ஈழத்தில் நான்காம் கட்டப் போர் உச்சத்தில் இருந்தபோது, போருக்கு எதிராக தனித்தனியாக முழங்கிக் கொண்டிருந்த அரசியல் கட்சிகளை ஒரு குடைக்குள் கொண்டு வந்ததில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கு முக்கியமானது. அன்றிலிருந்து அண்மையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான விவாதம் வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக‌ வலுவுடன் குரல் கொடுத்து வருகிறது. இனப்படுகொலை தொடர்பான புகைப்படங்கள் அடங்கிய 'என்ன செய்யலாம் இதற்காக?' புத்தகத்தையும், சேனல் 4 காணொளியையும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கி, இந்த விவாததத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலு சேர்த்திருக்கிறது. கட்சியின் வழிகாட்டுதலின் பேரில், மக்களவை உறுப்பினர் பொ.லிங்கம் இந்தப் பணியை முன்நின்று செய்தார். டெல்லியில் இருந்த லிங்கம் அவர்களுடன் கைபேசி வழியாக நடத்திய செவ்வியிலிருந்து...

கீற்று: உங்களைப் பற்றியும் உங்களுடைய பின்னணியைப் பற்றியும் சொல்லுங்களேன்.

lingam_400நான் விருதுநகர் மாவட்டம் இராஜ‌பாளையம் தாலுகாவின் கம்யூனிஸ்டு கட்சிச் செயலாளராக, முழுநேரப் பணியாளராகப் பணியாற்றி வருகிறேன். என் மனைவி சிறு பட்டுக்கூடம் ஒன்றை வைத்துப் பார்த்துக்கொள்கிறார்கள். என்னுடைய மகன் டாக்டர் அம்பேத்கார் சட்டப்பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு படித்து வருகிறார்; மகள் ஊடகவியல் பட்டப்படிப்பு படித்து வருகிறார். எனக்கு நான்கு அண்ணன்மார், இரண்டு தம்பிமார், இரண்டு அக்கா உள்ளனர். பெற்றோர் காலமாகிவிட்டார்கள். நான் இராஜ‌பாளையத்தில் காமராசர் நகர்ப் பகுதியில் வாழ்ந்து வந்தேன். அப்போது தான் கட்சி, என்னை மக்களவைத் தேர்தல் வேட்பாளராக அறிவித்தது. அப்போது வெளியிட்ட அறிக்கையில் ‘நான் ஒரு பெட்டிக்கடை வைத்து வாழ்க்கை நடத்தி வருவதாக’க் கட்சி பெருமையாக அறிமுகப்படுத்தியது. அதன்பின் தென்காசி தனித் தொகுதியில் பாராளுமன்ற வேட்பாளராக நிறுத்தப்பட்டு காங்கிரசுக் கட்சியின் செல்லப்பாண்டியை எதிர்த்து வெற்றி பெற்றேன்.

கீற்று: கம்யூனிசம் மீது உங்களுக்கு எப்படி ஆர்வம் வந்தது?

என்னுடைய குடும்பப் பின்னணி இந்த ஆர்வத்திற்கு ஒரு காரணமாக இருந்தது. எங்கள் அப்பா கம்யூனிசக் கட்சியில் உறுப்பினராக இருந்தார். கிட்டத்தட்ட என்னுடைய வாழ்நாள் முழுவதுமே கம்யூனிசக் கட்சியுடன் தொடர்பு இருக்கிறது என்று சொல்லலாம். என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே கட்சியில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். 2009ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் தென்மாவட்டங்களில் உள்ள கிட்டத்தட்ட பத்து பாராளுமன்றத் தொகுதிகளில் நான் சார்ந்திருந்த தென்காசி தொகுதியில் மட்டும்தான் எங்களுடைய அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. அதனால் அந்த‌ வெற்றி பெரிதாகப் பேசப்பட்டது.

