ஒருவேளை நான் பெரிய்ய்ய்ய எழுத்தாளராகி (சும்மானாங்காட்டி ஒரு கற்பனைதான்!) அப்போது எனது பொன்மொழிகளை(!) மேற்கோள் காட்ட எனது எழுத்தை முழுவதும் வாசித்து வாசகப் பெருமக்களும் ரசிகப் பெருமக்களும்(!) அவஸ்தைப் படவேண்டாம் இல்லையா? அப்பணியை எளிதாக்கித் தரும் நல்ல எண்ணத்தில் தான் நானே என் சிந்தனைகளைச் செதுக்கித் தருகிறேன்.

இப்படியெல்லாம் உயர்வு நவிற்சியாகக் கூற ஆசைதான்! கொஞ்சம் ஓவராத்தான் போறோமோ? போற போக்குல அவ்வப்போது தோன்றியவையே கீழே உதிர்க்கப்பட்ட முத்துக்கள்! இங்கு கொட்டப்பட்டுள்ளவற்றில் ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்க வேண்டும் என்பதில்லை. ஒவ்வொரு கருத்தையும்(!) அப்படியே தனித்தனியாக எடுத்தாளலாம்.

 கருத்து வேறுபாடு - இதிலுள்ள ‘வேறுபாடு’ என்பதன் வரையறையை கொஞ்சம் தெளிவாகச் சொல்லி வைத்தல் நலம். கருத்து வேறுபாடு என்பது ‘இட்லி பிடிக்குமா? பிடிக்காதா?’ என்பதில் வருவது. ‘ஹிட்லரை பிடிக்குமா? பிடிக்காதா?’ என்பதில் அல்ல. எனவே பாசிசம் போன்ற சமூகத்திற்கு எதிரான கருத்துகளைக் கொண்டிருக்கும் உயிரினங்களுடனும் ‘கருத்து வேறுபாடு’ என்ற பெயரில் நட்பு பாராட்டும் மனோபாவம் ‘ஜென் நிலை’ அல்ல… அதையும் தாண்டி புனிதமானது... புனிதமானது… புனிதமானது… (குணா குகையில் இருந்து கொண்டு வாசித்தல் எதிரொலிப்பிற்கு நலம்)

 “மடத்தனமாக, மொன்னைத்தனமாக, கிறுக்குத்தனமாக எதையாவது உளறிவிட்டு ‘கருத்துச் சுதந்திரம்’ என்று பிதற்றுவதும் சனநாயகம் ஆகும்” என்பது முட்டு கொடுக்கும் முட்டாள்களுக்கு (ஒரு வேளை இப்படித்தான் இந்த வார்த்தை தோன்றியிருக்கும் போலும்!) வேத வாக்கு. இப்படிச் சொன்னால் சங்கிகள் தங்களைச் சொல்வதாகச் சரியாகப் புரிந்து கொண்டு சண்டைக்கு வருவார்கள் ஆதலால் நாம் இதைப் பற்றிப் பேசாமல் கடந்து விடுவோம்.

 ஒவ்வொரு மசாலா கமர்ஷியல் திரைப்படத்தைக் காண நேர்கையிலும் ஒரு நொடி கூட சகிக்க முடியாத எரிச்சல் மனநிலைக்குச் செல்வாயானால் நீயும் என் தோழனே!

 எந்த ஒரு விஷயத்திற்கும் பொருத்தமான உவமை கூறுவதற்குக் கூட தேர்ந்த தெளிந்த நல்லறிவு வேண்டும்.

உதாரணங்கள் :

அணு உலை விபத்து – பேருந்து விபத்து (இரண்டும் எப்போது வேண்டுமானாலும் மரணத்தைத் தருமாம்! ‘அதற்காக முன்னேற்றப் பாதையில் பயணிக்காமல் இருக்க முடியுமா?’ என்ற வாதம்!)

இவ்வாறாக நிறைய விஷயங்களில் கடுப்பேற்றுகிறார்கள் மை லார்டு. ஒப்புமை கூறவும் கொஞ்சூண்டு ஞானம் வேண்டும்.

