இப் புதினத்தின் முழு சாராம்சத்தையும் கூறி இனிமேல் படிக்கப் போகின்றவர்களின் ஆர்வத்தைக் குறைக்காமல் என் ரசனைகுற்பட்ட பகுதிகளையும், மையக் கருத்துகளையும், முன்னிருத்திப் பேசுவதோடு படைப்பாளியின் பங்களிப்பு அதிலும் முக்கியமாக தமிழ் மொழியினை அவர் கையாண்டிருக்கும் பாங்கு பற்றி அவசியம் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.

Kurathiyaaruடாக்டர் மு.வா, அகிலன், பார்த்தசாரதி, கல்கி, பிறகு ஜெயகாந்தன், சிவசங்கரி, போன்றோரின் புத்தகங்களைப் படித்துப் பழக்கப் பட்ட எனக்கு இப்புதினம் சற்றே மாறுபட்டு இருந்தது. குறிப்பாக நடையோட்டத்தில் ஒரு புதினம். நல்ல தமிழ் மணம் கமழும் வார்த்தைகள் புத்தகம் முழுவதிலும் பளிச்சென்று தென்படுகின்றன.

நூலின் பின் அட்டையில் குறிப்பிட்டுள்ளது போல் எந்த ஒரு கதாபாத்திரத்தையும் மையமாக வைத்து இப்புதினம் எழுதப்படவில்லை. தனி மனித முக்கியத்துவம் இதில் சிஞ்சிற்றும் இல்லை. ஆனாலும் கடைசி வரை கதையில் எந்த தொய்வும் ஏற்படவில்லை.

செம்பேட்டுக்கிழவன், சேரிக்கிழவன் பெங்கி, ஓசூரான், பச்சைத்தாத்தன், பூசம்பாள். சன்னமணி, தனபாலன், வூக்கை, பித்தன் கண்ணாயிரம், ரசவாதி, எல்லன் என்கின்ற செய்யன், எல்லி, சந்தகன்

பொடியர்கள் மாட்டுக்கார முருவன், ஓசூரான் மகள் புத்தாள், சம்பூரணம், சன்னமணி, கழுதை மேய்க்கும் கோதை, பாந்தன் இவர்களும் இன்னும் சிலரும் கதை மாந்தர்கள். ஆயினும் அவர்களைச் சுற்றி கதையென்றில்லாமல் கதை ஓட்டத்தோடு வந்து போகிறார்கள் அனைவரும்.

சப்த கன்னியர் நடுச் சாமத்தில் புனலாட்டம் ஆடத் தொடங்கும் பொழுது எழும் கானங்கள் , கூனி மேட்டில் எதிரொலிக்கும் என்ற புதிரான கதையை தெரிந்து கொள்வதில் பொடிசுகளுக்கு ஏற்படும் பேரார்வத்தை முக்கால் வாசி கதைக்குப் பிறகு முடிச்சவிழ்க்கிறார் ஆசிரியர்.

நீர்ப் பறவைகள் எழுப்பும் ஒலியை கின்னர சங்கீதத்தோடு இணைத்திருப்பது சுகமான அனுபவம். இடையில் குடக்கை சுற்றுவது , ஐந்தாட்டம், கில்லி, நொண்டியாட்டம் , ஓலை விசிறி போன்ற சிறார்களின் விளையாட்டு , அனுபவித்து லயித்தவர்களுக்கு ஒரு பரம சுகத்தைத் தருகின்றது.

தான் அனுபவித்து , உணர்ந்து எழுதியதை , எழுத்தின் மூலம் படம் பிடித்துக் காட்டும் பொழுது படைப்பாளி மிகப் பெரிய வெற்றி அடைகிறான். நூல் ஆசிரியர் சொல்ல வந்த விஷயங்களை நாம் உள்வாங்கிக் கொள்வதில் எந்த விதச் சிரமமும் இல்லை.

‘எறவானக் கொட்டாயில் கால் கொளுசுகள் உரசும் சிணுங்கல் கேட்டு திமிர் வலித்தெழும் மாடுகளின் கழுத்து மணிகள் சிதறும் சத்தத்தைப் பெண்கள் கண்டும் காணாமல் புலர்ந்தார்கள் காலையில்.’

‘ சால் மூழ்கும் குபுக்கோசையோடு’ , கழை துளைக்கும் கரு வண்டோசை , என நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.

இதில் , கொட்டாய் , பேக்கடை , ஊதாங்கோல் போன்ற சொற்கள் நம்மில் பலரும் வாழ்ந்த தோட்டப்புற வாழ்க்கையை நினைவு படுத்துகின்றது. ஈரமான விறகை வைத்து ஊதாங் கோல் துணை கொண்டு அடுப்பேற்றும் பொழுது வரும் புகைமூட்டம் நல்ல ஞாபக வெளி.

இடையிடையே மொண்ணேடு சேரியில் குறத்தி வந்து போகிறாள் பேசா மடந்தையென. சில நாட்கள் காணாமலும் போகிறாள்.