கீற்று: ஈழச் சிக்கலில் இடதுசாரிக் கட்சிகள் முன்பு கொண்டிருந்த நிலைப்பாட்டிற்கும் இப்போது கொண்டிருக்கும் நிலைப்பாட்டிற்கும் வேறுபாடுகள் இருக்கின்றன; அதில் ஒரு படிநிலை முன்னேற்றம் காணப்படுவதாகத் தெரிகிறது. குறிப்பாக 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு ஈழச் சிக்கலில் ஓர் அரசியல் ஒருங்கிணைப்பை சி.பி.ஐ.தான் கொண்டு வந்தது என்று சொல்லலாம். அந்த மாற்றம் குறித்து...

இலங்கையில் நடந்து வரும் போராட்டத்தை ‘இலங்கையின் உள்நாட்டுப் போராட்டமாக’ முதலில் கம்யூனிஸ்டு கட்சியில் பார்த்தோம். வர்க்கப் போராட்டங்களை முன்னெடுக்கும் கட்சியான கம்யூனிஸ்டு கட்சி அப்போராட்டத்திற்கு ஒரு தார்மீக ஆதரவை மட்டும் கொடுத்துக் கொண்டிருந்தது. 2008இல் அங்கு நடந்து வந்த நிகழ்வுகளைப் பார்த்தபோது, அங்கு இனப்படுகொலை நடந்து கொண்டிருக்கிறது என்பதையும் இது மிகப்பெரிய மனித உரிமை மீறல் என்பதையும் இதை உள்நாட்டுச் சிக்கலாக மட்டும் பார்த்து விட முடியாது; அங்கு நடைபெற்று வரும் கொடுமைகள் மறைக்கப்படுகின்றன; அங்கு வாழ்ந்து வரும் தமிழினம் உரிமைகள் பறிக்கப்பட்டு இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்பட்டு வருகின்றனர்; இதற்கு இராஜபக்சே தலைமையிலான சிங்கள அரசும் சிங்கள இராணுவமும் தாம் காரணம் என்பதையும் சி.பி.ஐ. உணர்ந்து தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்தது. 2008 ஆம் ஆண்டு காந்தி பிறந்த நாளான அக்டோபர் இரண்டாம் நாள் நாடு முழுவதும் அதற்கான போராட்டத்தைப் பறை சாற்றினோம்.  தமிழ்த் தேசியவாதிகளின் பிரச்சினை என எண்ணி வந்த பொதுமக்களும் ஒரு கட்சி போராட்டத்தை முன்னெடுக்கிறது; அதிலும் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்கும் கட்சி போராட்டத்தில் இறங்குகிறது என்பதைப் பார்த்த பின் அதில் உள்ள நியாயங்களைப் பார்த்தார்கள். அதன் பின் அடுக்கடுக்கான போராட்டங்களை இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்துடன் இணைந்து சி.பி.ஐ நடத்தி வருகிறது.

தமிழகக் கட்சிகள் தமிழ்நாட்டில் போராட்டம் நடத்தினார்கள்; தமிழகத்தில் இருந்து தில்லிக்கு அழைத்து வந்து போராட்டம் நடத்தினார்கள். சி.பி.ஐ. கட்சிதான் ‘இலங்கையில் நடந்து வருவது மிகப்பெரிய மனித உரிமை மீறல்’ என்பதை வெளிப்படுத்தி எல்லா மாநிலங்களிலும் தீர்மானம் நிறைவேற்றிப் போராட்டம் நடத்தினோம். தில்லியில் நடந்த போராட்டத்தில் தமிழகத்தில் இருந்து நான் கலந்து கொண்டேன். அப்போராட்டத்தில் எங்களுடைய பொதுச் செயலாளர் ஏ.பி. பரதன் கலந்து கொண்டு, ‘இலங்கையில் நடப்பது அப்பட்டமான இனப்படுகொலை; மனித உரிமை மீறல்; போர்க்குற்றம் புரிந்துள்ள இலங்கை அதிபரைக் குற்றவாளிக் கூண்டில் உலக நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டிக்க வேண்டும்; இலங்கையில் வாழும் தமிழ்மக்களுக்குச் சம உரிமை காண, அரசியல் தீர்வு காண வேண்டும்’ என்று உலகத்திற்கு அறைகூவல் விடுத்தார். மேலும் இச்சிக்கலைப் பாராளுமன்றத்திற்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் எடுத்துச் செல்வதுடன் கம்யூனிஸ்டு கட்சி சார்ந்திருக்கின்ற உலக நாடுகளின் பார்வைக்கும் எடுத்துச் சென்று உலக அளவில் இலங்கை அரசின் மீது ஒரு நெருக்கடியை ஏற்படுத்த முயல்வோம் என்றும் அறிவித்தார். இப்படியாக 2008ஆம் ஆண்டிற்குப் பிறகு தொடர்ச்சியாகப் பல போராட்டங்களை சி.பி.ஐ. நடத்தி வருகிறது.

