pozhilan book on tamilnaduகாலந்தோறும் தமிழ்நாடு உருவாக்கும் முயற்சிகள்...

தோழர் பொழிலன் அவர்கள் அரிதின் முயன்று தமிழ்நாடு குறித்துப் பல்வேறு தரவுகளைத் தொகுத்து இந்நூலில் வழங்கி உள்ளார்.

தமிழ்நாடு குறித்துத் திரு.வி.க., சாமி சிதம்பரனார், பூபேசு குப்தா, பெரியார், ஷீவா, மணலி கந்தசாமி, பாவாணர், பாரதிதாசன், பெருஞ்சித்திரனார் போன்ற பல்வேறு அறிஞர்களது கருத்துக்கள் பதிவிடப் பட்டுள்ளன.

தமிழ்நாட்டு வரலாற்றில் தமிழ் - தமிழ்நாடு குறித்து கி.மு. ஏழாம் நூற்றாண்டிலிருந்து கி.பி.2020 வரை மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முன்னெடுப்புகளை வரிசையாக இந்நூல் அறியத் தருகிறது. தவிரவும், பழந்தமிழ் வேளிர்கள், கழகக்கால நாட்டுப் பிரிவுகள், வரலாற்றுக் காசுகள், இலக்கியச் செய்திகள், தமிழ்நாட்டு நீர்நிலைகள் போன்ற எண்ணற்ற தரவுகளும் இதில் உள்ளடங்கி உள்ளன.

பக்கங்கள் -- 368

விலை -- உரு.450.

தொடர்புக்கு -­86080 68002, 90929 48002.

வெளியீடு - மன்பதை பதிப்பகம், சென்னை

***

வரலாறு, பண்பாடு, அறிவியல் - டி.டி.கோசாம்பியின் வாழ்க்கையும் ஆய்வுகளும்

மூ.அப்பணசாமி அவர்கள் நாடறிந்த எழுத்தாளர், ஆய்வாளர். சிறந்த மார்க்சியச் சிந்தனையாளரான டி.டி. கோசம்பி அவர்களது வாழ்வு மற்றும் ஆய்வு குறித்து வெளியாகியுள்ள கோசாம்பி குறித்து ஆ. சிவசுப்பிரமணியன் / ந. முத்து மோகன் / சௌ. குணசேகரன் / க.காமராசன் ஆகியோரது காத்திரமான கட்டுரைகளையும் இந்நூல் உள்ளடக்கி உள்ளது. கோசம்பியின் வாழ்க்கையை மிக விரிவாக விவரிப்பதோடு, அவரது பல்வேறு அடர்த்தி மிகு சிந்தனைகளையும் செறிவாகப் பதிவு செய்துள்ளது. தமிழில் கோசாம்பி குறித்து இவ்வளவு விரிவான நூல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. அந்த வெற்றிடத்தை நிரப்பும் காலப் பொருத்தப்பாடு மிக்க இந்நூல், அறிவுப்புலத்தில் புதிய திறப்புகளை நல்கக் கூடியதாக விளங்குகிறது.

பக்கங்கள் -- 304 விலை ­உரூ.400 தொடர்புக்கு -- 98400 27712 88389 69909.

வெளியீடு - ஆறாம் திணை, சென்னை

***

டெர்சு உஸாலா எனும் பயணக்குறிப்பு நூல், இரசிய மொழியிலிருந்து ஆங்கிலம் வழியாக முதன்முறையாகத் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டு வெளியாகி உள்ளது. 1902. 1906. 1907 ஆண்டுகளில் சோவியத் இரசியாவி லிருந்து புறப்பட்டு, மழை, வெள்ளம், புயல் ஆகியவற்றின் ஊடாகப் பயணம் சென்ற ஓர் இராணுவ அதிகாரியின் பயணத்தை அவை நாயகன் அவர்கள் சுவைபட மொழியாக்கம் செய்துள்ளார்.

இயற்கையோடு இயைந்து வாழ வலியுறுத்தும் முன்னோடிப் படைப்பு என்பதாக இது அறிமுகமாகிறது. இப்படைப்பு, இருமுறை திரைப்படமாக உருவாக்கப்பட்டு உலகெங்கிலும் வாழும் இயற்கை ஆர்வலர்களைக் கவர்ந்துள்ளது குறிப்பிடத் தக்கதாகும்.

பக்கங்கள் -- 415 விலை -- உரூ.300.

தொடர்புக்கு ­- 94430 22655 98420 47855.

