அண்மையில் முல்லைப் பெரியாறு அணையில் உச்சநீதிமன்ற உத்தரப்படி 142 அடிநீர் தேக்கப்படுவதற்கு முன்பே தண்ணீர் திறந்து விடப்பட்டது குறித்து “கேரளாவிடம் தமிழக உரிமையை திமுக அரசு அடகு வைத்துவிட்டது” என்று எதிர்க்கட்சியான அதிமுகவும், “ஸ்டாலின் கேரளாவின் காலில் விழுந்து விட்டார்” என்று பிஜேபியும் குற்றச்சாட்டுகளை வெளியிட்டு போராட்டம் நடத்தியிருக்கின்றன. இதற்கு பதிலளித்த நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், “நாங்கள் யார் காலிலும் விழவில்லை. மத்திய நீர்வளக் கமிஷனின் ‘RULE CURVE’ விதிமுறையின்படிதான் தண்ணீர் திறந்து விடப்படுள்ளது” என்று கூறினார். அதுவென்ன ‘RULE CURVE’? உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஒன்று இருக்கும்போது இந்த விதிமுறை எப்படி இடையில் வந்தது? யாரால் கொண்டுவரப்பட்டது? அதன் பின்னணி என்ன?

mullai periyar 473‘RULE CURVE’ என்றால் என்ன?

‘RULE CURVE’ என்பது ஒரு அணையில் தேக்கப்படும் அதிகபட்ச நீர் மட்டத்தின் அளவைக் குறிக்கிறது. ஒரு ஆண்டில் நிலவும் வெவ்வேறு பருவகால சூழலுக்கு ஏற்ப, அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அந்த அணையில் எத்தனை அடி உயரத்திற்கு நீர் தேக்க வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் ஒரு அறிவியல் முறையாகும். இது ஒரு அணையின் ‘முக்கிய பாதுகாப்பு’ பொறிமுறையின் ஒரு பகுதியாகும்.

ஒரு ஆண்டின் ஒவ்வொரு மாதத்திற்குமான அணையின் நீர் தேக்கும் அளவு (RULE CURVE) மத்திய நீர்வளக் கமிசனால் (CWS) நிர்ணயிக்கப்படுகிறது. குறிப்பாக கனமழைப் பொழிவு மற்றும் வெள்ளப் பெருக்கு அபாயக் காலங்களில் அவசியம் கருதி இந்த அளவு 10 நாட்களுக்கு ஒருமுறை நிர்ணயம் செய்யப்படுகிறது.

ஒரு அணையின் கேட் திறப்பு அட்டவணை, அதாவது அணையின் நீர் வெளியேற்றும் கதவுகள் (shutter) எப்போது, என்ன அளவுக்கு திறக்கப்பட வேண்டும் அல்லது மூடப்பட வேண்டும் என்பது, ‘விதி வளைவை’ ‘RULE CURVE’ அடிப்படையாகக் கொண்டே முடிவு செய்யப்படுகிறது.

இதன் பொருள் என்னவென்றால், விதி வளைவால் தீர்மானிக்கப்பட்ட சேமிப்பு அளவுகள் (வெவ்வேறு நேரங்களில்) ஒரு நீர்த்தேக்கத்தில் முறையாக பராமரிக்கப்பட்டால், அந்த நீர்த்தேக்கம் அதன் நோக்கங்களை சிறப்பாக பூர்த்தி செய்ய முடியும்.

 விதியும் (‘RULE CURVE’) - முல்லைப் பெரியாறு அணையும்:

ஆரம்ப காலத்தில் இந்த விதிமுறையை ‘RULE CURVE’ கேரளா அரசு எழுப்பவில்லை. “100 ஆண்டு பழமையான அணை, அணையின் கீழ் பகுதியில் வசிக்கும் 50 லட்சம் பேரின் உயிர் பாதுகாப்பு” போன்ற காரணங்களை முன்வைத்துதான் முல்லைப் பெரியாறு அணையின் நீர்த்தேக்க மட்டத்தை 136 அடியிலிருந்து 130 அடியாகக் குறைக்க வேண்டும் என்று முதலில் உச்சநீதி மன்றத்தில் கேரளா வழக்கு தொடர்ந்தது. நீண்ட காலமாக நடந்த இவ்வழக்கின் இறுதியில்தான் அதிகபட்சமாக 142 அடி நீரை தேக்குவதற்கான தீர்ப்பை வழங்கியது உச்ச நீதிமன்றம்.

