சங்க இலக்கியம் பழந்தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு மரபுகளைப் பொதிந்து வைத்திருக்கும் அரிய கருவூலமாகத் திகழ்கிறது. பழந்தமிழரின் காதலையும் வீரத்தையும் எடுத்துரைக்கும் செவ்வியல் இலக்கியங்களாக ‘சங்க இலக்கியம்’ பெரிதும் பேசப்பட்டாலும், அதன் சமூகப் பண்பாட்டு அடிப் படைகள் அணுகுமுறைசார்ந்தும் தொடர்ச்சியாக ஆய்வுகள் நிகழ்ந்து வருகின்றன. பேராசிரியர் நா.வானமாமலை, கா.சிவத்தம்பி, க.கைலாசபதி, கா.சுப்பிரமணியம் ஆகியோர் அவ்வகையில் முன்னோடியான ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளனர். சங்க இலக்கியப் புறப்பாடல்களில் ‘மூவேந்தர்’ என்னும் புதிய அரச மரபினரின் எழுச்சி பேசப்பட்டாலும், புராதன இனக்குழுச் சமுதாயத்தின் பல்வேறு வாழ்வியல் கூறுகளும் சங்க இலக்கியத்தில் பதிவாகியுள்ளன. ‘பழைய இனக்குழுச் சமுதாயம் அழிந்து, புதிய நிலவுடைமைச் சமுதாயம் தோன்றுகிற மாற்றிடைக் காலத்தைச் சார்ந்தது, சங்க இலக்கியம்’ என்னும் பேராசிரியர் நா.வானமாமலையின் கருதுகோள் இன்று பல ஆய்வுகள் வழி தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு வருகின்றது.

கடையேழு வள்ளல்கள் பழைய பொதுவுடைமை சார்ந்த இனக்குழு வாழ்வின் பிரதிநிதிகளாகவும் மூவேந்தர்கள் புதிய நிலவுடைமைச் சமூகம் சார்ந்த அரசாட்சியின் பிரதிநிதிகளாகவும் திகழ்ந்தமையை, சங்கப் புறப்பாடல்கள் காட்டு கின்றன. மூவேந்தர்களால் கடையெழு வள்ளல்கள் பின்புலத்தில் இருவேறுபட்ட சமூக அமைப்பின் முரண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். கடையேழு வள்ளல்களின் பட்டியலில் (பாரி, ஓரி, பேகன், ஆய், காரி, அதியன், நள்ளி) இடம்பெறும் பாரி முல்லைக்குத் தேர் கொடுத்ததும் பேகன் மயிலுக்குப் போர்வை கொடுத்ததும் அரச மரபின் கொடைச் செயலாகவே பார்க்கப்பட்டு உள்ளன. அதே போன்று இனக்குழுத் தலைவனான நன்னன் மாங்கனிக்காகப் பெண்ணைக் கொன்றது நிலவுடைமை அதிகாரத்தின் செயலாகவே அறிஞர் களால் விமர்சிக்கப்பட்டுள்ளது. ஆயின் பாரி, பேகனின் கொடைச் செயலும் நன்னனின் கொலைச் செயலும் இனக்குழு வாழ்வின் ஓர் அம்சமாக இருந்த குலக் குறியியலோடு தொடர்புபடுத்திப் பார்க்கப்பட வேண்டியன. அம்முயற்சியை இக்கட்டுரை மேற்கொள்கிறது.

குலக்குறி விளக்கமும் கொள்கைகளும்

புராதன இனக்குழுச் சமுதாயத்தில் பின்பற்றப் பட்ட பல்வேறு வகையான சடங்கியற் சார்ந்த வழக்கங்களுள் குலக்குறியும் ஒன்றாகும். இனக்குழுச் சமுதாயத்தில் மனிதஇனக் குழுக்கள் ஒவ்வொன்றும் தம்மை ஏதேனும் ஒரு விலங்கு அல்லது தாவரத்துடன் தொடர்புபடுத்திக் கொண்டன. தொடர்புபடுத்திக் கொண்ட உயிரினத்தைத் தமது தொன்மவியல் மூதாதையராகக் காட்டி அதன் மீது சடங்கியற் சார்ந்த நம்பிக்கைகளும் வைத்திருந்தன. இவ்வாறு ஓர் இனக்குழு, மூதாதையர் உறவு வைத்துக்கொள்ளும் உயிரினமே ‘குலக்குறி’ (Totem) என வரையறுக்கப் படுகின்றது. எருமை, புலி, சிங்கம், பாம்பு, கங்காரு, மீன் பல்வேறு வகையான மரங்கள், செடிகொடிகள், புறா, கோழி, மயில் முதலான பறவைகள் இனக் குழு வாழ்வில் குலக்குறியாகக் கொண்டாடப்பட்டு உள்ளன. இக்குலக்குறி அந்த இனத்தினுடைய அடையாளச் சின்னமாகவும் அமைதல் உண்டு.

