Middle East refugees

 இந்த மனித வாழ்க்கை எவ்வளவு துயரமானது!. ஒருவேளை சோற்றுக்காவும், ஒரு கெளரவமான வாழ்க்கைக்காகவும் இந்த மனிதக்கூட்டம் எத்தனை எத்தனை துயரத்தை அனுபவிக்கின்றது. மதங்கள் உத்திரவாதப்படுத்துவதாய் சொன்ன சொர்க்கங்கள் எல்லாம் வெறும் மனிதப் பிணங்கள் நிறைந்த சூடுகாடாய் மாறிப்போக, பாலும் வயிற்றை நிரப்பிக் கொள்ள தன்னுடைய தன்மானத்தை விட்டு, சுயமரியாதையை விட்டு, சொந்த பந்தங்களை விட்டு கடல் கடந்து காணா தூரம் போகும் துயரம் ‘இதற்காகவா மனிதனாய் பிறந்தோம்’ என ஒவ்வொரு கணமும் நம்மை கதற வைக்கின்றது.

 சாதிகளும், மதமும், இனமும், முதலாளியமும் கோரத் தாண்டவமாடும் உலகில் இதில் எதில் ஒன்றாலும் காப்பாற்றப்பாடத அந்த மனித உயிர் எங்கோ கண்காணாத தேசத்தில் உள்ள தனக்கான கருணையை நினைத்து நம்பிக்கையோடு கிடைத்ததை எடுத்துக்கொண்டு உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடுகின்றது. காற்று புயல், மழை என அனைத்தையும் கடந்து இந்த உயிரை எப்படியும் வாழ வைக்க வேண்டும் என அரும்பாடுபடுகின்றது. தன் சந்ததியில் யாராவது ஒருவன் மிச்சமிருந்தாலும் தன் பரம்பரையின் தொடர்ச்சியைத் தக்க வைக்க முடியும் என அபிலாசைப்பட்டு அந்த மனம் எல்லாவற்றிக்கும் துணிந்து அந்த நோவாவின் படகில் ஏறுகின்றது.

 ஆனால் நோவாவின் படகும் கூட முதலாளியத்தால் விலைக்கு வாங்கப்பட்டுவிட்டதை அந்த ஏழை அகதிகளால் உணர முடிவதில்லை. கையில் இருக்கும் பணம், நகை என அனைத்தையும் பிடுங்கிக் கொண்டு புது சொர்க்கத்தைக் காட்டுவதாய் புறப்பட்ட அந்தப் பேராசைப் பிடித்த நோவாவின் படகுகள் நடுக்கடலில் அந்த ஏழை அகதிகளை தேவகுமாரனின் மீண்டுவர முடியாத ராஜ்ஜியத்துக்குள் அனுப்பி வைத்து விடுகின்றன.

 கொத்துக்கொத்தாய் மனிதப் பிணங்கள் மிதக்கும் அந்தக் காட்சியை தேவகுமாரன் தன்னுடைய கருணை மிதக்கும் கண்களால் காண்டு களிப்படைகின்றான். சிலுவையை சுமந்த போது தான் அடைந்த பெரும் துயரத்தை இப்போது வஞ்சகத்துடன் பழிவாங்கி ஆற்றுப்படுத்திக் கொள்கின்றான்.

 அல்லாவின் ராஜ்ஜியத்தில் இருந்தும், தேவகுமாரனின் ராஜ்ஜியத்தியத்தில் இருந்தும் அடித்து விரப்படும் அவர்களின் குழந்தைகள் திக்குத்தெரியாத திசையை நோக்கி தங்களது பயணவழியை செலுத்திக் கொண்டு இருக்கின்றார்கள். மூலதனத்தின் முன் அல்லாவும், ஏசுவும் மண்டியிட்டு தங்களது பிள்ளைகளை மரணதேசத்தில் ,தவித்துக்கடவும் என மனம்நொந்து சபிக்கின்றார்கள்.

 கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாய் போனவர்களில் 700க்கும் மேற்பட்டவர்கள் மத்திய தரைக்கடல் பகுதியில் நிலவிய மோசமான வானிலையால் படகு கவிழ்ந்து மாண்டு போயிருக்கின்றார்கள். 2014 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை ஏறக்குறைய 8000 அகதிகள் கடலில் முழ்கி உயிரிழந்திருக் கின்றார்கள். அகதிகள் கடலில் முழ்கி இறக்காத நாளே இல்லை என்னும் அளவுக்கு அவர்களது இறப்புவிகிதம் இருக்கின்றது.

 மிக மோசமாக உள்நாட்டு போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சிரியா, எத்தியோப்பியா, ஆப்கானிஸ்தான், சோமாலியா போன்ற நடுகளை சேர்ந்தவர்களே பெரும்பாலும் அகதிகளாய் இடம்பெயருகின்றனர். கொடுமையான வறுமையாலும், மதத் தீவிரவாதத்தாலும் இன்று அந்த நாடுகள் மனிதர்கள் வாழுவதற்குத் தகுதியற்ற இடமாக மாறியுள்ளன.

