1.

“ஐயோ வயிறு எரியுதே” என்று அலறி அடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தாள் வள்ளி. அவளது கைகள் இரண்டும் அடி வயிற்றை இறுக்கமாக பிடித்து பிசைந்தது. முகத்தின் கோணல்கள் தாங்கமுடியாத வேதனையை காட்டியது. கண்ணீர் ஊற்றெடுத்தது. கால்கள் பதறியது.

 சிறிய முத்தாரம்மன் கோயில் வளாகத்தை தாண்டி இருக்கும் வேப்ப மர நிழலிலே அமர்ந்து பீடி சுற்றிக் கொண்ருந்த கற்பகம், பதறி அடித்து ஓடி வரும் வள்ளியை பார்த்து “இவா ஏன் இப்படி பேயாட்டம் ஓடி வாறா?” என்று தன் அருகே அமர்ந்து பீடி சுற்றிக்கொண்டிருந்த சிவந்திபட்டிகாரியிடமும், நம்பிகுளத்துக்காரியிடமும் கூற, சிவந்திப்பட்டிக்காரி ஓடி வரும் வள்ளியை பார்த்து

“ஏலா வள்ளி, ஏன் இப்படி வயித்துல தம்பட்டம் அடிச்சிகிட்டே ஓடிவாரா? வயிறு கியிறு வலிக்குதா?”

“எக்கா... எக்கா.. நான்...” என்று சொல்ல முடியாமல் வாய் கோணலாய் செல்ல, மூவரும் பதட்டத்தோடு மடியில் இருந்த பீடித்தட்டை தரையில் வைத்துவிட்டு அவசரமாக எழுந்து “ஏலா பதட்டப்படாம சொல்லு, என்னாச்சி” என்று நம்பிகுளத்துக்காரி அக்கறையோடு கேட்டாள். அவள் தொண்டையை செருமிக் கொண்டே சொல்லத் துடித்தாள். முடியவில்லை.

பள்ளி முடிந்து வரும் ஆனந்து அம்மா கத்திக் கொண்டு வந்ததை பார்த்து “அம்மா என்னாச்சிம்மா, ஏன் அழுதுட்டே ஓடி வந்த?” என்று அம்மாவின் காலை பற்றிக் கேட்க, மகனை பார்த்ததும் வள்ளி தாங்கமுடியாமல் தலையில் அடித்து அழுது கொண்டே

“ஐயோ...” என்று கத்தும் முன்னே கண்கள் சொருகி தன்னிலை மறந்து மயங்கி விழப் போனவளை, பெண்கள் மூவரும் தாங்கிப் பிடித்தார்கள்.

“வள்ளி... வள்ளி..” என கற்பகம் எழுப்ப முயற்சித்தாள். பலனில்லை.

“அம்மா... என்னாச்சிம்மா...? அம்மா...” அழுதுகொண்டே கேட்டான் ஆனந்து. அசைவில்லை.

வள்ளியின் வாயில் இருந்து நுரை தள்ள ஆரம்பித்தது. அதை பார்த்ததும் கற்பகம்

“ஏப்ல பூச்சி மருந்த குடிச்சிருக்கா”

“நாசம போனவா ரெண்டு பிள்ளையில வச்சிகிட்டு பொம்பள இப்படியா பண்ணுவா... எக்கா அந்த வண்டிய கூப்டு” என்று தெருவின் மறுகரையில் நின்று கல்யாண பந்தலை ஏற்றிக்கொண்டிருந்த வண்டியை பார்த்து நம்பிகுளத்தா சொல்ல,

“ஏல குமாரு... வள்ளி பூச்சி மருந்த சாப்ட்டா, கொஞ்சம் வண்டிய எடுத்துட்டு வா” என்று சிவந்திபட்டிக்காரி வண்டி அருகே நிற்கும் குமாரை பார்த்துக்கத்தினாள்.

மணலிலே வீடு கட்டி விளையாடிக்கொண்டிந்த மலரு வேகமாக ஓடி வந்து “எண்ணா அம்மாவுக்கு என்னாச்சி?” என்று தனது மழலை குரலில் கேட்க, கற்பகம் குழந்தைகள் இருவரையும் அணைத்து

“ஓன்னுமில்ல கண்ணுங்களா, அம்மா இப்போ எந்திச்சிருவா... ஆனந்து நீ போய் அப்பாவ கூட்டிட்டு வா” என்றதும் ஆனந்து “அப்பா... அப்பா...” என்று வீட்டை பார்த்து ஓட, மலர் அம்மாவையும் அண்ணனையும் மாறி மாறி பார்த்தாள்.

2.

இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. வள்ளி இன்னும் கண் திறக்கவில்லை. மணிக்கட்டில் குத்தப்பட்டிருந்த ஐவி டிரிப் மூலமாக குளுக்கோஸ் ஏறிக்கொண்டிருந்தது. வள்ளியின் அம்மா தனலட்சுமி தலையில் கை வைத்து தரையில் அமர்ந்திருந்தாள். ஆனந்தோ அம்மாவின் உள்ளங்காலை தடவி சூடேற்றிக்கொண்டிருந்தான். அவனது கண்கள் அடிக்கடி அம்மா முழித்துவிட்டாளா என்று நோட்டம் விட்டது. தரையில் குப்புற படுத்து பொம்மை காருக்கு வாயால் “டிர்ர்ர்ர்” என உயிரூட்டி விளையாடிக்கொண்டு இருந்தாள் மலர். தனலட்சுமிக்கோ பேரக்குழந்தைகளை பார்க்கும் ஒவ்வொரு தடவையும் கண்ணில் இருந்து நீர் தாரைத்தாரையாக வழிய ஆரம்பித்துவிடும்.

வள்ளியின் அப்பா முத்தையா கையில் பொட்டலத்தோடு அறைக்குள் நுழைந்து “இந்தா சாப்புடு” என்று பொண்டாட்டியிடம் நீட்டீனார். அவளோ வேண்டாம் என்று கையசைத்து சொல்லிவிட்டாள்.

“இப்படியே சாப்பிடாம இருந்தா எல்லா சரியாயிருமா என்ன, பிடி?” என்று கண்டிப்போடு சொல்ல, அவள் விருப்பம் இல்லாமல் அவரிடம் இருந்து பொட்டலத்தை வாங்கித் தரையில் வைத்தாள்.

வள்ளியின் இமைகள் துடிக்க, விழுங்கும் வாநீர் தொண்டைக்குள் இறங்காமல் தவிப்பது அவளது முகச்சுருக்கங்களில் இருந்து தெரிந்தது. குடலுக்குள் சென்ற பூச்சிக்கொல்லி மருந்தை வெளியே எடுத்து சுத்தம் செய்ய, வாய் வழியாக பைப்பை தொண்டைக்குள் விட்டு, சோப்பு நுரை போன்று எதையோ செலுத்தி குடம்குடமாக வாந்தி எடுக்க வைத்ததில் குடல் சுத்தமானதோ இல்லையோ தொண்டைப் புண்ணானது.

வள்ளி மெதுவாக கண்ணை திறந்து, தனது காலை பாசமாக தேய்த்துக்கொண்டிருந்த மகனை பார்த்தாள். பார்த்த நிமிடமே தான் எவ்வளவு பெரிய முட்டாள் என்று உணர ஆரம்பித்தாள். மகள் யாருமற்று தனியாக விளையாடுவதையும் பார்த்தாள். கண் இமைகளில் கண்ணீர் கூடியது. வாய் திறக்கவே கஷ்டப்பட்டு மெதுவாக திறந்து “குட்டி” என தனது மகனை அழைத்தாள். ஆனால் வெறும் காற்று மட்டுமே சிணுங்கிக்கொண்டு வந்தது.

அந்த சிணுங்கல் முத்தையாவை எட்டியது. அவரோ, பாசமும் கோபமும் கண்களில் தெரிய வெறித்த முகத்தோடு மகளை பார்த்தார். ஆனாலும் கண்களில் குளம் கட்டியது. அவளும் அப்பாவை பார்த்தாள். ஆனால் அவர் கண்டுக்காதது போல டக்கென திரும்பி “லட்சுமி ஒன் மொவா முழிச்சிட்டா பாரு” என்று சொல்லிவிட்டு, அறை வாசலை தாண்டி வராண்டாவில் போய் நின்றார்.

