தமிழகத்தின் முல்லைப் பெரியாறு நீர் உரிமையை மறுக்கும் கேரள அரசைக் கண்டித்து, தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் அனைத்துப் பாதைகளிலும் முற்றுகைப் போராட்டம் மே 28 ஆம் தேதி எழுச்சியுடன் நடைபெற்றது. தமிழகம் முழுதும் 50000 பேர் கைது செய்யப்பட்டனர். 

1886 இல் சென்னை ராஜதானிக்கும் திருவாங்கூர் சமஸ்தானத்திற்கும் இடையே ஏற்பட்ட 999 ஆண்டு களுக்கான ஒப்பந்தப்படி, முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கிப் பயன் படுத்தும் உரிமை தமிழகத்திற்கு உண்டு. 

1976 ஆம் ஆண்டு கேரள அரசு 780 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க இடுக்கி அணையைக் கட்டியது.152 அடி தண்ணீர் முல்லைப் பெரியாறு அணையில் தேக்குவதன் மூலம் இடுக்கி அணைக்குப் போதுமான தண்ணீர் இல்லாததால் அந்தத் திட்டம் தோல்வியுற்றது. எனவே முல்லைப் பெரியாறு அணை பலகீனமாகிவிட்டது என்று கேரள அரசு பொய்ப் பிரச்சாரம் செய்து மக்களைப் பீதி அடைய வைத்தது. 

எனவே, 25.11.1979 இல் அன்றைய தமிழக முதல்வருக்கும், கேரள முதல்வருக்கும் மத்திய நீர்வள ஆணையம் முன் ஏற்பட்ட ஒப்பந்தப்படி 152 அடி நீர் மட்ட உயரத்தை தற்காலிகமாக 136 அடியாகக் குறைத்துக் கொள்வது எனவும்,  மூன்று கட்ட மராமத்துப் பணிகள் முடிவுற்றதுடன் 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும் ஒப்பந்தம் ஏற்பட்டது. ஒப்பந்தம் ஏற்பட்டு மூன்று கட்டப் பணிகளும் ஏறத்தாழ 25 கோடி தமிழக அரசு செலவில் முடிக்கப்பட்டு முப்பது ஆண்டுகள் முடிந்தும் கேரள அரசு ஒப்பந்தப்படி செயல்பட மறுக்கிறது. 

எனவே, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. உச்சநீதிமன்றம் நிபுணர் குழுவை அமைத்து, அந்தக் குழுவின் பரிந்துரையில் அணை பலமாக இருக்கிறது. 142 அடி தண்ணீர் தேக்கலாம் என்று 27.2.2006 அன்று தீர்ப்பளித்தது. இதை ஏற்க மறுத்த கேரள அரசு உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக ஒரு சட்டம் கொண்டு வந்து இந்திய இறையாண்மைக்கு வேட்டு வைக்கும் வேலையில்  ஈடுபடுவதுடன் முல்லைப் பெரியாறு அணையை உடைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு, கேரள மக்கள் மத்தி யில் அணை உடைவது போலவும், அதனால் 4 இலட்சம் மக்கள் வெள்ளத்தில் அடித்துச் சென்று கடலில் மிதப்பது போன்றும் கிராபிக்ஸ் காட்சிகள் மூலம் கேரளா முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறது. 

அது மட்டுமின்றி, திருப்பூர் மாவட்டம், உடுமலைப் பேட்டையில் அமைந்துள்ள அமராவதி அணையின் முக்கிய நீர் ஆதாரமான பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டி மின்சாரம் தயாரிக்க கேரள அரசு திட்டம் தீட்டி செயல்படுத்தத் துவங்கியுள்ளது. இதனால் அமராவதி அணை பாதிக்கப்பட்டு 80 ஆயிரம் ஏக்கர் பாசனப் பகுதி பாலைவனமாக மாறவும், 49 குடிநீர்த் திட்டங்கள் பாதிப்பு அடையும் ஆபத்துகள் எழுந்துள்ளன. 

