60 ஆண்டுகளுக்கு முன்பு, திராவிடம் என்னும் பெயரில் தமிழ்த் தேசியம், இந்திய தேசியம், சர்வதேசியம் என்னும் மூன்று கோட்பாடுகள் மக்கள் முன்னால் வைக்கப்பட்டன. முறையே, திமுக, காங்கிரஸ், பொதுவுடமைக் கட்சிகள் ஆகியன அந்தக் கொள்கைகளை முன்வைத்தன. அன்று மேடைகளே மிகப்பெரிய ஊடகங்களாகத் திகழ்ந்தன! வானொலிச் செய்திகள் ஓரளவு மக்களைச் சென்றடைந்தன. தொலைக்காட்சிகள், கணிப்பொறிகள், கைபேசிகளை அறியாத காலம் அது! வாக்குகளைப் பெற, ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் கொடுத்து, சாமி படத்துக்கு முன்னால் சத்தியம் வாங்கிக் கொண்ட நிகழ்ச்சிகளும் சில இடங்களில் நடந்தன!
இன்றைக்குத் தேர்தல் காட்சிகள் முற்றிலுமாக மாறிப் போய் இருக்கின்றன! கொள்கை பேசுவோர் மிக மிகக் குறைந்துவிட்டனர். நாட்டுக்கு செய்தவைகளைச் சொல்லி ஆளுங்கட்சியும், ஆளுங்கட்சியின் மீது குறைகள் சொல்லி எதிர்க்கட்சிகளும், திரைப்படக் கவர்ச்சி, மேடை ஆவேசங்களை முன்வைத்துச் சில கட்சிகளுமாக இன்றையத் தேர்தல் களம் காட்சியளிக்கிறது!
தேர்தலில் ஊடகங்களின் பங்கு மிகப் பெரியதாக மாறி இருக்கிறது! கணிப்பொறிகள், கைபேசிகள் வந்த பிறகு, ஒவ்வொருவரும் முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தங்கள் கருத்துகளை மிக எளிதாகப் பதிவிட முடிகிறது! பல நேரங்களில் தவறான கருத்துகள் மிக விரைவாகப் பரவுகின்றன. செயற்கை நுண்ணறிவின் உதவியால் பொய்யான, போலியான படங்களும், செய்திகளும் கூட மக்களை எளிதில் சென்றடைகின்றன!
இந்தக் கட்சியிலிருந்து அந்தக் கட்சிக்கும், அந்தக் கட்சியிலிருந்து இந்தக் கட்சிக்கும், குறுக்கும் எடுக்குமாகச் சிலர் மாறி மாறி ஓடிக் கொண்டிருக்கின்றனர். சில சிறிய கட்சிகள் கூட்டணிகளையே மாற்றிக் கொண்டிருக்கின்றன. கூட்டணியில் இடம் கேட்கும் போது ஒரு மாதிரியாகவும், இடம் கிடைக்காத நேரத்தில் வேறு மாதிரியாகவும், சில கட்சிகள் பேசுவதையும் பார்க்கிறோம்!
எந்தத் துறையில் இருப்பவர்கள் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்! ஆனால் அரசியலுக்கு வந்து, சில ஆண்டுகளாவது மக்கள் தொண்டாற்றிய பிறகு மக்களிடம் வாக்குகளைக் கேட்பது ஒரு வகை! ஆனால் திரைப்படப் புகழை வைத்துக் கொண்டு நேரடியாக முதல்வர் நாற்காலிக்கு முந்துவது இன்னொரு வகை! இரண்டாவது வகை இப்போது கூடி இருக்கிறது!
அதேபோல மேடைகளில் ஆவேசமாகவும், அநாகரிகமாகவும் பேசுகின்ற போக்கும் இன்று மிகுந்துள்ளது !
இவை அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டு, எந்தக் கட்சி அல்லது கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நாட்டுக்கு நல்லது என்பதை மக்கள் உணர்ந்து வாக்களிப்பது தான், அடுத்த தலைமுறையைக் காப்பாற்றும் !
தமிழ்நாட்டு அரசியலின் இன்றைய சூழலில், திமுக கூட்டணியே நாட்டையும், நம் பிள்ளைகளையும் காக்க வல்லது என்பதைப் பல புள்ளி விவரங்களோடும், சான்றுகளோடும் மக்கள் முன்னால் நாம் வைக்கிறோம்!
மக்கள் சிந்தித்து முடிவெடுப்பார்கள் என்னும் நம்பிக்கையில் காத்திருக்கிறோம்!
- சுப.வீரபாண்டியன்