தலித்தியம் பற்றிய புரிதல் ஏற்படுவது எப்போது?

நெடுங்காலமாக தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் தங்ளுடைய மேடைகளில் பேசிவருகிற சமூக நீதி, சமூக சமத்துவம், சமூகத்தில் புரையோடியுள்ள சாதியத்தின் தன்மையானது பெரியாரின் காலத்திற்குப் பின்னும் தற்போதை மாறிவரும் அரசியல் சூழலில் எத்தகைய நிலையில் உள்ளன என்பதை ஆழ அழுத்தமாக எவ்விதக் கறார் தன்மையிலிருந்தும் விலகிவிடாது விமர்சனம் செய்ய வேண்டிய தேவை உள்ளது. ஏன்? என்ற தேவைக்கான அளவீடுகளாக நாம் எவற்றையெல்லாம் கணக்கில் எடுக்க வேண்டும் என்றுகூட சில திராவிட ஆய்வாளர்கள் ஆய்ந்து வருகின்றனர். அல்லது திராவிடத்தின் கொள்கைகள் பரிதாப நிலையில் உள்ளனவா? அல்லது நாம் அவற்றை அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டிய தேவைகள் என்ன என்பதை இப்போதாவது உணர்ந்து கொள்ள மறுக்கக் கூடாது.

imaiyam peththavan novelதலித்திய இலக்கியங்கள் திராவிடக் கூறுகளுக்கு வலு சேர்த்துக் கொண்டிருக்கின்றன என்பதை நாம் ஒருவாறு மகிழ்ந்து வரவேற்கிறோமா என்பதை வாசகர்களிடத்தில் எழுப்ப வேண்டிய கேள்வி. அல்லது தமிழ் இலக்கியங்களில் எழுந்துள்ள பல இசங்கள் தமிழின் சமூகக் கட்டமைப்பிற்கு துணை செய்கின்றனவா என்பதை தீவிரமாக விவாதம் செய்யவேண்டும். சிலர் அவ்வப்போது அங்கொன்றும் இங்கொன்றும் செய்கின்றனர். என்றாலும் தற்காலத்தில் தீவிரமடைந்து விட்ட தலித்திய படைப்புகளை சேர்ப்பதிலும் எங்கோ ஒரு மூலையில் ஏற்பட்டுள்ள சுணக்கம் தான் என்ன என்பதையாவது நாம் விவாதிக்கத் தவறிவிடக் கூடாது.

இலக்கியத்தின் எல்லா வடிவங்களிலும் புதிய வகைமையுடன் தலித்தியம் வேறு ஒரு புதிய பரிணாமம் பெற்று வளர்வதைக் கண்கூடாக பார்க்க முடிகிறது. தலித்தியம் அதன் சார்ந்த இலக்கியம் என்ன என்பது புதிய வாசகர்களுக்கு அவ்வப்போது தலித்திய இலக்கியங்களையும், அதனுடன் தொடர்ந்து விவாதிக்கத் தக்கனவாக உள்ள சில நூல்களை மறுவாசிப்பு செய்து காட்டுவதும் இன்றைய தேவையாக உள்ளது என்பதை யாரும் மறுத்துவிட முடியுமா?. ஒருவேளை தலித்தியம் என்ற சொல்லுக்கு உரிய வேறுபாட்டையாவது இளம் வாசகர் மத்தியில் ஏற்படுத்துவதும் தினமும் தொடங்கப்படுகிற இலக்கிய அமைப்புகள் செய்கின்றனவா என்றால் அதன் மீது தொடுக்கப்பட வேண்டிய கேள்விகளும் ஏராளம் உள்ளன.

