தொடர்புடைய படைப்புகள்

தேவபாடை என்னும் gibberishன் பின்னணியில் பல நூதனமான சடங்குகளை உள்ளடக்கிய கணபதி ஹோமம், திதி போன்ற விளங்காத பூஜைகளில் அவ்வப்போது வேறு வழியில்லாமல் அமர்ந்திருக்க வேண்டிய சூழல் அமையும் போதெல்லாம் அநியாயமாக நேரம் வீணடிக்கப்படுவதாய் உணர்ந்திருக்கிறேன். வீணடிக்கப்படுவதையும் தாண்டி என் நேரத்தைக் கொல்கிறார்கள் என்ற அளவிற்கு எரிச்சலாக இருக்கும். பிற நேரங்களில் ஒன்றுமே செய்யாமல் எதைப் பற்றியுமே யோசிக்காமல் சும்மா தேமே என்றிருக்கும் போது கூட அப்படித் தோன்றியதில்லை. The time you enjoy wasting is not wasted time என்று Bertrand Russell ஏற்கெனவே ஆழ்மனதில் ஆணியடித்து விட்டார். Since I don’t enjoy the circus that comes in the name of religion, naturally comes the exasperation!

            நான் தற்போது வசிக்கும் நியூ யார்க்கில் சமீபத்தில் அண்டை வீட்டினரின் அழைப்பிற்கிணங்க ஒரு தேவாலயத்திற்கு ஈஸ்டர் திருநாளன்று செல்ல நேர்ந்தது. ‘இயேசுவை ஏற்றுக் கொண்ட யூதர்கள்’ என்றொரு பிரிவினர் உருவாகி இருப்பதை அன்றுதான் அறிந்தேன். அப்பெரிய தேவாலயத்தில் சிலுவையோ இயேசுவின் சிலையோ இல்லை. வெறுமனே அனைவரும் ஒன்றுகூடி கடவுளைப் பிரார்த்திக்கிறார்கள். துதிப் பாடல்களைத் தொடர்ந்து இறைவார்த்தை வழிபாடு. பிறகு ஒரு சிறிய ஜெபம். அதில் ‘ஜனாதிபதி ட்ரம்புக்கும் துணை ஜனாதிபதி வான்ஸ்க்கும் நல்ல ஆரோக்கியமும் ஆயுளும் கிட்ட வேண்டும்; அவர்கள் தரும் நல்லாட்சி தொடர வேண்டும்’ என்று வெளிப்பட்ட கக்குவான் இருமலைத் தொடர்ந்து ‘ட்ரம்ப் பல தேவையில்லாத பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டுள்ளார்; அதிலிருந்து அவர் சீக்கிரமே மீண்டு வர வேண்டும்’ என்று அந்த போதகர் கண்களை இறுக மூடி உணர்ச்சிப் பெருக்குடன் வாந்தி எடுத்தார். அனைவரும் ‘ஆமென்’ என்று சொல்லி ஆமோதித்த போது, எப்ஸ்டீன் தீவும் அங்கு நினைத்துப் பார்க்கவியலாத குரூரங்களை அனுபவித்த குழந்தைகளும் நினைவிற்கு வர ‘என்ன வகையான உயிரினங்களுக்கிடையே அமர்ந்திருக்கிறேன்?’ என்ற அதிர்ச்சியும் எரிச்சலும் மேலிட்டது. எனில், நன்னெறி ஒழுக்கம், அறம் என்பதெல்லாம் மதத்திற்கு (எந்த மதமாக இருப்பினும்) ஒரு பொருட்டே இல்லை. அதிகார வெறியும் அது சார்ந்த அரசியல் நிலைப்பாடும்தான் பிரதானம். பிரமாதம்! சமூகத்தோடு ‘இயைந்திருத்தல்’ (coexistence) என்பது கடினமானது என்பதையும் தாண்டி எவ்வளவு மூடத்தனமானது என்று உணர்த்திக் கொண்டிருந்தனர்.

