அன்பு நண்பர் காதர் மைதீன் அவர்களுக்கு...

கடந்த 06.09.2015 அன்று திருப்பூர் கல்புர்கி அரங்கில் நடைபெற்ற (மௌனத்தின் சாட்சியங்கள் நூல் வெளியீட்டு நிகழ்வைத் தடைசெய்த) உளவுத்துறைக் எதிரான கண்டனக் கூட்டத்தில் நான் பேசியதை கொஞ்சமும் நேர்மையற்ற முறையில் திரித்து வைகறை வெளிச்சம் அக்டோபர் 2015 இதழில் வெளியிட்டிருந்தீர்கள். அதை மறுத்து நான் எழுதிய மறுப்புக் கட்டுரை கீற்று இணையதளத்தில் வெளியானது. அதை வைகறை வெளிச்சம் நவம்பர் 2015 இதழிலும் வெளியிட்டிருந்தீர்கள். அதற்கு அடுத்த இதழில் (பிப்ரவரி 2016) மறுப்புக்கு விளக்கம் என்ற பெயரில் ஏதோ ஒன்றை எழுதி வெளியிட்டிருந்தீர்கள். அதை ’கட்டுரை’ என்றோ ’விளக்கம்’ என்றோ குறுகிய வட்டத்தில் அடைத்துவிட முடியுமா என்று தெரியவில்லை. ஆனாலும் அதற்கு ’விளக்கம்’ என்று துணிந்து பெயர் சூட்டியிருந்த உங்கள் மனோ தைரியத்தைப் பாராட்டியே ஆகவேண்டும்.

heera 270‘பசுவைப் பற்றி எதுவுமே தெரியாதவனிடம் பசுவின் சிறப்புகள் குறித்து ஒரு கட்டுரை எழுதச் சொன்னார்களாம். அவன் பனை மரத்தின் சிறப்புகள் குறித்து ஒரு நீண்ட கட்டுரை எழுதிவிட்டு அந்த பனை மரத்தில் பசு கட்டப் பட்டிருந்தது என்று முடித்தானாம்’ என்று ஒரு வேடிக்கையான கதையை நீங்கள் கேள்விப்பட்டிருக்கக் கூடும். ஆனால் நீங்கள் எழுதிய ‘விளக்கத்தில்!?’ இருந்து என்ன புரிந்துகொள்ள முடிகிறது என்றால் துரதிர்ஷ்டவசமாக உங்களுக்கு பனைமரம் குறித்தும் ஒன்றும் தெரியவில்லை என்பதுதான்.

உங்களுக்கு நினைவிருக்கும் என்று நம்புகிறேன், அந்த கண்டன நிகழ்வு நடந்து முடிந்த சில நாட்களுக்குப் பிறகு நீங்கள் என்னைத் தொலைபேசியில் அழைத்து ’சமீபத்தில் தீக்கதிர் பத்திரிக்கையில் வெளியான எனது பேட்டியைப் படித்ததாகவும், அதில் வரலாற்றுத் தவறுகள் இருப்பதாகவும் கூறினீர்கள். உங்களது வார்த்தைகள் எப்போதும் மேலிருந்து கீழ்நோக்கிய வாத்தியார் மனோபாவத்தில்தான் இருக்கும் என்பது உங்களுக்கு நெருக்கமான நபர்களுக்கு தெரிந்திருக்கலாம். எனக்கு அது புதிய அனுபவமாக இருந்தாலும், என்ன தவறென்று குறிப்பிட்டுச் சொல்லுங்கள் பரிசீலிப்போம் என்றேன்.

’1980 களுக்குப் பிறகு இந்துத்துவ சக்திகளின் வரவுக்குப் பிறகே தமிழகத்தில் மதக்கலவரங்களுக்கான சூழல் உருவாக்கப்பட்டதாக நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். அது தவறு. 1950 களிலேயே இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள் நடந்திருக்கின்றன’ என்றீர்கள். ’எங்கே நடந்தது சொல்லுங்கள் என்றேன். ’ஜப்பான்ல ஜாக்கீசான் கூப்டாக… சீனாவுல ஜெட்லி கூப்டாக…’ என்பதுபோல பீஹாரிலே, மத்தியப்பிரதேசத்திலே அடுக்கிக் கொண்டே போனீர்கள்.