சி.பி.ஐ. யைப் பொறுத்த அளவில் இலங்கைத் தமிழர்களுக்கு முழு சம உரிமை கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். பாதுகாப்பில்லாமல் இருக்கிற தமிழர்கள், தங்களுடைய குடியிருப்புகளில் மீண்டும் குடியமர்த்தப்பட வேண்டும்; அவர்கள் இழந்த சொத்துகள் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும்; அந்நாட்டில் இரண்டு இனங்கள் இருக்கிறார்கள்; இரண்டு இனங்களும் சமம் என்னும் பார்வையுடன் அரசியல் சட்டம் இயற்றப்பட்டு அவர்களுக்குத் தீர்வு காணப்பட வேண்டும்’ என்பதற்காக சி.பி.ஐ. தொடர்ந்து போராடி வருகிறது. அப்போராட்டங்களில் வெற்றி கிடைக்கும் என்னும் நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

கீற்று: இங்கு (தமிழகத்தில்) இருக்கும் நீங்கள், தோழர் தா.பாண்டியன், தோழர் சி.மகேந்திரன் போன்றோர் ஈழச்சிக்கலைப் புரிந்து கொள்வது எளிது. அதே வேளையில் ‘விடுதலைப்புலிகள் என்போர் தீவிரவாதிகள்; இராஜீவ் கொலையில் தொடர்புடையவர்கள்’ என்னும் கருத்து வட மாநிலங்களில் நிலவுகையில், கட்சியின் அகில இந்தியக் குழு இதற்கு எப்படி இசைந்தது?

இராஜீவ் காந்தியின் கொலைக்குப் பிறகு நாட்டின் பல பகுதிகளில் உள்ள மக்களுக்கு விடுதலைப் புலிகள் பற்றி ஒரு தவறான எண்ணம் ஏற்பட்டிருக்கிறது; புலிகளை ஏற்றுக்கொள்ளும் மனநிலை அவர்களுக்கு இல்லை. இப்படி புலிகள் மீதிருந்த வெறுப்பின் காரணமாக இலங்கையில் நடந்து வரும் கொடுமையான நிகழ்வுகளையும் அவர்கள் கவனிக்கவேயில்லை. எங்களைப் பொருத்தவரை, எங்களுடைய தமிழ்மாநிலக் குழு, கட்சியின் தேசியக் குழு கூடும்பொழுது, நிருவாகக் குழு கூடும் பொழுது, மாநாடுகள் நடக்கும் பொழுது என எல்லா நிகழ்வுகளிலும் இலங்கையில் நடப்பதைத் தெரிவித்துக் கொண்டே இருந்தோம். இதன் தொடர்ச்சியாகத் தான் ஐதராபாத்து தேசிய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அங்கு சமத்துவத்திற்கான போராட்டத்தை, மனித உரிமைக்கான போராட்டத்தை, விடுதலைப்புலிகளின் போராட்டமாக மட்டும் கருதவில்லை. மற்ற தேசிய கட்சிகள் இந்தப் பிரச்சினையில் கவனத்தைக் காட்டவில்லை; கவனம் எடுப்பதற்கான முயற்சிகளையும் யாரும் மேற்கொள்ளவில்லை. இப்படி அவர்கள் தவறாது இருந்திருந்தால், ஒரு சின்ன நாட்டில் கிட்டத்தட்ட ஒரு இலட்சத்து நாற்பத்தாறாயிரம் பேர் கொல்லப்பட்டிருப்பது நடந்திருக்காது. குறிப்பாகக் கச்சத்தீவிற்கு மீன் பிடிக்கச் செல்லும் இந்திய மீனவர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். இதற்கெல்லாம் காரணம், ‘இப்பாதிப்புகளுக்கு என்ன காரணம்?’ என்பதை இங்குள்ள அரசியல் கட்சிகள் ஆய்ந்து பார்க்காதது தான் ஆகும்.