வள்ளியோ இன்னமும் வைராக்கியத்தோடு இருக்கும் தந்தையை பரிதாபமாக பார்த்தாள்.

“முழிச்சிட்டாளா... சாமி கிடா வெட்டி கும்பிடுறேன் சாமி...” உயிர்பெற்றவளாக எழுந்து சென்று மகளை பார்த்தாள்.

“எம்...மா...” என்று ஆனந்து திவ்யப் புன்னகையோடு அம்மாவை பார்த்தான்.

“ஐ, அம்மா முழிச்சிட்டா... டிர்ர்ர்” என காரை ஓட்டியவாறு அம்மாவின் அருகே வந்தாள் மலர். வள்ளி குழந்தைகள் இருவரையும் ஏக்கத்தோடு பார்த்தாள்.

“ஏண்டி கண்ணுக்கு அழகா ரெண்டு பிள்ளைங்கள பெத்து வச்சிகிட்டு, எப்படிடீ இப்படி பண்ண ஒனக்கு மனசு வந்துச்சி” என்று விசும்பலோடு தனலட்சுமி கேட்டாள். அவள் அதற்கு பதில் ஏதும் சொல்லாமல் குழந்தைகளைப் பார்த்தாள்.

“ஏம்மா ரெண்டு நாளா நீ முழிக்கவே இல்ல” மலர். மகளின் இந்த கேள்விக்கும் அவளிடம் பதில் இல்லை. கண்களில் நீர் மல்க வெறும் புன்னகை மட்டுமே புரிந்தாள்.

ஆனந்து அவளது தொண்டைப்பகுதி சிவந்திருப்பதை பார்த்து, அதை பாசமாக தொட்டு “வலிக்குதாம்மா” என்று கேட்டான்.

குழந்தைகள் தவிப்போடு பேசுவதை கேட்ட முத்தையா தாங்கமுடியாமல் வாசல் அருகே வந்து நின்று பொண்டாட்டியை பார்த்து “ஓடுன கழுதைக்கு புடிக்கலன்னா அப்பன் ஆத்தா வீட்டுக்கு வரவேண்டியது தான, நாம என்ன செத்தா போயிட்டோம்... பச்ச கொழந்தைங்கள வச்சிகிட்டு” என்று வள்ளியை கோபமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, மறுபடியும் அதே இடத்தில் போய் நின்றார்.

வள்ளிக்கோ அப்பா கூறுவதிலும் அர்த்தம் இருப்பதை உணர்ந்து எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.

“உங்க அப்பன் அப்படித்தான். பாசத்த வெளிய காட்டிக்க தெரியாம ஏதேதோ பேசுவாரு” என்று சொல்லிக்கொண்டே வள்ளியின் கன்னத்தில் வழிந்தோடும் கண்ணீரைத் துடைத்தாள் தனலட்சுமி. வள்ளி குழந்தைகளை பார்த்து

“சாப்ட்டீங்களா?”

“ம்ம்ம்.. நான் தோச சாப்ட்டேன்... அண்ணன் ரெண்டு இட்லி சாப்ட்டான், என்ன ஆனந்து” மலர்.

“ரெண்டு இல்ல மூனு” ஆனந்து

“தாத்தாவும் பாட்டியும்தாம்மா நேத்துலருந்தே சாப்டல...” என்று சொல்லிவிட்டு ‘டிர்ர்ர்ர்” என கார் ஓட்டி சென்றாள் மலர்.

“எப்படி சாப்ட மனசு வரும் புள்ள இப்படி கடக்கும் போது..” என்று புலம்பிவிட்டு,

“இரு, ஆரஞ்சு பழம் உரிச்சித் தாறேன்” என்று எழுந்தாள்.

“வேணாம்மா தொண்ட வலிக்குது”

“அதுக்காக அப்படியேவா கெடக்க முடியும்.. ஆரஞ்சு பழத்த உரிச்சி சாறு பினிஞ்சி கரண்டில ஊட்டிவிடுறேன்... தொண்டைக்கு கொஞ்சம் எதமா இருக்கும்” என்றவாறு ஒரு கூடையில் இருக்கும் ஆரஞ்சுப் பழத்தை எடுத்து உரிக்க ஆரம்பித்தாள்.

“நான் பரவால்ல தண்ணியாவது குடிச்சிட்டு கெடக்கேன், வெளிய நிக்குற அந்த மனுஷன் காட்டுமாட சாமிக்கு விஷேசமா ஏதோ நேந்துருக்கேன்னு சொல்லி ஒரு சொட்டு தண்ணி கூட நாக்குல நெனைக்கல... ஆளுதான் பாக்க என்னமோ இரும்பாட்டம் இருக்காவ, உள்ள நஞ்சி போன பஞ்சு மாதிரிதான் மனசு துடிச்சிட்டுருக்கு”

“அப்போ ஏம்மா பேச மாட்டேங்றாரு” வள்ளியின் கண்களில் நீர் ததும்பி நின்றது.

“மொவா மருந்து குடிச்சிட்டான்னு தெரிஞ்சதும் அவியதான் மொத பதறி அடிச்சிட்டு ஓடி வந்தாவ... நானும் மனுஷன் பழசெல்லாம் மறந்துட்டாவனுதான் நெனச்சேன்.. இப்போ மொகத்த கூட பாக்காம பேசும்போதுல்லா தெரியுது” என்று முந்தானையால் மூக்கில் இருந்து வடியும் ஊழநீரை துடைத்தாள்.

முத்தையா வரண்டாவில் நின்று பீடி குடித்துக்கொண்டிருந்தார். நோயாளிகளின் அறை முன் நின்று பீடி குடித்துக்கொண்டிருப்பதை பார்த்த நர்ஸ்

“ஐயா, இது என்ன ஆஸ்பத்திரியா இல்ல ஒங்க வீடா, இங்க நின்னு பீடி குடிக்கிறிய... எத்தன பேஸண்ட்டு உள்ள இருக்காங்க, ஒன்னு கெடக்க ஒன்னு ஆயி போச்சின்னா” என்றதும் அவசரமாக பீடியை அணைத்தார். அவளோ முனுமுனுத்துக்கொண்டே வள்ளியின் அறைக்குள் நுழைந்தாள்.

தாய் மகளிடம் பேசிக்கொண்டிருப்பதை பார்த்து “பேஸண்ட்ட ஏன் தொந்தரவு பண்றீங்க... அவுங்கள ரெஸ்ட் எடுக்க விடுங்க” என்று சொல்லிக்கொண்டே வந்து வள்ளியை பரிசோதனை செய்து பார்த்தாள்.

“எம்மா, என் மொவா இப்போ நல்லாயிட்டல்ல”

“அதன்லாம் நல்லாயிடுவாங்க... பயப்படுறதுக்கு ஒன்னுமில்ல... அவுங்க நல்ல தூங்கட்டும்.. தொந்தரவு பண்ணாதீங்க... தொண்ட குடல்லாம் புண்ணா இருக்கு”

தனலட்சுமியோ அதை கொஞ்சம் கூட காதில் வாங்காமல், எல்லாத்துக்கும் தலையாட்டிவிட்டு கடைசியாக “எம்மா ஜூஸ¤லாம் கொடுக்கலாமா?”

“கொடுங்க ஒன்னும் செய்யாது” என்று சொல்லிவிட்டு வெளியே செல்லும் போது முத்தையாவை முறைத்து பார்த்துக் கொண்டே சென்றாள்.

தனலட்சுமி ஆரஞ்சை பிழிந்து ஜூஸாக்கி, ஒரு தம்ளரில் எடுத்து வைத்துக்கொண்டு கரண்டியால் வள்ளிக்கு ஊட்டினாள். நீராகாரமாக இருந்தாலும் தொண்டைக்குள் இறங்கும்போது வலி தெரிந்தது. அவள் அம்மாவிடம்

“ஏம்மா, அவுரு வந்தாரா?”

“அவன் ஏன் வரப்போறான், குடிகாரப்பைய” தனலட்சுமி.

“ஒருவேள என் மேல கோபமோ?”