 உலகில் அனைத்துவிதமான வளங்களையும் தன்னகத்தே கொண்ட ஆப்பிரிக்க நாடுகள் அமெரிக்க, ஐரோப்பா போன்ற முதலாளித்துவ நாடுகளின் தாக்குதலால் இன்று உருக்குலைந்து கிடக்கின்றன. மக்களைப் பற்றி கவலைப்படாத ஏகாதிபத்திய அடிவருடி ஆட்சியாளர்கள் அங்கு திட்டமிட்டு ஆட்சியில் அமர்த்தப்படுகின்றனர். தங்களுக்கு ஏற்ற பொம்மை அரசை அந்த நாடுகளில் ஏற்படுத்திக் கொள்ளும் ஏகாதிபத்திய நாடுகள் அந்த நாடுகளின் வளங்கள் அனைத்தையும் கொள்ளையிட்டு தங்களது மூலதன தேவையைப் பூர்த்தி செய்து கொள்கின்றன. இப்படி ஐரோப்பிய , அமெரிக்க நாடுகள் தங்களது மேலாதிக்கத்தை அந்த மக்கள் மீது செலுத்துவதற்கு மதம் ஒரு தடையாக எப்போதுமே இருந்ததில்லை. எத்தியோப்பியா போன்ற பல ஆப்பிரிக்க நாடுகள் தங்களை கிருஸ்தவ நாடுகளாக அறிவித்துக் கொண்டவைதான். ஆனால் இன்று அந்த நாடுகளை கொள்ளையிட்டு லட்சக்கணக்கான மக்களை பட்டினி சாவில் தள்ளிய அமெரிக்க, ஐரோப்பா போன்ற நாடுகளும் கிருஸ்துவத்தைக் கடைபிடிப்பவைதான்.

 அதே போல சிரியா போன்ற நாடுகள் தங்களை இஸ்லாமிய நாடுகளாக அறிவித்துக் கொண்டவை என்ற போதும் எந்த ஒரு இஸ்லாமிய நாடும் அந்த மக்களுக்கு உதவ முன்வருவதில்லை. இஸ்லாமிய அரசை அங்கு அமைக்கப் போவதாக கூறி அந்த மக்களை கொன்று போட்டுக்கொண்டிருக்கும் ஐஎஸ்ஐஎஸ் போன்ற மத பயங்கரவாத அமைப்புகளுக்குப் பல இஸ்லாமிய நாடுகள் பெரிய அளவில் நிதிகொடுத்து அவர்களுக்கு உதவி வருகின்றன.

 தங்களது நாடுகளில் நிலவும் மோசமான வறுமையாலும், உள்நாட்டு போர்களாலும், மத தீவிரவாதத்தாலும் உலகம் முழுவதும் ஏறக்குறைய 5 கோடியே 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாக தஞ்சம் அடைந்திருப்பதாக ஐ.நா சபையின் அகதிகள் பராமரிப்பு மையம் தெரிவித்துள்ளது. இப்படி அகதிகளாக பல்வேறு நடுகளில் தஞ்சம் அடைந்திருக்கும் அந்த மக்களின் அவலநிலையை சொல்லில் சொல்ல முடியாது.

 பல நாடுகள் அகதிகளை தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்காமல் தங்கள் நாடுகளின் எல்லையை இழுத்து மூடிவிடுகின்றனர். பல நாடுகள் அகதிகளை வேண்டா வெறுப்பாகவே ஏற்றுக் கொள்கின்றனர். அப்படியே ஏற்றுக் கொண்டாலும் அந்த மக்களுக்குத் தேவையான எந்த அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்காமல் அந்த மக்களை பிச்சைக்காரர்களைவிட கேவலமாகவே நடத்துகின்றனர். இது எல்லாம் அகதிகளாக இடம்பெயரும் அந்த மக்களுக்கு தெரியாத ஒன்றல்ல. தெரிந்தே தான் போகின்றனர். எப்போதாவது தங்கள் நாட்டில் பிரச்சினைகள் தீர்ந்து நிம்மதியாக வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை உருவாகும், அதுவரை உயிர்பிழைத்திருப்பதற்கு இதை விட்டால் வேறு வழியில்லை என்ற நிலையிலேயே அவர்கள் அகதிகளாக தஞ்சம் கோருகின்றார்கள்.

 ஐரோப்பா, அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகள் நினைத்தால் அந்தத் தஞ்சம் கோரும் அகதிகளை பாதுகாப்பாக அழைத்துச் சென்று தங்கள் நாடுகளில் அடைக்கலம் கொடுக்க முடியும். கொடுக்க வேண்டிய தார்மீகக் கடமை அந்த நாடுகளுக்கு உள்ளது. இன்று இந்த நாடுகள் உலக வல்லரசாக இருப்பதற்குக் காரணமே அந்த ஆப்பிரிக்க கருப்பின மக்கள் தான். அவர்களின் உடல்களின் மீது கட்டப்பட்டதுதான் இவர்களின் வல்லரசுக்கோட்டை.

 உலகின் பெரும்பகுதி நாடுகள் ஏகாதிபத்தியங்களால் மறுகாலனி ஆக்கப்பட்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில் இந்தப் பிரச்சினைக்கான தீர்வு என்பது அந்தந்த நாடுகளில் உள்ள உழைக்கும் மக்களே தேடிக் கொள்ள வேண்டிய ஒன்றாக இருக்கின்றது. அடிவருடி சர்வாதிகார அரசுகளுக்கு எதிராகவும், மதத்தீவிரவாதத்திற்கும் எதிராகவும் ஒருங்கிணைந்த மக்கள் போராட்டமே இந்தப் பிரச்சினைகளுக்கான அடிப்படை தீர்வாகும். ஆனால் அதை சாதிப்பதற்கு அந்த மக்களுக்கு ஒரு கோட்பாட்டு ரீதியான மார்க்சிய பலத்தை அளிப்பதற்கு அந்த நாடுகளில் வலுவான நிலையில் இன்று கம்யூனிஸ்ட் கட்சிகள் இல்லை. இப்பொழுது இருக்கும் நெருக்கடிகள் முற்றி அப்படிப்பட்ட சூழ்நிலை அங்கு ஏற்படும்வரை நாம் காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை. அதுவரை மத்திய தரைக்கடலில் மிதந்துவரும் அகதிகளின் பிணங்களை நாம் கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியது தான்.

- செ.கார்கி

Pin It