நான் வருவதற்குள் செத்துவிட்டீர்கள்
என் மூச்சு காற்று சூடாகி இந்த மண்ணில்
சூரியனாய் எழும் காலமிது
அதன் வெப்பம் கிளைகளாகப் பிரிந்து பரவி
உங்களை தேடிக்கொண்டிருக்கிறது
வெவ்வேறு நூற்றாண்டுகளில் பிறந்து
அடிமைப்படுத்தி மக்களை கோவில்களுக்கு விற்ற கதைகளை
படித்ததிலிருந்து அது சூடாகிக் கிடக்கிறது
ஏழை நிலங்களைப் பறித்து
உழைக்காதவனுக்குப் பரிசளித்த மன்னர்களை
கவிதை மொழியால் சுட்டெரிக்க காத்துக் கொண்டிருக்கிறது
மனுவின் வஞ்சக மொழியினை நம்பி பூர்வீகுடிகளை
அவமானப்படுத்தி ஊருக்கு வெளியே துரத்திய கரங்களை
ஒவ்வொன்றாக வெட்டி அதன் வலியினை சொல்வதற்கு
வார்த்தைக் கதிர்கள் உயிரோடிருக்கின்றன
சாதிச் சனியனை நம்பி அவர்களை வன்கொடுமை செய்ய
ஆணையிட்ட நாவுகளையெல்லாம்
அறுப்பதற்கு காத்துக் கொண்டிருக்கிறது
அதற்குள் செத்துவிட்டீர்கள்.
செத்த பிணங்களை தோண்டியெடுக்க
இந்தக் கவிதை விரும்பவில்லை
எல்லா திசைகளிலும் நாறும் அதன் விஷக்காற்று
இந்த மண்ணில் மீண்டும் கலக்க வேணடாமென நினைக்கிறது
உங்களை மன்னித்து விட்டுவிடலாமெனில்
உங்கள் வார்த்தைகள் உயிரோடிருந்து
இன்னும் மக்களை சேரவிடாமல் பார்த்துக் கொள்கிறது
கோபம் வீணாகிக் கொண்டிருக்கிறது
இதே போலதான் என் மூதாதையர்களின் கோபம் வீணாய்ப் போனது
எல்லா வெறிகளையும் பார்த்தவர்களின் பரம்பரை
இன்னும் இருக்கிறது பெருங்கூட்டமாக
அவர்களுக்கு பதிலளிக்க நினைக்கிறது கவிதை
இன்னும் சூடேறட்டும் என் கோபம்
நூற்றாண்டு கொடுமைகளை எரிக்க வேண்டியிருக்கிறது

Pin It