வெளியீடு - ஓசை பதிப்பகம், கோவை

***

ராம் ராவ்: வாழ்வெனும் மரணம் (இந்திய விவசாயியின் நிலை)

ராம் ராவ், மகாராஷ்டிராவில் உள்ள ஹிவாரா கிராமத்தில் வாழ்கிறார். அவர் எதற்காகத் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார், அதன் பின்னரான அவரது வாழ்வு எப்படி இருந்தது, ஒரு விவசாயியின் அன்றாட வாழ்வு எத்தகையது என்ற அடிப்படைக் கேள்விகளின் ஊடாக விதர்பாவில் என்ன நடக்கிறது, உண்மையில் பருத்தி விவசாயத்தில் என்ன சிக்கல், ஒட்டுமொத்தமாக விவசாயத்தில் என்னதான் சிக்கல் என்ற கேள்விகளுக்கான விடையைத் தேடி ஆசிரியர் மேற்கொள்ளும் பயணமாக இந்த நூல் அமைந்துள்ளது.

நாக்பூரைச் சேர்ந்த பத்திரிகையாளரான ஜெய்தீப் ஹர்திகர், விவசாயிகளின் தற்கொலைகள் குறித்தும், பருத்தி விவசாயத்தில் உள்ள சிக்கல்கள் குறித்தும் பல ஆண்டுகளாக எழுதி வருபவர். அவரது இந்த முக்கிய நூலைப் பூங்குழலி அவர்கள் மிகச் சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ளார்.

பக்கங்கள் -- 306. விலை -- உரூ. 350.

தொடர்புக்கு -- 98400 70870.

***

அறிவியல் கலைஞர் இராசேசுவரி 1906

இயற்பியல் பேராசிரியரான இராசேசுவரி அம்மையார் இளங்கலை ( 1928 ) முதுகலை ( 1931 ) பட்டங்களில் சென்னை மாகாணத்திலேயே முதல் இடத்தைப் பெற்று, சாதி ஆதிக்கம், ஆணாதிக்கம் ஆகியவற்றை வீழ்த்தி, மிகச்சிறந்த அறிவியல் கட்டுரைகளை ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் எழுதிக்குவித்து முன்னோடியாகத் திகழ்ந்தவர். அக்காலத்தில் புகழ்வாய்ந்த தமிழ்த்தென்றல் இதழில் அவரது கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன. எளிய தமிழில் சிறந்த முறையில் எழுதப்பட்ட கட்டுரைகளை கோ. ரகுபதி அவர்கள் தொகுத்து இந்த நூலில் வழங்கி உள்ளார். தொகுப்பாசிரியர் ரகுபதி அவர்கள், இந்து சாதியக் கட்டமைப்பு, இதனால் சுரண்டப்பட்டு ஒடுக்கப்படும் சாதியற்றோர் குறித்து ஆய்வுக் கட்டுரைகளையும், நூல்களையும் தொடர்ந்து எழுதி வருவது குறிப்பிடத்தக்கது.

பக்கங்கள் --268 விலை -- உரூ.280. இரண்டு நூல்கள் வெளியீடு - தடாகம்

***

கலை அறிவியல் மேதை மன்னர் சரபோஜி

ஆங்கில முறை மருத்துவரான சு. நரேந்திரன்

அவர்கள் மன்னர் சரபோஜி குறித்து மிக விரிவாக எழுதியுள்ள இந்நூலில், மன்னரது வரலாறு பற்றியும், மருத்துவம் / தொழில்நுட்பம்/ கலை ஆகியவற்றில் அவர் கொண்டிருந்த ஈடுபாடு பற்றியும் பல்வேறு தரவுகளின் அடிப்படையில் சுவைமிக்க செய்திகளைத் தொகுத்தளித்துள்ளார். தவிரவும், கிறித்துவம், இஸ்லாம் உள்ளிட்ட சமயங்களுக்கு சரபோஜி ஆற்றிய பணிகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சரபோஜி மன்னரின் இறுதி நாள்கள் மற்றும் மராட்டிய அரசின் முடிவு ஆகியனவும் இதில் பதிவு செய்யப் பட்டுள்ளன. ஆங்கில மருத்துவரான நரேந்திரன் அவர்கள், தமிழில் மருத்துவத்தைக் கற்பிக்க முடியும் என்பதில் அழுத்தமான நம்பிக்கை உடையவர்.தமிழ் பயிற்று மொழி / ஆட்சி மொழி குறித்து விரிவான நூல்களை படைத்தவர். இவரது ஆழ்ந்த ஆய்வுக்கு மற்றுமோர் எடுத்துக்காட்டாய் இந்நூல் அமைந்துள்ளது.

பக்கங்கள் -- 304 விலை -- உரூ.380. வெளியீடு - என்சிபிஎச்., சென்னை