அது ஒரு இஸ்லாமிய அமைப்பு ஏற்பாடு செய்த கூட்டம். இஸ்லாத்தை பற்றி தவறான எண்ணங்களை களைவதற்காக அந்த அமைப்பு ஏற்பாடு செய்தது. பார்வையாளர்களாக மாற்று மத சகோதரர்கள் அதிகளவில் பங்கெடுத்திருந்தனர். முதலில் இஸ்லாத்தை பற்றி முழுமையாக அறிந்துகொள்ளும் வகையில் சிறப்புரையாற்றிய அந்த சிறப்பு விருந்தினர். இறுதியில் பார்வையாளர்களை நோக்கி இஸ்லாம் பற்றி தாங்கள் தெரிந்துகொள்ள விரும்புபவற்றை கேள்விகளாக முன் வைக்க சொன்னார்.

a marx book on muslimsகேள்விகள் ஒன்றன்பின் ஒன்றாக தொடுக்கப்பட்டன. சில கேள்விகளை தவிர்த்து பல கேள்விகள் எனக்கு வியப்பை தந்தது. இதுநாள் வரை இந்துத்துவவினர்கள் இஸ்லாத்தின் மீது, இஸ்லாமியர்கள் மீது தொடுத்தார்களே அதே அம்புகளைத்தான் பரிணாமங்கள் மாறி கேள்விகளாக வந்து விழுந்தன. இத்தனைக்கும் அங்கு பார்வையாளர்களாக இருந்தவர்கள் சாதாரண மனிதர்கள் அல்லர். அவர்களில் பலரும் அரசியல் இயக்கங்களில் செயல்படுபவர்களாக, பொறுப்பாளர்களாக இருப்பவர்கள். அவர்கள் இதுபோன்றதொரு கேள்விகளை முன்வைப்பார்கள், அவர்களிடத்தில் இதுபோன்ற இஸ்லாமியர்கள் குறித்தான எண்ணம் இருக்கும் என்று நான் எண்ணியதில்லை. அப்போதுதான் ஒன்று தெளிவானது. இந்துத்துவாவினர்கள் இதுநாள்வரை திரும்ப திரும்ப சொல்லப்பட்ட பொய் பரப்புரைகள், அவதூறுகள், தவறான வரலாற்று தகவல்கள், கட்டுக்கதைகள் எல்லாம் பொதுச் சமூகத்தின் முன் உண்மை என நம்பவைக்கப்பட்டுள்ளது என்று.

ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்லுகிறபோது அது உண்மையாகிவிடும் என்ற கோயபல்ஸ் பிரச்சாரம் இந்த மண்ணில் வெற்றி கண்டுள்ளது என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். சாதாரணமாக ஒருவர் தனது மாற்றுமத நண்பரிடத்தில் உரையாடுகிறபோது இஸ்லாம், இஸ்லாமியர்கள் பற்றிய அவர்களின் பார்வையில் அவர்களுக்கே தெரியாமல் பாசிசத்தின் பிரச்சாரம் நிழலாடுவதை காணலாம்.

அதற்கு எதிரான, உண்மையான ஒரு வரலாற்றை பொதுச்சமூகத்தின் முன் வைப்பதற்கு, பொய்யான, அவதூறான செய்திகளை மறுப்பதற்கு மதச்சார்பற்றவர்கள், இஸ்லாமியர்கள் போதுமான செயற்பணிகளில் ஈடுபடுவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்டகாலம் இருந்து வருகிறது. இக்குற்றச்சாட்டை வலுவிலக்க செய்யும் பொருட்டு, பொய்யான பரப்புரைகளுக்கு தக்க பதிலடிகளை கொடுக்கும் பொருட்டு ஒரு புத்தகம் படைக்கப்பட்டிருக்கிறது. அதுவும் 23 ஆண்டுகளுக்கு முன்.

இயக்குனர் கே.பாலச்சந்தரின் 'ஜாதிமல்லி' எனும் திரைப்படத்தின் விமர்சன கூட்டம் நடைபெற்றபோது அப்படத்தில் மறைமுகமாக வெளிப்பட்ட முஸ்லீம் எதிர்ப்பை கோடிட்டுக்காட்டி பேசுகிறார் அ.மார்க்ஸ். அது தொடர்பாக அக்கூட்டம் முடிந்து அவருடைய நண்பர்களுடன் விவாதித்ததை சிறிது விரிவுபடுத்தி தொகுக்கப்பட்டிருப்பதான் "இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக்கதைகள்" என்ற புத்தகம்.

