வழக்கத்திற்கு மாறாக இந்த இதழ் மிகுந்த கால தாமதத்தோடு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளி வருகிறது. அதாவது இரு மாத இடைவெளியிலாவது வந்து கொண்டிருந்த இதழ், இந்த முறை வழக்கத்திற்கு மாறாக இந்த இதழ் மிகுந்த கால தாமதத்தோடு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளி வருகிறது. அதாவது இரு மாத இடைவெளியிலாவது வந்து கொண்டிருந்த இதழ், இந்த முறை மூன்று மாதங்களுக்கு மேலாகி விட்டது. 

இடையில் நாட்டில் எவ்வளவோ சம்பவங்கள் நிகழ்ந்தேறி விட்டன. இருந்தாலும் இதில் இரண்டு சேதிகள் நெஞ்சை விட்டு அகலாத பெரும் பாரமாய் மனதை அழுத்திக் கொண்டிருக்கின்றன. ஒன்று சிங்கள இனவெறி அரசும், கொலைவெறி ராணுவமும் வெற்றிபெற, தமிழீழ விடுதலைப் போராட்டம் கடும் நெருக்கடிகளுக்கும் பின்னடைவுகளுக்கும் ஆளாகி எண்ணற்ற போராளிகளும் அப்பாவிப் பொதுமக்களும் மாண்டது. மற்றொன்று, இந்த சிங்கள அரசுக்கு உதவிய, கொலைகாரக் காங்கிரஸ் கூட்டணியே மீண்டும் வெற்றி பெற்று கூடுதல் பலத்தோடு ஆட்சி பீடத்தில் அமர்ந்தது. இந்த இரண்டு நிகழ்வுகளிலுமே ஆதிக்க சக்திகள் வெற்றி பெற்றுள்ளனர் என்பது ஒருபுறம். தமிழ்நாட்டில் ஆறரைக் கோடித் தமிழர்கள் இருந்தும், தமிழினத்துக்குப் பல தலைவர்கள் எல்லாம் இருந்தும் இப்படி கண்ணெதிரில் அநியாயமாக நம் இனத்தில் பல்லாயிரக் கணக்கானோரை அழியவிட்டுவிட்டோமே. இப்படி ஒரு கொடுமை நம் கூப்பிடு தூரத்தில் நடக்க, அதை தடுத்து நிறுத்த கையாலாகதவர்களாக இருந்து நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோமே, இப்படிப்பட்ட நம் வாழ்க்கைக்குத்தான் பொருள் என்ன என்கிற உறுத்தல் ஒருபுறம். ஆக, இந்த இரண்டு செய்திகளே நெஞ்சைவிட்டு நீங்க இயலாது உறுத்தும் செய்தியாக இருப்பதால், பெரும்பாலும் இவையே இதழ் முழுக்கவும் இடம் பெற்றுள்ளன.  

இப்பொருள் சார்ந்து இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் நிகழ்வின் முதல் கட்ட செய்திகள் வெளிவந்த நேரத்தில் எழுதியவை. பின் அடுத்தடுத்து அது சார்ந்து பல செய்திகள், பல்வேறு பரிமாணங்களில் வெளிவந்து கொண்டிருக்க, இதையொட்டிய நமது கருத்துகளை அவ்வப்போது பெட்டிச் செய்திகளாக எழுதி இணைத்தது. இருந்தாலும் இதுபோன்ற செய்திகளின் எண்ணிக்கை அதிகமாகியதில், ஒவ்வொரு கட்டுரைக்கும் உரிய இடத்தில் அப்பெட்டிகளை வைக்க முடியாமல் சில இடம் மாறி இருக்கின்றன. எனவே, பெட்டிச் செய்திகள் எங்கிருந்தாலும், அவை நாம் புரிந்துகொள்ள வேண்டிய கருத்து என்கிற அளவில், உரிய இடத்துக்குப் பொருத்தமாக அதை எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். 

ஈழத்தில் இனவெறித் தாக்குதல் போர் தீவிரப்பட்டிருந்த தருணத்தில் ஈழ ஆதரவுக் கட்சிகள், சக்திகள் ஒன்றுசேர்ந்து ஒரு லட்சம் பேராவது சிறையேகுவோம் என தமிழகம் தழுவி சிறை நிரப்பும் போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தால் கூட போதும். போர் நிறுத்தம் கொண்டுவந்து எவ்வளவோ உயிர்களைக் காப்பாற்றி இருக்கமுடியும். அரசு ஊழியர், ஆசிரியர் போராட்டங்களில் கூட அநாயசமாக ஐம்பதாயிரம் பேர் சிறை செல்கிறார்கள். ஆனால், ஈழ ஆதரவுக் கட்சிகள் இதைச் செய்ய முயலவில்லை. முயன்றிருந்தால் இதை நடத்தியிருக்க முடியும். ஆனால், கோட்டை விட்டோமே என்பதுதான் ஆறாத குமுறலாக மனதை வருத்திக் கொண்டிருக்கிறது. 

சரி, இழந்தது இழந்தாயிற்று. அந்த சோகம், அதையொட்டிய கோபம், ஆத்திரம், அவ்வளவு விரைவில் அடங்காதுதான் என்றாலும், நாம் அதையே நினைத்துக் கொண்டிருக்காமல், போனவர்கள் போகட்டும் இருக்கிறவர்களையாவது காப்பாற்ற, அவர்களை நலமாய், கண்ணியமாய் வாழ வைக்க என்ன செய்யலாம், எப்படி முயற்சிக்கலாம் என அடுத்தகட்ட சிந்தனைகளை நோக்கி நாம் நம் கவனத்தைச் செலுத்துவோம் என்று மனதை திடப்படுத்திக் கொண்டு அடுத்தடுத்த செயற்பாடுகளில் இறங்க வேண்டியதுதான். 

அப்புறம் வேறு என்ன? இதழ் பற்றி எழுத நிறைய இருக்கிறது. ஆனால் எழுதி என்ன பலன்? பலன் விளைவிக்காத வேண்டுகோள். சும்மா வெறும் புலம்பலாகத்தான் படும். அந்த வெட்டிப் புலம்பல் எதற்கு? நெருக்கடி எதுவானாலும் எதிர்கொண்டு பயணத்தைத் தொடர வேண்டியதுதான். தொடர்வோம். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாகத் தெரிகிறது. தமிழ்த்தேச எழுச்சிஎன்பது ஒன்றும் அவ்வளவு இலகுவானதாகத் தோன்றவில்லை. அதற்கான பயணம் மிக நீண்டது, நெடியது, மிகுந்த சகிப்புத் தன்மையையும், மனத் திண்மையையும் கோருவது. ஆனாலும் இதற்காக சோர்ந்து விடவாப் போகிறோம். இருக்கட்டும், பார்ப்போம்.  

தோழமையுடன் 

ஆசிரியர்.

Pin It