முன்னுரை

மாநுட தருமத்தின் தந்தை மநு! மநு உரைத்தது யாவும் வாழ்க்கைக்கு பிணியும் மருந்துமாகும். மநு ஒருவர் அல்லர். நால்வர் என்கின்றன ரிக் வேதமும் கீதையும், இந்து தருமங்களோ மநு எழுவர் என்கின்றன!

manu statue in rajastan high court"மானவ" தருமமாக வகுக்கப்பட்ட போது மநுவின் தரும சூத்திரங்கள் ஒரு லட்சமாம். மநு தர்மம் சாத்திரமாக வடிவெடுத்த போது அது 2683ஆம் இந் நூலுள் அதனினும் சுருங்கி 1943 ஆயின.

சிந்து நதிக்கரை நாகரிகத்திலும் தொன்மை வாய்ந்த தர்மங்கள் இதனுள் பேசப்படுகின்றன. ஆரியம் பரவிய நாடுகளெங்கும் பரவியுள்ள தருமங்களில் உயிர்ப்புடன் இன்றும் உலா வந்து கொண்டிருப்பது இம்மநுதர்மமே.

பாரத பூமியின் நீதி நெறிகளில் வேரூன்றி நின்று நிலையான பெரும் பகுதியை ஆளுவதும் கோலோச்சுவதும் இத்தர்மமே என்பது அறிஞர்கள் துணிபு. பாரத நாட்டின் வழக்காறுகளை நிலைப்படுத்தி வருவது மநு என்பது மறக்க முடியாத உண்மை.

மநுதர்மத்தின் மற்றொரு மறுபதிப்பே இந்திய அரசியல் சட்டம்.

இமயம் முதல் குமரி வரை எங்கும் எதிலும் எப்போதும் யாவராலும் மநுதர்மத்திலிருந்து மேற்கோள்கள் எடுத்துக் காட்டிப் பேசப்பட்டு அவை நிலை நிறுத்தப்பட்டு வருகின்றன.

மநு உரைத்த தர்மங்கள் கல்வி அறிவு பெருகாத காலக் கட்டத்தில் எல்லோராலும் கற்கப் படாததற்குக் காரணமுண்டு.

கற்காமலேயே மக்கள் பின்பற்றி ஒழுகி வரும் தர்மநெறிகளை அவர்கள் கற்றுணர்ந்தால் என்ன? என்ற சிந்தனையே இந்நூலை நான் உருவாக்க ஊக்கியது.

மணிப் பிரவாளத் தமிழிலிருந்து மநு தர்மத்தை மீட்டு எளிய தமிழில் தந்திட எண்ணினேன். ஆனால் இயன்ற வரை தான் தமிழ்ப்படுத்த முடிந்தது. முழுவதும் தமிழ்???

பழகிப்போன பல பழக்க வழக்கங்கள்தான் இங்கே எழுதப் பட்டுள்ளன என்பதைக் காட்ட சில வடசொல் வடிவங்கள் வழக்கில் உள்ளபடியே இங்கு அப்படியே வழங்கப்பட்டுள்ளன.

இதனை ஏற்று அச்சியற்றி வெளியிட முன்வந்த குயில் பண்ணை உரிமையாளர் திருமதி அ. சரசு அவர்களுக்கு எனது இதயமுவந்த நன்றி.

இந்த நூலை எழுத்திற்கெழுத்து படித்து, என்னோடு விவாதித்துச் சூத்திரங்களை இன்னும் எளிமையாக்கி, இதை வெளியிடாதத் துணை செய்தவர் புலவர் திரு.பி. அண்ணாமலை அவர்கள். அண்ணார்க்கு எனது இதயம் உவந்த நன்றி.

- தமிழ் நாடன்

மநுதர்ம நூல் தோற்றம்

ஐம்பொறிகளின் உணர்வுகளுக்கு ஆட்படாமல் ஐந்தையும் அடக்கி, மனதை நன்னெறி நிறுத்தி, பரம்பொருளின் தன்மையை உணர்ந்து, எல்லையில்லாத வல்லமைகள் சேர்த்த, தானே தோன்றிய, மநுப் பிதாவைத் தவவலிவும் பேரநுபவங்களும் ஒருசேரப் பெற்ற தேவ முனிபுங்கவர்கள் தேடிச் சென்றடைந்து அவரடி பணிந்து இனிது நின்று:

நிமிர்ந்த ஞானமும், வலிவும் திறனும், புகழொளியும் பெற்று விளங்கும் பெரியோனே!

வேதங்கள் விதித்தபடியே வேள்வி நற்கருமங்கள் யாவும் நிகழுகின்றன. யாராலும் இயற்றப் பெறாத, தானே தோன்றியதும் தர்க்கவாத நீதிகளால் அறுதி செய்ய முடியாததும் ஆகிய வேதங்களை முற்றும் உணர்ந்த முதல்வோனே!

இவ்வுலகில் தோன்றி வாழும் நால்வருணத்து மக்களும் பிறவுயிர்களும். பிறவும் கடைப்பிடித்து ஒழுகத்தக்கதாக அவரவர்களுக்கு விதிக்கப் பட்டனவாகிய கடமைகளைக் காரிய காரணத் தொடர்போடு எமக்கு விளங்கும் படியாக விரித்துரைப்பீராக! என வேண்டினர்.

மநுப்பிதாவும் முனிபுங்கவர்களை அவரவர்களுக்கு உரிய முறைப்படி யாதும் குறை நேராதபடி தக்கவாறு உபசரித்து "நீங்கள் விரும்பியவாறே ஆகுக! என்று தனது தர்மங்களை விரித்துக் கூறத் தொடங்கினார்.

(தொடரும்)

- தமிழ் நாடன்