தலித்தியம் என்பது சாதியம், அரசியல், பொருளாதாரம் சார்ந்து மட்டுமே பயணம் செய்கிறது என்ற கட்டுக்கதையை உடைக்க முதல் கருவியாக அதனுடைய கருத்திற்கு வலுசேர்க்கின்ற இலக்கியங்களை செய்ய வேண்டியதும் அவசியம். அதன் தேவையை உணர்ந்தே தலித்தியம் மகாராட்டிரத்தில் தொடங்கி தென்னிந்திய மாநிலங்களில் கன்னடத்தில் பெரும் வளர்ச்சி பெற்றும் தமிழகத்தில் வளர்ச்சி பெற்று இன்று இளம் தலைமுறையைச் சேர்ந்த இளம் படைப்பாளிகள் தலித் இலக்கியங்கள் மீதுபரவலான கவனத்தை திருப்பியிருக்கின்றனர் என்பதையும், தலித்துகளுக்கு ஏற்படுகிற சமூக அவலங்களை தங்கள் படைப்புகளில் பதிவு செய்தும் வருகின்றனர் என்பதையும் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

தமிழகத்தில் தலித்தியம் என்பது ஏதோ இன்றைக்கு பேசுகிற பேச்சு என்பது போல சிலர் பேசிவருவது என்பது, அவர்களின் அறியாமையைத்தான் காட்டுகிறது. தலித் எழுத்துகளை ஆவணப்பூர்வமாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவது வரவேற்க வேண்டிய ஒன்று. ஆனால் அவைகள் பொது வெளியில், இலக்கிய கூட்டங்களில் விவாதிக்கப்படவோ அல்லது விமர்சனப் பூர்வமாகவோ அனுக வேண்டிய பார்வையை இன்றைய புதிய வாசகர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு இலக்கிய அமைப்புகளுக்கு உள்ளன. அதை அவர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய கடமையும் உண்டு. தலித்தியம் சார்ந்த அனைத்து தளங்களில் விமர்சன ரீதியில் கருத்தியலை எதிர்கொள்ளத் தேவையான கருத்துக்களை வலுசேர்க்கும் படைப்புகளை முயற்சி செய்ய வேண்டும். அதற்கான தேவையும் இந்த காலகட்டத்தில் அவசியமும் கூட.

பெத்தவன் -கதையும் களமும்:

எழுத்தாளர் இமையம் தொடர்ந்து தன்னுடைய எழுத்துக்களில் சமூகத்தின் அமைப்புகளை படைப்பின் வழியே கேள்வியை எழுப்பி வருகிறார். 2013-ம் ஆண்டு வெளியான நெடுங்கதை 'பெத்தவன்". சமூகத்தின் எல்லா நிலைகளிலும் சாதியமும் அது சார்ந்து இயங்கும் பொருளாதாரம், அரசியல், பெண்ணியம், ஆகியவை குறித்து எழுப்ப வேண்டிய நியாயமான கேள்விகளை உள்ளடக்கமாக கொண்டிருக்கிறது.

பெத்தவன் கதை ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை கொண்டதாக இருக்கிறது. அது என்ன? கட்டுடைப்பு. ஒரு இலக்கியம் மரபான ஒன்றினுடைய அடிப்படையின் கேளித்தனத்தை, கோர முகத்தை, அதனுடைய செயலை எடுத்துக் காட்டுவதுடன் அதன் வரையறைகளை தீவிர எதிர்ப்பின் மூலம் அடிக்கோடிட்டுக் காட்ட முயற்சி செய்வது. இங்கு மரபானதாகக் கருதப்படுவது கதையில் உயிர்ப்புடன் இருந்து வருகிற ~ஆணவக் கொலைக்கான சதித் திட்டம்|. சதித் தீட்டுவதும், அதற்கு சம்பந்தப்பட்ட அல்லது கட்டாயப்படுத்தப்பட்ட சமூகங்கள் தங்கள் தங்களின் மீது ஏவப்படுகிற வன்முறைகளை எதிர்கொள்வதும் அதற்கு உரிமைக் குரல்களை கொடுக்க முடியாமல் இருப்பதன் காரணத்தைக் கேள்விக்கு உட்படுத்துவதும் கதையின் சீரிய நோக்கமாக இருந்து வருகிறது.

பெத்தவன் நெடுங்கதை ஆணவப் படுகொலையை மட்டுமே பேசுகிறதா?. இல்லை. வர்க்கச் சமூகத்தின் பின்னணியில் உள்ள இரு சமூகங்களில் நடைபெறுகிற ஆதிக்க உணர்ச்சியும், அதிகாரத்தை எவ்வகையிலாவது பெற ஆதிக்க சாதி என்று சொல்லப்படுகிற சாதிய சமூகத்தினர் முயல்வதை காட்சிப்படுத்திக் காட்டுகிறது. அதற்கு அவர்கள் கையாள்கிற உத்திகள் எவையெவை, அதற்கான தேவையானதாக அச்சமூகம் எதை விரும்புகிறது என்பதையும் காட்ட முயல்கிறது.

