உலகம் அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்டு வருகிறது. இதுவரை சந்திக்காத ஆபத்தான சூழ்நிலையை நோக்கி நகர்ந்து வருகிறது. தொழிற்புரட்சியும் காலனி ஆதிக்கமும் தொடங்கி வைத்த சுற்றுச்சூழல் பேரழிவு, இன்று உச்சத்துக்கு ஏறிக் கொண்டிருக்கிறது. புவி வெப்பமடைதலும், அதன் தொடர்ச்சியாக பருவநிலைகளில் ஏற்படும் தாறுமாறான மாற்றங்களுமே அதற்கு சாட்சி.

அதன் காரணமாகத்தான் ஆர்டிக், அண்டார்டிக் பனிப்பிரதேசங்களில் பெரும் பனிப்பாறைகள் உருகுகின்றன, இதுவரை கேள்விப்பட்டிராத பகுதிகளிலும் டெங்கு, மலேரியா காய்ச்சல்கள் மூலம் மக்கள் செத்துப்போகிறார்கள். வெள்ளம், கடல் உட்புகுதல், பருவமழை மாற்றம், தகிக்கும் வெப்பநிலை போன்ற இயற்கைச் சீற்றங்கள் நாளை நம்மையும் தாக்கும் நிலை உருவாகலாம். இவை மட்டுமின்றி வறுமை அதன் நீட்சியாக நம்மைத் தாக்கும். குடிக்கத் தண்ணீருக்கும், பயிர் வளர்க்க பாசன நீருக்கும்கூட அலைய வேண்டிய நிலைமையும் ஏற்படலாம்.

வளிமண்டலத்தில் பெருகி வரும் கார்பன் உள்ளிட்ட பசுமையில்ல வாயுக்கள்தான் இத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். ஏற்கெனவே உலகம் முழுவதும் உமிழப்பட்டு வரும் கார்பனின் அளவு எல்லையை மீறிச் சென்று 390 பி.பி.எம் (கன அளவில் 10 லட்சத்தில் ஒரு பங்கு) ஆக இருக்கிறது. பூமியும் நாமும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு 350 பி.பி.எம். கார்பன்தான் உகந்தது என்று நாசா காலநிலை விஞ்ஞானி ஜேம்ஸ் ஹான்செனும் அவரது குழுவும் மேற்கொண்ட ஆய்வு தெரிவிக்கிறது. இப்படி புவி வெப்பமடையச் செய்து கொண்டிருக்கும் பசுமையில்ல வாயுக்களின் உமிழ்வை கட்டுப்படுத்துவதற்கான புதிய உலக ஒப்பந்தத்தை உருவாக்கவே, டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் சமீபத்தில் நடைபெற்ற "காலநிலை மாற்றம் பற்றிய 15வது மாநாட்டில்" உலகத் தலைவர்கள் பங்கேற்றனர்.

மேலே கூறப்பட்ட இயற்கைச் சீற்றங்களை தடுத்து நிறுத்தி, உலகை சீராக இயங்க வைப்பதற்கான முடிவை அந்த மாநாட்டில் உலகத் தலைவர்கள் உறுதியாக எடுத்திருக்க முடியும். ஆனால் அந்த வாய்ப்பை வழக்கம்போலத் தவறவிட்டு, முக்கியத்துவம் மிகுந்த இந்த மாநாட்டிலும் வளரும் நாடுகளின் தலைவர்கள் அமெரிக்க நெருக்கடிக்குப் பணிந்துவிட்டனர். அறிவியல் ஆதாரங்கள் ஆணித்தரமாக உள்ளபோதும், உலகைக் காப்பாற்றுவதற்கான உருப்படியான திட்டத்தையும், ஒப்பந்தத்தையும் அடைய அந்தத் தலைவர்கள் தவறவிட்டதற்கு, அவர்களின் சுயநலமே காரணம். இதனால் பூவுலகு மோசமான அழிவுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது

இந்த நேரத்தில் நமது அரசு முதல் அமெரிக்க அரசு வரை எல்லோருக்கும் நாம் உணர்த்த வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது. "இயற்கை சீற்றங்கள் மக்களை அழிப்பதற்கு முன் உலகைக் காப்பாற்றுங்கள்" என்பதுதான் அது. இதற்கு அரசியல் ரீதியாக நெருக்கடி கொடுக்க பல்வேறு தொடர் போராட்டங்களை கையில் எடுக்க வேண்டும். அத்துடன் மட்டுமில்லாமல் நமது வாழ்க்கை முறையிலும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.

மின்சார உற்பத்தி, பெட்ரோலியப் பொருட்கள் பயன்படுத்துதல், பெருகி வரும் நுகர்பொருள் கலாசாரத்தாலும்தான் கார்பன் உள்ளிட்ட பசுமையில்ல வாயுக்கள் பெருமளவு உமிழப்படுகின்றன. இதில் நம் ஒவ்வொருவருக்கும் பங்கிருக்கிறது. எனவே, மாற்றங்கள் இரண்டு தரப்பிலிருந்தும் மேற்கொள்ளப்பட வேண்டும். முதலாளிகளையும் சமூகத்தையும் நெறிப்படுத்த வேண்டிய கடமையைக் கொண்ட அரசுகளிடம் நியாயத்தை வலியுறுத்தி போராடுவோம். உலகை காப்பதற்கான இந்தப் போராட்டம் மக்கள் போராட்டாமாக மாற வேண்டிய தருணம் இது. இல்லையென்றால் நம்மை மட்டுமல்ல, நம் வருங்கால சந்ததிகளையும் காப்பாற்ற முடியாது.

மனதில் உத்வேகமும், களத்தில் செயல்பாடும் இணைந்தால் அது சாத்தியம். கோடி கைகள் இணைந்தால் வானத்தையும் வளைக்கலாம் என்பது வெறும் வார்த்தைகள் அல்ல. உண்மையிலேயே கோடி கைகள் இணையும்போது வானம் வளையா விட்டாலும், நாம் அந்த வானத்தை எட்டிப் பிடிப்பது சாத்தியமாகும்.

Pin It