 வளர்ச்சி என்ற பெயரில் மக்களுக்கு ஊறு விளைவிக்கும் திட்டங்களை, வீதியில் நின்று போராடும் மக்களை, கள நிலவரம் அறியாமல் மக்கள் உணர்வு புரியாமல் குளிரூட்டப்பட்ட அறையினுள் சொகுசு இருக்கைகளில் சாய்ந்து சுழன்றபடி முந்திரி பக்கோடாவைக் கொறித்தவாறு வறட்டுத்தனமாக நடத்தப்படும் ஆலோசனைக் கூட்டம், நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் ஆகியவற்றுக்கு எல்லாம் ‘திரிமுன் டகோபா’ தான்.

 பெரும்பாலானோர் தமது தனிப்பட்ட வாழ்வை அன்றாடம் சமூக வலைதளங்களில் காட்சிப்படுத்தும் பொருட்டு எழுப்பும் சத்தம், இரைச்சல், கூப்பாடுகளால் ஆன இவ்வுலகில் அத்தளங்களின் நிழலே இல்லாது போன எனது உலகின் அமைதி ரொம்பவே ரசிக்கிறது.

 மௌனத்தில் சரளமாகக் கதைக்கத் தெரிந்தவர்கள் மனதிற்கு நெருக்கமாகிப் போகிறார்கள்.

 இப்போது ஓர் அற்புத கலாச்சாரம் பெருகி வருகிறது. பிறந்தநாள், தவழ்ந்த நாள், தடுக்கி விழுந்த நாள் என்று ஏதேனும் ஒரு காரணம் வைத்துக் கொண்டு அதை நாசூக்காக வலைதளங்களின் மூலம் உலகிற்கு அறிவிப்பது… பச்சை பசேலென கூறுவதாயிருந்தால் வாழ்த்துகளைப் பிச்சையெடுப்பது; உடனே அதைப் பார்த்துவிட்டுக் கொட்டித் தொலையும் பாராட்டுகளை மீண்டும் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் நன்றி சொல்லி இரயில் விடுவது; இது ‘பாருங்க மக்களே… எவ்ளோ பேர் எனக்கு வாழ்த்து சொல்லிருக்காங்க’ என்ற பீற்றலின் நவீன வடிவம் என்றறிக. சமூக வலைதளங்களில் ஒரே சொடுக்கில் நண்பர்களாகிப் போனவர்கள்தாம் ‘நட்பு’ என்னும் சொல்லின் பொருளையே மாற்றி வைத்திருக்கின்றனர். இந்த லட்சணத்தில் அனைத்து சமூக வலைதளங்களிலும் கோடான கோடி பேர் வாழ்த்தி விட்டனர் என்று பெருமை வேறு. ‘பிரெட் சாப்பிட்டேன்’ – இதே தொனியில்தான் நானெல்லாம் பலருக்கும் ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ அனுப்பியிருக்கிறேன். இவ்வார்த்தைகளை ரொம்ப மெனெக்கெடாமல் தட்டச்சு செய்து எளிதாகத் தட்டி விடலாம் என்ற உண்மை பலருக்கும் புரிவதே இல்லை. உணர்வே இல்லாமல் வந்து விழும் பல குறுஞ்செய்திகளை வைத்துக் கொண்டு மனிதர்களை நிறைய சம்பாதித்துவிட்டதாகத் தம்பட்டம்.

 யாரிடமும் எதையும் நிரூபிக்கவோ காண்பிக்கவோ வேண்டிய அவசியமில்லை என்ற உணர்வு தரும் சுதந்திரம் அலாதியானது.

 இந்த சமூக வலைதளங்களைக் கொண்டு ஒருவரின் மொழியறிவை நிர்ணயிக்க இயலாது என்பதை மிகவும் தாமதமாகத்தான் அறிந்து கொண்டேன். நிலையிடுகைகளுக்கென (status) நல்ல தரமான ஆங்கில வாக்கியங்களைச் சுட்டுக் கொள்ள தனி செயலிகள் எல்லாம் இருக்கின்றனவாம்.