உலகத்தில் நடக்கும் நிகழ்வுகளைக் கண்டு அதில் தங்களுடைய கருத்தைத் தெரிவிப்பது அரசியல் கட்சித் தலைவர்களின் கடமையாகும். இலங்கைத் தமிழர் சிக்கல் பற்றி அண்மையில் இந்தியப் பாராளுமன்றத்தில் விதி எண்.193இன் கீழ் விவாதித்தபோது பெரும்பாலும் எல்லாக் கட்சிகளும் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துகளைப் பதிந்தபோது, ‘இலங்கை அரசு இனப்படுகொலை செய்திருக்கிறது’ என்று கண்டித்ததுடன் ‘இலங்கைத் தமிழர்களுக்குச் சம உரிமை கிடைக்க வேண்டும்’ என்பதை எல்லோரும் வற்புறுத்தியிருக்கிறார்கள்.

கீற்று: ஈழத் தமிழர் சிக்கல் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டதற்கு சி.பி.ஐ.யின் பங்கு முக்கியமானது. அதிலும் உங்களுடைய பங்கு இதில் குறிப்பிடத்தக்கது. ‘என்ன செய்யலாம் இதற்காக’ புத்தகத்தை நாடாளுமன்றம் முழுவதும் கொடுத்திருக்கிறீர்கள். அந்தப் பணி குறித்துச் சொல்லுங்களேன்.

கடந்த 2009ஆம் ஆண்டு ஏப்ரல், மே ஆகிய இரண்டு மாதங்களில் மட்டும் ‘விடுதலைப்புலிகளை ஒழிக்கிறோம்’ என்னும் பெயரில் அங்குள்ள தமிழ்மக்களை, கிட்டத்தட்ட இரண்டே மாதங்களில் நாற்பத்தைந்தாயிரம் பேரைப் படுகொலை செய்த மோசமான நிகழ்வு, இரண்டாம் உலகப் போருக்குப் பின் உலகில் எங்கும் நடக்கவில்லை.

இது தொடர்பாக இங்கிலாந்தின் ‘சானல் 4’ என்னும் தொலைக்காட்சி ‘கொலைக்களம்’ என்னும் காணொளியை வெளியிட்டபோது அது உலகின் கவனத்தை ஈர்த்தது. அக்காணொளியைப் பார்க்காதவர்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தபோது, இங்கிலாந்து நாடாளுமன்றத்திலேயே அக்காணொளி காட்டப்பட்டது என்னும் செய்தி கிடைத்தது.

அப்போது தான் ‘என்ன செய்யலாம் இதற்காக’ புத்தகத்தை மதுரையைச் சேர்ந்த தோழர் பிரபாகரன் உருவாக்கியிருக்கிறார் என்னும் செய்தி சி.பி.ஐ.இன் மாநிலத் துணைச் செயலாளர் சி.மகேந்திரன் மூலமாகத் தெரிந்தது. அப்படியானால், இந்தப் புத்தகம், சானல் நான்கின் காணொளி ஆகியவற்றுடன் இலங்கைத் தமிழர் சிக்கல் பற்றி உலகத் தலைவர்களின் கருத்துகளையும் சேர்த்துக் கொடுத்தால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரின் கவனத்தை ஈர்க்கலாம் என்று தோன்றியது. ஒரு புத்தகத்தின் விலை ஐந்நூறு உரூபா ஆகும். அப்படியானால் இதை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் கொடுக்க வேண்டும்; கட்சித்தலைவர்கள் அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்று நினைத்தபோது இயக்குநர் மணிவண்ணன் அப்பொறுப்பை ஏற்று தோழர் சி.மகேந்திரன் மூலம் தில்லிக்கு அனுப்பி வைத்தார்.

