சமூகம் என்பது குடும்ப உறவுகளில் இருந்தே வெளிவருகிறது. சமூக அமைப்பிற்கு குடும்ப உறவு முறைகள் தேவையாகவும், முன்னிலைப்படுத்தப்பட்டதாகவும் நடைமுறையில் இருக்கின்றன. குடும்பங்கள் சமூகத்தைச் சார்ந்து இருப்பதைப் போலவே, சமூகம் என்பது குடும்ப உற்பத்தியின் நடுவமாக செயல்படுகிறது. குடும்பங்களில் ஏற்படும் சீரழிவுகள், ஏற்ற இறக்கங்கள், பண்பாட்டு நெறிமுறை மீறல்கள், தனிமனித ஒழுக்க சிதறல்கள் இவைகள்தான் சமூக சீரழிவுக்கு நேரிடை காரணமாகும். ஆகவே, குடும்பம் என்பது சமூகத்தின் ஒரு உறுப்பு. இன்று சமூகம் என்பது நாம் பார்க்கும் குடும்ப உறவுகள் சிதைவு நிலையை மிக வேகமாக நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றன.  குறிப்பாக இந்த சமூகத்தில் புற்றீசல் போல முளைத்திருக்கும் முதியோர் இல்லங்கள் குடும்ப சீரழிவின் அடையாளங்களாகும். பெற்றோர் என்பவர்கள் தம்மை வளர்த்தெடுக்க, தம்மை ஒருநிலைப்படுத்த, இயக்க, தேவைப்பட்ட ஒரு அடிப்படை காரணியாகும். தாய் தந்தையரின் தத்துவார்த்த கோட்பாட்டியல், நம்பிக்கை இவைகளை தவிர்த்து, முதியோர் என்கிற அடிப்படையில் பெற்றோரை வைத்து காப்பாற்றுவது ஒரு மகனின் குடும்ப கடமையும், சமூக பொறுப்பும் ஆகும்.

ஒரு பழம்பெரும் இங்கிலாந்து கதை இருக்கிறது. ஒரு பெற்றோருக்கு ஒரே மகன். அவனை மிகவும் சீராட்டி வளர்க்கிறார்கள். ஆனால் அந்த குடும்பத்தில் தமது தந்தையின் தந்தையான அந்த சிறுவனின் தாத்தா, ஒரு மூளையில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு மரத்தால் செய்யப்பட்ட ஒரு தட்டிலே தினம் உணவு பரிமாறப்படுகிறது. குடும்பத்தில் இருக்கும் தாய், தந்தை, மகன் மூவரும் பீங்கான் தட்டிலே மிகவும் ஆடம்பரமாக உணவு உண்ணும்போது, தனது தாத்தாவுக்கு மட்டும் இப்படி மரத்தட்டிலே உணவு பரிமாறப்படுவதை அச்சிறுவன் தொடர்ந்து கவனிக்கிறான்.  ஒருமுறை தன் தாயாரிடம் இதை குறித்து கேட்கிறான். அம்மா, நாம் ஏன் தாத்தாவுக்கு மட்டும் மரத்தட்டிலே உணவு பரிமாறுகிறோம். நம்மோடு அமர்ந்து அவரை சாப்பிட நாம் அனுமதிக்க மறுக்கிறோமே ஏன்? என. இந்த ஏன் என்ற கேள்விக்கு அவரின் தாய், ஒரே வரியில் பதில் சொல்கிறார், உங்கள் தாத்தாவுக்கு வயதாகி விட்டது, அதனால்தான் என்று. சில நாட்கள் கழிகிறது. அந்த சிறுவன் ஒரு மரத்துண்டை எடுத்து கையில் கிடைத்த சிறு உளியால் அதை செதுக்கிக் கொண்டிருக்கிறான். இதைப்பார்த்த அச்சிறுவனின் தந்தை கேட்கிறார், என்ன செய்துக் கொண்டிருக்கிறாய் என. அச்சிறுவன் பதிலுரைக்கிறான், வயது முதிர்ந்த காலத்தில் நீங்கள் சாப்பிட தட்டு தயாரித்துக் கொண்டிருக்கிறேன் என.  அதிர்ந்து போகிறார் அச்சிறுவனின் தந்தை. இப்படி அந்த கதை நிறைவு பெறுகிறது.