 எந்த ஒரு மொழியிலும் சேர்ந்தாற்போல் நாலு வாக்கியம் எழுத்துப் பிழையோ இலக்கண பிழையோ இல்லாது எழுதவோ பேசவோ தெரியாத நிலையில் அதில் புலமை பெற்றிருப்பதாகப் பீற்றிக் கொள்ள முடியாது என்னும் கசப்பான உண்மையை இத்தலைமுறைக்குக் கூற விரும்புகிறேன். ‘You know…’, ‘You see…’, ‘..like..’, ‘Actually..’, ‘Basically…’ போன்ற வார்த்தைகளை தமிழுக்கு இடையிடையே தெளிப்பதால் ஆங்கிலப் புலி ஆகிவிட முடியாது! அவர்களுக்குப் புரிய வையுங்க… ப்ளீஸ்! இந்தப் பித்தலாட்டம் வெளியே தெரிந்து விடக் கூடாது என்பதால்தான் ஒவ்வொரு நான்கு வார்த்தைகளுக்கும் ஆங்கிலமும் தமிழும் மாறி மாறி அவர்கள் நாவில் நர்த்தனமாடுகின்றன போலும்.

 அடேய் அப்ரசண்டிகளா! ‘அண்ணா..!’னு கூப்டுட்டு போங்களேன்டா. அத விட்டுட்டு ‘ப்ரோ..’, ‘ப்ரூ..’னு பீரோ, காபி வித்துட்டு திரியுதுகள்.

 நகைச்சுவை உணர்வு என்பது சான்றாண்மையின் அடையாளம். ‘சான்றாண்மை’ என்னும் சொல்லின் மூலம் நான் ஏட்டுச்சுரைக்காயைக் கூறவில்லை. ஏட்டுச்சுரைக்காய் ஆகாத சான்றாண்மை மிக்க கி.ரா. அவர்களே இதற்கு மிகப்பெரிய சான்று. இக்காலத்தில் ஏட்டுச் சுரைக்காய்களால்தான் பெரும்பாலும் நகைச்சுவை, நக்கல், நைய்யாண்டி ஆகியவற்றைப் புரிந்து கொள்ள இயலவில்லை. சும்மா அசட்டுத்தனமாக எதையாவது பகிர்ந்து விட்டு அதை நகைச்சுவை என்று தாமும் நம்பி நம்மையும் நம்பச் சொல்லும் பரிதாபங்களும் அரங்கேறுகின்றன. சசி தரூர் (இவரது அரசியல் நிலைப்பாட்டை சற்று தள்ளி வைத்து விடலாம்!) போன்றோரின் சில அட்டகாசமான கூற்றுகளில் தொனிக்கும் நகைச்சுவையை ரசிக்கும் பண்பு அருகி வருவதே இச்சமூகம் பின்னோக்கிச் செல்வதற்கான அறிகுறி.

 சிங்கி மேளத்தில் வல்லுநர்களான சில தலைவர்களின் அறிவுப்பூர்வமான(!) பேச்சைக் கேட்டுச் சிரித்துவிட்டுக் கடந்து போதலும் நகைச்சுவையாளர்களின் பேச்சுக்கு சினம் கொண்டு வழக்குத் தொடுத்து சிறைக்கு அனுப்புதலும் ஆன அற்புதமான நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

 மிகச் சரியான ஒரு வாதம் முன் வைக்கப்படுகையில், சரியான பதிலின் மூலம் அதனை எதிர்கொள்ள மண்டையில் மஞ்சள் தூள், மல்லித் தூள், மசாலா தூள் இல்லாதவர்கள் ‘புண்படுகிறது’, ‘சீழ் வைக்கிறது’ போன்ற சொற்களின் பின் ஒளிந்து கொண்டு கதறுவதைப் பார்த்தால் கோபப்படுவதா பரிதாபப்படுவதா அல்லது உள்ளங்குளிர சிரித்து வைப்பதா எனத் தெரியவில்லை.

 மதம் சார்ந்த கேள்விகள் எழுப்பினால் மனிதர்களுக்கு மதம் தலைக்கேறுகிறது.