“ஓ இதுக்கு மேல அவன் இவா மேல வேற கோபப்படுவானோ?... கூதியுள்ளைய அப்படி விட்டுவிட்டுத்தான குடிகாரனா ஆயிட்டான். அந்த செரிக்குள்ளைய முருகேசன் போலிஸ்ல பிடிச்சி கொடுத்துட்டான்னு சொல்லு” என்று வள்ளியிடம் நேரடியாக பேசாமல் தனலட்சுமியிடம் கோபமாக சொன்னார் முத்தையா.

“ஏம்மா” வள்ளி.

“ஏம்மான்னா, பெத்த புள்ளைய இப்படி மருந்து குடிக்கிற அளவுக்கு கொடும படுத்துவான், பாத்துட்டு சும்மா இருக்க சொல்றாளோ ஒன் பொண்ணு” முத்தையா.

“அவரு ஒன்னும்..” என்று குரலை உயர்த்தும்போதே தொண்டை வலிக்க, வலி தாங்காமல் கண்களை மூடி வாநீரை மெதுவாக விழுங்கினாள்.

“கொஞ்ச நேரம் பேசாம சும்மா இரு” என்று அழாத குறையாக கூறி தொண்டையை தடவி விட்டாள் தனலட்சுமி.

“இல்லம்மா அவரு ஒன்னும் பண்ணல... நாந்தான்...”

“இதத்தான் ஏழு வருஷமா சொல்லிட்டிருக்கா ஒன் பொண்ணு, ஒன்னும் பண்ணல ஒன்னும் பண்ணலன்னு... ஒன்னும் பண்ணாமதான் இங்க வந்து படுத்துக் கிடக்காளோ... சரி நம்மளளெல்லாம் தூக்கி எரிஞ்சிட்டு அவன் கூட ஒடுனால்ல, என்னைக்காவது சந்தோஷமா இருந்தாளான்னு கேளு... வயிறு ஒடுங்கி கன்னம் தேஞ்சி” கண்கள் கலங்குவது தெரியக்கூடாது என திரும்பிக்கொண்டார் முத்தையா.

“அவன் அவன் குணாதிசயம் தெரிஞ்சு பழகனும்... நல்லவன் மாதிரி நடிக்கிறவன்லாம் நல்லவன் கிடையாது. மொத அத சொல்லிக்கொடு ஒன் பொண்ணுக்கு.. குடும்பமே அப்படித்தான நம்மள துரத்திச்சி...” என்று பழைய ஞாபகங்கள் அவரது நினைவலைகளில் ஓட, அதை வெளியே சொல்ல முடியாமல் “இன்னும் நெறையா மனசுல கெடக்கு, இந்த நேரத்துல அதிகம் பேச வேண்டாம்னு பாக்குதேன்” என்று கோபமாக சொல்லிவிட்டு சென்றார்.

புருஷனின் கோபத்தில் உண்மை இருப்பதை உணர்ந்த தனலட்சுமி எதுவும் பேசவில்லை. இந்த பந்த கசடுகளை பற்றி அறியாத குழந்தைகள் அதுபாட்டுக்கு விளையாடிக்கொண்டிருந்தது.

கருவிழியின் சிந்தனைக்கு மருந்தான நீர் துளிகள் கண்ணீராக கன்னத்தில் வடிய, நினைவோடையில் மிதந்து செல்லும் சிலையாக படுத்திருந்தாள் வள்ளி.

3.

சந்தனபாண்டியின் அப்பா தனது தோட்டத்தை வள்ளியின் அப்பா முத்தையாவிடம் குத்தகைக்கு கொடுத்தார். வெளியூராக இருந்தாலும் விவசாயத்தில் கெட்டிக்காரன் என்பதை அறிந்துதான் சந்தனபாண்டியின் அப்பா இதை செய்திருப்பார். வியாபாரம் நஷ்டமாகி குடும்பம் நடுத்தெருவுக்கு வரும் நிலையில்தான் இப்படி ஒரு வாய்ப்பு முத்தையாவுக்கு கிடைத்தது. அவரும் சொந்த ஊரை விட்டுவிட்டு பொண்டாட்டி புள்ளைங்களோடு தோட்டத்துக்கு வந்து குடிசை போட்டார். குடிசை போடுவதற்கு கூடமாடா உதவிகள் பல செய்தான் சந்தனபாண்டி. மனதில் எந்த சலனமும் இல்லாத வள்ளி அவனை அண்ணா என்றே அழைத்தாள்.

சந்தனபாண்டியின் தங்கை சந்திராவோடு வள்ளிக்கு நட்பு ஏற்பட்டது. நட்பு வள்ளியை சந்தனபாண்டியின் வீடு வரை அழைத்து சென்றது. அவளது பரிவான குணம் வீட்டில் இருப்பவர்களுக்கு பிடித்துவிட்டது. வீட்டில் இருப்பவர்களுக்கு மட்டுமல்லாமல் அந்த ஊர் பெண்களுக்கும் பிடித்துவிட்டது. அவர்களுடன் சேர்ந்து பீடி சுற்ற கற்றுக்கொண்டாள். பெண்கள் கூடிக்குலாவி பேசி சிரித்து பீடி சுற்றுவார்கள். கை விரல்கள் பீடியை உருட்டிக்கொண்டிருக்க, வாய்கள் பல கதைகளை இடைவேளை இல்லாமல் பேசிக்கொண்டிருக்கும். அந்த கதைகள் திக்கு தெரியாமல் அங்குமிங்குமாக உருண்டோடும். நடு இரவை தாண்டி செல்லும் பீடி சுற்றலும் கதையாடலும். சில நேரம் வள்ளியின் தம்பி முருகேசன் சைக்கிளில் வந்து அக்காவை அழைத்துச் செல்வான். சில நேரம் சந்திரா கூடவே படுத்துவிடுவாள்.

நாட்கள் உருண்டோடியது. உருண்டோடிய நாளில் ஒருநாள் சந்தனபாண்டியின் பார்வை தன்மேல் தனித்து விழுவதை உணர்ந்தாள் வள்ளி. அந்த பார்வை அவளை கிறங்க வைத்தது. நடுங்க வைத்தது. வியர்க்க வைத்தது. பெண்மையை போகித்தது. சகோதர வார்த்தையை அந்நியப்படுத்தியது. எங்கோ நடக்கும் கதைகளை இழுத்து வந்து பேசத்தெரிந்த பெண்களுக்கு வள்ளியின் தவிப்பின் போகம் பிடிபடாமலா போகும்.

“இங்க ஒருத்தி ஒருத்தன அண்ணா அண்ணான்னு கூப்பிடுதா, ஆனா அவன் என்னான்னா அவள திங்குற மாதிரி பாக்குதான்” என்று பீடி சுற்றிக்கொண்டே குத்திக்காண்பித்து பேசினாள் ஒருவள்.

“யாரடி அது? நம்ம வள்ளிதான் சந்திராவோட அண்ணன அண்ணா அண்ணான்னு கூப்பிடுறா, வேற யாரு இருக்கா இங்க?” இது மற்றொருவள்.

வள்ளி எதுவும் பேசாமல் பீடி இலைக்கட்டு ஒன்றை எடுத்து, பிரித்து, அதிலிருந்து ஒரு இலையை எடுத்து இணைகர வடிவில் பட்டையாக இருக்கும் அச்சை அந்த இலை மீது வைத்து கைகள் நடுங்க படபடப்போடு வெட்ட ஆரம்பித்தாள்.

“ஏய் சும்மா இருங்கடி” என்று சந்திரா அவர்களை அடக்கிவிட்டு, “ஏண்டி வள்ளி, என் அண்ணன் ஒன்ன பாக்குறான்னு எனக்கு ரொம்ப நாளா தெரியும், ஆனா, ஒனக்கும் அந்த நெனப்பு இருக்குதோ?”

“அப்படிலாம் எனக்கு ஒன்னுமில்ல” என்று படபடவென சொல்லிவிட்டு இலையை வெட்ட ஆரம்பித்தாள்.

“அப்படீன்னா எங்கள பாத்து சொல்லாண்டி... குனிஞ்ச தல நிமிராம சொன்னா மனசு தடுமாறுன்னுதான அர்த்தம்” இது அருகே இருப்பவள். அவள் தொடந்து “இப்போ இவள பாரு, இவா அப்பன் ஒரு குடிகார பைய” என்று தனது அருகே இருப்பவளை காண்பித்து சொல்ல, உடனே அவள்

“குடிகாரப் பைய மட்டும் கெடையாது, பொம்பள பொறுக்கியும் கூட” என்று சொல்ல மற்றவர்கள் சிரித்தார்கள்.