சாதியத்தின் கட்டுபாட்டில் இருந்த, இருக்கிற எந்தவொரு தனி நபரும் அதனுடைய தேவைக்கு எதிரான  நிலைப்பாட்டிற்கு செல்ல முயல்கிற போது அது வெளிப்படுத்துகிற முகம் மிக கோரமானதாக இருப்பதைக் காணலாம். ஆதிக்க சமூகத்தைச் சார்ந்தவர் தன்னுடைய சுய விருப்பங்களை, மனிதர்களை சாதியத்திற்கு பலியாக அளிப்பதையும் அதற்கு சாதியம் வைத்துள்ள கட்டுப்பாடுகள் என்னென்ன என்பதையும், அதன் தன்மை, செயல்பாடுகள் பற்றியும் மூர்க்கத் தன்மையுடனான உரையாடல் வழியே தெரியப்படுத்துகிறது.

சாதியமும்- சமூகமும்:

இந்திய சமூகம் சாதியத்தின் பற்றுக்கோடுடன்; உருக்கொண்டது என்பது உண்மை. அதன் வளர்ச்சிசார்ந்த நோக்கமும் அதன் பின்னால் அதிகார அரசியல், பொருளாதாரச் சுரண்டலின் அடிப்படையான கோட்பாடுகளை தீவிர நுகர்வு என்ற அளவில் செயல்படுத்தப்பட்டதன் விளைவு சாதியின் அமைப்பில் பல்வேறு உட்சாதிகளின் தோற்றத்திற்கு காரணமாக அமைந்தது. உட்சாதியும் அதன் மேலும் பிளவுபட்ட குழுக்;களின் இடையில் ஏற்பட்ட பலமுனைப் போராட்டங்கள் சில குழுக்களை சாதிய அமைப்பிலிருந்து வெளியேற்றியது. அதன் வெற்றி, பின் ஒவ்வொரு குழுக்களை வெளியேற்றி அதிகாரத்தை கைப்பற்றி வெற்றி பெற்றது. இது சாதியமும் சமூகமும் அதன் பின் நிகழ்ந்தவற்றின் சுருக்க வரலாறு.

இதன் அடிப்படையில் அனுகுவோமெனில், பெத்தவன் கதையில் முதன்மைப் படுத்தப்படுகிற சமூகங்கள்  இயல்பில் சமூகத்தின் அதிகாரத்தைப் பெறுவதில் போரிட முனைவன என்று எளிதில் விளங்கிக் கொள்ளலாம். எங்கு அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டிய தேவையை உணர்ந்தவர்கள் இருக்கின்றார்களோ அவர்கள் மற்றொரு சக போட்டியாளரை வீழ்த்த எண்ணுவது இயல்பானதாகக் காட்டப்படும். எனினும், அதன் உற்பத்தி மூலம் வேறொன்று என்பதை மறந்து விட்டதன் விளைவு இருவரும் தங்கள் சமூகம் பெறவேண்டிய நியாயமான உரிமைகளை இன்று வரையில் பெறவில்லை என்பது பெரும் உண்மையாக இருந்து வருகிறது.

அதன் விளைவு அச்சமூகத்தை எத்தகைய மனோபாவத்திற்கு இட்டுச் செல்லும்?. உளவியல் அடிப்படையில் அது மாறிய பண்புகளாக இருக்கக் கூடிய தன்முனைப்பில் ஈடுபடத் தூண்டுகிறது. மாறுபட்ட அல்லது சகபோட்டியாளரை வெற்றிகொள்ள வன்முறையை கையாளும் உத்தியை நாடும் 'சாடிஸ்ட்' மனோபாவம் கொண்ட ஒருவரின் செயல்பாடு எத்தகைய சமூகபாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இக்கதையில் பிரதிபலிப்பதாக சில கதைப் பாத்திரங்கள் தங்களின் சாதிய சார்ந்த வெறியை காட்டுகின்றனர். 'கட்டுற கோமணம் இல்லன்னாலும் சாதிய வுட மாட்டனுவ" ஆதிக்க சமுதாயத்தைச்  சேர்ந்த ஒருநபர் அதனை விரும்பாவிட்டாலும், சாதி அந்நபரை தன்னுள்ளேயே இருத்திக் கொள்ள எத்தகைய செயலுக்கும் தன்னை தயார்படுத்த எண்ணுகிறது என்பதை சற்றேனும் உணரலாம். அல்லது வேறொரு கோணத்திற்கு உங்களுடைய பார்வையை இட்டுச் செல்லலாம்.