ஆனால் 2018-ஆகஸ்டில் கேரளாவில் ஏற்பட்ட பெரும் வெள்ளசேதத்திற்கு, பிறகுதான் ‘RULE CURVE’ விதிமுறை பேசும்பொருளானது. “தமிழக அரசு முன்னறிவிப்பின்றி முல்லைப் பெரியாறு அணையிலிருந்து 13 சட்டர்கள் வழியாக தண்ணீரைத் திறந்து விட்டதுதான் வெள்ளச் சேதத்திற்கு காரணம்” என்று தொடர்ச்சியாக தமிழகத்தின்மீது குற்றம்சாட்டி வந்தது கேரள அரசு. இதே காரணங்களை முன்வைத்து 2019 முதல் உச்சநீதிமன்றத்தில் அடுக்கடுக்கான பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்து “அணையின் அதிகபட்ச நீர்மட்டம் 142 அடி என்பதை மறுவரையறை செய்ய வேண்டும்” என்று கேரள அரசு வலியுறுத்தி வந்தது.

இந்நிலையில், இவ்வழக்கை விசாரித்து வரும் நீதிபதி A.M.கான்வில்கர் தலைமையிலான பெஞ்ச் கடந்த 2021-மார்சில், “1) அணையின் செயல்திறன் மற்றும் கருவிகளின் கண்காணிப்பு, 2) 'விதி வளைவை'(RULE CURVE) இறுதி செய்தல், மற்றும் 3) கேட் (SHUTTER)இயக்க அட்டவணையை சரிசெய்தல் ஆகிய ஒருங்கிணைந்த மூன்று பாதுகாப்பு அம்சங்கள் குறித்து 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு” அணையின் கண்காணிப்புக் குழுவிற்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

இதன் தொடர்ச்சியாக மத்திய நீர்வளக் கமிசன் (CWC) தமிழகத்துடன் பலகட்ட ஆலோசனைகள் நடத்தி இறுதியாக, கடந்த செப்டம்பர் 20-ல் முல்லைப் பெரியாறு அணைக்கான விதி-வளைவு (RULE CURVE) மட்டத்தை 142 அடியாக நிர்ணயம் செய்து அறிவித்தது. ஆனால் கேரள அரசோ வழக்கம்போல இதனையும் ஏற்க மறுத்து 140 அடியாக குறைக்கக் கோரியது.

(இங்கு பெருமழை மற்றும் வெள்ளப் பெருக்குக் காலங்களில் அணையின் நீர்மட்டத்தை பராமரிக்கும் பிரச்சனையின் அடிப்படையில்தான் RULE CURVE முறையை உச்ச நீதிமன்றம் கையிலெடுக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.)

இந்நிலையில், கடந்த அக்டோபர் 25-ல் கேரளா அரசு தாக்கல் செய்த புதிய பிரமாணப் பத்திரத்தில்,

“இந்த ஆண்டு அக்டோபர் 16 முதல் முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் பலத்த மழை பெய்துவரும் நிலையில், முல்லைப் பெரியாறு நீர்மட்டம் அதிகரித்து அதிலிருந்து வெளியேற்றப்படும் அதிகளவு நீரால் ஏற்கனவே நிரம்பியுள்ள இடுக்கி அணையும் பாதிக்கப்படும்” என்றும்,

"பொதுவாக வடகிழக்கு பருவமழை டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் என்ற உண்மையைக் கருத்தில் கொண்டு, கேரளா முன்மொழிந்த விதி வளைவின் அடிப்படையில் நீர்த்தேக்கத்தின் RULE CURVE அளவை 140 அடியாக நிர்ணயிக்கப்பட வேண்டும்” என்று கேரள அரசு கேட்டுக்கொண்டது.