பின்னர் மதகுரு வந்து ஒரு பெரிய பிரசங்கம் செய்தார். பெரிதாகச் சொல்லிக் கொள்ளும்படி எதுவும் இல்லை. அதே வழ வழ கொழ கொழ தான். ஆனால் இந்தியாவில் உள்ளதைப் போல் (திடீர் திடீரென்று குரலை உயர்த்தி சட்டென இறக்கி நடுநடுவே முகத்திலும் குரலிலும் முக்கிக் கொண்டிருப்பதைப் போன்ற constipating face பாவனைகள் எதுவும்) அல்லாமல் இயற்கையான முறையில் பேசுவது போலவேதான் இருந்தது இந்தப் பிரசங்கம். அதுவொன்றே ஆறுதல்.

எவ்வளவு நேரம்தான் கவனிப்பது போலவே நடித்துக் கொண்டிருப்பது? அப்போதுதான் அவதானித்தேன். ஹோமங்களில் பங்கேற்கும் போதெல்லாம் - தமது நெற்றியின் இருபுறமும் தாமே குட்டிக் கொள்வது பக்கவாதம் வந்தது போல் ஒரு தினுசாக விரல்களை வைத்துக் கொண்டு நல்ல உணவுப் பொருட்களை எல்லாம் கொழுப்பெடுத்துப் போய் தீயில் இடுவது, மாட்டு சூச்சூவை அனைவரின் மீதும் தெளிப்பது, வாய்க்கு வந்தபடி உளறி முடித்ததும் ஆறடி கூந்தலை அவிழ்த்து முடிந்து கிலோ கணக்கில் தனக்குத் தேவையான மளிகை சாமான்களையும் காய்கறிகளையும் ஒரே இடத்தில் நோகாமல் நாணாமல் இலவசமாக எடுத்துச் செல்வது – நூலாம்படைகளின் செய்கைகள் எல்லாவற்றையும் மனம் ஒருவித நக்கலுடனேயே கவனித்துக் கொண்டிருக்கும். மிக இயல்பான நிகழ்வாக அனிச்சையாக இப்போதும் மனம் நையாண்டி மேளத்தைக் கையிலெடுத்தது.

எந்த மதமாக இருந்தால் என்ன? கட்டுக்கதைகள் தானே அடிப்படை? அப்புறம் கொஞ்சம் கற்பனையும் கலந்து தனக்கு அதிகாரமும் பணமும் கிட்டும் வகையில் வசதியாகக் கோழிக் கிறுக்கலாகக் கொடூரமாக அருவருப்பாக ஒன்றைக் கிண்டி வைத்துவிட்டால் ‘மதம்’ என்னும் நிறுவனம் தயாராகிவிடும். இருக்கவே இருக்கிறது மக்களின் மடமை என்னும் மூலதனம். ஆக மொத்தம் ஒரு பைசா செலவில்லாமல் ஒரு சாம்ராஜ்யத்தையே கட்டியெழுப்பி விடலாம். இந்தா வாரேன்.

இப்போது எனக்கு ஒரு வினோத ஆசை பிறந்தது. நான் ஒரு மதம் ஆரம்பித்தால் என்ன? வெகு மும்மரமாக அனைவரும் ஆராதனையில் மூழ்கியிருக்க என் மனம் கற்பனை உலகின் அடுக்குகளைக் கட்டமைக்க ஆரம்பித்து விட்டிருந்தது.

மதத்தின் பெயர் – Disneyism. கடவுள் – Mickey Mouse. Cinderella, Snow White, Rapunzel, Popeye, Belle – இறைத்தூதர்கள். இப்போது ஒவ்வொவருக்குமான வழிபாட்டு முறையை வரையறுக்க வேண்டும்.

