எப்பொழுதெல்லாம் நெருக்கடி முற்றி அரசின் மீது மக்கள் அதிருப்தி கொள்கின்றார்களோ, அப்பொழுதெல்லாம் அவர்களின் கவனம் மிகச் சரியாக திசை திருப்பப்பட்டு அவர்கள் வீதிக்கு இழுத்து வரப்படுகின்றார்கள். அப்படி வீதிக்கு வந்த மக்கள் தங்களிடம் இருந்து பறிக்கப்பட்ட உரிமைகளுக்காகப் போராடாமல் தனது மூளையில் மண்டிப்போய் இருக்கும் சாதிய, மதவாத குப்பைகளுக்காக போராட வைக்கப்படுகின்றார்கள்.

இதற்காகவே பல விஷப்பாம்புகளை சாதிய, மதவாத வெறியர்கள் வளர்த்து வைத்திருக்கின்றார்கள். அவை தக்க தருணத்தில் தமது விஷத்தை வெளிப்படுத்தி ஓட்டுமொத்த நாட்டையும் அபாய கட்டத்தை நோக்கித் தள்ளுகின்றன.

அப்படித்தான் சில தினங்களுக்கு முன்னால் பா.ஜ.க தேசிய செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மா மற்றும் அதன் டெல்லி செய்தித் தொடர்பாளர் நவீன் குமார் ஜிண்டால் என்ற இரண்டு விஷநாக்குப் பேர்வழிகளும் ஞானவாபி மசூதி வழக்கு தொடர்பாக நடந்த தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்று, திட்டமிட்டே நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறி ஒட்டுமொத்த இஸ்லாமிய நாடுகளையும் இந்தியாவிற்கு எதிராகத் தூண்டி விட்டிருக்கின்றார்கள்.

protest against nupur sharmaதற்போது இரண்டு பேரும் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தாலும், அவர்களை உதிரி சக்திகள் எனச் சொல்லி மழுப்பினாலும் யாருமே பிஜேபியை நம்பவில்லை. காரணம் பிஜேபியின் யோக்கியதை நாடுகடந்து நாறிப்போன ஒன்று.

அதனால் தான் வளைகுடா நாடுகள் தங்கள் நாட்டுக்கான இந்தியத் தூதர்களை வரவழைத்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்ததோடு, இந்தியா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறி வருகின்றது.

முஸ்லிம்களுக்கு எதிராக பிஜேபி ஆர்.எஸ்.எஸ் காலிகள் பேசியதை எல்லாம் தொகுத்தால் அது உலகின் கொடூரமான கொலைவெறி பிடித்த பாசிச மனநோயாளிகளுக்கு எல்லாம் புனித நூலாக இருக்கும்.

ராமனை ஏற்றுக் கொள்ளாதவர்கள் பாகிஸ்தானுக்கு ஓடிவிட வேண்டும் என்றும், விபச்சார விடுதியில் பிறந்தவர்கள் என்றும் பேசிய வெறுப்புப் பேச்சுக்களை இந்திய மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்

கடந்த ஆண்டு உத்திரகண்ட் மாநிலத்தின் ஹரித்வாரில் இந்து சாதுக்களின் அமைப்பான தர்ம சன்சத் நடத்திய மதப் பாராளுமன்றம் என்ற நிகழ்வில் இந்து சாமியார்கள் என்ற போர்வையில் இருக்கும் பொறுக்கிகள் முஸ்லிம்களுக்கு எதிராக அருவருக்கத்தக்க வெறித்தனமான பேச்சுக்களை பேசினார்கள்.

"இது நம்ம மாநிலம், ஒவ்வொரு இந்துவும் ஆயுதத்தைத் தூக்க வேண்டும்.வேறு வழியே இல்லை. இந்த துடைத்தழிக்கும் செயல்திட்டம் நிறைவேற வேண்டும். இதைத் தவிர வேறு தீர்வு இல்லை”

"ஒவ்வொரு முஸ்லீமும் ஜிகாதி தீவிரவாதி, அவர்களுக்கு நாம் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்”

"இஸ்லாமியர்களைக் கூண்டோடு அழிக்க வேண்டும், இன அழிப்புக்குத் தயாராகுங்கள். ஆயுதங்கள் இல்லாமல் எதுவும் நடக்காது. அவர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். கொலை செய்யத் தயாராகுங்கள், சிறை செல்லத் தயாராகுங்கள். கோட்சே வழியே நம் வழி! அப்போது தான் நாம் வெற்றி பெறுவோம். இது தான் நேரம். நாம் 100 பேர் தயாரானால், 20 லட்சம் இஸ்லாமியர்களைக் கொல்ல முடியும். தாய்மார்களே உங்கள் கைகளில் கொலை வாளினை எடுங்கள். உங்கள் மகனின் கரங்களில் தாருங்கள்”

"இது இந்து நாடாக வேண்டும். அதற்கு இந்த அரசு ஒத்துழைக்க வேண்டும். இல்லாவிட்டால் 1857ல் நடந்தது மீண்டும் நடக்கும். இந்துவாக இல்லாதவர்கள் உத்திரகாண்ட் மாநிலத்திற்குள் நுழையத் தடை விதிக்க வேண்டும்.”

