கல்லூரிகளில் தமிழ்
காமராசரின் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியத்தின் தமிழ்ப் பயிற்றுமொழித் திட்டத்திற்குக் காங்கிரஸ் கட்சியில் போதிய ஆதரவு கிடைக்கவில்லை. அன்றைய மத்திய அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான சுப்பராயன், சி.சுப்பிரமணியத்தின் இத்திட்டத்தை மறைமுகமாக எதிர்த்து வந்தார். சிவாஜிகணேசன் 1960ஆம் ஆண்டு ஏற்பாடு செய்த பாரதி விழாவில், “கிராமணியார் தமிழைப் படிக்கச் சொல்லுகிறார். தமிழன் சிலப்பதிகாரத்தையும் புறநானூற்றையும் படித்துவிட்டால் அவனுக்கு உத்தியோகம் கிடைத்துவிடுமா?” (ம.பொ.சி. 1974: 888) என சுப்பராயன் கேள்வி எழுப்பினார். சுப்பராயனின் இக்கருத்து விழாவில் பெரும் குழப்பத்தை விளைவித்தது. அவரைத் தொடர்ந்து பேசிய ம.பொ.சி. தமிழ்ப் பயிற்றுமொழியாவதற்கும், தமிழை மொழிப்பாடமாகப் படிப்பதற்கும் உள்ள வேறுபாடுகளை கீழ்க்கண்டவாறு விளக்கினார்.
“நான் தமிழ்தான் படிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. பொது அறிவுக்கான வரலாறு, பொருளாதாரம், கணக்கு, விஞ்ஞானம் ஆகிய பாடங்களைத் தமிழின் மூலம் படிக்கச் சொல்லுகிறேன். தமிழைப் படிப்பது வேறு; தமிழில் படிப்பது வேறு, இலையைச் சாப்பிடுவது வேறு, இலையில் சாப்பிடுவது வேறுதானே!”ஆங்கிலத்தை ஒரு மொழி என்ற அளவில் தினமும் ஒரு பகுதி நேரத்தில் படிப்பதை எதிர்க்கவில்லை; ஆதரிக்கிறேன் என்று கூறி, மேலும் 1937இல் டாக்டர் சுப்பராயன் சென்னை மாநிலக் கல்வி அமைச்சராக இருந்தபோதுதான் முதல்வர் இராஜாஜி உயர்நிலைப் பள்ளிகள் அனைத்திலும் தமிழை மட்டுமே பயிற்றுமொழியாக்கினார். அப்போதே “அடுத்த கட்டத்தில் கல்லூரிகளிலும் தமிழ் மட்டுமே பயிற்று மொழியாகும் என்று சுப்பராயன் மாநில கல்வி அமைச்சர் என்ற முறையில் அறிவித்ததையும் நினைவு கூறுகிறேன்” என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் அமைச்சரவையின் பயிற்றுமொழித் திட்டத்திற்குக் கட்சியில் போதிய ஆதரவில்லை என்பதை இக்குழப்பம் விளக்குகிறது. இக்கூட்டம் சென்னையிலுள்ள ஆபட்ஸ்பரி தங்கும் விடுதியில் நடந்தது. இக்குழப்பம் ‘ஆபட்ஸ்பரி குழப்பம்’ என வழங்கப்பட்டது.
இதே காலகட்டத்தில் அறிஞர்கள் கல்வியாளர்களிடையேயும் பயிற்றுமொழி ஆதரவு, பயிற்றுமொழி எதிர்ப்பு என இரு அணிகள் உருவாகின. பயிற்றுமொழி ஆதரவு அணியில் பாவேந்தர் பாரதிதாசன், தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் முதலிய அறிஞர் பெருமக்கள் அணிவகுத்து நின்றனர். ஆங்கில ஆதரவு அணியில் ஏ.இலட்சுமணசாமி முதலியார், ஏ.ராமசாமி முதலியார் போன்றோரும் தேசியத்தின் பேரால் போலித்தனம் புரிவோரும் அணிவகுத்து நின்றனர். (த.சுந்தரராஜன் 1988.84). இவ்வாறு தமிழ்ப் பயிற்றுமொழித்திட்டம் ஆதரவு/எதிர்ப்பு அணிகளால் அரசியலாக்கப்பட்டது.
இந்திய நடுவண் அரசின் பல்கலைக்கழக நல்கை ஆணையம் 1959ஆம் ஆண்டு ஆந்திராவில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் எஸ்.கோவிந்தராஜூவைத் தலைவராகக் கொண்டு பதினைந்து கல்வியாளர்கள் உள்ளிட்ட செயலாக்கக்குழுவை (Working Group) உருவாக்கியது. இக்குழு பயிற்றுமொழி தொடர்பாக பத்தொன்பது பரிந்துரைகளை 30.12.1960 இல் நடந்த பல்கலைக்கழக நல்கை ஆணையக் கூட்டத்தில் வழங்கியது. பயிற்றுமொழி தொடர்பான அரசின் தலையீட்டைப் பற்றிக் கூறுகையில், “பயிற்றுமொழி என்பது பல்கலைக்கழகங்களின் பொறுப்பு. இது குறித்து அரசுடனோ அல்லது வேறு யாருடனோ எந்தக் கருத்தும் பகிர்ந்துகொள்ள வேண்டியதில்லை.” (The Hindu, 24.01.1961) என அறிவித்து இளநிலை வகுப்புகளில் (BA., B.Sc.,) ஆங்கில மொழியைப் பயிற்றுமொழியாக நீடிக்க வேண்டும் எனவும் பரிந்துரை செய்தது.
தமிழ்ப் பயிற்றுமொழித் திட்டத்தைக் கல்லூரிகளில் நடைமுறைப்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்ட காலகட்டத்தில் பல்கலைக்கழக மானியக்குழுவின் அறிக்கை பற்றிய கேள்வியை சட்டமன்றத்தில் ஏ.ஏ.ரஷீத் என்ற உறுப்பினர் எழுப்பினார். கல்லூரிகளுக்குப் பயிற்றுமொழியைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைக் கொடுக்க வேண்டும். கல்லூரிகளின் சுதந்திரத்தில் அரசு தலையிடக்கூடாது என்ற பல்கலைக்கழக நல்கைக்குழுவின் (1961) பரிந்துரைகளை அவர் சுட்டிக் காட்டினார். அவருக்குப் பதிலளித்த அமைச்சர் சி.சுப்பிரமணியம், “கோவை அரசுக் கல்லூரியில் மூன்றாண்டு கலையியல் படிப்புக்கான முதல் ஆண்டில் தமிழ்வழிக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வகுப்புகளுக்கான பாடநூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்வழிக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்குப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. அரசு உதவி பெறும் கல்லூரிகளில் தமிழ்வழிக் கல்வியை அரசு கட்டாயப்படுத்தாது. இப்பிரச்சனையில் நிர்வாகங்களுக்குச் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது” (G.O.No.841/ Education, Dated 18.04.1961) என்றார்.
