஷயங்கள் சாதிகளுக்கு இடையிலான மோதலாக பரிணமிப்பதன் வீரியத்தையும் ஒடுக்கப்படும் சாதியினர் இவற்றினால் உயிர்களையும் தமது கவுரவத்தையும் பலி கொடுக்கும் அவல நிலைமையை காட்டியுள்ளார். சிலர் தமது உயிரை காப்பாற்றிக் கொள்வதற்கு வேறு வழியின்றி காலங்காலமாக தாம் வாழ்ந்துவரும் தமது கிராமத்தை விட்டு மும்பை-தாராவிக்கு குடிபெயர்வதையும் காட்டுகிறார். வெறும் வேலை தேடி என்றில்லாமல் மேற்காண் நிர்ப்பந்தத்தினாலும் நெல்லையிலிருந்து தாராவிக்கு குடிபெயர்கின்றனர் என்பதும் இக்கதையின் வாயிலாகத் தெரிகிறது.

நவீன சமூகம் தனது தேவைக்காக கல்லூரிக் கல்வியை வழங்கி அதனை பெற ரயில் பயணத்தையும் வழங்குகிறது. குறிப்பிட்ட நிகழ்வுப் போக்கில் இது ஒரு சிலரிடம் காதலையும் சேர்த்து வழங்குகிறது. ஆனால் இந்த நவீன சமூகம் மேலிருந்து திணிக்கப்பட்டதால் பட்டவர்த்தமான வாழ்க்கை நிலவும் கிராமச் சமூகமானது அதை(காதலை)பறிப்பதோடு உயிரையும் சேர்த்து பறிக்கிறது.

ஆதிக்கச் சாதியினைச் சேர்ந்த விடலைகளின் காலில் தலித் சாதியினைச் சேர்ந்த முதியோரும் விழ வேண்டிய அளவுக்கு சாதியாதிக்கம் நிலவுவதாக நெஞ்சை நெகிழ வைக்கும் காட்சிகள் கதையில் இருக்கின்றன. அப்படியாவது தம்மீதான தாக்குதல்கள் நிற்காதா என்பதன் எதிர்பார்ப்பே.

சாதியை மீறிய காதலா அல்லது அதை பலியிட்டு தனது கிராமத்தை, குறைந்தபட்சம் தனது உறவினர்களை காப்பதா என்ற dilemmaவும் இக்கதையின் narratorஆல்(கதை சொல்லி) வைக்கப்படுகிறது. ஆனால் அவரும் நிலைமையின் போக்கில் சென்றுவிடுகிறார். Dilemmaவை விட concrete Condition வலிமையானது என அவர் நிரூபிக்கிறார். இறுதியில் கதை யதார்த்தவாதத்தில் முடிகிறது. காதலித்தவர் தற்கொலை செய்து கொள்கிறார்;

இச்சிறுகதை தொகுப்பிலேயே 'எங்கிருந்தோ வந்தான்' கதைதான் மிக அற்புதமாக அரசியல்ரீதியாக இருக்கிறது.

போராடுவது மீதுதான் காதல்; அக்காதலே போராடுவதற்கு தடையாக மாறுமானால் அக்காதலை கைவிட வேண்டியதுதான் என இக்கதை உரைக்கின்றது.

இன்று பல இயக்கவாதிகள் ஆளாகின்ற சிக்கல் இது. போராடுவதன் ஊடே அறிமுகமாகும் காதல் அவர்களை மேலும் போராட வைப்பதற்கு மாறாக அது விழுங்கும் அளவுக்கு அவர்கள் பலவீனமானவர்களாக இருக்கும் யதார்த்தத்தை காட்டுகிறது.