குலக்குறியாக அடையாளப்படுத்தப்பட்ட உயிரினங்கள், சடங்கியல் தன்மை பெற்று, புனிதப் படுத்தப்பட்டு வழிபாட்டுக்குரியதாகக் கருதப் பட்டன. மேலும் அந்த உயிரினத்தின் அழிவு அதனைக் குறியாகக் கொண்ட இனக்குழுவின் அழிவாகக் கருதப்பட்டது. இதன் காரணமாக அவ்வுயிரினங்கள் உணவாக உட்கொள்ளப்படுவது தடைசெய்யப்பட்டது; உணவு விலக்காக அமைந்தது. கங்காருவிலிருந்து வந்தவர்களாகத் தம்மைக் கருதிக் கொள்ளும், கங்காருவை தமது தொன்மவியல் மூதாதையராக அடையாளப்படுத்தும் ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள் கங்காருவின் இறைச்சியை உண்பதில்லை என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. மானிடவியல் அறிஞர் மெக் லென்னன் குலக்குறியியலை, இயற்கைப் பொருட் களை வழிபடும் ‘புனிதப் பொருள் வழிபாட்டோடு’ தொடர்புபடுத்திக் காட்டுகின்றார்.

ருசிய மானிடவியல் அறிஞர் மாலினோவ்ஸ்கி, குலக்குறியியலை உயிரினங்களின் வளமையை மாந்திரிக ரீதியாகக் கட்டுப்படுத்தும் அவாவின் வெளிப்பாடாகக் காண்கிறார். சமூகக் குழுக்களுக்கும் குலக்குறிகளுக்கும் இடையிலான புனிதமான அல்லது சடங்கியலான உறவுமுறை என்பது குழு உறுப்பினத்துவத்தையும் சமூக ஒற்றுமையையும் வலியுறுத்துவதாக அமைந்துள்ளதென்று டர்கைம் கருதுகின்றார்.

அமைப்பியல் அறிஞர் லேவிஸ்டிராஸ், மனித குழுக்களுக்கும் இயற்கை உயிரினங்களுக்கும் இடையில் எதிர்வுகள் முறையில் கட்டமைக்கப் பட்ட தொடர்புநிலைகளின் வெளிப்பாடாக குலக் குறியியலைக் காண்கிறார். அவ்எதிர்வுகளைக் கீழ்க் காணும் நான்கு வகையினதாக வகைப்படுத்துகின்றார்.

i.      இயற்கை உயிரினங்கள் ஒரு குறிப்பிட்ட குழுவோடு அடையாளப்படுத்தப்படல்.

ii.     இயற்கை உயிரினங்கள் ஒரு தனிநபரோடு அடையாளப்படுத்தப்படல்.

iii.     ஒரு தனிநபர் குறிப்பிட்ட இயற்கை உயிரினத்தோடு அடையாளப்படுத்தப்படல்.

iv.    ஒரு குறிப்பிட்ட குழு ஒரு குறிப்பிட்ட உயிரினத்தோடு அடையாளப்படுத்தப்படல்.

‘தொன்மைக்குடியினர் எங்கள் உயிரை விலங்கின் உடலிலோ, தாவரங்களிலோ வைக்க இயலும் எனக் கருதினர். அங்ஙனம் வைத்துவிட்டால் தங்களை அழிக்க இயலாது. ஆயின் அப்பொருள் அழிக்கப் பட்டால் அவர்களும் அழிவர் என நம்பினர். அப் பொருளைக் குலக்குறியாகக் கொண்டு அதற்குத் தீங்கிழைக்காது, கொல்லாது, உண்ணாது காத்து வந்தனர்’ என ஃபிரேஸர் குலக்குறியியல் பற்றிக் கூறுகிறார்.