தீக்கதிரில் தமிழக நிலைமைகளைக் குறித்து நான் பேசியிருக்கிறேன். இதில் அந்த மாநிலங்கள் எங்கே வந்தது..? பீகாரும், மத்தியப் பிரதேசமும் எப்போது தமிழகத்தோடு இணைக்கப்பட்டது என்று கேட்டேன்.

’அது.. அது வந்து.. ஆங்.. தமிழகத்திலும் நடந்திருக்கிறது... அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது..’ என்று ஒருமாதிரியாக சமாளித்தீர்கள். எனக்கு ஏனோ ’கைப்புள்ள’ வடிவேலு நினைவுக்கு வந்து போனார். தன்னை ஆகச்சிறந்த அறிவாளியாகக் காட்டிக் கொள்ள முயலும் உங்கள் வாத்தியார் மனோபாவமே இதுபோன்ற சப்பைக்கட்டுகள் கட்டுகிற நிலைமைக்கு உங்களைக் கொண்டுவந்து தள்ளியது என்பதை நீங்கள் அப்போதாவது உணர்ந்திருக்கலாம். ஆதாரத்தோடு வருகிறேன் என்று தொலைபேசியைத் துண்டித்த நீங்கள் இன்னும் ஆதாரங்களைத் தேடிக் கொண்டே இருக்கிறீர்கள். என்றாவது ஒரு நாள் திரும்பி வந்து ’நம்பர் 6, துபாய் குறுக்குச்சந்து, துபாய் மெயின் ரோடு, துபாய்..’ என்று ஆதாரத்தோடு சொல்வீர்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தேன். ஆதாரங்களேதும் வரவில்லை. ஆச்சா…

பிப் 2016 இதழில் உங்கள் ’மறுப்புக்கு விளக்கத்தைப்’ படித்தபோது - உண்மையைச் சொல்ல வேண்டுமெனில் - வெகுநேரம் வாய்விட்டுச் சிரித்தேன். நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு உண்டு. ஆனால் அதை நீங்கள் சீரியசாக நினைத்துக்கொண்டு எழுதியிருப்பதுதான் முரணாக இருந்தது.

ஒரு புத்தகத்தை விமர்சனம் செய்ய வேண்டுமெனில் குறைந்தபட்சம் ஒரு முறையேனும் அதை முழுதாக படித்திருக்க வேண்டும். ஆனால் நீங்கள் அதில் என்னுடைய ’என்னுரை’ யைக்கூட படித்திருக்கவில்லை என்பதைத்தான் உங்கள் முதிர்ச்சியற்ற கேள்விகள் காட்டுகின்றன. இலக்கியம் குறித்தும், புதினங்கள் குறித்தும் ஆரம்பகட்ட அறிமுகமாவது இருந்திருந்தால் இதுபோன்ற கேள்விகளுக்கே இடமிருக்காது.

சரி.. அதுதான் போகட்டும், ஆர்வக்கோளாறில் நுனிப்புல் மேய்ந்துவிட்டு எதையோ எழுதி விட்டீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் மறுப்புக்கு விளக்கம்(!?) எழுதும்போது நான் எழுதிய மறுப்பையாவது முழுதாக வாசித்தீர்களா என்றும் சந்தேகமாகவே உள்ளது. ஒருவேளை நீங்கள் வாசித்திருந்தால் இதுபோன்ற அபத்தமான கேள்விகள் மீண்டும் உங்களுக்கு எழுந்திருக்காது. ’இல்லை... நான் வாசித்தேன்’ என்று நீங்கள் சத்தியம் செய்து சொல்வீர்களேயானால் உங்களுக்கு தமிழைப் புரிந்து கொள்வதில் ஏதேனும் சிக்கல் இருக்கலாம். சீமானிடம் சொல்லி உங்களுக்கு தமிழ் மரபணு சோதனை நடத்துவதைத் தவிர வேறு வழியே இல்லை.