 ஏரணம், பகுத்தறிவு வாய்க்கப் பெற்றவர்கள், ‘அவையெல்லாம் கிலோ எவ்வளவு?’ என்று வினவும் புண்ணியாத்மாக்களிடம் மௌன விரதத்தைக் கடைபிடிப்பதே உடலுக்கும் மனதிற்கும் நன்மை பயக்கும் செயலாம். மடையன், மூடன், மிலேச்சன், மட்டி - இவர்கள் அனைவரும், ‘எங்களிடம் அமைதியாக அல்லது அடி முட்டாளாக நடந்து உங்கள் நுண்ணறிவைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்’ என்று காலில் விழாத குறையாக தமது அதிமேதாவித்தனமான வாதங்களின் மூலம் கெஞ்சும் போது நாமும் ஒத்துழைப்பு நல்கித்தானே ஆக வேண்டும்.

 கடவுளே ! உலகியல் நடைமுறையோ நிதர்சனமோ எதுவும் தெரியாத அப்பாவிகளை நான் பார்த்துக் கொள்கிறேன். ஆனால் ஒன்றுமே தெரியாவிட்டாலும் “நான் பார்க்காத உலகமா? எனக்கு எல்லாம் தெரியும்” என்று கொக்கரிப்பவர்களிடமிருந்து மட்டும் என்னைக் காப்பாற்றிவிடு.

 அடக்கம், எளிமை எனப்படுவது யாதெனில் ஒரு பொருளை வாங்க இயலாத பொருளாதார சூழ்நிலையில் இருப்பதால் வாங்காமல் இருப்பதல்ல; அப்பொருளை வாங்கும் அளவு செல்வம் கொழிக்கும் நிலையிலும் ஆடம்பரத்தையோ பகட்டையோ நாடிச் செல்லாதிருப்பதேயாம்.

 ஒரு மனிதனின் உண்மையான முகம் அவனது கையில் பணமோ அதிகாரமோ கிடைக்கும்போதுதான் வெளிப்படுகிறது. அதுவரை அனைவரும் நல்லவர்களே! எளிமையின் சிகரங்களே!

 எந்த ஒரு பொருளும் ‘நன்றாக இருக்கிறதா? நமக்குப் பிடித்திருக்கிறதா?’ என்றெல்லாம் பாராமல் குருட்டுத்தனமாக ‘அது பெரிய முத்திரையுடன் (brand) வருகிறதா? விலையுயர்ந்ததாக இருக்கிறதா?’ என்பதை மட்டுமே அளவுகோலாகக் கொண்டு பன்மடங்கு அதிகம் செலவு செய்து வாங்கும் மனோபாவம் கொண்டவர்களே இந்நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடுகிறார்கள். முதலைகள் பாவம்… எலும்பும் தோலுமாக காய்கின்றன அல்லவா? 

 “கல்யாணம்ங்கிறது முட்டாள்தனமான விஷயம்… ஆனா கல்யாணம் செஞ்சுக்காம இருக்குறது அத விட முட்டாள்தனம்… அதுக்காகவாது கல்யாணம் செஞ்சுக்கோ” – திருமணமே வேண்டாம் என்று நான் கூறிக்கொண்டிருந்த காலகட்டத்தில் தொ.ப அவர்கள் கூறியது.

 ‘தன்னையறிதல்’ என்ற வஸ்துவைக் கேள்விப்பட்டிராத பிறவிகளே உலகத்தாரிடம் முக்கியமாக உறவுகளிடம் பகட்டைப் பறைசாற்ற ஆடம்பரத்திலும் கேளிக்கைகளிலும் அளவிற்கு மீறி திளைப்பதாக அவதானிக்கிறேன். அந்த ‘நாலு’ பேருக்காகவே (‘நாசகாரக் கும்பல்’!) வாழ்ந்து தமக்கான அங்கீகாரத்தையும் அவர்களிடமே தேடும் இந்த அவதார புருஷர்கள் புருஷிகள் ஆகியோரிடம்தான் வாழ்க்கைப் பாடத்தைக் கற்று ஞாலம் போற்றும் ஞானத்தைப் பெற வேண்டும்!

