உலகில் மனிதர்களைத் தவிர வேறு எந்த ஒரு உயிரினமும் தன் இனத்தை அடிமையாக வைத்துக் கொள்ள விரும்பியதில்லை. அதிலும் சாதியையும் மதத்தையும் காரணம் காட்டி மக்களைப் பிளவுபடுத்தும் எண்ணம் மனிதனுக்கு மட்டும்தான் உண்டு. உலகிலுள்ள கடவுளர்ளும் மதங்களும் சமயங்கள் யாவும் மனிதர்களை நல்வழிப்படுத்தவே தோற்றம் பெற்றது என்று சொல்லப்படுகிறது. ஆனால் கடவுளை வணங்க மனிதர்க்கிடையில் ஏன் இத்தனைப் பெரிய வேறுபாடு. அல்லது மதத்தின் பெயரால் திட்டமிட்டு மனிதர்களை பிளவுபடுத்தி வருகின்றனர். ஒரு புறம் சாதி ஏற்றத்தாழ்வு மதப்பூசல் என்றிருந்தாலும், மற்றொருபுறம் மதம் பெண்களை சுரண்டும் அமைப்பாகவே இருந்து வருகிறது.

ஆண்டாண்டு காலமாக மதமும் ஆணாதிக்க சமூகமும் பெண்களை போகப் பொருளாக பார்க்கும் போக்கை உருவாக்கி வைத்துள்ளது. அதனால் அவர்கள் எங்கும் எப்பொழுதும் பாலியல் தீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டு அவர்களை வன்கொடுமை செய்தும் வருகின்றனர். இன்றும் எட்டு வயது ஆஷிபா என்கின்ற பெண் குழந்தையைக் கோயில் கருவறையில் வைத்து வன்புணர்வு செய்து உயிர் கொலை செய்துள்ளனர். இந்த கொடுஞ்செயலை செய்ய எப்படி மனம் வந்தது. அதிலும் குறிப்பாக ஒரு கோயில் கருவறையில் வைத்து வன்கொடுமை செய்யும் எண்ணம் எதனடிப்படையில் உருவான. ஒரு குழந்தையைக் குழந்தையாக பார்க்கும் எண்ணத்தவிட அந்த குழந்தையைக் காம இச்சையுடன் அணுகும் போக்கு இந்த நூற்றாண்டு வரை தொடர்ந்து வருவதைக் கண்கூடாகப் பார்க்க முடியும். அப்படி என்றால் இதற்கு முன்பாக வரலாற்றில் எத்தனை பெரிய சுவடுகள் இதுபோன்று பதிவாகி இருக்க கூடும். இவையெல்லாம் பெண்களை சுயசிந்தனை அற்றவர்களாகவும் ஜடப்பொருளாகவும் அவமான சின்னமாகவும் குழந்தையைப் பெற்றுத் தரும் ஓர் இயந்திரமாக பார்க்கும் போக்கு உருவாவதற்கு மதமே முதல் காரணம் என்று சொல்ல முடியும்.

dharmambal 257கோயிலுக்கு ஆடு மாடுகளை நேர்ந்து விடுவதைப் போன்று வரலாற்றில் பெண்களையும் கோவிலுக்கு பொட்டுக்கட்டி தேவதாசி முறையில் நேர்ந்து விடும் போக்கும் இருந்துள்ளது. பண்ணையார், மிட்டா மிராசு, கோயில் பூசாரி, உயர் ஜாதி, பெரிய ஜாதி யார் வேண்டுமென்றாலும் அவளுடைய விருப்பம் இல்லாமல் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து அனுபவிக்கலாம். கோயில், தெய்வம், கடவுள், சாமி இன்ன பிறவெல்லாம் பெண்களின் உடலை சுரண்டும் அமைப்பாகவே செயல்பட்டு வருகிறன.