மார்ச் 2016 இதழிலும் உங்கள் சிந்தனைக் கொத்துகளை (கோல்வால்கர் நினைவுக்கு வந்தால் நானே பொறுப்பு) வண்டி வண்டியாக அள்ளித் தெளித்திருந்தீர்கள். வழக்கமாக நீங்கள் செய்யும் காமெடிகளைத் தாண்டி இதில் சீரியசாக எதையோ முயற்சித்திருந்தீர்கள் என்று மட்டும் புரிந்தது. எவ்வளவு நுணுக்கமாக சிந்தித்திருக்கிறீர்கள். கவட்டை கவட்டையாகப் பிரிந்து பரவிய உங்கள் சிந்தனைச் சிதறலைக் கண்டு நானே ஆச்சர்யப்பட்டுப் போனேன். ஒருவேளை நீங்கள் கழிப்பறையில் அமர்ந்து யோசித்தபோது கனநேரத்தில் உதித்த சிந்தனையாக அது இருக்கக்கூடும்.

அதில் (மார்ச் 2016 இதழில்) என்னுடைய பெயரில் இருக்கும் தீன் என்ற வார்த்தையைக் கவனமாகத் தவிர்த்து குரூரமாக உள்ளூர சந்தோசப் பட்டிருந்தீர்கள். சம்சுதீன் என்றால் இஸ்லாமிய சூரியன் என்று பொருள். அதில் இஸ்லாம் என்ற பொருள் படக்கூடிய தீன் என்ற சொல்லை நீக்கி ஷம்ஸ் ஷம்ஸ் என்றே எழுதியிருந்தீர்கள். (உங்களுக்கும் இஸ்க் இஸ்க் என்றா கேட்கிறது..? எனக்கும் அப்படித்தான் கேட்கிறது). என் பெயரிலிருந்து தீன் என்ற சொல்லை நீக்கியதன் மூலம் என்னைப் போன்ற கம்யூனிச சைத்தான்களிடமிருந்து இஸ்லாத்தைக் காப்பாற்றி விட்ட மீட்பராகக் கருதிக்கொள்ள உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு.

தீன் என்ற சொல் எனக்குப் பொருந்துமா பொருந்தாதா என்பதல்ல இங்கு பிரச்சனை. அதை நீக்க உங்களுக்கு என்ன உரிமை உண்டு என்பதே இங்கு கேள்வி. இஸ்லாத்தின் ஒட்டுமொத்த பங்குகளை(ஷேர்) நீங்கள் வாங்கி அதன் ஏகபோக அதிபதியாகிவிட்டதை ஏன் எந்த ஊடகங்களும் சொல்லவில்லை?.

தமிழன் என்று சான்றிதழ் வாங்க ஒரு கடை, தேசபக்தன் சான்றிதழ் வாங்க ஒரு கடை இருப்பதுபோல் இஸ்லாமியன் என்கிற சான்றிதழ் வாங்கவும் இங்கு கடைகள் உண்டு. இந்தியாவில் கடைகளுக்கா பஞ்சம்? கடைகள் பலவிதமாக இருந்தாலும் வியாபாரிகள் அனைவரும் ஒரே விதமாகவே இருக்கிறார்கள். சீமானை விமர்சிப்பவர்கள் வந்தேறிகள், பி.ஜெ.பி ஐ விமர்சிப்பவர்கள் தேசவிரோதிகள். இஸ்லாமிய அமைப்புகளை விமர்சிப்பவர்கள் சைத்தான்கள். சரக்குகள் வேறென்றாலும் சாரம் ஒன்றுதான். ’இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்.’ ரொம்ப சந்தோஷம்…

கழுத்தில் இஸ்லாமிய போர்டு மாட்டிக்கொண்டு இஸ்லாத்தின் ஹோல்சேல் ஏஜெண்ட்டுகளாகத் தங்களைக் கருதிக் கொள்பவர்களிடமிருந்து எல்லாம் வல்ல இறைவன் இஸ்லாத்தைக் காப்பானாக..  ஆமீன்.

சொரிதலில் பலவகை, ஒவ்வொன்றும் ஒரு வகை.