சமூகத்தின் அங்கத்தினர் சிலரின் தன்சுய விருப்பத்தினை ஈடேற்றத் துடிக்கும் தனியொரு நபரின் தேவையை பூர்த்தி செய்யவும், அத்தேவையானது நிச்சயம் அச்சாதிய அமைப்பிற்கு உதவும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அதன் பேரில் வன்முறைகள் தீவிர அதிகாரத்துடன், அல்லது அதிகாரம் பெற்றவர்களின் துணையுடன் சிலரால் முன்னின்று நிகழ்த்தப்படுகிறது. சமூகத்தைச் சாதியத்தின் தீவிரப் பிடியில் எப்போதும் இருத்தி வைக்கப்பட வேண்டிய தேவை, ஒரு தனி நபரின் கையில் அதிகாரத்தை, மையச் சுழற்ச்சியாக மாற்றிக் கொடுக்கிறது. அப்போது அது உயிர்ப்புடன் இருப்பதாக பொருளாகிறது.

சாதியமும்- பொருளாதாரமும்:

சாதியம் முதன்முதலில் அடிப்படையாக தொழில் முறையில் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு அவரவர்களுக்கு குறிப்பிட்ட தொழில் முறையும், அதனை செய்ய வேண்டிய கடமையாக சில விதிகளை சட்டமாக்கி அதனை அமல்படுத்தி வெற்றிபெற்றனர். தொழில் முறையில் ஏற்படுத்தப்பட்ட அமைப்பில் காணப்பட்ட பொருளாதார ஏற்றத் தாழ்வுகளின் சூழ்ச்சி பிறகு, குட்டு உடைபட்டபின் சிலசமரச போக்குக்காக மேல்பிரிவினர் மேலும் தொழில் முறையில் பலவேறுபட்ட உப தொழில் முறையையும் உட்படுத்திப் பின் அதனை இறுக்கமாக்க சட்டதிட்டங்கள் கடுமையாக கையாளப்பட வேண்டுமெனவும், அதனை பின்பற்றவும் செய்தனர்.

ஏற்றத் தாழ்வுகள் சாதியின் உட்கூறுகளுக்கு வலுசேர்க்கும் திட்டமென சேர்க்கப்பட்டிருக்கலாம். எவ்வாறெனினும் நோக்கம் பொருளாதாரத்தை தங்களின் அதிகாரத்தின் பிடியில் வைத்திருப்பது ஒன்று மட்டுமே. இக்கதையிலும் பொருளாதாரம் பற்றிய ஆய்வு செய்ய வேண்டிய தேவையும் உள்ளது. இரு சாதிகளுக்கும் இடையில் ஏற்பட இருக்கிற கலகத்திற்கு, வன்முறை மூர்க்கத்திற்கு பஞ்சாயத்தில் நடைபெறுகிற உரையாடல் ' ஒரு பய கதெய முடிக்கவாடா ஊரே தெரண்டு பஞ்சாயத்து பண்றீங்க. அவன் தெருவயே நெருப்பு வச்சி பொசுக்கிட வேண்டியது தான." என்ற ஊர் பஞ்ச்சாயத்தில் முதியவரின் குரலும், அதற்கு மாற்று ஒன்றாக வேறொன்றை யோசனை செய்கிறவனின் உரையாடலை கவனிக்க வேண்டும். 'எல்லாம் செய்யலாம், நீ பேசாம இரு. முந்திரிக் கொட்ட பொறுக்க ஆளு வாணாமா? ". உரையாடல் பொருளாதாரச் சுரண்டலின் தேவை இருப்பதை காட்டுகிறது.