உளவியல் அறிஞர் பிராய்டு ‘கொலையுண்ட தந்தையின்’ பதிலியாகவே குலக்குறி தேர்வு செய்யப் படுவதாகவும் புனிதப்படுத்தப்படுவதாகவும் கூறு கின்றார். இவ்வாறு குலக்குறியியல் பற்றிப் பல்வேறு விதமான கொள்கைகள் நிலவுகின்றன. இனி இப் பின்புலத்தில் சங்க இலக்கியத்தில் இடம்பெறும் குலக்குறிகள் குறித்துக் காண்போம்.

பாரியும் முல்லையும்

குறிப்பிட்ட ஒரு இயற்கைப் பொருளோடு அடையாளப்படுத்தப்படும் தனிநபர்களாக, சங்க இலக்கியத்தில் பாரியும், பேகனும் விளங்குகின்றனர். இவ்விருவர் மட்டுமின்றிக் கடையெழு வள்ளல்களுள் அதிகமான பாடல்கள் பெற்றவன் பாரி. அதிய மானைப் பற்றி மட்டும் அதிகமான பாடல்கள் பாடியவர் ஒளவை. அதைப் போன்று பாரியைச் சிறப்பித்துப் பாடிய புலவர் கபிலர். கபிலர் பாரியின் மீதும் பாரி மகளிர் மீதும் பாடியதாக 21 புறநானூற்றுப் பாடல்கள் உள்ளன. (எண்கள் : 8, 105 - 111, 113 - 120, 200-203, 236, 337) நன்னாகனார் நல்லியக்கோடனைப் பாடுமிடத்து பாரியோடு ஒப்பிட்டு ஒரு புறப்பாடல் (எண் : 176) பாடியுள்ளார். பாரியின் பறம்பு மலையும், அதன் அருவி முதலான இயற்கை வளமும் கபிலரால் சிலாகித்துப் பேசப் பட்டுள்ளன. ‘பாரி பறம்பின் பனிச்சுனை’ சங்க இலக்கியத்தில் மறித்து வரும் ஒரு மரபுத் தொடராக இடம்பெற்றுள்ளது. பாரியின் இரவலர்க்கு உதவும் கொடைத் திறம் புனைவாகவும் கையறுநிலை தன் வரலாற்றுத் தன்மையோடும் கபிலரால் பாடப் பட்டுள்ளன. கபிலர் பாடல்களில் பாரி, வேந்தர்க்கு இன்னாதவனாகவும், புரவலர்க்கு இனியவனாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றான்.

“அண்ணல் யானை வேந்தர்க்கு

இன்னான் ஆகிய இனியோன்”      (புறம்.115)

மூவேந்தர்கள், சமூகத்தில் புதிய அதிகாரம் பெற்றவர்களாக எழுச்சி பெற்ற பின்பும், கபிலரின் குரல் பாரிக்கு ஆதரவாகவே உள்ளது. புராதன பொதுவுடைமைச் சமூகத்தின் ‘பகிர்ந்துண்ணல்’ (பாத்தூண்) அறத்தை இரவலர்க்குப் பரிசில் வழங்கிப் பேணிய பாரி, முல்லைக் கொடியோடு தொடர்பு படுத்திச் சிறுபாணாற்றுப் படையில் ஓரிடத்தில் பேசப்படுகிறான். கடையெழு வள்ளல்களின் கொடைச் சிறப்பை நல்லூர் நத்தத்தனார் பட்டியலிடுமிடத்து, சுரபுன்னை மரங்கள் நிற்கும் நெடுவழியில் ஒரு முல்லைக்கொடிக்குப் பெருந்தேரைக் கொடுத்தான், பாரி எனப் புகழ்பாடுகிறார்.

“நறுவீ உறைக்கும் நாக நெடுவழிச்

சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய

பிறங்கு வெள்ளருவி சாரல்

பறம்பிற் கோமான் பாரி”      (சிறுபாண்.88-91)

கபிலரின் பாடல்களில் பாரி முல்லைக்குத் தேர் கொடுத்த நிகழ்வு வெளிப்படையாகப் பதிவு செய்யப்படவில்லை. ஆயின், ஒரு பாடலில் இந் நிகழ்வை நினைவுபடுத்தும் வகையில், பாரி மகளிரின் தந்தை நாடு, பூனையின் முள்பற்கள் போன்ற முல்லையின் மொட்டுக்கள் அரும்பும் வளமிக்கதாக கபிலரால் சித்திரிக்கப்படுகின்றது.