என் பெயரிலிருந்து ’தீன்’ விலக்கம் செய்ததன் மூலம் என் சொர்க்கத்துக்கான விசாவை அராஜகமாக பறித்துள்ள அன்பு நண்பர் காதர் மைதீன் அவர்களே..

இனி சொர்க்கம் செல்லும் வழியிலுள்ள, முடியை விட பல நூறு மடங்கு மெல்லிய, சிராத்தல் முஸ்தகீன் பாலத்தை நான் எப்படிக் கடக்கப் போகிறேனோ என்றே தெரியவில்லை. நரகத்தின் எண்ணெய்க் கொப்பரையில் விழுந்து ஃப்ரையாக்கப்பட்ட (இப்போது இருப்பதை விட பயங்கரக் கருப்பான) எனது உருவம் மணக்கண்ணில் வந்து அச்சமூட்டுகிறது. சொர்க்கத்தில் ஓடும் மது ஆற்றில் எனக்கான பங்கையும் சேர்த்து நண்பர் காதர் மைதீன் அருந்திக் கொள்ளட்டும். ஆமீன்..

நண்பர் காதர் மைதீன் அவர்களே இதுபோன்ற உங்கள் சுய சொரிதல்களுக்கெல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க வேண்டுமா எனக்கூட யோசித்தேன். ஆனால் வைகறை வெளிச்சம் இதழைப் படிக்கக்கூடிய வாசகர்களுக்கு உங்களின் ’அறிவுஜீவி’ முகத்தை அறிமுகம் செய்ய வேண்டிய கடமை இருப்பதால் இதை எழுதுகிறேன். இனி கேள்வி பதில்களுக்கு செல்வோம். கேள்விகளா அவை..? ஒவ்வொன்றும் அணுகுண்டுகள். ஆனால் இவை ரூஸ்வெல்ட்டின் குண்டுகளல்ல, கோயபல்சுகளின் குண்டுகள்.

அணுகுண்டு 1.

2006 ம் ஆண்டு ஜூன் 22 இல் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு அதில் அவர் சார்ந்த கட்சிகளின் சாதனைகளை எல்லாம் குறிப்பிட்டு இதை ஏன் நாவலில் சொல்லவில்லை எனக் கேட்டார். தனிப்பட்ட எந்த கட்சியின் சாதனைகளை விளக்கிக் கொண்டிருப்பது என் வேலையல்ல, நான் பாதிக்கப்பட்ட மக்களின் வலியைச் சொல்வதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு எழுதினேன் என்றும், “ஒருவேளை இந்த குண்டுவெடிப்புக்கும் முஸ்லிம்களுக்கும் தொடர்பில்லை என்று நீங்கள் நிறுவ முயன்றால் ஆதாரத்தோடு நிறுவுங்கள். பொத்தாம்பொதுவாக போகிற போக்கில் எழுதி விட்டுச்  செல்வதெல்லாம் பொருத்தமற்றது.”  என்றும் நவம்பர் 2015 இதழில் பதில் சொல்லியிருந்தேன்.

பிப் 2016 இதழில் நண்பர் காதர் மொய்தீன் அவர்கள் அதற்கு விளக்கம் சொல்கிறேன் பேர்வழி என்று அதே கட்சியின் சாதனைகளை ஒன்னரைப் பக்கத்து நீட்டி முழக்கி “மாற்றுப் பார்வையே தேவையில்லை; முஸ்லிம்களின் குற்றத்தை நான் உறுதி செய்கிறேன் என்றொரு நாவலை எழுதுவது ஏன் என கேட்கத் தோன்றுகிறது..?” என்று கேட்டுள்ளார். இப்போது சொல்லுங்கள் வாசகர்களே… 2015 நவம்பர் இதழில் நான் சொல்லியிருக்கும் பதிலை அவரின் ’வாத்தியார்’ கண்கள் படிக்கவே இல்லை என்பதுதானே நிஜம்.

அணுகுண்டு 2.