“இவாள ஒருத்தன் ரொம்ப நாளா பாத்துட்டுருந்தான். அதுவும் இவா ஒரு தெருவுல நடந்து வந்தா, அடுத்த தெருவுல நின்னுதான் பாப்பான்”

“தொடநடுங்கி பைய. நானும் பொறுத்து பொறுத்து பாத்தேன் என்கிட்ட வந்து ஏதாவது சொல்லுவான்னு, சல்லிப்பைய பக்கத்துல கூட வரமாட்டேனுட்டான்” என்று தன்னை காதலித்தவனையே அவள் திட்டினாள்.

“இவாளுக்கும் வீட்டு நிலவரத்த பாத்தவொடனே தெரிஞ்சு போச்சு, வரதட்சன கொடுத்து எப்படியும் நம்மள கட்டி கொடுக்க மாட்டங்கன்னு”

“ஒரு நாளு நானே அவன் முன்னால போய் நின்னு என்ன கட்டிக்கிறியான்னு கேட்டேன்... ஆசையாதான் வள்ளி கேட்டேன். ஆனா அவன் என்னமோ நான் பிடிச்சி வச்சி கற்பழிச்ச மாதிரி பயந்து ஓடுறான்” என்றதும் எல்லாரும் பலமாக சிரித்தார்கள்.

“ஏய் இருங்கடி, இப்போ எதுக்கு இத அவாட்ட சொல்லிட்டிருக்கீங்க... சரி வள்ளி, நீ ஒன் நெஞ்ச தொட்டு சொல்லு, என் அண்ணன பாக்குறியா, இல்லியா?”

“அப்படிலாம் எந்த நினைப்பும் எனக்கு இல்ல. எனக்கு அவர் அண்ணன் மாதிரிதான்”

“அப்போ என் அவரு இவருன்னு சொல்ற, அவன் இவன்னு சொல்லு” என்று ஒருவள் குத்தலுடன் சொல்ல, வள்ளி நிமிர்ந்து அவளை பார்த்து

“அவன் எனக்கு அண்ணன் மாதிரிதான்.. போதுமா?”

“சரி அப்போ என் தலைல அடிச்சி சத்தியம் பண்ணு” என்று சந்திரா கேட்டதும், வள்ளியின் முகத்திலே ஒரு தயக்கம் தெரிந்ததை மற்றவர்கள் பார்த்து புன்னகைத்தார்கள்.

“அதான் காதலிக்கலலா, அப்புறம் ஏன் தயங்குற? சத்தியம் பண்ணு” என்றாள் ஒருவள்.

“இந்தபாரு வள்ளி நான் ஏதும் தப்பா நெனைச்சிருவேன்னு நெனைச்சிறாத. எனக்கு ஒன்ன ரொம்ப புடிக்கும். நீ மட்டும் என் அண்ணன கட்டிகிட்டனு வை, என்னவிட இங்க யாரும் சந்தோஷப்பட மாட்டாங்க. அவனும் ரொம்ப நல்லவன். எந்த கெட்டபழக்கமும் கிடையாது. உன்ன நல்லா பாத்துப்பான். பொறுப்பானவன்” என்று சந்திரா தனது மனதில் உள்ளதை சொல்ல, அருகே இருப்பவள்

“அதான் சொந்த வீட்லயே பச்சக்கொடி காட்டியாச்சுல்லா வேற ஏன்டி தயங்குற”

வள்ளியோ தீர்மானமாக “நான் யாரையும் பாக்கல. பாக்கவும் மாட்டேன். இது சத்தியம்” என்று சொல்லி சந்திராவின் தலையில் சத்தியம் செய்தாள்.

4.

மனித மனம் பூமிக்கு அடியில் ஓடும் தீக்குழம்பு போன்றது. அது எப்போதெல்லால் சீராக பாயும், எப்போதெல்லாம் கொஞ்சமாக கக்கும், எப்போதெல்லாம் பூமியை ஆட்டி படைக்கும், எப்போதெல்லாம் வெடித்து சிதறும் என எவராலும் ஊகித்து அறிய முடியாது.

நெஞ்சை கல்லாக்கி, வந்த இடத்தில் அமைதியாக இருக்க வேண்டும் என விரும்பியும் வள்ளியின் மனதால் அதை அடக்க முடியவில்லை. அண்ணனாக எண்ணிய சந்தனபாண்டியை காதலனாக மாற்றி, காதலனின் ஸ்பரிஸம் அவளின் அக உணர்வை தூண்ட, அவன் இசைக்கும் திசை நோக்கி இவள் ஓடினாள். சுற்றம் மறந்து சந்திராவின் துணையோடு.

தனது மகனை மயக்கி கூட்டிக்கொண்டு சென்றுவிட்டாளே என்று நினைத்த சந்தனபாண்டியின் குடும்பத்தார், தனது உறவினர்களை அழைத்து சென்று வள்ளியின் தாயையும் தந்தையையும் அடித்து உதைத்து, எதிர்க்க வந்த தம்பி முருகேசனை கட்டையால் மண்டையில் அடித்து, குடிசைக்கு தீயிட்டு ஊரை விட்டு துரத்தி அடித்தார்கள்.

அன்று ஊரைவிட்டு ஓடிய வள்ளியும் சந்தனபாண்டியும் ஆனந்து பிறந்து மூன்று வருடம் கழித்துதான் ஊருக்கு திரும்பினார்கள். ஊருக்கு திரும்பும்போதே சந்தனபாண்டி முழு போதையோடுதான் இருந்தான்.

காலம் மனிதனோடு இசைந்து ஆடும் ஒரு ஆயுதம். அந்த ஆயுதம் மனித மனத்தோடு ஓன்றி வாழும். மனித மனம் ஆசை என்ற இச்சைக்கு உட்படும் போது காலம் அதை பற்றிக்கொள்ளும். சந்தனபாண்டியின் மனதை காலம் பற்றிக்கொண்டது. ஒரு சிறு கிராமத்தில் அடங்கி ஒடுங்கி கிடந்த மனம் பெருநகரத்தில் துகள்களாய் சிதற ஆரம்பித்தது. கட்டுப்படுத்த, பயந்து ஒதுங்க ஆளில்லாமல் சுதந்திரமாய் பறந்து திரிந்தது. பிறரின் தூண்டலுக்கு கட்டுப்பட்டது. ஆசைக்கு அடிபணிந்தது. பணிக்கு மருந்தாய் நினைக்க வைத்தது. மருந்து கொஞ்சம் கொஞ்சமாக அவனை அடிமையாக்கியது. சந்தனபாண்டி முழுநேர குடிகாரன் ஆனான்.

தனது அதிகாரத்துக்கு உட்பட்ட வாழ்க்கையை ஆசையாக ஆரம்பித்த வள்ளிக்கு அவனது செயல் இடியாக அமைந்தது. ஆனந்து பிறந்து தவழ்ந்து கொண்டிருந்த வேளையில் இவனும் தவழ்ந்து தவழ்ந்து வீட்டிற்கு வந்தான். தினம் தினம் சண்டை. சண்டையில் இவளின் குரலே மேலோங்கி நிற்கும். அவன் அடங்கி பணிந்து போய்விடுவான். ஆனால் குடி மட்டும் நின்றபாடில்லை. ஏதோ ஒரு காரணம் கூறி தினமும் குடித்து வந்தான்.

இதனால் வள்ளி பெரும் மன உளைச்சலுக்கு ஆளானாள். மனதை தேற்ற, ஆறுதல் வார்த்தை கூற, சொந்த பந்தம் என்று அங்கே யாரும் இல்லை. வாழ்க்கை கசந்து போனது. கசந்து போன வாழ்க்கையை மீட்டெடுக்க ஊருக்கு போவதுதான் ஒரே வழி என்பதை உணர்ந்தாள். ஆனால் எல்லோரையும் உதறி விட்டு வந்தவளை எப்படி ஏற்பார்கள் என்ற பயம் அவளை ஆழ்த்தியது. வழியில்லை. முடிவு எடுத்தாக வேண்டிய நேரம். முடிவெடுத்தாள். ஊருக்கு செல்வது என. அவன் முரண்டு பிடித்தான். இவள் விடவில்லை. இறுதியாக விருப்பமில்லாமல் ஊருக்கு வந்தான்.