மேலும், நெல்லைச் சீமையில் செண்பகவல்லி அணையின் தடுப்புச் சுவரைப் பழுதுபார்க்கக் கேரளம் அனுமதிக்காததால் 30000 ஏக்கர் பாசனம் பாழாகிறது. குமரி மாவட்டத்தில் நெய்யாற்றங்கரை இடது கால்வாய் தண்ணீரைத் தடுத்துவிட்டதால் 40 ஆயிரம் ஏக்கர் பாசனத்தை இழந்துவிட்டோம். 

எனவேதான், “உங்கள் ஊர் வழியாகப் போகிற தண்ணீரை நாங்கள் தடுப்போம், கட்டிய அணையை உடைப்போம் என்றால், எங்கள் ஊர் வழியாகப் போகிற சாலைகளை நாங்கள் மறிக்கிறோம்” என்ற முழக்கத்தோடு, இந்தப் போராட்டம் நடைபெற்றது. 

கோவை வட்டத்திலுள்ள கந்தே கவுண்டர் சாவடி, வேலந்தாவளம், மாங்கரை (ஆனைகட்டி), பொள்ளாச்சி வட்டத்திலுள்ள கோபாலபுரம், வளந்தாயமரம், நடுப்புணி, உடுமலை வட்டத்திலுள்ள ‘916 சோதனைச் சாவடி’ ஆகிய பகுதிகளில் இந்த முற்றுகைப் போராட்டம் எழுச்சியுடன் நடந்தது. 

மாங்கரையில் (ஆணைகட்டி) நடந்த முற்றுகைப் போராட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர்கள் கோவை இராமகிருட்டிணன், விடுதலை இராசேந்திரன் மற்றும் ஈரோடு, திருப்பூர், கோவை பகுதி கழகத் தோழர்களும், ம.தி.மு.க.வினரும் பெருமளவில் பங்கேற்றனர். எட்டு மணியிலிருந்தே கருப்புச் சட்டை, கழகக் கொடிகளுடன் கழகத் தோழர்கள் கோவை தலைமை அலு வலகத்தில் குவியத் தொடங்கினர். அங்கிருந்து தனி வாகனங்களில் மாங்கரை நோக்கிப் புறப்பட்டனர். கேரளாவை நோக்கி பேருந்துகள், வாகனங்கள் செல்லும் சாலையை முற்றுகையிட்டனர். உரிமை களை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். 

“வஞ்சகம் செய்யுது கேரள அரசு; வேடிக்கைப் பார்க்குது மத்திய அரசு; கொதித்து எழுங்கள் தமிழர்களே!” “போராட்டம்... இது போராட்டம்; தமிழகம் காக்கும் போராட்டம்; தண்ணீருக்கான போராட்டம்”; “நாங்கள் மறிப்போம்... நாங்கள் மறிப்போம்; நதிகளில் தண்ணீரை நீங்கள் மறித்தால் சாலைகளில் பொருள்களை நாங்கள் மறிப்போம்.” “முல்லை பெரியாறு - பாம்பாறு, செண்பகவல்லி - நெய்யாறு, தண்ணீர் உரிமை காப்பதற்கே எழுந்து நிற்குது தமிழர் சேனை; கேரள அரசே எச்சரிக்கை!” என்பது போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 

பின்னர், கழகத் தலைவர், கழகப் பொதுச் செயலாளர்கள் தலைமையில் தனித்தனி அணியாக தோழர்கள் கைதானார்கள். ம.தி.மு.க. தொழிற்சங்க செயலாளர் தியாகராசன், பவானி நதி நீர் காப்புக் குழுத் தலைவர் டி.டி.அரங்கசாமி மற்றும் ம.தி.மு.க. பொறுப்பாளர்கள் பழனிச்சாமி, தனபால், ஆனந்தன் ஆகியோர் தலைமையில் ம.தி.மு.க.வினர் கைதானார்கள். 500 தோழர்கள் கைது செய்யப்பட்டு, திருமண மண்டபம் ஒன்றில் வைக்கப்பட்டனர். திருமண மண்டபத்தில் நடந்த கலந்துரையாடலில் கழகத் தலைவர், கழகப் பொதுச்செயலாளர்கள் மற்றும் ம.தி.மு.க. தோழர்கள் போராட்டத்தின் நோக் கங்களை விளக்கி உரையாற்றினர். ம.தி.மு.க. மூத்த தோழர் டி.டி. அரங்கசாமி, முல்லை பெரியாறில் கேரளா இழைக்கும் துரோகங்களை விளக்கினார். ஒரு பெண் குழந்தைக்கு கழகத்தலைவர் தமிழினி என்று பெயர் சூட்டினார். 