இந்திய திருநாட்டில் மட்டும்தான் கணவன் இறந்தவுடன் உடன்கட்டை ஏறும் சதி என்னும் வழக்கம் இருந்துள்ளது. உடன்கட்டை ஏறமறுத்த பெண்களை கணவன் எரியும் சதியில் வலிந்து தள்ளிய வரலாறுமுண்டு. இன்னும் சொல்லப் போனால் பால்ய விவாகத்தால் நடைபெறும் திருமணங்களில் அவளுடைய கணவன் இறந்தவுடன் அக்குழந்தைகளை விதவைகளாகப் பார்க்கும் போக்கு இருந்துள்ளது. இன்றும் கணவனை இழந்த பெண்களை விதவை என்றே அழைக்கின்றனர். அவர்கள் எந்த ஒரு நற்காரியங்களிலும் பங்கெடுக்க முடியாது. அவர்களை விலக்கி வைக்கப்படுகிறார்கள். இன்று இந்த இறுக்கம் கொஞ்சம் தளர்ந்துள்ளது என்று சொல்ல முடியும். ஆனால் முற்றிலும் ஒழிந்து விட்டதெனக் கூற முடியாது. இத்தனைக் கொடுமைகளையும் சீர்கேடுகளையும் பெண்கள் மீது வேண்டும் என்று சுமத்தப்படுகிறது. இந்தக் கலங்கத்தையும் கொடுமைகளையும் துயரங்களையும் களைவதற்கு எத்தனையோ தலைவர்கள் போராடினார்கள். அவர்களில் மருத்துவர் தருமாம்பாள் குறிப்பிடத் தகுந்தவர்.

தருமாம்பாள் பெண் விடுதலைப் போராளி, இந்தி எதிர்ப்பாளர், தமிழ் மொழியை ஊக்குவிக்கவும் பாதுகாக்கவும் களங்கண்டவர். அவர் தொடங்கி வைத்த பெண் கல்வி, மறுமணம், கலப்பு மணம் ஆகிய மூன்றும் முக்கியத்துவம் வாய்ந்ததது. அந்த வகையில் தருமாம்பாள் கல்வி சிந்தனையைப் பற்றி ஆராயும் வகையில் இவ்வாய்வு கட்டுரை அமைகிறது.

மருத்துவர் தருமாம்பாள் இன்று நம்மோடு இல்லை. என்றாலும், மறக்க முடியாத ஆளுமையாக இவ்வுலகில் வளம்வந்து கொண்டிருக்கிறார். பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடு அரசாங்கம் அவருடைய பெயரிலேயே கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது. நலதிட்ட உதவிகளும் அவருடைய பெயரில் வழங்கப்படுகிறது. 

சரஸ்வதி என்னும் இயற்பெயர் கொண்ட மருத்துவர் தருமாம்பாள் திராவிட இயக்க சிந்தனைக் கொண்டவர். அவர் நீதிக்கட்சி, திராவிட கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இயக்கங்களில் முன்னணி உறுப்பினராக இருந்து செயல்பட்டவர். சாதி விடுதலைக்கு மட்டுமின்றி பெண் விடுதலைக்கும் தடையாக இருப்பது சனாதன தர்மம் என்பதை உறுதியாக நம்பியவர். பெண்களை அதுதான் படிக்கக் கூடாது, தொட்டால் தீட்டு, பாலியவிவாகம், கைம்பெண் கொடுமை, சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுக்காதே, அவர்களை அடிமையாக வைத்துக் கொள் என்று வலியுறுத்துகிறது. இப்படிப்பட்ட சிந்தனையில் ஊறித் திளைத்தவர்களின் மனநிலையும் அந்த சமயமும் எப்படி மக்கள் நலனின் அக்கறை கொண்டதாக இருக்க முடியும்?. இது போன்ற கேள்விகளை மக்களிடம் கொண்டு சென்று அவர்களை சிந்திக்க தூண்டிய பெரும் பொறுப்பு நீதிக்கட்சிக்கும், திராவிட இயக்கத்திற்கும் உண்டு. அவர்கள் வேதம், வர்ணாசிரமம் கடவுள், மதம், சாதி இன்ன பிறவற்றையெல்லாம் மக்களிடம் கொண்டு சேர்த்து சிந்திக்க தூண்டியது.