சேரிப் பெரிசுகளும், பொடிசுகளும் கேட்பதற்கு ஆவாலாய் காத்திருந்த கன்னிமார் கதையை சேரிக்கிழவன் சொல்ல காப்பியம் சூடு பிடிக்கின்றது.

எல்லூரை ஆண்டு வந்த நாகர்குல வேந்தன் எல்லன் என்கின்ற செய்யனுக்கு 7000 ராணிகள். ஆனாலும் அவன் மனதில் நிரந்தரமாய்ப் பரிவட்டம் கட்டி கொலுவீற்றிருந்தாள் 7 வது ராணி எல்லி.

எல்லி மகாராணியின் அலங்காரம், மற்றும் நாகர் குல ஆபரணங்களின் வர்ணனை, செய்யன் பரிவாரங்களோடு வேட்டைக்குப் புறப்படும் பயணம், வேட்டை முடிந்து நாடு திரும்பும் படலம் இவை யாவும் பிரமிக்க வைக்கும் அழகுடன் சொல்லப்பட்டிருக்கின்றது. அனைவரும் கண்டிப்பாக படிக்கவேண்டிய பகுதிகள்.

இருப்பினும் எல்லூரில் 51 சேரிகளில் மக்கள் பிரிந்து கூட்டம் கூட்டமாய் வாழ்ந்த நாட்களை சிறிது துயரத்துடன் எண்ணிப் பார்க்க வேண்டியிருக்கின்றது. அதே வேளை

மிருகங்களையும் பறவைகளையும் வேட்டையாடிக் கொன்றுக் குவித்து , புசித்துக் களித்திருந்த மன்னனின் செயல் மனதைத் துன்புறுத்துகின்றது.

வயிற்றில் கருவைச் சுமந்த பெண் யானையை பாணமேற்றி தாயையும் சிசுவையும் கொன்ற செய்யன் யானையின் சாபத்தோடு நாடு திரும்ப அவனை வரவேற்க ஆயத்தப்படும் நிறை கர்ப்பவதியான எல்லி கால்கள் நடுங்க படுக்கையில் வீழ்வதோடு கதை பாதியில் நிற்கின்றது.

தனபாலின் ஒற்றைக்கால் தவம் , அவன் மாயமாய் மறைந்த கோலம் , பெங்கி கிழவன் அறிமுகம், எனத் தொடர்ந்து , ஓசூரான் பித்தன் கண்ணாயிரத்தின் கதையை சொல்லத் தொடங்க கதையில் வேறொரு திருப்பம்.

ரசவாதியும் கண்ணாயிரமும் பிரண்டையைத் தேடி அலைவதும், தேர் மடுவில் கன்னிமார் பிரசன்னமும் தொடர்கின்றன.

கழனிக்குச் செல்லும் வண்டி மாடுகள் தொடங்கி , மாடு மேய்க்கும் பொடியர்கள், பொதி சுமக்கும் கழுதைகள் மொட்டவெளி, நாகலா மலையின் இளங் காற்று, சாலையின் இரு மருங்கிலும் பூத்துக் குலுங்கும் வனப் பூக்கள், மகிழ மரத்து நிழலில் கம்பங் கூழ் குடிப்பது என , மொண்ணேடு சேரியைச் சுற்றி நடக்கும் அன்றாட நிகழ்வுகளை அருமையாகப் படம் பிடித்துக் காட்டுகின்றார் ஆசிரியர்.

‘சித்தம்பாக்கத் தோப்பில் மந்தி உலுக்கி, செவ்வாய் சுகம் கொத்தி , சாமரவால் அணில் கொறித்து, தானே விழுந்த தீங்கனியைப் பொறி மீறும் வெள்ளெலிகள் புசித்து , கவனகமேந்தி காவலிடும் காவலன் கண் தூவி கன்னமிட்ட பொடியர் உலுக்கி விழ , வெடித்துக் கிளர்ந்த வாசனை பரவுகின்றது எங்கும் .. மாம்பழ உச்சிக் காலமென.

இப்படிக் கவித்துவம் வாய்ந்த வரிகள் நூல் முழுவதும் மணம் பரப்பி தமிழைப் பெருமைப் படுத்துகின்றன.

பித்தனின் மனோரஞ்சிதப் புரவி , அவனைச் சுமந்து , கன்னியரைக்காண பல லோகங்களை கடந்து செல்லும் பயணம் நம் சிந்தனைக்கு நல்ல விருந்து. இதைப் படிக்கும் காலம் ஆசிரியர் நிறைய உழைத்திருக்கின்றார் என்பதை தெளிவாக உ ணர முடிகின்றது. கடைசியில் கூனி மேட்டு செம்புலக் காட்டில் பயணம் முடிகின்றது.

பயணத்திற்கு முத்தாய்ப்பு வைப்பது போல்

‘ கதைகளைப் பேசுவதல்ல தொழில் , கதைகளாய் வாழ்வதே பெருந் தொழில்’ என அழகாக முடிக்கிறார்.

மீண்டும் செம்பேட்டுக் கிழவன் எல்லூர் மன்னன் செய்யனின் கதையை விட்ட இடத்திலிருந்து தொடங்குகிறான். எதிர்பார்க்கப்பட்ட முடிவு என்றாலும் எல்லன் / எல்லியின் வாழ்வில் ஏற்படும் திருப்பங்கள் யாரும் ஊகிக்க முடியாத ஒன்று. படித்து மகிழுங்கள்.

