"கீழ்சாதி'யினரின் முன்னேற்றத்தைத் தடுக்கும் இந்துக்கள் நாகரீகம் அற்ற மக்களை நாகரீகம் உள்ள மக்களாக மாற்ற, இந்துக்கள் மனிதாபிமான அடிப்படையில் - எந்தவித முயற்சியையும் மேற்கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல; இந்துமதத்தின் பிடியில் உள்ள ‘கீழ்சாதி'யினர், ‘மேல் சாதி'யினரின் பண்பாட்டு நிலைக்கு உயர்வடைவதையும் ‘மேல்சாதி' இந்துக்கள் திட்டமிட்டுத் தடுத்தனர். இரண்டு எடுத்துக்காட்டுகளைக் கூறுகிறேன். ஒன்று ‘சோனார்'கள் பற்றி. மற்றொன்று ‘பதேரி பிரபு'க்கள் பற்றி. இவ்விரு சமூகத்தாரும் மராட்டிய மாநிலத்தில் நன்கு அறிமுகமான சாதிகள். மற்ற சமூகத்தாரைப் போலவே இந்த இரு சமூகத்தாரும் ஒரு முறை தங்கள் சமூக நிலையை உயர்த்திக் கொள்ள விரும்பி, பார்ப்பனர்களின் பழக்க வழக்கங்களையும் வழிமுறைகளையும் கடைப் பிடிக்க முயன்றனர்.

‘சோனார்'கள் ‘தைவந்த்ய பிராமணர்கள்' என்று தங்களை அழைத்துக் கொண்டு அதற்கேற்ப நடந்து கொண்டனர். வேட்டியைப் பஞ்சகச்சமாகக் கட்டிக் கொண்டார்கள். ‘வணக்கம்' என்ற சொல்லுக்கு ‘நமஸ்கார்' என்ற சொல்லைப் பயன்படுத்தினர். பஞ்சகச்சமும் நமஸ்காரமும் பார்ப்பனர்களுக்கே உரியது. எனவே, ‘சோனார்'கள் தங்கள் பாணியைப் பின்பற்றி தங்களைப் போல் பவனி வருவதை பார்ப்பனர்கள் விரும்பவில்லை. ஆகவே, பார்ப்பன பழக்க வழக்கங்களைப் பின்பற்ற ‘சோனா'ர்கள் மேற்கொண்ட முயற்சியை - ஆட்சிப்பீடத்திலிருந்த ‘பேஷ்வா'க்களின் துணையோடு பார்ப்பனர்கள் வெற்றிகரமாக முறியடித்தனர். பம்பாயில் வாழும் ‘சோனா'ர்கள் மீது இதற்காக ஒரு தடை ஆணையைக்கூட ‘கிழக்கிந்திய கம்பெனி கவுன்சில்' களின் தலைவர் பிறப்பிக்கும்படிச் செய்தார்.

ஒரு காலகட்டத்தில் விதவை மறுமணத்தை பதேரி பிரபு சாதியினர், தம் சாதி வழக்கமாகக் கொண்டிருந்தனர். பார்ப்பன சாதியில் விதவை மறுமணம் இல்லை என்ற குறிப்பான காரணத்தால், பிற்காலத்தில் பதேரி பிரபு சாதியில் சிலர் விதவை மறுமணத்தை - இழிவான ஒரு சமுதாய நிலையின் அடையாளமாகக் கருதத் தொடங்கினர். தங்கள் சாதியில் சமூக நிலையை உயர்த்தும் நோக்குடன் அதுவரை தங்கள் சாதியில் இருந்துவந்த விதவை மறுமண வழக்கத்தை விட்டொழிக்க, சில பதேரி பிரபுக்கள் முற்பட்டனர். இம்முயற்சி, அந்த சாதிக்குள் பிளவை ஏற்படுத்தியது. ஒரு பிரிவினர் விதவை மறுமணத்தை ஆதரித்தனர். மற்றவர்கள் எதிர்த்தனர்.

‘பேஷ்வா'க்கள் விதவை மறுமணத்துக்கு ஆதரவான பிரிவினருக்குத் துணையாக நின்று, பார்ப்பனர்களின் பழக்க வழக்கங்களை பதேரி பிரபுக்கள் பின்பற்ற முடியாதபடி தடுத்துவிட்டனர்.

நம் மரியாதைக்குரிய மதம் எது?