அப்புத்தகம், சானல் நான்கின் காணொளி, உலகத்தலைவர்களின் கருத்துகள் ஆகியவற்றை இணைத்துக் கொடுக்க நான் முயன்றபோது, தில்லியில் இருக்கும் சீனிவாசன், குணசேகரன் ஆகிய இளைஞர்கள் இருவரும் உதவி புரிந்தார்கள். முதல் கட்டமாக, 193ஆம் விதியின் கீழ் விவாதத்தில் கலந்து கொள்ள அறிவிக்கை கொடுத்திருந்த பா.ஜ.க.வின் அலுவாலியா, சத்வர் சிங், முலாயம் சிங் கட்சியின் சைலேந்திர குமார், மாயாவதி கட்சியின் தாராசிங், சரத் யாதவ், மார்க்சிஸ்டு கட்சியின் பாசுதேவாச்சாரியா, இலாலு கட்சியின் இரகுவன் பிரசாத் சிங், சிறிய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஆகியோருக்குக் கொடுத்தோம். 1956ஆம் ஆண்டு முதல் தேதிவாரியாக இலங்கையில் நடந்து வரும் இனப்படுகொலைகள் அப்புத்தகத்தில் பட்டியலிடப்பட்டிருந்தன.

1983 ஆம் ஆண்டுக்குப் பின் நடக்கும் போராட்டம் அன்று இது; 1956 முதலே நடந்து வரும் சம உரிமைக்கான போராட்டம்; அது 1983இல் வன்முறைப் போராட்டமாக மாறிய பின் தான் விடுதலைப்புலிகள் தலையீடு வருகிறது என்பதை எல்லாம் பட்டியலில் பார்த்தபோது, ‘நடந்திருப்பது இனப்படுகொலை தான்’ என்பதை உறுப்பினர்கள் உணர்ந்து கொண்டார்கள். அப்படி உணர்ந்து தான் விவாதத்தில் கலந்து கொண்ட எல்லா உறுப்பினர்களும் இந்திய அரசுக்குப் பல கேள்விகளை முன்வைத்தார்கள். அவர்களுடைய கேள்விகளுக்கு இந்திய அரசு நேரடியாக விடை சொல்லாமல், ‘இந்தியாவின் நட்பு நாடு இலங்கை; அதனுடைய இறையாண்மையைக் காக்க வேண்டியது கட்டாயம்’ என்று குழப்பியது. அப்படிக் குழப்பியபோது தான், ‘இலங்கை அரசால் இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்டது மட்டுமன்றித் தமிழக மீனவர்களும் இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்’ என்னும் குறிப்பைப் பல உறுப்பினர்கள் எடுத்துச் சொன்னார்கள்.

அதற்கு, ‘கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்தாகி விட்டது; அது இலங்கையின் ஒரு பகுதி’ என்று மத்திய அரசு பதில் சொன்னது. அரசின் கருத்துக்கு மிகக் கடுமையான எதிர்ப்பு உறுப்பினர்களிடம் இருந்து வந்தது. அப்போது பேசிய முலாயம் சிங் யாதவ், ‘இலங்கையில் எப்போது சிக்கல் தீரும்? அதற்கு இந்திய அரசு கொடுக்கும் உறுதிமொழி என்ன? தமிழ்மக்கள் இழந்திருக்கிற சொத்துகள் அவர்களுக்குத் திரும்பக் கிடைக்குமா?’ என்னும் கேள்விகளை எழுப்பினார். அக்கேள்விகளுக்கும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மழுப்பலையேதான் விடையாகச் சொன்னார்.

சி.பி.ஐ.யின் பாராளுமன்றக் குழுத் தலைவர் குப்தா பேசும்போது ‘இலங்கையில் நடந்திருப்பது அப்பட்டமான மனித உரிமை மீறல்; இதைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’ என்று கேட்டார்; அதற்கு அமைச்சர் கைவிரித்தபோதுதான், எல்லாக் கட்சிகளும் சேர்ந்து ‘அமைச்சருடைய விடை நிறைவைத் தரவில்லை; கண்டிப்பாகக் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்; இலங்கைத் தமிழர் சிக்கலுக்குரிய தீர்வை இந்தியா முன்னெடுத்துச் செல்ல வேண்டும்’ என்று கூறி வெளிநடப்பு செய்யும் சூழல் உருவானது.