முன்னோடித் திட்டம் - செயல்பாடுகள்
முன்னோடித் திட்டத்தைச் செயல்முறைப்படுத்தும் முயற்சியாக கோவை பி.எஸ்.ஜி. கல்லூரி, பொள்ளாச்சி நாச்சிமுத்துக்கவுண்டர் கல்லூரி ஆகியவற்றில் தமிழ்வழிக் கல்வி தொடங்கப்பட்டது. கோவை அரசுக் கல்லூரியில் தொடங்கப்பட்ட முன்னோடித் திட்டத்திற்கு 1960 - 1961 ஆம் ஆண்டில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி வகுப்புகள் (Orientation Courses) நடத்தப்பட்டன. பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் மட்டுமே வகுப்புகள் எடுக்க அனுமதிக்கப்பட்டனர்.
சென்னையில் உள்ள ராணிமேரி கல்லூரி, சென்னைக் கலைக்கல்லூரி, கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி ஆகிய கல்லூரிகளில் மூன்று ஆண்டு இளங்கலைப் பட்டப்படிப்புகள் 1962 -63 கல்வியாண்டு வரை ஆங்கிலவழியிலேயே நடந்துவந்தன. இந்த மூன்று கல்லூரிகளும் 1963-64 கல்வியாண்டில் தமிழ்வழியில் இளங்கலைக் கல்வியைக் கற்பிக்க அனுமதி வேண்டின. ராணி மேரி கல்லூரி வரலாறு (Branch I), பொருளாதாரம் (Branch IV) ஆகிய துறைகளிலும், கும்பகோணம் அரசுக் கல்லூரி பொருளாதாரத் (BRANCH IV) துறையிலும் தமிழ் வழி வகுப்புகள் தொடங்க அனுமதி வேண்டின.
கோவையில் 1960-1961ஆம் கல்வி ஆண்டிலிருந்து ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த வரலாறு (Branch - I), பொருளாதாரம் (Branch - IV) புவியியல் (Branch - IV) ஆகிய துறைகளுக்கு அந்த மூன்று கல்லூரிகள் அனுமதி வேண்டியிருந்ததால் அரசு உடனே அனுமதியளித்தது.
அரசு அனுமதித்த இடங்களின் எண்ணிக்கை பின்வருமாறு.
(G.O.No.746, Education, Dated 08.04.1963)
அனுமதிக்கப்பட்ட துறைகளின் துணைப் பிரிவுகளிலும் வகுப்புகள் தமிழிலேயே நடத்தப்படவேண்டும் என ஆணையிட்டது. தமிழ்வழிக் கல்விக்கு ஆதரவாகக் கருத்துக்கள் பரவியதைத் தொடர்ந்து 1959 ஆம் ஆண்டு அரசு அறிவித்தபடி 1963-64 ஆம் கல்வியாண்டில் அனைத்துக் கல்லூரிகளிலும் தமிழைப் பயிற்றுமொழியாக்கத் திட்டமிட்டது. இத்திட்டத்திற்காக 1961-62, 1962-63, 1963-64 ஆம் ஆண்டுகளில் ஒதுக்கீடு செய்த நிதி பின்வருமாறு.
1961 - 1962 ரூ 8,77,000
1962 - 1963 ரூ 15,37,000
1963 - 1964 ரூ 11,37,700
நிதி ஒதுக்கிய அரசு 1963-1964 ஆம் ஆண்டில் தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு ஒரு பயிற்சி வகுப்பை நடத்தத் திட்டமிட்டது. இப்பயிற்சி வகுப்பு 1963 மே, ஜூன் மாதங்களில் கோடை விடுமுறையில் கோவை அரசுக்கல்லூரியில் ஐந்து வாரங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டது.
கல்லூரித் தமிழ்- குழுவின் செயல்பாடுகள்
கல்லூரித் தமிழ்க் குழுவின் செயல்பாடுகளுக்குத் தமிழகம் முழுதும் இருந்த வரவேற்பு, ஆசிரியர்களிடம் இருந்த ஈடுபாடு பற்றிய தகவல்களை அக்குழுவின் செயல்நிலை அறிக்கைகளின் வழி அறியமுடிகிறது.
“தமிழில் கல்லூரிப் பாடங்களை நடத்துவதற்கு ஆசிரியர்களின் ஆர்வமும் தகுதியும் எந்த நிலையில் இருக்கின்றன என்பதைக் குழு அறிந்து கொள்ள விரும்பிற்று. அதன்படி மாநிலத்தில் உள்ள எல்லாக் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன. பல்வேறு கல்லூரிகளிலிருந்து வந்த பதில்கள் கல்லூரித் தமிழ்க் குழுவினருக்கு உற்சாகமூட்டக் கூடியவையாக இருந்தன. தமிழில் பாடங்களை நடத்துவதற்கு ஆசிரியர்கள் ஊக்கம் காட்டியிருக்கின்றனர். ஓரளவேனும் தயக்கம் இருக்கக்கூடும் என்று நினைத்த குழுவினருக்கு இந்த மகிழ்ச்சியான முடிவு எதிர்பாராததாக அமைந்தது.”(ச.ம.ந.1.04.1963.437) என்றவாறு அமைந்திருந்தது. மேலே எடுத்துக்காட்டப்பட்ட குழுவின் செயல் அறிக்கைகளிலிருந்து குழுவின் செயல்பாடுகளையும் ஆசிரியர்களிடம் இருந்து வரவேற்பையும் அறியமுடிகிறது.
மாணவர்களுக்கு ஊக்கத்தொகை
தமிழ்வழிக் கல்வி பயிலும் மாணவர்களுக்காக ஊக்கத்தொகை கொடுப்பது குறித்து அரசு விவாதித்தது இறுதியில் தமிழ்வழிக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.30/- வீதம் ஊக்கத்தொகை வழங்க அரசு ஆணை வெளியிட்டது (G.O.Ms.No.2445 P.H.(Education) Unted 22.11.1960).
