பிடித்துத்தானிருக்கிறது இந்த இரவு
யாருமற்ற இரவுதான் -ஆனாலும்
தனிமையிலிருப்பதாய்த் தெரியவில்லை எனக்கு
கண்களின் வழியே கண்ணீர் வழிந்தோட
விடிய விடிய அழுது கொண்டேயிருக்கிறேன்
விடிந்த பின்னும் கூட நீளமாகலாம்
அழுகைக்கான காரணங்கள்
எதை நினைத்து அழுகிறேனோ அதன் வலிகள்
பெரிதாய் எனை பாதித்திடவில்லை
அதனாலேயென்னவோ
பிடித்துத்தானிருக்கிறது இந்த இரவு…

கைகளில் வளையல் பூட்டி
தலைவாரி மல்லிகை சூட்டி
மஞ்சள் குங்குமத்தோடு முகம் மலர
செந்நிறத் துணியுடுத்தி உன்னருகில் வீற்றிருக்கிறேன்
முன்னெப்போதும் போலில்லாமல் இம்முறைதான்
புதிதாய் சிகையலங்காரம் செய்யத் துணிந்திருக்கிறேன்
அதனாலேயென்னவோ
பிடித்துத்தானிருக்கிறது இந்த இரவு…

நீண்ட நாட்களுக்குப் பிறகு
எனக்கான உறவுகளெனச் சொல்லி
யார் யாரோ நம் வீட்டிற்குள் வந்து போகிறார்கள்
என்னருகிலமர்ந்து ஆதரவு சொல்லி அழுது புலம்புகிறார்கள்
நான் உனக்கு மட்டுமே சொந்தமெனக் கூறி
தனிமைச் சிறையில் வாழ கற்றுக் கொடுத்தாய் எனக்கு
உறவுகளின்றி தனித்துவிடப்பட்ட நம் வீடு
இன்று தான் திருவிழாக்கோலம் பூண்டது போலொரு உணர்வு
அதனாலேயென்னவோ
பிடித்துத்தானிருக்கிறது இந்த இரவு

இன்றுதான் அயர்ந்து உறங்குகிறது எனதறை
உன் நுழைவு இல்லாததாலோ என்னவோ
ஓய்வின்றி இரவு பகல் பாராது மதுக்கோப்பையை கையிலேந்தி
எனதுடலை கூறுபோடும் உன் இழிசெயலால்
பற்றியெரிந்தது நான் மட்டுமல்ல எனதறையும் கூட
நீயின்றில்லையெனத் தெரிந்ததும்
இருள் மண்டிக் கிடந்த சன்னலின் வழியே
வெளிச்சத்தின் முதல்படி லேசாய் எட்டிப் பார்த்துப் போகிறது
அமைதியை அழைத்து வந்து தாலாட்டு பாடுகிறது
அதனாலேயென்னவோ
பிடித்துத்தானிருக்கிறது இந்த இரவு

உண்மைதான்
உனக்கான மனைவியென்கிற காரணத்திற்காகவே
காரணமற்று எனை உன் காலடியின் கீழ் கட்டுப்படுத்தியிருந்தாய்
எனக்கான வாழ்வெளியை சுருக்கி வன்முறையால்
என்னை நெரித்துக் கொண்டேயிருந்தாய்
நீ மாற வேண்டுமென்பதற்காகவே
நான் மாறாமல் உன்னிடமே வீழ்ந்து கிடந்தேன்
அதற்காக என் அரைஆயுளை இழந்தேன்
இனி இழப்பதற்கு ஒன்றுமில்லையெனும் போதுதான்
தீடீரென வந்துபோனது உன் இயற்கை மரணம்

அது உனக்கான மரணமல்ல
எனக்கான விடியல்
உன் மரணச் செய்தி கேட்டு எனைக் கேட்காமலேயே
மெல்ல அறுந்து ஓடுகிறது
என்னுள் கட்டப்பட்டிருந்த கடிவாளங்கள்
வெளிச்சமாயிருக்கும் இந்த இரவு
உன்னிலிருந்து நான் விடுபட்ட இரவு
அதனாலேயென்னவோ
பிடித்துத்தானிருக்கிறது இந்த இரவு

- வழக்கறிஞர் நீதிமலர்

Pin It