இதுதவிர, உச்ச நீதிமன்றம் கோரியதற்கு இணங்க கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி கேரள அரசு 300 பக்க பதில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தது. அதில்,

2018 மற்றும் 2019 வெள்ளத்தின் போது அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிக மழை பெய்த சம்பவங்களையும், கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதையும் சுட்டிக் காட்டிய கேரள அரசு,

“காலநிலை மாற்றம், பெரியாறு அணையின் போதுமான ஸ்பில்வே திறன் இல்லாமை, சுரங்கப் பாதைகளின் குறைந்த நீர் வெளியேற்றும் திறன், தீவிர வெள்ளம் ஏற்பட்டால் இடுக்கி அணையில் வெள்ள நீரை வைத்திருக்க இயலாமை மற்றும் பேரழிவுகரமான நிகழ்வு ஏற்பட்டால் உயிர் மற்றும் சொத்துக்களின் மிகப்பெரிய சேதம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ‘விதி வளைவை’ தீர்மானிக்க வேண்டும்” என்று தனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியது.

இதனையடுத்து, அக்டோபர் 28-ல் நாள் முழுவதும் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி A.M. கான்வில்கர் தலைமையிலான உச்ச நீதிமன்ற பெஞ்ச், கேரளாவின் அடாவடி வாதங்களை “உங்கள் அரசியல் விளையாட்டுகளுக்கு நீதிமன்றத்தை களமாகப் பயன்படுத்தக்கூடாது” என்று கண்டித்ததுடன், “நீர்வளக் கமிசனின் பரிந்துரைகளுக்கு இருமாநில அரசுகளும் கட்டுப்பட வேண்டும் என்றும், அதன்படி அக்டோபர் 31 வரை அணையில் அதிகபட்சமாக 138 அடி நீரையும் நவம்பர் 1 முதல் 10 வரை 139.5 அடி நீரை தேக்கலாம்” என்றும் உத்தரவிட்டது.

இதிலிருந்து, அணையின் நீர்மட்டத்தை 142-லிருந்து 140 அடியாக குறைக்க வேண்டும் என்ற கேரளாவின் கோரிக்கையும், அதற்கு அவர்கள் முன்வைத்த அடிப்படையான வாதமும் கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கு அபாயம் என்பது மட்டும்தான். இக்காரணத்தை பரிசீலித்துதான் நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியுள்ளது என்பதையும் நாம் புரிந்து கொள்ள முடியும்.

தமிழக அரசு மேற்கொண்ட பாதுகாப்பு நடவடிக்கைகள்:

நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து, உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமுல்படுத்தும் வகையில் அணையின் அதிகபட்ச நீர்மட்டத்தைப் பராமரிக்கும் நடவடிக்கைகளில் இறங்கியது. 30-10-2021 சனிக்கிழமையில் அணையின் ஆறு சட்டர்கள் வழியாக தண்ணீரைத் திறந்து விட்டது. சட்டர்கள் வி1, வி5 மற்றும் வி6 ஆகியவை 50 சென்டிமீட்டர்கள் உயரத்திற்கும், வி2, வி3 மற்றும் வி4 ஆகியவை 70 சென்டிமீட்டர் உயரத்திற்கும் திறக்கப்பட்டன. இதன்மூலம் அணையிலிருந்து வினாடிக்கு 2974 கன அடி நீரை விடுவித்தது தமிழக அரசு.

இதனையடுத்து 31-10-2021 ஞாயிற்றுக்கிழமை முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் மெதுவாக சரியத் தொடங்கியது. இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை நண்பகல் வரை 138 அடி என்ற ‘விதிவளைவு’ மட்டத்திற்கு (அணையின் ஒவ்வொரு நாளும் பராமரிக்கப்பட வேண்டிய நீர் மட்டம்) அணையின் நீர் மட்டம் இறங்கவில்லை. ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணிவரை முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 138.70 அடியாக நீடித்தது. இதனை சுட்டிக்காட்டி “உச்சநீதிமன்ற உத்தரவை தமிழக அரசு மீறிவிட்டது” என கேரள அதிகாரிகள் மத்திய நீர்வளத் துறையிடம் முறையிட்டனர்.