அரசின் இந்த ஆணையைத் தொடர்ந்து கோவை கலைக்கல்லூரியில் 1960-61 ஆம் கல்வியாண்டில் தமிழ்வழியில் கல்வி கற்ற முப்பத்தைந்து மாணவர்களுக்குத் தமிழ்வழிக் கல்விக்கான ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது (G.O.Ms. No.142.P.H.(Education) Dated 27.01.1961).
காங்கிரசில் குழு மனப்பான்மை
தமிழைப் பயிற்றுமொழி ஆக்குவது தொடர்பான சிக்கலில் தமிழகக் காங்கிரஸ் கட்சியில் இரண்டு குழுக்கள் செயல்பட்டு வந்தன. தமிழ்ப்பயிற்று மொழியாவதற்கு ஆதரவாக சி.சுப்பிரமணியம், கு.அருணாசலம், தி.சு.அவினாசிலிங்கம், பி.எஸ்.கோவிந்தசாமி ஆகியோர் இருந்தனர். காமராசர் தன் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த சி.சுப்பிரமணியத்துக்கு எதிரான கருத்துக்களை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.
இதற்கிடையில் 1962 ஆம் ஆண்டு புதிய கல்வி அமைச்சராக பக்தவத்சலம் பதவி ஏற்றார். தொடக்கத்தில் பயிற்சிமொழி ஆதரவு கருத்துக்களைத் தெரிவித்த பக்தவத்சலம் காலப்போக்கில் இத்திட்டத்தைத் தோல்வியடையச் செய்யவேண்டும் என்ற நோக்கமுடையவராக இருந்துள்ளார் என்பதைத் “தமிழைப் பயற்சிமொழியாக்கக் கட்டாய முறையை நாம் கையாள முடியாது. தமிழுக்காகப் பரிந்து பேசுவோர் அதனைப் பயிற்சிமொழியாக்குவதற்கு ஆதரவான சூழ்நிலையை உருவாக்கும் பிரச்சாரம் செய்ய வேண்டும். வருகிற கல்வியாண்டில் தமிழ்ப் பயிற்சிமொழித் திட்டம் விரிவுபடுத்தப்பட மாட்டாது. நன்கு யோசித்த பின்னரே அது பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும்.” (ம.பொ.சி.1974.891) என்ற அவர் கூற்றால் அறிகிறோம்.
மொத்தத்தில் பழைய கல்வியமைச்சர் சி.சுப்பிரமணியம் 1963-64 ஆம் கல்வியாண்டில் அனைத்துக் கல்லூரிகளிலும் பி.ஏ படிப்புக்குத் தமிழ் பயிற்று மொழியாக்கப்படும் என்று பிரகடனம் செய்திருந்ததை அரசு முழு அளவில் அமல் நடத்தாதென்ற நிலை ஏற்பட்டது. சி.சுப்பிரமணியம் காலத்தில் பயிற்சிமொழி பற்றிய வாதம் பிரதிவாதத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளாதிருந்த தமிழக முதல்வர் கு.காமராசரும் அமைச்சர் பக்தவத்சலத்தின் மாறுதல் நிலையை ஆதரித்து வெளிப்படையாகவே அடிக்கடி அபிப்பிராயம் தெரிவிக்கலானார் (விடுதலைக்குப் பின் தமிழ் வளர்த்த வரலாறு, ம.பொ.சி., பக்.98)
இதன் காரணமாகத் தமிழரசுக் கழகம் ‘ஆங்கில ஆதிக்க எதிர்ப்பு’ என்ற பெயரில் மாநாடுகளையும் பொதுக் கூட்டங்களையும் தமிழகம் முழுவதும் நடத்தி இக்கழகத்தின் தலைவர் ம.பொ.சி பயிற்றுமொழியாக, ஆங்கிலம் நீடிப்பதால் விளையும் கேடுகளை விளக்கி பல நூல்களை எழுதி வெளியிட்டார். (எ.கா)
1. பாரதியும் ஆங்கிலமும்
2. காந்தியடிகளும் ஆங்கிலமும்
3. தமிழா?ஆங்கிலமா?
4. தமிழும் கலப்படமும்
5. ஆங்கில ஆதிக்க எதிர்ப்பு வரலாறு
6. மொழிச்சிக்கலும் மாநில சுயாட்சியும்.
7. இன்பத் தமிழா? இந்தி, ஆங்கிலமா? போன்ற நூல்கள் வெளியிடப்பட்டன.
இக்காலகட்டத்தில் பயிற்சி மொழிப் பிரச்சனை குறித்து கலைக்கதிர் இதழ் சார்பில் சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடப்பட்டது.
காலனி ஆதிக்கக் கொள்கை பக்தவத்சலம் வழியாக
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ஆரம்பப் பள்ளிகளில் 3 வது வகுப்பிலேயே ஆங்கில மொழி போதனை ஆரம்பமானது. ஆரம்பப் பள்ளிகளில் அன்னிய மொழிக் கல்வியை புகுத்தக் கூடாது என்பது காந்தியடிகளின் கொள்கை. அதன்படி தி.சு.அவினாசிலிங்கம் செட்டியார் கல்வியமைச்சராக இருந்தபோது அவரால் ஆரம்பப் பள்ளியிலிருந்து ஆங்கிலக் கல்வி அகற்றப்பட்டு உயர்நிலைப் பள்ளிகளில் தொடங்கப்பட்டது.
பின்னர் சி.சுப்பிரமணியம் கல்வி அமைச்சராக இருந்த போதே 5 ஆம் வகுப்பில் ஆங்கில மொழி போதனை புகுத்தப்பட்டது. அதன்பிறகு பக்தவத்சலம் கல்வி அமைச்சரான பின் 4ஆம் வகுப்பிற்கு ஆங்கிலம் வழி பயிற்று மொழி விரிவுபடுத்தப்பட்டு, 1963 இல் 3 ஆம் வகுப்பிலும் ஆங்கில மொழிக் கல்வி திணிக்கப்பட்டது. ஆம், பிரிட்டிஷ் காலத்திய நிலையில் ஆங்கிலக் கல்வி முறை அமலுக்கு வந்தது.