”இது இந்துக்களின் புனித பூமி. ஆகவே பாதுகாக்கப்பட வேண்டும். நாங்கள் இந்திய எல்லையில் இருப்பதால் நாட்டைப் பாதுகாக்கவே இந்தப் பேச்சை ஆதரிக்கிறோம்”

"நான் முஸ்லீம்களுக்கு சொல்ல வருவது இது தான். முஸ்லீம்களே எங்களோடு நீங்கள் இருக்க விரும்பினால், குரான் படிப்பதை நிறுத்துங்கள். உங்கள் தொழுகையை நிறுத்துங்கள். ஹிந்துக்களே நீங்கள் முஸ்லீம்களிடம் இருந்து எதையும் வாங்குவதில்லை என உறுதி பூண்டால் அவர்களை சமூக, பொருளாதார ரீதியாக அழித்துவிடலாம். எனவே இஸ்லாமியர்கள் வேறு வழி இல்லாமல் இந்துவாக மாறித் தான் ஆக வேண்டும்”

"மன்மோகன் சிங் சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனப் பாராளுமன்றத்தில் பேசிய போது நான் அங்கு இருந்திருந்தால், அவர் உடலில் ஆறு தோட்டாக்களை செலுத்தி இருப்பேன்”

"ஹரித்துவாரில் எங்கேனும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நடந்தால், அவ்வளவு தான் தொலைத்து விடுவோம். அது ஹோட்டலோ, விடுதியோ எதுவோ அப்புறம் அந்த சொத்தின் மீது அவர்கள் உரிமை கொண்டாட முடியாது”

"நாம் அலட்சியமாக இருந்துவிட்டால் 2029ல் ஒரு இஸ்லாமியர் பிரதமராகி விடுவார். அப்புறம் 20 ஆண்டுகளில் 50 சதவிகித மக்கள் இஸ்லாமியர் ஆக்கப்படுவார்கள். 40 சதவிகித இந்துக்கள் கொல்லப்படுவார்கள். 10 சதவீதமானவர்கள் அகதிகளாக்கப்படுவார்கள்”

இவை எல்லாம் மதச்சார்பற்ற நாட்டில், சங்கிகள் இன்று கதறுவது போல “நாங்கள் எல்லா மதங்களையும் மதிக்கின்றோம், போற்றுகின்றோம், மரியாதை செய்கின்றோம்" என்று சொல்லும் நாட்டில் பேசப்பட்டதுதான்.

அரசு அதிகாரம் தனது கையில் உள்ள தைரியத்தில் எவ்வளவு வன்மத்தை உமிழ முடியுமோ அவ்வளவு வன்மத்தையும் சங்கிகள் மிகச் சுதந்திரமாக உமிழ்ந்து வருகின்றார்கள்.

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரோகிண்டன் பாலி நாரிமன் கூட சில மாதங்களுக்கு முன்னால் “ஆளும் அரசாங்கத்தை விமர்சிப்பதற்காக, ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் இடையிலான வேறுபாட்டைக் கொண்ட சட்டப்பிரிவு 19 வது பிரிவின் நோக்கத்தை முற்றிலுமாக மீறி, நகைச்சுவை நடிகர்கள் மற்றும் மாணவர்கள் மீது தேசத் துரோக வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன” என்றும்,

ஆளும் பாஜகவை விமர்சித்ததற்காக மக்கள் மீது தேசத் துரோக வழக்குகள் பாய்ந்த போதிலும், உண்மையில் வெறுப்பூட்டும் பேச்சுக்களை பேசியவர்கள் மற்றும் ஒரு சமூகத்தை அழிக்க இனப்படுகொலைக்கு அழைப்பு விடுத்தவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அரசு வேடிக்கை பார்க்கிறது என்றும், ஹரித்வாரில் நடைபெற்ற தர்ம சன்சத் நிகழ்ச்சியில் வெறுப்புணர்வை ஏற்படுத்திய பேச்சுக்களுக்கு எதிராக காவல்துறையில் புகார்கள் பதிவு செய்யப்பட்டாலும், உச்ச நீதிமன்றம் தலையிடும் வரை கிட்டத்தட்ட ஒரு மாதமாக யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

