tamil_refugeesவெகு தூரம் எடுத்துச் செல்கிறது
அந்தக் கடல் பறவை
என் இரு விழிகளை.
பறவையின் கால் நகம்
என் பார்வையை சிதைக்காமல்
இருக்கும் பொருட்டு
மிகவும் கவனமாக இருக்கிறது.
பறத்தலின் விதியிலும்
எந்த வித ஊறும் விளையாதபடிக்கு
கடந்து போக வேண்டிய
தார்மீகக் கடமையும் அதற்கிருந்தது.
அவதானக் காலங்கள் கழிந்த பிறகு
என் உள்ளங்கைகளில்
வெகு தந்திரமாகத் திணிக்கிறது
கொத்திக்கொண்டு சென்ற
என் பார்வைகள் இரண்டை.
எங்கும் மரண ஓலங்கள்.
உறவுகள் தொலைத்து
அனாதையான அப்பாவி மக்கள்.
உயிர் வாழ்தலே போராட்டக்களமாய்
வாழ்க்கையை நகர்த்த வதைபடும்
என் இன மக்கள்.
கனவுகளைத் தொலைத்து
சுய கௌரவங்களையும் இழந்து
என் மக்களின் கண்ணீர்
மிகக் கொடிய அமிலமாகி
கடலில் கலக்க
கரையெங்கும் சிதறிக் கிடக்கிறது
ஒரு கோடி அமிலக் கண்கள்

- பிரேம பிரபா

Pin It