இதன்பின் தேக்கடியில் நடந்த இருமாநில அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட முடிவுகளின் அடிப்படையில், மேலும் கூடுதல் நீரை வெளியேற்றி நீதிமன்றம் வரையறுத்த நீர்மட்ட அளவை பராமரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு உச்சநீதிமன்றம் மற்றும் மத்திய நீர்வளக் கமிசன் ஆகியவற்றின் வழிகாட்டுதல்களை தமிழக அரசு முறையாக செயல்படுத்தியதைத்தான் மாநில உரிமைகளைப் பறிகொடுத்து விட்டதாக எதிர்க்கட்சிகள் கூப்பாடு போடுகின்றன. இன்று அதிமுக ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் இதுதான் நடந்திருக்கும் என்பதே உண்மை!

எதிர்க்கட்சிகளின் குற்றசாட்டும் உண்மைத் தன்மையும்:

1) RULE CURVE விதிமுறை என்பது அணையின் பாதுகாப்புத் தன்மையை வலுப்படுத்துவதற்கான அறிவியல் வழிமுறைகளில் ஒன்று. இவ்விதிமுறையின்படி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்ட அளவாக நிர்ணயம் செய்யபட்டுள்ள 139.5 அடி என்பது நிரந்தரமான அளவல்ல. இது இன்றைய கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காலத்தைக் கணக்கில் கொண்டு எடுக்கப்பட்ட தற்காலிக முடிவுதான். இது பெரியாறு அணையில் 142-அடி நீரை தேக்கலாம் என்று முன்பு உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது. கனமழையற்ற காலங்களில் 142 அடி என்ற தீர்ப்பே அமுலில் இருக்கும்.

இந்த எதார்த்தமான உண்மையை மூடி மறைத்துவிட்டு ‘தமிழகத்திற்கு திமுக துரோகம் செய்து விட்டதாக’ அதிமுக கூப்பாடு போடுவது மலிவான அரசியலன்றி வேறல்ல. இப்பிரச்சனையின் அடியும் - நுனியும் தெரியாமலே ஆடு அண்ணாமலையும் ஊளையிடுகிறார்!

2) அணையின் மதகுகளை கேரள நீர்வளத்துறை அமைச்சர் அத்துமீறி திறந்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு பற்றி:

இது ஒரு ஆதாரமற்ற, மீடியாக்களில் பரவிய வதந்திகளின் அடிப்படையில் சுமத்தப்படும் குற்றச்சாட்டாகும். கேரளா அமைச்சர் அகஸ்டின் அணையை பார்வையிட்ட நாளில் அணையின் நீர்மட்டம் நீதிமன்ற வரையறைக்கு மாறாக அதாவது, 138 அடிக்கும் மேலாக 138.70 அடி என்ற அளவில் இருந்தது. இதனை “உச்சநீதிமன்ற அவமதிப்பாக” CWC-க்கும், நீதிமன்றத்திலும் தமிழகத்தின்மீது குற்றச்சாட்டாக எடுத்துச் செல்கிறது கேரள அரசு. அமைச்சர் அகஸ்டினின் பங்கு இவ்வளவுதான். இதன்பின் தமிழக மற்றும் கேரளா அதிகாரிகள் கூட்டுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி தமிழக அதிகாரிகள்தான் மதகுகளைத் திறந்துள்ளனர் என்பதுதான் உண்மை.

மேலும், RULE CURVE விதியின்படியே மதகுகளை திறந்து-மூடும் கால அட்டவணையை அணையின் கண்காணிப்புக்குழுதான் தீர்மானிக்கிறது. இதனை அமுல்படுத்தும் பொறுப்பு தமிழகத்திடம் இருக்கும்போது கேரள அமைச்சர் அத்துமீறுவதற்கான அவசியமே இல்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

3) 142 அடிக்கு மாற்றாக 139.5 அடிக்கு மேலுள்ள நீரை அணையிலிருந்து கேரளாவுக்கு வெளியேற்றியது தமிழக உரிமையை பலியிடுவதாகும் என்ற எதிர்க்கட்சிகளின் கூற்று எந்த அளவு உண்மையானது?