சந்தகன் , பெயரிடப்படாத ஆற்றைத் தேடி அலைவதும் செய்யனின் ஏழு குழந்தைகள் அவன் பராமரிப்பில் புட்பக விமானம் ஏறி ஆற்றில் புனலாடச் செல்வதோடு செம்பேட்டுக் கிழவனின் கதை ஒரு முடிவுக்கு வருகின்றது. தங்களுடைய தாய் எல்லியின் பரிசுத்தமான அன்பினால் கிடைத்த வரத்தால் கன்னியர்களின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை உங்கள் பார்வைக்கே விட்டு விடுகிறேன்.

பனிக் காலம், இளவேனிற் காலம், இலையுதிர்க் காலம், அனல் தெறிக்கும் வெயில் காலம் என எல்லாப் பருவங்களையும் அழகுடன் விவரிக்கின்றார்.

வெயிலின் கடுமையை , கொடுமையை பற்றிக் கூறும் பொழுது ‘இலையுதிர்த்த மரங்களில் துளிர்த்த துளிர்களும், தளிர்த்த தளிர்களும் கருகிக் கிடக்கின்றன. திசை எங்கும் பச்சையில்லை. இருக்கப்பட்ட அத்தனை செடி வர்க்கமும் குமைந்து காய்ந்து அடர்ந்தன குச்சிகளாய்’ வீட்டுப் பானைகளில் குளிரும் நீர்கூட கொதிக்கிறது பகலில். பாலை பெருகி எரிந்தது என்கின்றார்.

இப்படி அனலாய் கழித்த ஒரு நாள் குறத்தி வந்தாள். தன் குழந்தையை தோளில் சுமந்தவாறு வந்தாள். ஆற்று மணல் தகிக்கின்றது. இருப்பினும் நடக்கத் துணிந்தாள் குறத்தி. குறத்தியும் குழந்தையும் ஆற்றைக் கடந்தனரா. நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.

திடீரென்று பெரு வெள்ளம் பாய்ந்தது ஆற்றில். எங்கும் மழை. பெரு மழை. காணாமல் போன பாலன் - வூக்கையின் கணவன் திரும்பி வந்து கதையை முடிக்கிறான்.

நதிகளை மேலோட்டமாக பார்த்து வந்த நம்மில் பலர் - எங்கோ மலையிலிருந்து உற்பத்தியாகி மடுவை நோக்கி ஓடி வரும் தண்ணீர் கூட்டம் என்ற நினைப்பை போக்கும் வண்ணம் ;

எல்லா ஆறுகளுக்கும் ஒவ்வோர் பேருண்டு. பேருக்கு ஒரு கதையுண்டு, கதைக்கும் ஒரு காரணமுண்டு. அந்தக் கதைகளைக் காக்கும் குடிகளுமுண்டு. குடிகளுக்கொரு மூலம் உண்டு. மூலத்திற்கு ஒரு கற்பனையுண்டு. கற்பனைக்கொரு கடவுளுமுண்டு. கடவுளுக்கொரு ஆறுமுண்டு என்று சொல்லி நம்மை சிந்திக்க வைத்திருக்கின்றார் ஆசிரியர் சன்னா அவர்கள்.

இக் காப்பியத்தில் வரும் நிறைய சொற்கள் எனக்குப் பரிச்சயம் இல்லாதவை. வசி, சப்பரம், உகு, கூளி, தண்ணுமை, பொறை - இப்படிச் சொல் வளத்திற்குக் கொஞ்சமும் பஞ்சமில்லாமல் ஆசிரியரை நிமிர்ந்து பார்க்க வைக்கின்றது.

கதை சொல்லும் பாங்கு, பாரதியின் கானக் குயிலியை நினைவு படுத்துகின்றது.

நெஞ்சில் நிலைக்கும் ஒரு அருமையான கவிதையோடு காவியம் முற்றுப் பெருகின்றது. அதிலிருந்து சில வரிகள்.

கடந்த காலங்கள் கரைக்கும் இலவந்தியாய்

கள்ளமற்றச் சிறு வயது காணாக் காலமாய்

கனவில் பெருகக் காணும் வெள்ளமாய்

வெடிக்காமல் வெடித்துப் பிளந்த விடுகதையாய்

குறத்தி போகிறாள் ஞாபகம் மீந்த ஆறாய்.’

நல்லதொரு சங்க கால இலக்கியத்தை, காவியத்தை படித்து மகிழ்ந்த உணர்வு மேலோங்க மனம், இதைத் திரும்ப படிக்கவேண்டும், என்று அவாவுறுகின்றது.

(08.04.2018 அன்று மலேசியாவின் செர்டாங் நகரில் நடைபெற்ற குறத்தியாறு காப்பியப் புதினத்தில் வெளியீட்டு விழாவில் மலேசிய எழுத்தாளர் திரு பொ.அண்ணாமலை அவர்கள் சமர்பித்தக் கட்டுரை.)

Pin It