"தமிழகக் கிராமங்களில் தான் இன்னமும் ஈரமுள்ள மனிதர்கள் வாழ்கிறார்கள். அவர்களது நிலங்களில் விளையும் உணவுப்பொருட்கள் கேரளாவிற்கு வருகின்றன. பணப்பயிர்களான தென்னையும், ரப்பரையும் பயிர் செய்யக்கூடிய மலையாளிகளுக்கு அரிசி முதல் அத்தனையும் தமிழகத்திலிருந்து தான் வருகிறது. ஆனால் அதே விவசாயிகளின் விவசாயத்திற்கு பெரியாறு அணையிலிருந்து தண்ணீரை விட மறுக்கிறது கேரளம். ஏராளமான தண்ணீர், கடலில் கலந்து வீணாகப் போகிறது. அப்படி வீணாகும் தண்ணீரைக் கூட தமிழக விவசாயிக்கு கொடுக்க மறுக்கும் கேரள அரசை கண்டனம் செய்கிறேன்.

தண்ணீரிலிருந்து மின்சாரம் தயாரிக்கிறோம் என்று அங்கே அணைகள் (கேரள அரசியல்வாதிகள்) கட்டினார்கள். தண்ணீரிலிருந்து மின்சாரம் வரவில்லை. கட்டப்பட்ட அணைகளில் எல்லாம் ஊழல்தான் நடந்தாக பேச்சுகள் .... இப்போது பவானியின் குறுக்கே அணைக்கட்ட கேரள அரசு திட்டமிடுகிறது. காவிரி,பெரியாறு, பவானி என்று சுற்றி தண்ணீர் தராமல் தமிழர்களை மூச்சுத்திணற செய்யும் இவ்வளவு சதி செயல்கள் நடக்கும் போது நெய்வேலியில் மின்சாரத்தை உற்பத்தி செய்து வேறொரு மாநிலத்திற்கு கொடுப்பது தான் தமிழனின் குணம் - பாவம் தமிழன்" – பால்சக்காரியா, சாகித்திய அகடாமி விருது பெற்ற மலையாள இலக்கியவாதி (நன்றி: ஆனந்த விகடன் 19.01.2003)

 ஆண்டுக்கு சராசரியாக 3000 மி.மீ மழை பெய்து அது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் முல்லைப் பெரியாறு நதியாகி அபரிமிதமான வெள்ளப்பெருக்குடன் மேற்கு நோக்கி பாய்ந்து, நீர்வளம் அரபிக்கடலில் வீணாகக் கலந்தது; மறுபுறமோ ராமநாதபுரம், சிவங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, கம்பம் பகுதிகளில் ஆண்டுக்கு வெறும் 700 மி.மீ மழையளவு. அதுவும் வருடத்திற்கு 40 நாட்கள் மட்டுமே மழை பெய்தது. வறட்சிப் பிடிக்குள் சிக்கி பஞ்சம், பசி, பட்டினி, உயிரிழப்பு ஏற்பட்டு, வேளாண் உற்பத்தி சீர்குலைவடைந்தது கண்டு, ராமநாதபுரம் கிழவன் சேதுபதி மற்றும் அமைச்சர் முத்து இருளப்பர் "பெரியாற்றிலிருந்து கால்வாய் வெட்டி மேற்கு நோக்கி செல்லும் ஆற்றுநீரை தென் தமிழகத்தின் விவசாயத்திற்கு திருப்பி விடுங்கள்; வீணாக அரபிக்கடலில் கலக்கும் நீர்வளத்தை வைத்து விவசாயிகளின் பட்டினி போக்குங்கள்" என வெள்ளைக்கார அரசுக்கு 1800 ஆண்டுகாலத்தில் அறிக்கை தந்தனர்.

 இங்கிலாந்திலுள்ள தன் பூர்வீகச் சொத்துக்களை விற்றதில் கிடைத்த ரூ.85 லட்சம் பணத்தைப் போட்டு முல்லைப் பெரியாறு அணையை கம்பீரமாகக் கட்டிய பொறியாளர் பென்னிகுய்க்கிற்கோ, அணைக்கட்டுமான பணிக்கு 6 அணா தினக் கூலிக்கு வேலை செய்து (1 அணா = 6.25 பைசா) அடர்ந்த வனத்திற்குள் விஷப்பூச்சி, கொசுக்கடிக்கு நோயுற்றும் காலரா, மலேரியா, முடக்குவாதம் நோய்களுக்கு பலியான 442 தமிழர்களுக்கோ, திட்டத்திற்கு யோசனை தந்த கிழவன் சேதுபதிக்கோ மார்க்சியம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை!