கேரளாவுக்கு திருப்பிவிடப்பட்ட கூடுதல் நீரால் கேரளா அரசுக்கு பயனேதுமில்லை. ஏற்கனவே கேரளாவின் பெரும்பகுதி வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறது. எனவே இக்கூடுதல் நீர் முழுவதும் கடலுக்குதான் செல்லப் போகிறது. ஒருவேளை இந்த நீரை தமிழகத்திற்கு திருப்பியிருந்தால் அந்த நீரைப் பயன்படுத்தும் தயார்நிலையில் தமிழகமும் இல்லை என்ற உண்மையை நாம் ஏற்றாக வேண்டும்.

முல்லைப் பெரியாற்றின் நீரை தேக்குவதற்கு தமிழகத்தில் உள்ள ஒரே கட்டமைப்பு வைகை அணை மட்டும்தான். நீண்டகாலமாக தூர்வாரப்படாத வைகை அணையோ அதன் முழுக்கொள்ளளவு எட்டப்பட்டு மூன்றாம் கட்ட எச்சரிக்கையும் விடப்பட்ட நிலையில் உள்ளது. அணையின் பாதி உயரத்திற்கு மண் மேடிட்டுக் கிடப்பதை தூர்வார வேண்டும் என்ற விவசாயிகளின் நீண்டகால கோரிக்கை கேட்பதற்கு நாதியற்று கிடக்கிறது. தேனி மாவட்டத்தில் மொத்தமுள்ள 135 கண்மாய்களில் பெரும்பாலானவை அதன் 75% கொள்ளளவை ஏற்கனவே எட்டிவிட்டன. மதுரை மாவட்டத்தின் பெரிய கண்மாய்கள் முழுவதும் கான்கிரீட் காடுகளாக உருமாறிக் கிடக்கிறது.! எனவே இக்கூடுதல் நீரால் தமிழகத்திற்கும் ஒரு பயனும் ஏற்படப் போவதில்லை! மாறாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சேதாரம்தான் அதிகரித்திருக்கும்!

4) RULE CURVE விதியின்படியான நீர்மட்ட அளவு என்பது, 'ஏதோ தமிழக நலனுக்கு எதிராக' முல்லைப் பெரியாறு அணைக்கு மட்டும் நிர்ணயம் செய்யப்படவில்லை. இடுக்கி அணை, கிருஷ்ணராஜசாகர் அணை உட்பட- நாட்டின் முக்கிய அணைகள் அனைத்திற்கும் RULE CURVE அளவை மத்திய நீர்வளக் கமிசன் (CWC) தீர்மானித்துள்ளது!

5) இன்று முல்லைப் பெரியாறு அணையில் தமிழக உரிமை பற்றி வாய்க்கிழிய பேசும் அதிமுகவின் ஆட்சியின்போதுதான் கேரளாவில் அணையின் மதகுகளை உடைக்கும் முயற்சி நடந்தது. இதற்கு எதிராக வீறுகொண்டேழுந்த தமிழக விவசாயிகளை துப்பாக்கிச் சூடு நடத்தி ஒடுக்கியது அதிமுக அரசு!