சமாதானம் சொல்லப்பட்டது
5ஆம் வகுப்பில் ஆங்கிலக் கல்வி புகுத்தப்பட்ட போது கல்லூரிகளில் தமிழே போதனா மொழியாக்கப்படுவதால் மாணவர்களுடைய ஆங்கில மொழி அறிவின் தரம் குறைந்திருக்குமென்றும் அதனை ஈடுசெய்யவே 3 ஆம் வகுப்பு தொடர்ச்சியே ஆங்கிலக் கல்வி போதிக்க வழி செய்யப்படுவதாகவும் சமாதானம் சொல்லப்பட்டது. இப்படியாக தமிழக அரசு ஆங்கில வழிக் கல்வியை ஆதரித்த நிலையில் 1965 ஆம் ஆண்டு சனவரி 26இல் குடியரசு நாளன்று இந்திய அரசியல் அமைப்பு சட்டவிதிகளின்படி இந்தி மட்டுமே மைய அரசின் பிரதான ஆட்சி மொழியாக அமலுக்கு வருகிறது என்ற பிரகடனம் டில்லியிலிருந்து வெளியானது. இத்திட்டம் முந்தியே அமலாகி விட்டதால் மாணவர்கள் அதற்கு முந்திய நாளே இந்திக்கு எதிராகக் கிளர்ச்சியைத் தொடங்கினர். இதனால் தமிழ்நாட்டில் பயங்கரமான அளவில் போராட்டம் வெடித்தது.
இதன் காரணமாக அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் ராசேந்திரன் போராட்டத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்டார். 20.1.1965 இல் கீழப்பழுர் சின்னசாமி பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்கிரையானார். இதே போல் கோடம்பாக்கம் த.மு.சிவலிங்கம் விருகம்பாக்கம் ஏ.அரங்கநாதன், ஆசிரியர் வீரப்பன், கோவை முத்து, கீரனூர் முத்து, மாயூரம் சாரங்கபாணி ஆகியோரும் இப்போராட்டத்தில் உயிரை மாய்த்துக் கொண்டனர். விராலிமலை சண்முகம் நச்சுமருந்து தின்று உயிர்துறந்தார். உலக வரலாற்றில் மொழியின் புகழ்பாடி வீரமரணம் அடைந்த தமிழர்கள் இவர்கள் என்றால் மிகையில்லை.
இம்மொழிப் போர் புரட்சிக்குக் கலைஞர் கருணாநிதிதான் காரணம் என்று அரசு குற்றம் சாட்டி 1965 பிப்ரவரி 16 ஆம் நாள் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு 63 நாள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். (இந்தி எதிர்ப்பு வரலாறு, புலவர் த.அழகரசன்,பக்.33).
இறுதியில் அப்போதைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி கொடுத்த உறுதிமொழி காரணமாகவும் மத்திய அமைச்சர்கள் சி.சுப்பிரமணியம், ஏ.வி.அழகேசன் ஆகியோர் தாங்கள் வகித்த பதவிகளிலிருந்து விலகியதன் விளைவாகவும் தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போர் ஓய்வு பெற்றது.
பக்தவத்சலம், 1956இல் கொண்டு வந்த தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்திற்குத் தடையாய் இருந்தார். அவர் 1963 ஆம் ஆண்டு முதல் உயர்நிலைப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பிலிருந்து பதினோராம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு பிரிவில் ஆங்கிலம் பயிற்று மொழியாக இருக்க வகை செய்யும் சட்டம் இயற்றினார்.
கல்லூரியாசிரியர்களுக்குப் பயிற்சி
கோவையில் 1963-64 இல் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க பல ஆசிரியர்கள் விருப்பம் தெரிவித்தபோதும் அரசுக்கல்லூரி ஆசிரியர்கள் இருபத்தைந்து பேருக்கும் தனியார் கல்லூரி ஆசிரியர்கள் ஐந்து பேருக்கும் மட்டுமே பயிற்சி அளிக்கப்பட்டது. சென்னை மாநிலக்கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் வேலாயுதன், கோவைக்கலைக் கல்லூரியைச் சார்ந்த திரு.என்.அனந்தபத்மநாபன், வரலாற்றுத்துறைப் பேராசிரியர் கே.ஆர்.அனுமந்தன் ஆகியோரைப் பயிற்சி அலுவலர்களாகக் கொண்டு இப்பயிற்சித் திட்டம் செயற்படுத்தப்பட்டது.
இதற்கிடையில் அரசு தமிழ்வழிக் கற்கும் மாணவர்களுக்கு ரூ.30./- உதவித்தொகை அளித்ததோடு முன்னோடித் திட்டத்தில் பங்குபெற்ற மாணவர்களுக்குக் கல்விக் கட்டண விதிவிலக்கும் அளித்தது. இருப்பினும் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை. தமிழ்ப் பயிற்றுமொழி இயக்கம் நலிவடைந்துவிடுமோ என்ற பரவலான கருத்து தமிழகம் முழுவதும் எழுந்தது. இதன் எதிரொலிகள் சட்டமன்ற விவாதங்களிலும் இடம் பெற்றன என்பதை, “தமிழ்ப் பயிற்சிமொழியாக இருக்கும் கல்லூரிகளுக்கு மாணவர்கள் வரவில்லை என்று சொன்னார்கள். நான் ஏற்கனவே ஓர் இடத்தில் சொல்லியிருக்கிறேன். ஓர் இடத்தில் ஆங்கிலம் பயிற்சிமொழியாக இருக்க வேண்டுமென்ற நிலையை வைத்துவிட்டு இன்னோர் இடத்தில் தமிழ்ப் பயிற்சிமொழித் திட்டத்தை வைத்திருப்பதன் காரணமாகத்தான் மாணவர்கள் வரமுடியாத சூழ்நிலை நிலவுகிறது. பயிற்சிமொழியாகத் தமிழ் எடுத்துப் படித்தவர்களுக்குத்தான் உத்தியாகத்திற்கு எடுப்பதில் முக்கியத்துவம் கொடுக்கப் போகிறோம் என்றால் தானாகவே இதற்கு முக்கியத்துவம் வந்துவிடும். ஆகவே நம்முடைய தமிழ்மொழியை உயர்நிலைக்குக் கொண்டுவர வேண்டுமென்ற எண்ணம் அமைச்சர் அவர்களுக்கு இருக்குமானால் ஒரு பாதுகாப்பை உறுதிமொழியை அமைச்சர் கொடுக்கவேண்டும்.” (ச.ம.ந.1963.306) என்ற புலவர் க.கோவிந்தனின் கருத்துவழி அறிகிறோம்.