சாதிய மோதலில் பெரிதும் பாதிக்கப்படுகிற சமூகம் முதலில் செய்ய எண்ணுவது எதிர்ச் சமூகத்தின் பொருளாதாரத்தை நிர்மூலம் செய்வது. அதற்கு உரிய வேலைகளைச் செய்வது. அதன் மூலம் எதிர்ச் சமூகத்தினரின், அதிகாரத்தை கைப்பற்றும் எண்ணத்தை தகர்க்க முடியும் என்ற நம்பிக்கை காரணமாக அதனை பலமென்று எண்ணலாம்.

பெத்தவன் கதையில் கீழ்ச்சாதி என்று மையப்படுத்தப்படுகிற பெரியசாமியும் அரசாங்கத்தில் அதிகாரமிக்க பதவியில் இருந்தாலும் அவனைச் சார்ந்தவர்களின் மீதும் வன்முறையை பயன்படுத்துவது, காடுகளைக் கொளுத்துவது, அவர்களின் பசுக்கள், காளைகள், ஆடுகள் உட்பட விவசாய நிலம் என அவர்களது வாழ்வாதாரத்தை நிர்மூலம் செய்வதில் வெற்றிபெற எண்ணுவதும், அவற்றை கைப்பற்றி அழிப்பதன் மூலம் அவர்களை பயமுறுத்துவதும் தொடாந்து நடைபெறுகிறது. சாதியத்தின் பிடியில் பொருளாதாரம் பிற்காலத்தில் சேர்ந்தது என்றாலும் தற்போது முக்கிய தாக்குதல் தளமாக ஆதிக்க சமூகத்தினரால் கையாளப்படுகிறது. 

சாதியமும்- அரசியலும்:

இந்தியாவில் தற்கால தேர்தல் அரசியலில் சாதியம் முக்கிய பங்காற்றுகிறது என்பதை மறுக்க முடியாது. நாம் பிற மாநிலங்களை விட தமிழகத்தில் சாதி முறை தேர்தல் அரசியல் பிற்காலத்தில் தான் தீவிர பங்கெடுக்கத் துணிந்தது. அதுவும் 90-களின் பிந்தைய தேர்தல்களில் என்பதை மறந்துவிடக் கூடாது. பெத்தவன் கதையில் கட்சிக்கார துரையாக வருகிற பாத்திரத்தின் உரையாடல் நாம் மேற்கண்ட சாதியம் சார்ந்த நிலைப்பாட்டிற்கு புதிய அங்கீகாரத்தை அரசியல் கட்சிகள் தங்களின் லாப நோக்கத்திற்காக செயல்படுத்துகின்றன என்ற வாக்கு மூலம் அளித்திருப்பதை ஒப்புக்கொள்வதாக எடுத்துக் கொள்ள முடியும்.

கட்சிக்கார துரை ' நாங்க எங்களுக்காகச் சொல்லல. நம்ப சாதி மானம் போவக் கூடாது. எல்லாத்துக்கும் மேல கட்சியோட மானம் போயிடக் கூடாதுன்னு தான் சொல்றம்". இந்த உரையாடல் தெளிவான ஒரு பதிலை அளிப்பதைக் காணலாம். அரசியல் கட்சிகள் அனைத்திலும் உறுப்பினராக இருக்கக் கூடிய நபர்கள், தங்கள் இனத்தவரை அதிகாரப் பதவிக்குக் கொண்டு வரவும், அதன் மூலம் தங்களின் சாதிக்கான நலன்களை பெற்றுக் கொள்ளவும் முடியும் என்ற நம்பிக்கை எங்கிருந்து வந்திருக்கும்?. தேர்தல் அரசியல் தற்காலத்தில் சாதிகளை மையப்படுத்தி நடைபெறுகிறது என்பதையும் அதனுடைய வெற்றி தடுக்கப்பட்டு விடக்கூடாது அரசியல் அதிகாரத்தை தங்களின் கைகளில் இருக்க வேண்டும் என அதற்கான பகடையாக சாதியை பயன்படுதிக் கொள்வதை அரசியல் கட்சிகள் பின்பற்றவே செய்கின்றன.