முகமதியர்கள் ஆயுத பலத்தால் அவர்களின் மதத்தைப் பரப்புவதாக இந்துக்கள் குறைகூறுகிறார்கள். கர்த்தரை விசுவாசிக்காதவர்களை, கிறித்துவர்கள் சித்திரவதை செய்தார்கள் என்று இந்துக்கள் ஏளனம் செய்கிறார்கள். ஆனால், உண்மையில் இவர்களில் நல்லவர்கள் எந்த மதத்தினர்? நம் மரியாதைக்குரியவர்கள் எந்த மதத்தினர்? மோட்சத்தை அடையும் வழி என்று எதைத் தங்கள் முழுமனதோடு நம்பினார்களோ, அதைப் பின்பற்றுமாறு விருப்பமில்லாத மக்களின் கழுத்தைப் பிடித்துக் கட்டாயப்படுத்திய கிறித்துவர்களும் முகமதியர்களுமா? அல்லது அறிவு ஒளியை மற்றவர்கள் அடைய முடியாதபடி மறைத்தவர்களும், அறியாமை என்னும் இருட் டறையில் மக்கள் தொடர்ந்து மூழ்கி இருக்கும்படி செய்தவர்களும், தம்மிடம் இருந்த அறிவையும் பாரம்பரியப் பெருமைகளையும் - அவற்றை விரும்பி ஏற்றுக் கொண்டு, அதைத் தங்கள் வாழ்க்கையாகவும் மாற்றிக் கொள்ளத் தயாராக இருந்தவர்களுக்கு, அவற்றைப் பகிர்ந்து கொள்ள மறுத்தவர்களும் ஆன இந்துக்களா?

முகமதியர்கள் குரூரமானவர்கள் என்றால், இந்துக்கள் அற்பர்கள். அற்பத்தனம் குரூரத்தைவிட கேவலமானது என்று கூறுவதில் எனக்கு தயக்கமே இல்லை.

10

மதம் மாறியவர்களுக்கு இந்து சமூகத்தில் இடமில்லை

இந்துமதம் ஒரு பரப்புரை (மிஷினரி) மதமாக இருந்ததா இல்லையா என்பது விவாதத்துக்கு உரிய ஒரு பிரச்சனை. இந்து மதம் ஒரு போதும் பரப்புரை மதமாக இருந்தது இல்லை என்று சிலர் கருதுகிறார்கள். வேறு சிலர் பரப்புரை மதமாக இருந்ததாகக் கூறுகிறார்கள். இந்து மதம் ஒரு காலத்தில் பரப்புரை மதமாகத்தான் இருந்தது என்பதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். அது பரப்புரை மதமாக இருந்திராவிட்டால், இந்தியா முழுவதும் பரவி இருக்க முடியாது. ஆனால், இன்று இந்து மதம் ஒரு பரப்புரை மதமாக இல்லை என்பதும் ஒத்துக் கொள்ளப்பட வேண்டிய உண்மை ஆகும். எனவே, இந்து மதம் பரப்புரை மதமாக இருந்ததா இல்லையா என்பது அல்ல பிரச்சனை. இந்து மதம் ஏன் பரப்புரை மதமாக நீடிக்க முடியவில்லை என்பதுதான் பிரச்சனை.

இந்துக்களிடையே சாதி அமைப்பு வளர்ந்ததால்தான், இந்து மதம் ஒரு பரப்புரை மதமாக நீடிக்க முடியவில்லை என்பதே என் கருத்து. சாதி, மதமாற்றத்துக்குப் பொருந்தி வராத ஒன்று. நம்பிக்கைகளையும் மதக்கோட்பாடுகளையும் புகுத்துவது மட்டும் மதமாற்றத்துக்குப் போதுமானது அல்ல. மதம் மாறியவர்களுக்கு சமூக வாழ்வில் ஓர் இடத்தை உறுதி செய்வது என்பது, அதைவிட முக்கியமான பிரச்சனை. மதம் மாறி வந்தவருக்கு சமூக வாழ்வில் எங்கு இடம் அளிப்பது, எந்த சாதியில் சேர்ப்பது என்பதுதான் அந்தப் பிரச்சனை. மற்ற மதத்தவர்களை தம் மதத்துக்கு மாற்ற விரும்புகிற எந்த ஓர் இந்துவையும் குழப்புகிற பிரச்சனை இதுதான்.

மன்றங்களில் எவர் வேண்டுமானாலும் உறுப்பினர் ஆவது போல, சாதிகளில் யார் வேண்டுமானாலும் உறுப்பினர் ஆக முடியாது. சாதி சட்டப்படி, எந்த ஒரு சாதியிலும் உறுப்பினர் ஆகும் உரிமை, அந்த சாதியில் பிறந்தவருக்கு மட்டுமே உரியது. சாதிகள் சுயேச்சையானவை. புதியவர்களை சமூக வாழ்க்கையில் குறிப்பிட்ட சாதியில் சேர்த்துக் கொள்ளுமாறு - எந்த சாதியையும் நிர்பந்திக்கும் அதிகாரம் எவருக்கும் இல்லை. இந்து சமூகம் சாதிகளின் சேர்க்கையாக இருப்பதாலும், ஒவ்வொரு சாதியும் மூடப்பட்ட அமைப்பாக இருப்பதாலும் - மதம் மாறியவர்களுக்கு இந்து சமூகத்தில் இடம் இல்லை. ஆக, இந்து மதம் விரிவடையவும் மற்ற மதத்தினரை இந்து மதத்துக்குள் இழுத்துக் கொள்ளவும் தடையாக இருப்பது சாதியே. சாதிகள் இருக்கும்வரை இந்து மதத்தைப் பரப்புரை மதமாக்க முடியாது. ‘சுத்தி' (shudhi) என்பது, அறிவீனமானதும் பயனற்றதுமான நடவடிக்கையே ஆகும்.