வந்தவன் குடிப்பதை நிறுத்தவில்லை. இன்னும் அதிகமாக குடித்தான். விருப்பம் இல்லாமல் தன்னை அழைத்து வந்துவிட்ட காரணத்தை கூறி குடித்தான். குடி என்றால் கொஞ்சமாக குடித்தோம் வீட்டில் வந்து படுத்தோம் என்றில்லை. முழு போதை தலைக்கேறி, கண்களின் பார்வைக்கு இந்த உலகம் சுற்றும் காற்றாடியின் இறக்கை தெரிவது போல குடித்தான். சில நேரம் தெருவிலே விழுந்து கிடந்தான். வள்ளிதான் யாரையாவது கூட்டிச் சென்று அடிக்காத குறையாக தூக்கி வந்தாள்.

ஊருக்கு வந்த மறுவருடம் மலர் பிறந்தாள். அவளின் பிறப்பிலே வள்ளி மிகவும் கஷ்டப்பட்டு போனாள். செத்து பிழைத்தாள் என்றுதான் சொல்ல வேண்டும். டாக்டரோ “கொஞ்ச நாளைக்கு அவுங்கள பத்திரமா பாத்துக்குங்க” என்று சொன்ன ஒரு வார்த்தைக்காக, சந்தனபாண்டி குடியை மறந்து, தூக்கம் மறந்து, தாய் தன் குழந்தையை தாங்குவது போல அவளை தாங்கிக் கொண்டான். அவளே ஆச்சர்யப்பட்டு போனாள். புருஷனை நினைத்து பெருமை கொண்டாள். தாந்தான் அவனது உயிர் என புரிந்துகொண்டாள்.

வள்ளி குணமானதும் மறுபடியும் ஆரம்பித்துவிட்டான். முழுபோதையோடு வீட்டிற்கு வந்தான். தெருவில் விழுந்து கிடந்தான். ஊரார் அவனை ஒரு அவமானமாக பார்க்க ஆரம்பித்தார்கள். அவன் கவலைப்படவில்லை. ஆனால் வள்ளியின் உள்ளம் நெருப்பாக கொதிக்க ஆரம்பித்தது. தனக்கு ஒன்று என்றதும் இரண்டு வார காலம் குடிக்காமல் இருந்தவனால் ஏன் குடியை நிறுத்த முடியாது என்று யோசிக்க ஆரம்பித்தாள். தாந்தானே அவனுக்கு எல்லாம், அதனால் தன்னை வைத்தே அவனிடம் விளையாட ஆரம்பித்தாள்.

மிளகாய் செடிக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து விடுவதாக மிரட்டினாள். அவன் பணிந்தான். கெஞ்சினான். அவள் நம்பினாள். இரண்டு நாட்கள் பல்லைக்கடித்துக்கொண்டு இருந்தவனுக்கு மூன்றாம் நாள் இருக்க முடியவில்லை. குடித்துவிட்டு வந்தான். மறுபடியும் அதே யுத்தியை அவள் கையாண்டாள். அது கைக்கூடியது. ஆனால் போகப்போக குடித்துவிடுவாளோ என்று பயந்தவவனுக்கு, நாடகம் ஆடுகிறாள் என்று தெரிந்துவிட்டது.

அன்றும் அப்படித்தான் அவன் நினைத்தான். ஆனால் அவளோ கணவனின் நினைப்பை புரிந்துகொண்டு, குடித்து பயமுறுத்துவது என முடிவெடுத்து, மருந்தின் வீரியம் தெரியாமல் கொஞ்சமாக எடுத்து தண்ணீரோடு கலந்து குடித்துவிட்டாள். கனப்பொழுதில் மருந்து அதன் வேலையை காட்ட ஆரம்பித்தது. வயிற்றுக்குள் இருக்கும் ஒவ்வொரு உறுப்பையும் ரம்பம் கொண்டு அறுப்பதை போல் உணர்ந்தால். தான் வாழ்வின் முடிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம் என்பதை புரிந்து கொண்டு, அவனிடம் மன்றாடினாள். அவனோ போதையில் கட்டிலில் சுருண்டு கிடந்தான்.

5.

சூரியன் தகதகவென எரிந்துகொண்டிருந்தது. காற்று தன் நிலை மறந்து வெப்ப அலைகளை வீசியது. காக்கை குருவி கூட கத்துவதை மறந்து கூட்டுக்குள் ஒடுங்கி போய் கிடந்தன. ஊரெங்கும் ஒரே அமைதி. பாட்டு சத்தமோ தொலைக்காட்சி சத்தமோ எதுவும் கேட்கவில்லை. மக்கள் கூட தங்களுக்குள் பேசிக்கொள்ளவில்லை. பேசியவர்கள் கூட ஆடு மாடுகளை போல கிசுகிசுத்துக்கொண்டார்கள்.

சந்தனபாண்டியின் வீட்டின் முன் தென்னந்தட்டியால் போட்ட கூரைக்கு கீழே சில பெரியவர்கள் அமர்ந்திருந்தார்கள். பெண்கள் இரண்டு மூன்று பேராக ஆங்காங்கே நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் முகத்தில் ஆச்சர்யமும் ஆற்றாமையும் பரிதாபமும் அழுகையும் தெரிந்தது. சிலர் அவரவர் வீட்டு படிக்கட்டில் அமர்ந்து சந்தனபாண்டியின் வீட்டையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். அமைதி. எங்கும் அமைதி. அந்த அமைதி எல்லோர் மனதிலும் ஏதோ ஒரு வலியை ஏற்படுத்தியது.

வள்ளி குணம் அடைந்துவிட்டாள் என்று நம்பிக்கொண்டிருந்த வேளையில், திடிரென குளிர் ஜுரம் வந்தது போல உடலை நடுங்க வைத்து அவளை துடிக்க வைத்தது. துடித்த உடல் கனநேரத்தில் அடங்கியது. அடங்கியது உடல் மட்டுமல்ல, அவளி‎ன் சுவாசமும்தான்.

அறை சுவரிலே தலை சாய்த்து கண்ணீர் வடித்தாள் சந்திரா. குழந்தைகள் ரெண்டும் அவள் மடியில் படுத்திருந்தார்கள். சூழல் புரிந்தும் புரியாமலும் ஆனந்து அழுதுகொண்டிருந்தான். மலரோ ரப்பர் பேண்டை இரு விரல்களில் விரித்துவைத்து விளையாடிக்கொண்டு இருந்தாள். வயதான தாயோ தரையில் படுத்துக்கொண்டு செத்துப்போன மருமகளை நினைத்தும், பேரக் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்தும், மகனை நினைத்தும் அழுது புலம்பிக்கொண்டிருந்தாள்.

சந்திரா கண்களை துடைத்துக்கொண்டு குழந்தைகளை பார்த்தாள். மடியில் படுத்தவாறு இருவரும் தூங்கிவிட்டிருந்தனர். பெருவிரலை வாயில் வைத்து சூப்பிக்கொண்டு தூங்கும் மலரின் பிஞ்சுமுகத்தை பார்க்கும் போது அவளுக்குள் இருந்த குற்ற உணர்ச்சி மேலோங்குவதை உணர்ந்தாள். தாந்தானே வீட்டின் எதிர்ப்பையும் மீறி வள்ளிக்கு நம்பிக்கை வார்த்தைகள் கூறி அனுப்பி வைத்தது என எண்ணும் போதே மனம் வெதும்பி அழ ஆரம்பித்தாள்.

வெளியே கூப்பாடு போடும் சத்தம் கேட்டு, வீட்டில் இருந்தவர்கள் வெளியே எழுந்து ஓடினார்கள். மருமகளை கொண்டு வந்துவிட்டார்கள் என்பதை அறிந்து சந்தனபாண்டியின் அம்மா தலையில் அடித்து ஒப்பாரி வைத்துக் கொண்டே எழுந்து ஓடினாள். சந்திராவோ அந்த கோலத்தில் குழந்தைகள் அம்மாவை பார்த்தாள் தாங்குவார்களோ தாங்கமாட்டார்களோ என பயந்து அவளை அறியாமலயே கண்களில் நீர் மல்க அவர்களின் காதை பொத்திக்கொண்டு தன் மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டாள். குழந்தைகள் அசைவின்றி தூங்கிக்கொண்டிருந்தனர்.