சனாதன மதம் என்ற போர்வையிலும், கலாச்சார பாதுகாவலர்கள் என்ற பெயரிலும் ஒற்றுமையைச் சீர்குலைத்தனர். தமிழர்களின் உயர்ந்த பண்பாட்டையும் நாகரீகத்தையும் சிதைத்தனர். அன்னமிட்டு உண் என்பது தமிழர்பண்பாடு. ஆனால் அனைவரையும் சமமாக கருதி ஒன்றாக அமர்ந்து உண்ணாதே என்பது ஆரியர்களின் பண்பாடு. அதனால்தான் சமபந்தி என்ற சொல்லாடல் புழக்கத்தில் வந்தது. சமபந்தி மட்டும் சாதியை ஒழித்து விடாது. அகமன முறையைத் தகர்க்க வேண்டும் என்று தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள் தங்கள் தொடர் உரையாடல்களால் தொடங்கி வைத்தனர். ஆனால் அவற்றுக்கு எதிராக தந்திரமான முறையில் சுயசாதி பெருமையைப் பேசுவதற்கு மூளைச்சலவைப் செய்யப்பட்டு வருகிறது. அதில் தான் நம் கௌரவமே ஒளிந்திருக்கிறது. எதை விட்டுக் கொடுத்தாலும் சாதிப் பெருமையை மட்டும் விட்டுக் கொடுக்காதே என்று சனாதன தர்மம் தன் இருப்பை இன்னும் இருக்கிப் பிடித்துள்ளது.

இவற்றிற்கு எதிராக மக்களை ஒன்றிணைப்பதற்கு தொடர் உரையாடலே பயன்பட்டது. உரையாடல் என்பது ”மனிதர்கள் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையை ஆக்கவும் மறு ஆக்கம் செய்யவும், ஆன சக்தியை படைக்கவும், மறு படைப்பாக்கம் செய்யும் மன உறுதியை மனிதனை முழு மனிதத்தன்மை உடையவனாக செய்யும். மனிதனின் அடிப்படை கடப்பாட்டை தனது தேவையாகக் கொண்டுள்ளது. அந்தக் கடப்பாடு மேல்தட்டு மக்களுடையது மட்டுமே அல்ல. அது ஒவ்வொரு மனிதனின் பிறப்புரிமையாகும். எத்தகைய கலந்துரையாடலுக்கும் அதிமுக்கிய தேவையா இருப்பது சக மனிதர்கள் மீதான நம்பிக்கையாகும் (ப.70, பாவ்லோ ஃப்ரையிரே, ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்வி முறை.2008).

 தருமாம்பாள் உள்ளிட்ட பெண்கள் அனைவரும் ஒன்றிணைந்து 1938 நவம்பர் மாதம் 13ம் நாள் சென்னையில் தமிழ்நாடு பெண்கள் மாநாடு நடத்தினர். அந்த மாநாட்டில் கல்வியின் பெண் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்பட்டது.

பெண் குழந்தைகளுக்கும் கல்வி கற்கும் உரிமை உண்டு. இன்றைய உலகில் கல்வி முக்கியமானது. ஒவ்வொருவருக்கும் அவரது பாலின வேறுபாடு இல்லாமல் கல்வி கற்க முன்வர வேண்டும். பெண்களுக்கான கல்வியின் முக்கியத்துவம் ஆரோக்கியத்திற்கும் பாதுகாப்பிற்கும் பெரும் நன்மைகளை அளிக்கிறது. வலுவான குடும்பங்களைக் கட்டி எழுப்பவும் தவறான முடிவை எடுப்பதைத் தடுக்கவும், அவர்களுக்காக எழுதவும் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கவும், வாழ்க்கையில் தொடக்கத்தில் இருந்தே கல்வியை தொடங்க வேண்டும். அதனால் தான் பெண் குழந்தைகளின் கல்வி முக்கியத்துவம் பெறுகிறது.

ஒவ்வொரு நாட்டிற்கும் பெண்களின் கல்வி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் அதனால் அடையக்கூடிய நன்மைகளையும் பின்வருமாறு காணலாம்.