"ஒருவர் மற்றவர்களுக்காக அக்கறைப்படுவதும், மற்றவர்கள் ஒருவருக்குமாய் அக்கறைப்படுவதும்" என்ற மார்க்சியம் வழிவந்த - கற்ற - பிரகாஷ் காரத், அச்சுதானந்தன், ஜி.ராமகிருஷ்ணன், பிரேம்சந்திரன் ஆகியோர்க்கு மத்தியில் "வருங்கால சந்ததியினர் வறுமையின்றி வாழ்வதற்கு சிக்கல் மிகுந்த சூழ்நிலையிலும் தினக்கூலி 6அணாவிற்கு உயிரைத் துறந்த எங்கள் கம்பம், கூடலூர், தேனி பகுதிகளைச் சார்ந்த முகம் தெரியாத தமிழர்களை வணங்குவோம்! தங்கள் குழந்தைகளுக்கு 'பென்னிக்குய்க்' என பெயர் சூட்டி நன்றி செலுத்துகிறான் முல்லையாற்றுத் தமிழன்” என்றான் முத்துக்குமார்.

தான் தாய் நாட்டின் காலனிய சுரண்டலுக்காய் அடிமைப்படுத்திய மக்கட் பிரிவினரில் ஒரு பகுதியினரின் வறட்சி கண்டு, தன் சொந்த பணத்தில் முல்லைப்பெரியாறு அணை கட்டிய பென்னிகுய்க்கிற்கும், டெல்லி உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி 142அடி நீரை முல்லைப் பெரியாற்றில் தராத கேரளாவிற்கு தமிழ்நாட்டிலிருந்து 9 பாதை வழியாக நாளொன்றுக்கு 200 டன் அரிசி, 360 லாரிகள் காய்கறிகள், பால், முட்டை, மாட்டிறைச்சி, மணல், கம்பி, மின்சாரம் தந்து கொண்டிருக்கிற பாழாய்ப் போன தமிழர்களுக்கும் என்ன கைமாறு செய்து விட்டது கேரள அரசும் நடுவண் அரசும், துரோகத்தைத் தவிர ........

முல்லைப் பெரியாற்றில் இருந்து அரபிக்கடலுக்கு வருடத்திற்கு 500 டி.எம்.சி தண்ணீர் வீணாகப் போனாலும் போகட்டும், ஆனால் தமிழ்நாட்டிற்கு வருடத்திற்கு 10 டி.எம்.சி தண்ணீர் கூட தரமாட்டோம் எனச் சொல்கிறது கேரளம்! (1டி.எம்.சி = 100கோடி க.அடி)

தென்தமிழகத்தின் 38,000 ஏக்கர் நிலங்கள் தரிசாகப் போயின. இருபோகமாக இருந்து ஒருபோகமாக மாறிய நிலங்கள் மட்டும் 86,000 ஏக்கர். ஆற்றுப் பாசான நீரை இழந்து ஆழ்குழாய்க் கிணறு சாகுபடியாக மாறிய நிலங்கள் மட்டும் 53,000 ஏக்கர். மொத்த விவசாய உற்பத்தி இழப்பு மட்டும் தமிழ்நாட்டிற்கு ஆண்டுக்கு 5500 கோடி ரூபாய்!

பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும் எனப் பாழாய்ப் போன தமிழினத்திற்கு "முல்லை பெரியாறு அணைக்கு அருகே புதிய அணைக்கு பூமி பூசை போட்டு" நன்றி செலுத்தியிருக்கிறது கேரள அரசு!

கோடிக்கால் பூதமடா! கோபத்தின் ரூபமடா!

பாட்டாளி வர்க்கமடா! இப்ப நாங்க

டாடாவோட கூட்டாளியடா என முழங்கி

'மாவோயிச பூதத்தை' அடக்க விமானப் படையை ஏவு;

‘உள்நாட்டு பாதுகாப்பிற்கு ஆபத்து; தேச ஒற்றுமைக்கு ஆபத்து’ எனப் பேசும் CPMன் இரட்டை வேடம் கலைவதை நீங்களே பாருங்கள் தோழர்களே!

ஒரு கம்யூனிஸ்ட் என்பவன் தன்னுடைய நாட்டிற்கா அல்லது தன் வர்க்கத்திற்கா, எதற்கு விசுவாசமாய் இருக்க வேண்டுமென்கிற மார்க்சீய அரிச்சுவடியில நெறிதவறி - இவர்கள் லால்கரிலும், நந்திகிராமிலும் டாடாவிற்கும், ஜிந்தாலுக்கும், ஆதித்யா குழுமத்திற்கும், அம்பானிக்கும் பஜனை பாடுவார்கள்!