6.

குழந்தைகளை துறந்து உணர்வற்ற ஒரு பொருளாய் கிடந்தாள் வள்ளி. ஆங்கில மருந்து அவளது உடலை மேலும் சீரழித்திருந்தது. முன்பற்கள் வெளியே துருத்திக் கொண்டு நின்றது. கன்னம் இரண்டும் ஒடுங்கிக் காணப்பட்டது. சந்தனபாண்டி அம்புலன்ஸில் இருக்கும் வள்ளியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு நின்றான். மதுவின் வீச்சம் அவனது மூச்சு காற்றில் தெரிய, சுற்றி நடக்கும் கூச்சல் குழப்பம் எதுவும் அவனது காதில் விழவில்லை. அவன் பார்வை அவள் அணிந்து இருக்கும் மூக்குத்தியில் நிலைக்குத்தி நின்றது. கல்யாணம் முடிந்து முதன் முதலாக தான் வாங்கிக்கொடுத்த மூக்குத்தி. ‘நல்லா இருக்கா’ என அவள் ஆசையாக கேட்டது, அவனது நினைவிலே மலராய் பூத்து குலுங்கியது.

வள்ளியை அம்புலன்ஸில் இருந்து இறக்கலாமா வேண்டாமா என்ற வாதம் விவாதமாக மாறி புயல் நெருப்பு வீசியது. உடல் கருத்து, சிதைந்து வரும் அவளது உடலை அப்படியே சுடுகாட்டுக்கு கொண்டு சென்று புதைத்துவிடலாம் என ஊர் பெரியவர்கள் கூற, அதற்கு சந்தனபாண்டியின் வீட்டிலும் சம்மதம் தெரிவிக்க, ஆனால் வள்ளியின் குடும்பமோ அதை மறுத்து வாதம் செய்தார்கள். எனது மகளை அனாதை பிணமாக கொண்டு போக விட மாட்டேன், குளிப்பாட்டி கோடித்துணி உடுத்தி பூ பொட்டு வைத்து முறையான அடக்கத்தைதான் பண்ணவிடுவேன் என்று தீர்மானமாக சொல்லிவிட்டார் முத்தையா. சரி மகளை இழந்தவன் ஆசைப்படுகிறான் என்று ஊராரும் மறுப்பு தெரிவிக்கவில்லை.

வள்ளியை ஆம்புலஸில் இருந்து இறக்கி நார்க்கட்டிலில் படுக்க வைத்தார்கள். பெண்கள் கட்டிலை சுற்றி சேலையால் மறைப்பை ஏற்படுத்தி குளிப்பாட்ட தயார் ஆனார்கள். சந்திரா வீட்டினுள் இருந்து வெளியே வந்தாள். கூட்டத்தில் இருந்து விலகி ஓரமாக நிற்கும் சந்தனபாண்டியை பார்த்ததும் அவளுக்கு கோபமும் அழுகையும் ஆத்திரமும் வந்தது. அவனது சட்டையை பிடித்து குலுக்கி அழுது கொண்டே கேட்டாள்.

“ஏன்டா இப்படி பண்ணா... ஏன் இப்படி பண்ண.... குடிச்சி குடிச்சி குடும்பத்த இப்படி நடுத்தெருவுக்கு கொண்டு வந்துட்டிய... கொழந்தைகள பத்தி கொஞ்சமாவது நெனச்சி பாத்தியா... இனிம யாரு அதுங்கள பாத்துப்பா”

அவன் பதில் ஏதும் சொல்லாமல் கல்லு போல அப்படியே நின்றான். ஆனால் வள்ளியின் தம்பி முருகேசனோ நெஞ்சை நிமிர்த்தி அவள் முன் வந்து நின்று “ஏன் நாங்க இல்ல, நாங்க என்ன செத்தா போயிட்டோம்”. அவளோ அழுவதை நிறுத்தி வெறித்துபோய் அவனை பார்த்தாள்.

அவனோ பல்லை கடித்து கோபத்தோடு “அப்படியே கொல கேஷா மாத்தி இவன போலிஸ் ஸ்டேஷன்லயே சாக விட்டுருப்பேன்... ஆனா...” என்று வள்ளியை பார்த்தான். குடத்திலிருந்து தண்ணீரை வள்ளி மேல் ஊற்றுவது நிழலாக தெரிந்தது. அவனது கண்கள் கலங்கி இருந்தது.

“இனிம என் அக்கா கொழந்தைங்க ரெண்டு பேரையும் நாங்க வளத்துக்கிறோம்... இந்த குடிகாரன நம்பில்லாம் எங்களால விட்டுட்டு போவ முடியாது” என்று தீர்க்கமாக சொன்னான்.

“ஏம்ப்பா முருகேசா கொஞ்சம் அமைதியா இருடே, காரியம் முடிஞ்ச பொறவு பேசிக்கலாம்” என்று ஒரு பெரியவர் அவனை சமாதானப்படுத்த பார்த்தார்.

“எப்பொ பேசுனாலும் இதான் முடிவு... கொழந்தைய நாங்க கூட்டிபோறோம் அவ்வளவுதான்”.

“என்னல விட்டா அதுபாட்டுக்கு பேசிட்டு போறா... தம்பி தங்கச்சி நாங்க இல்ல... எங்கள மீறி கொண்டு போயிருவியோ” என்று சந்தனபாண்டியின் தம்பி வேலு முறுக்கிக்கொண்டு வந்து நின்றான்.

இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டு, அடிதடி அளவுக்கு சென்றது. பெண்களும் ஒருவரை ஒருவர் வசைபாடி தீர்த்தனர். ஊர் பெரியவர்கள் அவர்களை அடக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்கள் யார் பேச்சையும் கேட்க தயாராக இல்லை. ஊர் முழுவதும் காட்டு சத்தமாக இவர்களின் சத்தமே கேட்டது.

அந்த சத்தம் குழந்தைகளின் தூக்கத்தை கெடுத்தது. தூக்கம் கலைந்த மலர் எழுந்து அம்மாவை தேடினாள். இல்லை என்றதும் அழ ஆரம்பித்தாள். அண்ணன் ஆனந்துவை எழுப்ப முயற்சித்தாள். ஆனால் அவன் எந்திரிக்கவில்லை. அழுது கொண்டே வீட்டு வாசலுக்கு வந்து நின்று, சந்திராவை பார்த்து

“அத்தே... அம்மா இன்னும் வரலையா” என்று கத்தி அழுதுகொண்டே கேட்டாள். கூட்டம் அமைதியானது. சண்டை நின்றது. குடத்தில் இருக்கும் தண்ணீரை ஊற்றும் சத்தம் மட்டும் கேட்டது. சந்திரா கண்களில் நீர் மல்க, மலரை நோக்கி ஓடினாள்.

“அம்மா குளிச்சிட்டிருக்கா, வந்துருவா” என்று தூக்கி நெஞ்சோடு அணைத்துக் கொண்டே வீட்டுக்குள் சென்றாள்.

“குளுப்பாட்டியாச்சி, கோடித்துணி இருந்தா கொடுங்க” என்று கற்பகம் மறைப்புக்குள் இருந்து எட்டி பார்த்து கத்தி சொன்னாள்.

அதுவரைக்கும் கல்லாட்டமாக நின்றுகொண்டு இருந்த சந்தனபாண்டி அவசர அவசரமாக வீட்டை நோக்கி ஓடினான். கல்யாணப் பட்டுபுடவையை எடுத்து வந்து கொடுத்தான். முருகேசன் படக்கென அவனிடம் இருந்து அந்த சேலையை பறித்து எரிந்துவிட்டு தான் வாங்கி வந்த புது சேலையைக் கொடுத்தான்.

சந்தனபாண்டி எதிர்ப்பு எதுவும் தெரிவிக்காமல் சேற்றிலே விழுந்து கிடந்த பட்டுப் புடவை எடுத்து, அதன் மீது படிந்திருக்கும் சேற்றை தன் மீது துடைத்துக்கொண்டான்.

7.