முதியோர்களை காப்பது என்பது, பெற்றோர் என்பதை கடந்து, அவர்கள் இயலாமையை கருத்தில் எடுத்துக் கொண்டு நாம் பராமரிக்க வேண்டும் என்பதை நம் கடமையாக கொள்வது, சமூக நலத்திற்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். இந்தியாவில் மூத்த குடிமக்களை பாதுகாப்பதற்கென்றே அரசியல் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பது, இந்தியாவில் இருக்கும் நமக்கு மனிதாபிமானத்தின் மேல் சந்தேகத்தை எழுப்புகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த நாமக்கல் மாவட்டத்தில் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு திருச்செங்கோடு வட்டத்திற்கு உட்பட்ட சூரியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்கின்ற 77 வயது முதியவர் அளித்திருக்கிறார்.  தம்மிடமிருந்த 15 விசைத்தறிகளை தனது மகன் சாமிநாதனுக்கு 10 விசைத்தறிகளை பகிர்ந்து கொடுத்து, அடுத்து 5 தறிகளை மாணிக்கம் கவனித்து வந்திருக்கிறார்.

15 நாட்களுக்குள்ளாக தந்தைக்கும் மகனுக்கும் இடையே நிகழ்ந்த கருத்து பேதம், தந்தை மாணிக்கத்தை வீட்டை விட்டே மகன் சாமிநாதன் விரட்டியிருக்கிறார். இதன் தொடர்ச்சியாக மூத்த குடிமகன் பாதுகாப்பு சட்டத்தின்கீழ், குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதை மிகக் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் சகாயம் தெரிவித்திருக்கிறார். ஒரு தந்தை, மகனால் விரட்டப்பட்டு, தமக்கான உரிமையை அரசியல் சட்டத்தின்படி பெறும் அவலம், இந்திய குடும்ப உறவு முறைகளை கேலி செய்வதைப்போல் இருக்கிறது. குறிப்பாக சமீப காலங்களில் நீதி மன்றங்களில் குவியும் மணவிலக்கு வழக்குகள், இந்திய குடும்பங்களில் உள்ள உறவு முறையை மிகவும் எச்சரிக்கை செய்கிறது. குடும்பங்களில் கணவன்-மனைவிக்குள்ள உறவு, பெற்றோர்-பிள்ளைகளுக்கு உள்ள உறவு சிதைவடைந்து காணப்படுகிறது. குடும்பங்களில் மனம் விட்டு பேசிக் கொள்வதோ, தமது பிரச்சனைகளை தீர்த்து கொள்வதற்காக எண்ணங்களை பகிர்ந்து கொள்வதோ இன்று முற்றிலுமாய் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. ஒரு காலத்தில் கூட்டுக்குடும்பங்களாய் வாழ்ந்து வந்தவர்கள் சொந்த அனுபவத்தின்கீழ் பெற்ற லாபத்தை இளையவர்கள் பகிர்ந்து கொள்வதென்பது அவர்கள் வாழ்க்கைக்கு பெரும் துணை புரிந்தது.