அண்மைக் கால வரலாற்றைப் பாருங்கள்
கல்லூரிகளில் தமிழைப் பயிற்சி மொழியாக்கலாம் என்று தமிழக அரசு 1959இல் ஓர் ஆணையைப் பிறப்பித்தது. அந்த ஆணை 1937இல் பள்ளிகளில் பயிற்சி மொழி பற்றிய ஆணை போன்று திட்டவட்டமானதாக இல்லை. கலைத்துறைப் பாடங்களை விரும்பினால் தமிழில் நடத்தலாம். ஆங்கிலமும் பயிற்று மொழியாகத் தொடர்ந்து நீடிக்கும் என்ற நிலை இருந்ததால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை. இதைக் கொண்டு வந்த போது பல தடைகளை எழுப்பினர். நூல்கள் இல்லையே என்றனர். தரம் கெட்டுப் போகும் என்றனர். இவற்றையெல்லாம் கேட்ட அரசு தன் ஆணையில் சில நெளிவு சுழிவுகளையும் நுழைக்க வேண்டியதாயிற்று. கல்லூரிகளில் கலைத்துறைப் பாடங்களை விரும்பினால் தமிழில் கற்பிக்கலாம் என்று அதற்காகக் கற்போர்க்கும், கற்பிப்போர்க்கும் சில சலுகைகள் தரப்படும் என்றும் கூறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
1937ல் சென்னை மாநிலத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் ஆகிய மொழி பேசுவோர் இருந்தனர். பயிற்றுமொழி பற்றிய ஆணை பிறப்பிக்கப்பட்ட பொழுது மற்ற மொழியினர் ஏற்றுக் கொண்ட காரணத்தால், தமிழர்களும் மறுப்பு கூறாமல் ஏற்றுக் கொண்டனர். இதற்கு நாட்டுப்பற்றும் ஓர் காரணமாக இருந்தது. 1959 இல் நிலைமையே வேறு. சென்னை மாநிலத்தில் தமிழ் ஒன்றே வட்டார மொழி.
1959 முதல் தமிழகத்தின் கல்லூரிகளில் கலைத்துறைப் பாடங்கள் தமிழில்தான் பயிற்றுவிக்கப்படும் என்று அரசு திட்டவட்டமாக அறிவித்திருந்தால் இன்று அறிவியலும் அந்த நிலையை எட்டி இருக்கும். சட்டத்தாலும், ஐயுறவாலும் அதனைச் செய்யத் தவறிய காரணத்தால் இடர்பாடுகள் ஏற்பட்டன. தமிழில் பயின்றால் தரம் கெட்டுப் போய்விடும். தமிழில் பாடநூல்கள் இல்லை. அறிவியல் மற்றும் கலைத்துறைப் பாடங்களை தமிழில் எழுதக் கலைச்சொற்கள் இல்லை. இவற்றைக் கூறியே மக்களை அச்சத்திற்கும், அவலத்திற்கும் ஆளாக்கினர். இதற்கு உண்மையான காரணம் பள்ளிகளில் தமிழ் பயிற்று மொழியாக இருந்ததுதான். அது அவர்கட்கு ஓர் நல்ல அடிப்படையாயிற்று. இதனைக் கண்ட வல்லவர்களின் உள்ளத்தில் அச்சமும், வஞ்சனையும் உருவாயின. எனவே 1959ல் அரசு ஆணையைக் கண்டு குறை கூறினர். 1959ல் அரசு ஆணையை எதிர்த்தவர்களின் ஆசைக்கு இணங்க மழலையர் பள்ளிகளில் 3ஆம் வகுப்பிலிருந்து ஆங்கிலம் பயிற்று மொழி ஆனது.
கல்லூரிகளில் தமிழ்ப் பயிற்று மொழி
1959 ஆம் ஆண்டு தமிழக அரசு ஆணையை நிறைவேற்ற அரசினரின் ஏட்டுக் கல்லூரிகள் இருப்பினும் அதில் கோவை அரசினர் கல்லூரி முன்னோடிக் கல்லூரியாகத் தேர்வு செய்யப்பட்டது. இந்தப் பாடத்திட்டத்தை அமல்படுத்த ஜி.ஆர்.தாமோதரன் கல்லூரி தமிழ்க்குழு அமைக்கப்பட்டது. இக்குழு பரிந்துரைகளுக்கு மாநிலக் கல்வி அறிவுரைக் குழுவும் ஆதரவு அளித்தன் பொருட்டு, 1963-64இல் பயிற்றுமொழி ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மாற்ற வேண்டும் என்று ஆணை வந்தது. மேலும் 1948லேயே துணைவேந்தர்களின் கல்விக்குழு, பல்கலைக்கழக அளவில் பயிற்று மொழியாக ஆங்கிலத்தை மாற்றுவது வரும் 5 ஆண்டுகளுக்குள் செய்யப்பட வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தாலும் உயர்கல்வி அமைப்புகளிடமிருந்து எதிர்ப்பு தொடக்கத்தில் இல்லை. கல்லூரிகளில் பாடநூல்கள் இல்லை என்ற நிலையைக் களைய 1959இல் கல்லூரித் தமிழ் கல்விக் குழு ஒன்று தோற்றுவிக்கப்பட்டு, பின் 1962ல் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் (Tamilnadu Text Book Society) தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் புகுமுக வகுப்பு இளங்கலை, முதுகலைப் பட்டப்படிப்பு வரை நூல்களை வெளியிட்டது. இவற்றுள் 416 நூல்கள் கலைப் பாடத்திற்கும் 418 நூல்கள் அறிவியல் பாடத்திற்கும் உரியவை. ஆனால் 1962ல் சட்டசபை விவாதத்தில் தமிழ் வழி பயில மாணவர்களிடையே ஆர்வமில்லை என்று சுட்டிக் காட்டப்பட்டது. 1962இல் இடைநிலைக் கல்வியில் ஆறாம் வகுப்பிலிருந்து ஆங்கில வழிக் கல்வியைத் தொடங்க 65 பள்ளிகளுக்கு இசைவளிக்கப்பட்டது. அதன் வெளிப்பாடு 1962க்குப் பின்னர் மிகுதியாயிற்று. 1965க்குப் பின்னர் அதன் உத்வேகம் மிகமிக அதிகமாயிற்று.
பொதுமக்களுக்கும், பள்ளி நிருவாகத்தினருக்கும் ஆங்கில வழிக் கல்வியில் இருந்த ஆர்வத்தைக் கருத்தில் கொண்டு ஆங்கில வழிப் பிரிவுகளை அதிகமாக்க அரசு முடிவு செய்தது. 1967ல் நடந்த மாநிலக் கல்வித்துறை மாநாட்டில் ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும், வட்ட தலைநகரங்களில் ஆங்கில வழிப் பள்ளிகளில் பிரிவுகளைக் கூடுதலாக்கவும் பரிந்துரைக்கப்பட்டது. ஆக அன்றைய அரசு அரசாங்க உயர்நிலைப் பள்ளிகளில் 100 ஆங்கில வழிப் பிரிவுகள் கூடுதலாகத் தொடங்குவதற்கு அனுமதியளித்தது.