  • Cinderellaவை ஆத்மார்த்தமாகக் கும்பிட்ட பின் ஒரு மஞ்சள் பூசணியை எடுத்து மூன்று முறை நம் தலையைச் சுற்றி அவள் முன் வைக்க வேண்டும். ஸ்தல விருட்சம்... விருட்சம் என்று சொல்ல முடியாது. ஸ்தல செடி என்று வேண்டுமானால் கொள்ளலாம். Hazel செடியின் கிளைகளில் ஒரு கண்ணாடி காலணியைக் கட்டித் தொங்க விட்டுத் தொட்டுக் கும்பிட்டுத் திரும்பிப் பார்க்காமல் வீடு சென்று சேர வேண்டும். குடும்பத்தில் உறவினர்களால் வரும் பிரச்சனைகள் நீங்கும். ஒரு படி மேலே சென்று தொல்லை தரும் உறவுகளே அகன்று நல்ல காலம் பிறக்கும். அப்படிப்பட்ட வல்லமை வாய்ந்த Cinderella அம்மனின் பரிபூரண அருள் அனைவருக்கும் கிடைப்பதாக!
  • Snow White - திருமணத் தடை அகல ஒவ்வொரு புதனும் இவளது பனிக்கோவிலுக்குச் சென்று ஆப்பிள் மாலை சாற்றி விட்டு வாசலில் இருக்கும் மந்திரக் கண்ணாடியில் வலது கண்ணை மட்டும் மூடி நாக்கை வெளியே நீட்டியவாறே ஒருமுறை பார்த்துவிட்டு வந்தால் பங்குனிக்குள்(எந்தப் பங்குனி என்றெல்லாம் கேட்கப்பிடாது!) நல்ல செய்தி வரும்.
  • Popeye – உடல் பலவீனமானவர்களுக்கும் பல நாள் நோயாளிகளுக்கும் உகந்த சாமி இது. அங்கு தரப்படும் கீரை பிரசாதத்தை வாங்கி உண்டதுமே நூறு பேரை அடித்துத் துவைக்கும் அளவு யானை பலம் வந்துவிடும். காணிக்கையாக corn cob pipeகள் செலுத்தலாம்.
  • Belle – புத்தகங்களை இவளது பாதத்தில் வைத்து வணங்கி சிவப்பு ரோஜாக்களில் செய்த குல்கந்து வைத்து நெய்வேத்தியம் செய்து ஒரு கரண்டி எடுத்து வாயில் போட்டு பல் படாமல் முழுங்கினால் படிப்பு அமோகமாக வரும். அடுத்த பரீட்சையில் முதல் மதிப்பெண் எடுக்கவில்லை என்றால் துணிந்து எங்களை என்னவென்று..... கேட்காதீர்கள். நம்மைச் சுற்றியுள்ளவர்களின் மனதில் உள்ள குரூரத்தை அகற்றி அவர்களை மென்மையாக்கவும் Belle தேவி உதவுவாள்.
  • Rapunzel – முடி கொட்டும் பிரச்சனையால் அவதிப் படுபவர்கள் உடனடியாக இத்தலத்திற்குச் சென்றால் தலை மேல் பலன் கிடைக்கும். Rapunzelன் நீள முடியைத் தொட்டுக் கண்ணில் ஒற்றி, அவளுக்குப் படைத்த கறிவேப்பிலை உருண்டைகளில் ஒன்றை முழுங்கி நெல்லிக்காய் தீர்த்தத்தைக் குடித்து விட்டு அவள் பாதத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட சக்தி வாய்ந்த சாதாரண தேங்காய் எண்ணெயை வாங்கிக் கிளம்புங்கள். முடி வளரவில்லை எனில் வளரும் வரை வந்து கொண்டே இருக்கவும். வளர்ந்து விட்டது எனில் நன்றி செலுத்தும் விதமாக அறுபது பௌணர்மிகள் வர வேண்டும். புதிதாக இருபத்தைந்து பேரையேனும் இக்கோவிலுக்கு அறிமுகப்படுத்தி இருக்க வேண்டும். இல்லையெனில் வளர்ந்த முடி இருமடங்காக கொட்டிவிடும்.

