நிலத்துடன் பிணைந்து உழன்ற உழவரின்
விலங்கினை ஒடித்து விடுதலை அளிப்பினும்
கைத்தொழில் வினைஞரைத் தொழிலின்றி விரட்டியும்
பைத்தியச் சந்தையின் நெருக்கடி தன்னில்
வினைஞரின் வேலையைப் பறித்ததும் அன்றி
அனைவரும் வேண்டும் பொருட்கள் இருந்தும்
துய்க்க முடியா விதிகளை வகுத்த
உய்ய இயலா முதலா ளியமே
இயற்கை அன்னையின் வளங்கள் தம்மைத்
துயருறும் அளவு பிழிந்த பின்னும்
அழிவுப் பயணம் தன்னைத் தொடர்வது
இழிவென் றுனக்குத் தோன்றுவ தென்றோ?
 
(நிலத்துடன் பிணைந்து உழன்று கொண்டு இருந்த உழவர்களின் விலங்குகளை ஒடித்து (நிலப் பிரபுவிடம் இருந்து) விடுதலை அளித்தாலும் (இயந்திரங்களின் மூலம் பொருட்களை உற்பத்தி செய்து) கைத்தொழில் வினைஞர்களை அவர்களுடைய தொழிலில் இருந்து விரட்டியும், பைத்தியக்காரத்தமான சந்தை விதிகளால் தோன்றும் பொருளாதார நெருக்கடியின் போது தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க முடியாமல் போனது மட்டுமன்றி, அனைவருக்கும் தேவையான பொருட்களை உற்பத்தி செய்து இருந்தும், அவற்றைப் பயன் படுத்த முடியாதபடியான விதிகளை வகுத்த உய்வு இல்லாத முதலாளித்துவமே! இப்புவி களைப்படைந்து இனி அழிந்து போய்விடும் என்ற அளவிற்கு இயற்கை அன்னையின் வளங்களைப் பிழிந்த பின்னும், தொடர்ந்து அழிவுப் பாதையிலேயே செல்வது இழிவு என்று, உனக்கு என்று தான் தோன்றுமோ?)

- இராமியா

Pin It