 ஏன் சிறிதாக எளிதாக ஒரு விசேஷத்தை நடத்தினால் பிறவிப் பலனை அடையாமல் போய்விடுவார்களா? இன்னும் பசுமையாகக் கேட்பதானால் இந்தப் படாடோபம் எல்லாம் ridiculously disgusting, ostentatious and vulgar display of wealthஆக தெரியவில்லையா? (கோபத்தில் தமிழ் வராதோ?) கூட்டங்களைத் தவிர்க்க வேண்டிய இக்காலத்தில் கூட “கொரோனாவாவது! ஹைகோர்ட்டாவது!” என அனத்துபவர்கள் தங்களுக்கு அளவுக்கு அதிகமான LDL, Triglycerides கொழுப்பு இருப்பதை அறிவார்களா? பைபாஸ் சிகிச்சை தேவைப்படும் இவர்களை நம் வாழ்க்கையிலும் பைபாஸ் செய்ய வழி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் ?

 பொருள் இருப்பவர்களைக் கூட விட்டுத் தள்ளுங்கள். இவ்வுலகம் இல்லாது போன பொருள் இல்லாதாரும் குதியாட்டம் போடுவதைத்தான் புரிந்து கொள்ள இயலவில்லை. இந்த காணாததைக் காணும் கனவான்களுக்கு ‘நானும் ரௌடிதான்’ என்று நிலைநிறுத்தியாக வேண்டிய கட்டாயம் போலும். பாவம்! என்னதான் செய்வார்கள்? எவ்வளவு நிதானமாக யோசித்துப் பார்த்தாலும் இந்தக் கனவான்களின் போலித்தனங்களுக்கு நியாயம் கற்பிக்க முடிவதேயில்லை.

 உண்மையாகவே பொருள் இருப்பவர்கள் எளிமையாக இருப்பதைக் காண்கிறேன். பொருள் இல்லாத குறை குடங்கள், தமது நிலையில் மன நிறைவு இல்லாத காலி குடங்கள் – இவைகளின் ஆட்டமே அதிகமாக இருப்பதாக அவதானிக்கிறேன்.

 ஒரு நல்ல விஷயம் கிடைக்கிறதெனில் அதைப் பொக்கிஷமாக வைத்துப் பாதுகாத்து அனுபவித்து ரசிக்கவே எண்ணுவேன். ஆனால் இந்த பெரும்பான்மைப் பொதுப் புத்திகள் ஏன் அதை ஊருக்குக் காட்சிப் பொருளாக்கிப் பீற்ற நினைக்கிறது? “நாலு பேர் பொறாமை படுற மாதிரி வாழ்ந்து காமிக்கணும்” ; “நாலு பேர் கண்ணு பட்டுருக்கும், சுத்திப் போடு” – என்னதாண்டா பிரச்சனை உங்களுக்கு?

 அடுத்த வீட்டு நிகழ்வுகளை ஒன்று விடாமல் தெரிந்து கொள்ள விரும்பும் கிசுகிசு பிரியர்களாகிப் போன பெரும்பாலான உறவுகளை ‘ஆர்வக்கோளாறுகள்’ என்று விளித்து கடிதோச்சி மெல்லெறிய விரும்பவில்லை. இவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டுவது ஒன்று உண்டு : அகலாது (தேவையானால் அகன்றும்) அணுகாது தீக்காய்வார் போல வாழ்தல் சிறப்புடைத்து.

 ‘தூக்கி வளர்த்த பாசம்’, ‘தூக்கில் வழிந்த பாயாசம்’ என்று சிலர் அளவிற்கு மீறி என் வெளியினுள் வரும்போது என் மனதில் ஓடும் எண்ணங்கள் : என் பெற்றோரெல்லாம் என்னைப் பெற்று தெருவில் அனாமத்தாக அலைய விட்டு ‘நீயே வளந்துக்கோ… அப்புறமா வந்து அழைச்சிட்டுப் போறேன்’ என விட்டுவிட்டார்கள் போலும்!

 தமது இயல்பு என்றால் உறுதிப்பாடு, துணிவு போன்ற சொல்லாடல்கள்; அடுத்தவர் இயல்பு எனில் பிடிவாதம், திமிர் போன்ற தக்காளிச் சட்னிகளாய் மாற்றம் அடையும்.