ஆணையங்களும், பரிந்துரையும் (1964)
தமிழகத்தில் தமிழ்வழிக் கல்விக்கான ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் நடந்தேறிய காலகட்டத்தில் இந்திய அரசின் முடிவின்படி பேராசிரியர் டி.எஸ்.கோத்தாரியைத் தலைவராகக் கொண்டு ஒரு கல்வி ஆணையம் உருவாக்கப்பட்டது. இந்த ஆணையத்தில் இந்தியாவின் முக்கியக் கல்வியாளர்கள் உறுப்பினர்களாக இடம்பெற்றனர்.
தேசிய அளவிலான கல்விமுறையை உருவாக்குவது, அனைத்து நிலையிலும் கல்வியை வழங்குவதற்கான பொதுக்கொள்கையை உருவாக்குவது ஆகியவை இந்த ஆணையத்தின் நோக்கங்களாகும். பயிற்றுமொழியின் அவசியத்தையும் வட்டாரமொழிகளில் அறிவியல் நூல்களைத் தயாரிக்கும் முயற்சிகளைப் பற்றிய பரிந்துரைகளையும் இந்த ஆணையம் வழங்கியது.
“பள்ளி, கல்லூரி நிலைகளில் பயிற்றுமொழியாக இருப்பதற்குத் தாய்மொழியே மிகச் சிறந்தது. எனவே மேனிலைக்கல்வியில் வட்டார மொழிகளே பயிற்றுமொழிகளாகப் பின்பற்றப்பட வேண்டும். வட்டார மொழிகளில் இலக்கியங்களும், குறிப்பாக அறிவியல், தொழில்நுட்ப நூல்களைத் தயாரிக்க முனைப்பான செயலாக்கம் தேவைப்படுகிறது. இப்பணி பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரை செய்யும் பல்கலைக்கழகங்களின் பொறுப்பில் விட வேண்டும். வட்டாரப் பயிற்றுமொழி வாயிலாகக் கற்றவர்களுக்கு உயர்சேவைகள் வேலை வாய்ப்புக்கள் தடைப்படாத வண்ணம், வட்டார மொழிகளையே அப்பகுதிகளின் நிர்வாக ஆட்சிமொழியாகக் கூடிய விரைவில் செயல்படுத்த வேண்டும்.” (Kothari Commission Report 1964:154).
வட்டாரமொழிகளின் வழி கற்பது அறிவு வளர்ச்சிக்குப் பயன்படும். மாணவர்களின் சுமையைக் குறைக்கும். வேலைவாய்ப்பும் உறுதி செய்யப்படவேண்டும் என்று இக்குழு பரிந்துரை செய்துள்ளது. கல்லூரிகளில் தமிழ் விவாதங்கள் தமிழ்வழிக் கல்லூரிக்கல்வி பயின்ற மாணவர்களுக்கு முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்பட்டபோது அரசு கல்விக்கட்டணச் சலுகையையும் உதவித் தொகையையும் வழங்கியது. இருப்பினும் தமிழ்வழிக் கல்லூரியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. தமிழ்வழிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை குறையத் தொடங்கியதைக் கண்டித்து கண்டனங்கள் எழுந்தன.
அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் இரா.நெடுஞ்செழியன் பயிற்று மொழித்திட்டத்தில் இருந்து அரசு பின்வாங்கக் கூடாது எனவும் 1959 ஆம் கல்வியாண்டில் அறிவித்தபடியே 1963-1964 கல்வி ஆண்டில் தமிழ்வழிக் கல்லூரிக் கல்வியை அனைத்துக் கல்லூரிகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் தீர்மானம் கொண்டு வந்தார். அவருடைய உரையின் சுருக்கம் வருமாறு:
“பி.ஏ., வகுப்பில் தமிழ் என்று வைத்துவிட்டு இடையிலே புகுமுக வகுப்பில் (P.U.C) தமிழைப் புகுத்தும் முயற்சி எடுத்துக் கொள்ளப்படவில்லை. பத்தாவது வரையில் தமிழிலேயே படித்துவிட்டு மீண்டும் ஓராண்டுக் காலம் ஆங்கிலத்திலேயே படித்துவிட்டு மறுபடியும் தமிழிலேயே பி.ஏ.வகுப்பிலே படிக்க வேண்டும் என்று இருப்பது சரியான முறையல்ல. அரசாங்க வேலைவாய்ப்பிலே முதல் சலுகை கொடுக்கப்படும் என்ற வகையில் முயற்சிகளை அரசினர் மேற்கொண்டிருந்தால் இந்தச் சிக்கல் வர நியாயமே இல்லை. கல்லூரிகளில் (தனியார் உட்பட) கலையியல் பாடங்களைத் தமிழில் கொண்டுவர இயலாது. ஆங்கிலத்தில் தான் வைத்துக் கொள்வோம் என்று கூறுகின்ற கல்லூரிகளுக்கு அரசாங்க மானியம் குறைக்கப்படும் என்ற கொள்கையை நிலைநாட்டுவதில் தவறு இல்லை. 1963-1964இல் கல்லூரிகளில் கலையியல் பாடங்களைத் தமிழில் போதிப்பது என்ற விதியை மாற்றாதீர்கள்.” (ச.ம.ந.1963. 461-465).
பயிற்றுமொழித் திட்டம் காலதாமதப் படுத்தப்படுவதாக அன்றைய எதிர்க்கட்சி உறுப்பினர் மதியழகன், தமிழ்வழிக் கல்லூரிக்கல்விக்கான ஆணையைப் படிக்க ஆரம்பித்தார்.
அந்த ஆணையின் வரிகள் வருமாறு: “In order to commence the change over during the year 1963-64...”
