ஆறுகள், நதிகள், கங்கைகள்
ஊடறுத்துப்பாய
பசுமையும் எழிலும் விஞ்சும்
அழகு திரு தீவின்
பிரஜைகள் நாங்கள்

பள்ளத்தாக்கின் ஓரமாய்
நாவற‌ண்டு அமர்ந்திருந்தோம்
அருகே ஆற்றில்
நீர் செம்பழுப்பு நிறத்திலோடியது

ஆற்றுக்கு அக்கரையில்
எங்கள் உடன்பிறந்த சிலரும்
கூடவே வந்தவர் பலரும்
மாண்டு கிடந்தனர்
சில முணுமுணுப்புகளும்
காதுகளை உரசினாற்போலொரு நினைவு

செப்புத் தகடங்கள் இதயம்
ஆதலால், விட்டுவிட்டோம்
எதையும் கண்டுகொள்ளாது
கடந்து மீண்டோம்

ஒப்பாரி எரிச்சலூட்டியது
குழந்தைகளும் அதன் சிரிப்பும்கூட
கோபமூட்ட கழிவிரக்கமில்லா
கல்லாய் சமைந்திருந்தோம்
ஆடை மூடியிருந்தது தவிர
அடையாளம் அனைத்தும்
தொலைத்தோம்

திடீரென நிறுத்தப்பட்டோம்
எல்லாம் முடிந்தது
திரும்பச் செல்லலாமென
ஆள்வோரிடமிருந்து அறிவித்தல் வந்ததும்

இனியொரு பயமில்லை
தொந்தரவு துளியுமில்லை
நாமெலாம் ஓர் தாய் மக்களென
ஆளப்படுவோரின் வீராய்ப்புரைகள்
காற்றாலையில் கலந்துலாவின

தந்தையை, தமையனை
காதலை, கனவுகளை
அம்மாவின் மடிதனை
அழகிய பல எதிர்கால இலக்குகளை
எல்லாம் தொலைத்தோம்

இது வேற்றுக் கிரகம்
கல்லறைகளின் மீதேறி
கையுயர்த்தும் வெற்றிக் கோசங்களும்
விஷ‌த்தை விழுங்கி
அமிர்தம் கொப்பளிக்கும்
பாசாங்கு உறுதிகளும்….

வெறுப்பு
வேதனை
அச்சம்…
ஆயினும் ஓடவில்லை நாங்கள்
சோர்ந்து வலுவிழந்த எங்கள்
கால் விலங்குகளையும்
ஆற்றுக்கு அக்கரையில் தொலைத்துவிட்டோம்….!

Pin It