தற்போது நபிகள் நாயகத்தை பற்றி இழிவாகப் பேசியதால் பிரச்சினை இந்தியாவைத் தாண்டி ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளுக்கும் பரவி அங்கு பணிபுரியும் இந்தியர்களின் வேலைவாய்ப்பைப் பறிப்பதோடு அவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குள்ளாகி இருக்கின்றது. வளைகுடா நாடுகளுடனான இந்தியாவின் வர்த்தகமும் பின்னடைவைச் சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு போன்ற பொருட்களை இந்தியா அதிகளவில் வளைகுடா நாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்கிறது. 2020-21 நிதியாண்டில் மட்டும் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியா மொத்தம் 110.73 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்படும் பணத்தைப் பொறுத்தவரையில், 2021ஆம் ஆண்டில் மட்டும் 87 பில்லியன் டாலர் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்துள்ளது.

வளைகுடா நாடுகளில் 89 லட்சம் இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர். அங்கு வாழும் இந்தியர்கள் பெரிய தொழில் நிறுவனங்களையும், உணவகங்ளையும் நடத்தி வருகின்றனர்.

இந்தியாவின் ஒரு நாளுக்கான பெட்ரோலிய பொருட்களின் தேவையில், 60 சதவீதம் வளைகுடா நாடுகளில் இருந்தே பெறப்படுகிறது. குறிப்பாக ஈராக், சவூதி, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து மட்டுமே 50 சதவீத பெட்ரோலியப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறது.

வளைகுடா நாடுகளும் தங்களது உணவுப் பொருள் தேவைக்கு 85 சதவீதம் இந்தியாவைச் சார்ந்திருந்தாலும் குறிப்பாக அரிசி, மாட்டிறைச்சி, மசாலா பொருட்கள், பழங்கள், காய்கறிகள், சர்க்கரை போன்ற பொருட்களுக்கு இந்தியாவைச் சார்ந்திருந்தாலும் இந்தப் பொருட்களை அவர்களால் வேறு நாடுகளில் இருந்துகூட கணிசமாக இறக்குமதி செய்துகொள்ள முடியும். ஆனால் பெட்ரோலியப் பொருட்கள் இறக்குமதியில் பிரச்சினை ஏற்பட்டால் ஏற்கெனவே முட்டுச்சந்தில் இருக்கும் இந்தியப் பொருளாதாரம் கடும் நெருக்கடியில் சிக்கிக் கொள்ளும் என்பது உறுதி.

இந்தியாவை ஒரு பெரும் வன்முறைக் களமாக மாற்றி சிறுபான்மையின மக்களுக்கு எதிரான படுகொலைகளை நிகழ்த்த வேண்டும் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ் பாசிஸ்ட்களின் சந்த் திட்டமாகும்.

அதானியும் அம்பானியும் உலகப் பணக்காரர்கள் வரிசையில் தொடர்ந்து முன்வரிசையில் இருக்கவும், இந்தியாவின் வளங்களை பன்னாட்டு முதலாளிகளுக்கும், தரகு முதலாளிகளுக்கும் தாரை வார்க்கவும் அசமத்துவத்தால் ஏற்படும் மக்களின் கோபத்தை மழுங்கடிக்கவும் இந்த பாசிச செயல்திட்டத்தை சங்கிக்கும்பல் அரங்கேற்றி வருகின்றது.

இதுவரை நூபுர் ஷர்மாவும் மற்றும் நவீன் குமார் ஜிண்டாலும் கைது செய்யப்படவில்லை. ஆனால் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இதற்கு எதிராகப் போராடியவர்கள் மீது கடும் அடக்குமுறையை ஏவிவிட்டு இருவரைக் கொன்று போட்டிருக்கின்றது, அந்த மாநிலத்தை ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அரசு.

நாடு முழுவதும் காவிப் பயங்கரவாதிகளின் கரங்கள் ஓங்கி வருகின்றன. பிஜேபி ஆளாத மாநிலங்கள் கூட பிஜேபியின் அயோக்கியத்தனத்தை அனுசரித்துப் போகும் நிலைக்கு இறக்கப்பட்டிருக்கின்றன.

இந்தியாவின் இறையாண்மை குப்பைத் தொட்டியில் வீசி எறியப்பட்டு அந்த இடத்தில் பாசிச சனாதனம் நிறுவப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. முற்போக்கு இயக்கங்கள் கையைப் பிசைந்துகொண்டு நிற்கின்றன. பிஜேபியை எப்படி எதிர்கொள்வது, அதன் வளர்ச்சியை எப்படி முடக்குவது என்று அவர்கள் இன்னும் தீவிரமாக சிந்தித்து செயல்பட வேண்டியுள்ளது. இல்லை என்றால் பாசிசம் அனைத்தையும் கபளீகரம் செய்வதற்கு நீண்ட காலம் பிடிக்காது என்பதை நாம் உணர வேண்டும்.

- செ.கார்கி

Pin It