இந்தியாவை உள்நாட்டு, பன்னாட்டு முதலாளிகளுக்கு அடகு வைத்த கங்காணி காங்கிரசை போன முறை 41/2 வருடமாக தூக்கி சுமந்தவர்கள் "மாவோயிஸ்டுகளிடம் பேச்சுவார்த்தை நடத்து" என மம்தா கூறினால் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களாக மாறி அங்கலாய்ப்பார்கள்!

சிங்களனுக்கு இந்தியா ஆயுதம் கொடுத்ததைவிடக் கொடுமையானது, ஈழத்தமிழர் படுகொலையில் சி.பி.எம்.மின் கள்ள மவுனம். “ஒன்றுபட்ட பாகிஸ்தானிற்குள் கிழக்கு பாகிஸ்தானிற்கு தீர்வு; ஒன்றுபட்ட இந்தோனிசியாவிற்குள் கிழக்கு தைமூர்க்கு தீர்வு; ஒன்றுபட்ட செர்பியாவிற்குள் கோசாவாவிற்கு தீர்வு; பாலஸ்தீன - இஸ்ரேலியே எல்லை பிரச்சனைக்கு வன்முறை தீர்வல்ல!” என்றெல்லாம் கூறாமல் சிங்களவனிடம் அடிவாங்கிக் கொண்டே இலங்கை இறையாண்மையை - ஒருமைப்பாட்டை தமிழர்கள் பாதுகாக்க வேண்டுமென அறிக்கை விட்டனர்.

உத்தப்புரத்திற்கு பிருந்தாகாரத்தை செல்ல விடாமல் தமிழக போலிஸ் தடுத்ததைக் கண்டு உள்துறை மந்திரி ப.சிதம்பத்தோடு அலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிப்பார்கள். ஆனால் நந்திகிராமத்திற்கும், சிங்கூர்க்கும் சென்ற மேதாபட்கரையும் மகாஸ்வேதாதேவி - இன்னும் பிற அறிவுஜீவிகளையும் மே.வங்க போலிசை வைத்துத் தடுப்பார்கள்.

தமிழ்ப்பெண்களை இழிவுபடுத்தி வசைபாடிய ஜெயராமன் வீட்டை தமிழர்கள் தாக்கினால் இனவாதம், இனவெறி என கொக்கரிப்பார்கள். இந்திய கிரிக்கெட் அணியில் கங்குலி சேர்க்கப்படவில்லை என்றவுடனேயே கொல்கத்தாவில் மம்தாவோடு(!) சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள்.

'அருந்தொண்டாற்றிய அந்தணர்கள்' என்ற நூலில் R.S.S. அம்பிகள், பாரதி, ராகுல் சாங்கிருத்தியாயன், உ.வே.சா, பி.ராமமூர்த்தி, ஏ.பி, போன்றவர்களை சேர்த்து சாதிப்பாசம் மெச்சும்படி எழுதியதை கண்டிக்கமாட்டார்கள். ஆனால் தோழர் மதிமாறன் பாரதியை 'இந்து தேசிய மீட்புவாதி' என புத்தகம் போட்டால் 'பிராமணத் துவேஷம்' என கதையளப்பார்கள்.

புலிகள் ஆனையிறவைக் கைப்பற்றி யாழ் தீபகற்பத்தில் நிலை கொண்ட 30000 சிங்கள் ராணுவத்தை சுற்றி வளைத்தபோது, "இந்திய அரசு இலங்கை சந்திரிகா அரசுக்கு இலவசமாக ஆயுதம் தந்து உதவவேண்டும்" என அறிக்கை விட்டவர் தோழர் உமாநாத். ஆனால் நாங்கள் 83லிருந்து ஒரே நிலைப்பாடு - அரசியல் தீர்வு என்பார்கள்! இராணுவத் தீர்விற்காக சென்ற இந்திய அமைதிப்படையை ஆதிரிப்பார்கள்!

காண்டீபம் ஏந்த வேண்டுமானால் அர்ச்சுனனாய்ப் பிறக்க வேண்டும் ! ஏகலவனுக்கு ஏது உரிமை என்றது கீதை! ஈழத்தமிழனுக்கு ஆயுதம் ஏந்த உரிமையில்லை என்றது சி.பி.எம். அரசியல் தீர்வு அரசியல் தீர்வு எனப்பேசி இன ஒடுக்குமுறை அரசமைப்பை சமதர்ம சிந்தனைவாதிகளிடம் இருந்து பாதுகாத்தார்கள்.