  • பெண்கள் கற்கும் கல்வி சமூக, பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைவதற்குத் துணை புரிகிறது.
  • அதிகப் பெண் கல்வி அறிவு அதிகரிக்கும் பொழுது குழந்தையின் இறப்பு விகிதம் குறைகிறது.
  • கல்வி குற்றங்களைக் குறைக்கிறது
  • பெண் கல்வி சமுதாயத்தில் சமத்துவமின்மை இடைவெளியைத் தகர்க்கிறது.
  • கல்வி விளிம்பு நிலைப் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. மேலும் அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்கவும் உதவுகிறது.
  • ஒரு படித்த சமூகம் மிகவும் நிலையானது மற்றும் ஒரு மோதலுக்கு பிறகு விரைவாக மீட்கவும் உதவி செய்கிறது.
  • படித்த பெண்களிடம் பாலிய மனம் இளமைத் திருமணம் உள்ளிட்டவை குறைந்துள்ளது.
  • உயர்கல்வி முடித்து திறன்களைப் பெறும் பெண்களின் வாழ்நாளும் வருமானமும் வியக்கத்தகு அளவில் அதிகரித்துள்ளது.
  • படித்தப் பெண்களின் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு அல்லது வளர்ச்சிக் குன்றியதை அனுபவிப்பது குறைந்துள்ளது.
  • பெண்களுக்கான கல்வி முக்கியமானது. ஏனெனில் அது அவர்களை அதிகாரம் மற்றும் சுதந்திரம் தன்னம்பிக்கையை வளர்க்க உதவுகிறது.
  • பெண்களின் வலிமையை அதிகரிக்கும் அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கவும் உதவுகிறது.
  • இந்தியாவில் பெண் கல்வியின் முக்கியத்துவம் வறுமை பாலின சமத்துவமின்மை குழந்தை திருமணம் மற்றும் மக்கள் தொகை பெருக்கம் போன்ற பல சமூக பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் உதவுகிறது.
  • பெண்களுக்கு அடிப்படை உரிமைகள் கூட தர மறுத்த சூழலில் இன்று அவர்கள் கல்வியின் பயனால் சொத்துரிமை, வேலை உரிமை, பேச்சுரிமை போன்றவற்றை நிலைநாட்டிக் கொள்வதற்கு பயன்படுகிறது.

உலக மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கும் பெண்கள் ஆரம்ப காலங்களில் அறிவற்ற பெண்களாகவே ஆணாதிக்கம் வைத்திருக்க இருக்க விரும்பியது. பெண்களை தெய்வ நிலைக்கு உயர்த்தி புனிதத் தன்மையை வலியுறுத்தி அவர்களை எப்பொழுதும் அடிமையாகவே வைத்திருக்க விரும்பினர்.

18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 19ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பெண்களின் விடுதலைக் குறித்த சிந்தனை வலுப்பெறத் தொடங்கியது. அவ்வப்போது பெயரளவிற்கு ஆங்காங்கே ஒன்று, இரண்டு இயக்கங்களும் அல்லது தன்னார்வலர்களும் பெண்களின் விடுதலைக் குறித்து சிந்தித்த வண்ணம் இருந்தனர் பின்னர். மேலை நாடுகளில் பெண் விடுதலைக் குறித்து உரையாடல் தீவிரமாக வலுப்பெறத் தொடங்கியது. ஆனால் இந்தியாவில் அதைப் பற்றிய தேவையும் சிந்தனையும் பெரிய அளவில் எழவில்லை. உண்மையில் பெண் விடுதலைச் சிந்தனை இந்திய பெருவெளியிலலிருந்து தான் வெடித்து கிளம்பி இருக்க வேண்டும். காரணம் உலகத்தில் வேறு எந்த தேசத்திலும் பெண்களுக்கு நிகழ்த்த கொடுமைவிட இந்தியத் திருநாட்டில் வெவ்வேறு வடிவங்களில் உருமாற்றம் அடைந்து அடிமைப்படுத்த எண்ணியது இங்குதான்.