‘என்ன செய்யலாம் இதற்காக’ என்னும் புத்தகம் இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையைத் தேதிவாரியாகப் படச் சான்றுகளுடன் விளக்கியமைதான் உறுப்பினர்களிடம் இலங்கைத் தமிழர் சிக்கலைக் கொண்டு செல்லப் பெரிய உதவி புரிந்திருக்கிறது என்று சொல்லலாம். பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்குச் சென்று கொடுப்பது என்பது கடினமான ஒன்றாகும். அவர்களைப் பார்க்கக் காலையில் செல்வதா, மாலையில் செல்வதா என்பதை எல்லாம் கவனித்துக் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும். எனவேதான் உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு வரும்பொழுதே அவர்களிடம் நேரில் சென்று நான் கொடுத்தேன்.

கீற்று: உங்களுடைய இந்தப் பணிக்குத் தமிழகத்தில் உள்ள பிற நாடாளுமன்ற உறுப்பினர்கள் உதவினார்களா? அவர்கள் இதை எப்படிப் பார்த்தார்கள்?

தமிழக உறுப்பினர்களுக்குக் கூட நான்தான் இப்புத்தகத்தைக் கொடுத்தேன். புத்தகங்களைக் கொண்டு சென்று குழு அமைத்துக் கொடுக்கும் சூழல் இல்லை. அதனால் நானே நேரடியாகக் கொடுக்கத் தொடங்கினேன்.

கீற்று: கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின் - தி.மு.க. எதிர்க்கட்சியானதற்குப் பின், - அக்கட்சியின் அணுகுமுறையில் மாற்றம் இருப்பது போலத் தெரிகிறது. நாடாளுமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர்களும் ஈழத்தமிழர் சிக்கலைப் பற்றி விரிவாகப் பேசினார்கள். இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

இந்தியாவில் இருக்கும் எல்லா அரசியல் கட்சிகளுமே இலங்கைத் தமிழர் சிக்கலைத் தவிர்க்க முடியாத ஒரு சிக்கலாகத் தான் பார்க்கின்றன. தி.மு.க.வைப் பொறுத்தவரை, அவர்கள் காங்கிரசுக் கூட்டணியில் இருக்கிறார்கள். பதினைந்தாவது நாடாளுமன்றத்தின் எட்டாவது கூட்டத்தொடரின் தொடக்கமான ஆகஸ்டு ஒன்றாம் நாள் நாடாளுமன்றத்திற்கு வந்திருந்த இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களை நானும் அ.தி.மு.க. உறுப்பினர்களும் ம.தி.மு.க.வின் கணேசமூர்த்தி, மார்க்சிஸ்டு கட்சியின் நடராசன் ஆகியோர் தாம் ‘இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் போர்க்குற்றத்திற்கு ஆளாக்கப்பட்டிருப்பவர்கள்; அவர்களை இந்திய நாடாளுமன்றம் வரவேற்கக்கூடாது’ என்று எதிர்த்தோம். அன்றைய நாளில் தி.மு.க. தமிழ்நாட்டில் போராட்டம் நடத்திக்கொண்டிருந்ததால், அவர்களில் ஒருவரும் அங்கு இல்லை. அவர்கள் அதில் பங்கெடுப்பது பற்றியும் கருத்து இல்லை. அதன் பின் 193ஆம் விதியின் கீழ் அவர்கள் பங்கேற்றார்கள். எனவே அவர்களுடைய நிலை என்ன என்பதைத் தி.மு.க. தான் சொல்ல வேண்டும். 2009இல் இனப்படுகொலை நடந்தபோது தமிழகத்தில் தி.மு.க. தான் ஆண்டது; மைய அரசின் கூட்டணியிலும் அவர்கள் இருந்து வருகிறார்கள். அதனால் அப்படுகொலைகளை எந்த அடிப்படையில் அப்போது தி.மு.க. அனுமதித்தது என்று எனக்குத் தெரியவில்லை. இப்போது அவர்கள் விவாதத்தில் பங்கேற்றிருப்பது என்பது வரவேற்கத்தக்கது தான்.