”ஆனால் யாரும் மனநலம் பாதிக்கப்படவில்லை. ஆக யாசர் என்கிற கதாப்பாத்திரம் கற்பனையானது அல்லது பொய்யானது. நான் சம்மந்தப்பட்டவர்களிடம் கள ஆய்வு நடத்திவிட்டே வந்தேன்…  அன்பு நண்பரின் நாவலில் உண்மைகள் இருக்கும் என எதிர்பார்ப்பதற்கில்லை. இது இலக்கிய உலகின் நீதி நெறிகளுக்கு எதிரானது.” என அழுது புலம்புகிறார் நண்பர் காதர் மொய்தீன்.

நாவலில் வரும் கதாப்பாத்திரங்களை இந்த வேகாத வெயிலில் தேடி அலைந்து கள ஆய்வு செய்து (ஆத்தாடி..! கள ஆய்வுங்கிற வார்த்தைக்கு உண்டான மரியாதையே போச்சு), நாவலில் கற்பனைப் பாத்திரங்களைப் படைப்பது இலக்கிய நீதி நெறிகளுக்கு எதிரானது என்ற அறிய கண்டுபிடிப்பைச் செய்த (அறிவியலுக்கான நோபல் பரிசு கன்ஃபார்ம்) நண்பருக்கு  நவம்பர் இதழில் நான் சொன்ன அதே பதிலை காப்பி பேஸ்ட் செய்து காணிக்கையாக்குகிறேன். இதை என்னுரையில் விரிவாகவும் மிகத் தெளிவாகவும் சொல்லியிருக்கிறேன்.

”மௌனத்தின் சாட்சியங்கள் நூல் உண்மைச் சம்பவங்களைத் தழுவி எழுதப்பட்ட புனைவிலக்கியம். அதில் யாசர், வைஷ்னவி போன்ற சில ஒரு கற்பனைப் பாத்திரங்கள் உண்டு. பல பாதிக்கப்பட்ட இளைஞர்களின் அனுபவங்களை யாசர் என்கிற கதாப்பாத்திரத்திற்குள் சொல்ல முயன்றிருக்கிறேன். அந்த கதாப்பாத்திரத்தை வெளியில் தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை என்று சொல்வதே நகைப்புக்கு உரியதாக இருக்கிறது.”

அணுகுண்டு 3.

”சம்பவங்களை யதார்த்தத்தின் அடிப்படையில் ஆய்வு செய்யாமல் நாவலாசிரியர் மார்க்சிய கண்ணோட்டத்தில் ஆய்வு செய்திருப்பதால் இது நடுநிலையான நாவல் அல்ல..”

என்னை குபீரெனச் சிரிக்க வைத்த அறிவார்ந்த(!?) கேள்வி இதுதான். நண்பர் சொல்லும் காரணம், வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்று சொல்வதுபோல உள்ளது. வாசகர்களும் சிரிக்கட்டும் என்பதால் இதைக் குறிப்பிட்டுள்ளேன். என்னை காவி பயங்கரவாதி, ஆர்.எஸ்.எஸ் கைக்கூலி என்று சொல்லியிருந்தால் கூட ஒரு லாஜிக் இருந்திருக்கும்… இவ்வளவு நாளா எங்க இருந்தீங்க ராசா..?

என்னைப் பொருத்தவரை நடுநிலை என்கிற வார்த்தையே அயோக்கியத் தனமானது. அதுவும் ஒருவகையில் பூசிமொழுகப்பட்ட பக்கச்சார்பு நிலையே. பெரும்பான்மைச் சமூகம் பேச மறந்த, பேச மறுத்த உண்மைகளைப் பேச வைக்க வேண்டுமென்பதே என் நோக்கம். மௌனத்தின் சாட்சியங்களுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பின் மூலமும், அப்பாவி சிறைவாசிகளின் அவலம் குறித்து சமூகம் உரையாடலைத் துவங்கியிருப்பதன் மூலமும் அதை ஓரளவுக்கு சரியாக செய்து விட்டதாகவே உணர்கிறேன்.

இரண்டாவது, மார்க்சியம் என்பது சமூகத்தின் நிகழ்வுப் போக்குகளை விஞ்ஞானக் கண்ணோட்டத்தில் பார்க்கும் அறிவியல் பார்வை. அறிவியல் பார்வை என்பதே உங்களுக்கு ஒவ்வாமை கொடுக்கக்கூடியதுதான் என்பதில் எனக்கு ஆச்சர்யமில்லை. வேதகாலத்திலேயே விமானங்கள் இருந்தன என்று பிதற்றித் திரியும் ஆர்.எஸ்.எஸ் காரர்களும் நீங்களும் இந்த விசயத்தில் அண்ணன் தம்பிகள்தான்.