ஆணையைப் படித்துக்காட்டிய பிறகு மதியழகனுக்குப் பதில் அளித்த கல்வி அமைச்சர் பக்தவத்சலம், “இப்போது வாசித்ததைக் கனம் அங்கத்தினர் எல்லாரும் கேட்டிருக்கிறார்கள். அது 1962-1963 இல் தொடங்குவது பற்றிய In order to commence என்று இருக்கிறது. Adopt என்று இல்லை. திரு.கே.ஏ.மதியழகன் குறுக்கிட்டார். “இன்னொரு பேஜைப் படித்துக் கொண்டிருப்பதில் பிரயோசனம் இல்லை. இதிலே ‘கமென்ஸ்’ என்றுதான் இருக்கிறது.” (ச.ம.ந. 1961. 470), என்றார். பக்தவத்சலத்தின் இப்பேச்சு தமிழ்வழிக் கல்வி இயக்கத்தின் பின்னடைவுக்குக் காரணமாக அன்றைய காங்கிரஸ் அரசு இருந்துள்ளது என்பதை ஐயத்திற்கிடமின்றித் தெளிவாக்குகிறது. இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நெடுஞ்செழியன், மதியழகன், கருணாநிதி ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.
1963-1964ஆம் ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டு இருந்த இத்திட்டம் தொய்வடைந்ததைத் தொடர்ந்து பயிற்றுமொழிக் கல்வி சாத்தியமில்லை என்ற எண்ணம் அரும்பத் தொடங்கியது.
தமிழ்வழிக் கல்லூரிக் கல்வி- மதிப்பீட்டுக் குழு
இந்நிலையில் 1965 ஆம் ஆண்டு தமிழ்ப்பயிற்று மொழித்திட்ட மதிப்பீட்டுக்குழு அமைக்கப்பட்டது. 1966 து.ப.அங்கமுத்து என்ற சட்டமன்ற உறுப்பினரின் கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய பக்தவத்சலம், “தமிழ்மொழி வாயிலாக இம்மாநிலத்திலுள்ள கல்லூரிகளில் பயிற்சிமொழி அளிப்பதில் ஏற்படும் கல்வி மேம்பாட்டை மதிப்பிடுவதற்காகவும் ஆங்கிலத்தின் மூலம் பயிற்சி அளிப்பதையும் தாய்மொழி வாயிலாகக் கல்வி அளிப்பதையும் ஒப்பிட்டு ஆராயவும் தமிழ்ப் பயிற்சிமொழித் திட்ட மதிப்பீட்டுக்குழு ஒன்று அமைக்கப்பட்டது.” (ச.ம.ந.05.08.1966:433) என்றார்.
அக்குழு விரைவில் அறிக்கை அளிக்க இருப்பதாகவும், தமிழ்ப் பயிற்றுமொழித்திட்டமே அரசின் இறுதி இலட்சியம் எனவும் எல்லாக் கலைக்கல்லூரிகளிலும் கலையியல் பாடங்கள் (P.U.C) 1966-1967 ஆம் கல்வியாண்டு முதல் தொடங்க ஆணையிட்டிருப்பதாகவும் தெரிவித்தார். 1959 இல் திட்டமிட்டிருந்தபடி புகுமுக வகுப்புப் படிப்புகளைத் தமிழ்வழியில் தொடங்க முடியாமல் அன்றைய காங்கிரஸ் அரசு தோல்வியடைந்து.
இராஜாஜியின் திடீர் இந்தி எதிர்ப்பு
இக்காலகட்டத்தில் இராஜாஜி 1967 ஆம் ஆண்டில் சுதந்திரா கட்சியை ஆரம்பித்த நிலையில் ஏற்கனவே இந்தியை ஆதரித்து இந்தியை இந்தியாவிற்கே முன் மாதிரியாக பாடமொழியாகத் தமிழகத்தில் திணித்த இராஜாஜி “இந்தி ஒரு நாளும் கூடாது. ஆங்கிலமே எந்நாளும் வேண்டும்” என முழக்கம் எழுப்பினார். இந்தியை ஆட்சி மொழியாக்குவதைத் தொடர்ந்து அமல் செய்தால் இத்துனைக்கண்டம் பதினைந்து பகுதிகாளாகத் தனித்துப் பிரிந்துவிடும் என்றும் கூறினார். இச்சமயத்தில்தான் மூதறிஞர் இராஜாஜி தி.மு.கவுடன் தேர்தல் கூட்டு வைத்துக்கொண்டார். பயிற்று மொழித் திட்டத்தைத் தம் கொள்கையாகக் கொண்டு தமிழால் முடியும் என்ற நூலை 1942 இல் எழுதிய இராஜாஜி இக்காலகட்டத்தில் தமிழ்ப் பயிற்று மொழியாகும் திட்டத்தை எதிர்க்கத் தொடங்கினார். ஆங்கிலமே பயிற்றுமொழியாக இருக்க வேண்டும் என்ற புதிய கருத்தையும் தெரிவித்தார்.
கல்லூரிகளில் தமிழ்- திட்டம் தோல்வி
1966 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அன்றைய அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அத்தீர்மானப் பட்டியலில் உள்ள எட்டாவது தீர்மானம் வருமாறு.
“இந்த அரசாங்கம் எல்லாக் கல்லூரிகளிலும் தமிழைப் பாடமொழியாக ஆக்கவும் தமிழ் வகுப்புகளில் சேர மாணவர்களுக்கு தனிச்சலுகைகளும் வசதிகளும் அளிக்கவும், 1956 ஆம் ஆண்டில் ஆட்சிமொழிச் சட்டத்தைச் செம்மையாக்கவும், விரைவாக நடைமுறைக்குக் கொண்டுவரவும், தமிழை மாநிலத்தில் ஆட்சி மொழியாக்கவும் பரவலான முறையில் நடைமுறைப் படுத்தவும் தவறிவிட்டது.” (ச.ம.ந.05.08.1966:579)
பக்தவத்சலம் அமைச்சரவையின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் சட்டமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது. எனினும் தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய பக்தவத்சலம், “முன்பு புகுமுக வகுப்பில் ஆங்கிலத்தில் படிப்பு, அது இரண்டு கெட்டான் தனமாக இருந்தது. அங்குப் படித்துவிட்டு அதுவும் புரியவில்லை. பி.ஏ.வில் போய் கஷ்டப்படவேண்டும். சீராக நடத்த வேண்டுமென்று இந்த ஆண்டு இரண்டு பல்கலைக்கழகங்களுக்குச் சொன்னேன். அவர்களும் ஒப்புக்கொண்டார்கள். சர்க்கார் கல்லூரிகளில் மட்டுமல்ல, மற்ற கல்லூரி புகுமுக வகுப்புகளில் குறைந்தபட்சம் 80,90 பேர்கள் தமிழில் இருக்க வேண்டுமென்று போட்டோம். போட்டது மட்டுமல்ல முன்பெல்லாம் 2, 3, 10, 5 என்று கணக்குக் கொடுப்பேன், கொடுத்திருக்கிறேன். இருக்கிற கணக்கைத்தான் கொடுக்கமுடியும். இப்போது 2700 மாணவர்கள், 600 மாணவிகள் இன்று புகுமுக வகுப்பில் தமிழைப் பாட மொழியாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்றால் இந்த சர்க்கார் இதில் நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கிறது. இதில் சீரிய முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதை யார் மறுக்கமுடியும்?”(ச.ம.ந. 05.08.1966:553) என்றவாறு குறிப்பிட்டுள்ளார். கல்லூரிகளில் தமிழ்வழித் திட்டத்தைச் செயல்படுத்தத் தவறிய அரசின்மீது கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் போது அதைப்பற்றி விவாதிக்காமல், காலம் கடந்து நடைமுறைப் படுத்தப்பட்ட புகுமுக வகுப்பு அறிமுகத்தைச் சாதனையாகக் காட்டிய அன்றைய கல்வி அமைச்சரின் பேச்சு தமிழ்வழிக் கல்லூரிக் கல்வித் திட்டம் தோல்வியடைந்ததை உறுதிப்படுத்துகிறது.