கீற்று: பா.ஜ.க. உறுப்பினர்கள் ஈழத் தமிழர் சிக்கல் பற்றிய விவாதத்தில் பேசியதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

பா.ஜ.க. இச்சிக்கலை எப்படி அணுகுகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் இலங்கை நாடாளுமன்றக்குழு இந்தியா வந்தபொழுது எதிர்க்கட்சித் தலைவர் சுஸ்மா ஸ்வராஜைப் பார்த்து, ‘நீங்கள் நேரடியாக இலங்கைக்கு வரவேண்டும்’ என்று சொன்ன உடனேயே, ‘நான் இலங்கை சென்று பார்த்து வந்து பேசுகிறேன்’ என்று அவர் ஒதுங்கிக்கொண்டார். ஆனால் விவாதத்தில் அவர்களுடைய முன்னணித் தலைவர் சப்ஜத்சிங் கலந்து கொண்டார். அவர் கலந்து கொண்டது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

கீற்று: இந்திய அரசின் வெளியுறவுக்கொள்கை என்பது ஈழச் சிக்கலானாலும் சரி, தெற்காசியாவின் பிற சிக்கல்களானாலும் சரி முதன்மையான ஒன்றாகும். அந்த வெளியுறவுக்கொள்கையில் மாற்றம் கொண்டுவருவதற்கு இந்த விவாதங்கள் பயனளிக்குமா?

வெளியுறவுக்கொள்கையில் மாற்றம் கொண்டு வருவது தான் சரியான நடவடிக்கையாக அமையும். நான்கூட என்னுடைய வாதத்தில் அதைத்தான் குறிப்பிட்டேன். அமெரிக்கா பாகிஸ்தானுக்கு இராணுவ உதவிகள் செய்து வருகிறது. அப்படிச் செய்வதை, ‘இந்தியாவும் பாகிஸ்தானும் பகை உணர்வு நாடுகள்; எனவே பாகிஸ்தான் தன்னைத் தான் தற்காத்துக் கொள்ள இராணுவ உதவி செய்வதாக’ அமெரிக்கா சொல்கிறது. இலங்கையைப் பொருத்தவரை அங்கு நடந்தது உள்நாட்டுப் போர். ஆனால் இலங்கை இன்னொரு நாட்டின் மீது படை எடுத்து வெற்றி பெற்றது போன்ற ஒரு கருத்தை அந்நாட்டு அதிபர் சொல்லியிருக்கிறார். தமிழ் மக்களை அந்நிய நாட்டைப் போலப் பார்த்துப் போர் நிகழ்த்தியிருக்கிறார்கள் என்பதற்கு அவருடைய கருத்தே மிகப்பெரிய எடுத்துக்காட்டாகும்.

‘போரில் பெற்ற வெற்றி மிகப்பெரிய வெற்றி; அதை இந்தியாவின் துணையுடன் தான் பெற்றிருக்கிறோம்’ என்று அவர் சொல்லும்போது, ‘இந்திய அரசு என்ன உதவி செய்தது?’ என்னும் கேள்வி வருகிறது.

இலங்கைக்குப் பக்கத்தில் அந்நாட்டிற்குப் பகை நாடுகள் இல்லை; அப்படியிருக்க, அந்நாட்டிற்கு இராணுவம் கொடுக்கப்பட்டால் – நாளை இந்தியாவிற்குள்ளும் இராணுவம் பயன்படுத்தப்பட மாட்டாது என்பதற்கு என்ன உறுதி இருக்கிறது?

இது போதாதென்று, நட்பு நாடெனக் கருதப்படும் இலங்கை, தமிழக மீனவர்களை இரக்கமே இல்லாமல் படுகொலை செய்கிறது. இதுவரை சரியான புள்ளிவிவரத்தின்படியே ஐந்நூற்று எழுபத்தெட்டுப் பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட இரண்டாயிரம் பேர் ஊனமாக்கப்பட்டிருக்கிறார்கள். பன்னிரண்டாயிரம் பேர் படுகாயமடைந்திருக்கிறார்கள். இருபத்தைந்தாயிரம் கோடிக்கு மேல் சொத்து நாசப்படுத்தப்பட்டிருக்கிறது. முந்நூறு பேர் இருபத்தாறு ஆண்டுகளாக, இலங்கைச் சிறையில் விசாரணையின்றி அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இவை போக, மீனவர்கள் பலரைக் காணவில்லை. இதைப் பற்றி எல்லாம் பொறுப்புடன் இந்திய அரசு, ‘ஏன் என்னுடைய குடிமகன் படுகொலை செய்யப்பட்டான்? இலங்கை அரசு ஏன் இப்படிச் செய்கிறது?’ என்னும் கேள்விகள் அமைய ஒரு கொலைக்குற்றம் கூட இலங்கை அரசு மீது இதுவரை பதியப்படவில்லை.