உண்மையில் நண்பர் காதர் மைதீனுக்கு அறிவு நாணயமோ, அடிப்படை நேர்மையோ இருந்தால் இதில் பக்கச் சார்பாகவோ, உண்மைக்குப் புறம்பாகவோ, பொய்யாகவோ எழுதப்பட்டதாக ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கட்டும். ’யாசரையும் வைஷ்னவியையும் தேடி கோவை வீதிகளில் அலைந்தேன். அப்படி யாரும் இல்லை.. எனவே இது பொய்யானது’ என்று அதி புத்திசாலித்தனமாக பேசுபவரிடம் இதையெல்லாம் எதிர்பார்க்க முடியாதுதான். அப்படி நிரூபிக்கத் திராணியில்லாமல் இப்படிச் சொரிந்து கொள்வதில் திருப்தி பட்டுக்கொள்ளும் அன்பு நண்பருக்கு ’இட்ச் கார்ட்’ ஆயின்மெண்ட்டை பரிந்துரை செய்கிறேன்.

அணுகுண்டு 4.

”ஆனால் இஸ்லாம் 1300 ஆண்டுகள் இந்த பூமியில் ஆட்சி செய்தது. இன, மத, சாதி வேறுபாடின்றி சமத்துவ ஆட்சி செய்தது என கிருஸ்துவ ஆய்வாளர்களே குறிப்பிட்டுள்ளனர்.”  என்று காதர் மொய்தீன் அவர்கள் சொன்னதற்கு

”முதலில் இஸ்லாம் 1300 வருடம் எங்கே ஆட்சி செய்தது என்று தெளிவுபடுத்துங்கள். அதன்பிறகு அது சிறந்த ஆட்சியா..? யாருக்கும் பாதிப்பில்லாமல் அந்த ஆட்சி நடந்ததா..? என்பதை விவாதிப்போம்.” என்று (நவம்பர் இதழ்) எதிர்க்கேள்வி கேட்டிருந்தேன். ஆனால்..

அதிலிருந்து ’1300 வருடம்’ என்ற வார்த்தைகளை வசதியாக (வெட்கமே இல்லாமல்) மறைத்துவிட்டு “இஸ்லாம் எங்கே ஆட்சி செய்தது என நாவலாசிரியர் கேட்டிருக்கிறார்” என்று பிப்ரவரி இதழில் துணிந்து எழுத எவ்வளவு ’கோயபல்ஸ்’தனம் வேண்டும்?

உங்கள் வாசகர்களை முட்டாள்கள் எனக் கருதிக்கொண்டிருக்கிறீர்கள். அல்லது முட்டாளாக்கி இருக்கிறீர்கள். உங்கள் வாசகர்கள் நவம்பர் மாத இதழை திருப்பி வாசித்து உங்கள் திருட்டுத்தனம் தெரிந்துவிட்டால் முகத்தை எப்படி வைத்துக்கொள்வது என்கிற அச்சம் கொஞ்சம்கூட இல்லை உங்களுக்கு. உங்களுக்கு அடிப்படை ஊடக அறம் கொஞ்சமேனும் இருந்தால் இந்த வெட்கமற்ற திருட்டுத்தனத்திற்கு உங்கள் வாசகர்களிடம் மன்னிப்புக் கேளுங்கள். அதற்கு உங்கள் வாத்தியார் மனோபாவம் இடம் தரவில்லை எனில் ராஜினாமா செய்துவிடுங்கள். யாராவது ஒரு நேர்மையான ஒருவர் வைகறை வெளிச்சத்தின் மாண்பைக் காக்கட்டும்.

அணுகுண்டு 5.

”நீங்கள் வைகறை வெளிச்சத்துக்கு எழுதிய மறுப்பில் யாசர், வைஷனவி பாத்திரங்கள் கற்பனை என்று சொல்லவில்லை எனில், அவை உண்மை என்றே அனைவரும் நம்பியிருப்பார்கள். உங்கள் கற்பனை உண்மை உடையுடுத்தி சிலகாலம் உலாவந்துவிடும்.” என்று கேட்டுள்ளார் நண்பர்.