2019-ல் தேக்கடி செல்லும் வழியில், அணையின் நீர்தேங்கும் பகுதியை பகிரங்கமாக ஆக்கிரமித்து கேரள அரசு புதிய வாகன நிறுத்துமிடம் அமைத்தபோது, அதிமுக அரசு எவ்வித எதிர்ப்புமின்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. இதற்கு எதிராகவும் விவசாயிகள்தான் வீதியில் இறங்கிப் போராடினார்கள்! இன்றுவரை அந்த வாகன நிறுத்துமிடம் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

தேக்கடியில் உள்ள தமிழகப் பொதுப்பணித் துறை ஊழியர்களின் குடியிருப்புகளுக்கும், அங்கிருந்த தமிழக தொடக்கப்பள்ளிக்கும் பல்லாண்டுகளாக வழங்கிவந்த மின்வசதி, குடிநீர்வசதிகளை கேரளஅரசு துண்டித்து வைத்திருக்கிறது. தனது 10 ஆண்டுகால ஆட்சியின்போது இதற்கு எதிராக துரும்பைக்கூட அசைக்காத அதிமுக, இன்று தமிழக உரிமை பற்றி பேசுவதுதான் வேடிக்கை!

இனவெறி அரசியல் பிரச்சனையை தீர்க்குமா?

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையைப் பொறுத்தவரை, மூல ஒப்பந்தத்தின் அடிப்படையிலான தமிழகத்தின் பல உரிமைகளை படிப்படியாக கேரளாவுக்கு தாரைவார்த்துக் கொடுத்ததில் திமுக, அதிமுக ஆகிய இருகட்சிகளுக்கும் சமபங்கு உண்டு. அணையின்மீது தமிழகத்திற்கு தற்போதுள்ள குறைந்தபட்ச அதிகாரங்களும், 142 அடி நீரைத் தேக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பும்கூட, தமிழக விவசாயிகள் மற்றும் பொதுப்பணித் துறையின் ஓய்வுபெற்ற பொறியாளர்கள் சங்கம் ஆகியோரின் தொடர்ச்சியான, விடாப்பிடியான போராட்டம் மூலம் பெறப்பட்டவைதான். ஆனால் இப்போராட்டங்களின் வெற்றியை தங்களது சொந்த முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக இக்கட்சிகள் உரிமை பாராட்டிக் கொள்கின்றன!

தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் பிழைப்புவாத ஓட்டு அரசியல் கட்சிகள்தான் உள்ளது. இங்குள்ள சீமான், மற்றும் பார்வர்டு பிளாக், 5 மாவட்ட விவசாயிகள் சங்கம் என்ற பெயரில் இயங்கும் உதிரிகள் ஆகியோரைப் போல கேரளாவிலும் இனவாத அரசியல் நடத்தும் கும்பல்கள் பல நிறங்களில் இயங்கி வருகின்றன. இந்த மக்கள் விரோதக் கூட்டம்தான் கேரள மக்களிடம் தமிழகத்திற்கு எதிரான இனவெறிக் கருத்துக்களைக் கட்டமைத்து வருகிறார்கள்.

நவீன அறிவியல் தொழில்நுட்ப அடிப்படையில் அணையைப் பலப்படுத்தி பிறகும், 152 அடிநீரை தாங்கும் திறன் அணைக்கு உள்ளது என்று உச்சநீதிமன்றம் நியமித்த தொழில்நுட்ப வல்லுனர் குழு சான்றளித்த பிறகும், “126 ஆண்டு பழமையான அணை. தமிழகத்தின் தண்ணீர் தேவைக்காக 50 லட்சம் கேரள மக்களின் உயிரைப் பலி கேட்கிறார்கள். பழைய அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட வேண்டும்.” என்ற ஒரே பல்லவியை மீண்டும் மீண்டும் கேரள மக்களின் காதுகளில் ஓதி வருகிறார்கள். இதையே கேரள மீடியாக்களும் பரபரப்பு செய்திகளாக வெளியிட்டு வருகின்றன.

இருமாநிலத்திலும் இயங்கிவரும் இத்தகைய மக்கள் விரோதக் கூட்டம்தான் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையை மலையாளி - தமிழ் மக்களின் இனவெறி மோதலாக உருமாற்றி வருகின்றன. இது இருமாநில மக்களிடையே பிளவை அதிகப்படுத்தி பிரச்சனையை மேலும் மேலும் சிக்கலாக்கவே செய்யும். இந்த எளிய உண்மை இத்தலைவர்களுக்கு தெரியாத விசயமல்ல. ஆனாலும் தங்களது அரசியல் அணுகுமுறையை இவர்கள் மாற்றிக் கொள்ள விரும்புவதில்லை. ஏனென்றால் மக்கள் நலனைவிட இவர்களுக்கு தங்களது ஓட்டரசியல்தான் முக்கியம்!