‘இது என்ன மயிரு மாதிரி ஒரு மதம்?’ என்று கூட யாரும் கூற இயலாது. Rapunzelஐ வைத்து ‘மயிருதான் மதமே!’ என்று தப்பிவிடலாம். மதமே மயிருதானே!? இவ்விடத்தில் சினந்து சிவக்கும் பக்த கோடிகளே! பெரிய பெரிய வேண்டுதல்களை வைத்து அவை நிறைவேறிய பின் நேர்த்திக்கடனாக போயும் போயும் கார்மேகக் குழலை அளிப்பவர்களுக்கெல்லாம் கோபம் கொப்பளிக்கத் தேவையில்லை.

            ‘Flowers gleam and glow’, “I’m Popeye the sailor man’ போன்ற பக்திப் பாடல்களை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும். அதற்கு முதலில் அமேசான் காடுகளின் ஒரு பெரும் பகுதியை அழித்து அங்கு ஒரு மையம் அமைக்க வேண்டும். அங்கு ஒவ்வொரு வருடமும் நவம்பர் 18 அன்று ஒரு கோலாகலமான விழா எடுத்து நாள் முழுக்க போதையைப் போட்டது போல் ஆடிக் களிக்க வேண்டும். திரை நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள், வெளுத்த தோலுடைய வெளிநாட்டு மூடர்கள் என அனைவரையும் அள்ளிப் போட்டால் விளம்பர வேலை வினாடியில் முடியும். அந்நாளை ‘Maha Disney Day’ ஆக அனுசரிக்க வேண்டும். காசி, ரோம், மெக்கா போன்று நமது Disney மதத்திற்கு ஃப்ளோரிடாவில் உள்ள Disney Worldஐ புனிதத் திருத்தலமாகக் கொள்ளலாம்.

            Disneyன் பிரகாரத்தை பெரிய வழியாக அமைக்க வேண்டும். அங்கு தென்படும் நார்த்தை மரத்தில் தொங்கும் நார்த்தங்காயை எட்டிப் பிடிக்க முயற்சி செய்யும் வண்ணம் மிகச் சரியாக மூன்று முறை எம்பிக் குதிக்க வேண்டும். நிச்சயம் எட்டாது. மரத்தைப் பார்த்துக் கன்னத்தில் போட்டு விட்டு கை கூப்பியவாறே “சீச்சீ! இந்தப் பழம் புளிக்கும்” என்று கூறி Narutoவை நெற்றியில் கொண்டு வந்து நிறுத்தி நார்த்தையைத் தாண்டி நடக்கத் துவங்க வேண்டும். வழியில் சோர்வாக இருந்தால் முயல் உருவில் இருக்கும் சிலைகளின் மேல் கொஞ்சம் குறுக்கை சாய்த்து ஓய்வெடுத்துக் கொள்ளலாம். ஆமை சிலை இருக்கும் இடம்தான் சுற்றுவட்டப் பாதையின் முற்றுப்புள்ளி. வழியில் தண்ணீர் தாகம் எடுத்தால் ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் நீர் பந்தல்களின் அருகில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கூழாங்கற்களை அங்குள்ள பானையில் இட்டு மேலே வரும் நீரைப் பருகி ‘கா...கா..’ எனக் கரைந்து விட்டுச் செல்ல வேண்டும். வாயில் வடை இல்லாமல் பார்த்துக் கொள்ளுதல் சிறப்பு.

            என்ன? வாசிக்க வாசிக்க ஏதோ பைத்தியக்காரத்தனமானதாக தோன்றுகிறதா?