ஒற்றையாட்சி அரசமைப்பை உருவாக்கி, மதம் பெளத்தம் - மொழி சிங்களம் - என்ற பேரினவாத இன ஒடுக்குமுறைக்கு எதிரான ஈழப்போராட்டத்திற்கு மார்க்சிய லெனினிய வழியில் தீர்வு சொல்ல மனமின்றி மாகாண சுயாட்சி, தமிழர்களுக்கு சமவுரிமை என செங்கொடி தூக்கி சிங்களத்தை ஆதரிப்பார்கள். ஒற்றையாட்சி அரசமைப்பில் மொழி வழி மாகாணத்திற்கே இடமில்லை என்கிற இலங்கை உச்சநீதிமன்ற தீர்ப்பை பற்றி பரிசீலிக்க மறுப்பார்கள்.

"இந்துத்துவவாவிற்கு இஸ்லாமிய பயங்கரவாதம் மாற்று கிடையாது" என முழங்குவார்கள். "இடதுசாரிகளோடு சேருங்கள்" என அழைப்பார்கள். ஆனால் 1992 டிசம்பர் 6க்கு முன் "பாபர்மசூதியை இடிக்கக் கூடாது; இராமர் கோவில் என்பது புரட்டு" எனச் சொன்ன இடது சாரிகள் (CPI,CPM), இடித்தபின்பு இந்திய அரசே பாபர் மசூதியை இடிக்கப்பட்ட அதே இடத்தில் கட்டிக் கொடு என மறந்தும் சொல்லமாட்டார்கள்.

"விமர்சனத்திற்கெல்லாம் தலையாய விமர்சனம் மதத்தைப் பற்றிய விமர்சனமே" என்றார் மார்க்ஸ். சேது சமுத்திரத் திட்டத்தை தடுக்க, சு.சாமி துளசிதாசர் எழுதிய ராமாயண நூலை ஆதாரம் காட்டி உச்சநீதிமன்றத்தில் தடையாணை வாங்கினார். அப்போதைய காங்கிரசு அமைச்சர் அம்பிகாசோனி. "ராமர் பாலம் என்பதற்கு அறிவியல் ஆதாரமில்லை" என்ற வாசகத்தோடு அபிடவிட் ஒன்றை தாக்கல் செய்தார். உடனே "எப்படி எழுதப்போச்சு?" என இந்துத்துவக் கும்பல் எகிறியபோது "ஆமாம் தப்பு தான்" எனப் பணிந்தது மன்மோகன்சிங் அரசு. "அப்படி எழுதியிருக்கத் தேவையில்லை" என தீக்கதிரில் தலையங்கம் எழுதினார்கள் மார்க்சிஸ்டுகள்.

போக்குவரத்து ஊழியர்கள் சங்கம், விவசாயிகள் சங்கம், அகில இந்திய மாணவர் சங்கம், காப்பீடு ஊழியர் சங்கம், மாதர் சங்கம், அரசு ஊழியர் சங்கம், சி.ஐ.டி.யூ, த.மு.எ.க.ச போன்ற வர்க்க அமைப்புகளை ஆளும் வர்க்கத்திற்கு எதிராகக் கட்டி, அரைநிர்வாணப் போராட்டம், பட்டைபோட்டு கழுதையிடம் மனுக் கொடுக்கும் போராட்டம், சாலையில் நாற்று நடும் போராட்டம், பிச்சை எடுக்கும் போராட்டம் என ஆளும் வர்க்கம் அஞ்சி நடுங்கும்படி நடத்துவார்கள் தொழிலாளர்கள் கோரிக்கைகளுக்காக. ஆனால் பதவி நாற்காலிக்காக மே.வங்கத்தில் உள்ளாட்சி தேர்தலில் கூட திரிணாமுள் காங்கிரசோடு ஆயுத மோதலில் ஈடுபட்டு அஞ்சா நெஞ்சன் 'அ' வன்முறையையே மிஞ்சுவார்கள்.

சாதியக் கொழுப்பு எடுத்துப் பேசி, சிதம்பரம் தீட்சிதர்களின் ஏகபோகத்தை காக்க நீதிமன்ற வந்த சு.சாமியை முட்டை அபிசேகம் செய்த சூத்திர /பஞ்சமனின் செயலைக் கண்டித்து தீக்கரில் "நீதிமன்றத்துக்குள்ளேயேவா" எனப் புலம்பினார்கள். ஆனால் தன் கட்சித் தோழன் W.R. மரணத்தில் சந்தேகம் கிளப்பி செய்தி வெளியிட்ட 'மக்கள் தொலைக்காட்சி'யை அடித்து "வர்க்கப் போர்’ நடத்தினார்கள்.