இதன் அடிப்படையிலேயே ஒரு குறிப்பிட்ட சமூத்தைச் சேர்ந்த நபர்கள் தங்களின் அதிகாரத்தை கட்சிக்குள் அதிகரித்துக் கொள்ள தங்களின் சாதியின் நலன் மீது அக்கறைச் செலுத்த நேரிடுகிறது. அதனுடைய நலனுக்காக தன் சொந்த சாதியைச் சார்ந்த நபராக இருப்பினும் ஆணவக் கொலைக்கு துணையாக இருக்கமுடிகிறது. சில இடங்களில் தானே முன்னின்று செயல்படுத்துகின்றன என்ற உண்மையை ஏற்காமல் இருந்துவிட முடியாது.

பெண்ணியம் ஒடுக்கப்படுகிற விதம்:

சாதியக் கட்டுப்பாட்டில் வளர்க்கப்படுகிற பெண்ணிற்கு எப்பொழுதும் திரும்பத் திரும்ப சொல்லப்படுகிற விசயம் 'சாதி மானத்த காப்பாத்து' என்றோ அல்லது 'நம்முடைய வம்சத்தை நீதான் வளர்க்க வேண்டும்' என்றோ சொல்லப்படுகிறது. இது முழுக்க ஒரு பெண்ணினுடைய சிறு வயதிலிருந்தே சாதியத்திற்குள் அவள் அதனுடைய கட்டுப்பாட்டில் இருந்தாக வேண்டும் என்று நிர்பந்தப்படுத்தப் படுவது தெளிவு.

பெத்தவன் கதையில் தந்தையின் உரையாடலில் மேற்கண்ட கருத்துக்கள் இடம் பெறவில்லை. என்றாலும் அவர் சார்ந்த சாதி பாக்கியம் என்ற பாத்திரத்தை அவ்வப்போது கட்டுப்பாட்டுடனேயே வளர்த்திருக்க தவறாமல் இருந்திருக்காது. மேலும் கதைப்படி பாக்கியம் என்ற பெண் கல்லூரிக்குச் சென்ற போது நாகரீகம் தந்த தைரியத்தினால் காதலிக்கத் தூண்;டப்பட்டிருக்கலாம். அதன் விளைவாய் தான் சார்ந்த சாதியை எதிர்க்க துணிவு கொண்டிருக்கலாம். காதலுக்காக. இவை நிகழ்ந்திருக்கலாம் என்ற எண்ணத்தின்  அடிப்படையிலேதான் சொல்லப்படுகிறது.

எனினும் கதையில் குறிப்பிடும் பிற சாதி ஆணவக் கொலைகளான நல்லூர், பாலூர் போன்ற இடத்தில் நிகழ்ந்த இரண்டு நிகழ்வுகளும் சாதியை எதிர்த்ததால் இரு சமூகத்தாரால் அவரவர்களுக்குள் பேசி முடிவு செய்தபின் தங்கள் மகனையும், மகளையும் விஷம் கொடுத்து கொலை செய்வதும், அதனை ஒன்று சேர்ந்து வெளியில் (அரசாங்கத்திற்கு) யாருக்கும் தெரியாதவாறும், அதே சமயம் மற்ற ஊரார்களுக்கு இது ஒரு பாடமாகவும் இருக்கும் என்று மிரட்டுவதும் பெண்களை அவர்களை ஒடுக்குவதுடன், அதன் பலனாய் அவர்களது கல்வியை தடைசெய்வதும் அரங்கேறுகிறது. மற்றொன்று ஆதிக்கச் சமூகத்தைச் சார்ந்த ஆண் தன்னுடைய சமூகத்தை விடக் கீழான சமூகத்தைச் சார்ந்த பெண்ணை காதலித்தாலும் முதலில் தாக்கப்படுவது அப்பெண்ணின் சமூகத்தைச் சார்ந்தவர்களை.