 சென்ற தலைமுறை வேஷ்டி கட்டியிருந்தார்கள்… இந்தத் தலைமுறை காற்சட்டை அணிந்திருக்கிறார்கள். அவ்வளவே! மனநிலையில் ஒரு முன்னேற்றமும் இருப்பதாகத் தெரியவில்லை. இவர்களையெல்லாம் சகித்துக் கொண்டும் பொறுத்துக் கொண்டும் (அல்லது அதற்குப் பயிற்சி எடுத்துப் பழகிக் கொண்டும்) போவதிலேயே என் வாழ்க்கை பாதி முடிந்துவிடும் போல… நான் எப்போதுதான் என் வாழ்க்கையை வாழ ஆரம்பிப்பது?

 ‘நாம் யாருக்கும் தீங்கு நினைக்கவில்லை; அதனால் நமக்கும் யாரும் தீங்கு நினைக்க மாட்டார்கள்’ போன்ற சமன்பாடுகள் எதுவும் இவ்வுலகில் கிடையாது.

 ‘நான் உண்டு; என் வேலையுண்டு’ என்றிருக்கும் போதும் நமது இருப்பே சிலரை உளவியல் ரீதியாக மிரட்டுமாயின் அது அவர்கள் பிரச்சனை. நமது ஆளுமையின் வலிமை அது.

 சிலர் சம்பந்தமே இல்லாமல் நம்முடன் போட்டி போடுவதும் நம் மீது பொறாமை கொள்வதுமாக இருப்பது கண்டு, ‘ஏன் எதற்கு இப்படி? நாம அப்படி என்ன செஞ்சுட்டோம் இவங்களை?’ என்று யோசிக்கும் ஒவ்வொரு முறையும் தொ. ப. அவர்கள் கூறிய பதில்தான் நினைவிற்கு வருகிறது… “பொறாமைக்குக் காரணமும் கிடையாது; மருந்தும் கிடையாது. அவங்களோட தரம் அவ்ளோதான்னு தெரிஞ்சுட்டுப் போய்ட்டே இருக்கணும்… அவர்களிடம் இருந்து விலகி இருப்பது நல்லது”

 அடுத்தவர் (யாராக இருந்தாலும்… எவ்வளவு நெருக்கமானவராக இருந்தாலும்!) சம்பந்தப்பட்ட விஷயங்களில் முடிவு எடுக்கும் உரிமை தமக்குக் கிடையாது என்ற அடிப்படை நாகரிகம் மனிதர்களுக்கு எப்போது வரும்?

 அடுத்தவருக்கு அறிவுரை கூற மூப்பு என்பதெல்லாம் ஒரு தகுதியே கிடையாது. மூப்பு, அனுபவம் போன்ற ஓட்டை உடைசல் வாதங்களை காயலான் கடைகளில் தூக்கிப் போடவும்.

 எனக்கும் வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்கும் (அடிப்படை) உரிமை உண்டு. வாழ்க்கையின் நோக்கம் அதுதானே! எனவே என்னைச் சுற்றி யார் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமையும் எனக்கு மட்டுமே உண்டு என்பதைத் தாழ்மையோடு…. இல்லை ! இல்லை ! ஒருவித இறுமாப்புடனும் ஆணவத்துடனும் கூறிக் கொண்டு…

 எந்தக் கச்சடாவும் இல்லாமல் புத்தகங்கள், நீண்ட பயணம், புதுப் புது மனிதர்கள், அவர்களின் புதுப் புதுக் கதைகள், எளியோர்களுடனான கள்ளங்கபடமில்லாத உரையாடல்…. இவற்றுக்கான கற்பனைகளில் மூழ்க… இல்லை! இல்லை! காலின் விரல் நுனியை நனைக்க ஆரம்பிக்கும் போதே வாழ்க்கையும் எதார்த்தமும் குறுக்கிடுகின்றன.

 மனதார நமக்கு நல்லது நினைப்பவர்கள் ஒரு கைப்பிடி அளவாகச் சுருங்கிவிட்டதற்கு மனித மனங்கள் சுருங்கிப் போனதைத் தவிர வேறு என்ன காரணம் இருந்துவிட முடியும்?

- சோம.அழகு

Pin It