1939ல் அக்டோபர் 6ல் கிடைத்த செய்திகளின்படி 1939 அக்டோபர்9ல் மேதகு வைஸ்ராயைக் காண டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அழைக்கப்பட்டுள்ளார். அதன்படி அக்டோபர் 9.1939ல் மேதகு வைஸ்ராய் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கருக்கு பேட்டி கொடுத்துள்ளார். மேலும் திரு.வி.டி.சாவர்க்கர், திரு. முகமத் யாகூப் ஆகியோருக்கும் பேட்டி கொடுக்கப்பட்டுள்ளன.
பிறகு டாக்டர் அம்பேத்கர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
புதுடில்லி, அக்டோபர் 10,1939
''காங்கிரசுக்கு வெளியிலுள்ள கட்சிகள் மற்றும் நபர்களைக் குறித்து சுயநல துடுக்குத் தனமான கண்ணோட்டத்தைத் திரு.காந்தியும், காங்கிரசும் கைவிட்டாலொழிய ஒருபோதும் சிறுபான்மையினரின் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படப் போவதில்லை. நாட்டுப்பற்று காங்கிரஸ்காரர்களின் ஏகபோகமல்ல. காங்கிரசுக்கு மாறாக மாறுபட்ட கொள்கைகளைக் கொண்டவர்கள் இருக்கவும், ஏற்றுக் கொள்ளப்படவும் முற்றிலும் நியாயமான உரிமை உண்டு' என்று இன்று காலை பம்பாய்க்குப் புறப்படுவதற்கு முன்பு 'அசோசியேட் பிரஸ்ஸுக்கு' அளித்த அறிக்கையில் டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தெரிவித்தார். நேற்று டெல்லி வந்துள்ள டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் மேதகு வைஸ்ராயுடன் நீண்ட பேட்டி கண்டார். இந்தியாவில் அரசியலமைப்பு முன்னேற்றம் குறித்தும் தமது வகுப்பினரின் கருத்துகள் குறித்தும் மேதகு வைஸ்ராய்க்கு விரிவாக எடுத்துரைத்ததாக நம்பப்படுகிறது. புனா ஒப்பந்தத்தின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்று இது சம்பந்தமாக டாக்டர் அம்பேத்கர் கூறியுள்ளார். பல உறுப்பினர்கள் தொகுதிகள் இல்லாத நிலையில், ஷெட்யூல்டு வகுப்பினரின் உண்மையான பிரதிநிதிகள் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அடுத்த மறுபரிசீலனைக் கூட்டத்தில் இந்தப் பிரச்சினையை எழுப்பப்போவதாக அவர் தீர்மானித்துள்ளார். இது ஏற்கெனவே திட்டமிட்டதற்கு முன்பே நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உண்மையான பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க சில வழிமுறைகள் இல்லாது ஷெட்யூல்டு வகுப்பினர்களின் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்க வழிகாணாவிடின் தமது வகுப்பினருக்கு தனித் தொகுதி வேண்டுமென வலியுறுத்த வேண்டியிருக்குமென்றார் அவர்.
இந்து - முஸ்லீம் பிரச்சினைகள்
இந்து முஸ்லீம் பிரச்சினை சம்பந்தமாகப் பேசிய டாக்டர் அம்பேத்கர், காங்கிரஸ் மாகாணங்களில் முஸ்லீம்கள் கொடுமைப் படுத்தப்படுகிறார்கள், அச்சுறுத்தப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை தாம் நம்பவில்லை என்று கூறினார். நாட்டு அரசில் பங்கு வேண்டும் என்று முஸ்லீம்களும், சிறு பான்மையினரும் விரும்புவதுடன் ஆட்சியில் இருக்கும் வகுப்பினர்களுடன் சம அந்தஸ்தையும் விரும்புகின்றனர். இது காங்கிரஸ் கட்சியால் மறுக்கப்படுகிறது. தனது கட்சிக்கு வெளியேயுள்ள எந்த வகுப்பினரையும், பிரிவினரையும் இதுவரை அது அங்கீகரித்ததில்லை.
இதுவரை முஸ்லீம்கள் பாதுகாப்பை விரும்பினர். அதாவது தேவையான பாதுகாப்பு அளிக்கப்படுமானால் மற்ற வகுப்பினர்களுடன் சேர்ந்து வாழ அவர்கள் தயாராக இருந்தனர் என்று அவர் கூறினார். இன்று இந்துக்கள் இந்தியா, மற்றும் முஸ்லீம்கள் இந்தியா என இந்தியாவைப் பிரிக்கக் கோரிக்கை எழுந்துள்ளது. வெகுஜன மக்களிடையே இந்தக் கோரிக்கை வேரூன்றினால் ஒன்றுபட்ட இந்தியா என்ற நம்பிக்கை சிதறுண்டு போகும். இதற்கான தீர்வு காங்கிரஸ் மற்றும் பெரும்பான்மை சமூகத்தாரின் கைகளில்தான் உள்ளது. பரந்த மனதும், அரசியல் விவேகமும் யதார்த்த நிலைமைகளைப் புரிந்து கொள்வது ஆகியவையே இப்பொழுது தேவைப் படுகின்றன.
காலம் கடந்துவிடும்
நாளை என்று விட்டுவிட்டால் அது காலம் கடந்த நடவடிக்கையாகிவிடும் என்று கூறினார் டாக்டர் அம்பேத்கர். சிறுபான்மையினர் நல்ல முறையிலும், நியாயமான முறையிலும் நடத்தப்பட வேண்டுமென்று பிரச்சினையாக இல்லை. நாட்டு அரசின் அங்கமாக இப்பதை சிறுபான்மையினரை உணரச் செய்ய வேண்டுமென்பதே இன்றைய பிரச்சினை. சுயகெளரவம், அந்தஸ்து என்பதே இன்றைய கேள்வியாகிவிட்டது. தம்முடைய சமூகத்தினர் வேறு ஏதாவது பெரிய சமூகத்தினருடன் இணைந்து கொள்ள விரும்புவதைத் தடுத்து நிறுத்துவது கஷ்டமாக இருக்கிறது. காங்கிரஸின் தற்போதைய கண்ணோட்டத்தால் தம்முடைய வார்த்தைகளுக்கு மதிப்புக் குறைந்து வருவதாக, இறுதியில் டாக்டர் அம்பேத்தர் குறிப்பிட்டார். ஷெட்யூல்டு வகுப்பினர் வேறு ஏதாவது வகுப்பினரிடம் சேர்ந்து கொண்டால் அதற்கான பொறுப்பு காங்கிரசையே சாரும். ''புத்திசாலித்தனத்துடனும், அரசியல் விவேகத்துடனும் காங்கிரஸ் நடந்து கொள்ளுமென்று நான் நம்புகிறேன்," என்று அவர் கூறினார். "இந்தியா பிளவுபடாமல் இருக்கவும், ஷெட்யூல்டு வகுப்பினர் வலிமையான சிறுபான்மையினருடன் இணைவதைத் தடுக்கவும் விவேகத்துடன் அவர்கள் செயல்படுவார்கள் என நம்புகிறேன்."
- டாக்டர் அம்பேத்கர்
1. பம்பாய் கிராணிக்கில், அக்டோபர் 7, 1939.
2. பம்பாய் கிராணிக்கில், அக்டோபர் 10, 1939.
தொகுப்பு: முனைவர் எ. பாவலன்