தற்போதெல்லாம் ஊடகங்களை கவனிக்கத் தொடங்கினாலேயே கோடி கோடிகளாகத்தான் நம் செவிகளில் விழுகின்றன. தொலைபேசி அலைக்கற்றையில் தொடங்கி, சர்க்கரை, கோதுமை, உரம் என்று தொடர்ந்து அரசுத் துறைகளுடன் அந்தக் கோடிகள் நின்று விடவில்லை. இடைத்தேர்தல்களில் வெற்றியை வாங்குவதற்காக பல கோடிகளைக் கொட்டத் தொடங்கினார்கள். கோடிகள் முதலீடு செய்து தேர்தல் வெற்றிகளை வாங்கினார்கள்; தோற்றவர்களும் கூட சில கோடிகள் கொட்ட வேண்டியதாக இருந்தது.

ஒரு சாமியார் ஒழுக்கம் கெட்டு நடந்துகொள்ள அந்த உயர்ந்த சேவையை உலகிற்கு உண்ர்த்தாமல் இருப்பதற்காக ஒரு பெரியய ஊடகம் ஒரு பெரிய தொகையைக் கேட்டதாகவும் அதன் தீவிரத்தன்மை புரியாமல் அவர் நடந்துகொண்டு விட்டதால் அவரது கயமைச்செயல் இப்பொது உலகத்தின் முன் தெரிந்து விட்டது. அதிலும் நமது ஊடகங்கள் எந்த வரையறையும் இல்லாமல் அவர்பற்றிய படங்கள் செய்திகளை அச்சிலும் இணைய தளங்களிலும் தொடர்ந்து வெளியிட்டுப் பலகோடிகளை சுருட்டியதாகப் பல ஊடகங்களே கூறுகின்றன.

அதற்குப் பிறகு ஐ.பி.எல் பூதம் வெளிவந்துள்ளது. இதிலும் பல கோடிகள் முறைகேடுகள் வெளிவந்து சந்தி சிரிக்கத் தொடங்கியது. தொடர்புடைய மந்திரி தொடக்கத்தில் முரண்டுபிடிக்க வேறு வழி இல்லாமல் முன்பே இரண்டு தருணங்களில் பதவியைப் பறிகொடுத்திருக்க வேண்டிய அவர் இப்போது வேறு வழி இல்லாமல் விலகினார். அந்த கோடிகள் அவரை மட்டும் சாய்க்கவில்லை. ஐ.பி.எல் தலைமையையும் இன்னும் இரண்டு மந்திரிகள், மந்திரி குமாரர்களையும் கைகாட்டுகிறது.

ஐபிஎல் கோடிகளை மக்கள் மறப்பதற்குள் இந்திய நாட்டில் மருத்துவம் படிக்க மக்களைக் கோடிக்கணக்கில் சுரண்டிக் கொள்ளையடிக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்திற்காக அவர்களிடம் 1500 கோடி ரூபாயும் 250 கோடி ருபாய் மதிப்புள்ள நகைகளையும் கொள்ளை அடித்த மிகப் பெரிய மனிதர் வசமாக அகப்பட்டிருக்கிறார். அவருடன் இன்னும் பலர் அரங்கேற இருக்கிறார்கள். சற்று நாட்களுக்கு முன்புதான் போலி, காலாவதி, கலப்பட மருந்து விற்பனையில் மனித நேயமற்ற மஹா மனிதர்கள் பலர் கோடிகளுக்கு ஆசைப்பட்டு அரங்கேறினார்கள்.

இப்படி கொஞ்சம் கூட தடை இல்லாமல் மக்கள் பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் இவர்களை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்கப் போகிறோமா? இனியாவது இது போன்ற மனிதத் தன்மையற்ற நாட்டைப் பல மடங்கு பின்னுக்குத் தள்ளுகிற இவ்வாறான இழிசெயல்கள் தொடராமல் இருக்க மாற்று அரசியலைச் சிந்திக்கப் போகிறோமா? இல்லை நடிகைக்கு குழந்தை பிறந்தால் அல்லது விவாகரத்து நடந்தால் இவற்றை மறந்து விடப் போகின்றோமா? இதுதான் நம்முன் உள்ள முக்கிய வினா.

இதே சமயத்தில் இன்னொரு உண்மை நினைவுக்குள் நிழலாடுவதைத் தடுக்க முடியவில்லை. இப்படிப்பட்ட முறைகேடான செயல்களால் கோடிகளை ஈட்டும் கோமான்கள் வாழும் இந்த நாட்டில்தான் பல கோடி ஏழை மக்கள் இன்னும் நாளொன்றுக்கு வெறும் இருபதே ரூபாய் ஈட்டிக் கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

-புதுவைஞானகுமாரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It