இந்த நச்சு கும்பலிடமிருந்து இருமாநில உழைக்கும் மக்களையும் வென்றெடுக்காமல், அவர்களை ஒரு பொதுக்கருத்தின் கீழ் ஒருங்கிணைக்காமல், முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையில் தீர்வை எட்ட முடியாது. வெறும் சட்டப் போராட்டங்களால் இதனை சாதிக்க முடியாது. மக்கள்நலனை மட்டுமே முன்னிறுத்தி செயல்படும் சனநாயக அமைப்புகளின் ஒன்றுபட்ட நடவடிக்கையின் மூலமே இதனை சாதிக்க முடியும்.

சாதகமான சூழலைக் கவனத்தில் கொள்வோம்:

முன்னெப்போதுமில்லாத வகையில் தமிழகத்திற்கு சாதகமான அரசியல் சூழல் உருவாகியிருப்பதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளது..

“126 ஆண்டுகால பழமையான அணை. பேபி அணையை பலப்படுத்தினாலும் அணை பலம் பெற்றுவிட்டதாக கருத முடியாது” என்ற கேரள தரப்பு வாதங்களை, “உங்கள் அரசியல் விளையாட்டுக்களுக்கு நீதிமன்றத்தைக் களமாகப் பயன்படுத்தக்கூடாது என உச்ச நீதிமன்றம் கண்டித்திருக்கிறது.

“அணையிலிருந்து வெளியேற்றப்படும் அதிகளவு நீரால் பெரியாற்றின் நீர்மட்டம் அதன் அபாய அளவைவிட 2 மீட்டர் குறைவாகவே உள்ளது. எனவே கேரள மக்கள் பீதியடையத் தேவையில்லை” என்றும், “பேரழிவுகரமான பூகம்பம் போன்ற விபத்து நடந்தாலொழிய எந்த அணையும் திடீரென வெடித்துவிடாது” என்றும் கேரள நீர்வளத்துறை அமைச்சர் அகஸ்டின் சமீபத்தில் கேரளப் பத்திரிக்கைகளுக்கு பேட்டியளித்திருக்கிறார்.

“முல்லைப் பெரியாறு அணையைப் பற்றி ஆதாரமற்ற வதந்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்திருக்கிறார் கேரள முதல்வர் பினாராய் விஜயன். மேலும் பேபி அணையைப் பலப்படுத்துவதற்கு இதுவரைத் தடையாக இருந்த 13 மரங்களை வெட்டி அப்புறப்படுத்தவும் பினாராய் அரசு அனுமதியளித்துள்ளது.

இந்த சுமூகமான சூழலை திறமையாகப் பயன்படுத்தி 152 அடிநீரைத் தேக்குவது என்ற கோரிக்கையை சாதிக்கும் வகையில் இணக்கமான அணுகுமுறையைக் கையாள்வதே புத்திசாலித்தனமாக இருக்கும். இதைவிடுத்து எடுத்தேன் கவிழ்த்தேன் என்று தடாலடியாக அணுகுவது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும்.

அதேசமயம், முல்லைப் பெரியாறு அணை நவீன தொழில்நுட்ப அடிப்படையில் பலப்படுத்தப்பட்டுள்ள உண்மையையும், அணையின் நீர்பிடிப்பு மற்றும் நீர்தேங்கும் பகுதியில் நடந்துள்ள ஆக்கிரமிப்புகளையும், இதன் பின்னணியிலுள்ள கேரள பிழைப்புவாத அரசியல்வாதிகளையும், கேரள மக்களிடம் அம்பலப்படுத்தும் வகையில் பிரச்சார வேலைகளை செய்வதற்கு முற்போக்கு சனநாயக இயக்கங்கள் முன்வர வேண்டும்.

- தேனி மாறன்