இன்று நகர வாழ்க்கையை பொறுத்தவரை, ஒருவீட்டில் ஒரு ஆண், ஒரு பெண் என்கின்ற குடும்ப அமைப்பே பெரும்பாலுமாய் காட்சித் தருகிறது. ஒருவேளை இவர்களுக்கு ஒரு குழந்தை இருந்தால், இந்த மூவருக்குமான உறவு பெரும் கேள்விக் குறித்தான். கணவன் பணிக்குச் சென்று திரும்புவதற்குள் மகன் உறங்கி இருப்பான். மகன் உறங்கி விழிப்பதற்குள் கணவர் சென்றிருப்பார். இந்நிலையில் தந்தைக்கும் மகனுக்குமான உறவு என்பது ஒரு நெருக்கமான உறவாக இல்லாமல், ஒரு கடமைக்கான உறவாக தொடர்கிறது.  ஒருவேளை பெற்றோர் இருவரும் பணிக்கு செல்பவர்களாக இருப்பார்களாயின், குழந்தை ஏறக்குறைய ஒரு அனாதை தன்மையில்தான் வீடுகளில் இருப்பதை காண முடிகிறது. அதிக பட்சமாக அந்த குழந்தையின் நண்பராக இருப்பது வீட்டில் உள்ள தொலைக்காட்சி பெட்டி, இல்லையெனில் கூடுதலாக கணினி, இவைகளை தவிர்த்து உறவு என்று சொல்லிக் கொள்வதற்கு அந்த குழந்தைக்கு யாரும் இல்லை.

இன்று பள்ளிகளில் தரப்படும் நெருக்கடிகளால் குழந்தைகள் ஒன்றிணைந்து விளையாட முடியாத நிர்பந்தம் நீடிக்கிறது. காலையில் பள்ளிக்கு செல்லும் குழந்தை மாலை வந்தவுடன், தனி பயிற்சிக்கு செல்ல வேண்டும். தனி பயிற்சிக்கு சென்று வந்த பின்னர், பள்ளியில் கொடுத்த வீட்டுப் பாடங்களை முடிக்க வேண்டும். பிறகு உறங்கி விழிக்க அந்த குழந்தைக்கு நேரம் சரியாக இருக்கிறது. மனம் விட்டு பேச, விளையாட, அந்த குழந்தைக்கென்று யாரும் இல்லை. உலகமயமாதலும், வர்த்தக தன்மையாலும் கல்வி, வேலைவாய்ப்பு என எல்லாமே போட்டியாக இருப்பதால் முதல் மதிப்பெண் போட்டியும், முதல் மதிப்பெண்ணுக்கு பிறகு வேலைவாய்ப்பு போட்டியும் மிகக் கடுமையாக இருக்கிறது.

இவர்களின் கல்விக்குப் பிறகு வேலைவாய்ப்பை பெற்றவுடன், இத்தனை காலம் தாம் பெற்ற மன இறுக்கத்திலிருந்து விடுபடுவதற்கு பதிலாக, வேலைவாய்ப்பளித்த நிறுவனங்கள் அவர்களை சிந்திக்க விடாமல், பிழிந்து சக்கையாக வெளியேற்றுகிறது. இந்த நிலையில், அவர்களுக்கு தமது தாய், தந்தையரைக் குறித்து சிந்திக்கவோ, அல்லது அவர்கள் முதுமையை ஆதரிக்கவோ மனம் இல்லாதவர்களாக மாறிவிடுகிறார்கள்.  இது ஒருபுறம் என்றால், வேறொருபுறம் இந்த சந்தை பொருளாதாரத்தை வெற்றிக் கொள்வதற்காக, தன் பிள்ளைகளை கல்வி என்ற பெயரிலே ஒரு கொடுங்கோலராக தாயும், தந்தையும் நெருக்குவதால், இவர்கள் நமக்கு உறவு என்ற நிலையைதாண்டி, நமது காவலர்கள் என்கிற உளவியல் பண்பு இக்குழந்தைகளின் மனதில் அழுத்தமாகி விடுகிறது. இந்த மனவலி இவர்களை பெற்றோரை நெருக்க செய்கிறது.