“பிள்ளை வெருகின் முள்எயிறு புரையப்

பாசில் முல்லை முகைக்கும்

ஆய்தொடி அரிவையர் தந்தை நாடே”    (புறம்.117)

பாரியைப் பற்றியும் பாரி மகளிரைப் பற்றியுமான செய்திகள் சங்க இலக்கியத்திற்குப் பின்னரும் ‘பழ மொழி நானூறு’ முதலான நூற்களில் தொடர்ச்சி யாகப் பேசப்பட்டு வந்துள்ளன.

நெடுவழியில் கொழு கொம்பின்றி வாடிக் கிடந்த சிறிய முல்லைக் கொடிக்குத் தனது மிகப் பெரிய தேரைப் பாரி நிறுத்திவிட்டுச் சென்றதை வெறும் கொடைச் சிறப்பின் உயர்வாக மட்டும் விளக்கிவிட இயலாது. காட்டு வழியில் பாரி செல்லும் போது ஏராளமான செடி, கொடிகள் ஆதரவின்றி வாடிக்கிடக்கையில் முல்லை மட்டும் பாரியின் கவனத்தை ஈர்த்தது ஏன்? முல்லையின் மீதான பரிவு, வெறும் குச்சியைப் பற்றுக் கோடாக நிறுத்தாது, நெடுந்தேரை நிறுத்தும் அளவிற்குச் சென்றதும் ஏன்? உடனடியாகத் தேரை நிறுத்தி நடந்து சென்ற மைக்குக் காரணம் என்ன? புரவலர்க்கு வழங்கும் பரிசில் போல் முல்லைக்குத் தேர் நிறுத்தியதையும் கணக்கில் கொள்ள இயலுமா? இவ்வினாக்கள் பாரி முல்லை மீது கொண்டிருந்த ஈடுபாட்டிற்கு வேறு முதன்மைக் காரணம் இருத்தல் வேண்டு மென்பதையே சுட்டுகின்றன. அவ்வகையில் நோக்கும் போது முல்லை, பாரியின் குலக்குறியாக இருத்தல் வேண்டும் என்னும் கருத்தே பொருத்தமானதாக அமைகின்றது. குலக்குறி அழிந்தால் தனது இனம் அழிந்துபடும் என்னும் இனக்குழுச் சமூகத்தின் நம்பிக்கையும், குலக்குறியை அழிவிலிருந்து காத்தலே கடன் என்னும் இனக்குழுச் சமூகக் கடமையுணர்வுமே, பாரி முல்லைக்குத் தேர் கொடுத்த நிகழ்விற்கான அடிப்படைக் காரணங்களாக அமைகின்றன. பாரி பறம்பு மலைக்குத் தலைவனாக இருந்தமையும், வேளாண் உற்பத்தி சாராத இயற்கை வளம் பெற்ற வனாகத் திகழ்ந்தமையும், கலைஞர்களான பாணர் களையும் விறலியரையும் ஆதரித்துக் கொண்டாடி யதையும், பறம்புநாட்டினது முந்நூறு ஊர்களையும் இரவலர்களுக்குப் பரிசிலாக ஈந்தமையும் பாரியை இனக்குழுத் தலைவனாக அடையாளப்படுத்து கின்றன. எனவே பாரி முல்லைக்குத் தேர் கொடுத்த நிகழ்வும் இனக்குழு வாழ்வின் ஓர் அம்சமாக இருந்த குலக்குறி பண்பாட்டு மரபு சார்ந்ததே.

பேகனும் மயிலும்

கடையெழு வள்ளல்களுள் ஒருவனான ஆவியர் குடியைச் சார்ந்த ‘வையாவிக் கோப்பெரும் பேகன்’ பாரியைப் போன்றே இயற்கை உயிரினம் ஒன்றோடு தொடர்புபடுத்தப்படுகின்றான். குளிரால் நடுங்கிக் கூவியதாக மயிலுக்குப் போர்வை கொடுத்தவன் என்று பேகன் கபிலராலும் பரணராலும் புகழப் படுகின்றான்.