மங்களகரமான முகத்தோடு புது சேலை கட்டி, தலை நிறைய பூ வைத்து, சிவப்பு கலரிலே பெரிதாக பொட்டு வைத்து, தென்னை ஓலையால் செய்த பாடையின் மீது படுக்க வைக்கப்பட்டிருக்கும் வள்ளியை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான் சந்தனபாண்டி. அவளது தலைக்கு மேலே கொத்தாக ஊதுவத்தி புகை விட்டுக் கொண்டிருந்தது. ரோஜாப் பூ மாலை அவளை இன்னும் அழகுபடுத்தியது. சந்தனபாண்டியின் கண்ணுக்கு அவள் ராணியாக தோன்றினாள். இதே அலங்காரம், இதே அழகோடுதானே அவன் அவளோடு கூடினா‎ன். அந்த நினைப்பு அவன் மனதை கிளர்ச்சி அடையச் செய்தது.

“சரி நேரமாவுது சீக்கிரமா எடுங்கப்பா, மருந்து குடிச்ச ஒடம்பு ரொம்ப நேரம் தாங்காது” என்றார் அருகே நின்ற ஒரு முதியவர்.

“எல்லோரும் பாத்தாச்சுன்னா எடுத்துரலாங்க?” என்றார் காரியத்தை நடத்த வந்த கார்மேகம்.

பூத உடலை எடுக்க போகிறார்கள் என்று தெரிந்ததும், பெண்கள் மத்தியில் இன்னும் அழுகை அதிகமானது. தனலட்சுமி அழுதுகொண்டே சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு

“ஐயா என் பேரப்பிள்ளையிலு இன்னும் தாய் மொகத்த பாக்கலய்யா, கூட்டிட்டுவரச் சொல்லுங்க”

“ஏ கற்பகம் உள்ள போயி சந்திராட்ட சொல்லி கொழந்தைகள கூட்டிட்டு வா” என்று ஆணையிட்டார் ஊர் பெரியவர் ஒருவர்.

“இல்ல சித்தப்பா, அம்மாவ இந்த கோலத்துல பாத்தா பயந்துருவாங்கன்னுதான் உள்ள வச்சிருக்கா”

“அதுக்காக மொகத்த காட்டாமலா கொண்டு போவ முடியும்?... நாளபின்ன வந்து என் அம்மா மொகத்த காமிக்காம ஏன் பொதைச்சிங்கன்னு கேட்டா என்ன சொல்றதாம்?” என்றாள் கூட்டத்தில் நின்ற வயதான பாட்டி

“காளியம்மா சொல்றதும் சரிதான்... இன்னைக்கில்லனாலும் என்னைக்காவது ஒருநாளு அதுங்களுக்கு தெரிஞ்சுதான ஆகனும்... அது இப்போதுலருந்தே கொஞ்சம் கொஞ்சமா தெரிஞ்சிரட்டும்... போ போய் சந்திராட்ட பதமா பேசி கொழந்தைங்கள கூட்டிட்டு வா” என்றார் ஊர் பெரியவர்.

அதற்கு மேல் எதுவும் பேச முடியாது என தெரிந்து, கற்பகம் சந்திராவை கூப்பிட சென்றாள். மலரை இடுப்பிலும் ஆனந்தை கையிலும் பிடித்தவாறு வெளியே வந்தாள் சந்திரா. குழந்தைகளை பார்த்ததும் ஜனங்கள் இன்னும் பயங்கரமாக கத்தி அழ ஆரம்பித்தார்கள். சந்திரா பரிதவிப்போடு குழந்தைகளை பார்த்தாள். குழந்தைகள் அந்த கூட்டத்தையும் மக்கள் அழுவதையும் புரியாமல் பார்த்தார்கள். அவர்களுக்கு தானாகவே அழுகை வர ஆரம்பித்தது.

“ஏன் அத்தே எல்லாரும் அழுறாங்க” என்று மலர் அழுதுவிடுவது போல தளுதளுத்த குரலில் கேட்டாள். ஆனால் சந்திரா அதற்கு பதில் சொல்லாமல் அவளது தலையை தனது கழுத்துக்குள் புதைத்துக்கொண்டாள். ஆனந்துக்கு புரிந்தும் புரியாததும் போல இருந்தது. அவன் அந்த கூட்டத்தை பார்த்து ஓடினான்.

தென்னை ஓலையின் மீது படுத்திருக்கும் அம்மாவை வெறித்து பார்த்தான். கண்கள் கலங்க ஆரம்பித்தது. சுற்றி இருப்பவர்கள் அழுவதை பார்த்தான். சந்திரா அவன் அருகே வந்து அவனது தோலை தொட்டாள்.

அவன் அம்மா அருகே முட்டி போட்டு அமர்ந்துகொண்டு “அம்மா... அம்மா... அம்மா எந்திரிம்மா.. அம்மா எந்திரிம்மா...” என்று உலுப்பி எழுப்ப முயன்றான்.

சந்திராவின் தோலில் படுத்திருந்த மலர் “அம்மா வந்தாச்சா?” என்று சந்தோசமாக திரும்பி பார்த்தாள்.

அண்ணன் அழுவதை பார்த்ததும் மலரும் சந்திராவின் இடுப்பில் இருந்து இறங்கி “அம்மா... அம்மா... அம்மா எந்திரிம்மா.. எந்திரிம்மா..” என்று அழுதுகொண்டே அண்ணனோட சேர்ந்து அம்மாவை எழுப்ப முயன்றாள்.

“ஐயோ... பாவி... இப்படி கொழந்தைகள அனாதையா விட்டுட்டு போயிட்டீய” என்று தலையில் அடித்து கத்திக்கொண்டே மலரை கட்டிப்பிடித்து அழுதாள் தனலட்சுமி. ஆனந்து ஓடிச்சென்று சந்தனபாண்டியின் காலை பிடித்து

“எப்பா அம்மாவ எந்திக்க சொல்லுப்பா... எப்பா அம்மாவ எந்திக்க சொல்லுப்பா.. சொல்லுப்பா” என்று கெஞ்சி அழ, சந்தனபாண்டி வள்ளியையே பார்த்துக்கொண்டு இருந்தான். அவனது கண்கள் கலங்க ஆரம்பித்தது. கார்மேகம் சங்கை ஊதி மணியை அடிக்க ஆரம்பித்தான்.

8.

ஆனந்து, தாத்தா முத்தையாவின் கை விரலை பிடித்தவாறு முன்னால் செல்ல, அருகே கார்மேகம் சங்கை ஊதிக்கொண்டும் மணியை அடித்துக்கொண்டு நடந்து வந்தான். பின்னால் ஆறேழு பேரு வள்ளியின் உடலை தூக்கி வர, ஊர் பெரியவர்களும் இளைஞர்களும் கூட வந்தார்கள். சந்தனபாண்டி எல்லோருக்கும் பின்னால் சேலையை நெஞ்சோடு அணைத்து, மெட்டி போட்ட வள்ளியின் கால் விரலை பார்த்தவாறு நடந்து வந்தான்.

ஊரை விட்டு தள்ளி இருக்கும் சுடுகாட்டுக்கு உடலை தூக்கி சென்றார்கள். அங்கே வள்ளிக்காக ஆறடி நீளமும், இரண்டடி அகலமும், மூன்றடி ஆழத்திலும் ஒரு குழி தோண்டப்பட்டிருந்தது. அருகே குவிந்து கிடந்த மணலில் பாடையை இறக்கி வைத்து, சடங்கு சம்பிரதாயங்களை ஆரம்பித்தார்கள். சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்ததும், கார்மேகம் சுற்றி நிற்பவர்களை பார்த்து

“சரிங்க, பாக்கிறவங்க பாத்துக்குங்க, குழில எறக்க போறோம்”

ஆனந்து அம்மாவின் முகத்தை பார்த்து ஏங்கி ஏங்கி அழுதான். முத்தையா அவனை இழுத்து அணைத்து அவனது தலையை வருடிவிட்டார். இருவர் குழிக்குள் இறங்க, மூவர் வள்ளியை பாடையோடு சேர்த்து தூக்கிக்கொடுக்க போயினர். இதை பார்த்துக் கொண்டிருந்த சந்தனபாண்டிக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை, எல்லோரையும் விலக்கிக்கொண்டு வேகமாக வந்து, முட்டிபோட்டு அமர்ந்து, தனது இரு கைகளாலும் அவளது க‎ன்னத்தை பிடித்து, நெற்றியில் முத்தமிட்டு அவளையே வெறித்து பார்த்தான். யாரும் எதுவும் சொல்லவில்லை.