நண்பர் காதர் மைதீன் அவர்களே, மற்றவர்களைப் பற்றி நீங்கள் இவ்வளவு கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் இவ்வளவு பாமரத்தனமாக யோசிப்பதற்கு உங்களால் மட்டுமே முடியும். தவிர, மற்ற அனைவரும் புத்தகத்தை முழுதாகப் படித்திருப்பார்கள். ஒருவேளை உங்கள் புத்தகத்தில் ’இது உண்மைச் சம்பவங்களைத் தழுவி எழுதப்பட்ட கற்பனைக்கதை’ என்று என்னுரையில் எழுதப்பட்ட பக்கத்தை யாரோ டர்ர்ர்ர்ர்ர்ர்.. என கிழித்துவிட்டார்களோ என்னவோ. இலக்கியம் குறித்தும் புதினங்கள் குறித்தும் குறைந்தபட்ச புரிதலோ, அறிவோ இல்லாமல் வாத்தியார் மனோபாவங்களொடு கிறுக்கிக்கொண்டு இருக்கும் உங்களை மாவட்ட பொறுப்பில் அமர்த்தியிருக்கும் வைகறை வெளிச்சம் நிர்வாகத்தை நினைத்தால் வினோதமாக இருக்கிறது. இதுபோக..

6. கி.பி 628-632, கி.பி 634-642 இல் இஸ்லாமிய ஆட்சியில் ஒரு ஏழைகூட இல்லை

7.ஜகாத் என்பது ஏழைகளுக்கு வழங்கப்படும் தானமல்ல வரி.(இஸ்லாமிய ஆட்சியில் ஏழைகளே இல்லாததால் ஜகாத் வாங்க ஆட்களே இல்லை)

8.மனித சமுதாயத்தில் எப்போதும் ஏழைகளும் பணக்காரர்களுமான ஏற்றத்தாழ்வுகளோடுதான் இருந்தார்கள்.

9.கம்யூனிஸ்டுகள் 1700-1900 த்திற்கு முன்னால் உள்ள காலகட்டத்தைப் புரிந்துகொள்ள மாட்டார்கள்.

10. கம்யூனிஸ்டுகள் தொழிலாளர்களை ஒரு வர்க்கமாக பிரித்து வைத்தார்கள் ஆனால் இஸ்லாம் அவர்களை முதலாளிகள் ஆக்கிவிடும் சமுதாயத்தை நிலைநாட்டியது.

இதுபோல இன்னும் பல அறிவுப்பூர்வமான அணுகுண்டுகளை நண்பர் காதர் மொய்தீன் வீசியிருக்கிறார். இதற்கெல்லாம் பதில் சொல்வதை விட வாசகர்கள் பார்வைக்கே விட்டுவிடுகிறேன்.

இறுதியாக… அன்பு நண்பரே தலைக்கு மேலே திரிசூலங்கள் தொங்கிக் கொண்டிருக்கும் இந்த அசாதாரண சூழலில் செய்வதற்கு ஆக்கப்பூர்வமான வேலைகள் நிறைய இருக்கின்றன. காவி இருள் சூழ்ந்த நிலையில் ஃபாசிசம் ஏறியடிக்கத் துவங்கிவிட்டது. இதுபோன்ற சூழலில் ஆரோக்கியமற்ற, சுயதம்பட்டம் அடித்துக் கொள்ளும் உங்கள் வெற்று உரையாடல்களில் என்னுடைய நேரத்தை இனியும் வீணடிக்க விரும்பவில்லை.  செயல் ஒன்றே சிறந்த சொல் என்கிற மாவோவின் கூற்றை நினைவுகூர்ந்து விடை பெறுகிறேன் நன்றி..

குறிப்பு: இதை கீற்று இணையதளத்திற்கும் வைகறை வெளிச்சம் இதழுக்கும் அனுப்பியிருக்கிறேன்.

- சம்சுதீன் ஹீரா

Pin It