“உடாஅ போரா ஆகுதல் அறிந்தும்

படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எம்கோ

கடாஅ யானைக் கலிமான் பேகன்”

எத்துணை ஆயினும் ஈத்தல் நன்று என

மறுமை நோக்கின்றோ அன்றே

பிறர், வறுமை நோக்கின்று, அவன் கை வண்மையே”      (புறம்.141)

“பாணாற்றுப் படை’ துறையில் அமைந்த மேற்காட்டிய பாடலில், பரணர், மயில் எப்போதும் போர்வையை உடுத்திருக்காது என்று அறிந்தும் அதற்குப் போர்வை நல்கியவன், பேகன். பிறர்க்குக் கொடுப்பது நன்று எனக் கருதும் பேகனின் வள்ளல் தன்மை மறுமையை நோக்கியதன்று; வறுமையை நோக்கியது எனப் புகழ்ந்துரைக்கிறார். பேகன் அவனது மனைவி கண்ணகியோடு சேர்ந்து வாழ்வது தான் தனது வேண்டுகோள் என்பதாகக் கபிலர் பாடிய கீழ்வரும் பாடலிலும், மயிலுக்குப் போர்வை வழங்கிய நிகழ்வு இடம்பெறுகின்றது.

“மடத்தகை மாமயில் பனிக்கும் என்று அருளிப்

படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசை

கடாஅ யானைக் கலிமான் பேக

......................................................

இன்னாது உறைவி அரும்படர் களைமோ”      (புறம் - 145)

பேகன் யானைகளோடும் குதிரைகளோடும் சேர்ந்திருப்பவன் என்னும் பொருள்படும்படி அமைந்த ‘கடாஅ யானை கலிமான் பேகன்’ என்னும் மரபுத் தொடர் கபிலபரணரால் மறித்து வரும் தொடராக ஆளப்பட்டுள்ளது. யானைகளைப் பரிசாக வழங்குபவன், மலை நாட்டைச் சேர்ந்தவன் என்பதும் பேகனைப் பற்றிப் புறநானூற்றில் இடம்பெறும் செய்திகளாகும். கடையேழு வள்ளல்களுள் முதலாமவனாக, பேகனை வரிசைப்படுத்தும் சிறுபாணாற்றுப்படையும், பேகன் மயிலுக்குப் போர்வை வழங்கிய நிகழ்வைப் பதிவு செய்து உள்ளது.

“வானம் வாய்த்த வளமலைக் கவாஅன்

கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய

அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்

பெருங்கல் நாடன் பேகன்”    (சிறுபாண்.84-87)

பாரி முல்லைக்குத் தேர் வழங்கிய நிகழ்வு குறித்து எழுந்த வினாக்கள் இங்கும் எழுகின்றன. வேறு பறவைகள் குளிரால் நடுங்கவில்லையா? மயில் மட்டும் பேகனின் கவனத்தை ஈர்த்தது ஏன்? மயிலுக்குப் போர்வை வழங்கியது, புரவலரின் பரிசில் நிகழ்வு மட்டும் தானா? எனவே பாரிக்கு முல்லை குலக்குறியாக இருந்ததைப் போன்று, பேகனுக்கு மயில் குலக்குறியாக இருந்துள்ளது. இனக்குழுத் தலைவனான மலைநாட்டுப் பேகன், தனது குலக்குறி அழிந்துபடாமல் காக்கப்படுதல் வேண்டுமென்ற நோக்கிலேயே மயிலுக்குத் துகில் வழங்கியுள்ளான் எனக் கருதுவதே பொருத்த மானது.

நன்னனும் மாமரமும்

பாரி X முல்லை, பேகன் X மயில் என்பது போன்று புதிர்விடுவிக்கப்பட வேண்டிய சங்க இலக்கியத்தில் உள்ள மற்றொரு கதையாடல் ‘பெண் கொலை புரிந்த நன்னன்’ என்பதாகும். கொங்கணத்து எழில் மலையைச் சார்ந்தவன். பாரம், பாழி என்னும் ஊர்களுக்குத் தலைவன். மிஞிலி என்பானைத் துணையாகக் கொண்டு ஆய் எயினனை அழித்தவன். பகைவரது மனைவியரின் கூந்தலைக் கயிறாக்கி யானையை இழுத்து வந்தவன். களிறுகளைப் புரவலர்க்குப் பரிசாய் வழங்கியவன். களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் மன்னனால் வாகைப் பறந்தலையில் கொல்லப்பட்டவன். இவனது பிறந்த நாள் ஆரவாரத்தோடு மக்களால் கொண்டாடப் பட்டது என நன்னனைப் பற்றிய செய்திகள் ஏராள மான பாடல்களில் எட்டுத்தொகை நூற்களிலும் (அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு) பத்துப்பாட்டில் மதுரைக்காஞ்சியிலும் பதிவாகி யுள்ளன. அகப்பாடல்களில் பரணர் நன்னனைப் பற்றி மிகுதியாகப் பாடியுள்ளார்.