அவனது கண்ணீர், மூடிய அவளது கண்ணீல் விழுந்து வடிந்தது. அதை பார்த்து தாங்கமுடியாமல் “ஆ....” என்று கத்தி அழ ஆரம்பித்தா‎ன் அப்பா அழுததும் தாத்தாவிடம் இருந்து விலகி அப்பாவை கழுத்தோடு சேர்த்து கட்டி அணைத்து அழுதா‎ன் ஆனந்து. சந்தனபாண்டியும் மகனை கட்டி அணைத்து

“குட்டி என்ன மன்னிச்சிருல... நான் தப்பு பண்ணிட்டேன்... அ‎ன்னைக்கு நான் குடிச்சிருக்க கூடாது... என்ன மன்னிச்சிரு...” என்று குலுங்கி குலுங்கி அழ, முத்தையா கோபத்தோடு குழந்தையை அவனிடம் இருந்து பறித்து ஊரை நோக்கி நடக்க ஆரம்பித்தார். சந்தனபாண்டி அழுதுகொண்டே மகனை தூக்கி செல்வதை வெறித்து பார்த்துவிட்டு, தன்னிடம் இருந்த புடவையால் வள்ளியின் முகத்தை மூடினான்.

9.

“நான் அம்மாட்ட போனோம்... என்ன விடு பாட்டி... விடு பாட்டி நான் வரமாட்டேன்..” என்று கை காலை உதைத்து அடம்பிடிக்கும் மலரை குண்டு கட்டாக தூக்கி ஆட்டோவுக்குள் ஏற்றினாள் தனலட்சுமி. சந்திராவோ அவளை கெஞ்சாத குறையாக

“எத்தே ஒரு வாரம் இங்க இருக்கட்டும்த்தே, நானே பசங்ககிட்ட பேசிக்கொண்டு வந்து விட்டுர்றேன்”.

“ஒரு வாரம் இல்ல, ஒரு நிமிஷம் கூட இனிம இந்த வீட்ல என் பேர புள்ளையிலு இருக்க கூடாது...” என்று முகம் கொடுத்து பேசாமல் வெடுக்கென திருப்பிக் கொண்டாள். மலரோ சந்திராவை நோக்கி தாவ துடிப்பது போல கைகளை நீட்டி

“எத்தே என்ன தூக்குங்க... எத்தே... விடு பாட்டி” என்று அடம்பிடித்தாள். சந்திராவுக்கோ இதை பார்க்க சக்தி இல்லாமல் முகத்தை திருப்பிக்கொண்டாள்.

மலரின் அழுகை குரல், முத்தையாவின் கையை பிடித்து நடந்து வரும் ஆனந்துக்கு எட்ட, தாத்தாவின் கையை உதறிவிட்டு “மலரு” என்று கத்தி அழுதுகொண்டே ஆட்டோவை நோக்கி ஓடி வந்தான்.

அண்ணனை பார்த்ததும் “ஆனந்து என்ன எறக்கி விட சொல்லு... ஆனந்து”

ஆனந்து மலரின் கையை பிடித்து அழுதுகொண்டே “பாட்டி மலர இறக்கி விடுங்க பாட்டி, இறக்கிவிடுங்க பாட்டி... எத்தே சொல்லுங்கத்தே” என்று சந்திராவை பார்த்து மன்றாடினான்.

“மருமொவன நீயும் இங்க இருக்க வேணாம்... எங்க கூட வா” என்று சொல்லிக் கொண்டே முருகேசன் ஆனந்தை தூக்கிக்கொண்டு ஆட்டோவின் முன் சீட்டை நோக்கி நடந்தான்.

“விடு மாமா... நான் எங்கேயும் வர மாட்டேன், இங்கதான் இருப்பேன்... விடு மாமா” என்று ஆனந்துவும் கை காலை உதைத்து ஆர்ப்பாட்டம் செய்தான்.

ஆனால் முருகேசனோ அவனை விடாமல், ஆட்டோவில் ஏறி மடியில் அமர்த்திக் கொண்டான். அண்ணனும் தன்னோடு வருகிறான் என்று தெரிந்ததும் மலரின் அழுகை நின்றது. முத்தையாவும் வேகமாக வந்து ஆட்டோவில் ஏற, ஆட்டோ கிளம்பியது.

சந்திரா அழுதுகொண்டே ஆட்டோ செல்வதை பார்த்தாள். அவர்களின் செயல் ஊரார் யாருக்கும் பிடிக்கவில்லை. ஆனாலும் அவர்கள் சொல்வதில் ஞாயம் இருக்கிறது என்பதை உணர்ந்து எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்கள்.

திடிரென ஆட்டோவில் இருந்து ஆனந்து குதித்து சந்திராவை நோக்கி ஓடி வந்தான். சந்திரா ஏக்கத்தோடு அவனை பார்த்தாள். ஓடி வந்த வேகத்தில் அவளை இறுக்கி கட்டி அணைத்து

“நான் அப்பாட்டதான் இருப்பேன்... என்ன போவ விடாதத்தே” என்று அழ ஆரம்பித்தான். அவளும் அவனை மார்போடு இறுக்கி கட்டி அணைத்து அழுதாள்.

ஆட்டோ டக்கென நின்றது. முருகேசன் ஆட்டோவில் இருந்து இறங்க, “ஏல முருகேசா அவன் ஆம்பள பையன், எப்படினாலும் பொழச்சிப்பான். நீ வண்டில ஏறு.. போலாம்” என்று தனலட்சுமி கறாராக சொன்னதும் முருகேசன் பதில் ஏதும் பேசாமல் ஆடோவில் ஏற, ஆட்டோ கிளம்பியது.

அண்ணன் வரவில்லை என்று தெரிந்ததும் மலர் தாங்கமுடியாமல் வெடித்து அழ ஆரம்பித்தாள். முத்தையாவும் தனலட்சுமியும் அவளை தேற்ற முயன்றார்கள். அவள் நிறுத்தவில்லை. நடுவில் மாட்டிக் கொண்ட அவளால் கீழே குதிக்க முடியாது எ‎‎ன்று தெரிந்ததும், ஆட்டோவுக்குள்ளே திரும்பி, திறந்திருக்கும் பின்புறம் வழியாக, தலையையும் கையையும் நீட்டி

“ஆனந்து என்னையும் கூட்டிட்டு போ... ஆனந்து நானும் வாறேன்... ஆனந்து... அண்ணா... அண்ணா... அண்ணா...” என்று கத்தி அழுதாள்.

தங்கை கத்தி அழுவதை பார்க்கும் ஆனந்தின் கண்ணீல் இருந்து கண்ணீர் வடிந்தது. “மலரு... மலரு...” என்று தனக்குள் சொல்லி அழுதுகொண்டே பார்த்தா‎ன். அவளின் உருவமும் குரலும் கொஞ்சம் கொஞ்சமாக காற்றிலே கரைந்து போக, அவனோ அவள் போன திசையை வெறித்து பார்த்துக் கொண்டிருக்க, உதடுகள் “மலரு மலரு” என முனங்கிக்கொண்டிருந்தது.

 சந்தனபாண்டி முழு போதையோடு தள்ளாடி தள்ளாடி நடந்து வந்தான். அப்பாவை பார்த்ததும் “எப்பா” என்று கத்தி அழுது கொண்டு ஓடினான். போதை மயக்கத்திலே மகன் ஓடி வருவதை பார்த்துக் கொண்டே தரையில் விழுந்தான். ஓடி வந்த ஆனந்து தந்தையை எழுப்பிக் கொண்டே

“எப்பா தங்கச்சிய கூட்டிட்டு போறாங்கப்பா... கூட்டிட்டு போக வேண்டாம்னு சொல்லுங்கப்பா... சொல்லுங்கப்பா... எப்பா.. எப்பா” என்று உலுப்ப, அவனிடம் இருந்து வெறும் உளறல் சத்தம் மட்டுமே வந்தது. ஆனந்து அப்பாவை எழுப்பிக் கொண்டே இருக்க, அவனது செவிகளில் “அண்ணா... அண்ணா...” என்று தங்கையின் குரல் மட்டும் கேட்டுக் கொண்டே இருந்தது.

Pin It