தமிழ் திரைப்படங்கள் பலவற்றில் தந்தையை வாடா, போடா என்பதும், தந்தையை கேலி பேசுவதும் நகைச்சுவை காட்சியைப் போல் சித்தரிக்கப்படுகிறது. இது நாகரீகம் என கருதப்படுகிறது. வெறும் பணம் மட்டுமே வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றிவிடும் என்கின்ற தவறான மனப்போக்கு எல்லோர் மனதிலும் இருப்பதால், உறவு என்கின்ற அந்த உணர்ச்சி அங்கே பொருளற்றதாக மாறிவிடுகிறது. ஒருமுறை சென்னை புறநகர் பகுதியில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தை காண சென்றபோது, நமக்குள் ஏற்பட்ட மன அழுத்தம் நீங்குவதற்கே சில நாட்கள் எடுத்தது.

ஒரு முதிய தாய், தனியறையில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார். அந்த அறையில் அனைத்து நவீன வசதிகளும் செய்யப்பட்டிருக்கிறது. அந்த தாயை காண, தன் மகன் வருகிறார். மகன் மிகப் பெரிய அரசு அதிகாரியாக பணியாற்றுபவர். அவர் தாயை அந்த அறையில் சில நிமிடங்கள் சந்தித்து பேசிவிட்டு, விடைபெறுகிறார். அவர் செல்லும் பாதையை அந்த தாய் கண்ணீரோடு நின்று பார்க்கிறார். பின், திரும்பி அறைக்குள் வந்த அந்த தாய், கதறி கதறி அழுகிறார். இப்படி காப்பகங்களில் விட்டு இவனை படிக்க வைத்தால், இவனின் வாழ்வு சரியாக இருக்காது என்பதற்காக பக்கத்திலேயே வைத்து படிக்க வைத்தேனே, இப்போது என்னைக் காப்பகத்தில் சேர்த்துவிட்டு தன் மனைவியின் சொல்லிற்காக என்னை அனாதையாக்கிவிட்டானே என்று அந்த தாய் சொன்ன செய்தி, உண்மையிலேயே நமக்கு மன உளைச்சலைத்தான் ஏற்படுத்துகிறது. இன்றுவரை அந்த காட்சி, நம் மனங்களிலிருந்து மறையவே இல்லை. அந்த மகன் கார் திரும்பும்வரை, அந்த தாய் கரம் அசைத்துக் கொண்டே இருந்தார். ஆனால் மகன் திரும்பிக்கூட பார்க்கவில்லை.

இப்படி உறவுகள் சிதைவது எதனால்? ஏன்? இது எப்படி சீராக்குவது? என்கின்ற பல்வேறு சிந்தனைகள் இயல்பாக சமூக அக்கறை கொண்ட எல்லோருக்கும் எழும். நாம் இதை எப்படி மாற்றப்போகிறோம். உறவு அறுந்த இந்த வாழ்வு எப்படி நமக்குள் ஒன்றிப்போனது. இன்று தமக்கு சோறு போட வேண்டும் என்பதற்கு மகன் மீது வழக்கு போடவேண்டிய ஒரு கேடு நம்முடைய பண்பாட்டிற்கு எப்படி நேர்ந்தது? ஒரே காரணம், இது முதலாளித்துவம் வகுத்த உலகமயமாக்கல், பண்பாட்டு மயமாக்கல் கொள்கைகளால் ஏற்படுத்தப்பட்டது. உலகமயமாக்கலில் தேசிய இனம் கிடையாது, தேசிய மொழி கிடையாது, தேசிய கலாச்சாரம் கிடையாது, தேசிய பண்பாடு கிடையாது, குடும்ப உறவும் கிடையாது. ஒரே மொழி, லாபம் ஒன்றே குறிக்கோள். லாப வெறிக்காக பண்பாடு சிதைகிறது. தேசிய இனங்கள் ஒடுக்கப்படுகிறது. குடும்ப உறவுகள் சிதைக்கப்படுகிறது. லாபத்திலிருந்தே மாந்த வாழ்வு சிதைவை தொடங்கியிருக்கிறது. இதை சீர்படுத்த நாம் என்ன செய்யப் போகிறோம்.

-கண்மணி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It