“இசைகல் ஈகை களிறுவீக வண்மகிழ்

பாரத்துத் தலைவன் ஆர நன்னன்

எழில்நெடு வரை பாழிச் சிலம்பில்

களிமயிற் கலாவத்தன்ன தோளே”

(பரணர், அகம்.150)

“பொன்படு கொண்கான நன்னன் நல்நாட்டு

எழிற்குன்றம் பெறினும் பொருள்வயின்

யாரோ பிரிகிற்பவரே”

(பெருங்கடுங்கோ, நற்.391)

“வேந்தர் ஓட்டிய ஏந்துவேல் நன்னன்

கூந்தல் முரற்சியின் கொடிதே”

(பரணர், நற்.270)

“இரும்பொன் வாகைப் பெருந்துறைச் செருவில்

பொல்பூண் நன்னன் பொருது களத்துஒழிய

வலம்படு கொற்றம் தந்த வாய்வாள்

களங்காய் கண்ணி நார்முடிச் சேரல்

இழந்த நாடு தந்தன்ன”

(கல்லாடனார், அகம்.199)

“பேரிசை நன்னன் பெறும்பெயர் நன்னாள்

சேரி விழவின் ஆர்ப்பு எழுந்தாங்கு”

(மதுரைக்காஞ்சி, 618)

இத்தகைய வீரமும் கொடைச்சிறப்பும் மிக்க நன்னனின் சேய் தான் மலைபடுகடாத்தின் பாட்டுடைத் தலைவன். நன்னனின் வீரத்தையும் ஈகையையும் பலபடப் பேசிய பரணர், நன்னன் புகழின் மீது ஓர் களங்கம் போல் ‘பெண் கொலை நன்னன்’ என்ற பட்டத்தைக் கீழ்வரும் குறுந்தொகைப் பாடலில் வழங்குகின்றார்.

“மண்ணிய சென்ற ஒள்நுதல் அரிவை

புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்கு

ஒன்பதிற்று - ஒன்பது களிற்றொடு அவள் நிறை

பொன்செய் பாவை கொடுப்பவும் கொள்ளான்

பெண்கொலை புரிந்த நன்னன் போல

வரையா நிரையத்து செல்கியரோ அன்னை!”

(நிரையம் = நரகம்)    (குறுந்.292)

தோழி கூற்றாக வரும் இப்பாடலில், காப்பு மிகுதியினால் தலைவனை இரவுக் குறியில் சந்திக்க முடியாமல் செய்த அன்னை நன்னனைப் போல் நரகத்திற்குச் செல்வாள் எனக் கூறுகிறாள். நன்னன் நரகத்திற்குப் போகும்படி செய்த செயல் என்ன? நன்னனது மாமரத்திலிருந்து ஓடையில் வீழ்ந்த மாம்பிஞ்சைப் பெண் ஒருத்தி தின்றாள். அந்தத் தப்புக்காக அவளது தந்தை எண்பத்தொரு யானை களையும், அப்பெண்ணின் எடையளவிற்குப் ‘பொற் பாவை’ ஒன்றும் கொடுப்பதாகக் கூறியும் அவற்றைப் பெற்றுக் கொள்ளாமல், அந்தப் பெண்ணை நன்னன் கொலை செய்தான். இச்செயலே அவனை எல்லையற்ற நரகத்திற்குத் தள்ளியது. நன்னனின் இச்செயல் அரச அதிகாரத்தின் கொடுங்கோன்மையாகவே பெரிதும் விமர்சிக்கப்பட்டுள்ளது (ஞானி: மார்க் சியமும் தமிழ் இலக்கியமும்). நன்னன் மலைநாட்டுத் தலைவன். மருத நிலத்து நகர அரசின் வேந்தன் அல்லன். அரச நீதியில் மாம்பிஞ்சைத் தின்றது கொலைத் தண்டனைக்குரிய குற்றம் அன்று; தண்டத் தொகைக்குரிய குற்றமே. ஆயின் தப்புக்கான தண்ட மாக மிகப்பெரும் பொன்னையும், யானைகளையும் நன்னன் ஏற்க மறுத்ததற்குக் காரணம் என்ன? மாம்பிஞ்சைத் தின்றதற்குக் கொலைத் தண்டனை விதிக்கக் காரணம் என்ன?