இம்மீனவர்கள் எல்லோரையும் ‘காணவில்லை’ என்னும் பட்டியலில் சேர்த்திருக்கிறார்கள். இப்படிச் செய்வதன் மூலம் இலங்கையை எப்படிக் கேள்வி கேட்க முடியும்? தமிழக மீனவர்களைக் கொன்ற இலங்கை அரசு மீது கொலைக்குற்றம் சாற்றப்பட்டிருக்க வேண்டும். இப்படிச் செய்து, நட்பு நாடாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி – ‘என்னுடைய குடிமகனை நீ எப்படிக் கொல்லலாம்?’ என்று இந்திய அரசு கேட்டிருக்க வேண்டும். அதனால் இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கை என்பது மிகவும் வருந்தும் அளவில் இருக்கிறது. இது எப்படி இவ்வாறு நடக்கிறது என்பதும் ஒரு சின்ன நாட்டை நம்மால் கண்டிக்க முடியவில்லை என்பதும் வியப்பாக இருக்கிறது.

உலகில் எல்லாப் பகுதிகளிலும் எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்கள் சிறைப்படுத்தப்பட்டு, விசாரிக்கப்பட்டு, மனித நேய அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது தான் இன்று உலகில் இருக்கும் நடைமுறையாகும். ஆனால் அப்படிச் செய்யாமல் எந்தவித விசாரணையும் இல்லாமல் இலங்கை கொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அதைக் கண்டிக்காமல் ‘நட்பு நாடு’ என்று இந்தியா பார்த்தால், ‘இலங்கையிடம் இந்தியா ஏமாந்து கொண்டிருக்கிறது’ என்று தான் புரிந்து கொள்ள முடியும்.

இன்று இலங்கை, இந்தியாவுடன் மட்டுமல்லாது பாகிஸ்தானுடனும் சீனாவுடனும் தொடர்பு கொண்டிருக்கிறது. இதை எல்லாம் பார்க்கும்போது இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை என்பது உலக அமைதிக்கான இந்தியாவின் பங்களிப்பு என்பதாகவோ, ஏற்கெனவே பல விடுதலை தேசங்களை ஆதரித்தது போலவோ இல்லை. இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை தோல்வி என்று தான் நான் இதைச் சொல்வேன்.

கீற்று: உங்கள் கட்சியின் அடுத்த கட்டப் போராட்டம் எப்படி இருக்கும்?

இலங்கையில் உள்ள தமிழர்களுக்குச் சம உரிமை கிடைப்பதைத் தொடர்ந்து நாங்கள் வற்புறுத்துவோம். ஏற்கெனவே நடந்த படுகொலைகளுக்கு நீதி விசாரணை, இழந்த சொத்துகளை மீண்டும் கிடைக்கச் செய்தல், முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழர்களின் மீள்குடியேற்றம் ஆகியவற்றுக்காகப் போராடுவோம். இப்போது கூட, இலங்கை அரசு அவசர நிலைப் பிரகடனைத்தைத் திரும்பப் பெற்றிருக்கிறது; அதே வேளையில் இலங்கை அரசு சிறைப்படுத்தி மறைத்து வைத்திருக்கக் கூடிய தமிழர்களை மேலும் அதே இடத்தில் வைப்பதற்குச் சட்டத்தில் இடம் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

கீற்று: இந்திய நாடாளுமன்றத்தில் இலங்கை அரசு மீது கண்டனத் தீர்மானம் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா?

கண்டனத் தீர்மானம் கொண்டு வரத் தொடர்ந்து நாங்கள் வலியுறுத்துவோம்.

கேள்விகள்: கீற்று நந்தன்
தட்டச்சு: முத்துக்குட்டி

Pin It