இந்தியாவில் பெண் விடுதலைக்காக எண்ணற்ற தலைவர்கள் போராடினார்கள். அதிலும் குறிப்பாக பெண் கல்வியை மையப்படுத்தி போராட்டங்கள் வலுப்பெற தொடங்கியது. மகாராஷ்டிரா மாநிலத்தில் சாவித்திரிபாய் புலே பெண் கல்வியின் ஓர் அடையாளம். அவர்தான் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர். அவருக்கு ஏற்பட்ட துன்பமும் துயரமும் வேறு ஒரு தனி பெண்ணும் அனுபவிக்கவில்லை.

தருமாம்பாள் பெற்றோரை இழந்த பிறகு அவருக்கு கல்வி பெறுவதில் சிக்கல் இருந்தது. ஆனாலும் கல்வி கற்க வேண்டும் என்ற வேட்கை அவரிடம் எப்பொழுதும் குடிகொண்டிருந்தது. எதையும் ஆழ்ந்து நோக்கும் சிந்தனையும் அவரிடம் இருந்தது. பெண்களின் விடுதலைக்கு கல்வி அவசியம் என்பதை உணர்ந்து பல பெண்களுக்கு கல்வி கற்பதற்கும், கல்லூரிகளில் சேர்ந்து மேற்படிப்பு படிப்பதற்கு, படித்த பெண்களை ஒரு நல்ல வேலையில் அமர்வதற்கும் அவர் எடுத்த முயற்சியும் உறுதுணையும் அப்பெண்களின் வாழ்க்கையில் முக்கியத்துவம் பெற்றவராக இருந்தார்.

தமிழ் மாதர் கழகத்தைத் தோற்றுவித்து பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் வழிகாட்டியாகவும் திகழ்ந்தவர். தமிழ் மாதர் கழகத்தின் தலைவராக பண்டிதர் நாராயணி அம்மையாரும் செயலாளராக, டாக்டர் தருமாம்பாள் பொறுப்பேற்றுக்கொண்டு பெண் கல்வி செழிக்கப் பாடுபட்டனர். கல்வி அறிவின்றி அறியாமையில் மூழ்கிக் கிடந்த பெண்களிடையே மண்டிக் கிடந்த மூடப்பழக்க வழக்கங்களை எடுத்துக் கூறி அவர்களுடைய பகுத்தறிவு பிரச்சாரமும் செய்தார். பல இளம் விதவைகளுக்கு மறுமணம் செய்து அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்தார். சாதி ஒழிப்பு கருத்தில் பல இளையோர்களுக்குக் கலப்புத் திருமணம் செய்து வைத்தார்.

பொது வாழ்க்கையில் ஈடுபடுவோர் நேர்மையாக இருக்க வேண்டும். என்பதை தருமாம்பாள் கருத்தில் கொண்டு, கொள்கைப் பிடிப்பு உள்ளவராகவும், பொருளாசை அற்றவராகவும், புகழை விரும்பாதவராகவும் இருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

தன் வாழ்நாளில் மருத்துவர் தருமாம்பாள் கொள்கை பிடிப்புடன் வாழ்ந்தவர். டாக்டர் அம்பேத்கர் சொல்வதைப் போன்று, பெண் விடுதலை அடையாமல் சமூகம் விடுதலைக்கு சாத்தியமில்லை. பெண் விடுதலை அடைய வேண்டுமென்றால் அவர்களுக்கு மிகப்பெரிய ஆயுதமே கல்விதான். நாம் அனைவரும் ஒன்று திரண்டு பெண் கல்வியை ஊக்குவிக்க வேண்டும். பெண்களின் இடைநிற்றலை தவிர்ப்பதற்கு முன்வர வேண்டும். நாம் ஒவ்வொருவரும் நம் குடும்பத்தில் இருந்து அவர்களின் சுதந்திரத்தையும், விடுதலையும் பேணி பாதுகாக்க வேண்டும். பெண்களின் சமூக மாற்றத்திற்கு கல்வி ஒன்றே ஆயுதம் என்பதை புரிய வைத்து அவர்களை முன்னேற்றுவோம். இதுதான் மருத்துவர் தருமாம்பாள் அம்மையருக்கு நாம் செய்யும் மிகப்பெரிய நன்றிக்கடன்.

- முனைவர் எ.பாவலன், உதவிப் பேராசிரியர், ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி, மேற்கு தாம்பரம், சென்னை - 44