இதற்குக் கொடுமனம் படைத்த அரசனின் கொடுங்கோன்மை என ஒற்றை வரி பதிலிறுக்க இயலாது. மேலும் களிறுகளைப் பரிசிலாக நல்கும் ஈகை மனத்துள் இத்தகைய கடுந் தண்டனை பிறக்குமா? என்ற கேள்வியும் எழுகிறது. எனவே இனக்குழு வாழ்வின் நியதிகளோடு இக் கொலை நிகழ்வை விடுவிப்போம். நன்னன் ‘நாண் மகிழ் இருக்கையின்’ தலைவனாக சங்கப் பாடல்களில் சித்திரிக்கப்படுகிறான். நாள் மகிழ் இருக்கை என்பது, நாள்தோறும் இனக்குழுத் தலைவன் கொண்டு வரும் பொருட்களைத் தன் கூட்டத்தாருக்குப் பகிர்ந்து கொடுத்து உண்டு மகிழ்ந்து கொண்டாடும் இட மாகும். (கூடுதல் விளக்கத்திற்குக் காண்க : சங்க காலச் சமுதாயம், கா.சுப்பிரமணியம்) இதனால் இனக்குழுத் தலைவன் நன்னன், என்னும் கருத்து உறுதிப்படுகின்றது; எனவே, கொலைக்குக் காரண மாக அமைந்த மாம்பிஞ்சு (பசுங்காய்) தோன்றிய மாமரத்தின் முதன்மை, இனக்குழு வாழ்வின் குலக் குறியியல் பண்பாட்டு மரபோடு தொடர்புபடுத்திப் பார்ப்பதற்கு ஏதுவாகிறது. மாமரம் நன்னனின் குலக்குறியாகும். அம்மாமரத்தின் பசுங்காய் உணவு விலக்கிற்கு உரிய பொருள். உணவு விலக்குக்குரிய பொருளை உண்டதால் அப்பெண் தண்டனைக்கு உள்ளானாள். இனக்குழு வாழ்வின் செழிப்பிற்கும் வளத்திற்கும் ஆதாரமாக விளங்கக் கூடியதும், புனிதப் பொருளாக வழிபடுதற்கும் உரிய மூலக்குறி சார்ந்த மீறல் என்பதால் கொலைத் தண்டனை விதிக்கப்படுகின்றது.

காவல் மரங்கள் குலக்குறிகளா?

சங்கப் புறப்பாடல்களில் மூவேந்தர்கள் பகைவர்களை வெற்றி கொள்ளும்போது அவர்களுடைய காவல் மரங்களையும் காவல்மரங்கள் இடம் பெற்றுள்ள காவற் காட்டினையும் கோடரியால் வெட்டி எரிக்கின்ற செயல் விரிவான சித்திரிப்புக்குள்ளாகியுள்ளது. பதிற்றுப்பத்தில் நெடுஞ்சேரலாதன் பகைவர்களின் கடம்ப மரத்தை வெட்டிய செய்தி இடம்பெற்றுள்ளது.

“கருங்கைக் கொல்லன் அரஞ்செய் அவ்வாய்

நெடுங்கை நவியம் பாய்தலின் நிலையழிந்து

வீகமழ் நெடுஞ்சினை புலம்பக் காவுதொறும்

கடிமரம் தடியும் ஓசைதன் ஊர்”

(நவியம் = கோடரி)    (ஆலத்தூர் கிழார், புறம்.3)

“ஒன்னார்ச் செகுப்பினும் செகுக்க; என்னதூஉம்

கடிமரம் தடிதல் ஒம்பு! நின்

நெடுநல்யானைக்குக் கந்தாற்றாவே”

(காரிக்கண்ணனார், புறம்.59)