மாலை 6 மணியளவில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். ம.தி.மு.க. சார்பில் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. இந்தப் போராட் டத்தில் அன்னூர் பகுதியிலிருந்து பெரியார் நற்பணி மன்றத்தைச் சார்ந்த தோழர்களும் திருப்பூர், ஈரோடு, கோபி கழகத் தோழர்களும் தனி வாகனங்களில் வந்து கலந்து கொண்டனர். ஈரோடு மாவட்ட செயலாளா கோபி. இளங்கோ, மாவட்டத் தலைவர் நாத்திக ஜோதி, ஈரோடு கழகத் தோழர்கள் குமரகுரு, ரத்தின சாமி, கோவை ஆறுச்சாமி, கோவை கழகப் பொறுப் பாளர்கள் ராசு குமார், கோபால், சாஜித், சூலூர் பன்னீர்செல்வம், கதிரவன், கலங்கல் ஜோசப், திருப்பூர் மாவட்டத் தலைவர் துரைசாமி, நகர செயலாளர் முகில்ராசு, ஒன்றிய செயலாளர் அகிலன், மேட்டுப்பாளையம் சந்திரசேகர், பவானி பழனிச் சாமி, காவேரிப்பட்டினம் குமார், சென்னை தோழர்கள் சுகுமார், ஜான், நாத்திகன், தஞ்சைத் தமிழன் உள்பட 300-க்கும் மேற்பட்ட கழகத்தினர் போராட்டத்தில் பங்கேற்றனர். கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த கழகத் தலைவர், பொதுச் செயலாளர்களுடன், வைகோ தொடர்பு கொண்டு பேசினார். 

ம.தி.மு.க. அழைப்பு விடுத்த இந்த போராட்டத்தில், பெரியார் திராவிடர் கழகம், தமிழர் தேசிய இயக்கம், தமிழ் தேசியக் கட்சி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, இந்து மக்கள் கட்சி, தமிழ்நாடுகள் இயக்கம், தமிழ்நாடு தேசிய விடுதலை இயக்கம், மார்க்சிய - பெரியாரிய பொதுவுடைமை கட்சி, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு முஸ்லீம் லீக் ஆகிய அமைப்புகளும் பங்கு கொண்டு, ஒவ்வொரு அமைப்பினரும் ஒரு எல்லைப் பகுதியில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடு மலை, பொள்ளாச்சி, கழகத் தோழர்கள் வளந்தாய மரம் பகுதியில் தோழர் தியாகு தலைமையில் நடந்த முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்றனர். கந்தே கவுண்டர் சாவடி பகுதியில் நடந்த முற்றுகைப் போராட்டத்துக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமை தாங்கினார். நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர் வைகோ தலைமையில் கைதா னார்கள். கேரளத்துக்கு வாகனங்கள் போக்குவரத்து முற்றாக தடை செய்யப்பட்டது. தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், தேனி மாவட்டம் ‘போய் கேம்ப்’ பகுதியில் நடந்த முற்றுகைப் போராட்டத்துக்கு தலைமை தாங்கினார். கொளுத்தும் வெய்யிலில் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக நின்றதால் - ரத்த அழுத்தம் குறைந்து, பழ. நெடுமாறன் மயக்கமுற்றார். உடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தமிழகம் முழுதும் 50000க்கும் மேற்பட் டோர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

Pin It