தமிழகத்தில் தமிழ்வழிக் கல்லூரிக் கல்வி நடைமுறைப்படுத்தப் படுவதற்காகத் தொடங்கப்பட்ட முன்னோடித் திட்டமும், அதனைத் தொடர்ந்து விரிவாக்கத் திட்டமும் தோல்வியடைந்தன என்பதை மேலே எடுத்துக்காட்டப்பட்ட சட்டமன்றப் பேச்சுகளின் வழியாகவும், நம்பிக்கையில்லாத் தீர்மானங்கள் வழியாகவும் அறியமுடிகிறது.
தோல்விக்கான காரணங்கள்
கல்லூரிகளில் தமிழ்வழிக் கல்வித்திட்டம் பற்றி ஆய்வு செய்த சிவனுபாண்டியன் தோல்விக்கான காரணங்களைப் பின்வருமாறு தொகுத்து, “புகுமுக வகுப்பில் ஆங்கிலவழிக் கல்வியும் முதுகலை வகுப்பில் ஆங்கிலவழிக் கல்வியும் நடைமுறையில் இருந்ததால் இளங்கலை வகுப்பில் தமிழ்வழிக் கல்விக்கு ஆதரவில்லை. வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்ற உத்தரவாதம் அறிவிக்கப் படவில்லை. இராஜாஜி, பக்தவத்சலம் போன்ற தலைவர்களின் தமிழ்ப் பயிற்று மொழி பற்றிய முன்பின் முரணான கருத்துக்கள். தமிழ்ப் பயிற்றுமொழித் திட்டத்தை எதிர்த்த தமிழர்கள் வெளிமாநிலத்தவர் பிறமொழியாளர்கள் (அ) இருமொழியினரின் எதிர்ப்பு உணர்வு. கல்லூரிகளில் தமிழரல்லாதோரின் தலைமை/அரசின் வேகமின்மையும், பயிற்றுமொழித் திட்டத்தை விரிவுபடுத்தாமையும், நூல்கள் இன்மையும். ஆங்கிலப்புலமை இல்லாமல் போய்விடும் என்ற அச்சம் ஆசிரியர்களிடம் கல்வி கற்பிப்பதில் இருந்த குழப்பம், கல்வி அதிகாரிகள், இரண்டு துணைவேந்தர்களின் (சர் இராமசாமி, ஏ.லட்சுமணசாமி முதலியார்) எதிர்ப்பு, அரசின் மொழிக்கொள்கை (மத்தியத் தேர்வுகளில் இந்தி, ஆங்கிலம், மட்டுமே தேர்வுமொழி), இந்தியும், ஆங்கிலமும் மட்டுமே எதிர்கால வாழ்வுக்குப் பயன்படக் கூடியவை என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் செயல்பட்ட அரசின் ஆட்சிமொழிக் கொள்கை, தாய்மொழிப் பற்றின்மை, உலக மதிப்பு ஏற்படாது என்ற அவநம்பிக்கை, கல்வித்தரம் குறையும் என்ற அச்சம், விருப்பத் தேர்வாகத் தமிழ்வழிக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது” என்று கூறியுள்ளார்.
தமிழ்வழிக் கல்லூரிக் கல்வி தோல்வியுற்றதற்குப் பல்வேறு காரணங்கள் இருப்பினும் அடிப்படையான காரணம் தமிழ்வழிப் படித்தோருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்பது சட்டமாக்கப்படாததேயாகும். இது குறித்துப் பலமுறை சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தியும் அவர்களின் கருத்தை அன்றைய காங்கிரஸ் அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழ் ஆட்சி மொழி உட்பட பல முக்கியமான நிகழ்வுகள் நடந்த காலத்தில் தி.மு.க சட்டமன்றத்தில் இல்லை. அதே சமயம் மத்திய ஆட்சியிலிருந்த காங்கிரசோ இந்தியைத் திணிக்கும் விதத்தில் வரிசையாக ஆறு, ஏழு உத்தரவுகள் வெளியிட தமிழகம் கொந்தளித்தது. 1965 ஜனவரி 26 ஆம் நாளைத் துக்க நாளாக அறிஞர் அண்ணா அறிவித்த நிலையில் சென்னை மாநில முதல்வர் பக்தவத்சலம் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
இந்தி எதிர்ப்புப் போராட்டம் 25.01.1965 அன்று தொடங்கி 15.03.1965 வரை 50 நாட்கள் தொடர்ந்தது. 18 நாட்கள் அரசு நிர்வாகமே செயலிழந்தது. இந்திய அரசியலைப்புச் சட்டம் 243 ஆம் விதியைத் திருத்தக் கோரி பலர் உயிர் துறந்தனர்.
இந்தியப் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி “நேருவின் உறுதிமொழி நிறைவேற்றப்படும்” என்று உறுதியளித்தார். 1968 ஆட்சி மொழித் திருத்தச் சட்டம் இந்தியுடன் ஆங்கிலமும் ஆட்சி மொழியாக இருக்கும் என்று அறிவித்தது. இதுவே தமிழக மொழிப்போர் வரலாறு ஆகும். அந்த ஆண்டு சென்னை (தமிழ்நாடு) தேர்தலில் திராவ¤ட முன்னேற்றக் கழகம் வெற்றிபெற்று காங்கிரஸ் தோல்வியைத் தழுவியது.
- டாக்டர் சு.நரேந்திரன், சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக சிறப்புநிலைப் பேராசிரியர்.