“வடிநவில் நவியம் பாய்தலின் ஊர்தொறும்

கடிமரம் துளங்கிய காவும்; நெடுநகர்

வினைபுனை நல்லில் வெவ்வரி நைப்ப”

(கல்லாடனார், புறம்.23)

“பலர் மொசிந்து ஓம்பிய திரள் பூங்கடம்பின்

கடியுடை முழுமுதல்துமிய வேஎய்

வென்றெறி முழங்கு பனை செய்த”

(பதிற்.11 : 12-14)

காவல் மரங்கள் கதிர்கள் நுழைய முடியாத அடர்ந்த சோலைக்குள் (காவு) இருந்ததாகச் சித்திரிக்கப் பட்டுள்ளது. காவல் மரத்தையும் அதைச் சூழ்ந்துள்ள சோலைகளை வேந்தர்கள் அழிப்பதற்கான தேவை, காரணம் யாவை? காவுகள் இன்றும் கேரளத்தில் வழிபாட்டுக்குரிய இடங்களாக அமைந்துள்ளன. (ஆரியங்காவு, சீர்மக்காவு, குறுங்காவு) எனவே சங்க காலத்தில் இனக்குழு மக்களால் காவல் மரங்களும் காவும் புனிமானதாக வழிபாட்டுக்குரியதாகவும் கருதப்பட்டிருத்தல் வேண்டும். ஃபிரேஷர் பழம் உரோமச் சமூகத்தில் நிலவியதாகக் குறிப்பிடும் அரசர்களால் பாதுகாப்புடன் பேணப்பட்ட ‘புனிதப் பூங்காவோடு சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படும் ‘காவற்காடு (காவு, கடிமிளை) இணைத்துப் பார்க்கத்தக்கது.

காவல் மரம் வழிபாட்டுக்குரிய புனிதப் பொருளாகக் கருதப்பட்டதாலே, அதனை அவ மதிக்கும் நோக்கத்துடன் மாற்றோர் அதன் மீது யானைகளைக் கட்டுவதும் (புறம்.162) அதனை வெட்டி எரிக்கும் செயல்களும் நிகழ்ந்துள்ளன. ஓர் இனத்தை அழிக்கும்போது அவ்வினத்தின் உயிர் ஆற்றலாகவும், வளமாகவும் இருக்கின்ற குலக்குறியாக விளங்கும் இயற்கைப் பொருளையும் அழித்தால் தான் அவ்வினம் முற்றிலுமாக அழிந்துபடும் என்ற இனக்குழு நம்பிக்கையின் தொடர்ச்சியையே புறப்பாடல்கள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. எனவே காவல் மரங்களைப் புனித வழிபாட்டிற்குரிய குலக் குறியாகக் காண்பதில் தவறில்லை. சங்க இலக்கியத்தில் பட்டினப்பாலையில் இடம்பெறும் நெய்தல் நில மக்களின் ‘சுறாமுள் வழிபாட்டைப் பேராசிரியர் ஆ.தனஞ்செயன் குலக்குறி வழிபாடாகவே காண்கிறார். (நாவாவின் ஆராய்ச்சி : எண் : 34 : ஜன. 1990).

சங்க இலக்கியத்தில் மூவேந்தர்களின் கொடிகளாகவும் அடையாளப் பூக்களாகவும் சித்திரிக்கப்படும் இயற்கைப் பொருட்கள் அவை இனக்குழு வாழ்வின் குலக்குறித் தன்மையிலிருந்து வளர்ந்து அடையாளமாக சின்னங்களாக உருப்பெற்றுள்ளமையை எடுத்துக்காட்டுகின்றன.

துணைநூற்பட்டியல்

1. Richard Cavendish (Chief Editor) Man, Myth & Magic The Illustrated Encyclopedia of Mythology, Religion and unknown, Marshall Cavendish, Newyork, pp.2859 - 2863.

2. Mircea Etiade (ed) The Encylopedia of Religion, Vol.14, Macmillam, London, 1987, pp.233-235.

3. The New Encylopedia Britanica, Macropedia, Vol.18, The University of Chicago, USA, Helen Hemingway Benton Publishers, 1974, pp.529-533.

4. கா.சுப்பிரமணியம், சங்ககாலச் சமுதாயம், என்.சி.பி.எச்., சென்னை, 1982.