பாரதப் பிரதமர் தமிழகம் வந்தால் 'வணக்கம் தமிழகம்' சொல்கிறார். கூடுதலாய்த் தமிழ்ப் புலமையை வெளிக்காட்ட "வரப்புயர நீர் உயரும்" என ஔவையார் பாடல் வரிகளை வாசித்துத் தன் தமிழ்ப் புலமையை நிரூபிக்க முனைகிறார்.

அவர் மட்டுமல்ல நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்கையில், வேந்தன் எப்படி நேர்மையோடு அறவழியில் நின்று வரிகளை வசூல் செய்ய வேண்டும் என வலியுறுத்தும் "காய் நெல் அறுத்துக்கவளம் கொளினே" என்ற பிசிராந்தையார் பாண்டியன் அறிவுடைநம்பியைச் செவியறியுரூஉவாகப் பாடிய புறநானூற்றுப் பாடலை வாசித்துவிட்டு நிதிஅமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தன் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்கிறார். ஆசிரியர் தினத்தைக் குருஉஜ்ஜவ் என மாற்றி முழங்கிய இவர்கள், மும்மொழிக் கொள்கையைத் திணித்து ஒன்றிய மொழிகளைத் தின்று செரிக்கக் காத்திருக்கும் இவர்கள் திட்டமிட்டே தம் விஷநாக்குகளால் தமிழ் அமிர்தத்தைப் பருகுகிறார்கள்.

எல்லாவற்றிற்கும் இந்தி, இந்தி என முழங்கும் இவர்களின் அரசியல் நாடகத்தில் தமிழ் பகடைக்காயாக உருட்டப்படுகிறது. ஒன்றிய அமைச்சகங்களில் இருந்து மாநிலங்களுக்கோ , பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ அனுப்பப்படும் சுற்றறிக்கைகள், கோப்புகள் அந்தந்த மாநில மொழிகளில் அல்லாமல் அண்மைக் காலமாக இந்தி மொழியில் அனுப்பப்படுவது என்பது மாநில மொழிகளின் மீது ஏவப்படும் கண்மூடித்தனமான திட்டமிட்ட தாக்குதல் அல்லவா?

இந்தச் சூழலில் நடத்தப்படும் ஒன்றிய அரசின் தேர்வுகளில் தமிழ் எப்படி இருக்கிறது? நீட் தேர்விலிருந்து தொடங்கி பள்ளித் தேர்வுகள் வரை தமிழ் புறக்கணிக்கப்பட்டே கிடக்கிறது. இதற்குச் சரியான சான்று நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு சிபிஎஸ்சி தமிழ்ப் பொதுத்தேர்வு வினாத்தாள். அத்தனை பிழைகள்.

எழுத்துப்பிழை, தொடர்பிழை, தவறான விடைகள் எனப் பல பிழைகளைக் கற்கும் மாணவர்களே எந்தக் கடினமும் இல்லாமல் சுட்டிக் காட்டுகிறார்கள். அரசுப் பொதுத்தேர்வு வினாத்தாளையும் பள்ளியில் அவர்கள் எழுதிய மாதிரி வினாத்தாளையும் ஒப்பிட்டு விவாதிக்கிறார்கள். பிழைகள் மலிந்த அரசு வினாத்தாளைப் பார்த்து நகைக்கிறார்கள்.

என்ன வினாத்தாள் இது? இவ்வளவு பிழை என எம்மாணவர்கள் தவறு கண்டுபிடித்து ஆசிரியர்களிடம் விவாதிக்கையில் அத்தனை மகிழ்ச்சி. நம்மிடம் கற்ற மாணவர்கள் அரசுப் பொதுத் தேர்வு வினாத்தாளை வாசித்து நிறைகுறைகளைச் சுட்டிக் காட்டுகிறார்களே என்ற பெருமித உணர்வு ஒரு புறமிருக்க, இன்னொரு புறம் ஏன் அரசுத் தமிழ் வினாத்தாளில் மட்டும் இத்தனை பிழை? இவ்வளவு தரக்குறைவு? எனச் சிந்திக்கத் தூண்டுகிறது.

நான்கு சுவருக்குள் மீடியா விவாத, விமர்சகர்களின் கண்ணில் படாமல் நீர்த்துப் போகும் இந்தத் தமிழ்ப் புறக்கணிப்பை நாம் எப்படிப் புரிந்து கொள்வது? ஒருவேளை சாதி அரசியலும், மத அரசியலும் மட்டுமே பெரும் வாக்கு வங்கியை உருவாக்குவது போல, தற்கால வாக்கு அரசியலுக்குத் தமிழ் உதவாது எனக் கருதிக் கடந்து விடுகிறார்களோ எனவும் எண்ணத் தோன்றுகிறது. தெரிந்திருந்தால் நடுநிலையாளர்கள் இதனை விவாதப் பொருளாகக்கூட மாற்றலாம். இவர்கள் விவாதிக்கவாவது தேர்வறைக்குள் வினாத்தாள் வடிவில் புறக்கணிக்கப்பட்டுக் கிடக்கும் தமிழை வெகுசன ஊடகங்களிலும் வீதியிலும் வீசி எறிவோம்.

வினாத்தாள் தானே, பிழைதானே எனக் குறை கண்ணோட்டத்தோடு பார்ப்பவர்களுக்குச் சிலவற்றை நினைவுபடுத்துவோம். தமிழ் வினாத்தாள் பிழை என்பது அறிவியல் வினாத்தாளோ அல்லது மற்ற பாடங்களில் உள்ள வினாத்தாள் பிழைகளைப் பார்ப்பதைப்போல் பார்க்கப்படுவதில்லை. தமிழ் வினாத்தாள் தானே, அப்படித்தான் இருக்கும் என்கின்ற அலட்சிய மனப்போக்கோடு பார்க்கும் குறுகிய பார்வை மாணவர்கள் மத்தியிலும் மொழி மீதான அலட்சியத்தை ஏற்படுத்தி விடுகிறது. இந்த மனப் போக்கு சிபிஎஸ்சி போன்ற ஒன்றிய பாடத்திட்டப் பள்ளிகளில் தமிழ்மொழி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைத்து விடுகிறது. மாணவர்களைத் தாய்மொழிப் பாடத்திலிருந்து விலக்கி இந்தி, சமற்கிருதம், பிரெஞ்சு போன்ற மொழிப்பாடங்கள் பக்கம் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர்களே செல்வதற்கு வழிவகுத்து விடுகிறது.

ஒன்றியப் பாடத்திட்டத்தில் மேல்நிலைக் கல்வியில் தாய் மொழிப்பாடமே இல்லாத சூழலில் கீழ்வகுப்பில் தமிழ் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் உளவியல் போக்காகவே இதனை நாம் பார்க்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக நம்மையும், நம் குழந்தைகளையும் தாய் மொழி அறிவிலிருந்தும் சிந்திக்கும் திறனிலிருந்தும் வெளியேற்றுவதற்கான தொடக்கமாகக்கூட இருக்கலாம் பிழையான வினாத்தாள் வடிவில் நிகழும் தமிழ்ப்புறக்கணிப்பு.

- மகா. இராஜராஜசோழன், தமிழாசிரியர், சீர்காழி.

Pin It