நெய் விளக்கு ஏற்றுவது; உலகெங்கிலும் லட்சக்கணக்கான மக்கள் பசியில் வாடுவது தெரிந்தும் பால், தேன், தயிர், பஞ்சாமிர்தம் ஆகியவற்றை எவ்வித குற்றவுணர்வும் இன்றி ஒரு கல்லின் மண்டையில் கொட்டுவது; மண் சோறு உண்பது; அலகு குத்துவது; தீக்குழி இறங்குவது; விசா மற்றும் நிரந்தரக் குடியுரிமைப் பிரச்சனைகளைத் தீர்த்துத் தருவதற்காகவே ஒரு குரங்குக்கென கோயிலைக் கட்டுவது; தன்னைத் தானே முள் சாட்டையால் அடித்துக் கொள்வது; பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மரித்துப் போன ஒருவரின் உடலாக எண்ணி அப்பத்தையும் இரத்தமாக எண்ணி wineயையும் உட்கொள்வது(இதை நவீனமான soft cannibalism என்று கொள்ளலாமா?); ஓர் ஆணால் சுயமாக ஒழுக்கத்தைக் கடைபிடிக்க இயலாது ஆதலால் பெண்கள் கண்ணைத் தவிர அனைத்தையும் மறைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆங்காரத்துடன் அரற்றுவது..... - இவையெல்லாம் முட்டாள்தனமாக அல்லாமல் விவேகமானதாகவும் அறிவியல் பூர்வமானதாகவும் இருக்கிறதோ? இருக்கும் (அதாவது இல்லாத) தெய்வங்களின் பெயருக்குப் பதில் Disney கதாபாத்திரங்களைப் போட்டவுடன் மட்டும் எப்படி ஒரு கட்டமைப்பு அபத்தமாகத் தெரிய முடியும்? அவ்வளவுதானா மதங்களின் வலிமை?

‘ஏன் இப்படி ஒரு புதிய மதம்?’ - ஏற்கெனவே இருக்கும் மதங்களில் உள்ளதைப் போல் வக்கிரம்(perversion), முறையற்ற உறவுமுறை(incest), பெண்ணடிமைத்தனம், ஏற்றத்தாழ்வுகள் என எந்த அசிங்கமும் Disney மதத்தில் கிடையாது. எனவே எப்படிப் பாத்தாலும் இது ஒரு சிறந்த மதம்தான்.

 ‘இம்மதத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்த முடியும்?’ – மற்ற மதங்கள் பின்பற்றும் அதே குள்ளநரித்தனம்தான். Catch them young and they shall be yours forever. மகாபாரதம், இராமாயணம், பைபிள் மற்றும் குரான் கதைகள் – இப்புனைவுகள் கூட இள வயதில் இருந்தே உண்மை எனக் கூறப்பட்டுத்தானே மத நம்பிக்கையாக ஊட்டப்படுகின்றன. அதே உத்திதான். Disneyஐ பொறுத்த மட்டில் இது இன்னும் எளிதும் கூட. குழந்தைகளால் அவ்வயதில் வியந்தும் விரும்பியும் பார்க்கப்படும் கார்டூன் கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் என்பதால் மிக இயல்பாக ஏற்றுக்கொள்ள வைத்துவிடலாம். வாசித்துக் கொண்டிருக்கும் இறை நம்பிக்கையாளர்கள் கூட இம்மதத்திற்கு மனந்திரும்புதல் உசிதம்!

அடுத்த கட்டமாக....

சட்டென அனைவரும் எழுந்து நின்று ஒரே குரலில் ‘ஆமென்’ சொல்லி கலையத் துவங்கி விட்டனர். அதற்குள்ளாகவா திருப்பலி முடிந்து விட்டது? நான் யோசிக்க ஆரம்பித்ததில் நேரம் போனதே தெரியவில்லை. என் மதத்திற்கான செப்பனிடப்படாத வரைவு(rough draft) மட்டுமே தயாரித்திருந்தேன். இன்னும் முழுதாக முடிக்கவில்லை.

சரி பரவாயில்லை! அதற்கென்று இன்னொரு திருப்பலியோ பூஜையோ கிடைக்காமலா போய்விடும்?

- சோம.அழகு

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.