மற்றொரு விதமானதாக ஆதிக்கச் சாதியை சார்ந்த பெண்ணின் தந்தையையை கொலைசெய்யுமாறு வற்புறுத்துவதும் அதனை மீறும் பட்சத்தில் அவர்களது குடும்பத்தை தீயிலிட்டு எரித்துவிடுவோம் என்று மிரட்டுவதும், சாதியத்தின் உண்மையான கோரத்தனம் வெளியேறி காட்டுகிறது. 'கீச்சாதி பயனுக்கு விரிக்கவா உன்ன பெத்தன்" என்று பாக்கியத்தின் தந்தை பழனியின் புலம்பலில் உள்ள காலம் காலமாக சீழ்பிடித்துப் போன சாதியின் வெறித்தனம் தெரியவே செய்கிறது. அவரின் நடவடிக்கைகளிலே சாதியத்தின் இறுக்கம் எப்படியுள்ளது என்று உறுதி படுத்தப்படுகிறது.

பூச்சி மருந்தாலும், எலி மருந்தாலும், தூக்குக் கயிற்றாலும் தற்கொலைக்குத் தூண்டச் செய்வது அல்லது அப்பெண்ணை தகப்பனே விஷமருந்தை காதில் ஊற்றிக் கொல்ல ஊர் பஞ்சாயத்து இரண்டு, மூன்று நாட்களென கெடு விதிப்பதன் மூலம் சாதி ஒரு தனிநபரிடமிருந்து மட்டுமில்லை அது பிறரையும், ஏன் பெற்ற தாயையே சாதிக்காக கொலை செய்ய நிர்பந்தப் படுத்துவதையும் காணமுடிகிறது. இந்நெடுங்கதையில் பாக்கியத்தின் தாயாக இருக்கும் சாமியம்மாவின் செயல் அதிர்ச்சியை அளிப்பதாக இருக்குமா  என்றால் ஆணவப்படுகொலை வீரியத்துடன் இருக்கிறது என்பதை ஏற்கமுடியும். சில ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த கௌரி சங்கர் படுகொலையும், இளவரசன் திவ்யா படுகொலையிலும் தாய் துணையாக இருந்ததை காணவே முடிந்தது.

சாதியின் மூர்க்கத் தனம்:

பெத்தவன் கதை தன்குடும்பத்தினரின் ஆசைகளை சாதிக்காக அழிக்க வேண்டும். அல்லது அவர்கள் தங்களையே அழித்துக் கொள்ள வேண்டுமென கட்டுத்திட்டங்களுடன் செயல்படுகிறது என்பதை மறுக்க முடியாது. நாம் அன்றாடம் எதிர்கொள்கிற கேள்விப் படுகிற சாதாரண நிகழ்வுகளில் ஒன்றாக மாறிவிட்டது என்பதின் மூலம் சாதி ஆணவம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே சொல்கிறது என்ற தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் புள்ளிவிவரங்கள் உண்மையை எடுத்துரைத்திருக்குமா என்ற கேள்வி கூட எழ நேரிடலாம்.

பெத்தவன் கதையின் பழனி தன் பெண்ணின் ஆசையை நிறைவேற்ற சம்மதம் தெரிவித்தும், அவளை, அவளுடைய காதலனுடன் சேர்ந்து வாழ அனுமதித்து வெளியே அனுப்பிவைப்பதும் நடைபெறுகிறது. இது பின்னால் நிகழப் போகிற சம்பவம் ஒன்றுக்கு சமிக்ஞை அளிக்கிறது. தன் சாதியினரின் கொடூரமான தாக்குதலில் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள தற்கொலை செய்துகொள்கிறார். சாதி தன்னுடைய இருப்பை உறுதிப்படுத்திவிட்டது. பின் அதன் பலன் யாரைப் போய்ச் சேரவேண்டுமோ அவர்களது தேவையை தானே நிறைவேற்றிக் கொள்ளும் முனைப்புடன் அங்கே செயல்படத் தொடங்குகிறது.

இமையத்தின் நெடுங்கதையான 'பெத்தவன்" சாதியத்தின் மீது கற்களை வீச முயன்றிருக்கிறது. சாதியத்தின் தேவையும் அதன் இருப்பை உறுதிபடுத்திக் கொண்டிருக்கின்ற காரணங்கள் என்னென்ன அவற்றின் மூர்க்கத்தனமான முகத்தை அடையாளம் காட்டுகிறது. 

- இல.பிரகாசம்

Pin It