இக்கதையில் வரும் பெண் மாந்தர்தான் அரசியல்ரீதியாக உறுதியாக இருக்கிறார்; கதையில் இயக்கவாதியாக அப்பெண்ணுக்கு அறிமுகமாகுபவர் இயக்க வாழ்க்கையையும் காதல் வாழ்க்கையையும் சமநிலையில் வைக்க முடியாத ஊசலாட்டத்தி்ல் இருக்கிறார். ஏதாவது ஒன்றிற்குதான் அவரால் இடம் கொடுக்கும் அளவுக்கு தடுமாற்றத்தில் இருக்கிறார். இயக்கவாதியாக இல்லாமல் இருந்தாலும் போராடுவதன் பாத்திரத்தால் யதார்த்தமாக ஈர்க்கப்பட்ட பெண் கதை மாந்தர்தான் போராடுவதே முதன்மை எனவும் அதற்கு தடையாக காதலானது இருந்தால் அதை கைவிடுவது சரியே என்று அதை முறித்துக் கொள்வதாக நூலாசிரியர் முடிக்கிறார்.

இப்பெண் கதை மாந்தர் சராசரி பெண் போல் இல்லாமல் அரசியல்ரீதியாக ஒரு எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறார்.

இக்கதையில் மட்டும் அல்லாமல் இத்தொகுப்பில் உள்ள ஒரு கதையைத் தவிர அனைத்து கதைகளிலும் வரும் பெண் கதை மாந்தர்கள் அரசியல்ரீதியாகவோ ('எங்கிருந்தோ வந்தான்' என்ற கதை) சில பத்தாண்டுகளுக்கு முன்பேயே கல்லூரியில் பயின்றோராகவோ ('அம்மாவின் பெயர்' கதை), முந்நாளைய சோவியத் ஒன்றியம் இருந்தபோது 'ஸ்புட்னிக்' உள்ளிட்ட ரஷ்ய இலக்கியங்களை வாசித்தவராகவோ ('அம்மாவின் பெயர்', 'டிரங்குப்பெட்டி புகைப்படப் பெண்' ஆகிய கதைகள்) காதல் என்பதை ஒழுக்கவாதமற்றதாக காண்போராகவோ ('மழையானவன்', 'கதையின் வெளியே மற்றொரு காதல்', 'நான் அவன் அது', 'எங்கிருந்தோ வந்தான்' ஆகிய கதைகள்) இருக்கின்றனர். மொத்தத்தில் Independentஆக, Assertiveஆக இருக்கின்றனர். பெண்ணியவாதியாக இல்லாமல்.

அத்துடன் அம்மாவை நண்பியாகவும் பேரழகியாகவும் 'அம்மாவின் பெயர்' என்ற கதையில் காட்டுகிறார். இத்திறனாய்வாளர் அறிந்த வரையில் கதை மாந்தராக வரும் அம்மாவை பேரழகியாக சித்தரிப்பதும் அதிலும் அதை அழுத்தமாகவே சித்தரிப்பது இதுவே முதலாவதாகும். கதையின் கருவுக்கும் அந்த அழுத்தம் அவசியமாகிறது.

இவ்வாறு நூலாசிரியர் தனது முதல் சிறுகதை தொகுப்பிலேயே வடிவரீதியில் சிறுகதை வடிவத்திற்கே உரியவாறு கதையின் முடிவு உள்ளிட்ட உத்திகளோடு படைத்திருக்கிறார்; உள்ளடக்க அடிப்படையிலும் புதிய கருக்களையும் சரியான, முற்போக்கான முடிவுகளையும் வைத்திருக்கிறார். அவ்வகையில் இது நூலாசிரியரின் முதல் நூல் என்பது வியப்பானது. அதனால்தான் இரண்டாம் பதிப்பாகவும் வெளியாகியிருக்கிறது.

அவ்வகையில் நூலாசிரியர் 'கவிதா சொர்ணவல்லியும்' இந்நூலைப் பதிப்பித்த 'டிஸ்கவரி புக் பேலஸும்' பாராட்டுக்கு உரியவர்கள்.

- பாஸ்கர்

Pin It