எப்போதுமே பார்ப்பனியத்திற்கும் மற்ற உழைக்கும் மக்களுக்குமிடையே உள்ள முரண்பாட்டை, ஒடுக்குமுறையை எதிர்த்து சிபிஎம் பேசாது - போராடாது. ஆனால் சாதி இந்துக்களுக்கும் தலித் மக்களுக்குமிடையே உள்ள முரண்பாட்டை கையிலெடுக்கும் அல்லது ஊதிப்பெருக்கும். சூத்திர பஞ்சம மக்களுக்கும் பார்ப்பணியத்திற்கும் உள்ள முரண்பாட்டை பற்றி வாய்திறக்காது.

கேரளாவில் உம்மன் சாண்டி காங்கிரசு ஆட்சி செய்தால் முல்லைப் பெரியாறில் 142அடி நீர் தேக்க A.K.பொல்லார்மினும் P.மோகனும் செங்கொடி தூக்கி நீர்மட்டத்தை உயர்த்து என நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம் நடந்த்துவார்கள்.

கேரளாவில் CPM வந்துவிட்டால் ‘என்ன தோழர்’ என நாம் கேட்டால் "இங்க ஒரு தெருவுல இருக்குற குழாயுல அடுத்த தெரு பொம்பள தண்ணீர் பிடிச்சா வுடுவாளா" எனக் கேட்பார்கள். 

“என்னங்க தோழர், ஈழப்பிரச்சனையில் சி.பி.எம்.மின் நிலைப்பாடு இப்படி இருக்கே?" என த.மு.எ.க.ச தோழர்களிடம் கேட்டால் "பிரபாகரன் எவ்வளவு பெரிய பாசிஸ்டு தெரியுமா தோழர்!, எத்தனை லெப்ட்விங் தோழர்களை LTTE கொன்றிருக்கிறார்கள்" என்றும் "முஸ்லீம்களை கட்டிய துணியோடு விரட்டியவர்கள்" என்றும் கூறுவார்கள். ஆனால் ஈராக்கில் ‘இடதுசாரிகளைப் பாதுகாத்த, சன்னி முஸ்லீம்களுக்கு உரிமை கொடுத்த’ சதாம் உசேனை ஆதரிப்பார்கள்! அவர் கொல்லப்பட்ட உடனே இந்தியா முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள்.

ரூபாய் 30 மட்டுமே உற்பத்திச் செலவாக உள்ள பெட்ரோலை மைய, மாநில, அரசுகள் 25க்கு வரிபோட்டு 55க்கு விற்பதை புள்ளி விபரத்தோடு பேசுவார்கள். ஆனால் கேரளாவிலும், மே.வங்கத்திலும் பெட்ரோலுக்கு மாநில அரசு போடுகிற வரி பற்றி பேசமாட்டார்கள்!

கடல் மட்டத்திலிருந்து 2870அடி உயரமுள்ள முல்லைப் பெரியாறு அணை 142 அடி கொள்ளளவு தாங்காமல் உடைந்தால், கடல் மட்டத்திலிருந்து 3500 முதல் 4750 அடி உயரமுள்ள இடுக்கி, குமுளி கேரளப் பகுதிகள் அழிந்து 30 லட்சம் மலையாள சடலங்கள் அரபிக்கடலில் மிதக்குமாம்! அதற்கு ஒரு கிராபிக்ஸ் செய்யப்பட்ட வீடியோ படம் கேரளாவில் சக்கைப் போடு போட்டது. நீர்மின்சக்தி திட்டத்தில் ஊழல் செய்தாராம் பினராயி விஜயன்; நாம் மட்டும் எப்படி சும்மா இருப்பேன்? என்று அச்சுதானந்தன் பெரியாறுக்கு அருகே புதிய அணை கட்ட கடப்பாறையோடு கிளம்பி விட்டார்!

மே.வங்கத்தில் லால்கர் ஜீரம், மம்தா பயம்.

உள்ளாட்சி தேர்தல் தோல்வி பயம்........

கேரளாவில் தோசையைத் திருப்பி வழக்கம் போல போட்டுவிடுவார்களோ என பயம் ..... 

பென்னிக்குகே, நீர் இருக்கும் வரை நீ இருப்பாய்! 

- குன்றத்தூரான (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It