1993 ல் வெளியாகி பலரது கவனத்தையும், பரபரப்பான விற்பனையும் பெற்றது. இடையில் நீண்டகாலம் பதிக்கப்படாமல் இருந்த இப்புத்தகம் ஏழாவது பதிப்பாக புதிய தகவல்களை இணைத்து நிலவொளி பதிப்பகத்தின் சார்பில் பதிக்கப்பட்டிருக்கிறது. கேள்வி-பதில் வடிவில் படைக்கப்பட்டிருப்பதும், மிக எளிமையாக எல்லோருக்கும் எளிதில் புரிகிற மொழியில் அமைந்திருப்பதும் இதன் சிறப்பாகும். 1) வரலாற்றில் வகுப்புவாதம் 2) இஸ்லாமியப் பண்பாடு இழிவானதா 3) புறக்கணிக்கப்படும் இஸ்லாமியர் 4) பின் இணைப்பாய் சில கேள்விகள் 5) சிறுபான்மை மக்களும் இன்றைய அரசியல் சூழலும் என ஐந்து பாகங்களாக பிரித்து கேள்விகள் தொடுக்கப்பட்டுள்ளன.

இஸ்லாமிய சமூகம் எதிர்கொண்டு வருகிற பல்வேறு கேள்விகளை எழுப்பி அதற்கான பதில்களை ஆசிரியர் தருவிக்கின்றார்.இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை, பசுவதை, மாட்டிறைச்சி உண்பது, பலதார மனம், பொது சிவில் சட்டம், முஸ்லிம்களுக்கு தமிழ் பற்று இல்லை, முஸ்லிம் மன்னர்கள் கோவிலை இடித்தார்கள், காசுமீருக்கு மட்டும் தனிச்சட்டமா, 370 வைத்து பிரிவு சரியா போன்ற 40 க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பல ஆதாரங்களை முன் வைத்து பதில் வழங்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் அரசு பணிகளில் இஸ்லாமியர்களின் நிலை, கல்வி நிலையில் இஸ்லாமியர்கள் எப்படி உள்ளனர் என்பதை அரசின் புள்ளி விவரங்களின்படி தரப்பட்டுள்ளது.

சிறுபான்மை மக்களும் இன்றைய அரசியல் சூழலும் என்ற இறுதி பகுதியில் தற்போதைய இந்த அரசில் ஆய்வுகளின் பின்னணியில் முஸ்லிம்களும், அமைப்புகளுக்கும் எவற்றிற்கு முன்னுரிமை தர வேண்டும். அவர்கள் மேற்கொண்டு வரும் வியூகங்கள் பயன் அளிக்குமா, அதை மேம்படுத்துவதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விகளுக்கு தனது ஆலோசனைகளை முன் வைக்கிறார் ஆசிரியர்.

இந்துத்துவாவினர்கள் தொடர்ச்சியாக செய்து வரும் பொய்களையும், புரட்டுகளையும், கட்டுக்கதைகளையும் மக்களிடத்தில் அம்பலப்படுத்தவேண்டும். உண்மை நிலைகளை பொதுச்சமூகத்தின் முன் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதற்கு அறிவு தளத்திலும், செயற்களத்திலும் முஸ்லிம்கள் செயலாற்றிட வேண்டும். அதற்கான முன் முயற்சியைத்தான் இப்புத்தகம் மேற்கொண்டிருக்கிறது.

இப்புத்தகம் 23 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்டது சாதாரணமான நிகழ்வல்ல. அது பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட, முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புகள் வேகமாக முன்னெடுக்கப்பட்ட காலகட்டமாகும். அந்த நிலையிலும் இதற்கான பணிகளில் ஈடுபட்டு உண்மைகளின் பக்கம் நின்று இப்புத்தகம் கொண்டுவரப்பட பெரும் முயற்சி செய்த பேரா.அ.மார்க்ஸ், தனது பணியாளர் வைப்பு நிதியை கடன்பெற்று முதற்பதிப்பை கொண்டுவந்த கணேசமூர்த்தி, பேரா.கல்யாணி, பொதியவெற்பன், பேரா.விஜயலட்சுமி ஆகியோர் முஸ்லிம் சமூகத்தின் நன்றிக்குரியவர்கள்.

இப்புத்தகத்தை வாசிப்பதும், பிறருக்கு வாசிக்க கொடுப்பதும் அவசியமானது.

- வி.களத்தூர் எம்.பாரூக்

Pin It